நண்பரொருவருடைய வீட்டில் சில மாதங்களுக்கு முன்பாக திருடு நிகழ்ந்துவிட்டது. அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம். அலங்கோலமாகக் கலைந்து கிடந்தது அவர் வீடு. களவுபோன பொருட்களின் விவரங்களை விசாரித்து பட்டியல் தயாரித்து அப்போதுதான் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார்கள் காவலர்கள். அந்தப் பட்டியலில் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் முதல் குழந்தைக்கு பால் கொடுக்க உதவும் ஃபீடிங் பாட்டில்வரை இருந்தது. பெரிய பொருட்கள் களவாடப்பட்டதைக்கூட பொறுமையாகப் படித்த நண்பர்கள் ஃபீடிங் பாட்டில் பெயரைப் படித்ததும் மனம் குமைந்து பேசினார்கள். “அயோக்கிய நாய்ங்க, அயோக்கிய நாய்ங்க” என்று ஆத்திரத்துடன் திரும்பத் திரும்பச் சொன்னார் ஒருவர். ”குழந்தைக்கு பால் குடுக்கற பாட்டல்னு கூட நெனச்சிப் பார்க்கலையே அவனுங்க. சரியான மிருகமா இருப்பானுங்க போல” என்பதையே வேறுவேறு சொற்களில் தம் ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டார் இன்னொருவர். திருடுவதற்கு என வந்துவிட்டவனுக்கு அந்த எண்ணமெல்லாம் ஏன் வரப் போகிறது? குழந்தைக்குப் பயனளிப்பது, பெரியவர்களுக்குப் பயனளிப்பது என பிரித்துப்பிரித்துப் பார்த்தா திருடமுடியும்? திருடனுக்கு எல்லாப் பொருட்களும் திருடத்தக்கவையே. அத்தருணத்தில் மனச்சாட்சிக்கு இடமே இல்லை என்று சொன்னேன் நான். “ஆமா, அப்படி திருடித் தின்னறத விட எங்கயாவது போய் சாணிய தின்னுட்டு சாவலாம்” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு காறித் துப்பினார் நண்பர்.
Tuesday, 16 June 2015
Tuesday, 19 May 2015
என்றென்றும் இருக்கும் ஜெயகாந்தன்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து தினமும் அலுவலகத்திலிருந்து நான் திரும்பும் நேரம் மாறிவிடும். ஆண்டு இலக்கை நோக்கி ஓடும் இறுதியோட்டத்தின் விளைவு அது. வழக்கமாக ஏழு அல்லது ஏழரைக்குள் மாறிவிடும். இது ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தொடர்கதை. வந்ததும் ஒரு குளியல். சிற்றுண்டி. திரும்பிவிடுவேன். இந்த மார்ச் வாரங்களில் அது ஒன்பது அல்லது ஒன்பதரையாக காலையில் படிக்காமல் விட்ட தினசரிகளின் கட்டுரை வாசிப்பு. திரும்பிப் பார்த்தால் சுவர்க்கடிகாரம் பத்தரை அல்லது பதினொன்றைக் காட்டும். ஏப்ரல் பிறந்து நாலைந்து நாட்களில் வழக்கமாக அந்தப் பரபரப்பெல்லாம் அடங்கிவிடும். ஆனால் இந்த முறை ஒரு வாரம் கடந்துபோய்விட்ட நிலையிலும் பரபரப்பு ஓயவில்லை. மனத்தில் வேலையைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லை. அப்படி ஒரு ஓட்டம். எட்டாம் தேதியன்றும் தாமதமாகத் திரும்பி, தாமதமாகச் சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகும்போது கடிகாரம் பதினொன்றைக் காட்டியது.
மிதமிஞ்சிய சோர்வில் படுத்த ஐந்து நிமிடங்களுக்குள் உறக்கம் வந்துவிட்டது. உறக்கத்தில் திடீரென கைப்பேசி மணி ஒலித்தது. என் மனைவி எடுத்துப் பேசுவதும் பதில் சொல்வதும் அரைமயக்கத்தில் எங்கோ கனவில் கேட்பதுபோலக் கேட்டது. அவள் என் அருகில் வந்து நின்று, தயங்கி நின்றிருக்கும்போதே நான் என் விழிகளைத் திறந்து “என்ன?” என்று கேட்டேன். அவள் தயங்கி “எழுத்தாளர் ஜெயகாந்தான் செத்துட்டாராம்” என்று சொன்னாள். வேகமாக பதறி எழுந்து உட்கார்ந்தேன். ”யாரு பேசனாங்க? என்ன சொன்னாங்க?” என்றேன். “சம்பந்தம் சொன்னாரு” என்று பதில் சொன்னாள். நான் உடனே அவர் எண்ணை அழைத்து விசாரித்தேன். அவருக்கு சென்னை நண்பர்கள் செய்தி அனுப்பியதைச் சொல்லிவிட்டு “உங்களுக்கு தெரியுமான்னு கேக்கறதுக்குத்தான் போன் செஞ்சேன்” என்றார். ”இல்லை, எனக்குத் தெரியாது. நீங்கதான் மொதமொதல்ல சொல்றிங்க” என்றேன்.
Labels:
அஞ்சலி,
அம்ருதா,
ஜெயகாந்தன்
ஒரு கலைஞனின் கதை - சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’
1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந்தேன். அரசு போட்டித் தேர்வுகளுக்காக நூலகத்தில் உட்கார்ந்து குறிப்புகள் எடுக்கவும் படிக்கவும் பகல்நேரத்தைச் செலவிடவேண்டிய நெருக்கடி இருந்ததால் இரவு நேரப் பணியே எனக்கு வசதியாக இருந்தது. திருமணமான குடும்பஸ்தர்கள் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இரவுநேரப் பணிகளை மாற்றிக் கொடுத்து உதவுவார்கள். என்னோடு நசீர் என்கிற நண்பரும் இரவுப்பணிக்கு வருவார். அவர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலைப் பட்டத்துக்காக படித்துக்கொண்டிருந்தார். பகலில் கல்லூரி, இரவில் பணி என்பது அவர் வழி. என் தமிழிலக்கிய நாட்டம் அவருக்குப் பிடித்திருந்தது. அவருடைய ஆங்கில இலக்கிய நாட்டம் எனக்கும் பிடித்திருந்தது. நான் எனக்குத் தெரிந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அவர் தனக்குத் தெரிந்த ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒருநாள் சோமர்செட்மாம் எழுதிய ‘நிலவும் ஆறு நாணயங்களும்’ என்கிற நாவலை எடுத்துவந்து, ‘ரொம்ப முக்கியமான நாவல். படிச்சிப் பாருங்க’ என்றார். ’பால் காகின்னு ஒரு முக்கியமான ஓவியர் பாரீஸ்ல இருந்தார். வான்காவுடைய நண்பர். அவருடைய வாழ்க்கையை அடிப்படையா வச்சி இத எழுதியிருக்கார்’ என்று கூடுதல் தகவலையும்
அளித்தார். வான்காவின் சுயசரிதையான ‘வாழும் விருப்பம்’ புத்தகத்தை அப்போதுதான் படித்து முடித்திருந்தேன். அதனால் நசீர் கொடுத்த கூடுதல் குறிப்பு, அப்புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. விட்டுவிட்டு, ஒரு வார காலத்தில் அதைப் படித்து முடித்தேன். தரகனாகவும் ஓவியனாகவும் வாழ்கிற ஒரு மனிதன், ஒரு கட்டத்தில் ஓவியனாகமட்டுமே வாழ்வது என்று குடும்பத்தைத் துறந்து வெளியேறி அடையும் வெற்றிகளையும் தோல்விகளையும் அவமானங்களையும் சிரமங்களையும் தொகுத்து முன்வைத்திருந்த அந்தப் படைப்பு என்னை மிகவும் கலங்கவைத்துவிட்டது. கலையைப் பின்தொடர்ந்து செல்லும் கலைஞனுக்கு இப்படி ஒரு சிக்கலான வாழ்வா என்று நினைத்து நிலைகுலைந்திருந்தேன். நசீருடன் என் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். ‘உலகம் முழுக்க கலையை வாழவைக்க, கலைஞர்கள் இப்படி வாழ்ந்து வதைபட்டிருக்கிறார்கள்’ என்று நாக்கைச் சப்புக்கொட்டியபடி சொன்னார் அவர். மேலும், ‘நம் பாரதியார், புதுமைப்பித்தன்னு எழுத்துக்கலைஞர்கள் சந்தித்த வாழ்க்கை நெருக்கடிகள்போல, நெருக்கடிக்கு ஆளான ஓவியக் கலைஞர்கள் உலகம் முழுதும் இருக்கிறார்கள்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
Tuesday, 12 May 2015
நெஞ்சையள்ளும் குருவாசகக்கோவை
வழக்கமாக நடைப்பயிற்சிக்கு நான் செல்லும் பூங்காவுக்கு அருகில் பழைய செய்தித்தாட்களையும் புத்தகங்களையும் வாங்கி விற்கக்கூடிய கடையொன்று உள்ளது. அதை நடத்தி வருபவர் ஒரு கன்னடியர். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அகராதியை மலிவான விலைக்கு அவர் எனக்குக் கொடுத்தார். அன்றுமுதல் எனக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் உருவாகிவிட்டது.
போன வாரம் ஞாயிறு அன்று மாலை நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு சிறிது நேரம் அவருடைய கடைக்குச் சென்று வழக்கம்போல உரையாடிகொண்டிருந்தேன். அவர் எடைக்கு வாங்கிய புத்தகங்களின் குவியல் கடைவாசலில் இருந்தது. அதை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துவிட்டு பக்கத்திலேயே அடுக்கி வைத்தபடி இருந்தேன். எல்லாமே கன்னட, தெலுங்கு புத்தகங்கள். சில தமிழ், வங்கமொழிப் புத்தகங்களும் இருந்தன. தன் மேசையில் இருந்த புத்தக அடுக்கிலிருந்து ஒரு புத்தகத்தை இழுத்து, “இந்தாங்க, இத பாருங்க. தமிழ் புஸ்தகம்தான். ஒங்களுக்குப் புடிக்குமேன்னு எடுத்து வச்சேன்” என்றபடி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார் அவர்.
Labels:
குருவாசகக்கோவை
Wednesday, 29 April 2015
அற்புதக் கணங்களின் தோரணம்
பள்ளிக்கூட நாட்களில் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. சிறியதொரு குன்றையொட்டி நீண்டிருக்கும் ஒரு சாலை. தற்செயலாக குன்றின் உச்சியிலிருந்து உருண்டு வந்த பாறையொன்று சாலையின் குறுக்கில் விழுந்து நின்றுவிடுகிறது. மாட்டுவண்டிகள் போகத்தக்கதாக அதுவரை இருந்த அந்தப் பாதை எந்த வண்டியும் போகமுடியாத அளவுக்கு சிறுத்துப் போய்விடுகிறது. வண்டிக்காரர்கள் வேறொரு சுற்றுவழியைத் தேடி, அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த ஊரில் வாழ்ந்த முதியவர் ஒருவர் கைவிடப்பட்ட பாதையைப் பார்த்து மனம் வருந்துகிறார். ஒரு நாள் காலையில் சம்மட்டியை எடுத்துச் சென்று அந்தப் பாறையை உடைக்கத் தொடங்குகிறார். ஒரு நாள் முழுக்க தொடர்ச்சியாக உடைத்தபோதும், அவரால் கையகலத்துக்கு ஒரே ஒரு துண்டு பாறையை மட்டுமே உடைக்கமுடிகிறது. அதுவே அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது. அந்த ஊர்க்காரர்கள் எல்லோரும் அவரைப் பைத்தியக்காரன் என்று அழைக்கிறார்கள். வேலையற்றவன் என்று வசைபாடுகிறார்கள். ஆனால் எந்த விமர்சனத்தையும் காதில் போட்டுக்கொள்ளாமல், துண்டுதுண்டாக உடைக்கும் வேலையை மட்டுமே அவர் தினமும் செய்துவருகிறார்.
Wednesday, 22 April 2015
ஒருநாள் ஆசிரியர்
”கட்டுரைநோட்டு திருத்தும்போதுலாம் ஏன் உங்க மூஞ்சி பேதிமருந்து
குடிச்சமாதிரி மாறுது?” என்று பல ஆண்டுகளுக்குமுன்பாக மாதவி வேடிக்கையாகச் சொன்ன வார்த்தைகள் என் மனத்தில் எதிரொலிக்காத நாளே இல்லை. இப்போதுகூட ஒரு நோட்டை எடுத்துப் பிரிக்கும்போது அந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன. நோட்டைத் திறக்கும்போதே கசப்புகள் முட்டிக்கொண்டு வருகின்றன. கசப்புகளுக்கு ஒருநாளும் இடம் தந்துவிடக்கூடாது என்று எனக்குள் ஆயிரம்முறை சொல்லிக் கொண்டாலும் மூன்றாவது நோட்டைத் திருத்தி முடிப்பதற்குள் வெறுப்பும் சலிப்பும் நெஞ்சில் நிறைந்துவழியத் தொடங்கிவிடுகின்றன. அந்த அளவுக்கு ஒவ்வொரு வாக்கியத்திலும் பிழைகள் மலிந்திருந்தால் என்னதான் செய்யமுடியும்?. ஒவ்வொரு நோட்டும் பிழைகளின் களஞ்சியம்.
போன வாரம் வகுப்பில் தாயுமானவர் பாட்டொன்றைப் பாடமாக எடுத்தேன்.
அந்த வாரத்துக்கான கட்டுரைக்கு அதைத்தான் தலைப்பாகக் கொடுத்திருந்தேன். ஒரு
கட்டுரை கூட உருப்படியாக இல்லை. படிக்கப்படிக்க எனக்குள் வெறுப்பு பொங்கியது. சொந்தமாக எழுதவராவிட்டாலும் பரவாயில்லை, மனப்பாடமாக இருக்கவேண்டிய செய்யுளைக்கூட யாரும் ஒழுங்காக எழுதவில்லை. ’தூயதான துரிய அறிவெனும்’ என்கிற வரியை ஒவ்வொருவரும் ’தூயதான தூரிய அறிவெனும்’ என்று எழுதிவைத்திருந்தார்கள். துரியத்துக்கும் தூரியத்துக்கும் வித்தியாசம் தெரியாத பிறவிகள். கணக்கு, இயற்பியல், வேதியியல், புள்ளியியல், வரலாறு, சூழலியல், பொருளாதாரம் என குறிவைத்த பாடப்பிரிவுகள் எதுவும் கிடைக்காமல் தண்டமே என்று தமிழ்ப்பிரிவில் வந்து குவிகிறவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?
Friday, 10 April 2015
நூறாவது படம்
செய்வதற்கு எந்த வேலையும் இல்லாதபோது நானும் சீனி என்கிற சீனிவாசனும் பொதுவாக சினிமாவுக்குப் போவதுதான் வழக்கம். டிக்கட் வாங்க பணம் இல்லாத சமயங்களில் மட்டும் எங்கள் ஊர் நாற்சந்தியில் சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். அதுவும் அலுத்துவிட்டால் வெற்றிலைத்தோட்டம் வழியாகச் சென்று ஐயனார் கோயிலுக்குப் பின்னால் இருக்கும் ஒற்றையடிப்பாதையில் சிறிது தூரம் நடந்து பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் அரசமரத்தடிக்குப் போய் உட்கார்ந்துவிடுவோம். கைப்பேசியில் பாட்டு ஒலிக்க, அந்த இசையின் தாலாட்டில் லயித்தபடி மல்லாந்து படுத்து வளைந்துவளைந்து போகும் மரக்கிளைகளின் பின்னலையும் வெண்ணீல வானத்தையும் கொசுக்கடியைச் சகித்துக்கொண்டு பார்த்திருப்போம்.
Labels:
shortstory,
அம்ருதா,
சிறுகதை,
நூறாவது படம்
Subscribe to:
Posts (Atom)