Home

Sunday 14 July 2024

வாழ்வின் திசைகள் - 4

 நான்கு 

சர்வீஸிங் ஸ்டேஜில் வண்டி ஏற்றப்பட்டிருந்தது. சோப்புத் தண்ணீரை ஊற்றிக் கழுவியதில் வெள்ளித்தகடாய் மின்னியது வண்டி. டயர் இடுக்குகளில் புகுந்த அழுக்கு கூட வெளியேறிப் புதுவண்டியாய்க் காட்சி அளித்தது. வண்டிக்குள் குனிந்து கீரீஸ் தடவிக் கொண்டிருந்தான் குமரேசன்.

குண்டூர் டிரிப் முடிந்து வந்து மூன்று நாள்களாகி விட்டன. ஒரு வாரத்துக்கு ஓய்வு, வண்டியின் உதிரிப் பாகங்களைச் சோதித்து ஸ்பிரிங் ப்ளேட் பார்த்து, ஷாக் அப்சர்வர் மாற்றி, ப்ரேக், கியர் எல்லாம் ஒரு தரம் முழுக்க இறக்கி ஆராய்ந்து ஏற்றிக் கழுவும் வேலை குமரேசனுடையது. தாஸ் எழுபது கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தன் ஊர்க்கு பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்கப் போய்விட்டான். ஒர்க்ஷாப்பில் பக்கத்திலேயே நின்று திருப்தியாகிற மாதிரி வேலை செய்வித்தான்.

க்ரீஸ் நிப்பிளோடு வெளியே வந்தவன் வாசலை நோக்கினான். ஊதாநிறப் புடவையில் ஒரு பெண் வாசலைக் கடந்து கொண்டிருந்தாள். சட்டென்று உடம்பைச் சுண்டி விட்டமாதிரி இருந்தது. ஒயிலும் வளைவும் நிறமும் இள இளவென்று இறங்கிய தோளும் கையும் குழைந்த இடுப்பும் திணற வைத்தது. நேற்று பாபுவோடு இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டுப் போயிருந்த இடத்தில் பார்த்த பெண் கூட இவளைப் போலவே இருந்ததாக நினைத்தான். இறக்கித் தளரக் கட்டிய கூந்தலும், பளீரென்று மணி மின்னும் கழுத்தும், செதுக்கிய உடம்பு வாகுமாய் அந்தப் பெண் சட்டென்று திரைச்சீலையைத் தள்ளிக்கொண்டு பாபுவோடு பேசிக் கொண்டிருந்த ஆளைஇவிட வரணும் சேட்டாஎன்ற அழைத்தபடி நிமிர்ந்த அரைக் கண நேரம் மின்னலடித்த மாதிரி உடம்பு சொடக்குப் போட்டதை இப்போது நினைத்தாலும் வெட்கமாய் இருந்தது. இவன் பார்க்கிறான் என்று தெரிந்தும் முகத்தைச் சுளிக்காமல் சிலை மாதிரி நின்றிருந்த கோலமும் சற்றே சிதறிய சிரிப்பும் மனசில் அழுந்தப் பதிந்தன. அவளைப் பார்த்துவிட்டு அந்தக் கும்பலில் வேறு எந்தப் பெண்ணையும்  பார்க்க இஷ்டமில்லாமல் எவ்வளவோ தூரம் பாபு வற்புறுத்தியும் கூட மறுத்துவிட்டு வெளியே வந்து பாபு வருகிற வரை சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்.

திரும்பிய பிறகு பாபு கேட்டான்

இன்னாச்சிடா குமரேசா ஒனக்கு?’

எது?’

வாசப்படி வரிக்கும் வந்துட்டு உள்ள வரலன்னா என்ன அர்த்தம்

புடிக்கலைன்னு

அதான் எதுக்கு புடிக்கல?’

தேரு மாதிரி வந்திருச்சே, அந்த மாதிரி பொண்ணா இருக்கணும். போய் வரணும். சும்மா கத்தரிக்கா முருங்கக்கா மாதிரி இருக்கறதுங்கிட்ட போவறத விட சும்மா கெடக்கலாம்

அந்த பொண்ண பாக்காம இருந்தா இப்பிடி பேசுவியா

இப்ப பாத்தாச்சே

தேருக்கு இன்னா வெல தெரியுமா

என்ன

சொன்னா கீழ உழுந்துருவ

சொல்லுடா. நானும் தெரிஞ்சிக்கறன்

ஆயிரம் ரூபா

கொஞ்ச நேரத்துக்குப் பேச்சில்லை. செருப்புச் சத்தம் மாத்திரம் சளப்சளப்பென்று கேட்டது. எவ்வளவோ தூரத்தில் ஒரு நாய் ஊளையிடுவது கேட்டது.

என்னடா பேச்சு மூச்சயே காணம். ஒரே யோசனைல எறங்கிட்ட

ஆயிரம் ரூபா எப்படா சேரும்னு கணக்கு பாக்கறன்...’

வௌயாடறியா...’

நெஜமாத்தான் சொல்றன்

முண்டம் இது ஜாஸ்தி. அனாவசியம். அஞ்சி நிமிஷத்துக்கும்   பத்து நிமிஷத்துக்கும் ஆயிரம் ரெண்டாயிரம்னு எறைக்க நோட்டுத்தா அடிக்கணும். சும்மா எதஎதயோ நெனச்சி கொழப்பிக்காத. ஆட்டுக்கு வாலு அளந்துதா வச்சிருக்காம் பாங்க. நமக்கு எது தோதோ அதோட முடிச்சிக்கணும். எட்டாத பழத்துக்கு கொட்டாவி உடக்கூடாது.

பாபு சொன்ன வார்த்தை மனசில் உறைக்கவில்லை. மனசு பூரா அந்த மலையாளப்பெண் நின்றாள். உட்கார்ந்தாள். சிரித்தாள். வெட்கப்பட்டாள். சிணுங்கினாள்.

அண்ணே

உரத்துக் கூப்பிடுகிற குரல் கேட்டு நினைவுகள் கலைய உடம்பு சிலிர்த்து அண்ணாந்தான் குமரேசன். தண்ணீர் பைப் பிடித்துக் கொண்டிருந்த பையன் கேலிச்சிரிப்பு சிரித்தான்.

ஸ்டேஜ உட்டு எட்ட வாங்கண்ணே. வண்டிய எறக்கணும்

குமரேசன் மேலே வந்தான். கிரீஸ் அழுக்கைத் துடைத்துக் கழுவினான். தயாரான வண்டியைக் கிளப்பி ஸ்டியரிங்கைத் தொட்டுக் கும்பிட்டு முன்னோக்கி அசைத்தான். ஒரே கிக்கில் புறப்பட, மெல்ல ட்ரயல் ரன் கிளம்பினான். ஒர்க்ஷாப்பை விட்டு வெளியே வந்து ராஜா தியேட்டர் வரைக்கும் ஓட்டித்திரும்பினான். குடோனின் ஓரமாய் விட்டு குத்தூஸ் பாயிடம் பார்த்துக்கொள்ளச் சொன்னான்.

திரும்பும்போது கணேசமூர்த்தி மெக்கானிக் கூப்பிட்டார். குமரேசன் திரும்பி அவரை நோக்கிப் புன்னகைத்தான்.

ட்ராயர்ல பில்புக் இருந்தா கொஞ்சம் எடுத்துக் குடு குமரேசா

இல்லண்ணே

அங்கதாம்பா இருக்கும். பச்சைக்கலர்ல அட்டை போட்டது

இல்லண்ணே

அந்த மேசைங்ககிட்ட எங்கனாச்சிம் இருக்குதா பாரு

இங்கயும் இல்லண்ணே

இல்லியா. பின்ன எங்க போய் இருக்கும் குமரேசா. ஒரு சின்ன வேல செய்யி. மொதலாளி ரூம்ல இருக்குதா பாக்கறியா...’

சரிண்ணே

பாத்து மெதுவா போய்வா. மொதலாளி -தூங்கறாரு. சத்தம் காட்டாம எடுத்தா

சரிண்ணே

குமரேசன் அறையை நோக்கி நடந்தான், கதவைத் திறந்து உள்ளே நுழைய முதலாளி கட்டிலில் படுத்துத் -தூங்கிக் கொண்டிருந்தார். ஏறு நெற்றியும், முறுக்கிய மீசையும், இறுகிய தாடையும், பெருத்த சரீரமும் முரட்டுத்தனத்தின் அடையாளங்களாய் இருந்தன. பில் புக் ஓரமாய் டேபில் பக்கத்தில் கிடந்தது. நடப்பு வருடத்தியதுதானா என்று ஒரு தரம் பிரித்து சோதித்துவிட்டு எடுத்துக்கொண்டு திரும்பினான்.

திரும்பும் போது குமரேசனின் கண்களில் முதலாளியின் பக்கத்தில் நழுவிக் கிடந்த பர்ஸ் தெரிந்தது. பிரித்த பர்ஸில் -நூறு ரூபாய் நோட்டுகளின் அடுக்கு இருந்தது. பார்த்ததும் உடம்பு அதிர்ந்தது. நாக்கு வறண்டது. உடம்பைச் சுண்டிவிட்ட மாதிரி மனசில் இருக்கும் பெண்ணின் உருவம் அழைக்கிற குரல் கேட்டது. மீண்டும் ஒரு தரம் அந்தப் பெண் மனசுக்குள் சிரித்தாள். கைப்பிடித்தாள். தழுவினாள். மார்பில் சரிந்தாள், கண்ணுடன் கண்ணை நடக்க விட்டாள்.

கொஞ்சமும் யோசிக்காமல் குனிந்து பர்ஸில் இருந்த ரூபாய் கற்றைகளை எடுத்தான். ஆயிரம் மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை வைத்தான். நொடியில் பில் புத்தகத்துடன் வெளியேறினான்.

அங்கதாண்ணே இருந்திச்சி. இந்தாங்க

சாயங்காலம் வரக்காத்திருந்து குளித்து புதுத்துணி உடுத்தினான். சினிமாத் தியேட்டரில் உட்கார்ந்து இரவு வரக் காத்திருந்தான். சினிமா விட்டதும் கோபாலகிருஷ்ண விலாசில் சாப்பிட்டான். புகைத்துக் கொண்டே முன்பு வந்திருந்த வீட்டைத் தேடி வந்தான். பணத்தைக் கொடுத்து அந்தப் பெண்ணோடு இருந்தான். அந்தப் பெண்ணின் மணமும் வியர்வையும், செழுமையும் இறுக்கமும், மூச்சும் பேச்சும் அவனை வேறொரு உலகத்தில் தள்ளியது.

(தொடரும்)