சாலையிலிருந்து ஒவ்வொரு படியாக ஏறி கடையை நோக்கி வந்த சிறுமி முயல் உருவத்தில் நின்றிருந்த மகாதேவனைப் பார்த்துவிட்டு நின்றாள். ஒவ்வொரு படியையும் கடக்கும் போது அவள் சொல்லிக்கொண்டு வந்த “ஜேக் அண்ட் ஜில் வெண்ட் அப் ட் த ஹில்” பாட்டு சட்டென்று நின்றது, அதே கணத்தில் அவள் முன்னால் முயலைப்போல தாவி “வெல்கம் டு மங்களா டெக்ஸ்டைல்ஸ்” என்று மகாதேவன் சொன்னதும் அச்சத்துடன் ஒரு அடி பின்வாங்கி, பின்னால் வந்துகொண்டிருந்த தன் அப்பாவின் கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டாள். மெல்ல மெல்ல ஆச்சரியமும் புன்னகையும் அவள் முகத்தில் படிந்தன. “அப்பா, இந்த முயல்குட்டி பேசுதுப்பா” என்று தன் அப்பாவின் காலோடு ஒட்டிக்கொண்டாள்.