கரிகாலன் கட்டிய அரண்மனையும் கோட்டையும்
இன்று இல்லை. ஆனால் அந்த அரசன் கட்டியெழுப்பிய
கல்லணை நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நின்றுகொண்டிருக்கிறது. அதன் வழியாக அவன் நினைவுகளையும் மக்கள் மனம் சுமந்துகொண்டிருக்கிறது. கரிகாலன் மக்கள்மீது கொண்ட அன்புக்கும் அக்கறைக்கும்
சாட்சி அந்த வரலாற்றுச்சின்னம். அன்பில்லாமல்
ஆட்சி செய்யமுடியாது. முறைசெய்து காப்பாற்றும்
மன்னவர் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் என்பது வள்ளுவர் வாக்கு. அத்தகையவன் காட்சிக்கு
எளியவனாக இருப்பான். கடுஞ்சொல் இல்லாதவனாக
இருப்பான். காதுபட தன்னை மற்றவர்கள் இழிவாகப்
பேசினாலும் கூட பொறுத்துக்கொள்ளும் பண்புள்ளவனாகவும் விளங்குவான். இயற்றல், ஈட்டல், காத்தல், காத்ததை வகுத்தல் அனைத்தையும் முறையாகச்
செய்பவனாகவும் அவன் இருப்பான்.
கொடைக்குணம், இரக்கம், செங்கோல் வழுவாமை,
குடியோம்பல் ஆகியவை ஓர் அரசனுக்குரிய அடிப்படை அழகுகள். எல்லாமே வள்ளுவரின் வரையறைகள். அத்தகு அழகுள்ளவன்
அந்தக் கரிகாலன். அவன் முகமறியா இன்றைய தலைமுறைகூட
அவனைப்பற்றி விதந்தோதிப் பேசுவதற்கான காரணம்
குடிமக்களின் பொதுநன்மைக்காக அவன் எடுத்துக்கொண்ட முயற்சி. பொதுநன்மை என்பது மிகப்பெரிய அணைக்கட்டு போன்றவற்றை
கட்டுவது மட்டுமல்ல. ஒரு குருவித்தொட்டி கட்டுவதிலும் சுமைதாங்கிக்கல்லை நட்டுவைப்பதிலும்கூட
உண்டு. அளவும் தோற்றமும் ஒருபோதும் முக்கியமல்ல,
அடிப்படையான கருணை முக்கியம்.
கருணை உள்ளவர்களின் பெயர்கள் தாமாகவே எந்த
முயற்சியுமில்லாமல் காலத்தைக் கடந்து நின்று விடுகிறது. பணமும் பட்டைசோற்றுப் பொட்டலமும் கொடுத்து பொதுக்கூட்டத்தில்
வாழ்க முழக்கமெழுப்ப அழைத்துவரப்படும் கூட்டம் ஒரு பகலுக்குமட்டும் வானதிர முழங்கி
மறைந்துபோகும். ஆனால் அதற்குப் பெயர் செல்வாக்கு
அல்ல. அதிகாரத்தின் மூலம் இந்த பூமியில் நின்று கொண்டிருக்கிற கட்டிடங்கள், பூங்காக்கள்,
நினைவுச்சின்னங்கள் எல்லாவற்றின்மீதும் தன் பெயரைப் பொறித்து மக்களையும் சொல்லவைத்துவிடலாம். ஆனால் அதிகாரம் கைமாறிய கணமே, அந்தச் செல்வாக்கு
அழிந்துபோகும். தியாகிகள். சேவையாளர்கள்.
கருணையாளர்கள். சத்திரங்களையும் ஆலயங்களையும்
கட்டியெழுப்பியவர்களைவிட ஏழைகளின் அகக்கண்களைத் திறக்க கல்வியை வழங்குவதை உயர்வானதாக
நினைத்துச் செயல்பட்டவர்கள் அனைவரும் எந்த
முயற்சியும் இல்லாமலேயே மக்கள் நெஞ்சில் செல்வாக்குடன் வாழ்கிறார்கள். அத்தகையோர் நிற்கும்
இடம் கோயில். பாதம் பட்ட மண் திருநீறு. வாழ்ந்த
இடம் புண்ணித்தலம். நடந்த பாதை புண்ணியப்பாதை.
அவர்கள் உரை புனித மொழி.
ஒரேஒரு பிடி சாணத்தை உருட்டிவைத்து கணபதி
என்று வணங்கும் பழக்கமும் ஒரேஒரு செங்கல்லைக்கூட நிற்கவைத்து சிவலிங்கமாக வணங்கும்
பழக்கமும் நம்மிடம் படிந்திருப்பதற்கான காரண்தை யோசிக்கவேண்டும். நம் பழக்கத்தில் ஊறிப்போகிற
அளவுக்கு வணக்கத்துக்குரிய இவர்கள் யார்? பிற்காலத்தில்
இவர்கள்மீது இறைவன் என்னும் பட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இவர்கள் ஏதோ ஒரு காலத்தில் மக்கள் கூட்டத்தின்
மனம் கவர்ந்த மனிதர்கள். கணங்களாக வாழ்ந்த
மக்களுக்காக தம்மையே வழங்கியவர்கள். சிறிதும்
தம் உயிரைப் பொருட்படுத்தாமல் எல்லாவிதமான இன்னல்களிலிருந்தும் சிக்கல்களிலிருந்தும்
மக்களைக் காப்பாற்றிவர்கள். அவர்களுடைய கருணையே
அவர்களைத் தலைவர்களாக உயர்த்தியிருக்கக்கூடும்.
முதல் தலைமுறையினருக்கு அவர்கள் முகமும் பெயரும் வாழ்வும் தெரிந்திருக்கக்கூடும். அடுத்த தலைமுறையினருக்கு அவர்கள் பெயரும் வாழ்வும்
தெரிந்திருக்கக்கூடும். அடுத்தடுத்த தலைமுறையினர்களுக்கு
அவர்களுடைய வாழ்வுமட்டுமே தெரிந்திருக்கக்கூடும். மெல்லமெல்ல கருணையின் உருவகங்களாக
அவர்கள் மாற்றம் பெற்றிருப்பார்கள். எளியவர்களோடு
நெருக்கமாக இருந்தவர்களை எளிய உருவகத்தின் வழியாக எப்போதும் தம்முடன் இருப்பவர்களாக
மாற்றியிருப்பார்கள் மக்கள். ஒரு கைத்தடி இன்று
காந்தியை நினைவுபடுத்தும் உருவகமாக நிலைபெற்றுவிட்டதுபோல சாண உருண்டையும் கல்லும் பழகிய
பழைய தலைவர்களின் உருவகங்களாக மக்களிடையே நிலைபெற்றுவிட்டன.
மீனாட்சியின் கவிதை சிதைந்துபோன ஒரு கோட்டையை
விரிவாகச் சித்தரிக்கிறது. யாரோ அரசன் தன்
வாழிடமாக கட்டிக்கொண்ட கோட்டை. சில தலைமுறைகள்
தாண்டுவதற்குள்ளாக அவன் பெயர் அழிந்துவிட்டது.
மேலும் சில தலைமுறைகள் தாண்டுவதற்குள் அவன் கோட்டையும் அழிந்துவிட்டது. கால
ஓட்டம் அதைச் சிதைத்து கற்குவியலாக மாற்றிவிட்டது.
சிதைவுகளை அங்குலம் அங்குலமாக படம்பிடித்துக்கொண்டே
வரும் மீனாட்சி உருண்டோடிக் கிடக்கிற கற்களைக் காட்டி கவிதையின் இறுதிப் புள்ளிக்கு
வருகிறார். அக்கணமே அக்கல் சிவனாக மாறுகிறது. வெறுமை ததும்பிய இடங்களில் சுழன்றடிக்கும் ஊதற்காற்று
சலங்கை ஒலியாகிறது. பாறைப்படிகளiன் ஈரத்தில்
அடர்ந்து கிடக்கும் புல்லும் தழையும் நாகலிங்க இதழ்களாகிவிடுகின்றன. காலச் சேட்டை கடந்த சிவமோ தானாய் தனக்கு கோயில்
கொண்டது என்னும் இறுதி வரியின் கூற்று முக்கியமானது. கோட்டையும் கோயிலும் எழுப்பப்படவேண்டியது புறத்தில்
அல்ல. அகத்தில். மனத்தில் கட்டுகிற கோயிலுக்கு
முதலிடம் கொடுத்து குடமுழுக்குக்கு செல்கிற
சிவன் கதையை பெரியபுராணம் கூறுகிறது. சிவனுக்கான
கோயில் மனத்தில் இருப்பதால்தான் சிதைந்துகிடக்கும் கல்லில் சிவஅடையாளம் தெரிகிறது.
அரசனின் அடையாளம் தெரியவில்லை.
வாழ்க்கையின் அடிப்படை அழகு கருணை. பாடலுடன் இயைந்துபோகாத பண்ணுக்கும் கருணையில்லாத
நெஞ்சுக்கும் எந்த மதிப்புமில்லை. கருணையும்
கடமை தவறாத குணமும் உள்ளவர்களுக்கே இந்த உலகம் உரிமையுடையது. அவர்கள் தனக்காக எந்த அடையாளத்தையும் உருவாக்கத்
தேவையில்லை. கோட்டையும் கோயிலும் அவர்களுக்குத்
தேவையில்லை. உலகின் நெஞ்சில் உறைபவர்கள் அவர்கள்.
உலகம் அவர்களுக்கு அடையாளமெழுப்பி காலம் முழுக்கக் கொண்டாடும்.
***
கோட்டையும் கோயிலும்
இரா. மீனாட்சி
அரசன் கட்டிய கோட்டை, இன்று
மண்மேல் கனவின் கருநிழலே
காதற் பரிசு அரண்மனை எல்லாம்
கலைந்த சித்திரக் கூடுகள்
சிதைந்த கல்லில்
சாய்ந்தபுல்லில்
மூடிய முள்ளில்
தீய்ந்த மூங்கிலின்
சாம்பல் வெளுப்பில்
அழகின் அவலம்
நர்த்தன சாலையில் பாம்புச் சட்டை
சலங்கை ஒலியா ஊதற்காற்று?
மொட்டை கோபுர
பாதை ஓரம்
பாறைப் படியின்
ஊற்றுக் காலில்
நாகலிங்க இதழ்க்குளுமை
காலச் சேட்டை கடந்த சிவமோ
தானாய்த் தனக்கு கோயில் கொண்டது.
( எழுபதுகளிலிருந்து எழுதிவரும் முக்கியமான
கவிஞர் இரா.மீனாட்சி. குறைவான சொற்கள்மூலம்
நேர்த்தியான முறையில் கவிதைச் சித்திரங்களை உருவாக்குவதில் தேர்ச்சி மிகுந்தவர். தீபாவளிப்பகல்,
சுடுபூக்கள் ஆகியவை இவருடைய முக்கியமான தொகுதிகள். )