தொடர்ச்சி.....
கேள்வி:
உங்கள் எழுத்து
முயற்சிகளுக்கு அந்த
நாள்களில் எத்தகைய
ஆதரவு இருந்தது? மரபிலக்கியத்தைத்
தொடர்ந்து நவீன
இலக்கியத்தின் வழியில்
உங்கள் ஆர்வம்
எப்படிப் பரவியது?
பதில்:என் தோழர்கள், என் பெற்றோர் , திருமணமான பின் மனைவி என்று எல்லாருமே என் படைப்புக்ளைத் தொடர்ந்து படித்து ஊக்குவித்தனர். அப்போது வெளிவந்து கொண்டிருந்த சிற்றிதழ்கள் திண்டிவனம் குயில், தெசிணியின் கவிதை போன்றவை என் படைப்புகளை வெளியிட்டன. கடலூர் வந்த பின் ஒருநாள் நூலகத்தில் பாவண்ணனின் ’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்னும் சிறுகதைத் தொகுதியை எடுத்து வந்து படித்து அவருக்கு அது பற்றி எழுதினேன். அவர் மகிழ்ச்சியோடு பாராட்டி எனக்கு ஒரு மடல் எழுதினார். அக்கடிதத்தில் அப்போது கடலூரில் இரா. நடராசன் என்னும் எழுத்தாளர் நடத்திய நவீன இலக்கியம் பற்றிய முழுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சொன்னார். நானும் அதில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நவீன இலக்கியம் என்ற புது உலகம் தெரிந்தது. நெய்வேலி வேர்கள் ராமலிங்கம் பல நவீன இலக்கிய சிற்றிதழ்களை அனுப்பிப் படிக்கும்படி
உற்சாகப்படுத்தினார். தஞ்சாவூரில்
இருந்து வந்து கொண்டிருந்த ’சுகன்’ என்னும் சிற்றிதழ் என் சிறுகதைகளை வெளியிட்டு என்னை மிகவும் ஊக்குவித்தது.
கேள்வி:
நவீன படைப்புகளில்
உங்களை ஈர்த்த
அம்சம் எது?
பதில்: நவீனப் படைப்புகளில் என்னைக் கவர்ந்தது சிறுகதைதான். அதில்தான் வாழ்வின் பல முரண்களைக் காண முடிகிறது. மேலும் நவீன கதைகள் எந்த முடிவையும் சொல்வதில்லை. நீதிகளைப் புகட்டுவதில்லை . இதோ இது இப்படி இருக்கிறது. பார்த்துக் கொள், நீயாக ஒரு முடிவெடுத்துக்கொள் என்று வாசகனின் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறது.
ஒரு பூ தானாக மலர்வதைப் போல அதன் முடிவு நம் மனத்தில் அதுவாகத் தோன்ற வேண்டும். அது நேர்மறையாகவோ
எதிர்மறையாகவோ எப்படி வேண்டுமானாலும் அமையலாம். அந்தச் சுதந்திரமே இதில் முக்கியம் என்று நினைக்கிறேன்.
கேள்வி:
ஒரு சிறுகதையை
நீங்கள் வாசிக்கும்
அனுபவத்தைப் பற்றி
ஓர் எடுத்துக்காட்டை
முன் வைத்துச்
சொல்ல முடியுமா?
பதில்:அண்மையில் முருகேச பாண்டியனின்
‘ ஒவ்வொரு குடையின் கீழேயும் ‘ என்ற கதையைப் படிக்க நேர்ந்தது. இரண்டாம் ஆட்டம் திரைப்படம் பார்த்துவிட்டு ஒருவன் வெளியில் வருகிறான். வீட்டிற்குப் போக மிதிவண்டியை எடுத்தால் அதன் பின் சக்கரத்தில் காற்று இல்லை. மழை வேறு தூறலாகத் துளைக்கத் தொடங்குகிறது. குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வண்டியைத் தள்ளிக்கொண்டுப்
போகத் தொடங்குகிறான்.
அப்போது ஓர் உருவம் வருகிறது. அது ஒரு மனிதன். நாற்பது வயதுள்ள அவன் சற்று கௌரவமான தோற்றத்துடன் இருக்கிறான்.
கையில் ஒரு சிறு பெட்டி வைத்துள்ளான்.
அவனையும் இவன் குடைக்குள் “ வாங்க ‘ என்று அழைக்கிறான். அவனோ விகாரமாகச் சிரிக்கிறான் . இவனுக்கு பயம் வருகிறது. வந்தவன் பட்டென்று குடையைப் பிடுங்கிக் கொள்கிறான். கேட்கக்கேட்கத் தர மறுக்கிறான்.
குடைக்காரன் மழையில் நனைந்து கொண்டே நடக்கவேண்டியதாகிறது. வந்தவன் குடிகாரனோ அல்லது மனநிலை பிறழ்ந்தவனோ
என்று இவன் நினைக்கிறான். அவன் இவனுடைய முகவரியைக் கூடச் சரியாகக் கூறுகிறான். மேலும் அவன், “ மரக்கடையில வேலை பாக்கிற சுந்தரமூர்த்தி பொண்டாட்டியைப்
பார்த்திருக்கிறயா? ஆம்பளங்கிறவன்
அவ கூட இருக்கணும். ராஜபோகம்னா அதுதான்“ என்று கூற இவனோ, ”கமலம் அக்காவா, இருக்காது “ எனத் திகைக்கிறான். அவனோ “ என்னா அசந்துட்டே? இனிமேல்தான்
மெயின் கதையே இருக்கு “ என்கிறான். இப்படி பேசிக் கொண்டே போகிறார்கள்.
குடையைப் பிடுங்க முடியவில்லை. ஒருகட்டத்தில் வந்தவன் பெட்டியை திறந்து காண்பிக்கிறான். பெட்டி நிறைய மல்லிகைப் பூக்கள் இருக்கின்றன. திடீரென்று குடையுடன் அவன் வேகமாக ஓடுகிறான். இவனும் வண்டியைத் தள்ளிக்கொண்டு வேகமாகப் போகிறான். சற்று தூரத்தில் இருந்த பாலத்தில் உட்கார்ந்து அவன் இரண்டு உள்ளங் கைகளாலும் நெற்றியில் அடித்தவாறு அழுதுகொண்டிருக்கிறான். மல்லிகைப் பூக்கள் சகதியில் கீழே கிடக்கின்றன.
குடை முன்னால் கிடக்கிறது. இவன் போய் குடையை எடுத்துத் தலைக்கு மேல் பிடித்துக்கொள்கிறான். ” ஏய்யா அழுவுறே “ என்று கேட்கிறான். மீண்டும் பலமாகத் தலையில் அடித்துக் கொண்டு அழுதவன் “ மல்லிகைப் பூவுன்னா என் பொண்டாட்டிக்கு உயிரு.. சண்டாளி , பாதகத்தி என்னைவிட்டு ஓடிப் போய்ட்டாளே “ என்கிறான். அவ்வளவுதான்.
கதை முடிந்து விட்டது. இதுவரையில் வில்லனாக நம்மால் நினைக்கப்பட்டவன் மேல் நமக்கு இப்போது பரிதாபம் வந்து கதை வெற்றி பெறுகிறது. இக்கதை ஒவ்வொரு வருக்கும் சுய அனுபவமாகவே இருக்கும் . எப்படியும் தன் வீட்டில் அல்லது தெருவில் கண்டிப்பாய் ஓடிப் போனவர்கள் இருப்பார்கள். அப்பாவோ , அண்ணனோ, அக்காவோ, தங்கையோ ஓடிப் போய் இருப்பார்கள். என் நண்பரின் மகள் வீடைவிட்டுப்
போய் வேறு ஒருவனுடன் திருமணம் செய்து கொண்டுவிட்டாள். அவரோ அவமானம் என்றெண்ணி சொந்த வீட்டை விட்டு வேறு ஊருக்குச் சென்று விட்டார். ஓடிப்போனவரின்
நினைவு வரும்போது நாம் என்ன செய்வோம் என்பது நமக்கே தெரியாது. அவர்களைப் பார்த்தால் கழிவிரக்கம்தான்
தோன்றும் . இக்கதை படித்து முடித்தவுடன் ஓடிப்போன பலரின் நினைவு வந்து மனம் கனத்துப் போனது.
கேள்வி:
மரபிலக்கியத்தில் பயிற்சி
உள்ளவர்கள் பலர்
சங்கப் பாடல்களையோ
அல்லது சிலப்பதிகாரத்தையோ
திரும்பத் திரும்பப் படிப்பதாகச்
சொல்வதுண்டு. ஒரு
நவீனஇலக்கிய வாசகராக
நீங்கள் எப்படைப்பையாவது
திரும்பத்திரும்ப்ப் படிப்பது
என்று கருதியிருக்கிறார்களா?
அது எது?
எதற்காக அப்படைப்பு
மீண்டும் மீண்டும்
படிக்கத் தக்கது
என்று கருதுகிறீர்கள்?
பதில்: இலக்கணம் தெரியாமலேயே நான் பாட்டெழுதத் தொடங்கியவன். பிறகு திருக்குறட்கழகம் அறிமுகமான பிறகு மரபுப்பா எனக்கு வசப்பட்டது. அதிலும் அப்போது திண்டிவனத்திலிருந்து வந்துகொண்டிருந்த ‘குயில்’ எனுமிதழில் வெண்பா ஈற்றடி கொடுத்து எழுதச் சொல்வார்கள்.
அதில் வெண்பா எழுதிப் பழகி, பிறகு ஆசிரியப்பா எனத்தொடங்கி விருத்தத்துக்கு
வந்தவன். அந்தக் காலகட்டத்தில்தான் பட்டிமன்றங்களில்
நண்பர்களோடு சேர்ந்து நானும் பேசத் தொடங்கினேன்.
கம்பராமாயணத் தலைப்புகளில்தான்
அதிக அளவில் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் புதுவையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடக்கும் கம்பன் விழாவிற்குச் செல்வது ஒரு பொழுதுபோக்காக இருந்தது. அதில் கேட்ட பலரின் பேச்சுகளில்
கூறப்பட்ட நயங்கள் என்னை மிகவும் ஈர்க்கத் தொடங்கின. முழுமையான அளவில், கம்பனைப் படிக்காமலேயே அவ்வப்போது கம்பனைக் கேட்டதும் பட்டிமன்றத்திற்காகப் படித்ததும் மெதுவாகக் கம்பனுக்குள் தள்ளின. அந்த ஆர்வத்தின் காரணமாக கம்பராமாயணம்
முழுவதையும் படித்து மகிழ்ந்தேன். அந்தப் பயிற்சி தொடர்ச்சியாக சில நாட்கள் இராமாயணத் தொடர்சொற்பொழிவு நிகழ்த்த எனக்குப் பேருதவியாக இருந்தது.
திரும்பப் படிக்கவேண்டும் என்று நான் இப்போது எண்ணுவது கம்பராமாயணம்தான்.
நிறைய கம்பன் விழாக்களுக்குப் போய்க் கேட்டு அனுபவித்ததாலும் எண்ணற்ற பட்டிமன்றங்களில்
நானும் கலந்துகொண்டு
பேசியதாலும் அதில் நான் மூழ்கிவிட்டேன் என்றே கூறலாம். கம்பராமாயணம் என்பது என்னைப் பொருத்தமட்டில் பக்திநூல் மட்டுமன்று. ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதைச் சொல்லும் காவியமாகும். தந்தை, தாய், மகன்மகள், அண்ணன், தம்பி, கணவன், மனைவி, ஆகியவர்களோடு, நண்பன், அரசன், அமைச்சன், ஆகியோரும் எப்படி இருக்கவேண்டும் என்பதை அது தெளிவாகக் கூறுகிறது. நான் அதை ஒரு இலக்கிய நூலாகத்தான் பார்க்கிறேன் . அதே நேரத்தில் அது ஒரு ஆன்மிக நூலாக இயற்கை வர்ணனை நூலாக வரலாற்று நூலாக தத்ததுவ நூலாகவும் இருக்கிறது என்பதையும் கூற வேண்டும். எல்லாவற்றிகும்
மேலாக அது வாழ்விற்கு வழிகாட்டும் நூலாகவும் திகழ்கிறது. அண்ணன் தம்பி உறவு எப்படி இருக்க வேண்டும், பிற மனிதர்களையும்
நேசிக்க வேண்டும் எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் பெரியோர் சொல் கேட்க வேண்டும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வர வேண்டும் என்பதெல்லாம்
கம்பராமாயணம் கற்றுத் தருகிறது. முக்கியமாய் ’பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’ என்பதை அதில்தான் காணமுடியும். அதுமட்டுமல்ல,
கம்பனின் பாடல்களின் ஓசைச் சந்தமும் இலக்கியநயமும்
படிப்பவர்களைக் கட்டி போட்டு விடும் சக்திகொண்டவை.
சுக்ரீவனுக்கு முடிசூட்டி வைக்கும்போது இராமன் கூறும் அறிவுரைகள் எல்லா நாட்டு அரசியல்வாதிகளும் பின்பற்றவேண்டியவை. அதில் முக்கியமானது “யாரோடும் பகை கொள்ளலன்” எனும்போது ”போரொடுங்கும்
புகழொடுங்காது” என்பதாகும். பகையே இல்லாத ஓர் உலகத்தைக் கனவு காண்கிறான் கம்பன். ’பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே” என்பதன்படி இராவணனுக்கும் தூதனுப்பி ‘இன்றுபோய் நாளைவா’ என்று சொல்லி வாய்ப்புகள் கொடுத்துப் பார்க்கிறான்.
மேலும் வேடன் அரக்கன் முதலிய எல்லாரையும் சகோதரராகப் பாவிக்கும் இராமனை நமக்கு வழிகாட்டியாகக்
காட்டி உலகசகோதரத்துவத்தைச் சொல்லுகிறான். அரக்கரிடத்தும்
நல்லவர் உண்டு என்பதைச் சொல்லக் கும்பகருணனைக்
காட்டுகிறது இராமாயணம். அதிலும் பாதி இராவணன் பாதி வீடணன், இதுதான் கும்பகருணன்.
போர்க்களத்தில்
வீடணன் வந்து கும்பகருணனைச் சந்திக்கிறான். இராமன் பக்கம் வந்துவிடு என்று அண்ணனை அழைக்கிறான். அதற்கும் கருணன் பதில் சொல்வதாக கம்பன் எழுதுகிறான். ”நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம்
புகவிட்டார்க்கு உயிர் விடாது அங்குப் போகேன்” நயமும் உணர்ச்சியும் கலந்த பாடல் இது. கும்பகருணன்
இந்த உலகவாழ்வை நீர்க்கோல வாழ்வு என்கிறான். நிலையாமையைக் கூறும் சொற்றொடர் இது. நீரில் போடும் கோலம் நிலைக்காது. இதை நீரால் போடும் கோலம் என்றும் பொருள்கொள்ளலாம். நீண்டநாள் வளர்த்த அண்ணன் இராவணனுக்கு
உயிர்கொடாது அங்குப் போகேன் என்கிறான் கும்பகருணன்.
அங்கு என்பது இராமனையும் குறிக்கும். இலங்கையையும்
குறிக்கும் என்று கொள்ளலாம். கம்பனின் மற்றொரு சிறப்பு நிகழ்வுத் தொடர்ச்சியாகும்.
ஓர் உதாரணம் சொல்கிறேன். இராவணன் சீதையைக் கவர்ந்துசெல்கிறான். ”நஞ்சனையான் அகம்புகுந்த நங்கைநான்” என்று சீதை வருந்துகிறாள். ‘கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சுபுகார்’
என்பது பண்டை மரபாகும். இதைமனத்தில் கொண்ட கம்பன் இராவணன் வீழ்ந்தபிறகு
அவன் மனத்தில் சீதை இருக்கிறாளா என்று இராமன் விட்ட அம்பு தேடியதாக மண்டோதரி புலம்பினாள்
என்று பாடுவான். “வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த
திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி இழைத்தவாறே கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை மனச்சிறையில் கவர்ந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி” என்ற பாடல் கம்பன் ஒரு கவிச்சக்கரவர்த்தி என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.
கம்பனுக்குப்
பிறகு பாரதியிடம்தாம்
இந்தக் கலவையை நாம் பார்க்கமுடிகிறது. ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ என்ற வரியைப் பாருங்கள். உணர்ச்சி பொங்கும் பாடல் அடி இது. ஆனால் ’தாகம்’ என்ற சொல்லாட்சி கவனிக்கத்தக்கது. பொதுவாக தண்ணீர் வேட்கையைத்தான் தாகம் என்போம். . அது தண்ணீர் குடித்தால்மட்டுமே தீரக்கூடியது.
அதுபோல சுதந்திரம் கிடைத்தால்மட்டுமே தீரக்கூடியது
சுதந்திரதாகம் ஆகும். பாரதிதாசன் ஓர் உணர்ச்சிக்கவிஞர்.
அவரிடம் நயம் குறைவாகத்தான் இருக்கும். ‘நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்தே’ பாடலையும், ’தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடலையும்’ போன்ற ஒரு சில பாடல்களை இரண்டும் சேர்ந்த குவியலாகக் கொள்ளலாம்.
கேள்வி:
நீங்கள் பத்திரிக்கைக்கு
ஒரு படைப்பை
அனுப்பி அது
வெளியிடப்படாத நிலையில்
இருந்தால் எப்படி
உணர்வீர்கள்? உங்களை
எப்படி அமைதிப்படுத்திக்கொள்வீர்கள்?
பதில்: பொதுவாக ஒரு படைப்பை எழுதி முடித்தவுடன் அதற்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிட்டதென்றே சொல்லவேண்டும்.
பிறகு அதைப்பற்றி எடைபோட்டுச் சொல்லவேண்டியது வாசகன்தான். ஒவ்வொரு இதழ் ஆசிரியரும் ஒரு வாசகன்தானே? ஆசிரியரான அந்த வாசகரின் மனத்தில் நான் அனுப்பிய அந்தப் படைப்பப்பற்றி கருத்து மாறுபாடு இருக்கிறது என்றே எண்ணிக்கொள்வேன்.
அப்படைப்பின் மையம் அவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம் என்றும் நினைத்துக்கொள்வேன். படைப்பின் நடை இன்னும் மேம்பட்டதாக
இருக்கவேண்டும் எனவும் அவர் நினைக்கலாம். ஒருவேளை அப்படைப்பின் தரம் அவரது இதழின் தரத்திற்குத் தாழ்ந்ததாகவோ
அல்லது உயர்ந்ததாகவோ
இருக்கலாம் என்றே என்னை அமைதிப்படுத்திக்கொள்வேன். சில இதழ்ஆசிரியர்கள் வெளியிடாத தங்கள் நிலையைத் தானாகவே சொல்வதுண்டு.
ஏன் வெளியிடவில்லை
என்று நானாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதும் உண்டு. தவிர, ஒரு படைப்பை வெளியிடுவதுபற்றி முடிவெடுக்க இதழின் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு. நான் நடத்திவரும்
‘சங்கு’ இதழின் வாசகர்கள்கூட சில சமயம் “அந்தப் படைப்பை ஏன் வெளியிட்டீர்கள்” என்று கேட்பதுண்டு.
வெளியான படைப்பைப்பற்றி
விமர்சிக்கலாமே தவிர ஏன் வெளியிட்டீர்கள் என்று கேட்கக்கூடாது என நினைப்பவன் நான். மேலும் ஓர் இதழ் வெளியிடாத ஒரு படைப்பை வேறு இதழ் வெளியிடுவதும் உண்டு. இது பல சமயங்களில் எனக்கு நேர்ந்திருக்கிறது.
கேள்வி:
உங்கள் சிறுகதையில்
ஒரு ஒப்பற்ற
அனுபவத்தையோ அல்லது
தருணத்தையோ ஆழமாகப்
பகிர்ந்து கொள்ளப்
போகிறீர்கள் என்று
நினைக்கும் கட்டத்தில்
வேகவேகமாக அதைத்
தாண்டிப் போய்
விடுகிறீர்கள். கதையைத்
தொடங்கியவுடனேயே அக்கதையை
முடித்துவிடும் அவசரத்தில்
கதையை நகர்த்துகிறீர்கள்.
இந்த அவசரம்
எதற்காக?
பதில்: நான் முதலில் சொன்னதுபோல எனது கதையை தொடக்க காலத்தில் அதிகம் வெளியிட்டது
தஞ்சாவூர் “சுகன்” இதழ்தான். பிறகு தாமரை, செம்மலர், போன்ற இதழ்களைச் சொல்லலாம். இவை காலச்சுவடு, உயிர்மை போன்று வரும் மீச்சிற்றிதழ்கள் அல்ல. குறைந்த பக்கங்களில் வருபவை. எனவே என் படைப்பு பக்க அளவு அதிகமாக இருக்கிறது என்னும் காரணத்துக்காக நிராகரிக்கப்படக்கூடாது என்பதில் நான் அதிகக் கவனத்தை ஆரம்பம் முதலே நான் செலுத்தி இருந்தேன். எனவே நீண்டு செல்ல வாய்ப்புள்ள ஒரு சில கதைகளை நான் கட்டுப் படுத்தியதுண்டு. ஆனால் எந்தக் கதையுமே தொடர்ச்சி விட்டுப் போய் விட்டது என்ற குறை சொல்லக்கூடியவை
அல்ல. கதை எழுதுவதற்கான கரு உருவாகி விட்டபின் அது மனத்திலேயே உழன்றுகொண்டிருக்கும் தருணங்களில்
அது எப்படிப் போக வேண்டும் என்கிற தீர்மானம் தானாகவே உருவாகி விடுகிறது. எந்தக் கதையுமே ஒன்று மையத்தைப் பரவலாக்கவேண்டும்
அல்லது முடிவை நோக்கிச் செல்லவேண்டும். சில மெதுவாகவும் ஒரு சில மிக விரைவாகவும் ஓடக் கூடியவையாக இருக்கலாம். கிரிக்கெட்டில்
திராவிட் போன்றவர்கள்
தொடக்கம் முதல் இறுதிவரை மெதுவாகவே ஆடக்கூடியவர்கள்.
ஆனால் ஷெவாக் போன்றவர்கள் வந்தவுடனேயே அடித்து ஆடத்தொடங்கி இறுதிவரை அப்படியே ஆடுபவர்கள். இரண்டு வகையான ஆட்டங்களும் நமக்குத் தேவைதானே. கதை எழுதத் தொடங்கும் போதே நான் முடிவையும் தீர்மானித்து விடுவதால் அதை நோக்கியே எழுத்து போய்க்கொண்டிருப்பது, நீங்கள் இதுபோன்று நினைக்கக் காரணமாக இருக்கலாம்.
கேள்வி:
”தேரு பிறந்த
கதை” சிறுகதையில்
தேரோட்டத்துக்கும் பல்வேறு
சாதியினரின் கோயில்
நுழைவிற்கும் தொடர்பு
உள்ளது எனத்
தொனிக்கும் பொருளில்
வரிகள் இடம்
பெற்றுள்ளன. எங்கேயாவது
இப்படி ஒரு
கருத்தாக்கத்தை நீங்கள்
படித்ததுண்டா? அல்லது
இப்படி இருக்கலாம்
என்று ஊகத்தால்
எழுதப்பட்டதா?
பதில்: ”தேரு பிறந்த கதை” என்ற கதை இருந்ததாலேயே
அத் தொகுப்பு எட்டயபுரம், கம்பம், மற்றும் சேலம் ஆகிய ஊர்களில் முதல் பரிசு பெற்றது என நினைக்கிறேன். அக்கதை பற்றிப் பலபேர் என்னிடம் பல விமர்சனங்கள் வைத்தார்கள்.
பாராட்டியவர்களும் உண்டு. கண்டித்தவர்களும் உண்டு. எனக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் ஓர் வைணவ அறிஞர் ”தேரை ஒற்றுமையின் சின்னம் என்போம், ஊர்கூடித் தேர் இழுப்போம் என்போம், என்ன நீங்கள் இப்படி எழுதிவிட்டீர்களே”
என்று மிகவும் வருத்தப்பட்டார்
நான் அதிகமாகத் தேரோட்டங்கள் பார்த்தது கிடையாது. கிருஷ்ணாபுரம் பள்ளியில் பணியாற்ற வந்த போதுதான் தேரோட்டத்தின் முக்கியத்தை உணர்ந்தேன். கிருஷ்ணாபுரத்திலிருந்து வைணவ திவ்யதேசமான திருவந்திபுரம் மிக அருகில் இருந்தது. அக்கோயிலின்
தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுப் புற கிராமத்தினர் அனைவருமே அதைப் பார்க்கக் கூடுவார்கள்.
அதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் என்ணிக்கை மிகவும் குறையும். கிருஷ்ணாபுரத்திலிருந்து தொலைவில் இருக்கும் மேல்மலையனூரில் அங்காளம்மன் கோயில் உள்ளது. அக்கோயிலின் தேரோட்டம் பார்க்க லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது வழக்கம். ஆண்டுக்கொருமுறை
நடக்குமதற்குப் போக மாதம் தோறும் பணம் செலுத்திச் சீட்டுகட்டி மக்கள் போவதை கிருஷ்ணாபுரத்தில் பார்த்தேன். அத்திருநாளில் போய் அத்தேரைப் பார்க்காவிட்டல் ஏதோ பெரிய பாவம் செய்வதாய் அவர்கள் வருந்துவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு வியப்பைத் தந்தது எதுவென்றால் பெரும்பாலும் மேல்மலையனூர்
செல்பவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருந்ததுதான்.
அவர்கள் உள்ளூர்க் கோயிலில் நுழைய முடியாதவர்கள்.
பெரும்பாலும் சாமிகளின் வீதி புறப்பாடே கோயிலுக்கு நடந்து வர முடியாத வயதானவர்கள் தம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் சாமியைத் தரிசிக்கச் செய்த ஏற்பாடுதான் என்பது எண்ணம். இதே அடிப்படையில் சிந்தனை வளரந்து தேரு பிறந்த கதை உருவாயிற்று என்று கூறலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால்
உள்ளே போகமுடியாதவர்கள்
அன்று ஒரு நாள் இறைவனைத் தேரில் தரிசிக்கிறார்கள் என்ற கருவை வைத்து எழுதப்பட்ட கதை அது. கரு வளர்ந்து ஏன் தேரை உருவாக்கினார்கள்
என்ற கேள்வியை எழுப்பி விடையையும் கண்டது எனலாம்.
கேள்வி:
இப்போது உங்களுக்கு
வாசிக்கத்தக்கதை அல்லது
வாசித்தலில் போற்றத்தக்கதை
எப்படித் தீர்மானிப்பது
என்னும் அளவுகோல்கள்
உருவாகி உள்ளன.
இந்த அளவுகோள்களின் படிக்கத்தக்க
படைப்புகள் எவை
என்று பட்டியலிட
முடியுமா?
பதில்: தாராளமாக பட்டியலிட்டுச் சொல்லமுடியும்.
இதோ பட்டியல். இது என் ரசனையை அடிப்படையாகக் கொண்டது.
1 ஏழாம் உலகம்
2 நாஞ்சில் நாடன் சிறு கதைகள்
3 பொய்த்தேவு
4 மீனின் சிறகுகள்
5 சேரமான் காதலி
6 ஒரு புளியமரத்தின் கதை
7 நாளை மற்றுமொரு நாளே
8 பொன்னியின் செல்வன்
9 பருவம் [கன்னட மொழிபெயர்ப்பு]
10 அறம்
கேள்வி:
எழுதுகிறவராக மட்டுமன்றி
பத்திரிகை நடத்துகிறவராகவும்
இலக்கிய கூட்டங்கள்
நடத்துகிறவராகவும் ஒரு
பல துறை
ஆளுமையாக உள்ளீர்கள்.
இந்த நிலையில்
பல தரப்பட்டவர்களைப்
பார்த்துப் பழகிப்
பேசும் வாய்ப்புகள்
உங்களுக்குக் கிடைத்திருக்கும்.
இலக்கியச் சுவையின்
எதிர்பார்ப்பில் தலைமுறைக்குத்
தலைமுறை எப்படி
வளர்ந்து வந்திருக்கிறது?
பதில்: இன்றைய தலைமுறை புரியாததை உடனே தள்ளி விடுகிறது. மறுபடியும் படித்துப் பார்க்கும் மனநிலை இல்லை. அதே நேரத்தில் பின் நவீனத்துவம் ,
மாய எதார்த்தவாதம்
போன்றவற்றை விரும்பினாலும்
யதார்த்தவாதத்தையே மிகவும் விரும்புகிறது. மேலும் புதிய தளங்களில் புழங்கும் படைப்புகளைத்தான்
படிக்க விரும்புகிறது
எனலாம். ஆனால் பழைய மரபிலக்கியங்களைப் புறந்தள்ளும்
போக்கு வருந்தத்ததக்கது
என்று சொல்லவேண்டும்.
(பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு முன், 27.10.2013 அன்று, திண்ணை இணைய இதழில் வெளிவந்த நேர்காணல்)