Home

Tuesday, 18 April 2017

அசோகமித்திரன் : என்றென்றும் வாழும் கலைஞன்



ல்லூரியில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்திருந்த நேரம். ஒரு ஞாயிறு அன்று காலை நேரத்தில் எங்கள் வீட்டருகே இருந்த நூலகத்தில் செய்தித்தாள் படிப்பதற்காகச் சென்றிருந்தேன். ஒரு மணி நேரத்தில் செய்தித்தாட்களையும் புதிய வார இதழ்களையும் படித்துவிட்டு, என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்த மேசைகள் மீது பார்வையைப் படரவிட்டேன். அங்கிருந்த நூலகர் எனக்கு மிகவும் பழக்கமானவர். ஒரு பத்து நிமிடம் தனக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்திருக்கும்படி சொல்லிவிட்டு தேநீர் அருந்தச் சென்றார். அந்த நேரத்தில் யாரேனும் வாசகர்கள் வந்துவிட்டால், அவர்களுடைய கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்களைச் சொல்லி அவர் வரும்வரைக்கும் அப்படியே உரையாடலை இழுக்கவேண்டும். அதுதான் என் வேலை.


ஒரு நடுவயதுக்காரர் நெருங்கிவந்து “நூலகர் இல்லையா?” என்று கேட்டார். “இதோ வந்துடுவார். கடைக்கு போயிருகாரு. உட்காருங்க” என்று அவருக்கு இருக்கையைக் காட்டினேன். அவர் கையில் இரண்டு புத்தகங்கள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நானாகவே “படிச்சிட்டீங்களா சார்? மாத்தணுமா?” என்று பேச்சை வளர்ப்பதற்காகக் கேட்டேன். அவர் புன்னகையோடு தலையசைத்தார். அவரிடமிருந்த புத்தகங்களை கைநீட்டி வாங்கி புத்தத்தின் தலைப்பை மனத்துக்குள்ளேயே படித்தேன். ’வாழ்விலே ஒரு முறை’. இரண்டுமூன்று முறை எனக்குள் அதைச் சொல்லிப் பார்த்தேன். தலைப்புக்குக் கீழே அசோகமித்திரன் என்று இருந்ததையும் வாசித்தேன். உரையாடலைத் தொடரும் வகையில் “நல்லா இருக்குதா சார்?” என்று கேட்டேன். “ரொம்ப நல்லா இருக்குது. தெனமும் நம்ம பார்வையில படக்கூடிய விஷயங்கள்தான். ஆனால் அவர் எழுதியிருக்கறத பார்க்கும்போதுதான் அடடா இப்படியெல்லாம் நாம கவனிக்கலையேன்னு தோணுது” என்றார். பிறகு அவராகவே  ”நீ சின்ன பையனா இருக்கியே, படிச்சா உனக்கு புரியாதுன்னு நெனைக்கறேன்” என்று சிரித்தார். அந்தக் கடைசி வார்த்தை என்னைச் சீண்டுவதுபோல இருந்தது. “அது எப்படி புரியாம போவும், புரியும் சார்” என்று பதில் சொன்னேன். அதற்குள் நூலகர் வந்துவிட்டார். வந்த வேகத்தில் பேரேட்டைத் திருப்பி புத்தகங்கள் வரவைப் பதிவு செய்துகொண்டு “உள்ள போய் புதுசா எடுத்துக்குங்க சார்” என்றார்.  பிறகு என் பக்கமாகத் திரும்பி “அவருகிட்ட என்னப்பா பேச்சு? கமிஷனர் ஆபீஸ் சூப்பிரன்டண்ட் அவரு, தெரியுமா?” என்று அடங்கிய குரலில் சொன்னார். போன வேகத்தில் கையில் இரு புத்தகங்களோடு அவர் வெளியே வந்தார். அவற்றைப் பதிவு செய்து கொடுத்ததும் வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

மேசையின் மீதே வைக்கப்பட்டிருந்த அசோகமித்திரனின் புத்தகத்தை உடனே எடுத்து நான் கையில் வைத்துக்கொண்டேன். பக்கங்களை மெதுவாகப் புரட்டினேன். நிறைய சிறுகதைகள் இருந்தன. புரட்டிய வேகத்தில் ரிக்‌ஷா என்னும் தலைப்பைப் பார்த்துவிட்டு படிக்கத் தொடங்கினேன். மிகச்சிறிய கதை. ஒரே மூச்சில் படித்துவிட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. இப்படிக்கூட கதை எழுத முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது முகம் மலர்ந்ததைப் பார்த்துவிட்டு “என்ன, என்ன?” என்று கேட்டார் நூலகர். நான் அவரிடம் அக்கதையைக் காட்டி படிக்கும்படி சொன்னேன். இரண்டு மூன்று நிமிடங்களில் படிக்கக்கூடிய கதைதான். அவரும் படித்துவிட்டு புன்னகைத்தார். எனக்கு அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. ஞாயிறு அன்று அரைநாள்தான் நூலகம் என்பதால் உணவு இடைவேளை சமயத்தில் அவர் எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு புறப்படுவதற்கு முன்னால் “நான் அந்தப் புத்தகத்தை எடுத்தும்போயி படிச்சிட்டு தரட்டுமா?” என்று கேட்டேன். அப்போது நான் உறுப்பினர் இல்லை. ஆனால் எங்கள் நட்பின் அடையாளமாக புத்தகம் எடுக்க அவர் என்னை அனுமதித்து வந்தார். சம்மதத்துக்கு அடையாளமாக அவர்  தலையசைத்ததும் அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

சாப்பாட்டுக்குப் பிறகு மறுபடியும் அந்தக் கதையைப் படித்தேன். படிக்கப்படிக்க அந்தக் கதையின் சம்பவம் என் மனத்துக்குள் ஒரு நாடகக்காட்சி போல விரிவடைந்தது. ஒரு சிறுவன். அவன் அப்பா. அம்மா. மூன்று பேர்தான் கதைப்பாத்திரங்கள். சிறுவன் ரிக்‌ஷா என்னும் சொல்லை ரிஷ்கா என்று மாற்றி உச்சரிப்பதை தற்செயலாக அவன் அப்பா கண்டுபிடிக்கிறார். திருத்த முயற்சி செய்த பிறகும் அவன் நாக்கில் அந்தப் பிழையான சொல்லே எழுகிறது. அவன் அப்பா மறுபடியும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி ஒன்றிணைத்துச் சொல்லவைக்க முயற்சி செய்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. அத்தருணத்தில் காய்கறி வாங்கச் சென்ற மனைவி வீட்டுக்குத் திரும்பி வருகிறாள். வந்த பிறகுதான் அவளுக்கு தன் குடையை மறந்து வைத்துவிட்டு திரும்பியது தெரியவருகிறது. மறுபடியும் கடைவரைக்கும் நடந்து செல்லவேண்டுமே என்னும் அலுப்பு அவளுக்கு. அருகில் நின்றிருந்த கணவன் “ரிஷ்காவில போய் வந்திடேன்” என்று சொல்கிறான். மனைவி குழப்பத்துடன் ஒருமாதிரி அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு “என்ன சொன்னீர்கள்?” என்று கேட்கிறாள். அக்கணத்தில் அவனையறியாமலேயே அவன் மனம் அந்தப் பிசகைத் திருத்திக்கொள்கிறது. “ரிக்‌ஷாவில போய் வந்திடேன்னு சொன்னேன்” என்கிறான். “என் காதுல என்னமோ ரிஷ்கான்னு சொன்னமாதிரி விழுந்தது” என்றபடி அவள் செல்கிறாள்.

அக்கணத்தில் அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதை எழுதிய அசோகமித்திரனையும் பிடித்துவிட்டது. அன்றுமுதல் எனக்குப் பிடித்த எழுத்தாளராக அவரை நினைக்கத் தொடங்கினேன். அப்போது படிமம், உருவகம், உட்பொருள் ஆகியவற்றைப்பற்றியெல்லாம் பெரிய அளவில் தெளிவெதுவும் இல்லாத கல்லூரி மாணவன் நான். படிக்கச் சுவையாக இருப்பவை அனைத்தையும் தேடித்தேடிப் படிக்கும் பழக்கம் கொண்டவன்.  ரிக்‌ஷா சிறுகதையை அப்படியே மனத்தில் பதிய வைத்துக்கொண்டேன். இன்றும் என் பிரியத்துக்குரிய சிறுகதை இது. படிமங்களும் உருவகங்களும் கூடுதலான விளக்கங்களோடு கடந்து சென்று தொடும் புள்ளியை, ரிக்‌ஷா மிக எளிமையாகச் சென்று தொடுவதை இப்போது என்னால் கண்டடைய முடிகிறது. சிறுவனுக்கு மட்டுமா வாய்ப்பிசகு வருகிறது, பெரியவர்களுக்கும் வருகிறது. பிசகு ஒன்றும் பெரிய விஷயமேயில்லை. அதுவும் இயற்கையானதுதான். வாழ்க்கையில் சொல்லில் மட்டுமா பிசகு நேர்கிறது? பேச்சு, குணம், பணவிவகாரம், நடத்தை என எல்லாக் களங்களிலும் பிசகுகள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாப் பிசகுகளையும் உள்ளடக்கியதுதானே வாழ்க்கை. இப்படி யோசிக்க யோசிக்க ஒரு புகாருமில்லாத அனுபவமாக வாழ்க்கை  அமைந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

ஒரு கோணத்தில் அசோகமித்திரன் பிற்காலத்தில் எழுதிய இருநூற்றி ஐம்பது சொச்ச கதைகளுக்குமான ஒரு பொது அடித்தளம் அவர் எழுதத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே உருவாகிவிட்டடதை இப்போது உணர முடிகிறது. எவ்விதமான புகாருமில்லாமலேயே இந்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க முடியும் என்பதுதான் அவர் குரல். அதன் பொருள், இந்த வாழ்வு புகார் சொல்ல முடியாத அளவு கண்ணியமாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கிறது என்பதல்ல. முட்களால் நிறைந்த பாதைதான் அது. ஆனால் ஒரு சாமானிய மனிதனுக்கு நினைப்பதற்கும் ஆற்றுவதற்கும் ஏராளமான பொறுப்புகளும் கடமைகளும் எல்லாத் தருணங்களிலும் காத்திருக்கின்றன.  முட்களைப் பற்றி யோசிக்கக்கூட பொழுதில்லாமல் தாவித்தாவி ஓடிக்கொண்டே இருப்பவன். புகார் எனச் சொல்வதற்கு கோடிக்கணக்கான விஷயங்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் அவனுடைய சொந்த வாழ்க்கை அவற்றைவிட பொருட்படுத்தத்தக்க சுமைகளோடு அழுத்திக்கொண்டிருப்பதால் அந்தச் சாமானியன் குரலெழுப்பாமல் தன்னைத் தானே அமைதிப்படுத்தியபடி ஓடிக்கொண்டே இருக்கிறான்.

அந்த வாரம் முழுக்க அசோகமித்திரனுடைய சிறுகதைகளை மீண்டும் மீண்டும் படித்தபடி இருந்தேன். பல சிறுகதைகள் பால்ய காலச் சம்பவங்களின் விவரிப்பைக் கொண்டிருந்ததால், அவற்றுடன் மிக எளிதாக ஒன்றிவிட்டேன். அதற்குப் பிறகு அவருடைய படைப்பை எந்தப் பத்திரிகையில் பார்க்க நேர்ந்தாலும், அதைப் படிக்காமல் கடந்துபோனது கிடையாது.
*
தீபம் இதழில் என்னுடைய முதல் சிறுகதை வெளிவந்தது. அடுத்த சிறுகதை அதே ஆண்டில் கணையாழியில் வெளிவந்தது. அந்தச் சிறுகதை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விவரத்தைத் தாங்கி வந்த அஞ்சலட்டையை அசோகமித்திரன் எழுதியிருந்தார். அன்று முழுக்க அவர் எழுதிய நான்கு வரிகளை பித்துப் பிடித்ததுபோல மீண்டும் மீண்டும் படித்தபடி இருந்தேன். என் இளமையில் நான் விரும்பிப் படித்த எழுத்தாளர் எனக்கு எழுதிய முதல் கடிதம். இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கணையாழியில் நான் எழுதிய ‘முள்’ என்னும் சிறுகதைக்கு இலக்கியச் சிந்தனை வழங்கிய சிறந்த சிறுகதைக்கான விருது கிடைத்தது. அதையொட்டி அவர் எனக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த அஞ்சலட்டையையும் ஒரு பாராட்டுப்பத்திரம் போல வெகுகாலம் பாதுகாப்பாக வைத்திருந்தேன். வீடு மாற்றும் சமயத்தில் ஏராளமான கடிதங்களைக் கொண்ட ஒரு பெரிய கோப்பே காணாமல் போய்விட்டது.  ’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்னும் தலைப்பில் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதி 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. நான் அத்தொகுதியை அசோகமித்திரனுக்கு அனுப்பிவைத்திருந்தேன். அடுத்த மாதத்தில் கணையாழியில் நாலைந்து வரிகள் கொண்ட ஒரு சிறிய குறிப்பை அசோகமித்திரன் . எழுதியிருந்தார். அந்தத் தொகுதிக்குக் கிடைத்த முதல்  அங்கீகாரம் அது.

எப்போதோ ஒருமுறை சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் இலக்கியக்கூட்டமொன்றில் அவரைச் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்டேன். ”ரொம்ப சின்ன வயசா இருக்கிறியேப்பா” என்று தோளை அழுத்திக்கொண்டார். மெலிந்து உயர்ந்த அவருடைய உடல்வாகு எங்கள் பெரியப்பாவின் உடல்வாகைப் போல இருந்தது. ஆனால் அதை அவரிடம் சொல்லவில்லை. அந்த முதல் முறைக்குப் பிறகு ஏராளமான முறைகள் அவரைப் பார்த்ததுண்டு. ஒவ்வொரு முறையும் அந்த முதல் கணத்தில் எங்கள் பெரியப்பாவின் முகம் நினைவில் படர்ந்து கலையும்.

 ”உங்க பேர கேட்கும்போதெல்லாம் முத்து கோர்த்தமாதிரி இருக்கிற உங்க அழகான கையெழுத்துதான் ஞாபகத்துக்கு வருது. கொஞ்சம் கூட வளைவு நெளிவு இல்லாம ஒவ்வொரு வரியும் கோடு போட்ட மாதிரி இருக்கும். படிக்கும்போதே எனக்கு ஆச்சரியமா இருக்கும், இந்த பையன் எப்படி இவ்வளவு கச்சிதமா எழுதறான்னு….”

பாராட்டுணர்வோடு அவர் சொன்ன அந்தச் சொற்கள் இன்னும் நினைவில் உள்ளன.  தொடர்ந்து அவர் என்னிடம் “கார்பன் வச்சி எழுதுவிங்களா?” என்று கேட்டார். “ஆமாம் சார்” என்று தலையசைத்தேன். “அப்படித்தான் வச்சிக்கணும். பத்திரிகை ஆபீஸ்லேருந்து திரும்பி வரும்ன்னு எதிர்பார்க்கக்கூடாது. நாள பின்ன தொகுப்பு போடணும்னா ரொம்ப உதவியா இருக்கும்” என்றார். பிறகு அன்றைய பேச்சு எப்படியோ படிக்கத்தக்க எழுத்தாளர்களுடைய பட்டியலின் திசையில் போய்விட்டது. நான் ராதுகா பப்ளிகேஷனும் சாகித்ய அகாதெமியும் நேஷனல் புக் டிரஸ்டும் வெளியிட்டிருக்கும் புத்தகங்களையும் ஆசிரியர்களையும் பற்றிச் சொல்லத் தொடங்கினேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட பிறகு அவர் மெதுவான குரலில் “வில்லியம் சரோயன்னு ஒரு எழுத்தாளர். நீங்க அவசியம் படியுங்க. உங்களுக்கு ரொம்ப புடிக்கும்” என்றார். தொடர்ந்து ‘தமிழ்லயே கெடைக்குது. க.நா.சு. மொழிபெயர்த்திருக்காரு. நீங்கதான் தேடி கண்டு பிடிக்கணும்” என்றார். அடுத்த ஒரு வருடத்தில் நான் அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். பெங்களூர்த் தமிழ்ச்சங்க நூலகத்தில் கிடைத்தது. ஒரு வாரத்தில் அத்தொகுதியின் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர் ஓர் அஞ்சலட்டையில் தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தி உற்சாகமூட்டி எழுதியிருந்தார். அதற்கடுத்த மாதத்திலேயே பெங்களூரில் பிரீமியர் புக் ஸ்டால் என்னும் பெயரில் புத்தகக்கடை நடத்தி வந்த நண்பரிடம் சொல்லி ‘த ஹம்மிங் பேர்ட் தட் லிவ்விட் த்ரூ விண்டர்’ என்னும் தலைப்பில் வந்திருக்கும் சரோயனின் சிறுகதைத்தொகுதியை வாங்கிப் படித்துவிட்டேன். உடனே அவருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். தன் இளமைக்காலத்தில் அத்தொகுதியை அவர் விரும்பிப் படித்ததாகக் குறிப்பிட்டு பதில் எழுதியிருந்தார்.

1990ஆம் ஆண்டில் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக அவரோடு உரையாடிபடி இருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு சிறுகதைப்பட்டறையை சாகித்திய அகாதெமி தில்லியில் ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்காவிலிருந்து சில எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். இந்திய மொழிகளிலிருந்தும் சில முக்கியமான எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு மொழி சார்பாகவும் ஐந்து இளம் எழுத்தாளர்கள். அவர்களோடு உரையாடுபவர்களாக ஒரு இந்திய எழுத்தாளர். ஒரு அமெரிக்க எழுத்தாளர். எங்கள் குழுவில் திலீப்குமார், கார்த்திகா ராஜ்குமார், லதா ராமகிருஷ்ணன், காவேரி ஆகியோரோடு நானும் இருந்தேன். எங்களுடைய ஒருங்கிணைப்பாளர்கள் அசோகமித்திரன் மற்றும் லெஸ்லி எப்ஸ்டீன். அந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. அசோகமித்திரன் பல சிறுகதைகளை முன்வைத்து அதில் பிரிந்து செல்லும் அல்லது ஒன்றிணையும் தளங்களையும் கோடுகளையும் தமக்கே உரிய எளிய நகைச்சுவை உணர்வோடு சொல்லிக்கொண்டே இருந்தார். அவரோடு திலீப்குமாரும் இணைந்து பல படைப்புகளை முன்வைத்து உரையாடல் வளர்ந்து செல்ல உதவியாக இருந்தார்.

அசோகமித்திரனுடைய எல்லாப் படைப்புகளையும் நான் அந்த நேரத்தில் படித்து முடித்திருந்தேன். தமிழில் அழகிரிசாமியை அடுத்து நான் விரும்பும் எழுத்தாளராக அவர்  இருந்தார். ஒருமுறை அதை நான் அவரிடமே தயங்கித்தயங்கி நேரிடையாகச் சொன்னேன். அவர் ஒரு மெலிதான ஒரு புன்னகையோடு கைவிரல்களை உயர்த்தி மூடிய உதடுகள் மீது ஒருமுறை வைத்து எடுத்துவிட்டு ”அப்படிலாம் தடால்புடால்னு ஸ்டேட்மெண்டா சொல்லக்கூடாது. தப்பு தப்பு” என்றார். ஒரு கணம் கழித்து “நாளபின்ன யாராச்சும் மடக்கி கேள்வி கேக்கும்போது பதில் சொல்லமுடியாம போயிட்டா சங்கடமா இருக்கும்” என்று சிரித்தார். வாய்விட்டு புன்னகைக்கும்படி இருந்தது அவர் சொன்ன தோரணை.

மழை, அம்மாவுக்காக ஒரு நாள், ஐந்நூறு கோப்பைத் தட்டுகள், விமோசனம், பார்வை, பிரயாணம், எலி, புலிக்கலைஞன், நானும் ஜே.ராமகிருஷ்ணராஜுவும் சேர்ந்து எடுத்த படம், பூனை, தந்தைக்காக, விடிவதற்குள், உண்மை வேட்கை, முறைப்பெண், அப்பாவின் சிநேகிதர், குகை ஓவியங்கள், விடிவதற்குள் என எப்போதும் அவர் கதைகளைக்கொண்ட ஒரு பட்டியல் நினைவிலேயே இருக்கும். நண்பர்களிடையே உரையாடும்போது அவருடைய படைப்புகளைப்பற்றி பேசவேண்டிய வாய்ப்பு அமையும்போது, ஏதேனும் ஒரு கதையிலிருந்து என்னால் எளிதில் தொடங்கிவிட முடியும். அந்த அளவுக்கு அவருடைய  படைப்புகள் எனக்குள் கரைந்துபோயிருந்தன.

எண்பதுகளில் கலை இலக்கியம் என்னும் தலைப்பை முன்வைத்து மூன்று நாள் கருத்தரங்கம் ஒன்றை கோ.ராஜாராம், தமிழவன், ஜி.கே.ராமசாமி. ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் போன்ற நண்பர்களைக் கொண்ட பெங்களூர் வாசகர் வட்டமும் மதுரை தமிழ்ப்பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தியது. அதில் ஒரு அமர்வில் தொடக்க உரை நிகழ்த்துவதற்காக அசோகமித்திரன் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்த அறையில் நான் தங்கியிருந்தேன். அந்தக் கருத்தரங்கத்துக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னால்தான் அவர் குங்குமம் இதழில் விடுவிப்பு என்னும் சிறுகதையை எழுதியிருந்தார். மனநிலைகளில் உருவாகும் மாற்றங்களை மிகவும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் படைப்பு அது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அன்று இரவு வெகுநேரம் அந்தக் கதையைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன். அந்தச் சிறை அனுபவத்திலிருந்து அவருடைய உரையாடல் எப்படியோ சிறையிலிருந்து தப்பிப்பவர்களின் கதைகளை நோக்கி நகர்ந்துவிட்டது. முதலில் அவர் ஹென்றி ஷாரியரின் பாபிலோன் (ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் தொடராக வந்த ’பட்டாம்பூச்சி’ நாவல்)  கதையைப்பற்றிச் சொன்னார். பிறகு அலெக்ஸாண்டர் டூமாஸின் பிரபலமான கதையொன்றைப்பற்றி விவரித்தார்.

வேறொரு தருணத்தில் திரிச்சூரில் நடைபெற்ற கலைவிழாவில் அவரும் நானும் அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தோம். கூட்டுக்குடும்பங்களின் சிதைவையும் தனிக்குடும்பங்களின் தோற்றத்தையும் இந்திய நாவல்கள் வழியாகக் கிடைக்கும் சித்திரங்களை முன்வைத்து ஆய்வு செய்யும் நோக்கில் ஒரு பெரிய கருத்தரங்கம் அங்கே ஏற்பாடாகியிருந்தது. தகழி, மகாஸ்வேதா தேவி, அசோகமித்திரன், எம்.டி.வாசுதேவன் நாயர் போன்ற ஆளுமைகள் அமர்ந்திருந்த வரிசையில் நானும் அமர்ந்திருந்த அக்கணங்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அசோகமித்திரன் அன்று பிரேம்சந்த், சரத்சந்திரர் ஆகியோரின் படைப்புகளில் தொடங்கி ஆர்.ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் வரைக்கும் தொட்டு அழகாக புள்ளி வைத்து ஒரு கோடு இழுத்ததுபோல குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைப்பற்றி ஒரு இருபது நிமிட நேரம் உரை நிகழ்த்தினார். கிட்டத்தட்ட அதே சாயலில்தான் நானும் என் உரையை தயார் செய்திருந்தேன். மண்பொம்மை என்னும் பெயரில் வந்திருந்த ஓர் ஒரிய நாவலில் தொடங்கி, சிவராம காரந்தின் நாவல்கள், எம்.டி.வாசுதேவன் நாயரின் அசுரவித்து  வழியாக நிலைகுலைந்து விலகும் குடும்பங்களின் சித்திரங்களைத் தொகுத்து அன்று நான் உரையாடினேன். அந்த ஆங்கில உரையை அவர் மிகவும் விரும்பிக் கேட்டார். அன்று இரவும் நாங்கள் வெகுநேரம் உரையாடினோம். தனக்குத் தெரிந்து சிதறிப் போன பல கூட்டுக்குடும்பங்களின் கதைகளை அவர் தன் நினைவிலிருந்து சொல்லிக்கொண்டே இருந்தார். பெரிய கதைச்சுரங்கம் அவர் என்பதை அக்கணத்தில் எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. “ஞாபகம் இருக்கும்போதே இதயெல்லாம் எழுதி வைக்கணும். எப்போ எழுதப் போறேன்னுதான் தெரியலை” என்றார்.

அடுத்தடுத்து அவர் நாவல்கள் வரும்போதெல்லாம் நான் ஆவலோடு அவற்றை வாங்கிப் படிப்பேன். அவர் ஒருமுறை கூட அந்தக் கருவை மையமாக்கி எழுதவே இல்லை. மறந்திருக்ககூடும் என்று நானும் நினைத்துக்கொண்டேன். ஆனால் இருபதாண்டுகளுக்குப் பிறகு அவருடைய ‘யுத்தங்களுக்கிடையில்’ நாவலைப் படித்தபிறகு என்  எண்ணம் பொய்த்துவிட்டது. முதல் உலகப்போர் நடைபெற்ற காலத்துக்கும் இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற காலத்துக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஒரு பெரிய குடும்பம் அல்லது சில குடும்பங்களின் தொகுதிகளிடையே நிகழ்ந்த உறவு மோதல்கள்தான் நாவலின் களம். முப்பதுகள் மற்றும் நாற்பதுகளின் வாழ்க்கை சிறிதுகூட மிகையில்லாமல் எழுத்தில் கட்டியெழுப்பியிருந்தார்.

அதற்கு அடுத்த ஆண்டில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் பெங்களூருக்கு வந்திருந்தார். சுசித்ரா ஃபில்ம் சொசைட்டி கருத்தரங்க வளாகத்தில் அந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்கக் காலத்தில் அவர் ஆங்கிலத்தில் சிறுகதை எழுத முயற்சி செய்ததையும் அச்சிறுகதை பெங்களூரிலிருந்து வந்த டெக்கன் ஹெரால்ட் ஆங்கில இதழில் பிரசுரமானதையும் நினைவுக்குக் கொண்டு வந்து பார்வையாளர்களிடம் அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். திடீரென நிகழ்ந்த ஒரு மனமாற்றத்தின் காரணமாக ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு முழுக்க முழுக்க தமிழில் எழுதும் எழுத்தாளராகவே வாழ்ந்துவிட்டதாக அன்று சொன்னார். தன் இளமையில் அவர் படித்த புத்தகங்கள், அவருடைய அப்பாவுக்கும் அவருக்கும் இடையிலிருந்த நெருக்கமான உறவு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தமிழ் வாசிப்பில் பழக்குவதற்காக அவர் எடுத்த முயற்சிகள், அவர் பார்த்த திரைப்படங்கள் என ஒரு அரைமணி நேரம் நன்றாக உரையாடினார். கையோடு எடுத்துச் சென்றிருந்த ’யுத்தங்களுக்கிடையில்’ நாவலில் அவரிடம் கையெழுத்தை வாங்கி வைத்துக்கொண்டேன். அந்தப் புத்தகத்தை அவர் ஏதோ புதியதொரு புத்தகத்தைப் புரட்டுவதுபோல ஒருகணம் கையிலேயே வைத்துக்கொண்டு திருப்பித்திருப்பிப் பார்த்தார். பிறகு மெதுவாக, “இத எழுதனது ரொம்ப நல்லதா போச்சி. இத எழுதி முடிச்சதுக்கப்புறம்தான் ஞாபக சக்தியில ஏதோ கோளாறு. எல்லாமே மறந்தமாதிரி போயிட்டது. அன்னைக்கு இத நான் எழுதலைன்னா, எழுத முடியாமயே போயிருக்கும். இப்ப இந்த நாவல்ல இருக்கிற சம்ப்வங்கள் எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்லை” என்றார். சில கணங்களுக்குப் பிறகு, “வயசாயிட்டுதில்லையா? இது எல்லாமே சகஜம்தான்” என்று சிரித்தபடியே புத்தகத்தை என்னிடம் திருப்பித் தந்தார். என்னோடு வந்திருந்த நண்பர்கள் சம்பந்தம், விஜயன் ஆகியோருக்கும் அவர்களுடைய புத்தகங்களில் அசோகமித்திரனிடம் கையெழுத்து வாங்கி அளித்தேன்.
*
1956 ஆம் ஆண்டில் அசோகமித்திரனுடைய முதல் சிறுகதை வெளிவந்தது. 2017 இல் போன மாதம் கூட அவருடைய சிறுகதை வெளிவந்தது. ஏறத்தாழ அறுபது ஆண்டு காலம் அவருடைய தொடர் இயக்கம் மிகமுக்கியமானது. வற்றாத ஊக்கத்தோடு செயல்படும் வகையில் அவர் மனம் கலைநுட்பங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தது. அவருடைய சிறுகதைகளில் வெளிப்படும் மனிதர்கள் மிகமிக எளியவர்கள். பெரும்பாலும் நடுத்தட்டு மனிதர்கள். சின்னச்சின்ன வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டுகிறவர்கள். அவர்கள் தம் தினசரி வாழ்க்கையில் சந்திக்க நேரும் கூர்மையான சம்பவங்களையே அவர் தம் படைப்புகளுக்கான மையங்களாக அமைத்துக்கொள்கிறார். ஆயிரம் பிரச்சினைகளுக்கு நடுவில் அந்த மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் எந்த இடத்திலும் அவர்கள் ஒடுங்கி நின்றுவிடுவதில்லை. வலிகளையும் வேதனைகளையும் புறந்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். தன்னிரக்கத்துக்கு இரையாகாத அந்த மனிதர்கள் வாழ்க்கையை அசோகமித்திரனின் சிறுகதைகள் ஒரு வரலாற்று ஆல்பம் போல தொகுத்து வைத்திருக்கின்றன. அவருடைய சிறுகதைகளில் வெளிப்படும் எளிமை ஒரு சாதாரண பத்திரிகை எழுத்தின் எளிமை அல்ல, ஆழ்ந்த நுட்பத்தின் துணையோடு வெளிப்படும் எளிமை. உத்தி சார்ந்த எந்த நாட்டமும் அவரிடம் தென்பட்டதில்லை. ஆனால் உத்திகள் வழியாகச் சென்றடையத்தக்க தொலைவைவிட அதிக தொலைவை அவருடைய கதைகள் எட்டித் தொடும் ஆற்றம் கொண்டவை. அவருடைய அனைத்துக் கதைகளுமே இரண்டாவது வாசிப்பையும் மூன்றாவது வாசிப்பையும் கோருபவை. அசோகமித்திரனுடைய கதையின் இறுதி வாக்கியத்தைப் படிக்கும் வாசகர்கள் மிக இயல்பாகவே கதையின் முதல் பத்தியைத் திருப்பி மீண்டும் படிக்கத் தொடங்குவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

உலக இலக்கிய அடையாளத்தை நவீன தமிழ் இலக்கியம் பெறும் வகையில் ஆழமும் நுட்பமும் பொருந்திய படைப்புகளை தொடர்ச்சியாக எழுதி வழங்கியவர் அசோகமித்திரன். அந்த அனைத்துப் பெருமைகளையும் ஒருபோதும் சுமக்காமல் ஒதுக்கிவைத்துவிட்டு மிக எளிமையாக அனைவரோடும் பழகியவர். அவருடைய எளிமையைப்பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் புதுவையில் வசிக்கும் என்னுடைய நெருங்கிய நண்பர் சிவக்குமார் தன்னுடைய அனுபவத்தை மீண்டும் மீண்டும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்க ஆண்டில் அவர் ஒரு கருத்தரங்கை புதுச்சேரியில் ஏற்பாடு செய்திருந்தார். கருத்தரங்கம் எளியதொரு சத்திரத்தின் கூடத்தில் நடைபெற்றது. அசோகமித்திரன் மீது அவருக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஓர் ஆர்வத்தில் அவருக்குக் கடிதம் எழுதினார். அவரும் ஒப்புதல் கொடுத்துவிட்டார். கருத்தரங்கம் நிகழவிருந்த அன்று காலையில் அவர் அந்தச் சத்திரத்தைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். நண்பருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. எப்படி எங்கே தங்கவைப்பது என்று தடுமாறிவிட்டார். அசோகமித்திரன் அவரை அமைதிப்படுத்தி அந்தக் கூடத்திலேயே அவரும் அமர்ந்துகொண்டார். மாலையில் தன் உரையை முடித்துக்கொண்டதும் அவரை அழைத்துச் சென்ற சிவக்குமார் உணவு விடுதியொன்றில் சிற்றுண்டி அருந்தச் செய்த பிறகு பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். மிகுந்த தயக்கத்தோடு ஓர் உறையில் இருநூறு ரூபாயை வைத்து அசோகமித்திரனிடம் கொடுத்திருக்கிறார். அவரோ புன்னகை மாறாத முகத்துடன் அதை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். “எனக்கும் உங்க கூட்டத்துல பேசணும்ன்னு ஆசையா இருந்தது. அதான் வந்தேன். பணம்லாம் தேவையில்லை. வேற யாருக்காவது கொடுக்க தேவைப்படலாம். வச்சிக்குங்க” என்று சொல்லிவிட்டு வண்டியேறிப் போய்விட்டார். கருத்தரங்கத்துக்கு வந்திருந்த அனைவரும் பணத்தைப் பெற்றுக்கொள்ள, அதை மறுத்துச் சென்ற ஒரே எழுத்தாளர்  அசோகமித்திரன் மட்டுமே. சிவக்குமார் அந்தச் சம்பவத்தை நேற்று நடைபெற்றதுபோல  ஒவ்வொரு முறையும் சொல்லும்போது உணர்ச்சிவசப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.

அசோகமித்திரன் எளிய உள்ளம் கொண்டவர். பழகுவதற்கு இனியவர். அவர் நம்மைவிட்டு மறைந்தார் என்பதை மனம் நம்ப மறுத்தபடியே இருக்கிறது. 24.03.2017 அன்று நிகழ்ந்த மரணம் அவருடைய பெளதிக இருப்பை மட்டுமே இல்லாமலாக்கிவிட்டது. நம் மொழியிலும் நம் மனத்திலும் உறையும் அவருடைய இருப்புக்கு ஒருபோதும் அழிவே இல்லை. அவருடைய ஒரு சிறுகதையின் தலைப்பைப்போலவே அது அழிவற்றது. என்றென்றும் நம்மிடையே வாழ்ந்தபடி இருக்கும். அசோகமித்திரனுக்கு நம் அஞ்சலிகள்.

(ஏப்ரல் மாத உங்கள் நூலகம் இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை)