Home

Saturday 22 April 2017

அ.முத்துலிங்கம்: புதிதைச் சொல்பவர், புதிதாகச் சொல்பவர்


ஒருநாள் ஹளபீடு சிற்பங்களைப் பார்த்துவிட்டு ஒரு கல்மண்டபத்துக்கு அருகில் ஒதுங்கி நின்றேன். எனக்குப் பக்கத்தில் வேறொரு தூணில் சாய்ந்தபடி ஒரு வெளிநாட்டுக்காரர் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்தவாக்கில் தன் கேமிராவைத் திருப்பி சற்று தொலைவில் தெரிந்த ஓர் அணிலை விதவிதமான கோணங்களில் படமெடுத்தபடி இருந்தார். அணில் நகரும் திசையிலெல்லாம் அவருடைய கேமிராவின் கோணமும் மாறியபடி இருந்தது. அணில் எங்கோ ஓடி மறைந்துவிட, அவரும் படம் பிடிப்பதை நிறுத்தி கேமிராவை மூடியபடி திரும்பினார். நான் அவரையே கவனிப்பதையே பார்த்துவிட்டு புன்னகைத்தார்.

ஓர் உரையாடலுக்கான வாசலைப்போல இருந்தது அந்தப் புன்னகை. அவருக்குச் சொந்த ஊர் கனடா. ஒரு மாத விடுப்பில் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். ஆந்திராவில் ராஜமுந்திரி, விஜயவாடா பக்கமெல்லாம் அலைந்துவிட்டு கர்நாடகத்துக்குள் நுழைந்திருப்பதாகச் சொன்னார். “என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டேன்.  ”நிரந்தரமாக ஓரிடம் என எதுவும் இல்லை. எனக்கு ஒராக்கிள், ஜாவா, லைனக்ஸ் தெரியும். ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஆறு மாதம் வேலை செய்வேன். சிறுகச்சிறுக பணத்தைச் சேர்த்துவைத்து இப்படி ஒரு மாதம் ஊர்சுற்றுவேன். பயணங்களால் கிடைக்கும் புத்துணர்ச்சியை அனுபவித்தவனால் ஒருபோதும் மூலையில் முடங்கியிருக்க முடியாதுஎன்று சிரித்தார் அவர்.
தொடர்ந்துநான் ஒரு ரைட்டர். பெரிய ரைட்டரெல்லாம் இல்லை. சராசரியான ரைட்டர்தான். ஒரு ரைட்டருக்கு தொடர்ச்சியாக புதிய விஷயங்கள் கிடைத்தபடியே இருக்கவேண்டும். பேங்க் பேலன்ஸ் மாதிரி அவன் மனம் புத்தம்புது விஷயங்களால் நிறைந்திருக்கவேண்டும். ரைட்டருக்கு அது ஒரு முக்கியமான தகுதி. அதுக்காக பயணம் செய்தபடி இருக்கிறேன். புதிய விஷயங்களைப் பார்த்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள முயற்சி செய்தபடி இருக்கிறேன்என்றார்.
அவரும் நானும் அன்று மாலை ஒரு கடையில் தேநீர் அருந்தினோம். ஊருக்குத் திரும்பும் பயணம் முழுக்க அவர் சொன்ன சொற்கள் மனத்தில் மிதந்தபடி இருந்தன. புதிய அனுபவங்கள் நம்மையறியாமல் நாம் வகுத்துவைத்திருக்கும் எல்லைக்கோடுகளை விரிவாக்குகின்றன. விரிவாகும்தோறும்  காற்றோடும் மழையோடும் வெயிலோடும் விண்ணோடும் கலந்து கரைந்துகொண்டே இருக்கிறோம்மழைக்காலத்தில் நிரம்பும் ஏரிகுளங்களைப்போல நம்மையறியாமல் நம் மனத்தில் ஏதேதோ விஷயங்கள் புரண்டுவந்து நிரம்பிவிடுகின்றன. புது விஷயங்கள் பொது விஷயங்களாகவும் பொது விஷயங்கள் புது விஷயங்களாகவும் ரசவாதம் பெற்றுவிடுகின்றன. அக்கணத்தில் சட்டென்று  எழுத்தாளர் .முத்துலிங்கத்தை நினைத்துக்கொண்டேன்குதிரைக்காரன் தொகுதிக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரையில்எப்போதும் ஏதாவது ஒரு புது விஷயத்துக்காக எழுத்தாளர் துடித்துக்கொண்டே இருப்பார். கண்கள் சுழன்றபடியே இருக்கும். ஒரு குளிர் ரத்தப் பிராணி இரைக்குக் காத்திருப்பதைப்போல மனம் ஒரு பொறிக்காகக் காத்திருக்கும்என்று எழுதியிருக்கும் வரிகள் நினைவில் மோதின. ”புதிதைச் சொல், புதிதாகச் சொல்என்பது அவருடைய பிரதான வாக்கியம். ”நூறு தேர்க்கால்கள் செய்த ஒரு தச்சருக்கு 101வது தேர்க்கால் செய்வது மிகவும் சுலபம். நூறு குதிரைகளை அடக்கிய வீரனுக்கு 101 வது குதிரையை அடக்குவதும் சுலபம். 100 ரோஜாக்கன்றை வளர்த்தெடுத்தவருக்கு 101வது ரோஜாக்கன்றை வளர்தெடுப்பதும் சுலபம். ஆனால் சிறுகதைகள் அப்படியல்ல. நூறு சிறுகதைகள் எழுதியவருக்கு 101வது சிறுகதையை எழுதுவது அவ்வளவு சுலபமல்லஎன்று அவர் எழுதிய வரிகளையும் நினைத்துக்கொண்டேன்.

புதிய களம், புதிய கோணம், புதிய அனுபவம் என்பவை ஒரு படைப்பின் முதல்தகுதி. ஓர் ஆபரணத்தைப் பளிச்சிடவைப்பதுபோல அவை ஒரு படைப்பை சுடர்மிக்கதாக மாற்றுகிறது. சுடரொளியற்ற படைப்புகள் மக்கித் தேய்ந்து மண்ணாகிவிடக்கூடும். சுடரொளியுடன் கூடிய படைப்புகளோ காலத்தின் கரையில் கலங்கரைவிளக்கத்தைப் போல உறுதியாக நின்றிருக்கும்.
எப்போதும் புதிதை புதிதாகச் சொல்பவை .முத்துலிங்கத்தின் படைப்புகள். ஒருபோதும் அவர் ஒரு கதையைப்போல இன்னொரு கதையை எழுதியதில்லை. எங்கோ ஒரு சின்ன இழையில் ஒட்டிக்கொண்டிருக்கும் புதுமை அவருடைய அடையாளத்தை உணர்த்திவிடும். ஒரு கதைக்காக அவர் எடுத்துக்கொள்ளும் பிரயாசைகளையும் செலுத்தும் உழைப்பையும் குறிப்பிடாமல் இருக்கமுடியாது
குதிரைக்காரன் என்றொரு சிறுகதை. ஒரு பெரிய பண்ணையில் குதிரைகளைப் பராமரிக்கும் வேலைக்காரனாகச் சேரும் பிலிப்பினோகாரனான மார்ட்டென் என்னும் சிறுவன், அங்கேயே வாழ்ந்து அதே பண்ணைக்காரரின் மகளைத் திருமணம் செய்துகொண்டு தன் மனத்தில் எவ்விதமான பெரிய எதிர்பார்ப்புக்கும் இடம்தராமல் அங்கேயே வாழும் கதை. ஆனால் அக்கதையை அப்படி எளிமையான விதமாக முன்வைக்கவில்லை முத்துலிங்கம். ஓர் அஸ்பென் செடியை இந்தக் கதைக்குள் கொண்டு வருகிறார். வேலை தேடி ஊரிலிருந்து புறப்பட்ட மார்ட்டென் தன்னோடு எடுத்து வந்த செடி அது. தன் இனத்தைத் தானே பெருக்கிக்கொண்டு அதிவேகமாக வளரும் ஓர் அபூர்வமான செடி. ஓகொன்னர் பண்ணையில் நுழைந்து வேலை கேட்டுப் பெற்ற பிறகு முதலாளியின் அனுமதியோடு அந்தச் செடியை பண்ணையில் நட்டுவைக்கிறான் சிறுவன். தொடக்கத்தில் அவன் அந்தப் பண்ணையில் வேலிகளைப் பராமரிக்கிறான். மெல்ல மெல்ல தொழுவத்தில் குதிரைகளைப் பராமரிக்கவும் கற்றுக்கொள்கிறான். குதிரையில் ஏறி சவாரி செய்தபடி பண்ணையைச் சுற்றி வரும் வாய்ப்புகளையும் அவன் பயன்படுத்திக்கொள்கிறான்.
அஸ்பென் செடி கிடுகிடுவென பத்தடி உயரத்துக்கு மரமாக வளர்ந்து நிற்கிறது. அது வாழைமரம்போல கிழங்கிலிருந்து தானாகவே முளைத்துப் பெருகும் மரம். அழிக்கவே முடியாத மரம். அஸ்பென் செடியைப்பற்றி அவன் முதலாளி சில தகவல்களைச் சொல்கிறார். ஒரு காலத்தில் அம்புகள் செய்யப் பயன்படுத்தப்பட்ட மரம் அது. மான்கள் தன் கொம்புகளை மரப்பட்டையில் குத்திக்குத்தி கூர்மையைச் சீராக்கிக்கொள்கின்றன. உள்ளூர அவ்வளவு வலிமை கொண்டது அந்த மரம். ஆயினும் ஒரு சோடா மூடியின் அளவுள்ள அதன் இலைகள் எப்போதும் நடுங்கியபடி இருக்கின்றன. ”நடுங்கும் அஸ்பென்என்று அம்மரத்தின் பெயரைச் சொன்ன முதலாளி அஸ்பென் மரம் ஏன் நடுங்குகிறது என்பதைச் சொல்வதில்லை. மார்ட்டெனுக்கும் பதில் தெரியவில்லை. ஆனால் முதலாளியின் பெண் அலிஸியா அதற்கான பதிலைச் சொல்கிறாள். ஏசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் குற்ற உணர்ச்சியின் மிகுதியால் அந்த மரத்தில்தான் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான். அந்தக் கணத்திலிருந்து அஸ்பென் மரம் நடுங்கத் தொடங்கிவிட்டது என்னும் பரம்பரைக்கதையை அவள் நினைவூட்டுகிறாள்.
ஒரு சாலையோர உணவகத்தில் சந்திக்க நேரும் ஹனிதா நடுங்கும் மரம் பற்றி இன்னும் சில தகவல்களைச் சொல்கிறாள். அவள் மார்ட்டெனுக்கும் அலிஸியாவுக்கும் பிறந்த மகள். அரை நூற்றாண்டுக்கு முன்னால் மார்ட்டென் நட்டுவைத்த மரம் எண்ணூறு மரங்களைக் கொண்ட ஒரு பெரிய தோப்பாக நின்றிருப்பதாகச் சொல்கிறாள். அவள் உணவகத்தைவிட்டுப் புறப்படும்போது சுற்றி அமர்ந்திருக்கும் விவசாயிகள் அவளுக்கு எழுந்து நின்று வணக்கம் வைக்கிறார்கள். அத்துடன் அக்கதை நிறைவு பெறுகிறது.
வாழவே வழியில்லாத ஓர் இடத்திலிருந்து புறப்பட்டு வந்து ஒரு பண்ணையில் நிலைபெற்று வாழ்ந்து, முதலாளியின் மகளை மணம் செய்துகொண்டு ஒரு மகளைப் பெற்றெடுத்து, அவள் வழியாக சந்ததியின் நீட்சிக்கு வித்திட்ட மார்ட்டென்னின் கதை ஒருபுறம். ஒரே ஒரு கன்று எண்ணூறு மரங்களைக்கொண்ட ஒரு பெரிய பண்ணையாக  வளர்ந்து காட்சியளிக்கும் அஸ்பென் மரங்களின் கதை இன்னொரு புறம். இரு சரடுகளும் அழகாக பின்னிப்பின்னிச் செல்கின்றன. உள்ளூர வலிமையும் வெளியே நடுக்கமும் கொண்ட மரத்தையும் மார்ட்டெனையும் வேறுவேறாக பிரித்துப் பார்க்கவே முடியவில்லை.
மார்ட்டென் பற்றிய காட்சிகள் அனைத்தும் அஸ்பென் மரங்களை நினைவூட்டுவதாகவும் அஸ்பென் பற்றிய தகவல்களனைத்தும் மார்ட்டென்னை நினைவூட்டுவதாகவும் கதைமுழுதும் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் புதுமையாக இருக்கிறது. ஒருமுறை வேலியை உடைத்துக்கொண்டு பண்ணைக்குள் வந்து விடுகிறது ஒரு மூஸ் மான். குதிரையைவிடப் பெரிய உருவம். 1500 ராத்தலுக்கும் கூடுதலான எடை. ஒற்றை ஆளாக அதை எதிர்த்து நின்று இரண்டுமூன்று மணி நேரங்களாக அதைத் துரத்தித்துரத்தி பண்ணையைவிட்டு வெளியேற்றுகிறான் மார்ட்டென். அவன் வலிமைக்கு அது ஓர் எடுத்துக்காட்டு. கதையின் இறுதியில் இன்னொரு காட்சி. அதில் நடுங்கும் அஸ்பென் இலைகளின் முன்னால் உடல் நடுங்க நின்றிருக்கிறான் மார்ட்டென்.  அது மரமும் மனிதனும் உரையாடிக்கொண்டிருப்பதுபோல இருக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது. அஸ்பென் மரம் பற்றிய புதிய தகவல்களை மிகநுட்பமாக ஒரு குதிரைக்காரனின் வாழ்க்கையோடு இணைத்து புதுமையான முறையில் ஒரு சிறுகதையாகப் படைத்திருக்கிறார் முத்துலிங்கம்.
கூர்மையாக கவனிக்கத்தக்க மற்றொரு சிறுகதை ஐந்துகால் மனிதன். ஐந்துகால் மனிதன் என்னும் சொல்லிணைவே ஒரு புதுமையாக அமைந்து வாசகர்களை ஈர்க்கிறது. ஒருவருக்கு எப்படி ஐந்து கால்கள் அமையமுடியும் என்னும் கேள்வி உடனடியாக எழுந்து நம்மைத் தூண்டுகிறது. ஏழு பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தின் தலைவனுக்குத்தான் அப்படி ஒரு பட்டப்பெயர். உண்மையில் அவருக்கு ஒரு கால்தான். இரண்டாவது கால் இல்லை. நடமாட்டத்துக்காக அவர் எப்போதும் ஒரு குதிரையில் ஏறிச் சென்றுகொண்டிருக்கிறார். உறங்கும் நேரம் தவிர, எஞ்சிய பொழுதுமுழுக்க குதிரை மேலேயே காணப்படுவார். அதனால் குதிரையின் நான்கு கால்களையும் அவருடைய கால்கணக்கில் சேர்த்துவிடுகிறார்கள் ஊர்க்காரர்கள். அதனால் அவருக்கு ஐந்துகால் மனிதன் என்ற பட்டப்பெயர் நிலைத்துவிடுகிறதுஅந்த ஊர் பிரபுக்களை வேட்டைக்கு அழைத்துச் செல்வதும் அவர்களோடு சேர்ந்து குறி தவறாமல் சுடுவதும் அவர் வேலை. காடு, காட்டு விலங்குகள், பறவைகள் பற்றி அபார ஞானமுள்ளவர் என்பதால், அவர் பிரபுக்களால் தவிர்க்கப்படமுடியாதவராகவும் இருக்கிறார். அதிகமாக வேட்டை நடக்கும்போது அவரும் அதிகமாகச் சம்பாதிக்கிறார். வேட்டைகள் குறையும்போது அவர் வேலையற்றவராகிறார். வருமானமில்லாததால் குடும்பம் அடிக்கடி பட்டினி கிடந்து வாடுகிறது. படித்துக்கொண்டிருந்த மகளை தொடர்ந்து படிக்கவைக்க வழியில்லை.
அவருடைய மனைவியின் தங்கை கனடாவில் இருக்கிறார். கிரீஸில் வாடிய அக்குடும்பத்துக்கு அவர் உதவி செய்ய விரும்புகிறார். ஐந்துகால் மனிதனின் மகளைப் படிக்கவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக நம்பிக்கையூட்டுகிறார். அச்சொற்களை நம்பி அச்சிறுமி தன்னந்தனியாக விமானமேறி கிரீஸிலிருந்து கனடாவுக்குச் செல்கிறாள்.  வீட்டை அடைந்த பிறகுதான் அந்தச் சிறுமிக்கு எல்லாமே நாடகம் என்று புரிகிறது. சித்தி தன் குடும்பத்துக்கு சம்பளமில்லாத வேலைக்காரியாகவே அவளை நடத்துகிறாள். குழந்தைகளைப் பராமரிக்கவும் துப்புரவுப்பணியைச் செய்யவும் அவள் அந்த வீட்டில் பயன்படுத்தப்படுகிறாள். கல்வி ஒரு கனவாகவே போய்விடுகிறது. ஆறேழு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ஏமாற்று நாடகம் நடக்கிறது. வேறு வழியில்லை, பதினெட்டு வயதுக்குப் பிறகு அவள் டொரண்டாவுக்குத் தப்பித்துச் சென்று விடுதியொன்றில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யத் தொடங்குகிறாள்.
தன்மீது பொழியப்படும் வசைச்சொற்கள் வழியாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளும் அளவுக்கு புத்திசாலியான ஒரு சிறுமி, உறவுக்காரர்களின் துரோகத்தால் கல்வியையும் வாய்ப்பையும் இழப்பது துயரமளிக்கும் விஷயம். அடுத்தவர்கள் மகிழ்ச்சிக்கும் கேளிக்கைக்கும் விலங்குகளை வேட்டையாடும் மனிதன் ஒருபுறம். தன் தேவைக்கும் வசதிக்கும் மனிதனை வேட்டையாடும் உறவு மறுபுறம். அந்தப் புள்ளியில் குவிகிறது கதையின் மையம். ஒரு துப்புரவுப்பணியாளருடைய உரையாடலின் சாயலில் விரித்தெடுக்கப்படுகிறது  கதை. உருக்கமான ஒரு சிறுகதையை உருக்கத்தின் சாயலே இல்லாத தொனியில் முன்வைக்கும் புதுமை முத்துலிங்கத்துக்கு மட்டுமே கைவந்த கலை.
தகவல்களை மிகவும் வெற்றிகரமாக முறையில் பயன்படுத்திக்கொண்ட மற்றொரு சிறுகதைஎல்லாம் வெல்லும். பல போர்க்காட்சிகளை விவரித்துக்கொண்டே செல்லும் பின்னணியில் இக்கதை நிகழ்கிறது. எல்லாம் வெல்லும் என்பதே வீரர்கள் தமக்குள் சொல்லிக்கொள்ளும் ஒரு முழக்கச்சொல். முற்றிலும் பெண்கள் மட்டுமே தலைவர்களாகவும் வீரர்களாகவும் பணியாற்றும் ஒரு குழுவின் வீரம் செறிந்த போராட்டமும் வீரமரணங்களும்தான் கதையின் களம். அந்தக் களத்தை உயிரோட்டம் மிகுந்த ஒன்றாக மாற்றுவதற்காக முற்றிலும் புதிதானதொரு தகவலை இணைத்துக்கொள்கிறார் முத்துலிங்கம். இம்முறை அவர் எடுத்தாள்வது பறவைகளைப்பற்றிய தகவல்கள். பிரிகேடியர் துர்காவின் கடைசிநாள் வாழ்க்கையோடு அல்லது போராட்டத்தோடு அத்தகவல்கள் பின்னிப்பிணைந்திருக்கின்றன.
துர்கா ஒரு பறவைப்பிரியர். பறவைகளுக்கும் பொழுதுகளுக்கும் இடையிலான நுட்பமான உறவைப் புரிந்துவைத்திருப்பவர் துர்கா. போர்ச்சூழலின் துப்பாக்கிச்சத்தங்களாலும் போர்விமானங்களின் இரைச்சலாலும் காடே சீர்குலைந்து போய்விடுகிறது. பல பறவைகள் நிம்மதியில்லாமல் காட்டைவிட்டே வெளியேறிவிடுகின்றன. பல பறவைகள் நாளும் பொழுதும் குழம்பி காட்டுக்குள்ளேயே தவிக்கின்றன. பல பறவைகள் மடிந்துவிழுகின்றன. இத்தகவல்களை வாசித்துச் செல்லும் போக்கிலேயே இவை பறவைகளைப்பற்றியவையா, மனிதர்களைப்பற்றியவையா என்ற ஐயத்தை எழுப்பிவிடுகின்றன. அந்த ஐயம் கதைமுழுதும் நிலவி, அந்தப் படிமத்தை மெல்ல மெல்ல வளர்த்தபடியே செல்கிறது.
துர்கா காட்டில் பறந்து திரியும் ஏராளமான பறவைகளைப் படம் பிடித்து தன் மடிக்கணினியில் சேமித்துவைத்திருக்கிறார். ஒவ்வொன்றைப்பற்றியும் தாமறிந்த தகவல்களையும் படத்துடன் சேர்த்து எழுதிவைத்திருக்கிறார். பறவைகளின் நிறங்கள், அவற்றின் ஒலி, பழக்கவழக்கங்கள், உணவு என தனக்குக் கிடைத்த எல்லாத் தகவல்களையும் பதிவு செய்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார். என்றைக்காவது அவற்றை ஒரு காணொளித்தகடாக வெளியிடவேண்டும் என்பது அவர் விருப்பம்.
இதற்குமுன் ஏற்கனவே அவர் பதினாறு ஆண்டுகளாக காடுகளில் அலைந்து திரிந்து எடுத்த நூறுவிதமான பறவைகளின் படங்களை அச்சடித்து தட்டியில் ஒட்டிஈழத்துப் பறவைகள்என்று தலைப்பிட்டு தலைவருக்குப் பிறந்தநாள் பரிசாக அளித்த அனுபவம் அவருக்குண்டு. ”நம் மண்ணில் இவ்வளவு பறவைகளா?” என வியந்த தலைவரிடம்  இருநூற்றி நாற்பது பறவையினங்கள் அங்கே வசிப்பதாகவும் அவற்றில் நூறு பறவைகளை மட்டுமே படம்பிடித்துவைத்திருப்பதாகவும் அவர் சொல்கிறார். அப்போதுதான் பெயர் தெரியாத ஒரு பறவையைச் சுட்டிக் காட்டி விவரம் கேட்கிற பெண்ணுக்கு அது ஆறுமணிக்குருவி என்றும் ஒவ்வொரு அதிகாலையிலும் ஆறுமணிக்குச் சத்தமிட்டுப் பறக்குமென்றும் சொல்கிறார்.
அதுவரைக்கும் ஆறுமணிக்குருவியை நேருக்குநேர் பார்த்திராத பெண் இறுதிப்போர் நிகழ்ந்த தருணத்தில் அதைப் பார்த்த தகவலை ஒருநாள் துர்காவிடம் பகிர்ந்துகொள்கிறார். அது வலசை போகும் பருவமென்றும், அவளால் அக்குருவியைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றும் வாதிடுகிறார் துர்கா. ஆனால் அதன் உருவத்தை அவள் விவரிக்கும்போது அவரால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. எப்படியோ தனித்து சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அதை படமெடுக்கலாம் என்று அது இரையெடுத்த இடத்தைத் தேடிச் செல்கிற போது, அதைப் பார்க்கமுடியவில்லை. செத்துப் போயிருக்கலாம் என நினைத்து கண்கலங்குகிறார் அவர். பிழைத்து பறந்து போயிருக்கலாம் என்று அந்தப் பெண் சொல்லும் சொற்கள் அவரை அடையவே இல்லை.
இறுதிப்போரில் எதிரித் தரப்பிலிருந்து பாய்ந்துவந்த குண்டு அவரை வீழ்த்திவிடுகிறது. அவர் மரணத்தைத் தழுவும் முன்பாக நூறு பறவைகள் சிறகடித்து கூட்டமாகப் பறக்கும் காட்சியைத்தான் கடைசியாகப் பார்க்கிறார். அந்தக் கூட்டத்தில் அவர் ஆறுமணிக்குருவியைத் தேடியபடி அவர் உயிர் பிரிகிறது. ஆறுமணிக்குருவி தொடக்கத்தில் பிரிகேடியரின் அடையாளமாக தொடங்கி, இறுதியில் இனத்தின் அடையாளமாக உருமாறுகிறது. ஒரு சிறிய தகவலை கதைக்குள் புதியபுதிய கோணங்களில் காட்டியபடி விரிவடைகிறது முத்துலிங்கத்தின் சிறுகதை.
இருபதாண்டுகளுக்கு முன்பாக படிக்கநேர்ந்த வம்ச விருத்தி சிறுகதையும் இதுபோலவே சின்னஞ்சிறிய ஒரு தகவலை மையமாகக் கொண்ட கதை. அந்தத் தகவலுக்காகவே அச்சிறுகதை பாகிஸ்தானைக் களமாகக் கொண்டிருக்கிறது. ஆபத்தில் வாழும் உயிரினமாக மலையாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளனஇந்த ஆடுகளின் உலக எண்ணிக்கை வெறும் 84 மட்டுமே. அழிந்துவரும் அந்த வம்சத்தைச் சேர்ந்த ஒருசில ஆடுகள் பாகிஸ்தானின் வடமலைப்பகுதியில் வசித்துவருகின்றன. இந்தத் தகவலை கதைக்கருவின் ஒரு பகுதியாக வம்சவிருத்தி சிறுகதையில் மிகவும் வசீகரமான முறையில் பயன்படுத்திக்கொள்கிறார் முத்துலிங்கம்.
ஆண்வாரிசுக்காக ஆசைப்படும் அஸ்காரிக்கு தொடர்ந்து பெண்பிள்ளைகளாகவே பிறக்கும் செய்தியிலிருந்து தொடங்குகிறது அச்சிறுகதைஅவர் ஆண்வாரிசுக்காக ஏங்குகிறார். அதற்காகவே அவர் இரண்டாவது திருமணம் திருமணம் செய்துகொள்கிறார். அவளுக்கும் பெண்குழந்தையே பிறக்கிறது. தனது வம்சத்தில் ஆண்வாரிசைப் பார்க்க முடியாத ஏக்கத்துடன் அஸ்காரியின் அப்பா இறந்துபோகிறார். ஆண் வாரிசுக்கான ஏக்கத்துடனும் கனவுடனும் அஸ்காரி ஹஜ் யாத்திரைக்குச் சென்றுவருகிறார். அதற்குப் பிறகு கருவுறும் மனைவிக்கு ஆண்குழந்தை பிறக்கிறது. அவனுக்கு அலி என்று பெயர். அவனை கண்ணும் கருத்துமாக வளர்த்துவருகிறார் அஸ்காரி. அவன் வளர்ந்து இளைஞனாகிறான். அந்தக் கிராமத்து வழக்கப்படி அவன் மலைக்காட்டில் வேட்டைக்குச் சென்று ஏதேனும் ஒரு விலங்கை வேட்டையாடி கொண்டுவரவேண்டும். அதற்குப் பிறகுதான் அவன் ஆடவனாக ஊர்முன்னால் நிற்கமுடியும். அப்படி ஒரு விதி. அதில் எந்தக் குடும்பத்துக்கும் விலக்கில்லை.
ஒருநாள் காலை அப்பாவும் மகனும் வேட்டையாடுவதற்காக மலைக்காட்டுக்குச் செல்கிறார்கள். மற்ற விலங்குகளை வேட்டையாடுவதைவிட தன் மகன் ஒரு மலையாட்டைக் குறிபார்த்துச் சுட்டுக்கொல்லவேண்டும் என்று விரும்புகிறார் அஸ்காரி. காலைமுதல் நீண்ட நேரம் அலைந்து திரிந்த அலைச்சல்கள் வீண் போகவில்லை. இறுதியாக அவன் ஒரு மலையாட்டை சுட்டு வீழ்த்துகிறான். அஸ்காரியின் வம்சவிருத்திக்காகவும் வம்சப் பெருமைக்காகவும் ஓர் எளிய அபூர்வமான காட்டுவிலங்கான மலையாடு கொல்லப்பட்டு, அதன் வம்சம் அழிக்கப்படுகிறது. அதுவரைக்கும் உலக அளவில் எண்பத்துநான்காக இருந்த மலையாடுகளின் எண்ணிக்கை எண்பத்துமூன்றாக குறைந்துவிட்டது என்னும் அதிர்ச்சியோடு தகவலோடு முடிவடைகிறது கதை. நகைச்சுவைபோல தொடங்குகிற சிறுகதை ஓர் அதிர்ச்சியோடு முடிவடைகிறது.
மலையாடு பற்றிய தகவலை இதைவிட ஒரு சிறுகதையில் சிறப்பாக யாருமே பயன்படுத்தமுடியாது என்று நினைக்கும்  அளவுக்கு மிக நேர்த்தியாக பயன்படுத்துகிறார் முத்துலிங்கம். அந்தத் தகவலை, ஒரு கட்டத்தில் மனிதனின் தன்னலத்தையும் அற்பத்தனத்தையும் அடையாளம் காட்டுகிற அம்சமாக தன் கதைக்குள் நிலைநிறுத்தவும் செய்கிறார்.
கலையாக்கத்தை ஒரு தொழில்நுட்பம்போல பயின்று பயின்று தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார் முத்துலிங்கம். இருபதாண்டுகளுக்கும் மேல் பழகிப்பழகி இன்று அவருக்கு வசப்பட்டுவிட்ட ஒன்றாக மிளிர்கிறது அந்தக் கலை. இன்று  எந்த அபூர்வமான தகவலையும் அவர் அழகானதொரு கதையாக மாற்றியமைப்பதில் வல்லவராக இருக்கிறார். தகவலையும் கலையையும் கச்சிதமான முறையில் ஒன்றிணைத்து புதிதை புதிதாக உருவாக்கும் படைப்பாளிகளில் இன்றைய காலகட்டத்தில் முத்துலிங்கமே முதன்மையான கலைஞர்.
(சொல்வனம் –இணைய இதழ் வெளியிட்ட அ.முத்துலிங்கம் சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை)