Home

Sunday, 17 August 2025

அந்த சொல் ஒலிக்காத நாளே இல்லை

 பாவண்ணன் நேர்காணல்

கேள்விகளும் தொகுப்பும்: கமலாலயன்

 

கமலாலயன்: நீங்கள் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட சிறார் பாடல் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறீர்கள். சிறுகதை, நாவல், நூல் விமர்சனக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என உங்களுடைய பன்முகச் செயல்பாடுகளின் வரிசையில் சிறார்களுக்கான பாடல்களும் கதைகளும் அடங்கும். இத்துறையில் நீங்கள் இவ்வளவு கவனம் செலுத்தி எழுதிவரும் முறை வியப்பளிக்கிறது.  சிறார்களுக்கான பாடல்களை எழுதும் உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? 

 

பாவண்ணன்: இளம்பருவத்திலிருந்தே குழந்தைகளோடு உரையாடுவதும் விளையாடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டில் நான் மூத்த பிள்ளை. எனக்குக் கீழே இரு தங்கைகளும் இரு தம்பிகளும் உண்டு. என் இரண்டாவது தம்பி நான் பள்ளியிறுதியைப் படிக்கும் காலத்தில் பிறந்தான். என் இரண்டாவது தங்கை நான் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் பிறந்தவள். அம்மா சமையல் வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது அந்த வேலை முடியும்வரைக்கும் அவர்களுக்கு விளையாட்டு காட்டி கதை சொல்லி கவனித்துக்கொள்வது என் முக்கியமான வேலை. அதை நான் மகிழ்ச்சியோடு செய்தேன். அவர்கள் விரும்பும் கதைகளையும் பாடல்களையும் விரும்பும் விதமாகச் சொல்லிச்சொல்லி எனக்கு எல்லாமே பழக்கமாகிவிட்டது. அப்போது எங்கள் ஊரில் இயங்கிவந்த திருக்குறள் கழகத்தைச் சேர்ந்த அண்ணன்மார்கள் வழியாக எனக்கு தமிழ்ச்சிட்டு என்னும் இதழ் கிடைக்கும். என் வாசிப்பு ஆர்வத்தை அறிந்துகொண்ட கண்ணன் என்னும் பள்ளியாசிரியர் தம்மிடம் இருந்த பழைய டமாரம், கண்ணன், பாலர் மலர், பூஞ்சோலை, கல்கண்டு, அம்பி, அணில் இதழ்களின் தொகுப்புகளையெல்லாம் எனக்குப் படிப்பதற்குக் கொடுத்தார். எங்கள் கிளைநூலகத்தில் பணிபுரிந்த பாண்டியன் என்னும் அண்ணன் வழியாகவும் எனக்குப் புத்தகங்கள் கிடைத்தன.

 

விளையாட்டாக கதைகளையும் பாடல்களையும் படிக்கத் தொடங்கிய பழக்கம், சின்ன வயதுப் பிள்ளைகளோடு பேசவும் விளையாடிச் சிரிக்கவும் மிகவும் உதவியாக இருந்தது. நினைவிலிருந்து அந்தப் பாடல்களையும் கதைகளையும் சொல்வேன். சில சமயங்களில் சொந்தமாக நானாகவே தாளத்துக்கேற்ப பாடல்களைக் கட்டி அவர்களுக்குப் பாடிக் காட்டுவேன். எங்கள் வீட்டில் மட்டுமல்ல, என்னுடைய எல்லா நண்பர்களுடைய வீடுகளிலும் என் தம்பி, என் தங்கை வயதில் பிள்ளைகள் இருந்தார்கள். நான் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றால் எல்லோரும் ஓடோடி வந்து தோளோடு ஒட்டிக் கொண்டு “பாட்டு சொல்லுண்ணே, பாட்டு சொல்லுண்ணே” என்று கேட்பார்கள். ஒரு பாட்டு முடிந்ததுமே இன்னொரு பாட்டு கேட்பார்கள். ஆர்வமான பிள்ளைகள். அவர்கள் எல்லோருமே இன்று பெரியவர்களாகி, திருமணமாகி நிற்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளிடம் என்னை அறிமுகப்படுத்தும் போது “இந்த அண்ணா அந்தக் காலத்துல எங்களுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தவர்” என்று அறிமுகப்படுத்தும்போது மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் பிள்ளைகள் மகிழ்ச்சியோடு கேட்டு கைதட்டி சிரிக்க வேண்டும். அதுதான் என் நோக்கம். அப்படித்தான் பாடல்களை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன். சொல்லிவிட்டு அப்படியே மறந்து போய்விடுவேன். எதையும் எழுதி வைக்கவில்லை.  

 

நான் பட்டப்படிப்புக்காக புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் சேர்ந்தபோது எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ம.இலெ.தங்கப்பா. ஒருநாள் அவரைச் சந்திப்பதற்கு அவருடைய அறைக்குச் சென்றிருந்தபோது அவருடைய மேசையில் ’எங்கள் வீட்டுச் சேய்கள்’ என்னும் தலைப்பில் அவரே எழுதிய சிறார் பாடல் தொகுதியைப் பார்த்தேன். அவருடைய அனுமதியோடு அப்புத்தகத்தை எடுத்து அங்கேயே சில பக்கங்கள் படித்தேன். அவருடைய பிள்ளைகளுக்காக அவர் எழுதிய பாடல்கள் அவை. அழகான தாளக்கட்டோடும் சொற்சேர்க்கையோடும் எழுதப்பட்ட பாடல்கள். அதைப் படித்த மகிழ்ச்சிப்பெருக்கில் “இதே மாதிரி நானும் என் தம்பி தங்கச்சிங்களுக்காக நிறைய பாட்டு எழுதியிருக்கேன் ஐயா” என்றேன். அதைக் கேட்டு மகிழ்ச்சியோடு அவர் என் குடும்பத்தைப்பற்றி விசாரித்தார். நான் எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னேன். அதைக் கேட்ட பிறகு அவர் “அதையெல்லாம் நாளைக்கு எடுத்து வா. படிச்சிப் பார்க்கலாம்” என்றார். நான் சங்கடத்தோடு “ஒரு பாட்டைக்கூட நான் எழுதி வச்சிக்கலை ஐயா” என்று கையை விரித்தேன். அவரால் அதை நம்பமுடியவில்லை. “ஆமாம் ஐயா, ஒரு வேகத்துல மனசுக்குள்ளயே பாட்டு கட்டிடுவேன். சில சமயத்துலதான் எழுதுவேன். ஆனா எல்லாத்தையும் பிள்ளைகள்கிட்ட சொன்ன பிறகு அப்படியே மறந்து போயிடும். எழுதிவச்ச தாளையும் எங்கயாவது போட்டுடுவேன்” என்றேன். அவர் மெளனமாக சில நிமிடங்கள் என்னையே உற்றுப் பார்த்தார். பிறகு “சரி, இதுவரைக்கும் எழுதனதுலாம் போனா போகட்டும் விடு. இனிமேலாவது எழுதறத ஒரு நோட்டு போட்டு எழுதி வச்சிட்டு வா. அதுக்கப்புறம் ஒருநாள் கொண்டுவந்து காட்டு” என்றார். நான் “சரி ஐயா” என்று தலையசைத்தபடி வகுப்புக்கு திரும்பிவிட்டேன்.

 

நாலே நாளில் ஒரு நோட்டு நிறைய பாடல்களை எழுதிச் சென்று அவரிடம் காட்டினேன். அக்கணமே அங்கங்கே ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் படித்தார் அவர். “நல்லா இருக்குது. நிதானமா படிச்சிப் பார்க்கறேன். நாளைக்கு வா. சொல்றேன்” என்றார். மறுநாள் அவரைச் சந்திக்கச் சென்றபோது “எல்லாப் பாட்டும் ரொம்ப இயல்பா இருக்குது. பிள்ளைகளோடு பிள்ளையா நீயும் சேர்ந்து பாடறமாதிரியான உணர்வைக் கொடுக்குது. இப்படித்தான் பாட்டு இருக்கணும். நீ தாராளமா தொடர்ந்து எழுதலாம்” என்று சொல்லிக்கொண்டே என்னுடைய நோட்டைத் திருப்பிக் கொடுத்தார். அந்த நாள் என் வாழ்வில் மகத்தான நாளாகும். அதற்குப் பிறகு சிறுவர்களுக்காகச் சொல்லும் பாடல்களையெல்லாம் முடிந்தவரைக்கும் வீட்டுக்கு வந்து எழுதிவைத்துப் பாதுகாக்கத் தொடங்கினேன்.

 

பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு நான் புதுச்சேரியிலேயே தொலைபேசித்துறையில் ஊழியராக பணியில் இருந்த காலத்தில் ஏ.வி.எம்.நிறுவனம் குழந்தைகளுக்கான பாடல்தொகுதிப் போட்டியொன்றை அறிவித்திருந்தது. நான் பாடல் எழுதுவதை அறிந்த என்னுடைய இன்னொரு ஆசிரியரான சாயபு மரைக்காயர் அந்த விளம்பர நறுக்கை என்னிடம் கொடுத்து அப்போட்டிக்கு என்னை எழுதும்படி தூண்டினார். “நான் புத்தகமா எதுவும் எழுதலையே” என்று அவரிடம் சொன்னேன். “அதுக்கான அவசியமே இல்லை. அவுங்களுக்கு ஒரு தொகுப்புக்கு உண்டான அளவுக்கு பாடல்களை கையெழுத்துப் பிரதியாவும் அனுப்பிவைக்கலாம்” என்றார். ஒரு வார காலம் நான் என்னுடைய நோட்டுப்புத்தகங்களையெல்லாம் தேடி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு தொகுப்புக்குப் பொருத்தமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து கையெழுத்துப்பிரதியொன்றைத் தயார் செய்தேன். என் தங்கை பெயர் பொற்கொடி. பெரும்பாலான பாடல்கள் அவளுக்காக எழுதப்பட்டவை. அதனால் அத்தொகுதிக்கு ’பொற்கொடி பாடுகிறாள்’ என தலைப்பிட்டு போட்டிக்கு அனுப்பிவைத்தேன். அப்போட்டியில் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் ஒரு தொகுதியை உருவாக்கும் கலையில் நான் தேர்ச்சியடைந்தேன்.

 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்நிறுவனம் அதேபோல சிறார் பாடல் தொகுதிக்கான போட்டியை அறிவித்தது. மேலுமொரு கையெழுத்துப் பிரதியைத் தயாரித்து அனுப்பிவைத்தேன். அப்போதும் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதற்கிடையில் என் கவனம் மரபுக்கவிதையிலிருந்து சிறுகதையை நோக்கி நகர்ந்துவிட்டது. என் குடும்பச்சூழலிலிருந்து பிரிந்து சென்று வேறொரு மாநிலத்தில் வேறொரு மொழி புழங்கும் சூழலில் பணி புரிய நேர்ந்தது. என்னைச் சுற்றி எப்போதும் இருக்கும் குழந்தைகள் கூட்டம் திடீரென இல்லாமல் போய்விட்டது. படிப்படியாக குழந்தைகளுக்கு எழுதும் பாடல்கள் குறைந்தன. எனக்குத் திருமணமாகி, எங்களுக்கு மகன் பிறந்து எங்களோடு ஆடவும் சிரிக்கவும் தொடங்கிய பிறகுதான் நான் மீண்டும் குழந்தைகள் உலகத்துக்குள் செல்லமுடிந்தது. அதற்குப் பிறகே, பாடல்கள் எழுதத் தொடங்கினேன். இன்றுவரை எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

 

முன்பெல்லாம் பிள்ளைகளோடு நாமும் சேர்ந்து ஆடவேண்டும், சிரிக்கவேண்டும், குதிக்கவேண்டும் என்றெல்லாம் நான் நினைத்ததுண்டு. அறுபதைக் கடந்துவிட்ட இப்பருவத்தில் இன்று அந்த எண்ணமெல்லாம் போய்விட்டது. பிள்ளைகள் துள்ளி விளையாடுவதையும்  ஓடுவதையும் உரையாடிக்கொள்வதையும் சற்றே தள்ளி நின்று மனம் குளிர வேடிக்கை பார்த்தாலே போதும், மனம் நிறைந்துவிடுகிறது. கிளர்ச்சியில், பாடல் வரிகள் தாமாக பிறந்து இணைந்துகொள்கின்றன.

 

கமலாலயன்: கையெழுத்துப்பிரதிகளாக இருந்த பொற்கொடி பாடுகிறாள் தொகுதிகளை என்ன செய்தீர்கள்?

பாவண்ணன்: கர்நாடகத் தொலைபேசித்துறையில் வேலை கிடைத்து புறப்பட்டுச் செல்லும்போது, அவற்றையெல்லாம் வளவனூரிலேயே எங்கள் வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன். என் நினைவிலிருந்தும் அவை மறந்துவிட்டன. அப்போது நாங்கள் மண்சுவர்களோடு கூடிய கூரைவீட்டில் வசித்துவந்தோம். ஒவ்வொரு மழைக்காலமும் கூரையையும் சுவரையும் மாற்றிமாற்றிப் பாதுகாக்கவேண்டிய வீட்டுச்சூழலில் புத்தகங்களைப் பாதுகாப்பது என்பது எளிதான வேலையல்ல. நான் அப்பிரதிகளை மறந்துவிட்டேன். ஆயினும் என் தம்பி அவற்றையெல்லாம் ஏதோ ஒரு பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தான். பத்தாண்டுகளுக்குப் பிறகு அவற்றைப்பற்றிய பேச்சு வந்தபோது, அவன்தான் அவற்றை எடுத்துக் கொடுத்தான். அப்போது என் கவனம் மீண்டும் குழந்தைப்பாடல்களின் திசையில் திரும்பியிருந்தது. அத்தொகுதிகளிலிருந்து எனக்குப் பிடித்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுதியை உருவாக்கினேன். அத்தொகுதியில் கலைஞன் பதிப்பகம் ‘பொம்மைக்கு ஓர் இடம் வேண்டும்’ என்னும் தலைப்பில் 1992இல் வெளியிட்டது.

 

கமலாலயன்: இத்துறையில் உங்களுடைய முன்னோடி என நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?

 

பாவண்ணன்: ம.இலெ.தங்கப்பா அவர்களே இத்துறையில் என்னுடைய முன்னோடி. அவரே எனக்கு வழிகாட்டி நெறிப்படுத்தியவர். ஒருமுறை என்னுடைய பாடல்களைப் படித்துவிட்டு “உன்னுடைய ஆழ்நெஞ்சில் ஒரு சிறுவன் எப்போதும் ஓடிக்கொண்டும் துள்ளித்துள்ளி ஆடிக்கொண்டும் இருப்பதை என்னால் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு பாட்டையும் எழுதிமுடித்ததும் அவனுக்குப் பாடிக் காட்டு. அவனுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அது நல்ல பாட்டு. அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை அப்படியே கிழித்துப் போட்டுவிடுவது நல்லது. அவனுக்குப் பிடிக்காததை ஒருபோதும் எழுதாதே” என்றார். அந்தச் சொல் எனக்குள் ஒலிக்காத நாளே இல்லை. அதைச் சொன்ன தங்கப்பாவை நினைக்காத நாளும் இல்லை.

 

கமலாலயன்: உங்கள் பாடல்களைத் தொகுத்துப் புத்தகவடிவில் வெளியிடுவதற்கு முன் குழந்தைகள் நடுவில் அவற்றைப் பாடிக் காட்டி இறுதிப்படுத்துவது உண்டா? அல்லது வேறு எந்த முறையில் அந்தப் பாடல்களை நூலாக்கத்துக்குத் தேர்வு செய்கிறீர்கள்?

 

பாவண்ணன்: என்னுடைய எல்லாப் பாடல்களின் தகுதியையும் தீர்மானிப்பவன் எனக்குள் வாழும் சிறுவன். பாடல்களைத் தொகுத்துப் புத்தகமாக்கும் வரைக்கும் நான் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு பாட்டையும் எழுதி முடித்ததும் அச்சிறுவன் அதை முதலில் முணுமுணுத்துப் பார்ப்பான். தாளக்கட்டோடு பாடிப் பார்ப்பான். அவனுக்கு உவப்பளிக்காத பாட்டை நான் கருத்தில் கொள்வதே இல்லை. அக்கணமே ஒதுக்கிவைத்துவிடுவேன். என் கண்ணில் படாதபடி வீசி எறிந்துவிடுவேன். அவனுடைய மகிழ்ச்சியும் உற்சாகமும் மட்டுமே நான் வைத்திருக்கும் அளவுகோல்.

 

கமலாலயன்: இசையை முறைப்படி கற்றவர்கள்தான் சிறார் பாடல்களை எழுதமுடியுமா?

 

பாவண்ணன்: அப்படியெல்லாம் ஒரு விதியும் இல்லை. ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் ஒரு தாளமும் லயமும் இருக்கிறது. அதைப் பழகிப் பழகி நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ளலாம். பாடல் வரிகள் ஊற்றெடுத்து வெளிப்படும் நேரத்தில் எந்த வேகத்தோடு வருகிறதோ, அதுவே அப்பாட்டின் தாளம். அது குதிரையின் வேகத்தில் துள்ளித்துள்ளி வந்தால், அது குதிரையின் தாளம். யானையின் வேகத்தில் அசைந்து அசைந்து வந்தால், அது யானையின் தாளம்.  எந்தத் தாளமாக இருந்தாலும் அதைப் பாடுகிற சிறார்களுக்கும் காதால் கேட்கிற சிறார்களுக்கும் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் இருக்கவேண்டும். அது மிகமிக முக்கியம்.

 

கமலாலயன்: சிறு குழந்தைகளுக்கு எந்த மாதிரியான சந்தம், எந்தத் தாளம், எந்த ராகங்களில் பாடல்களை அதிகம் எழுதியிருக்கிறீர்கள்?

 

பாவண்ணன்: பாடல் ஊற்றெடுப்பதற்கு உந்துதலாக அமையும் காட்சி அல்லது உரையாடல் அல்லது ஓர் அசைவு எந்தத் தாளக்கட்டுக்கு இசைவாக நிகழ்கிறதோ, அதுவே அப்பாட்டுக்குப் பொருத்தமான தாளக்கட்டு. ஒருநாளும் ஒருவர் தாளக்கட்டை முதலில் தீர்மானித்துவிட்டு அதற்குப் பிறகு பாட்டை  எழுதமுடியாது. ஒரு மலர் மலர்வதுபோல அது இயல்பாக நிகழும் ஒரு செயல். நான் எழுதும் ஒவ்வொரு பாடலும் அப்படித்தான் உருவாகிறது.  எந்தத் தாளக்கட்டில் அதிக அளவில் பாடல்களை எழுதியிருக்கிறேன் என்பதெல்லாம் என் நினைவில் இல்லை.

 

கமலாலயன்: குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள வரிகளோடு பாடல் அமைந்தால்தான் குழந்தைகளால் அந்த வரிகளைப் பின் தொடரவும் பொருளைப் புரிந்துகொண்டு அவற்றை ரசித்து அனுபவிக்கவும் முடியும் என்பது போன்ற வரையறைகளை நீங்கள் முன்வைப்பீர்களா? அல்லது  இதெல்லாம் அவரவர் விருப்பம் என்று விட்டுவிடுவீர்களா?

 

பாவண்ணன்: எழுதுகிறவர்கள் தீர்மானிப்பது என்பதைவிட, எழுதத் தூண்டும் காட்சியும் கருவும் எப்படித் தீர்மானிக்கிறது என்பதுதான் முக்கியம். வெறும் நான்கே நான்கு வரிகளைக் கொண்ட சில பாடல்களை தங்கப்பா எழுதியிருப்பதை நான் படித்திருக்கிறேன். அவரே சில சமயங்களில் இருபது இருபத்துநான்கு வரிகள் கொண்ட பாடல்களையும் எழுதியிருக்கிறார். இரண்டு விதங்களிலும் அவர் சிறப்பாக எழுதியிருக்கிறார். சுருக்கம் அல்லது விரிவு என்பதற்கு அப்பால் ஒரு பாட்டுக்கு சுவை மிகமிக முக்கியம். அந்த அம்சத்தில்தான் ஒரு கவிஞன் கவனத்தைக் குவிக்கவேண்டும்.

 

கமலாலயன்: கவிமணி, பாரதியார், பாரதிதாசன், தமிழ் ஒளி, அழ.வள்ளியப்பா, பூவண்ணன் உள்ளிட்ட முன்னோடிகளிடமிருந்து சிறாருக்கான பாடல்கள் வகைமைகள் சார்ந்து நாம் கற்பதற்கும் பெறுவதற்கும் என்னென்னவெல்லாம் உள்ளன?

 

பாவண்ணன்: வாணிதாசன், கி.வா.ஜகந்நாதன், ம.இலெ.தங்கப்பா, துரை.மாணிக்கம் என்கிற பெருஞ்சித்திரனார் போன்ற ஆளுமைகளின் பெயர்களையும் நான் இந்த முன்னோடி வரிசைக் கவிஞர்களின் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முன்னோடிப் படைப்பாளியிடமிருந்தும் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிட்டுத் தொகுப்பதும் பகுப்பதும் கல்வியியல் துறைச் சடங்காக அமைந்துவிடுவதற்கான சாத்தியம் உண்டு. மழைநீரை நாம் ஒரு பாத்திரத்தில் மட்டும் எடுத்துக்கொள்ள முடியுமா? தொட்டனைத்தூறும் மணற்கேணி போல ஒரு முன்னோடிப் படைப்பாளியின் பாடல்கள் எல்லாம் பாடுந்தோறும் சுரக்கும் கேணிகளைப் போன்றவை. ஓர்  ஊற்றுமுகத்தைக் கண்டு முடித்ததும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊற்றுமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கவேண்டும். எங்கும் தேங்கி நின்றுவிடக் கூடாது. சென்றுகொண்டே இருப்பவன் அறிந்துகொண்டே இருப்பான்.

 

கமலாலயன்: சிறார்களின் மன, அறிவு வளர்ச்சிகளில் சிறார் இலக்கியப்படைப்புகளின் - குறிப்பாக சிறார் பாடல்களின் - முக்கியத்துவம் பற்றி உங்கள் அனுபவங்களிலிருந்து நீங்கள் கூற விரும்புவது என்ன?

 

பாவண்ணன்: அறிவியல், புவியியல், வரலாறு, கணக்கு என வெவ்வேறு துறைசார்ந்த நூல்களைப் படிக்கும்போது அந்தந்தத் துறை சார்ந்த ஞானத்தை அடைகிறோம். அப்புரிதலின் வழியாக அதே துறையில் மேலும் சில அடிகள் நம்மால் செல்லமுடியுமா என முயற்சி செய்து பார்க்கிறோம். ஆனால் இலக்கியம் சார்ந்த வாசிப்பு அளிக்கும் ஞானம் என்பது வாழ்வியல் ஞானம். உலகியல் ஞானம். எந்தத் துறையின் வழியாகவும் நாம் அடையத்தக்க ஞானத்தைவிட பெரிய ஞானம். சிறார் இலக்கியம் என்பது பேரிலக்கியம் என்னும் ஆலயத்துக்குள் செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு வாசல். வலையை வீசி மீன் பிடித்துப் பழகுவதற்கு முன்பாக தூண்டில் வீசி மீன் பிடித்துப் பழகுவதுபோல. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், சிறார் இலக்கியம் என்பது ஒரு பயிற்சிக்கூடம். பயிற்சிக்கூடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களால் பேரிலக்கியங்களுடன் தடுமாற்றமின்றி மிக எளிதாகவும் இயல்பாகவும் ஓர் ஒட்டுதலை உருவாக்கிக்கொள்ள முடியும்.

 

(இயல் - சிறார் மின்னிதழில் (15.06.2025) வெளிவந்த நேர்காணலின் முழுமையான வடிவம். கேள்விகளும் தொகுப்பும் : கமலாலயன்)