Home

Sunday 7 July 2024

நாட்டார் கலையும் நவீன கலையும் - நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

  

நாட்டார் பாடல்களின் ஈர்ப்புக்கு மிகமுக்கியமான காரணம்,  அவற்றின் இசைத்தன்மையும் சொற்களை அடுக்கடுக்காக முன்வைத்துச் செல்லும் போக்கும் ஆகும். தாலாட்டு, ஒப்பாரி என எல்லா வகையான பாடல்களுக்கும் இது பொருந்தும். ‘மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூச் செண்டாலே, அம்மா அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே, அத்தை அடிச்சாளோ அரளிப்பூச் செண்டாலே, சித்தி அடிச்சாளோ செண்பகப்பூச் செண்டாலே’ என்னும் பாடலை நாம் அனைவருமே கேட்டிருப்போம். அழும் குழந்தையை அமைதிப்படுத்தி உறங்கவைக்க ஒரு கட்டுக்கதை உருவாக்கப்படுகிறது. அதற்காகவே அச்சொற்கள் அடுக்கப்படுகின்றன. பாடும்தோறும் அதன் இனிமை மனத்தை மயக்குகிறது. உரைநடை என ஒன்று உருவானதுமே இந்த இசைத்தன்மை மறைந்துவிட்டது. அடுக்கிச் சொல்லும் முறை கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோய்விட்டது என்றே சொல்லவேண்டும். மரபான உரைநடைக்காலத்தில் அதன் பயன்பாடு மெல்லமெல்ல குறையத் தொடங்கி, நவீனக் கதையாசிரியர்களின் உரைநடைக்காலத்தில் முற்றிலுமாக மறைந்தே விட்டது.

நாஞ்சில்நாடன் நவீன கதையாசிரியர். கடந்த ஐம்பதாண்டுகளாக அழுத்தமான மானுட சித்திரங்களை தம் கதைகளில் தீட்டி வைத்திருப்பவர். அவர் கண்டடைந்து முன்வைத்திருக்கும் பாத்திரங்களில் வெள்ளந்தி மனிதர்களும் இருக்கிறார்கள். எத்தர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய அன்றாடப்பாடுகள் துயரம் மண்டியவை. அவற்றைப்பற்றி பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார் நாஞ்சில்நாடன். அவருடைய வெற்றியில், அவர் பயன்படுத்தும் உரைநடை மொழிக்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. அந்த உரைநடை, பேச்சுமொழிக்கு வெகு அருகில் உள்ளது. தருணத்துக்கு ஏற்ற வகையில் பழைய செவ்வியல்  படைப்புகளின் சில வரிகளையும் சொற்களையும் பொருத்தமாக இணைத்துக்கொள்கிறார். இந்த இனிய கலவையை அவர் மனம் தன்னிச்சையாக உருவாக்கிக்கொண்டே செல்கிறது. எதையும் அவர்  சிரத்தையெடுத்து உருவாக்கியதுபோலப் புலப்படவில்லை. நவீன கதைவடிவத்துக்கு உகந்த வகையில் அம்மொழியைத் தனக்கேற்றபடி அமைத்துக்கொள்கிறார் நாஞ்சில்நாடன். கதையை எழுதிச் செல்லும் போக்கில், தன்னிச்சையாக பீறிட்டெழும் நாட்டார் தன்மையைக் கொண்ட சொற்களின் அடுக்குகளை ஆங்காங்கே இணைத்தபடி செல்வதற்கு இந்த மொழி நாஞ்சில் நாடனுக்கு உதவியாக இருக்கிறது. அவருடைய மரபிலக்கியப்பயிற்சி, சொல்லடுக்குகளை உருவாக்குவதற்கு உற்ற துணையாக இருக்கிறது.

‘இடமோ வலமோ’ என்னும் சிறுகதை ஒரு சுடுகாட்டுச் சித்திரத்தோடு தொடங்குகிறது. முதல்நாள் எரித்துச் சாம்பலான மேட்டிலிருந்து சிலர் எலும்புகளைத் தேடிச் சேகரிப்பது பற்றிய விவரணையை அளிக்கிறார் நாஞ்சில்நாடன். ’எலும்பு பொறுக்கினார்கள்’ என்று குறிப்பிடும் தருணத்தில் அவருக்குள் வாழும் நாட்டார் கலைஞன் விழித்தெழுந்துவிடுகிறான். வேகவேகமாக சொல்லடுக்குகள் வந்து விழத் தொடங்குகின்றன.  ‘செத்துப் போனது ஆணோ, பெண்ணோ, மூத்ததோ, இளையதோ, சுமங்கலியோ, கைம்பெண்ணோ, நோய்ப்பட்டதோ, திடமோ, கொலையோ, தற்கொலையோ, மூத்த பிள்ளையோ, குடியானவனோ எவராக இருந்தால் என்ன? கண்  பஞடைவதும் காலன் வருவதும் எவர் சம்மதத்தின் பேரில்? எரித்தால் எலும்பு பொறுக்கித்தானே ஆகவேண்டும்’ என்று சொல்லிவிட்டு ‘வரிசையாக ஏழெட்டுக் குழிகள் கிடந்தன’ என மீண்டும் சுடுகாட்டு சித்திரத்தோடு வந்து இணைந்துகொள்கிறார்.

’அரக்கரும் குரக்கினமும்’ என்றொரு சிறுகதை. காலையில் உறக்கத்திலிருந்து எழுந்து பல் துலக்கிக்கொண்டு, வீட்டுக்குள்ளிருந்து வரும் சூடான காப்பிக்காகக் காத்திருக்கிற பெரியவர் ஒருவருக்கு அவரே எதிர்பாராத விதமாக ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. யாரோ செல்லப்பன் என்பவரைப்பற்றிய உரையாடலோடு தொடங்குகிறது அந்த அழைப்பு. ஆனால் பெரியவரால் அந்த உரையாடலோடு இணையமுடியவில்லை. அவரால் அந்தச் செல்லப்பன் யாரென்று கண்டறியவே முடியவில்லை. அடுத்த கேள்வியோடு உரையாடலைத் தொடங்குவதற்கு மாறாக, அந்தப் பெரியவர் செல்லப்பன் தொடர்பான சிந்தனையிலேயே அலைபாய்வதாக எழுதியிருக்கிறார் நாஞ்சில்நாடன். ‘எந்தச் செல்லப்பன் என்று அவசர அடியாக நினைவுக்கு வரவில்லை. அந்தச் சின்ன ஊரில் ஏழு செல்லப்பன் உண்டு. நெட்டைச் செல்லப்பன், கட்டைச் செல்லப்பன், வெள்ளைச் செல்லப்பன், காக்கா செல்லப்பன், நொண்டிச் செல்லப்பன், மொட்டைச் செல்லப்பன், கள்ளச் செல்லப்பன் என எந்தச் செல்லப்பனைச் சொல்கிறார் என்று யோசித்தான்’ என்று குறிப்பிட்ட பிறகு, மீண்டும் உரையாடல் தொடங்குகிறது. 

’சாப்பிள்ளை’ என்றொரு சிறுகதை. செல்வந்தர் ஒருவருடைய வீட்டில் நடைபெறும் திருமணத்துக்கான அழைப்பிதழ் ஓர் எழுத்தாளருக்கு வருவதில் இருந்து தொடங்குகிறது அச்சிறுகதை. அனுப்பி வைத்தவர் யார் என்பதை அவரால் ஊகித்து அறியமுடியவில்லை. அந்த மனக்குழப்பத்தைத் தெரிவிக்கும் சித்திரத்தோடு அக்கதை தொடங்குகிறது. ஏதேதோ எண்ணங்கள் எழுந்து அவனைக் குழப்புகின்றன. அந்த மனநிலையைப்பற்றி எழுதும்போது நாஞ்சில்நாடன் ”இத்தகு பகட்டு, படோடோபம், ஆவாரம், அமர்க்களம், ஆடம்பரம், அட்டகாசம், அமலை, கம்பலை செறிந்த கல்யாணத்துக்குப் போக அவனுக்கு எங்ஙனம் தோதுப்படும்?” என்று அவருக்கே உரிய சொல்லடுக்குகள் தன்னிச்சையாக வெளிப்படுகின்றன. 

நவீன சிறுகதையின் இறுக்கமான கட்டமைப்பை நாடோடித்தன்மை கொண்ட இச்சொற்கள் சற்றே தளர்த்திவிடுகின்றன. ஆனால் கதையின் வலிமைக்கு எந்த ஊறும் விளையவில்லை. கதையை வாசிக்கும் வாசகர்களுக்கும் எந்தத் தடையும் ஏற்படுவதில்லை. நவீன சிறுகதைக்கு நாஞ்சில் நாடன் ஒரு புதுவடிவத்தை வழங்கியிருக்கிறார். எளிய உரைநடையையே கதைமொழியாகக் கொண்டு நவீன சிறுகதைகளை எழுதியிருக்கும் அசோகமித்திரனைப்போல, எளிய பேச்சுமொழிக்கு அருகிலிருக்கும் நாட்டார் தன்மை கொண்ட உரைநடையை,  கதைமொழியாகக் கொண்டிருக்கிறார் நாஞ்சில்நாடன்.

நாஞ்சில் நாடனின் தொடக்கவரிசைக் கதைகளில் முக்கியமான ஒரு சிறுகதை ’அம்மை பார்த்திருந்தாள்’. பசிக்கொடுமைக்கு இலக்கான சிறுவனொருவனின் கதை. சாதித்தட்டில் மேல்நிலையைச் சார்ந்த ஒரு சிறுவன் பசிக்கொடுமையின் காரணமாக, சாதித்தட்டில் அடிநிலையைச் சார்ந்த பகுதியில் வழங்கப்படும் இலவசப்பாலை பாத்திரத்தில் வாங்கிக்கொண்டு வீட்டைநோக்கி நடந்து வருகிறான். குளக்கரையில் உட்கார்ந்து கதைபேசிக்கொண்டிருந்த மேல்சாதிக்காரர்கள் இடைவழியில் அவனைத் தடுத்து நிறுத்தி, அவன் சுமந்துவந்த பாத்திரத்தைச் சோதித்துப் பார்க்கிறார்கள். அடிநிலையில் வசிப்பவர்கள் வாழும் தெருவிலிருந்து அவன் பால் வாங்கிக்கொண்டு செல்கிறான் என்பது தெரிந்ததும் ஆத்திரத்தில் பாத்திரத்தைக் கவிழ்த்து  பாலை மண்ணில்  ஊற்றிவிடுகிறார்கள்.

செய்வதறியாமல் திகைத்துப் பார்க்கும் சிறுவன் ஆழ்ந்த வருத்தத்துடன் பாத்திரத்தை வழியிலிருந்த குளத்தில் கழுவி சுத்தப்படுத்திக்கொள்கிறான். வீட்டை அடைந்ததும் பாத்திரத்தை எடுத்து வந்ததற்காகச் சொல்லும் காரணம் பொருத்தமாக இருக்கவேண்டுமே என்கிற எண்ணத்தில் கரையோரம் வளர்ந்து நிற்கும் கீரையைப் பறித்து பாத்திரத்தில் நிரப்பிக்கொண்டு புறப்படுகிறான். கரையோரத்தில் நிறுவப்பட்ட பீடத்தில் தெய்வமென அமர்ந்திருந்த அன்னை, ஒரு சாட்சியென அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறாள். தாத்தா பார்த்திருந்தார், அப்பா பார்த்திருந்தார் என்பதுபோல ’அம்மை பார்த்திருந்தாள்’ என்று போகிற போக்கில் எழுதுவதன் வழியாக தெய்வத்தையும் ஒரு கதைப்பாத்திரமாக அமைத்திருக்கிறார் நாஞ்சில்நாடன். தெய்வம் ஒரு சாட்சி. அவ்வளவுதான்.

தெய்வம் அப்போதைக்கு மெளனமாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறது அல்லது மனத்துக்குள் குறித்துவைத்துக் கொள்கிறது என்று நினைத்து நாம் அமைதியடையலாம். தமிழ்ச்சிறுகதையுலகத்தில் தெய்வத்தை ஒரு கதைப்பாத்திரமாக வெற்றிகரமாக பயன்படுத்திய ஒருசில எழுத்தாளர்களில் நாஞ்சில்நாடன் முக்கியமானவர். அவருடைய முதல் தொகுதி வெளிவந்து ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் பதினோராவது தொகுதியில், இதுவரை மெளனசாட்சியாக நின்றிருந்த பாத்திரத்தை விழிதிறந்து பார்க்கும் பாத்திரமாகவும் நிலைகண்டு உருகும் பாத்திரமாகவும் என்ன முடிவை எடுக்கலாம் என யோசித்துக் குழம்பும் பாத்திரமாகவும் நம்பகத்தன்மையோடு வளர்த்தெடுத்திருக்கிறார் நாஞ்சில்நாடன். அந்தச் சிறுகதையின் பெயர் ‘இடமோ வலமோ’. அந்தத் தலைப்பே தொகுதியின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது.

இடமோ வலமோ கதையில் இடம்பெற்றிருக்கும் தெய்வம் அம்மை அல்ல. ஆண் தெய்வம். சுடலைமாடன். தொடக்கத்தில் இச்சிறுகதையிலும் சுடலைமாடன் வேடிக்கை பார்ப்பவராகவே நின்றிருக்கிறார். சுடுகாட்டுத்தடத்தில் இறங்கி தன்னை நோக்கி நடந்துவரும் வயதான பெரியவரை சுடலைமாடன்தான் முதலில் பார்க்கிறார். வெகுதொலைவு நடந்துவந்த களைப்பின் காரணமாக தன் காலடியிலேயே நிழலில் அமர்வதையும் பார்க்கிறார். காதை அடைக்கிறது. யாரோ படைத்துவிட்டு வைத்துச் சென்ற இளநீரையும் தேங்காயையும் எடுத்துக்கொண்டு சமதளத்திற்கு இறங்கிவந்து சாப்பிடத் தொடங்குகிறார். பசி அடங்கியதும் அருகிலிருந்த ஆற்றில் குளிக்கிறார். பிறகு சந்நிதியை அடைந்து தொழுகிறார். பிறகு, களைப்பின் காரணமாக .அப்படியே உறங்கிவிடுகிறார்.

தன் கண்முன்னால் படுத்துறங்கும் முதியவர் யார் என்று தெரியாமல் குழம்புகிறார் சுடலைமாடன். பிறகு விழிமூடி அவரையே தியானித்து தன் அக உலகத்துக்குள் சென்று, அவருடைய பூர்வீகத்தை அறிந்துகொள்கிறார். வெளியூரிலிருந்து மகனோடு அந்த ஊருக்கு சேர்ந்து வந்தவர்  என்பதையும் அதிகாலைக் கருக்கலில் பேருந்துநிலையத்தில்  மகனாலேயே கைவிடப்பட்டவர் என்பதையும் அறிந்துகொள்கிறார்  சுடலைமாடன். கைவிடப்பட்ட பெரியவர் கையில் பணம் இருக்கிற வரையில் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு பசியாறினார். பணம் கரைந்ததும் கையேந்தி வாங்கிச் சாப்பிட்டார். உணவு கிடைக்கும் இடம்தேடி ஊரூராக அலைந்தார். அவருடைய நினைவில் ஊர், முகவரி, உறவுகளின் பெயர்கள் எல்லாமே அழிந்தொழிந்துவிட்டன. பெயர்கள் மறந்துவிட்டன. உறவுகள் மறந்துவிட்டன. ஆண்டியாக நடக்கத் தொடங்கிவிட்டார். அவர் வாழ்க்கையைத் தன் அகக்கண் வழியாகக் கண்ட சுடலைமாடன். ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிவிடுகிறார். அவருக்கு உதவவேண்டும் என நினைக்கிறார்.

அவருடைய உயிருக்கு விடுதலை அளிப்பதன் வழியாக, பெரியவரின் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை அளித்துவிடலாம் என்றுதான் முதலில் சுடலைமாடனுக்குத் தோன்றுகிறது. ஆனால் உயிரைப் பறிக்கும் அதிகாரம் அவரிடம் இல்லை. தன் சாத்தியப்பாட்டின் எல்லைக்குள் என்ன செய்யலாம் என்று அவர் மீண்டும் யோசிக்கிறார். பெரியவரை முற்றிலுமாக மறதி நோயிலிருந்து குணப்படுத்தி சொந்தங்கள் நடுவில் வாழும் வகையில் திருப்பி அனுப்பி வைப்பது என்பது ஒரு வழி. ஆனால், சொந்தங்கள் எல்லாரும் சேர்ந்தே கைவிட்ட ஒருவரை மீண்டும் சொந்தங்களிடம் திருப்பி அனுப்புவது பொருத்தமல்ல என்றும் அவருக்குத் தோன்றுகிறது. மறதிநோய் நிலையிலேயே அவரை இருக்கச் செய்து நாடோடியாகவே நீடிக்கவைப்பது என்பது இன்னொரு வழி. என்ன முடிவை எடுப்பது என்று தெரியாமல் சிந்தித்துக்கொண்டே இருக்கிறது தெய்வம். இடமோ, வலமோ என்னும் குழப்பம் அதனால்தான் விளைகிறது. தமிழ்ச்சிறுகதை உலகில் மெளனசாட்சியாகவே இதுவரை நின்றிருந்த தெய்வத்தை, சிந்திக்கும் ஆற்றல் நிறைந்தவராகவும் முடிவெடுக்கத் தெரியாமல் குழப்பத்தில் மூழ்கியிருப்பவராகவும் வளர்த்தெடுத்து நிறுத்தியிருக்கிறார் நாஞ்சில்நாடன்.

’பரம் இருப்பது எவ்விடம்’ என்னும் சிறுகதையும் வீட்டைவிட்டு வெளியேறிய ஒரு பெரியவரின் கதை. அவர் பெயர் கனகலிங்கம்.  மனைவியை இழந்தவர். மகன் இராணுவப்பணியில் இருக்கிறான். மருமகளோடும் பேரக்குழந்தைகளோடும் வீட்டில் இருக்கிறார். ஒரு குறையும் இல்லை எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்த சூழலில், ஒரு குறிப்பிட்ட நாளில் உறவினர் வீட்டுச் சீமந்தத்துக்குப் புறப்பட்ட மருமகள் பெட்டியில் இருக்கும் மாமியாரின் பட்டுப்புடவையை எடுத்து அணிந்துகொள்கிறாள். தன் மனைவியின் புடவையைக் கட்டிக்கொண்டிருந்த கோலத்தைக் கண்ட பெரியவர் ஏதோ ஒரு வேகத்தில் மருமகளை நெருங்கித் தழுவிக்கொள்கிறார். எல்லாப் பிரச்சினைகளும் அங்கிருந்து தொடங்கிவிடுகின்றன. அக்கணமே, அழுத கோலத்தோடு மருமகள் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன் தாய்வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். பூட்டப்பட்ட வீட்டுக்குச் செல்ல வழியில்லாமல் சொந்த ஊரிலேயே எங்கெங்கோ கிடைக்கும் மரத்தடிகளிலும் கோவில் வாசல்களிலும் படுத்து காலத்தைக் கடத்துகிறார் பெரியவர். கையேந்தி வயிற்றை நிரப்பிக்கொள்கிறார். ஊரிலிருந்து மகன் வந்திருக்கிறான் என அறிந்து பார்ப்பதற்கு ஓடோடிச் சென்று சந்தித்து அவமானப்படுகிறார். சொல்லடி தாங்க முடியாமல் வீட்டைவிட்டே வெளியேறிவிடுகிறார். எங்கெங்கோ அற்று அலைந்து கடைசியாக ஆயினித்தோப்பு கிராமத்தின் முப்பிடாதி அம்மன் கோவில் சுவரோரமாக வந்து அமர்ந்துகொள்கிறார். அவருடைய வக்கணையான பேச்சுமொழி அந்த ஊராருக்குப் பிடித்துவிட, அவர்களுடைய ஆதரவில் அவர் அங்கேயே நிலைகொள்கிறார். ஏற்கனவே அறிந்துவைத்திருந்த சித்தர் பாடல்களின் வரிகளைப் பொருத்தமான இடங்களில் சொல்லி, மக்களின் மனத்தில் இடம்பிடித்துவிடுகிறார். தெய்வத்தின் வாசலிலேயே ஒருவனை தெய்வமெனக் கொண்டாடுகிறார்கள் ஊரார். அசலுக்கும் போலிக்கும் வேறுபாடு தெரியாத மக்களுக்கு எடுத்துரைப்பவர்கள் யாருமில்லை.

பரம் இருப்பது எவ்விடம் கதையில் இடம்பெறும் பெரியவரின் பெயர் கனகலிங்கம். இடமோ வலமோ சிறுகதையில் இடம்பெறும் பெரியவரின் பெயர் காசிலிங்கம். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் என்னும் ஒரே ஒரு ஒற்றுமை தவிர, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனப்போக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். காசிலிங்கத்துக்காக வருத்தப்படும் தெய்வம் கனகலிங்கத்தை வேடிக்கை பார்க்கிறது.

’அரக்கரும் குரக்கினமும்’ இத்தொகுதியில் சிறந்த கதைகளின் ஒன்று. அச்சொற்கள் கம்பர் கையாண்ட சொற்கள். நாஞ்சில்நாடன் எழுதியிருக்கும் சிறுகதை அரக்கர் தொடர்பானதும் அல்ல. குரங்குகள் தொடர்பானதும் அல்ல. கம்பர் அச்சொற்களைக் கையாண்ட தருணத்தை நினைவுக்குக் கொண்டுவருவதற்காக அச்சொற்களை எடுத்தாண்டிருக்கிறார் நாஞ்சில்நாடன். கம்பராமாயணத்தில் வாலியின் சொற்களாக இவ்வரிகள் ஒலிக்கின்றன. ’உனக்கும் அரக்கர் குலத்தின் தலைவனான இராவணனுக்கும் இடையில்தான் பிரச்சினை. நீ அவனோடுதான் நேரில் மோதியிருக்கவேண்டும். மாறாக, குரங்குகளின் தலைவனாக உள்ள என்னிடம் ஏன் தேவையில்லாமல் மோதுகிறாய்?’ என்பதுதான் வாலியின் கேள்வி.

சம்பந்தமே இல்லாமல் எங்கோ நடைபெற்ற ஒருவருடைய மரணச்செய்தியை முன்வைத்து யாரென்றே தெரியாத ஒரு மனிதர் நிகழ்த்திய கைப்பேசி உரையாடல்தான் இந்தச் சிறுகதையின் மையம். அதிகாலை நேரத்தில் சூடான காப்பிக்காக எதிர்பார்த்திருந்த நேரத்தில் அவருக்கு ஓர் அழைப்பு வருகிறது. அறிமுகமில்லாத ஒருவரின் மரணச்செய்தியை முன்வைத்து, மிகுந்த நெருக்கமானவரிடம் பகிர்ந்துகொள்ளும் உரிமையுணர்வோடு நீண்ட நேரம் பேசி முடிக்கிறார் ஒருவர். அந்த உரையாடலை முடித்துக்கொள்ளும்போது காப்பிக்காகக் காத்திருந்து வெற்று உரையாடலில் பொழுதைக் கழித்த பெரியவர் வாலியுடைய சொற்களை நினைத்து ஆறுதல் கொள்வதாக கதை முடிவடைகிறது. அவருடைய ஆற்றாமையை வாசகர்களுக்குப் புரியவைத்துவிட்டோமோ இல்லையோ என்ற எண்ணத்தில் துட்டிக்குப் போனவள் தாலி அறுப்பாளா என கூடுதலாக ஒரு வரியையும் சேர்த்துக்கொள்கிறார் நாஞ்சில்நாடன். செவ்வியல் வரிகளாக இருந்தாலும் சரி,  நாட்டார் பாடல்கள் அல்லது பழமொழிகளின்  வரியாக இருந்தாலும் சரி, இரண்டுமே நவீன கதையின் கச்சிதமான வடிவத்துக்குப் புறம்பானவை என்றபோதும், விதிவிலக்காக நாஞ்சில் நாடனின் சிறுகதையில் பொருந்திப் போகின்றன.   அதுவே நாஞ்சில்நாடனின் கலைவெற்றி.

தொண்ணூறு வயதை நெருங்கும் மூன்று பாத்திரங்கள் இச்சிறுகதையில் இடம்பெற்றிருக்கின்றனர். ஒரு பெரியவர் அமெரிக்காவில் இறந்துவிட்டார். அச்செய்தியைத் தெரிந்த ஒருவர் தெரியாத இன்னொருவருக்குத் தகவல் கொடுக்கிறார். அவருக்கோ, கைப்பேசியில் அழைத்தவரையும் தெரியவில்லை. இறந்து போனவரையும் தெரியவில்லை. உண்மையாகவே அவர்கள் ஒருவரை ஒருவர் அறியாதவராக இருக்கலாம். எங்கோ செல்ல வேண்டிய அழைப்பு அவரை வந்து அடைந்திருக்கலாம். அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாகவும் நினைத்து அக்கதையைப் படிக்கலாம். மூப்பின் காரணமாக அடிக்கடி ஏற்படக்கூடிய நினைவாற்றல் குறைவின் காரணமாக, உண்மையிலேயே ஒருவரை ஒருவர் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பவர்கள் இடையில் நிகழும் உரையாடலாகவும் அக்கதையைப் படிக்கலாம். நட்பின் நெருக்கதையும் உணரமுடியாத, பழகியவரின் மரணத்தையும் உணரமுடியாத முதுமை எவ்வளவு பெரிய சுமை என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. நாஞ்சில்நாடனின் சிறந்த சிறுகதைகளின் பட்டியலில் இச்சிறுகதைக்கு நிச்சயம் இடமுண்டு.

கும்பமுனி என்னும் பாத்திரத்தை உருவாக்கி கடந்த பல ஆண்டுகளாக பல சிறுகதைகளை எழுதிவிட்டார் நாஞ்சில்நாடன். இத்தொகுதியிலும் பல கும்பமுனி சிறுகதைகள் உண்டு. சமூக, அரசியல், இலக்கிய விமர்சனங்களை ஊடுபாவாகக் கொண்டு சமைக்கப்பட்ட இச்சிறுகதைகளுக்கு ஒரு முக்கியமான இடமுண்டு. இத்தொகுதியில் கும்பமுனியைப்போலவே இன்னொரு கற்பனைப்பாத்திரத்தை சில கதைகளில் உருவாக்கியிருக்கிறார் நாஞ்சில்நாடன். அப்பாத்திரத்தின் பெயர் சோணாசலம். தனியார் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வூதியமாகக் கிடைக்கும் ஆயிரத்துச்சொச்ச தொகை குடும்பச்செலவை ஈடுகட்ட போதாத காரணத்தால் தன் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள அடுக்ககங்களில் காவல் பணியாளராகப் பணியாற்றிப் பொருளீட்டுகிறார்.

பணியாளர் வாழ்க்கை அவருக்கு பல அனுபவங்களை ஈட்டிக் கொடுக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு முறையும் நடுத்தட்டுக்கே உரிய நடுக்கத்தோடும் ஆற்றாமையோடும் பொருமலோடும் ஒடுங்கிச் செல்கிறார். எதையும் எதிர்த்துக் கேட்கமுடியாத கையாலாகாத்தனம். எதைக் கண்டாலும் பொங்கி வரும் கோபம். இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான நடுத்தட்டு மனிதர்களின் பிரதிநிதியாக சோணாசலத்தை வளர்த்தெடுக்கிறார் நாஞ்சில்நாடன்.

 கும்பமுனி போல அவரிடம் வாய்த்துடுக்கு இல்லை. அவரை மீறி வாய்த்துடுக்கு வெளிப்படும் தருணத்தில் பிறரிடம் வாங்கிக் கட்டிக்கொள்கிறார்.  கொஞ்ச நேரம் முனகுகிறார். பிறகு அதைக் கடந்து செல்கிறார். அப்பட்டமான எதார்த்தவாதியாக இருக்கிறார்.

ஒருநாள், தரையில் தண்ணீர் தேங்கி சேறாகக் கிடக்கிறது என்று தெரிந்தும் கண்மண் தெரியாமல் வண்டியை ஓட்டிச் செல்லும் ஒருவனுடைய வேகத்தின் விளைவாக, அதே பாதையில் ஓரமாக நடந்துசெல்லும் சோணாசலத்தின் மீது சேறு படிந்துவிடுகிறது. இயற்கையாக எழுந்துவிட்ட கோபத்தின் விளைவாக வண்டியைப் பார்த்து கைநீட்டி சாபம் விடுவதுபோல ஏதோ சொல்கிறார். அவருடைய வசைபொழியும் முகத்தை பக்கவாட்டு கண்ணாடி வழியாகப் பார்த்துவிடும் அந்த வாகன ஓட்டி வேலை மெனக்கிட்டு வண்டியைத் திருப்பிக் கொண்டுவந்து “சங்கறுத்துருவேன்” என்று மிரட்டிவிட்டுச் செல்கிறான். செய்வதறியாமல் திகைத்து அந்த வண்டி போகும் திசையைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார் சோணாசலம்.  எதிர்காலத்தில் கும்பமுனியைப்போல சோணாசலமும் நினைத்து நினைத்துப் பேசப்படும் ஒரு பாத்திரமாக அமையக்கூடும். 

 

 

(இடமோ வலமோ - நாஞ்சில்நாடன், சிறுகதைகள், சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள்வீதி, கே.கே.புதூர், கோவை – 38. விலை ரூ.150)

 

(புக் டே – இணையதளம் – 04.07.2024)