Home

Sunday 21 July 2024

ஆற்றாமையும் வேதனையும்

 

கடலைக் களவாடுபவள் என்னும் தலைப்பில் அமைந்த புதிய கவிதைத் தொகுதிக்கான தன் முன்னுரையை சுஜாதா செல்வராஜ் தன் அன்னையைப்பற்றிய ஒரு நினைவுக்குறிப்போடு தொடங்குகிறார். ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தில் அந்தக் காலத்தில் மூத்த மருமகளாக வாழ்க்கைப்பட்டவர் அவர். பெரிய குடும்பம் என்னும்போது பெரிய பெரிய பிரச்சினைகளும் இருந்திருக்கக்கூடும். அவருக்கும் பிறர் மீது சிற்சில சமயங்களில் கோபம் உருவாகியிருக்கக்கூடும். ஆனால் அந்த அன்னை யாரோடும் மோதி தன் இடத்தை நிறுவிக்கொள்ள முயற்சி செய்யவில்லை. யார்மீதும் கசப்பைக் கொட்டவில்லை. மாறாக, தினந்தோறும் அழுக்குத்துணிகளைத் துவைக்க உட்காரும் தருணங்களில் தன் நெஞ்சிலிருக்கும் ஆற்றாமைகளையும் கோபத்தையும் வருத்தத்தையும் சத்தமாகச் சொல்லிக்கொண்டே துணிகளைத் துவைகல் மீது ஓங்கி அடித்து அடித்துத் துவைத்து கரைத்துக்கொள்வதை ஒரு கலையாக கற்றுவைத்திருந்தார். தோட்டத்து பம்ப் செட்டின் தண்ணீரில், மோட்டார் ஓடும் சத்தத்தில் தன் மனக்குமுறல்களைக் கொட்டிக் கழுவிவிட்டு லேசான மனத்துடன் வீடு திரும்பிவிடுவார்.

அந்த அன்னையின் சித்திரம் மிகமுக்கியமான ஓர் உண்மையை இச்சமூகத்தின் முன் வைக்கிறது. மனத்தின் எடையைக் கரைத்து இல்லாமலாக்கும் கலையை அறிந்தவர்களே வாழும் கலையை அறிந்துகொள்ள முடியும். ஆனால் அந்த அன்னையரைப்போல எல்லாவற்றையும் ஓடும் தண்ணீரிலேயே கரைத்து ஓடவைத்து விட்டுச் செல்வது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. கரைக்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையை நீந்திக் கடந்துசென்றுவிடுகிறார்கள். அதை அறியாதவர்கள் சிலந்திவலையில் சிக்கிய பூச்சியென சிக்கித் தவிக்கிறார்கள்.

தன் அன்னையைப்போலவே மனபாரத்தை வேறொரு வழியாகக் கரைத்துவிடும் கலையின் நுட்பத்தை அறிந்தவராக இருக்கிறார் சுஜாதா செல்வராஜ். அவர் கற்ற கல்வியின் வழியாகவும் கலை இலக்கிய நாட்டத்தின் வழியாகவும் அவருக்கு அந்த நுட்பம்  வேறொரு விதமாக கைகூடி வந்துவிட்டது. கவிதை அவருக்கு உற்ற துணையாக அமைந்துவிட்டது. கவிதை, கவலையையோ அல்லது துன்பத்தையோ மறக்கச் செய்வதில்லை. மாறாக,  அவற்றைக் கடந்து அப்பால் செல்லும் ஆற்றலை வழங்குகிறது.

இத்தொகுதியில் 62 கவிதைகள் உள்ளன. சுஜாதாவுடைய வளர்ச்சியின் வெவ்வேறு காலகட்டங்களை அக்கவிதைகள் வழியாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

 

செப்பு வைத்து விளையாடும்

குழந்தைகளின் குதூகலத்தை ஒத்தது

கனவுகளை நிஜமாக்கிப் பார்க்கும்

இந்த நாடகம்

 

அடுப்பு போலவே அடுப்பு

சோறு போலவே பிடிசோறு

அம்மா போலவே அம்மா

அப்பா போலவே அப்பா

பிள்ளை போலவே பிள்ளை

வாழ்க்கை போலவே வாழ்க்கை

 

நாடகம் முடிந்து

எழுந்து நகர்கையில்

வலியுடன் முறியும் கனவுகள்

பாதியில் கைவிடப்பட்ட சிற்பங்கள்

 

பாதியில் இறங்கும் திரை என்னும் தலைப்பில் சுஜாதா எழுதியிருக்கும் இக்கவிதை அவரை ஒரு சிறந்த கவிஞராக நிலைநிறுத்தி வைக்கும் ஆற்றலை உடையது. வழக்கமாக குழந்தைகளின் செப்பு விளையாட்டு, குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களின் செயல்பாடுகளைப் பிரதியெடுக்கும் சாயலோடு அமைவதுதான் வழக்கம். அந்தச் செப்பு விளையாட்டை எழுதுகிறவர்களும் அந்தச் சாயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதே வழக்கம். ஆனால் சுஜாதா தன் கவிதையில் அந்த மரபைத் தலைகீழாக்கிவிடுகிறார். வாழ்க்கையைப் பார்த்து செப்பு விளையாட்டு நடைபெற்ற காலம் போய்விட்டது. செப்பு விளையாட்டின் நாடகத்தன்மை எப்படியோ வாழ்க்கையில் நடமாடும் பாத்திரங்களுக்கு வந்துவிட்டது. அந்தச் செக்குமாட்டுத்தன்மை அல்லது உறைந்த தன்மை வாழ்க்கையைப் பொருளற்றதாக மாற்றிவிட்டது. மனித வாழ்க்கை பொம்மை வாழ்க்கையாக அமைந்துவிட்டால், வாழ்க்கையே பொருளற்றதாக மாறிவிடுகிறது. ’பாதியில் கைவிடப்பட்ட சிற்பங்கள்’ என்னும் வரியின் வழியாக நம் மனத்துக்குள் விரிவடையும் சித்திரம் நம்மைத் திகைக்கவைக்கிறது. கனவை மெய்யென நம்பி நம்பி, ஒரு கட்டத்தில் மெய்யைக் கனவாக்கி மறையச் செய்துவிட்டோம். அதன் விளைவுதான் கைவிடப்பட்ட சிற்பங்கள். அந்த இருட்டிலிருந்து இப்போது நமக்கு மீட்சி வேண்டும்.

அன்பெனும் தராசு இன்னொரு முக்கியமான கவிதை. அது தாய்மையுணர்வு கொண்ட ஒரு பெண்ணின் நிலைகொள்ளாமையையும் குழப்பத்தையும் முன்வைக்கிறது.

 

வீட்டிற்குள் அனுமதி மறுக்கப்பட்ட

பூனைகளின் பிரியை அவள்

 

மொட்டை மாடியில் பிரசவித்துவிட்ட

தாய்ப்பூனைக்காக மன்றாடுபவள்

 

தனக்கான கோப்பைப்பாலில்

அரைக்கோப்பையை தாரை வார்ப்பவள்

 

மீன் முள் குத்திவிடுமென்று

எலும்புகளை மட்டுமே எடுத்துச் செல்பவள்

 

மியாவ்வுக்கு

எழுந்து ஓடி பதில் சொல்பவள்

 

தோட்டத்து மரக்கிளையில்

குருவிக் குஞ்சுகள்

கூடு பதற கூக்குரல் இடுகையில்

 

தவித்துக் கையைப் பிசைகிறாள்

குருவிக்குஞ்சுகளா?

பூனைக்குட்டிகளா?

 

பூனைக்குட்டியையும் குருவிக்குஞ்சுகளையும் ஒரே விதமாக நேசிக்கிற ஒரு பெண்மணியின் பதற்றத்தை காட்சிச்சித்திரமாகத் தீட்டியிருக்கிறார் சுஜாதா. வீட்டின் கீழ்த்தளத்தில் இருக்கும் பெண்மணியின் காதில் குருவிக்குஞ்சுகளின் கூக்குரல் கேட்கிறது. ஆனால் அக்குரலுக்கான காரணம் என்ன என்பது அவளுக்குத் தெரியாது. பூனைக்குட்டிகளால் குருவிக்குஞ்சுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டதா, அல்லது பூனைக்குட்டிக்கு ஏதோ வேறொரு வகையில் ஏற்பட்ட இடையூறைக் கண்டு அஞ்சி குருவி ஓசை எழுப்பியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. விடுவிக்க முடியாத அந்தப் புதிர் அக்கவிதைக்கு ஒரு தனித்தன்மையை அளிக்கிறது. 

குருவிக்குஞ்சாக இருந்தாலும் சரி, பூனைக்குட்டியாக இருந்தாலும் சரி, இரண்டையும் சரிசமமாகவே கருதி நடத்துகிறவள் அப்பெண். அவள் தன்னைப்பற்றி மட்டுமே முன்வைத்துக்கொள்ள முடியும். பூனையைப்பற்றியோ குருவிக்குஞ்சுகளைப்பற்றியோ தீர்மானமாக முன்வைக்கமுடிவதில்லை. அந்த இயலாமையே சிற்சில சமயங்களில் நம்மை முன்முடிவை நோக்கிச் செலுத்திவிடுகிறது. விடுவிக்கமுடியாத புதிர்த்தருணத்தை அறிந்துகொள்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு மானுட இயலாமையின் தருணத்தை அறிந்துகொள்வதும் முக்கியம்.

ஒருசில கவிதைகளில் சிற்சில எளிய வரிகள் நிறைந்திருந்தாலும் எங்கோ ஓர் இடத்தில் அக்கவிதையைத் தூக்கி நிறுத்திவிடுகிற செறிவான வரிகள் அமைந்து, அக்கவிதையை வாசிப்புக்கு ஏற்றவையாக மாற்றிவிடுகின்றன. கனவு என்னும் கவிதையில் அப்படி ஒரு சித்திரத்தைக் காணலாம்.

 

மெளனித்துக் கிடக்கிறது

அச்சு முறிந்த

அழகியதொரு

ராட்டினம்

 

ஒரு பெரிய திரைச்சீலையில் அச்சு முறிந்து ஒதுங்கிக் கிடக்கும் ராட்டினத்தை ஓவியமாகப் பார்க்கும்போது நாம் அடையும் துயரம் ஆழமானது. அதைப் பார்க்கப் பார்க்க, ஏதோ ஒரு வகையில் அது நம்மையே பிரதிபலிக்கத் தொடங்கிவிடுகிறது. ஒருவர் தன் குடும்பத்துக்காக காலமெல்லாம் உழைத்தவராக இருக்கலாம். அவருடைய உழைப்பால் உயர்ந்தவர்கள் எங்கெங்கோ சென்று நலமுடன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் ராட்டினம்போல சுழன்று சுழன்று உழைத்தவர், உழைக்கமுடியாமல் தளர்ந்திருக்கும்போது அவருடைய தனிமைக்குத் துணையாக ஒருவரும் அமைவதில்லை. இப்படி, இந்த ஒரு சித்திரம் எண்ணற்ற காட்சிச்சித்திரங்களை உருவாக்கி சிந்தனையில் ஆழ்த்துகிறது.

இன்னொரு கவிதையில் இதேபோல இன்னொரு சித்திரம் இடம்பெற்றிருக்கிறது.

 

ஒளிந்துகொள்ளத் தவிக்கிறது

ஊரின் மத்தியில் இருக்கும்

பெரிய வீடு

 

எப்போதும் நிமிர்ந்து நிற்கும் உருவம் படைத்தது வீடு. அதன் இயல்பான தோற்றமே மண்ணிலிருந்து விண்ணை நோக்கி கம்பீரமாக எழுந்து நிற்பதுதான். ஆனால் ஒளிந்துகொள்ளத் தவிக்கும் ஒரு வீட்டின் சித்திரத்தை அளிக்கிறார் சுஜாதா.  எந்த கம்பீரத்தை இழந்ததால், அந்த வீடு ஒளிந்துகொள்ளத் தவிக்கிறது என்னும் கேள்வி நிலைகுலைய வைக்கிறது.

 

     திகைக்கவைக்கும் இன்னொரு சித்திரத்தை இதே கவிதையின் வேறொரு பகுதியில் படிக்கமுடிகிறது

 

அவிழ்ந்துவிழும் வேட்டியை

தடுமாறிப் பிடிப்பதற்குள்

பத்து பேர் பார்த்துவிடுகிறார்கள்

 

முதல் கணத்தில் எல்லாமே இயல்பாக இருக்கிறது. மறுகணத்தில் இடுப்புவேட்டி நழுவிவிடுகிறது. கைநீட்டிப் பற்றுவதற்குள் அது நிகழ்ந்துவிடுகிறது. ஒரு கணத்துக்கும் அடுத்த கணத்துக்கும் இடைப்பட்ட கண்ணிமைக்கும் நேரத்துக்குள் எல்லாமே அலங்கோலமாகிவிடுகிறது.

சுஜாதாவின் கவிதைகளில் ஆங்காங்கே இப்படி சிதறிக் கிடக்கும் சித்திரங்கள் இத்தொகுதியை சுவாரசியமாக வாசிக்க உதவியாக இருக்கின்றன.

கவிதையில் மிகமுக்கியமான அம்சம் கற்பனை. இங்கு, கற்பனை என்பது, இல்லாத ஒன்றை அல்லது பார்க்கமுடியாத ஒன்றை இருப்பதுபோல நினைத்துக்கொள்ளும் செயலல்ல.  ஏற்கனவே நிகழ்ந்த அனுபவத்தின் சாரத்தை, புதிதாக வகுத்துக்கொண்ட வேறொரு பின்னணியில் பொருத்திப் பார்க்கும் கலையையே கற்பனை என்று வரையறுத்துக்கொள்ளலாம். புறவயமாக வாழ்க்கையை மதிப்பிட அந்தக் கற்பனை பெரிதும் உதவியாக அமையும். அந்த வகைமையில் இத்தொகுதியில் உள்ள சுஜாதாவின் கண்ணாமூச்சி கவிதை  மிகச்சிறந்த கவிதையாகும்.  

ஆற்றங்கரையில் நின்று ஒரு பரிசில் நகர்ந்து போவதையோ அல்லது கடலோரமாக நின்று படகு அசைந்தசைந்து செல்வதையோ நாம் பார்த்திருப்போம். தொலைவில் நீர்மீது மிதந்து செல்லும் படகுகளை வேடிக்கை பார்ப்பதும், அந்த படகில் அமர்ந்திருப்பவர்கள் நமக்கு அறிமுகமே இல்லையென்றாலும் அவர்களைப் பார்த்து புன்னகையோடு கையசைப்பதும் ஒவ்வொருவருடைய பால்யத்திலும் நடைபெற்றிருக்கும். பயணம் செய்பவர்களைக் கண்டாலே, சிலர்  தன்னிச்சையாக கைகளை உயர்த்தி புன்னகைத்தபடி விடைகொடுப்பதை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஒரு கவிதையில் அந்தக் காட்சியமைப்பைப் பயன்படுத்தி நம்மை வேறொரு சித்திரத்தைக் காணும்படி செய்திருக்கிறார் சுஜாதா.

படகில் பயணம் செய்வது மனிதர்களல்லர். நம்முடைய வயதுதான் ஒரு மனிதனைப்போல படகில் அமர்ந்து பயணம் செய்கிறது.  அதுதான் அந்த வாழ்க்கைப்படகில் ஒரு மனிதரைப்போல அமர்ந்து புன்னகைத்தபடி பயணம் செல்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக, அது கரையை விட்டு விலகி தொலைவை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறது. ஆழ்மனத்தில் அக்காட்சியை ஒரு சித்திரமாகத் தீட்டிப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் புன்னகையும் துயரமும் எழுகின்றன. இவ்வாழ்வில் ஒவ்வொரு கணமும்  நம் வயது வளர்ந்துகொண்டே போகிறது. இளமையைப் பிரிந்து வெகுதொலைவு சென்றுகொண்டே இருக்கிறோம். இளமைக்கும் முதுமைக்கும் இடையில் நிகழ்கிறது இந்தப் படகுப் பயணம். பிரிந்து சென்ற கரையை நினைத்து ஏங்குவதா? அடையப் போகும் கரையை நினைத்து நிம்மதியடைவதா? 

படகு விலக விலக, நெஞ்சிலெழும் நிகழ்ச்சிகளை  ஒவ்வொன்றாக அடுக்கிச் செல்கிறார் சுஜாதா. பால்ய காலத்தில் பனங்காய் வண்டியை உருட்டியபடி ஓடிய தெருக்கள், உள்ளங்கையில் படிந்த தேன்மிட்டாயின் பிசுபிசுப்பு, தீப்பெட்டியில் வளர்த்த பொன்வண்டைத் திறந்து பார்த்து அடைந்த மகிழ்ச்சி, திருட்டுத்தனமாக மரமேறிப் பறித்துத் தின்ற கொய்யாக்காயின் துவர்ப்பு என அவர் ஆழ்மனத்தில் அடுத்தடுத்து நினைவுகள் நகர்கின்றன. இறுதியில் அந்தப் படகின்மீது அவருடைய கண் படிகிறது. முன்பு பார்த்த தொலைவைவிட இன்னும் கூடுதலான தொலைவுக்குச் சென்று நிற்கிறது படகு. இது கண்களை மூடிக்கொண்டு ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமல்ல. ஒருவகையில் கண்களைத் திறந்துகொண்டே ஆடும் கண்ணாமூச்சி.

இன்னொரு முக்கியமான கவிதை அதிர்வின் வாசனை. இக்கவிதையிலும் அழகானதொரு கற்பனை செயல்படுகிறது. ஒரு பெட்டியில் நகையோ, துணியோ, பணமோ அல்லது விலையுயர்ந்த ஏதேனும் ஒரு பொருளையோ வைத்து, இன்னொரு ஊரில் வசிக்கிற ஒருவரிடம் சேர்ப்பிக்கும்படி அனுப்பிவைப்பது இயல்பாக எங்கெங்கும் நடைபெறக்கூடிய ஒரு நிகழ்ச்சி. பாதுகாப்பாக ஒரு பொருளை இன்னொருவரிடம் கொடுத்தனுப்புவதுபோல,  ஒருத்தி தன் முத்தத்தை ஒரு பரிசுப்பெட்டியில் வைத்து உரியவனிடம் கொண்டு சேர்க்குமாறு இன்னொருவனிடம் கொடுத்தனுப்புகிறாள். அப்படித்தான் தொடங்குகிறது இக்கவிதை. தூதாகச் செல்பவனும் மகிழ்ச்சியோடு அப்பெட்டியை வாங்கிக்கொண்டு செல்கிறான். பெட்டிக்குள் இருப்பது என்ன என்பதை அறிந்தவன் என்பதால், அப்பணியை அவனும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறான்.

நீண்ட பயணத்தில் தொலைவைக் கடக்கக்கடக்க, அவன் மனம் மெல்ல மெல்ல மாறுபாடடைகிறது. பெட்டியில் இருக்கும் முத்தத்தின் மணம் அவனை ஈர்க்கிறது. அந்த எண்ணம் அவன் கவனத்தைச் சீர்குலைக்கிறது. அமைதியைப் பறிக்கிறது. குழப்பத்தில் பாதை தடுமாறுகிறது. ஒரு கட்டத்தில் தன் இச்சையைத் தடுக்க இயலாதவனாகிறான். குழம்புகிறான். அப்பெட்டியைத் திறந்து அம்முத்தத்தின் மணத்தை நுகர அவன் மனம் தவிக்கிறது. . ஒருபுறம் தீராத இச்சை அவனை திற திற என்று அவனைத் தள்ளுகிறது. மறுபுறம் நெறி அவனை வேண்டாம் வேண்டாம் எனத் தடுக்கிறது.  தன்னை அறியாமலேயே அப்பெட்டியைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த பொன்னிற ரிப்பனை அவன் கைகள் வருடத் தொடங்குகின்றன. அவன் முடிவு என்ன என்பதை புதிராகவே விட்டுவிடுகிறார் சுஜாதா. இச்சைக்கும் நெறிக்கும் இடையிலான போராட்டத்தை அழகானதொரு கற்பனை வழியாக உணரவைக்கிறார் அவர்.

சின்னச்சின்ன காட்சித்துண்டுகளாக, ஆற்றாமையும் வேதனையும் வெளிப்படும் குரல்களாக தொடங்கும் சுஜாதாவின் கவிதைகள் படிப்படியாக வளர்ந்து இன்று சரியானதொரு இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.  அடுத்து வரக்கூடிய சுஜாதாவின் கவிதைத்தொகுதி கண்ணாமூச்சி, அதிர்வின் வாசனை கவிதைகளையும் விஞ்சும் வண்ணமுள்ள கவிதைகளாக அமைந்திருக்கவேண்டும். ’கடலைக் களவாடுபவள்’ தொகுதியின் வழியாக தேவதச்சன், தேவதேவன், கலாப்ரியா, கல்யாண்ஜி, இசை, போகன் சங்கர், உமா மகேஸ்வரி, சந்திரா, மதார், வே.நி.சூர்யா என நீளும் அந்தக் கவிஞர்களின் பட்டியலில் சுஜாதாவையும் இணைத்துக்கொள்ளலாம். அடுத்து, இன்னும் உத்வேகத்தோடு எழுதி எழுதி, அந்த இடத்தை அவர் நிறுவிக்கொள்ளவேண்டும்.

 

 

(கடலைக் களவாடுபவள். கவிதைத்தொகுதி. சுஜாதா செல்வராஜ், தேநீர் பதிப்பகம், 24/1 மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்ப்பேட்டை. விலை. ரூ.120)

 

(புக் டே – இணையதளம் - 09-07-2024)