தாத்தாவின் முடிவு குறித்து யாருக்கும் திருப்தி இல்லை. அபரிமிதமான சோர்வும் துக்கமும் கொண்டிருந்தார் அப்பா. தத்தளிக்கும் உணர்ச்சிகளை அவர் முகம் அப்பட்டமாய் வெளிக்காட்டியது. கண்டமங்கலம் சித்தப்பாவும், பாக்கியம் அத்தையும் எதுவும் பேசமுடியவில்லை. புடவை முந்தானையால் வாயை மூடிக்கொண்டு, கதவுக்குப் பின்பக்கம் நின்றுகொண்டு அம்மா அழுதாள். தாத்தாவோ மகிழ்ச்சி, துக்கம் எதையும் காட்டிக்கொள்ளாத முகத்துடன் இருந்தார். புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மர்மச் சித்திரமாய் இருந்தது அவர் முக உணர்ச்சி. பொங்கல், தீபாவளி சமயங்களில் காலில் விழுந்து வணங்கி எழுகிற மாதிரி அன்றைய தினம் எல்லாரும் விழுந்து கும்பிட்டோம். எல்லோரின் தலையையும் ஆதரவுடன் தொட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டு தாத்தா விடை பெற்றுக்கொண்டார்.