Home

Sunday 14 July 2024

அதிகாரத்தின் கதை

 

சர்வதேச பண்பாட்டு மையம் என்றொரு அமைப்பு தொம்லூரில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிறு அன்று நாடகம், திரைப்படம், ஓவியம், நடனம், உலக இலக்கியம் தொடர்பாக ஏதாவது  ஒரு நிகழ்ச்சி நடைபெறும். கலையார்வம் கொண்டவர்களுக்கு அது ஒரு நல்விருந்து. அந்த மையம் நிகழ்த்தும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்லவேண்டும் என எனக்குள் ஆவல் இருந்தாலும், எதிர்பாராமல் நேரும் நெருக்கடிகள் காரணமாக என்னால் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே செல்ல முடிந்தது.

கர்நாடகத்தில் இணைசினிமா இயக்கத்தின் தொடக்கப்புள்ளியாக 1970இல் வெளிவந்து ஒரு திருப்புமுனையாக அமைந்த ’சம்ஸ்கார’ என்னும் கன்னடப்படத்தை அந்த அமைப்பு வெளியிடப் போவதாக கடந்த மாதம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதைப் படித்ததுமே, அந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என முடிவுசெய்துவிட்டேன்.

நான் அந்தப் படத்தை முதன்முதலாக 1980இல் புதுச்சேரியில் பார்த்தேன். அப்போது அந்த மொழியே எனக்குத் தெரியாது. திரையின் கீழே நகரும் ஆங்கில உரையாடல்களைப் படித்து புரிந்துகொண்டேன். புதுச்சேரி நவதர்ஷன் திரைப்படக் கழகம் என்னும் அமைப்பு அதை வெளியிட்டது. அதற்குப் பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் இரண்டு முறை பார்ததுவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த படம்.

சம்ஸ்கார என்னும் சொல்லுக்கு இரு பொருள்கள். பண்பாடு என்பது ஒன்று. இறுதிச்சடங்கு என்பது இன்னொன்று. சடங்குகள் மீது கொண்ட பற்றுகள் வழியாகவே இம்மண்ணில் பண்பாடு நிலைத்திருக்கிறது என்று நம்புகிறவர்கள் உலகெங்கும் உண்டு. எதிர்பாராத விதமாக ஓர் இறுதிச்சடங்கைச் செய்யமுடியாத நிலையில் அந்தக் கூட்டம் தவிக்கிறது. அந்தப் பிரச்சினைக்கு எப்படி ஒரு தீர்வு கிடைக்கிறது என்பதுதான் திரைப்படத்தின் கதை. அதன் ஊடே கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த மண்ணையே ஆட்டிப் படைத்த பிளேக் என்னும் பெருந்தொற்று நோயால் கிராமம் பாதிக்கப்படுவதும் முன்வைக்கப்படுகிறது. மக்கள் கொத்துக்கொத்தாக விழுந்து சாகிறார்கள். ஒருபுறம் நம்பிக்கை எனும் தொற்றுநோய். இன்னொரு புறம் உயிரைப் பறிக்கும் உண்மையான தொற்றுநோய். இரு இழைகளும் பின்னிப்பிணைந்து பல காட்சிகள் வழியே முன்னால் நகர்கிறது கதை. திரைப்படத்தின் காட்சி மொழி அந்த நகர்வைப் புரிந்துகொள்ள உறுதுணையாக இருக்கிறது.

திரைப்படம் பார்த்ததற்கு மறுநாள் நான் நண்பர் வீட்டல்ராவ் அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். ஏற்கனவே திரைப்படம் பார்க்கச் செல்வதாக அவரிடம் தெரிவித்திருந்ததால், இயல்பாகவே எங்கள் உரையாடல் சம்ஸ்காரா தொடர்புடையதாகவே அமைந்துவிட்டது.

“அந்தக் காலத்துல சம்ஸ்காரா படத்துக்கு சென்சார் போர்ட் சர்டிபிகேட் கெடைக்கலை. தரமுடியாதுனு சொல்லிட்டாங்க. அதனுடைய உள்ளடக்கம் பற்றி தெரிஞ்சிகிட்ட பிறகு கர்நாடகத்துலயும் அரசல்புரசலா ஒரு சின்ன எதிர்ப்பும் இருந்தது.  பிறகு டில்லி வரைக்கும் போய் அப்பீல் செஞ்சி போராடியதுக்குப் பிறகுதான் எப்படியோ சென்சார் கிளியரன்ஸ் கெடைச்சிது. அதுக்கப்புறம்தான் படம் ரிலீசாயிடுச்சி.”

“அப்பவே இந்த மாதிரி சென்சார் பிரச்சினைகள் இருந்ததா?”

“அந்த மாதிரியான சென்சார் பிரச்சினைகள் என்னைக்கும் இருக்கும்.  அதை யாரும் மாத்தமுடியது.  இதுக்கு நடுவுலதான் நல்ல படங்களை எடுக்க வேண்டியிருக்குது. பார்க்கவும் வேண்டியிருக்குது.”

”அந்தக் காலத்துல இந்தப் படத்துக்கு வரவேற்பு எப்படி இருந்தது சார்?”

“இந்தியா முழுக்க இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.  படக்குழுவினர் எல்லாருக்கும் நல்ல பேரும் கவனமும் உருவாச்சி. எல்லாப் பத்திரிகைகளும் பாராட்டி விமர்சனம் எழுதியிருந்தாங்க. அந்த வருஷத்துல தேசிய அளவுல சிறந்த படத்துக்கான விருது சம்ஸ்காராவுக்குத்தான் கெடைச்சிது.”

“நீங்க அந்தப் படத்தை எங்க பார்த்திங்க?”

“சொல்றேன். அது ஒரு பெரிய கதை. வழக்கமா கன்னடப்படங்கள் போடறதுக்குன்னு ரெண்டு மூனு தியேட்டர்கள் உண்டு. ஆனா சம்ஸ்காரா அங்க வரலை. படத்துக்கு ஒரு எதிர்ப்புப்பிரச்சாரம் இருந்ததால எல்லாருக்கும்  ஒரு சின்ன பயம் இருந்தது. அதனால. தியேட்டர்ல ரிலீஸ் ஆகலை.”

“வேற எப்படி பார்த்திங்க?”

“அப்ப தமிழ்நாட்டுல கலைஞர் முதலமைச்சரா இருந்தாரு. டைரக்டரும் வேற சிலரும் கலைஞரைச்  சந்திச்சி விவரத்தைச் சொன்னாங்க. படத்துடைய மையக்கருவை சுருக்கமா அவருகிட்ட சொன்னாங்க. அவரு உடனே அரசாங்கத்துக்குச் சொந்தமான கலைவாணர் அரங்கத்துல போட்டுக்குங்கன்னு அனுமதி கொடுத்துட்டாரு.”

“சரி”

“அது மட்டுமில்ல. படம் பார்க்க அவரும் வந்துட்டாரு. அப்ப என்னுடைய நண்பர் தனுஷ்கோடி மெட்ராஸ் ஆர்ட் க்ளப்ல பெரிய பொறுப்புல இருந்தாரு.  அவருகிட்டதான் என்னை மாதிரி பத்து இளைய ஓவியர்கள் ஓவியம் போட்டு பழகிட்டிருந்தோம். அப்பப்ப கண்காட்சிகள் வைப்போம். எங்க கண்காட்சிக்கு கிரீஷ் கார்னாட் வருவாரு. எல்லா ஓவியங்களையும் பார்த்துட்டு, அதைப் பத்தி ஆங்கிலத்துல விமர்சனக்கட்டுரை எழுதுவாரு. எங்களுக்குள்ள நல்ல அறிமுகம் இருந்தது. மெட்ராஸ் ப்ளேயர்ஸ் க்ரூப்ல அவரும் தனுஷ்கோடியும் ஒன்னா நடிச்சிட்டிருந்தாங்க. எங்க க்ளப் மேல அவருக்கு ஒரு மதிப்பு இருந்தது. சம்ஸ்காரா படம் போட்ட அன்னைக்கு கைநிறைய பாஸ் கொண்டுவந்து எங்ககிட்ட குடுத்துட்டு எல்லாரும் அவசியமா வந்து பார்க்கணும்னு சொல்லிட்டு போயிட்டார்.”

“எல்லாரும்னா யார் யாரு?”

‘எல்லாருமே ஓவியக்கலைஞர்கள். ஆசிரியர்கள். மாணவர்கள்.”

“படத்தைப்பத்தி எல்லாரும் என்ன நினைச்சாங்க?”

“எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்சிருந்தது. இப்படி என்னென்னைக்கும் பார்க்கிற மாதிரி எடுக்கிற படங்கள்தான் வரலாற்றுல நிக்கும். கன்னட திரைப்பட வரலாற்றுல இந்தப் படம் ஒரு பெரிய திருப்புமுனை. துருதிருஷ்டவசமா அன்னைக்கு அந்த இணைசினிமா இயக்கத்துல இருந்தவங்க எல்லாரும் அடுத்து அடுத்து மறைஞ்சிட்டாங்க. அரை நூற்றாண்டு கடந்தும் அந்தப் படம் பேசக்கூடிய படமா இருக்கறத பார்க்க அவுங்க யாரும் இல்லை.”

அப்போது வாசலில் யாரோ நின்று கதவைத் தட்டும் ஓசை கேட்டது. “ஒரு நிமிஷம் இந்த பேப்பர பார்த்துட்டே இருங்க. இதோ வந்துடறேன்” என்றபடி விட்டல்ராவ் எழுந்து வெளியே சென்றார். குடிநீர்க்குழாய் மீட்டர் ரீடிங் எடுப்பவர் வந்திருந்தார். அவர்கள் வாசலில் நின்று பேசும் சத்தம் கேட்டது.

செய்தித்தாளை எடுப்பதற்காக நான் இருக்கையிலிருந்து எழுந்து  மேசையின் பக்கம் சென்றேன். பத்திரிகையை எடுக்கும்போது, அதற்குக் கீழே நீளமான நான்கைந்து நோட்டுகள் இருந்தன. எல்லாமே அழகாக  அட்டை போடப்பட்ட நோட்டுகள். அதன் மீது மிகச்சிறிய அளவில் கிறுக்கப்பட்ட கோட்டோவியமொன்று தெரிந்தது. அதைப் பார்க்கும் ஆவலில் அந்த நோட்டை எடுத்தேன். அங்கங்கே குறுக்கும் நெடுக்குமாக இழுக்கப்பட்ட ஏழெட்டு கோடுகளிடையில் ஓர் உருவம் கூடி வந்திருப்பதையே சில கணங்கள் உற்றுப் பார்த்தேன்.

ஒருவேளை அந்த நோட்டுப்புத்தகமே ஓவியங்களுக்கானதோ என்னும் எண்ணத்தால், அதை ஆவலோடு அவசரமாகப் பிரித்தேன். அட்டையில் இருப்பதுபோலவே முதல் பக்கத்தில் மட்டும் சின்னஞ்சிறிய ஒரு கோட்டோவியம் இருந்தது. அதற்கப்புறம் இரு தாள்களில் எதுவும் இல்லை. ஏமாற்றத்துடன் தள்ளினேன். அதற்கு அடுத்த பக்கத்தில் ஒரு பழைய செய்தித்தாள் நறுக்கு ஒட்டப்பட்டிருந்தது. அந்தச் செய்திக்கு நடுவில் சார்லி சாப்ளின் படம் இருந்ததால், அது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆவல் இயற்கையாகவே என் நெஞ்சில் எழுந்தது. சார்லி சாப்ளின் மறைவு பற்றிய செய்தியும் அவரைப்பற்றிய சுருக்கமான வரலாறும் அந்தச் செய்தி நறுக்கில் இருந்தன. அதற்குக் கீழே இந்து, 26.12.1977 என்றொரு குறிப்பும் காணப்பட்டது.

ஆர்வத்தின் காரணமாக அந்த நோட்டின் பிற பக்கங்களையும் அவரசரமாகப் புரட்டி ஒவ்வொரு தலைப்புச் செய்தியாக படித்துக்கொண்டே சென்றேன். அவ்வப்போது உலகெங்கும் வசிக்கும் எழுத்தாளர்கள்,  ஓவியக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், இசை மேதைகள், பத்திரிகை ஆசிரியர்கள், திரைப்பட நடிகர்கள், உலகத்தலைவர்கள் என அனைவரும் இறந்ததையொட்டி இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த செய்திக்குறிப்புகளையெல்லாம் அழகாக வெட்டி ஒட்டிவைத்திருந்தார். சிறிய அளவிலான தகவல் களஞ்சியம் என்றே அந்தத் தொகுப்பைச் சொல்லவேண்டும்.

“என்ன பார்த்துட்டிருக்கீங்க?” என்றபடி அறைக்குத் திரும்பிவந்து நாற்காலியில் உட்கார்ந்தார் விட்டல்ராவ். மீட்டர் ரீடிங்காரரிடமிருந்து வாங்கி வந்த பில் காப்பியை, இழுப்பறையிலிருந்து சின்னதொரு டைரியை எடுத்து, அதற்குள்  பாதுகாப்பாக வைத்துவிட்டு திரும்பினார்.

“என்சைக்கிளோப்பீடியா மாதிரி இந்த நோட்டுகளை அழகா  வச்சிருக்கீங்க சார். பார்க்கவே அருமையா இருக்குது. எப்படி சார் இந்த ஐடியா வந்தது?” என்று ஆவலோடு கேட்டேன். அவர் முகத்தை ஒரு கணமும் நோட்டுப்புத்தகத்தை இன்னொரு கணமுமாக திருப்பித் திருப்பிப் பார்த்தபடி இருந்தேன்.

“திடீர்னு ஒருநாள் இப்படி செய்யலாமேன்னு தோணிச்சி பாவண்ணன். என்னமோ அன்னைக்கு நல்ல நேரம். ஓய்வாதான் இருந்தேன். உடனே அந்த மாசத்து பேப்பர்களையெல்லாம் எடுத்து வச்சிகிட்டு, இது மாதிரியான செய்திகளை மட்டும் கத்தரிச்சி தனியா வச்சிகிட்டேன். புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள், அறிவியலாளர்கள் மாதிரியானவங்க இறந்துபோகும் சமயத்துல இந்து பத்திரிகையில இப்படி நல்ல நல்ல குறிப்புகள் வெளியிடுவாங்க. அவுங்கள பத்தி விரிவான கட்டுரைகள், அந்த வார இறுதியிலோ அல்லது அந்த மாத இறுதியிலோ வெளியிடுவாங்க. அது வேறு. இறந்ததுமே வெளியிடக்கூடிய தகவல்கள் சுருக்கமாவும் அந்த ஆளுமையைப்பத்தி புரிஞ்சிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஏதோ ஒரு வேகத்துல தொடங்கனதுதான் இந்தத் திட்டம். இன்னைய தேதி வரைக்கும் அதை செஞ்சிகிட்டே இருக்கேன். எதிர்காலத்துல இது உதவுமா, யாரு இதையெல்லாம் பயன்படுத்துவாங்கங்கற விஷயங்களைப் பத்தியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. திடீர்னு ஒரு கட்டுரை எழுதிட்டிருக்கும்போது சில சமயங்கள்ல எனக்கே ஒரு தகவல் தேவைப்படும்னு வச்சிக்குங்க. அப்ப இதை எடுத்துப் பார்த்தா போதும், எல்லாம் புரிஞ்சிடும்.”

ஒரு புதுமுயற்சியின் தொடக்கத்துக்குப் பின்னணி விசையாக உள்ள அம்சங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடுவது இயற்கை. விட்டல்ராவின் முயற்சியின் பின்னணியில் இருந்த எண்ணங்களைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

நான் ஒவ்வொரு நோட்டுப் புத்தகமாக எடுத்துப் பிரித்து ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள தலைப்புச்செய்தியையும் புகைப்படத்தையும் மட்டும் பார்த்தபடி புரட்டினேன். திடீரென இறந்த காலத்தின் ஊடே ஒரு குறும்பயணம் செய்துவிட்டுத் திரும்பியதுபோல இருந்தது.

ஒரு நோட்டுப்புத்தகம் மற்ற புத்தகங்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்ததைப் பார்த்தேன். அதில் மறைவுச்செய்திகள் எதுவும் இல்லை. மாறாக, புதுமை சார்ந்த தகவல்களும் வரலாற்று நிகழ்ச்சிகள் சார்ந்த தகவல்களும் கொண்ட செய்தி நறுக்குகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தன. அந்த மாதிரி நாலைந்து நோட்டுகள் இருந்தன.

“இது என்ன சார்? புதுமையா இருக்குதே” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.

“ஒவ்வொரு தகவலிலும் ஒரு கதை இருக்குது பாவண்ணன். எழுதுற ஆட்களுக்கு ஒவ்வொரு சம்பவமும் ஒரு தங்கக்கட்டி மாதிரி. எல்லாமே அரிய செய்திகள். நம்ம தினசரி வாழ்க்கையில பார்க்கக்கிடைக்காது. இந்த மாதிரியான தகவல்கள் வெளியாகிற அன்னைக்குத்தான் அது செய்திகள். மத்தபடி கொஞ்ச காலம் போயிட்டா, ஒவ்வொன்னும் வரலாறாகிடும்.”

“எப்படி சார் சொல்றீங்க?”

விட்டல்ராவ் என்னிடமிருந்து ஒரு நோட்டுப்புத்தகத்தை வாங்கி ஒவ்வொரு பக்கமாக வேகவேகமாகப் புரட்டினார். அவர் தேடிய பக்கம் கிடைத்ததும் ஆட்காட்டி விரலால் அப்பக்கத்தின் மீது ஒரு தட்டு தட்டியபடி “இதோ, இந்தச் செய்தியைப் படிச்சிப் பாருங்க” என்று அந்த நோட்டுப் புத்தகத்தை என்னிடம் நீட்டினார்.

நோட்டுப்புத்தகத்தை வாங்கி, அவர் விரலால் அடையாளம் செய்து காட்டிய பக்கத்தை ஆர்வத்துடன் படித்தேன். இங்கிலாந்தில் லெய்செஸ்டர் என்னும் இடத்தில் ஒரு கழிவுநீர்க்கால்வாயைச் சுத்தம் செய்தபோது கிடைத்த ஒரு சவப்பெட்டியைப்பற்றிய செய்தி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்திக்குறிப்பு ஆர்வமூட்டுவதாக இருந்தது.

“என்ன சார் இது? அந்த நாட்டுலயும் ஆள அடிச்சி கால்வாய்ல வீசிட்டு போற பழக்கம் இருக்குதுபோல. அது சரி, தூக்கி வீசிட்டு போற ஆளு அப்படியே தூக்கி வீசிட்டு போயிருக்கலாம். வேலை மெனக்கிட்டு ஒரு சவப்பெட்டியில வச்சி எதுக்கு தூக்கிப் போடணும்? விசித்திரமா இருக்குது சார்” என்றபடி நான் விட்டல்ராவ் முகத்தைப் பார்த்தேன்.

“இதுக்குப் பின்னால ஒரு வரலாறே இருக்குது பாவண்ணன். அதனாலதான் இந்தச் செய்தியை தனியா எடுத்து ஒட்டி வச்சிருக்கேன். இது ஒரு தொடக்கப்புள்ளி”

“என்ன சார் இது? துப்பறியும் கதை மாதிரி இருக்குது. முழுசா சொல்லுங்க சார்” என்றேன். என்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த நோட்டுப்புத்தகத்தில் வெவ்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த செய்தி நறுக்குகளை ஒவ்வொன்றாகத் தேடிக் காட்டிப் படிக்கச் சொன்னார்.

“அதையெல்லாம் நான் அப்புறமா படிக்கறேன் சார். நீங்க எல்லாத்தயும் கோர்த்து சொல்லுங்க. கேக்கறதுக்கு அதுதான் விறுவிறுப்பா இருக்கும்”

“அப்படியா, சரி” என்றபடி விட்டல்ராவ் ஒருமுறை தலையை அசைத்துக்கொண்டார். பிறகு தொண்டையைச் செருமி சரிப்படுத்திக்கொண்டு சொல்லத் தொடங்கினார்.

“கழிவுநீர்க்கால்வாய்க்குக் கீழ இந்த சவப்பெட்டியைக் கண்டுபிடிச்சதுதான் முதல் நிகழ்ச்சி. யாருடைய குடும்பத்தைச் சேர்ந்த பெட்டியா இருக்கும்னு கண்டுபிடிக்கறது ஒரு பெரிய சவாலா இருந்தது. நகராட்சி நிர்வாகம் அந்தப் பெட்டியை அந்த வட்டாரத்தைச் சேர்ந்த வரலாற்றுத்துறை சார்ந்த ஆட்கள்கிட்ட ஒப்படைச்சிட்டு ஒதுங்கிடுச்சி. வரலாற்றுத்துறை அந்தப் பெட்டியை வச்சிகிட்டு துருவித்துருவி ஆராய்ச்சி செஞ்சாங்க. தோராயமா ஐநூறு வருஷங்களுக்கு முந்தைய காலத்துப் பெட்டிங்கறத மட்டும் அவுங்க கண்டுபிடிச்சாங்க. அதுதான் முதல் கண்டுபிடிப்பு.”

“அப்புறம்?”

“பெட்டியைப் புடிச்சி திறக்கறதுக்கும் மூடறதுக்கும் வசதியா ஒரு கைப்பிடி இருக்குமில்லையா? அந்த மாதிரி ஒரு உலோகக் கைப்பிடி அந்தப் பெட்டியில இருக்குது. வழக்கமா இப்ப கிடைக்கிற பித்தளைக்கைப்பிடி, இரும்புக்கைப்பிடி மாதிரியான பிடியா, அந்தக் கைப்பிடி இல்லை. வேறு ஏதோ ஒரு உலோகம். அதுக்கு ஒரு தனி ஆராய்ச்சி நடந்தது. அந்த உலோகமும் ஐநூறு வருஷங்களுக்கு முன்னால  அந்த வட்டாரத்து மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரத்யேகமான உலோகம்னு கண்டுபிடிச்சாங்க.”

கேட்கக்கேட்க உண்மையாகவே ஒரு துப்பறியும் கதையைக் கேட்பதுபோல சுவாரசியமாக இருந்தது. எதார்த்தம் என்பது புனைவைவிட பல மடங்கு சுவாரசியமானது என்று நினைத்துக்கொண்டேன்.  

“அடுத்து என்ன செஞ்சாங்க சார்?”

”அந்த உலோகத்து மேல அரசாங்க இலச்சினை மாதிரி ஒரு சின்ன அடையாளம் இருந்தது. அதை வச்சி அடுத்த ஆராய்ச்சி நடத்துனாங்க. அது யாரோ ஒரு அரச குடும்பத்து அடையாளம்ங்கறது அந்த ஆராய்ச்சியின் முடிவு. அதே சமயத்துல அரச வம்சத்தைச் சேர்ந்த ஒருத்தருடைய சவப்பெட்டி, தேவாலயக்கல்லறையில இல்லாம இப்படி ஒரு பொது இடத்துக்கு ஏன் வந்ததுங்கற கேள்வி எல்லாருக்கும் குழம்பவச்சிது. அதனால மறுபடியும் ஆராய்ச்சில இறங்கினாங்க.”

“அதனுடைய முடிவு?”

“நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு அந்த இலச்சினை ப்ளாண்டஜெனண்ட் வம்சத்தைச் சேர்ந்தவங்க பயன்படுத்திய இலச்சினையா இருக்கலாம்ன்னு அறிவிச்சாங்க.”

”கிட்டத்தட்ட உண்மையை நெருங்கிட்டாங்கன்னு சொல்லுங்க. அப்புறம்?”

”அந்தக் கட்டத்துல வரலாற்றுத்துறை இது எங்களால மட்டும் செய்யக்கூடிய ஆராய்ச்சி கிடையாது, மானுடவியல்துறை அறிஞர்களும் சேர்ந்து செஞ்சாதான் கண்டுபிடிக்கமுடியும்னு சொல்லிட்டாங்க. அரசாங்கம் உடனே மானுடவியல் துறை ஆட்களையும் அந்த ஆராய்ச்சியில இறக்கி விட்டுட்டாங்க.”

“அவுங்களுடைய கண்டுபிடிப்பு எந்த அளவுக்கு பயனுள்ளதா இருந்தது?”

“முதல் காரியமா அவுங்க பெட்டிக்குள்ள இருந்த எலும்புக்கூட்டை வெளியே எடுத்தாங்க. மக்கியும் மக்காததுமா இருந்த அந்த மிச்சசொச்ச எலும்புகளை வச்சி ரொம்ப ஆழமா ஆராய்ச்சி செஞ்சாங்க. டி.என்.ஏ. டெஸ்ட், அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்னு ஏராளமான டெஸ்ட்டுகள் எடுத்தாங்க. அந்த எலும்புக்கூட்டுடைய தலையில ஆழமான ஒரு வெட்டு இருந்தது.. தொடை எலும்புகளிலும் கை எலும்புகளிலும் ஏராளமான வெட்டுகள். அது ஒரு முக்கியமான தடயம். ஏதோ ஒரு யுத்தத்துல காயம் பட்டு  செத்துப் போன போர்வீரன்ங்கற அளவுக்கு கண்டுபிடிச்சிட்டாங்க. எந்த வருஷத்துல நடந்த எந்த யுத்தம்ங்கறதயும் கண்டுபிடிச்சிட்டா, ஒரு முடிவுக்கு வந்துடலாம். அந்த அளவுக்கு அவுங்க ஆராய்ச்சி முன்னேறிடுச்சி”

“படிப்படியா நெருங்கி வந்துட்டாங்கன்னு சொல்லுங்க”

“ஆமாம். அப்பதான் ஒருத்தர் அந்த எலும்புக்கூட்டுடைய முதுகுப்பகுதி வழக்கமான அளவைவிட கூடுதலா வளைஞ்சிருக்கறத கண்டுபிடிச்சாரு. மானுடவியல் துறை ஆட்கள் கண்டுபிடிச்ச உண்மைகளை வச்சிகிட்டு வரலாற்றுத்துறை ஆட்கள் செஞ்ச ஆராய்ச்சியில, அது வரைக்கும் மறைஞ்சிருந்த ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வந்தது”

“என்ன உண்மை சார்?”

“அந்த எலும்புக்கூட்டுக்குச் சொந்தக்காரன் அது மூனாவது ரிச்சர்ட் என்கிற அரசன். அந்த யுத்தத்துடைய பெயர் பாஸ்வொர்த் ஃபீல்ட் யுத்தம். மூனாவது ரிச்சர்டுக்கும் ரிச்மண்ட்ங்கறவனுக்கும் நடந்த யுத்தம்.”

“உண்மையிலேயே அப்படி ஒரு யுத்தம் நடந்ததா?”

“ஆமாம். மூனாவது ரிச்சர்ட் பெரிய வீரன். ஆனால் நல்லவன் இல்லை. கொஞ்சம் குரூரமான தோற்றம் உள்ளவன். முதுகுலயும் கூன் விழுந்திருந்தது. ஆட்சியைப் பிடிக்கறதுக்காக பல கொலைகளை செஞ்சிட்டு சிம்மாசனத்துல உட்கார்ந்தான். அது ரொம்ப காலம் நீடிக்கலை. ஒருநாள் அவன் தூங்கிகிட்டிருந்த சமயத்துல ரிச்மண்ட்ங்கறவன் அவன் நாட்டின் மீது படையெடுத்து வந்து மோதினான். சண்டை கடுமையா நடந்தது. அந்த சண்டையில ரிச்சர்டுடைய குதிரை செத்துப் போயிடுச்சி. அவனுக்கு அவசரமா ஒரு குதிரை தேவைப்பட்டது. எனக்கு ஒரு குதிரை வேணும், குதிரை வேணும்னு அந்த போர்க்களத்துல அவன் போட்ட சத்தம் யாருக்கும் கேக்கலை. காது குடுத்துக் கேட்டவங்க யாரும் அவனுக்கு உதவி செய்யலை. அவனால அந்தப் போர்ல ஜெயிக்கவும் முடியலை, அங்கிருந்து தப்பிச்சி போகவும் முடியலை. ரிச்மண்ட் அவனுடைய பின்னந்தலையில அடிச்சி பிளந்துடறான். அநியாய மரணம். ஆனா அதுக்காக யாரும் வருத்தப்படலை. அரசாங்கங்கள் அப்படித்தானே அமைக்கப்படுது. வீரர்களோடு வீரனா ரிச்சர்டுடைய உடல் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களுக்கான கல்லறைப்பகுதியில கூட்டத்தோடு கூட்டமா புதைச்சிட்டு போயிடறாங்க. என்னதான் இருந்தாலும் அவன் அரசன் இல்லையா? சவப்பெட்டி செய்யறவன், அவனுடைய சவப்பெட்டி மேல ஒரு சிறப்பு இலச்சினைப் பிடியை வைச்சி புதைச்சிடறான்.

“ஒரு பெட்டிக்குப் பின்னால இவ்வளவு பெரிய கதையா?”

“இன்னும் கதை முடியலை, கேளுங்க. அம்பது நூறு வருஷத்துக்குப் பிறகு அங்க இருந்த தேவாலயமும் கல்லறையும் இடிஞ்சி பாழடைஞ்சி போயிடுது. ஊருக்குள்ள வேற ஒரு தேவாலயம் புதுசா வந்துட்டதால பழைய தேவாலயத்தை எல்லாருமே மறந்துடறாங்க. அதுக்கப்புறம் அம்பது நூறு வருஷம் கழிச்சி அந்த இடத்துல துறவிகளுக்கான ஒரு மடம் கட்டறாங்க. பிறகு அதுவும் இடிஞ்சி மண்ணோடு மண்ணா மாறிடுச்சி. அதுக்குப் பிறகு அந்த இடம் ரொம்ப காலத்துக்கு மக்கள் நடமாட்டம் இல்லாத புறம்போக்கா கெடந்தது. இருபது முப்பது வருஷத்துக்கு முன்னாலதான் அங்க ஒரு புறநகர் உருவாச்சி. அந்த நகரத்துக்கான கட்டுமான வேலை நடந்துட்டிருந்த சமயத்துலதான் அந்த சவப்பெட்டியைக் கண்டுபிடிச்சாங்க..”

“ஒரு சவப்பெட்டிக்குப் பின்னால இவ்வளவு செய்திகளா? ஒரு நாவல் படிக்கிறமாதிரி இருக்குது சார்”

“கதை இத்தோடு முடியலை. இன்னும் இருக்குது. மூனாவது ரிச்சர்டுடைய எலும்புக்கூடுதான் அதுன்னு தீர்மானமா தெரிஞ்ச பிறகு, அதை அப்படியே எப்படி விட்டுடமுடியும்? என்னதான் அக்கிரமக்காரனா இருந்தாலும் அரசவம்சத்தைச் சேர்ந்தவன் இல்லையா? அந்த ராஜகுடும்பத்துகுரிய மரியாதையோடு அடக்கம் செய்யணும்னு சமூகத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது. அதனால அந்த எலும்புக்கூட்டை இன்னொரு சவப்பெட்டிக்குள்ள வச்சி, தேவாலயத்துக்குள்ள அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களுடைய கல்லறைகள் இருக்கும் பகுதியில சகல மரியாதையோடு மறுஅடக்கம் செஞ்சாங்க. கிட்டத்தட்ட மூனு வருஷ காலம் இந்த சம்பவம் துண்டு துண்டா நடந்தது. இந்த நோட்டுல இருக்கிற துண்டு துண்டா கிடக்கிற செய்திகளை ஒன்னொன்னா படிச்சிகிட்டே போனீங்கன்னா, முழு வரலாற்றையும் தெரிஞ்சிக்கலாம்.”

“அருமை சார். அருமை”

“பதினஞ்சாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில அந்த ரிச்சர்டுடைய வம்சம் முடிவுக்கு வந்திருக்குது. அவனுடைய வீரம், துரோகம், வெறி, அதிகாரம் பத்திய கதைகள் மக்கள் நடுவுல ஆழமா வாய்வழிக்கதையா   பேசிக்கிற அளவுக்கு பிரபலமா இருந்திருக்குது. இந்த யுத்தம் முடிஞ்ச நூறு நூத்தம்பது வருஷம் கழிச்சி நாடகம் எழுத வந்த ஷேக்ஸ்பியர் இந்த அரசனுடைய கதையை மையமா வச்சி மூனாவது ரிச்சர்ட்னு அற்புதமான ஒரு நாடகம் எழுதினாரு. ’எ ஹார்ஸ்! எ ஹார்ஸ்! மை கிங்டம் ஃஃபார் எ ஹார்ஸ்’னு ஒரு அருமையான வரி அந்த நாடகத்துல உண்டு. ஒரு குதிரைக்காக அந்த யுத்தகளத்துல அவன் தவிக்கிற தவிப்பை அந்த வரியில பார்க்கலாம். குதிரை இருந்திருந்தா, ஒருவேளை ரிச்சர்ட் அந்த யுத்தத்துல ஜெயிச்சிருக்கலாம். அவனுடைய அழிவு அப்படி அமையணும்னு விதி. அதை யாரால மாத்தமுடியும்?. ஷேக்ஸ்பியருடைய இந்த நாடகத்தை ரெண்டு மூனு பேரு படமா எடுத்திருக்காங்க. நீங்க பார்த்திருக்கீங்களா?”

“இல்லை சார்”

”ஏதாவது  ஒரு வெர்ஷன பாருங்க. நல்ல அனுபவமா இருக்கும்”

என்னால் சில கணங்கள் பேசமுடியவில்லை. அமைதியாக அந்த நோட்டுகளையே புரட்டிக்கொண்டிருந்தேன். ஓர் அரைப்பக்கக் குறிப்புக்குப் பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு மறைந்திருப்பதைக் கேட்டு மலைத்துவிட்டேன். அந்த நோட்டுப்புத்தகத்தில் எஞ்சியிருக்கும் குறிப்புகளை முன்வைத்து இன்னும் உரையாடிக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.

அப்போது விசித்திரமான ஓர் எண்ணம் எழுந்தது. இங்கிலாந்து வரலாறாக இருந்தாலும் சரி, ஐரோப்பா, ஆப்பிரிக்க, ஆசிய வரலாறாக இருந்தாலும் சரி, மன்னராட்சிக்காலம் என்பது ஒரு கோணத்தில் மரணங்களின் காலமாகவே இருப்பதாகத் தோன்றியது. கொலை என்று வந்துவிட்டால் உறவு, பாசம், நட்பு, காதல் எல்லாவற்றையும் கடந்து கொன்றுவிட்டு போய்க்கொண்டே இருப்பதைத்தான் பார்க்கமுடிகிறது. இரக்கமோ, குற்ற உணர்வோ யாரிடமும் இருந்ததாகத் தெரியவில்லை. கோர்வையாக சொல்ல முடியவில்லை என்றபோதும் துண்டுதுண்டாக விட்டல்ராவிடம் அதைச் சொல்லி முடித்தேன்.

துயரமான புன்னகையே விட்டல்ராவிடமிருந்து பதிலாக வெளிப்பட்டது. பிறகு ஒரு பெருமூச்சுடன் “அதிகாரத்தின் மீது இருக்கிற அளவு கடந்த ஈர்ப்புதான் அதற்குக் காரணம்னு தோணுது பாவண்ணன். அதிகாரம் எப்படிப்பட்டது, அது ஒரு மனிதனை என்னென்ன செய்யுங்கறத நம்ம மாதிரியான எளிய மனிதர்களால புரிஞ்சிக்கவே முடியாது. அதிகாரத்துக்கு ஆசைப்படற ஆளுதான் அதைப்பத்தி தெளிவா புரிஞ்சி வச்சிருப்பான்” என்று சொன்னார்.

 

(அம்ருதா – ஜூலை 2024)