எங்கள் கிராமத்துக்கு நுழைவாயிலாக இருந்த கிராமணியாரின் உணவு விடுதி ஒருபோதும் மறக்கமுடியாத சித்திரம். ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே அந்தக் கடையைத் திறந்துவிடுவார்கள். இட்லிகளும் பூரிகளும் கொண்ட அகலத்தட்டுகளை ஒவ்வொன்றாகக் கொண்டுவந்து பலகார அடுக்குகளில் வைப்பார்கள். திருநீறு துலங்க கடைக்குள் நுழையும் பெரிய கிராமணி கல்லாப்பெட்டிக்கு மேலிருக்கும் தெய்வப்படங்களை தொட்டு வணங்கிவிட்டு நாலைந்து இட்லிகளை துண்டுதுண்டாகக் கிள்ளி ஒரு தட்டில் நிரப்பிக்கொண்டு வாசலுக்குச் செல்வார்.
ஒவ்வொரு கையாக அள்ளிஅள்ளி "கா...கா..." என்று அழைத்தபடி இட்லித்துண்டுகளை கீழே வீசுவார். சிதறிவிழும் துண்டுகள் தரையைத் தொடும் நேரத்துக்கு எதிரிலிருந்த மகிழமரத்திலிருந்தும் தூங்குமூஞ்சி மரங்களிலிருந்தும் கூட்டம்கூட்டமாக காகங்கள் இறங்கிவந்துவிடும். இட்லித் துண்டுகளை அவை கொத்திக்கொத்தி எடுக்கும் அழகைப் பார்த்தபடி கிராமணியார் இன்னொரு கை அள்ளி வீசுவார். காக்கைகள் பசியாறிச் சென்றபிறகுதான் வியாபாரம் தொடங்கும். காலைத்தேநீர் அருந்தச் செல்லும் நாங்கள் தினந்தோறும் பார்க்கிற காட்சி அது. மறக்கமுடியாத இன்னொரு சித்திரம் அரிசி நிரம்பிய முறத்தோடு வாசல் கதவருகே எங்கள் அம்மா உட்கார்ந்திருக்கும் சித்திரம். வெளிச்சம் வேண்டி வாசலில் அமரும் அம்மா அரிசியில் கலந்திருக்கும் நெல்களையும் பதர்களையும் ஒவ்வொன்றாக தேடியெடுத்து வாசலில் வீசுவாள். சிறிது நேரத்தில் எங்கிருந்தோ ஒரு கோழிப்பட்டாளம் வந்துவிடும். அவள் வீசும் நெல்மணியை அவை ஓடிஓடிக் கொத்தியெடுத்துத் தின்னும். சட்டென ஏதோ ஒரு வேகத்தில் ஒரு கை அரிசியை அள்ளி வீசுவாள். கோழிகள் ஆரஅமர எல்லாவற்றையும் கொத்தியெடுக்கும். திரைப்படத்தில் கண்ட காட்சியொன்றும் இப்போது நினைவுக்கு வருகிறது. மஜித் மஜிதியின் ஈரான் திரைப்படம் அது. ஆப்கானிஸ்தான் அகதிகள் வேலை செய்கிற ஒரு கட்டடம் இடம்பெறும் காட்சி. ஆண்வேடத்தில் இருக்கும் பெண்ணொருத்தி எஞ்சிய உணவுப்பொருட்களை கட்டடத்தின் மேல்தளத்தில் அமர்ந்தபடி தன்னைச் சுற்றி கூட்டமாகக் கூடியிருக்கும் புறாக்கள் தின்ன அள்ளியள்ளி வீசுவாள். காகமோ, கோழியோ, புறாவோ, அவை கூட்டம்கூட்டமாக பறப்பதையும் இரையெடுப்பதையும் பார்ப்பது பரவசமளிக்கும் காட்சி. உயரே, உயரே என தனிமையில் பறந்து வட்டமடிக்கிற ஒரு சில பறவைகள்கூட சிறிது நேரத்தில் தரையிறங்கி கூட்டத்தில் இணைந்துகொள்வதைக் கண்டிருக்கிறேன்.
விதிவிலக்காக தனிமையில் வாழும் பறவைகள் இருக்கலாம். சார்வாகன் தன்னுடைய ஒரு சிறுகதையில் இணையைப் பறிகொடுத்த பறவையொன்று சிறுகச்சிறுக உயிர்துறக்கும் நிலையைச் சித்தரித்திருக்கிறார். ஆனால் பொதுவாக பறவைகள் தனிமையில் இருப்பதில்லை. அவை தம் குரலால் தமது இருப்பை அறிவித்தபடியும் அருகில் வரும்படி இணையை அழைத்தபடியும் ஏற்ற இறக்கத்துடன் தம் எண்ணங்களை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்தியபடியும் இருக்கின்றன.
பறவை என்பதே சுதந்திரத்தின் அடையாளம். "விட்டு விடுதலையாகி பறப்பாய் ஒரு சிட்டுக்குருவியைப்போலே" என்னும் பாரதியாரின் வரியை நாம் எப்படி மறக்கமுடியும்? சுதந்திரமாக இருப்பதற்கு அடிப்படைத் தேவை ஒரு சிட்டுக்குருவியைப்போல வாழ்வதுதான். பாரமில்லாத வாழ்வு. எந்த மரத்திலும் தன்னுடைய கூட்டைக் கட்டிக்கொள்ளமுடியும் என்கிற துணிச்சல் மிகுந்த வாழ்வு. எந்த இழப்பையும் பெரிதென எண்ணித் துயரில் மூழ்காத வாழ்வு. எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் தனக்குத்தானே விதித்து அகப்பட்டுக்கொள்ளாத எளிய வாழ்வு. அந்த எளிமையைத் துறக்கும் கணத்தில் மனித வாழ்வு அடிமை வாழ்வாக மாறிப் போகிறது. சாதி, மதம், மொழி, இனம், செல்வம், அந்தஸ்து, கல்வி, பதவி என எண்ணற்ற விலங்குகளை நாமே ஆசைஆசையாக எடுத்து நமது கால்களில் பூட்டிக்கொள்கிறோம். நகரக்கூட முடியாத அளவுக்கு அந்த விலங்குகள் பாரமாக அழுத்தும் நிலையில் பறப்பதற்குக் கனவு கண்டு குமையும் உள்ளமும் கொண்டவர்களாக நாம் இருக்கிறோம் என்பது விசித்திரமான முரண். நமக்கு ஒரே நேரத்தில் சுதந்திரமும் தேவையாக இருக்கிறது. விலங்குகளும் தேவையாக இருக்கிறது. சுதந்திரத்தின் இன்பத்தையும் விலங்குகளின் பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் துய்க்க விரும்புகிறது நம் மனம். பறவைகளோ எல்லாத் தருணங்களிலும் சுதந்திரத்தைமட்டுமே நாடுபவை. பறவையாக முடியாத மானுடப்பறவை நாம்.
பறவையாக மாற இயலாமையின் வலியை ஒருவித எள்ளலோடு சித்தரிக்கும் காட்சியை திரிசடையின் கவிதை முன்வைக்கிறது. பனியும் குளிரும் இக்கவிதை முழுதும் அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை கவனிக்கவேண்டும். பேச்சுக்காகவேணும் ஒரு துணை அவசியப்படும் தருணம் இது. ஆனால் எதோ ஒரு காரணத்தை முன்னிட்டு தனிமையில் வாழும் ஒரு மனிதன் இக்கவிதையில் இடம்பெறுகிறான். தனிமையில் காரோட்டிச் செல்லும் தருணத்தில் அவன் ஒரு மரத்தைப் பார்க்கிறான். பனிபெய்து விறைத்து உருமாறிய கட்டாந்தரையில் நின்றிருக்கும் கருகிய கட்டைமரம். அம்மரத்தின் உச்சியில் நடுங்கும் குளிரில் ஒரு காகம் அமர்ந்திருக்கிறது. அதன் தனிமை ஒருவித வருத்தத்தை அவனுக்கு அளிக்கிறது. குரலெதுவும் எழுப்பாமல், அக்கம்பக்கம் பாராமல் அமர்ந்திருக்கும் அக்காகத்தின் தோற்றம் அவனுக்கு தன்னையே ஒரு கண்ணாடியில் பார்த்துக்கொள்வதுபோலத் தோன்றுகிறது. தன் தனிமைத்துயரத்தை அக்காகத்தின் மீதேற்றிப் பார்க்கிறான் அவன். அல்லது காகத்தின் தனிமையைத் தன்னுடைய தனிமையோடு இணைத்து உணர்கிறான் அவன். தனக்கு வாய்த்துவிட்ட தனிமைச்சாபம் காகத்துக்கும் வாய்த்துவிட்டதை நினைத்து சற்றே வருத்தம் எழுகிறது அவனுக்குள். பிறகு, மெதுவாக தானும் அதுவும் ஓர் இனம் என்று தானாகவே ஒரு சித்திரத்தை எழுப்பி அமைதியடைகிறான். தன் தனிமையின் சோகத்தை வெல்ல, இன்னொரு தனிமைப்பறவையைக் கண்டுகொண்டதில் ஆறுதலாகவும் இருக்கிறது. அதே கணத்தில் எங்கிருந்தோ சட்டென பறந்துவந்து, தனிமைக்காகத்தின் பக்கத்தில் வந்து உட்கார்கிறது இன்னொரு காகம். அக்கணம் வரைக்கும் அவன் கொண்டிருந்த ஆறுதல் சுக்குநூறாக உடைகிறது. காகத்தின் தனிமை துணையின் வருகைக்கான காத்திருப்பு என்பதை அவன் மனம் தாமதமாக உணர்கிறது. தன் தனிமை எதற்காக என்னும் கேள்விக்கு அவனால் விடையைக் கண்டறிய முடியவில்லை. அவன் துணையை இழந்தவனா அல்லது துணையைத் தேட இயலாதவனா என்னும் குறிப்பு கவிதையில் இல்லை. எதுவாக இருந்தாலும், அதற்கான தடைகளை அவனே உருவாக்கிக்கொண்டவன் என்பதே உண்மை.
*
ஜோடிக்காகம்
திரிசடை
பனிபெய்து விறைத்து
உருமாறின கட்டாந்தரை
அதன்மேல் நின்ற
காய்ந்த கட்டைமரத்தை
காரில் போகும் நான் கண்டேன்
மரத்தின் உச்சியில்
நடுங்கும் குளிரில்
கரையாமல் அமர்ந்திருக்கும்
காகம் ஒன்று
கீழே குளிரால் காய்ந்த மண்
மேலோ கார் கொண்ட வானம்
கருகிய கட்டை மரத்தில்
தனியாக இருந்த நீ-
என்னுள்ளத்தின் தனிமையின்
உருவமாக உணர்ச்சி பொங்க,
நீயும் நானும் காணும் யாவும்
தனிமை மட்டுமே என்று
நினைவு சொல்ல
எங்கிருந்தோ பறந்து வந்து
உன்னைப் பார்த்த வண்ணம்
பக்கத்தில் அமர்ந்தது வேறொரு காகம்
மனிதன் மருட்சியை
எள்ளி நகைத்தது
மரத்தின் மேலிருந்த ஜோடிக் காகம்
*
"பனியால் பட்ட பத்துமரங்கள்" என்னும் தொகுப்பின்வழியாக தமிழ்க்கவிதையுலகத்தில் அழுத்தமானதடம் பதித்தவர் திரிசடை. புறக்காட்சிகளையும் மானுட அகஉலகத்தையும் பொருத்தமாக இணைத்துக் கவனிக்கும் இவருடைய கவிதை உலகம் வாசகர்களுக்கு ஈர்ப்பை வழங்கக்கூடியது. இவர் கவிஞர் நகுலனுடைய சகோதரியாவார்.