அக்கா என கன்னட இலக்கிய உலகத்தாரால் அன்போடு அழைக்கப்பெறும் அக்கமகாதேவி என்கிற மகாதேவி அக்காவே கன்னட மொழியின் முதன்மைப் பெண்படைப்பாளி. கன்னட வசன இலக்கியத்தின் முக்கியமான ஆளுமை. அல்லமப்பிரபு, பசவண்ணர்
வரிசையில் வைத்து மதிக்கப்படுபவர். இவர்கள் அனைவருமே வாழ்வனுபவத்தையும் ஆன்மிக அனுபவத்தையும் வசீகரமான வகையில் இணைத்து எழுதியவர்கள். சிவனை வெறும் இறையுருவமாக மட்டும் கருதாமல் நல்ல தோழனாக, நல்ல வழிகாட்டியாக, நல்ல துணையாக என பல்வேறு வடிவங்களில் உருவகிக்கின்றன இந்த வசனங்கள். இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு
சிவனை தன் உள்ளம் கவர்ந்த மாமனிதனாக உருவகித்து எழுதியிருக்கிறார் அக்கமகாதேவி. மல்லிகார்ஜுனன் மீது அவர் கொண்ட பற்றையும் விருப்பத்தையும் புலப்படுத்தும்
அக்கமகாதேவியின் பாடல்கள் நாராயணன் மீது காதல் கொண்டு பாடப்பட்ட ஆண்டாளின் பாடல்களைப் போன்றவை.