Home

Sunday 12 May 2024

வடிகால் - சிறுகதை

 

 கல்யாணத்துக்கு சோறாக்கிப் பரப்பிவைத்தமாதிரி அம்பாரமாய் இருந்தன மல்லிகை அரும்புகள். பளிச் பளிச்சென்று கண்ணைப் பறிக்கிற நிறம். அவிழாமலேயே சுற்றி மணக்கிற வாசனை. என்ன சுகம் என்று மூச்சை இழுத்து இழுத்து அனுபவிக்கிற தருணங்களையெல்லாம் தாண்டி இந்த வாசனை வந்தாலே தலைவலி என்கிற நிலைமைக்கு வந்திருந்தார்கள் சுற்றி இருந்தவர்கள். எடுப்பதும் தெரியாமல் கட்டுவதும் தெரியாமல் அரக்கப்பரக்க அரும்பு கட்டிக்கொண்டிருந்த ராமாஞ்சம், சுப்ரமணி, சகாயமேரி, எஸ்தர், வரதன் ஐந்து பேர்தான் சுற்றி இருந்தவர்கள்.

சகாயமேரி வரதனைத் திரும்பிப் பார்த்தாள். ஆனால் ஏன் பார்த்தாள் என்று தெரியவில்லை. எதற்கு என்று கேட்கத் தோன்றாமல் அவள் பார்வையை மாத்திரம் வாங்கிக்கொண்டு சும்மா இருந்தான் வரதன். ரொம்ப நேரம் கழித்துத்தான் கேட்டிருக்கலாமோ என்று உறைத்தது. கேட்காததற்காக நொந்து கொண்டான். ‘இன்னாப்பா, எந்தக் கோட்டய புடிக்கப் போறிங்க?’ என்று மற்றவர்கள் கிண்டல் செய்கிற அளவுக்குச் சட்டென்று மனசுக்குள் யோசனை கவிவது சுபாவமாகிப் போனதற்காக வெட்கமாய் இருந்தது. அம்மா செத்துப் போனதற்கு பிறகுதான் இந்த மாதிரி சுபாவம் வந்துவிட்டது என்று நினைத்துக் கெகண்டான். நல்லதோ கெட்டதோ தற்சமயத்துக்கு இந்த சுபாவம் சகாயமேரியை என்ன விஷயம் என்று கேட்கக்கூட முடியாமல் செய்துவிட்டது என்பதுதான் வருத்தமாய் இருந்தது. கேட்டிருந்தால் உற்சாகமான ஒரு உரையாடலாகவோ அல்லது அலுப்புத்தெரியாத   ஒரு சம்பவ விசாரணையாகவோ இருந்திருக்கலாம். சந்தோஷமான ஒரு தொடக்கமாகவே வேலையும் அமைந்திருக்கும். ஆனால் எல்லாம் தவறிவிட்டது. ஒரு குறுகுறுப்போடுதான் இன்றைய தன் வேலையைத் தொடர வேண்டும்.

இன்று காலை வேலைக்குப் புறப்படுவதைவிட மைலத்துக்குப் போய்வர வேண்டும் என்றுதான் புறப்பட்டான் வரதன். அக்கா வீட்டில் ஒரு பஞ்சாயத்து. கல்யாணம் செய்து ஒரு வருஷம் ஆகவில்லை. தினமும் அடி உதையாம். குடித்துவிட்டு மண்டபம் மண்டபமாய் படுத்துக் கிடக்கிறானாம். ஊருக்குள்ளேயே இன்னொருத்தியை வைத்திருக்கிறானாம். அக்காவுக்குப் போட்ட நகையையெல்லாம் விற்று வாங்கித் தின்றுவிட்டானாம். மாமன்காரனைச் செவுளில் நாலு அறை அறைந்து நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறமாதிரி நாலு கேள்வி கேட்டுவிடுவது என்றுதான் துடிப்போடு புறப்பட்டான். அப்பாதான் இவன் துடிப்பைப் பார்த்துவிட்டுவேணாம். நீ போனா ஒன்னு கெடக்க ஒன்னு ஆய்டும். நானே போட்டுவரன்என்று புறப்பட்டுப் போய்விட்டார். சலிப்பும் கோபமுமாய் அவரை பஸ்ஸுக்கு அனுப்பிய பிறகுதான் பூக்கடைக்கு வந்தது.

மாமன்காரனைப் பற்றிய யோசனையே இன்னும் தீராமல் இருந்தது வரதனுக்கு. அப்பா போய்ச் சேருகிற நேரத்துக்கு மாமன்காரன் இருப்பானா, ஒழுங்காய் மரியாதைக் கொடுத்துப் பேசுவானா, அதைக்கொடு இதைக்கொடு என்று பணம் கிணம் ஏதாச்சும் கேட்பானா. ‘என்ன பெரிசா சீர்வரிசை வச்சி கிழிச்சிட்டிங்க? ஒங்க பொண்ண ரத்தனம் மாதிரி வச்சிக்கறதுக்குஎன்று எகத்தாளம் ஏதாவது செய்வானா, ‘ஓணும்னா ஒங்க பொண்ண நீங்க இட்டுக்குங்கஎன்று வாயும் வயிறுமாய் இருக்கிற அக்காவை அனுப்பிவிடுவானா. தழையத்தழைய பேசி பொறுமையாகவே அப்பா இருப்பாரா, வந்தது வரட்டும் என்று துணிந்து நாலு போடு போடுவாரா, தடுக்கிற மாதிரி ஏதாச்சும் ஆகி அக்காவுக்கும் அப்பாவுக்கும் ஏதாவது சண்டையாகிவிடுமா என்றெல்லாம் யோசிக்கயோசிக்கப் பைத்தியம் பிடித்துவிடுகிற மாதிரி தலை வலித்தது. பூ வாசனை வேறு தாள முடியாமல் இருந்தது.

இந்தமுறை வரதனே சகாயமேரியை நிமிர்ந்து பார்த்தான். அவளும் பார்த்தாள். சிரித்துக்கொண்டார்கள். சிரிப்பது ஆறுதலாய் இருந்தது. வேதனை சட்டென்று முடிந்ததுமாதிரி இருந்தது. கலகலப்பின் நுனி கைக்குத் தட்டுப்பட்டதுமாதிரி  இருந்தது.

இன்னா ஒரே யோசனைல இருக்காப்ல இருக்குது?’

அதெல்லாம் இல்ல

சும்மா டூப் உடாதீங்க, அதான் மூஞ்சி பூரா அச்சுஅச்சா எழுதி இருக்கே

சுப்ரமணி, எஸ்தர், ராமாஞ்சம் மூன்று பேரும் ஒரே சமயத்தில் குறுஞ்சிரிப்பாய் சிரித்தபடி இவனைப் பார்க்க இவனுக்கு ரொம்பவும் வெட்கமாகிவிட்டது. சிரித்து விட்டான்.‘

ராத்திரி செகண்ட் ஷோவா?’

ம்ஹும்

பின்ன இன்னா யோசன?’

அப்புறம் சொல்றன்

அதற்குள் ராத்திரி நடந்த டி.எம்.எஸ். கச்சேரியைப் பற்றி ராமாஞ்சம் உற்சாகமாய் பேச ஆரம்பிக்க எல்லாரும் அவனையே பார்த்தார்கள். எம்.ஜி.ஆர். பாட்டு, சிவாஜி பாட்டு, ஜெய்சங்கர் பாட்டு என்று குரல் வித்தியாசம் காட்டி ரகம்ரகமாய் பாடிய டி.எம்.எஸ். திறமையை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தான். பேச்சும், அபிநயமும், நெளிவும் டி.எம்.எஸ்.ஸே பூக்கட்டுகிற மேடையில் நின்றமாதிரி அத்தனை சுவாரஸ்யமாய்ப் பேசினான்.

பேச்சும் சத்தமும் அதிகரிக்க, ‘இன்னா ஒரே பேச்சுதான் நடக்கறாப்பலஎன்று முன்பக்கத்தில் இருந்து குரல் கொடுத்தார் முதலாளி. முதுகு காட்டி கல்லாவில் இருந்தவர் திரும்பி முறைத்தார். அடுத்த நிமிஷம் பேச்சு, உற்சாகம் எல்லாம் அற்றுப்போய் ஊமைகள் ஸ்தலமானது அந்த இடம்.

சட்டென்று பேச ஒன்றுமே இல்லை என்கிற மாதிரி எல்லாருமே ஊமையாய் இருந்தார்கள். வாழைப்பட்டையில் நகம் பதித்து உருவிஉருவி மெலிசாய் நார் கிழிக்கிற ஈரச்சத்தம் கூடத் தெளிவாகக் கேட்டது.

விரல் நரம்புகள் கொக்கிபோட்டு இழுத்தது மாதிரி வலித்தன. ஒரு நொடிக்கு தலைப்பு மாற்றி சேர்ந்த அரும்புகளையும் மாலையையும் வைத்துவிட்டு விரலுக்கு சொடுக்கு எடுத்துக் கொண்டான் வரதன். விரல்வலியெல்லாம் மணிக்கட்டுக்குக் கீழே இறங்கிப் போகிறமாதிரி இருந்தது. பூவுக்குச் சத்தம் போட்டு பேரம்   பேசுகிற பெண்ணோடு முதலாளியும கீச்சு கீச்சென்றுபேசுவது கேட்டது. மெட்ராஸில் இருந்து அரும்பு வருவது, வண்டி வாடகை கொடுப்பது, கூலி கொடுத்து கட்டுவது, கடைவாடகை தருவது எல்லாவற்றையும் அனாவசியமாய் அந்த அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் முதலாளி. திரும்பிப் பார்த்தான். பலகைமாதிரி இருந்த முதலாளி முதுகுக்கு அந்தப் பக்கம் தாட்டிகமாய் கொண்டைபோட்ட அம்மா ஒருத்தி இருந்தாள். குள்ளம். பெரிய பொட்டு. எட்டணா அளவுக்குக் கருப்பாய் நெற்றி மேட்டில் ஒரு மச்சம். பார்த்த கணத்தில் சட்டென்று சிரிக்க வேண்டும்போல் உள்ளே சிரிப்பு புரண்டது. பக்கத்தில் ஆளை அசத்துகிற அழகோடு வயசுப் பெண் ஒருத்தி நின்றிருந்தாள். இது என்ன நடுத்தெருவில் பேரம் என்று சங்கடப் படுகிறமாதிரி சின்னச்சின்னக் கோடுகள் முகத்தில் காணப்பட்டன. வகிடுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் காட்டருவி இறங்குகிறமாதிரி கன்னங்கரேல் என்று சுருள்சுருளாய் பம்மி இறங்குகிற முடி. சின்ன சாந்துப் பொட்டு. மேலும் பார்ப்பதற்குள் அந்தத் தாட்டிகமான அம்மாள் நகர, அவளும் நகர்ந்தாள். திரும்பி நாரும் அரும்புமாக கைகள் இயங்கத் தொடங்கின இவனுக்கு.

சங்கராபரணியாறு பெருக்கெடுத்தோடி வெள்ளம் வந்தது. வில்லியனூர்ப் பாலம் சேதமானது, பெரியார் பஸ் ஒன்று செஞ்சிக்குப் பக்கத்தில் வெள்ளத்தில் அடித்துப்போனது. தனது பக்கத்து வீட்டு உறவு ஜனத்தில் ஒருவர் அதில் செத்துப்போனது. தீபாவளிக்கு ரிலீசான சினிமாவை இன்னும்கூடப் பார்க்க முடியாமல் இருப்பது என்று ஒவ்வொன்றாய்ச் சின்னக் குரலில் மீண்டும் ஆரம்பித்தாள் எஸ்தர். எஸ்தருக்கு ஏற்கனவே சின்னக் குரல். அதிலும் ரகசியம் என்று சத்தம் குறைத்துப் பேசினால் சுத்தமாய் இரண்டு அடிதாண்டி இருக்கிறவனுக்குக்கூட கேட்காது. அப்படி சிறுத்துப் போகும். ஏதோ ரகசிய ஒப்பந்தம் மாதிரி மெதுவாய்ப் பேசியபடி அரும்பு கட்டுவது சந்தோஷமாய் இருந்தது.

சொல்லிக்கொண்டே இருந்தவள் சம்பந்தமே இல்லாமல் சட்டென்று நிறுத்தினாள். அடுத்துக் கேட்கிற உற்சாகத்தில்அப்றம்டி அப்றம்டிஎன்று சகாயமேரி பரபரக்க நிமிர்ந்துகூடப் பார்க்காது மூக்கைச் சொரிகிறமாதிரி விரல் உயர்த்திதேக்கமரம், தேக்கமரம் பாக்குதுஎன்று எச்சரித்தாள். ஒரு இஞ்ச்கூட முகம் திருப்பாது, அதிர்ச்சி காட்டாது இருந்தமேனிக்கு அரும்பே கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். வரதனுக்கு உள்ளூர   சிரிப்பாய் இருந்தது. முதலாளிக்கு எஸ்தர் இட்டிருந்த பேரும் அதை அவள் உச்சரிக்கிற விதமும்தான் காரணம்.

ராமாஞ்சம் டீ சாப்பிடக் கூப்பிட்டான். சட்டென்று வரதன் எழுந்துகொண்டான். சுப்ரமணியும்கூட வந்தான். முதலாளியிடம் சொல்லிக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் பக்கம் நடந்தபோது புதுக் காற்றைச் சுவாசிப்பதுமாதிரி இருந்தது. பூவாசனை இல்லாத காற்று. வேர்வை நெடி அலையும் மனுஷ நெருக்கடியிலிருந்து வருகிற காற்று. வறுபடுகிற பட்டாணி வாசனை, தள்ளுவண்டியில் குவிந்திருக்கிற பழவாசனை, தேங்காய்க்கடையில் ஏற்றி வைத்திருக்கிற வத்தி வாசனை, மூலையில் ஓரமாய் வடைபொறிக்கிற வாசனை, ஜனம் அங்கும் இங்கும் நடக்க எழுந்து நெளிகிற புழுதி வாசனை எல்லாம் கதம்பமாகி ஆளை நெருக்குகிற காற்று.

டீக்கு டோக்கன் வாங்கினான் ராமாஞ்சம். இரண்டு பார்சல் டீ வாங்கி கடைக்கு அனுப்பினான். ஆளுக்கொரு டீ தம்ளரை எடுத்துக் கொடுத்துவிட்டு பெஞ்சில் உட்கார்ந்தான். டீயை உறிஞ்சியபடி எதிர்க்கடையில் தொங்கிய தினத்தந்தி விளம்பரத்தை வாய்விட்டு வாசித்தான் வரதன். லாட்டரிசீட்டு விற்கிற பையனைக் கூப்பிட்டு வைத்துக் கிண்டல் செய்தான் சுப்ரமணி. அக்கறையோடு ஒரு ரூபாய் கொடுத்து ஒரு சீட்டு வாங்கினான் ராமாஞ்சம்.

அடுத்த வாரம் எங்கியுமே தினத்தந்தி கெடைக்காது பாரேன்

எதுக்கு

ராமாஞ்சத்துக்கு லட்ச ரூபாய் உழுந்திரும்ல. அவன் போட்டாவ பெரிசுபெரிசா போட்டுருவாங்க, ஊர்ல விக்க உடாம எல்லாத்தயும் அவனே வாங்கிக்குவான்.’

பெரிய சிரிப்பு ஓங்கி எழுந்து அடங்க மறுபடியும் கடையைப் பார்த்து நடந்தார்கள்.

அரும்பே உலகம்என்று கொஞ்ச நேரத்தில் எல்லாம் சுருங்கிப் போனமாதிரி இருந்தது வரதனுக்கு. மைலம் அக்கா மாமா விவகாரத்தில் மறுபடியும் மனசு உழன்றது.

எஸ்தர் மறுபடியும் பேசினாள். சந்தான கோபாலபுரத்தில் சேமிப்புப் பணத்தைத் திருடிக்கொண்டு ஓடிப்போன போஸ்ட் மாஸ்டர் பற்றி, லட்சம் விழும் என்ற ஆசையில் மூன்றாம் தேதி குலுக்குகிற சீட்டை சம்பளப்பணம் எண்ணூறு ரூபாய்க்கும்  வாங்கிவந்து பத்துப்பைசாகூட பரிசு விழாத அதிர்ச்சியில் பைத்தியம் பிடித்துப்போன ரயில்வே கேங்க்மேன் பற்றி, ராத்திரியெல்லாம் தூங்கவிடாமல் பாட்டும், கோஷமுமாய் இருக்கிற ஐயப்பன் கோயில் பற்றி, மெட்ராஸில் நடந்த தன் மாமா கல்யாணத்துக்குப் போகமுடியாதது பற்றி என்று நிறைய விஷயங்களாகவே பேசினாள். நடுநடுவில் சகாயமேரியும் பேசினாள்.

அம்பாரமாய் இருந்த அரும்புகள் கைப்பிடி அளவுக்கு குறைந்து வந்தது.

குறையக்குறையத்தான் சுறுசுறுப்பாய் எடுத்துக் கட்டினார்கள் எல்லாரும். ஒருவர் விரலோடு ஒருவர் விரல் மோதுகிற சந்தர்ப்பங்களும் இருந்தன. ராமாஞ்சம் தலைப்பு மாற்றி வைத்த அரும்பை சுப்ரமணி எடுத்தபோது செல்லமாய் மணிக்கட்டில் தட்டினான் அவன்.

‘‘சோறா இது. எதுக்குப் பறக்குற?’

சிரித்துக்கொண்டார்கள் எல்லாரும். கடைசி அரும்பு கோர்த்து முடிந்ததும் கையை உதறி சொடுக்கு எடுத்துக்கொண்டான் அவன்.

முதலாளி வந்து ஒவ்வொருவடையதாய் வாங்கி அளந்தார். பாக்கெட் டைரியைத் திறந்து குறித்துக்கொண்டார் அவர். ராமாஞ்சம் அம்பது முழம். சுப்ரமணி ஐம்பத்து மூன்று, சகாயமேரி ஐம்பது. எஸ்தர் நாற்பத்தி எட்டு. வரதன் நாற்பத்தி ஒன்று.

வரதனுடையதை அளந்ததும் முதலாளிக்கு கோபம் வந்த மாதிரி இருந்தது.

வாய் மட்டுந்தா நீளுது தம்பி. வேலைல ஒன்னையும் காணம். ஒழுங்கா பொழைக்கற வழிய பாரு...’

சுருக்கென்று தைத்தது வரதனுக்கு. உள்ளுக்குள் ஏதோ உடைந்த மாதிரி இருந்தது. ‘சாயங்காலம் நாலு மணிக்கெல்லாம் வந்துருங்கஎன்று முதலாளி சொன்னது விழுந்தது பாதி விழாதது பாதியாகவும்தான் இருந்தது. கடையை விட்டிறங்கி எல்லாருடனுமாய் நடந்தான். சகாயமேரி கேட்டாள்.

எதுக்கு உம்முன்னு வர?’

ஒன்னுமில்ல

ஒன்னுமில்லாம யாராச்சும் பேசாம வருவாங்களா?’

த்ச்

அந்த தேக்கமரம் சொன்னதுக்காகவா இப்படி உம்முனு வர...? சரியான தொட்டாசுருங்கி நீ

மெதுவாய்ச் சிரிப்பு முளைத்தது இவனுக்குள்.

சரி அத உடு. அப்றமா சொல்றன்னியே, இப்ப சொல்லு

எது?’

த்ச். பூ கட்டும்போது சொன்னியே

.. அதுவா?’

யேன் சொல்லக் கூடாதா...?’

அப்டியெல்லாம் இல்ல

பின்ன சொல்லு

சொல் சொல் என்று ஆதரவாய்க் கேட்ட இதம் மனசைத் தொட அக்கா வீட்டு பஞ்சாயத்து விஷயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பகிரத்தொடஙகினான் வரதன்.

(பிரசுரமாகாதது -1986)