Home

Sunday 28 July 2024

அகத்தனிமையும் புறத்தனிமையும்

 

”ஆடிப்பெருக்கு என்றொரு திரைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று யாரிடமாவது கேட்டால், அவர் பதில் சொல்ல சற்றே தடுமாறக்கூடும். ஆனால் ”தனிமையிலே இனிமை காண முடியுமா? பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டால், ”அந்தப் பாட்டைக் கேட்காதவர்களே நம் ஊரில் இருக்கமுடியாது. நானே நூறு தரம் கேட்டிருக்கேன்” என்று உற்சாகத்துடன் பதில் சொல்வார்.அந்த அளவுக்கு அந்தப் பாடல் பிரபலமானது.ஏ.எம்.ராஜா இசையில் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் ஒலித்த இப்பாடல் ஒரு காலகட்டத்தின் அடையாளம்.காதலர்களின் பிரிவால் நேரும் தனிமை தொடர்பான கேள்வி பதிலாகத்தான் பாடல் தொடங்குகிறது. மெல்ல மெல்ல அந்த உரையாடல் வளர்ந்து முனிவர், அரசர், கவிஞர், இறைவன் என யாராக இருந்தாலும் தனிமையில் இனிமை காணமுடியாது என்பதை சாராம்சமாகத் தெரிவித்துவிட்டு முடிவடைகிறது.

சேர்ந்து வாழ வாய்ப்பில்லாமல் வெறும் நினைவுகளில் மூழ்கி வதையுடன் வாழும் வாழ்க்கையில் உருவாகும் தனிமை ஒரு விதமானது.சேர்ந்து வாழும் வாழ்க்கையில், சூழல்களின் காரணமாக உருவாகும் தனிமை இன்னொரு விதமானது.முதல் தனிமை கடந்துசெல்ல முடியாத கடல்பயணம்.இரண்டாவது வகை தனிமை என்பது கடந்துசெல்ல முடிகிற ஆற்றுப்பயணம்.இவை எல்லாமே ஏதோ ஒருவகையில் புறத்தனிமை சார்ந்தவை.சேர்ந்து வாழ்ந்தாலும் சேர்ந்திராத எண்ணங்களோடு வாழும்போது உருவாகும் தனிமை முற்றிலும் துயரார்ந்தது.அது அகத்தனிமை.அதை வெளியே காட்டிக்கொள்ளவும் முடியாது.மறக்கவும் முடியாது.விழுங்கமுடியாத நச்சுருண்டையாக ஆழ்நெஞ்சில் அடைத்துக்கொண்டே இருக்கும்.

இவ்விரண்டுமே உலகியல் வாழ்க்கையோடு தொடர்புடையவை.உலகியலுக்கு அப்பால் இன்னொரு தனிமை உண்டு.அது ஆன்மிகத்தனிமை.தனிமைகண்டதுண்டு, அதிலேசாரம்இருக்குதம்மாஎன்னும் பாரதியாரின் கவிதை வரியை நினைவுக்குக் கொண்டுவந்தால் அந்த ஆன்மிகத்தனிமையைப் புரிந்துகொள்ளலாம்.நம்முடன் இறைவன் வாழ்கிறான் அல்லது இறைவனோடு நாம் வாழ்கிறோம் என்ற உணர்வோடு ஒவ்வொரு கணத்தையும் இன்பத்தோடு கழிப்பதுதான் ஆன்மிகத்தனிமை.

என்னோடு பணிபுரிந்து எனக்கு முன்னால் பணிநிறைவு பெற்ற பல நண்பர்கள் இன்னும் என் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் வீடுகளின் திசையில் வேறு ஏதேனும் வேலை தொடர்பாக செல்லவேண்டியிருந்தால் அந்த வேலையை முடித்துக்கொண்டு குறிப்பிட்ட நண்பர்களையும் சந்தித்துவிட்டுத்தான் திரும்புவேன். அப்படி ஒரு பழக்கத்தைக் கடைபிடித்து வருகிறேன்.என்னைச் சந்திக்கும் போது அவர்கள் முகத்தில் உருவாகும் மலர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.அவர்களுடைய சிறுசிறு உபசரிப்புகளில் தெரியும் அன்பு நெகிழவைத்துவிடும்.பெரும்பாலானோர் தனித்தே இருக்கிறார்கள். பிள்ளைகள் எங்கோ வெளிநாட்டில் இருக்க, அவர்களோடு  வாரத்துக்கு ஒருமுறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறையோ ’வீடியோ கால்’ பேசிக்கொண்டு பொழுது போக்குகிறார்கள். பேச்சைத் தொடங்கியதுமே, தனிமையின் துயரத்தைக் கொட்டுவார்கள்.அமைதியாகக் கேட்டுவிட்டு வந்துவிடுவேன்.

நான் பார்த்தவரையில் தனிமையை ஒரு துயரமாகவோ, சங்கடமாகவோ கருதாமல் நல்லதொரு வாய்ப்பாக நினைத்து ஒவ்வொரு நாளையும் கொண்டாட்டமாக நினைத்து வாழக்கூடியவர்கள் ஒருசிலர் மட்டுமே.  அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம் என கலை தொடர்பான சங்கதிகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.அதன் வழியாக அவர்கள் பெறுகிற உற்சாகத்தைத் துணையாகக் கொண்டு தனிமையைக் கடந்துவிடுகிறார்கள்.ஒரு நல்ல நாவலை வாசிக்கும்போது, அல்லது ஒரு நல்ல நாடகத்தைப் பார்த்துமுடிக்கும்போது, அவர்கள் அடையும் புத்துணர்ச்சிக்கு அளவே இல்லை.உலகியலாளர்களால் அதைப் புரிந்துகொள்ளவே முடியாது.

சிவலிங்கப்பா என்னைவிட மூத்தவர்.பெல்லாரியில் வசித்தபோது என்னோடு வேலை பார்த்தவர்.பணிநிறைவுக்குப் பிறகு பெங்களூரில் வீடு கட்டிக்கொண்டு மனைவியோடு தனிமையில் வசிக்கிறார்.நான் நம்புகிற இலக்கியம், இசை, ஓவியம், நாடகம் என கலை தொடர்பான எந்த சங்கதியிலும் ஆர்வம் இல்லாதவர்.ஆனால் அவரைப்போல தனிமையை ஆனந்தமாகக் கழிப்பவரைப் பார்ப்பது அரிது.அவர் ஓர் அதிசய மனிதர்.

ஒருநாள் அவரைச் சந்திப்பதற்குச் சென்றிருந்தேன்.வழக்கம்போல உற்சாகமான தோற்றத்துடன் என்னை வரவேற்றார்.

“வாங்க, வாங்க. இன்னைக்கு ஒரு விஷயத்தைக் கண்டுபுடிச்சேன்.யாருகிட்ட சொன்னா, கேட்டு சந்தோஷப்படுவாங்கன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.சரியான நேரத்துல, நீங்க வந்து சேர்ந்தீங்க. வாங்க, வாங்க” என்று புன்னகைத்தார்.

“என்ன சார்?என்ன விசேஷம்?”

“இதோ, இங்க பாருங்க” என்றபடி தன் கைப்பேசியைத் திறந்து சில படங்களைக் காட்டினார்.செங்கால் நாரையின் வெவ்வேறு தோற்றங்கள்.அதன் நீண்ட கூர்மையான அலகின் தோற்றம் பார்க்கப் பார்க்க அதிசயமாக இருந்தது.செம்பருத்திப் பூவின் நிறத்தில் நீண்டிருந்த அதன் கால்கள் அழகாக இருந்தன.வெண்மையான கழுத்து.விரிந்திருக்கும் இறகுகள் உள்ளே ஒரு நிறத்திலும் வெளியே ஒரு நிறத்திலுமாக இருந்தன.இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் இருந்தன.மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் சரியான கோணத்தில் அப்படங்களை எடுத்திருந்தார் சிவலிங்கப்பா.

“செங்கால் நாரைதானே சார்?” என்று ஒரு சந்தேகத்தோடு கேட்டேன்.அவர் புன்னகைத்தபடியே அதைத் தலையசைத்து மறுத்தார்.”நான் கூட அப்படித்தான் நெனச்சிட்டே படம் எடுத்தேன்.இப்பதான் கூகுள் பண்ணி கண்டுபுடிச்சேன். இது மெக்சிகோ நாட்டுப் பறவை”

“மெக்சிகோவிலிருந்து இங்க வந்திருக்கா?” என்று நான் ஆச்சரியத்தோடு கேட்டேன்.

“வலசைபோதல்னு சொல்றமே, அதுதான் இது.அந்த நாட்டு தட்பவெப்ப நிலைக்கு அஞ்சி, இங்க பறந்து வருது.நம்ம நாட்டுல சில காலம் பறந்து திரிஞ்சிட்டு மறுபடியும் அங்க போயிடும்.”

நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார் சிவலிங்கப்பா.ஒவ்வொரு தகவலையும் உற்சாகமாக முன்வைத்தார்.நான் வாய்பேச முடியாதவனாக அவற்றை ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டே இருந்தேன்.அக்கணத்தில் நான் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தேன்.இலக்கியம் முதலான எதனுடன் அவருக்குத் தொடர்பில்லாத நிலையிலும் அவர் தனிமையை வென்றவராக புத்துணர்ச்சியோடு இருப்பதற்கான காரணம் என்ன என்பது எனக்குப் புரிந்துவிட்டது.

அவர் ஒவ்வொரு நாளும் தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தில் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்.ஒரு பறவை.ஒரு செடி.ஒரு பூ அல்லது இலை.அந்தப் புதுமை சார்ந்து இன்னும் இன்னும் என தேடித் தெரிந்துகொள்கிறார்.இந்தப் புதுமை நாட்டத்தின் வழியாக அவர் புற உலகத்தோடு மானசிகமாக ஓர் உறவை உருவாக்கி நிலைநிறுத்திக் கொள்கிறார்.அச்செயல்பாடு வற்றாத ஊக்கத்தையும் தனிமையை வென்றெழுந்து நிற்கும் ஆற்றலையும் வழங்குகிறது.என் நெஞ்சை அரித்துக்கொண்டிருந்த நெடுநாள் வினாவுக்கு விடையைக் கண்டறிந்தது பற்றி எனக்குள் ஒரு நிறைவுணர்ச்சி பொங்கியது.

அவரிடமிருந்து விடைபெற்று வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த வேளையிலும் புதுமைநாடும் மனம் தொடர்பாகவும் தொலைந்துபோகும் தனிமை தொடர்பாகவும் யோசித்தபடியே வந்தேன். கண்முன்னால் இவ்வளவு எளிதான வழி இருக்கையில் மனிதர்கள் அதை நிமிர்ந்து பார்க்க மனமில்லாதவர்களாக ஏன் தடுமாறுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.அதை விட்டுவிட்டு, வழக்கம்போல என் மனம் வேகமாக இலக்கியத்தின் பக்கம் திரும்பிவிட்டது.நான் அறிந்த பல்வேறு படைப்புகளில் இந்தப் புதுமைநாட்டம் தொடர்பான பதிவு எங்காவது இருக்கிறதா என யோசனையில் மூழ்கினேன்.முதலில் ஒன்றும் தோன்றாமல் தெளிவின்றியே இருந்தது.சில கணங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று சிறுகதைகள் நினைவுக்கு வந்தன.

ஹேமி கிருஷ் என்னும் எழுத்தாளர் ‘தனிமை’ என்னும் தலைப்பிலேயே ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார்.ஈரோட்டைச் சேர்ந்தவர் என்றபோதும் அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் வசித்து வருகிறார்.முகேஷ் – பூர்வா என்னும் இளந்தம்பதியினர் பற்றிய கதை இது.அவர்கள் அமெரிக்காவில் வசிப்பவர்கள்.முதலில் தனிவீட்டில் உல்லாசமாக வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.அதிகாலை ஏழு மணிக்கு வேலைக்குச் செல்லும் முகேஷ் இரவு வேளையில்தான் திரும்புகிறான்.இடைப்பட்ட நேரம் முழுதும் அந்த வீட்டில் தனிமையில் கழிக்கிறாள் அவள்.

ஆரம்பத்தில் வாரத்துக்கு ஒருமுறை காய்கறி வாங்குவதற்காக வெளியே செல்லும் பழக்கம் இருந்தது.மனிதநடமாட்டத்தையே அன்றுதான் அவள் பார்க்க முடிந்தது.பிறகு சமைப்பதும் சாப்பிடுவதும் நேரம் கெட்ட நேரமாகப் போய்விடுவதால் அந்தப் பயணத்தை அவளால் தொடரமுடியவில்லை.வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள்.அவர்கள் வீடு இருக்கும் பகுதி புறநகர் என்பதால் அவளால் ஒரு மனிதமுகத்தைக்கூடப் பார்க்கமுடியவில்லை.அதனால் அங்கிருந்து இடம் மாறி, அக்கம்பக்கத்தில் மனிதநடமாட்டம் இருப்பதுபோல ஓர் அடுக்ககத்துக்குக் குடிபெயர்கிறார்கள்.

புதிய அடுக்ககத்தில் யாரும் யாருடனும் பேசுவதில்லை என்றபோதும், கண்ணெதிரில் மனிதர்கள் நடமாடுகிறார்கள் என்பதுதான் அந்த அடுக்ககத்தில் ஒரே ஆறுதல்.நகரத் தெருக்களில் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி இன்னொரு ஆறுதல்.திடீர் வெப்பம், திடீர் மழை என சீரற்ற வானிலையின் காரணமாக நடைப்பயிற்சி அடிக்கடி தடைபட்டு விடுகிறது.பத்தரைக்குள் நடை, குளியல், சிற்றுண்டி எல்லாம் முடிந்துவிடும்.அதற்குப் பிறகு தனிமை மட்டுமே.ஒரே நாள் மீண்டும் மீண்டும் ஆண்டுக்கணக்காக மறுசுழற்சி ஆகிறதோ என்று கூட சில சமயங்களில் அவளுக்குத் தோன்றுகிறது.

அப்போதுதான் அவள் அடுக்ககத்துக்கு வெளியே மரக்கிளையில் அமர்ந்து கூவும் சிவப்பு கார்டினல் பறவையைப் பார்க்கிறாள்.அழகான பறவை.ஆனால் அது ஏன் கூவிக்கொண்டே இருக்கிறது என்பது அவளுக்குப் புரியவில்லை.அந்தக் கூவல் வழியாக என்ன சொல்ல விரும்புகிறது என்பதை அவளால் கண்டுபிடிக்கமுடியவில்லை.அந்தப் பறவையைக் கவனிப்பது அவளுடைய தனிமைக்கு மருந்தாக இருக்கிறது.

சில நாட்களுக்குப் பிறகு அங்கிருந்த தோப்புக்கு அருகில் ஒரு மெக்கானிக் ஷெட் உருவாகிறது.வாகனங்களைப் பழுது பார்க்கும் கடை.பால்கனியின் கண்ணாடிக் கதவைத் திறந்தால் சுற்றுச்சுவரை ஒட்டி அந்த ஷெட் இருப்பதை அவள் பார்க்கிறாள்.அந்த ஷெட்டிலேயே மெக்கானிக் இளைஞனொருவன் தங்குவதையும் பார்க்கிறாள்.அவனுடைய நடமாட்டத்தைக் கவனிப்பது அவளுக்கு ஒருவகையில் ஆர்வமூட்டும் செயலாக இருக்கிறது.அதுவும் அவளுடைய தனிமைக்கு மருந்தாகிறது.

எல்லா நேரத்திலும்  குரல் கொடுத்தபடியே இருந்த சிவப்பு கார்டினல் பறவை அந்த ஷெட்டில் மெக்கானிக் நடமாட்டத்தைக் கவனித்த பிறகு குரல் அமைதியடைந்துவிடுகிறது. அந்த மரக்கிளையிலேயே இருந்தாலும் அங்கேயே வட்டமடித்துப் பறந்தபடி பொழுது போக்குகிறது அப்பறவை.அப்பறவையும் ஒருவகையில் தன்னைப்போலவே தனிமையின் எடை தாங்கமுடியாத உயிராக இருக்கலாம் என எழுந்த எண்ணத்தால் அவள் அமைதியடைகிறாள்.

எல்லாமே சில மாத காலம்தான்.என்ன காரணத்தாலோ, அந்த மெக்கானிக் அந்த ஷெட்டை விட்டு வெளியேறிவிடுகிறான்.அந்த ஷெட் அங்கிருந்து அகற்றப்பட்டுவிடுகிறது.அந்த இடத்தில் வெறுமை சூழ்ந்துவிடுகிறது.அதுவரை ஆனந்தமாக கிளைக்குக்கிளை தாவிப் பறந்துகொண்டிருந்த கார்டினல் பறவை மீண்டும் குரலெழுப்பத் தொடங்குகிறது.அதுவரை கவனித்து மகிழும் புள்ளியாக இருந்த அந்தத் தொழிற்கூடம் இல்லாத வெறுமை, பூர்வாவின் நெஞ்சிலும் தனிமையை உணரவைக்கிறது.பூர்வாவுக்கு அந்த அடுக்ககத்தைவிட்டால் போக்கிடம் இல்லை.ஆனால் கார்டினல் பறவைக்கு மரம்விட்டு மரம் செல்லும் வசதி இருந்தபோதும் அது ஏன் செல்லவில்லை என்பது புதிராக இருக்கிறது.ஒருவேளை அது தனிமையை விரும்பும் பறவையோ என்று எண்ண வைக்கிறது.தனிமையில் மட்டுமே அதனால் குரலெழுப்ப முடியுமோ என்றொரு ஐயத்தையும் அளிக்கிறது.ஒருபுறம் தனிமையை வெல்ல புதிய காட்சிகளுக்காக ஏங்கும் பூர்வா.இன்னொருபுறம் தனிமைக்காக ஏங்குகிறதோ என்று நினைக்கவைக்கும் சிவப்பு கார்டினல் பறவை.இந்த உலக இயக்கம் புரிந்துகொள்ள முடியாத விசித்திரப்புதிராகவே இருக்கிறது.

தனிமை தொடர்பாக ஹேமி தனுஷ் ’நெட்டுயிர்ப்பு’ என்னும் தலைப்பில் மற்றொரு சிறுகதையும் எழுதியிருக்கிறார்.மகன், மருமகள் இருவருடைய போக்கும் பிடிக்காமல் அவர்களை வெளியேற்றிவிட்டு தனிமையில் வாழ்கிறார் ஒரு பெண்மணி.முதுமைக்காலத்தில் தனிமை அவரை வாட்டுகிறது.உறவுக்காரர் ஒருவர் தம் நண்பரொருவருடைய வீட்டிலிருந்து ஒரு பூனையைக் கொண்டுவந்து பெண்மணியிடம் ஒப்படைக்கிறார்.தனிமைத்துயருக்கு அது நல்மருந்தாக இருக்கும் என்பது அவருடைய எண்ணம்.அந்தப் பூனையின் பெயர் மீனு.

மீனுவின் பார்வை வழியாகவே கதையை நிகழ்த்துகிறார் ஹேமி கிருஷ்.ஏராளமான சிறுவர்கள் நடுவில் செல்லமாக வளர்ந்த பூனை அது.கொஞ்சலுக்கும் கொண்டாட்டத்துக்கும் குறைவில்லாமல் அச்சிறுவர்கள் பார்த்துக்கொண்டனர்.திடீரென அது அந்தப் பெண்மணியின் துணையாக அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது.அந்தத் தனிமை முதலில் தாங்கமுடியாத ஒரு சுமையாக இருக்கிறது.நாளடைவில் அந்த இடமும் பெண்மணியும் பழகப்பழக, அதன் நடவடிக்கைகளில் ஒரு தெளிவு ஏற்படுகிறது. ஒருநாள், பூட்டியிருக்கும் வீட்டுக்கு வெளியே கீரைக்காரி வந்து நிற்கும் தகவலை சமையலறைக்குள் இருக்கும் பெண்மணியிடம் ஓடிவந்து தெரிவித்து அழைத்துச் செல்கிறது. அன்றுதான் இருவரிடையேயும் நெருக்கம் உருவாகிறது.ஒருவரைச் சார்ந்து இன்னொருவர் இருப்பதை இருவருமே உணர்ந்துகொள்கிறார்கள்.தனிமை சிறுகதையில் இடம்பெற்ற பூர்வாவிடம் காணப்பட்ட எந்த முயற்சியும் இந்தப் பெண்மணியிடம் இல்லை.உறவு நேர்ப்பட வேண்டும் என நினைக்கிற அளவுக்குக் கூட, தனிமையை வென்று வாழ வேண்டும் என அவள் நினைப்பதில்லை.பூனையின் வழியாகக் கிட்டும் ஆறுதலே அவளுக்குப் போதுமானதாக இருக்கிறது.

ஒருநாள் திடீரென அவள் மறைந்துவிடுகிறாள்.காலையில் எழுந்ததும் அளிக்கப்பட வேண்டிய பால் அளிக்கப்படவில்லை என்பதால் சமையலறைக்குச் செல்கிறது பூனை.அங்கே நிலைகுலைந்து விழுந்திருக்கும் அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் ஏதோ ஒரு விபரீதத்தை அது உணர்ந்துகொள்கிறது.பூட்டிய வீட்டுக்குள் நின்று எதையும் செய்ய இயலாமல் கண்ணாடிக் கதவுக்கு அருகில் வந்து நின்று தெருவில் செல்வோரின் கவனத்தை ஈர்ப்பதற்கு சத்தமெழுப்புகிறது.அக்கணத்தில் சிறுகதையில் நாம் கவனிக்கத் தவறிய ஒரு கோணத்தின் பிடி கிடைக்கிறது. ஒரு வாசகன் நினைத்துக்கொண்டிருந்த அளவுக்கு அது தனிமையை நினைத்து அஞ்சும் பெண்மணியின் கதை மட்டுமல்ல. தனிமையிலிருந்து மீள நினைக்கும் பூனையின் கதையென்றும் சொல்லலாம்.

கடந்த நூற்றாண்டில் எண்பதுகளில் வண்ணதாசன் எழுதிய ’போய்க்கொண்டிருப்பவள்’ என்னும் சிறுகதையையும் தனிமையின் துயரம் படிந்த கதையாக வகைப்படுத்த முடியும்.அன்னம் ஜூடி, விருத்தா என்கிற விருத்தாசலம், சந்திரன் தேவநேசன், கதைசொல்லி என பாத்திரங்களுக்குக் குறைவில்லாமலேயே கதை அமைந்திருக்கிறது.ஆயினும் மனத்தளவில் ஒவ்வொருவரும் ஆழ்ந்த தனிமையில் வாழ்பவர்கள்.அதைப் போக்கிக்கொள்ள மருந்தென எதுவும் இல்லாமல் சிக்கித் தவிப்பவர்கள்.புறத்தனிமையைவிட அகத்தனிமை இன்னும் கொடியது.

அன்னம் ஜூடியும் விருத்தாவும் முன்னால் காதலர்கள்.ஆனால் வாழ்க்கைச்சூழலால் அவர்களால் ஒன்றுசேர முடியவில்லை.அதே சமயத்தில் ஒருவரிடமிருந்து இன்னொருவர் பெற்ற அன்பையும் ஆனந்தத்தையும் அவர்களால் மறக்கமுடியவில்லை.ஆழ்நெஞ்சில் புதைத்துவிட்டு, தமக்குள்ளேயே ஏங்குகிறார்கள். ஜூடியை மணந்துகொண்ட தேவநேசன் தானும் மகிழ்ச்சியாக இல்லாமல் மனைவியையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் கலையை அறியாமல் வேறொரு வகையான தனிமையில் புதைந்திருக்கிறான்.

கதையின் தொடக்கத்தில், அன்னம் ஜூடியைப் பார்ப்பதற்காக கதைசொல்லி நடந்துசெல்லும் தெருவில் சாக்கடையோரத்தில் விழுந்திருக்கும் மல்லிகைச்சரத்தைப் பார்த்தபடி கடந்துபோவதாக ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. முதலில் அந்த மல்லிகைச்சரம் ஜூடியின் வாழ்க்கை குறித்த படிமமோ என எண்ண வைக்கிறது. கதையின் முடிவை நெருங்கும்போது, ஜூடியின் வாழ்வாக இருந்தாலும் சரி, விருத்தாவின் வாழ்வாக இருந்தாலும் சரி, தேவநேசன் வாழ்வாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் சாக்கடையில் தவறிவிழுந்த மல்லிகைச்சரமாகத்தான் நினைக்கவேண்டியிருக்கிறது.

மனநிம்மதி அற்றவர்களின் வாழ்க்கை என்பது சாக்கடையில் தவறிவிழுந்த பூச்சரத்துக்கு நிகரானது.புறவாழ்வில் ஏற்படும் எந்த மாற்றமும் அவர்களுடைய அகத்தனிமையை அகற்ற முடியாது.எதிர்காலத்தில் அந்த அகத்தனிமையே அவர்கள் எஞ்சிய வாழ்க்கையை வாழ்வதற்கான மருந்தாகவும் இருக்கலாம்.அல்லது அவர்களை உள்ளிருந்தே கொல்லும் நஞ்சாகவும் அமையலாம்.

(சங்கு - ஜூலை 2024)