ஒருபொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடியும் அல்ல
பல என்னும் திருக்குறளில் தொனிக்கும் ஆற்றாமையையும் துயரத்தையும் நாம் புரிந்துகொள்ள
முயற்சி செய்யவேண்டும். வாழ்க்கையை அழகுறவும்
பயனுறவும் வாழ்வது எப்படி என்று தெரியாதவர்களுக்கு பல கோடி விஷயங்கள் முக்கியமானவையாகப்
படுகின்றன. அவற்றில் ஒன்றுகூட நிலையானதல்ல
என்ற உண்மையைப் புரிந்துகொள்ள இயலாத அறியாமையால், கோடி கோடியென்று எப்போதும் அலைந்துகொண்டே
இருக்கிறது நம் மனம். இங்கே கோடி என்பது செல்வம்
மட்டுமல்ல. பட்டம், பதவி, வீண்பெருமை, சாதிப்பித்து,
இனப்பித்து, மதப்பித்து, மொழிப்பித்து, குடும்பப்பெருமைப்பித்து, அகங்காரப்பித்து,
அதிகாரப்பித்து என ஏராளமானவை இந்தக் கோடிக்குள் அடக்கம். நிலையற்ற ஒன்றுக்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவத்தை
நிலையான வாழ்வின் அழகுக்குக் கொடுfப்பதற்கு நம் மனம் தயக்கம் காட்டுகிறது.
அழகான வாழ்வு என்பது அன்பையும் கருணையும் அடிப்படையாகக்
கொண்டது. ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கருதாதது. ஊர்நடுவே குலைகுலையாக பழங்கள் கனிந்து தொங்க பழுத்து
நிற்கும் மரத்தைப்போல எல்லாருக்கும் தன் அன்பை வழங்கி உயர்ந்து நிற்பது. ஈத்துவக்கும் இன்பத்தில் திளைத்திருப்பது.
பிரமிளின் முக்கியக் கவிதையில் ஒன்று முடிச்சுகள். நிலையான வாழ்வின் அழகும் நிலையற்ற பெருமையால் தூண்டப்பட்டு
செயலாற்றுபவர்களின் குரூரமும் இக்காட்சியில் ஒருசேரக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீரலையில் மிதக்கும் நிலவின் பிம்பத்தோடு தொடங்குகிறது
இக்கவிதை. இன்னொரு நிலவோ என்று
வியந்து நிற்கிற அளவுக்கு நீரலையில் சுடர்விட்டு வசீகரிக்கிறது நிலவின் பிம்பம். நிலா தன் ஒளியமுதத்தை பூமியெங்கும் வாரியிறைக்கிறது. தன் ஒளியையே மல்லிகைப்பூவாகக் கொண்டுவந்து ஓட்டைக்குடிசைக்குள்
'நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடிவா' என்னும் பாட்டைப் பாடிச் சிரிக்கும் குழந்தையின்
முன்னிலையிலும் தாயின் முன்னிலையிலும் பொழிகிறது. நிலவின் பால்வெளிச்சம் குடிசைக்குள்
எங்கெங்கும் நிறைந்து தளும்புகிறது. இதுவரைக்கும்
நிலவின் வனப்பையும் அதன் கருணை மிகுந்த செயலையும் முன்வைத்த கவிதை இன்னொரு காட்சியையும்
தெடர்ந்து முன்வைக்கிறது.
கடவுள் மிகப்பெரிய கலைஞன். அவனால் உருவானவர்கள்
மனிதர்கள். அது ஒரு கட்டம். தொடர்ந்து வரும் கட்டத்தில் தன்னை உருவாக்கிய கடவுளுக்கு
முகம்கொடுத்து சிலை வடித்துப் பார்க்கிறார்கள் மனிதர்கள். கற்பனையும் கலையுள்ளத்தாலும் வடிக்கப்பட்ட சிலை,
வழிபாட்டுக்குரிய தெய்வமாக கருவறைக்குள் செல்லும் கணத்தில் சிலை வடித்தவனையே விலக்கிவைக்கின்றன
வழிபாட்டு விதிகள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்னும் பார்வை மறந்துபோகிறது. வேறுபாடுகள்
மிகமுக்கியமான ஒன்றாக குறுக்கில் நின்று விலக்கிவைக்கிறது. எனினும் சோர்வுறாத மனத்தோடு மீண்டும்மீண்டும் சிலைகளை
வடிக்கிறது அந்தக் கூட்டம்.
கலை தெய்வமாக ஏற்கப்படுகிறது. மறுகணத்திலேயே கலைஞனை விலக்கிவைக்கிறது, ஓயாமல்
வேதமோதி வழிபடும் கூட்டம். வாழ்வது என்றால் என்னதென அறியாமல் , எதற்தெற்கோ முக்கியத்துவம்
அளித்து வாழ்கிறது அக்கூட்டம். கிணறு, குளம்,
ஏரி, குட்டை, கடல், குடிசை, மாளiகை, தெரு, சேறு எங்கெங்கும் தன் ஒளியை வள்ளலென வாரி
வழங்குகிற நிலவை ஒருபக்கமாகவும் வேறுபாடு காட்டி ஒரு பிரிவு மனிதர்களை விலக்கிவைக்கும்
மறுபிரிவு மனிதர்களின் அகங்காரத்தை இன்னொரு பக்கமாகவும், சித்தரிக்கப்படும் கவிதைக்
காட்சியை உள்வாங்கிக்கொண்ட கணத்தில் கவிதையின் திசையை நம்மால் உணர முடிகிறது. இயற்கையின் நடவடிக்கைகள் எவ்விதமான வேறுபாட்டையும்
பாராட்டாமல் அமைகின்றன. மனிதமனமோ ஏராளமான முடிச்சுகளால்
சிக்கலாகி, கோணல்மாணலாகி, குரூரமாகி சிறுத்துப் போயிருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் கூட மனிதர்கள்மீது இயற்கையின்
கருணை குயைவில்லை. சாக்கடையாக இருந்தாலும்
சரி, சமுத்திரமாக இருந்தாலும் சரி, இரண்டுக்கும்
தன் ஒளியை சமஅளவிலேயே வழங்குகிறது. நிலவொளியை
ஏற்று இரண்டுமே நிலையான அழகைப் பெறுகின்றன.
கிட்டத்தட்ட ஒரு ஜென் கவிதைபோல காணப்படுகிற கவிதையின்
முடிவுரை வரிகள் திரும்பத்திரும்ப அசைபோடத்தக்கவை. சாக்கடைகளையும் சமுத்திரத்தையும்
ஒன்றாக கருதிப் பார்க்கும் நிலவின் கருணையும் தாய்மையும் முக்கியமான குணங்கள். நிலவுமட்டுமல்ல,
சூரியன், காற்று, செடிகள், கொடிகள், மரங்கள் என எல்லாமே தாய்மையும் கருணையும் நிறைந்தவை.
தன் ஒவ்வொரு செயல்வழியாகவும் அது தன் தாய்மையை முன்வைத்தபடியே இருக்கிறது. அது கற்பிக்கும் பாடத்தை நாம்தான் அறிந்துகொள்ளத்
தவறிவிடுகிறோம். அந்தப் பாடத்தை அறிந்துகொண்டு
நம் மனத்தையும் தாய்மையால் நிரப்பிக்கொள்ளும்போது, நம் வாழ்வு அழகுமிகுந்ததாக இருக்கிறது. நம் அறியாமையின் விளைவாக அந்தப் பாடத்தைப் புறக்கணிக்கும்போது
நம் மனம் முடிச்சுகளற்று சிக்கல்களும் கொண்டதாக மாறிவிடுகிறது.
*
முடிச்சுகள்
பிரமிள்
கீழே நிலவு
நீரலையில்
சிதறும் சித்தம்
சேரக் குவிகிறது
மேலே நிலவு
மலைமேல் நிலா ஏறி
மழலைக்குப் பூக்கொண்டு
நில்லாமல் ஓடிவரும்
குடிசைக்குள் சிதறும்
கூரைப் பொத்தல் வழி
மல்லிகை ஒளி
மண்ணைப் பிடித்தான் கடவுள்
மனிதனாயிற்று ஆகி
அது என்ன உளிச்சத்தம்?
கல்லைச் செதுக்கிச்செதுக்கி
கடவுளைப் பிடிக்கிறது
மண்
ஜாதீயம்தான் வாய்ஓதும்
நாளாந்த வேதம்
அப்பப்போ வாய்
கொப்பளித்துச் சாக்கடையில்
துப்பும் எச்சில்
வேதாந்த வாயலம்பல்
சாக்கடைக்கும் சமுத்திரத்துக்கும்
சேர்ந்தாற்போல் சாந்நித்யம்
நிலவொளியில்
*
நவீன தமிழ்க்கவிதையின் முக்கியத் தூண்களiல் ஒருவராக
போற்றத்தக்கவர் பிரமிள். எழுத்து பத்திரிகையின்
வழியாக தமிழுலகுக்கு அறிமுகமாகி ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து
குன்றாத படைப்பாற்றலுடன் இயங்கியவர். வரிகளிடையே உள்சரடாக மௌனமாக ஒலிக்கும் தாளக்கட்டும்
அழகான சொற்செட்டும் வெவ்வேறு உலகுக்கு வாசகனைச் செலுத்தும் படிம அழகும் நிறைந்தவை இவருடைய
கவிதைகள். கவிதை, கதை, கட்டுரை என எல்லாத் தளங்களிலும் தீவிரமாக இறுதிவரையில் இயங்கியவர்.