Home

Sunday, 10 August 2025

திருக்குறள் மன்றம் நல்லபெருமாள் : ஒரு தனிமனித இயக்கம்

 

நான் பெங்களூருக்கு 1989ஆம் ஆண்டில் குடியேறினேன். அப்போது பெங்களூரில் எனக்கு அறிமுகமான ஒரே நண்பர் காவ்யா சண்முகசுந்தரம். அவர்தான் எனக்கு வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுத்தார். அவருடைய வீட்டுக்கும் எங்களுடைய வீட்டுக்கும் ஐந்து நிமிட நடை தொலைவு மட்டுமே.  அவர் வழியாகத்தான் பலர் எனக்கு நண்பர்களாக அறிமுகமானார்கள். அவர்களில் ஒருவர் நல்லபெருமாள். அந்த நாள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நினைவிலுள்ளது.

நண்பர் சண்முகசுந்தரம் அப்போது காவ்யா என்னும் பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி நடத்திவந்தார். அவருடைய வீட்டிலேயே நாலைந்து புத்தகத்தாங்கிகளைக் கொண்ட ஒரு சிறிய விற்பனைக்கூடமும் இருந்தது. ஒருநாள் மாலையில் நானும் சண்முகசுந்தரமும் உரையாடிக் கொண்டிருந்தபோது நடுத்தரமான உடல்வாகுடன் கண்ணாடியணிந்த ஒருவர் வீட்டுக்குள் வேகமாக வந்தார். வணக்கம் சொல்லிக்கொண்டே சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்து “இத இப்போதைக்கு கணக்குல வச்சிக்குங்க. பாக்கிய மாசம் பொறந்ததும் கொடுக்கறேன்” என்றார். அடுத்த கணமே “நான் கேட்டிருந்தேனே, அந்தப் புத்தகம்லாம் வந்துட்டுதா?” என்று ஆவலோடு கேட்டார்.

“இதோ, இந்தப் பையில எல்லாத்தையும் கட்டு கட்டி வச்சிருக்கேன்” என்றபடி தன் நாற்காலிக்கு அருகிலேயே வைத்திருந்த பையை எடுத்து அவரிடம் கொடுத்தார் சண்முகசுந்தரம். அதைப் பெற்றுக்கொண்டதும் ”அப்ப நான் கெளம்பறேன்” என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கித் திரும்பினார்.  அவருடைய வேகம் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது.

“ஒரு நிமிஷம் பொறுங்க நல்லபெருமாள். நம்ம ஊருக்குப் புதுசா ஒரு நண்பர் வந்திருக்காரு. அவரை அறிமுகப்படுத்தறேன்” என்று சொல்லி சண்முகசுந்தரம்தான் அவரை நிறுத்தினார். உடனே அவர் நின்று ஒருகணம் என் பக்கம்  திரும்பினார்.

”இவரு எழுத்தாளர். பேரு பாவண்ணன். இவருடைய முதல் சிறுகதைத்தொகுதி காவ்யா வழியாதான் வந்தது” என்று சண்முகசுந்தரம் சொல்லிக்கொண்டிருந்தபோதே அவர் தன் கையிலிருந்த பையை கீழே வைத்துவிட்டு என்னிடம் “வணக்கங்க” என்று சொன்னவாறு இருகரம் கூப்பினார். சட்டென நான் எழுந்து நின்று நானும் கைகூப்பி அவருக்கு வணக்கம் சொன்னேன்.

 “இவரு நல்லபெருமாள். உண்மையிலேயே நல்ல பெருமாள்” என்று என்னிடம் சொன்னார் சண்முகசுந்தரம். அவர் புன்னகைக்கவில்லை. ஆனால் அவர் சொற்களைக் கேட்டு நாங்கள் இருவரும் புன்னகைத்தோம்.

”யாருக்கும் தீங்கு நினைக்கத் தெரியாத மனிதர். திருக்குறள் மேல ரொம்ப ஈடுபாடு கொண்டவர். அந்தக் காலத்துல சாயங்கால நேரத்துல கடைத்தெருவுல நின்னு திருக்குறளைப் பிரபலப்படுத்தறதுக்காக பிரச்சாரங்கள்லாம் செஞ்சிருக்காரு. அல்சூர் மார்க்கெட் பின்னால ஒரு மாடியில திருக்குறள் மன்றம்னு ஒரு நூலகத்தை சொந்த செலவுல நடத்தி வராரு. இந்தப் புத்தகத்தையெல்லாம் அந்த நூலகத்துக்காகத்தான் வாங்கறாரு”

நல்லபெருமாளைப்பற்றி விரிவாகவே எடுத்துச் சொன்னார் சண்முகசுந்தரம். அவரைப்பற்றிச் சொன்ன ஒவ்வொரு செய்தியும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவருடைய கைகளைப்பற்றி அழுத்தமாகக் குலுக்கினேன்.

“ஒருமுறை நூலகம் பக்கமா வாங்க. அப்ப விரிவா பேசலாம். எனக்கு நேரமாவுது”

விடைபெற்றுக்கொண்டு வேகமாக வெளியேறினார் நல்லபெருமாள்.

“சொந்த பணத்தை எடுத்து பத்து ரூபா தானமா கொடுக்கறதுக்கே முன்னபின்ன யோசிக்கிற இந்தக் காலத்துல இவரு தன்னுடைய சொந்த சம்பளத்துலேர்ந்து மாசாமாசம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு புத்தகம் வாங்கி நூலகத்துல வைக்கறாரு” என்றார் சண்முகசுந்தரம்.

அவர் சொன்ன செய்தி எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. “நீங்க சொல்றதெல்லாம் உண்மையா? சொந்தக் காசை செலவு செஞ்சி புத்தகம் வாங்கி நூலகம் நடத்தறாரா?” என்று நம்பமுடியாமல் கேட்டேன். “ஆமாம். என்கிட்டதான வாங்கறாரு. எனக்குத் தெரியாதா?” என்றார் சண்முகசுந்தரம். தொடர்ந்து “ஆரம்பத்துல நாலைஞ்சி நண்பர்கள் ஒன்னா சேர்ந்து ஒரு படிப்பகம் மாதிரி ஆரம்பிச்சாங்க. பல பேரு நன்கொடையா கொடுத்த புத்தகங்களை வச்சித்தான் அதை ஆரம்பிச்சாங்க.  ரெண்டு மூனு வருஷம் எல்லாமே நல்லபடியாதான் போச்சி. ஆனா எல்லா காலத்துலயும் எல்லார்கிட்டயும் ஆர்வம் எப்பவும் ஒரே மாதிரி இருக்குமா? நாளாவ நாளாவ  ஒவ்வொருத்தரா பிரிஞ்சி போக ஆரம்பிச்சாங்க. இவருக்குத்தான் தலைஉச்சி வரைக்கும் ஏறிய ஆர்வம் கடைசிவரைக்கும் இறங்கவே இல்லை. இன்னைய தேதி வரைக்கும் அப்படியே நிலைச்சிருக்குது. இதுக்காகவே ஒரு இடத்தை புடிச்சி தனியா ஒரு நூலகத்தை ஆரம்பிச்சிட்டாரு. ஒவ்வொரு மாசமும் சொந்த சம்பளத்துலேர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி புத்தகம் வாங்கி நூலகம் நடத்தறாரு” என்றார்.

“இந்த ஊருல பொறந்து வளர்ந்தவரா?” என்று கேட்டேன்.

”இல்லை இல்லை. சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம். ஸ்கூல் படிப்புலாம் அங்கதான்.  இவுங்கப்பா இங்க    எம்.ஐ.ஜி. யில வேலை செஞ்சவரு. அவரு ரிட்டயர்டானதும் குடும்பத்த இங்க வரவழைச்சிகிட்டாரு. இவரும் இங்கயே ஃபிட்டர் ட்ரெய்னிங்க் முடிச்சி, ஐ.டி.ஐ.ல சேர்ந்துட்டாரு.”

“கஷ்டமான வாழ்க்கைதான்”

“உண்மைதான். ஆனா ஒரு மனுஷன் மனசுல லட்சியம்னு ஒன்னு உக்காந்துட்டா, அதுக்கப்புறம் எல்லாக் கஷ்டமும் தூசுதான். ஊதித் தள்ளிட்டு போயிட்டே இருப்பான். நல்லபெருமாள் அந்த மாதிரியான ஆளு. சொந்த கஷ்டத்தை ஒருநாளும் யாருகிட்டயும் காட்டிக்கமாட்டாரு. அவரு பேச்சு, மூச்சு, சிந்தனை எல்லாமே திருக்குறள் மன்றம் மட்டும்தான்”

“அப்படியா?”

“அவரு தன்னுடைய வீட்டுக்கு போகாமகூட ஒருநாள் இருந்திடுவாரு. ஆனா திருக்குறள் மன்றத்தைத் தெறக்காம ஒருநாள் கூட இருக்கமாட்டாரு. அப்படி ஒரு லட்சியம். அப்படி ஒரு விரதம் அவருக்கு”

நல்லபெருமாளைப்பற்றி சண்முகசுந்தரம் சொல்லச்சொல்ல, எனக்கு அவர்மீதான ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியது. “வாங்களேன். ஒரு நடை அந்த நூலகத்தைப் பார்த்துட்டு வந்துடலாம்” என்று அழைத்தேன். எனக்கு உடனடியாக அதைப் பார்க்கவேண்டும் போல இருந்தது.

“அப்படியா? போலாம்னு சொல்றீங்களா?” என்று முதலில் ஏதோ இழுத்தமாதிரி சொன்னார் சண்முகசுந்தரம். பிறகு அறையின் பக்கமாகத் திரும்பி தன் மனைவியிடம் “லச்சு, அறைக்குள்ள அன்னைக்கு எடுத்துவந்த திருக்குறள் மன்றம்  புத்தகங்கள் இருக்கும், அத எடு” என்று சொல்லிவிட்டு உடைமாற்றிக்கொண்டு வந்தார். அதற்குள் துணைவியார் புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். அவற்றை வாங்கிக்கொண்டு “வாங்க போகலாம்” என்று புறப்பட்டார். நானும் அவரோடு சேர்ந்து பேசிக்கொண்டே நடந்தேன்.

பிரதான சாலை வழியாக நடந்து முருகர் கோவிலைக் கடந்து காவலர் குடியிருப்பின் வழியாக தாமோதர முதலியார் தெருவுக்குச் சென்றோம். தொலைவில் சோமேஸ்வரர் கோவில் கோபுரம் தெரிந்தது. ஒரு மடத்தின் வாசலின் நின்றோம். இரண்டடி அகலத்துக்கு ஒரு சிறிய வாசல் இருந்தது. அங்கிருந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் தொடங்கின. வாசலுக்கு மேல் தமிழ், கன்னடம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் திருக்குறள் மன்றம் என எழுதப்பட்ட பெயர்ப்பலகை தொங்கியது. நான் அதை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது “அந்த மரப்படியில பார்த்து ஏறிப் போங்க, மாடியிலதான் நூலகம் இருக்குது” என்றார் சண்முகசுந்தரம்.  குறுகலான படிகளில் ஏறுவதற்கு உதவியாக உத்திரத்திலிருந்து பருத்த கயிறொன்று தொங்கியது. நாங்கள் அதைப் பற்றிக்கொண்டு ஏறி மேல்தளத்தை அடைந்தோம்.

பலகையால் ஆன தளத்தின் மீது ஆளுயர மர அடுக்குகளை வைத்து ஒவ்வொரு அடுக்கிலும் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. முதல் பார்வையிலேயே அந்த நேர்த்தியும் சுத்தமும் என்னைக் கவர்ந்தன. ஒவ்வொரு புத்தகமும் பைண்டிங் செய்யப்பட்டு, தேடுவதற்கு உதவும் வகையில் புத்தகத்தின் பெயரும் ஆசிரியரின் பெயரும் முதுகில் எழுதப்பட்டிருந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், சமயம், வாழ்க்கை வரலாறு என தலைப்பிடப்பட்டு ஒவ்வொரு அடுக்கும் வகுக்கப்பட்டிருந்தது. குண்டுகுண்டான கையெழுத்தில் ஒவ்வொரு புத்தகத்தின் பின்னட்டையிலும் ‘நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்’ என்றொரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதைப் புரட்டிப் பார்த்தபடி “யாரு சார் இப்படி அச்சடிச்ச மாதிரி எழுதனாங்க? ரொம்ப அழகா இருக்குது” என்றேன். நல்லபெருமாள் எவ்விதமான உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் “நான்தான்” என்றார்.

அன்றே நான் அந்த நூலகத்தில் உறுப்பினராகிவிட்டேன். அவரிடமே வார, மாத இதழ்கள் அனைத்தும் இருந்தன. அவற்றைப் படிக்கவேண்டுமெனில் அதற்குத் தனியாக உறுப்பினர் கட்டணம் செலுத்தி தனி அட்டை பெறவேண்டும் என்று கூறினார். அடுத்த நிமிடமே அந்த அட்டையையும் வாங்கிக்கொண்டேன். “நீங்க இப்பவே புத்தகம் எடுத்துக்கலாம்” என்றார் நல்லபெருமாள். 

எதை எடுப்பது என முடிவெடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு பெரிய சுரங்கத்துக்குள் நிற்பதுபோல என் மனம் உணர்ந்தது. நாற்பதுகள், ஐம்பதுகள், அறுபதுகளில் வெளிவந்த பல அருமையான நூல்களும் மலர்களும் அங்கே இருந்தன. தனி ஒருவராக அவர் அவற்றையெல்லாம் எப்படிச் சேகரித்தார் என்பது நினைக்க நினைக்க மலைப்பாக இருந்தது. மகாத்மா காந்தி நூல்களுக்கென தனி வரிசை. விவேகானந்தர் நூல்களுக்கென இன்னொரு வரிசை. மொழிபெயர்ப்பு நூல்களுக்கென தனி வரிசை. அதைத் தொடர்ந்து அகரவரிசைப்படி எழுத்தாளர்களின் பெயர்களின் கீழே தனித்தனி நூல் வரிசைகள். ”வருஷக்கணக்குல இங்கயே உட்கார்ந்து படிக்கலாம் போல இருக்குதே” என்றேன். நல்லபெருமாள் பதில் எதுவும் சொல்லாமல் மென்மையாகச் சிரித்தார்.

நான் இரண்டு புத்தகங்களையும் இரண்டு வார இதழ்களையும் எடுத்துக்கொண்டேன். சண்முகசுந்தரமும் கொண்டுவந்த புத்தகங்களைக் கொடுத்துவிட்டு புதிய புத்தகங்களை மாற்றி எடுத்துக்கொண்டார். வீட்டை நோக்கித் திரும்பி நடந்தபோது நல்லபெருமாளின் ஆர்வம் தொடர்பாகவும் அவருடைய கடின உழைப்பு தொடர்பாகவும் சொல்லிக்கொண்டே வந்தார் சண்முகசுந்தரம்.

அடுத்த நாள் மாலையில் நூலகத்துக்குச் செல்லும்போது என் மனைவியையும் என்னோடு அழைத்துச் சென்றேன். அவரும் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர். ஒரு கூடத்தில் அத்தனை நெருக்கமாக ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த விதத்தைப் பார்த்ததும் அவரும் விழிவிரிய சில கணங்கள் பார்த்தார். நான் நல்லபெருமாளிடம் அவரை அறிமுகப்படுத்தினான்.

“தோராயமா எவ்வளவு புத்தகங்கள் இருக்கும்?” என்று தன் பேச்சின் போக்கில் கேட்டார் என் மனைவி. நல்லபெருமாள் புன்னகைத்தபடி “கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் இருக்கும்” என்றார். ஒரு தனி மனிதர் தன் சொந்த முயற்சியாலும் செலவாலும் அத்தனை புத்தகங்களைச் சேகரித்திருக்கிறார் என்பதை நினைத்தபோது வியப்பாக இருந்தது.

அடுத்தநாள் முதல் என் மனைவியே மாலை வேளையில் வீட்டிலிருந்து நூலகத்துக்குப் புறப்பட்டுச் சென்று புத்தகங்கள் எடுத்துவரத் தொடங்கினார். பல நேரங்களில் அவர் அந்த நூலகத்திலேயே ஏதாவது புத்தகம் படித்தபடி காத்திருப்பார். நான் அலுவலகத்திலிருந்து நேரிடையாக நூலகத்துக்கு வந்துவிடுவேன். பிறகு புத்தகங்களை எடுத்துக்கொண்டு இருவருமாக சிறிது நேரம் கடைத்தெருவில் அலைந்து திரிந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவோம். மெல்ல மெல்ல, நல்லபெருமாள் எங்கள் குடும்பநண்பராகவும் மாறினார்.

பணிநிறைவு பெற்ற பின்னர் சண்முகசுந்தரம் பெங்களூரிலிருந்து சென்னைக்கு இடம் மாறினார். அவர் எனக்கு அந்த நூலகத்தை அறிமுகம் செய்ததுபோலவே, நான் எனக்குத் தெரிந்த பலரை அந்த நூலகத்துக்கு அழைத்துச் சென்று உறுப்பினர்களாக்கினேன். என்னைப் போலவே அவர்களும் நல்லபெருமாளிடம் நெருக்கம் பாராட்டினர்.

இருபதாண்டு காலம் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விதமாக நகர்ந்தது. இடையில் நூலகத்தைத் தொடர்ந்து நடத்தமுடியாதபடி நல்லபெருமாளுக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டன. யாரோ ஒருசிலர் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று ஜன்னல்களை உடைத்து சிதைத்துவிட்டனர். விசாரிக்க வந்த காவல்துறையினர் பிரச்சினையைத் திசைதிருப்பி அவரைச் சிறுமைப்படுத்தினர் என்றும் அவர் தீராத மன உளைச்சலோடு நடமாடிக்கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் கிடைத்தன. அவரைச் சந்தித்துப் பேசாமல் என்னால் எதையும் உறுதியாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. தற்செயலாக ஒருநாள் அவரை அல்சூர் பேருந்து நிறுத்தத்தில் சந்தித்து அவரிடம் அதைப்பற்றி பேச முனைந்தேன். அக்கணமே அவர் என்னைத் தடுத்து “நாம் அதைப்பற்றி பேச வேணாமே. வேற எதையாவது பேசலாம்” என்றார்.  வேறு வழியில்லாமல் அவருடைய நிலைபாட்டைப் புரிந்துகொண்டு வேறு சில செய்திகளைப் பேசத் தொடங்கினேன்.

சில மாதங்கள் வரை அந்த நூலகத்தை அவர் சாத்திவைத்திருந்தார். ஒவ்வொருமுறையும் நான் நூலகத்துக்குச் சென்று ஏமாற்றத்தோடு திரும்பி வந்தேன். எப்போதாவது அவரைக் கடைத்தெருவில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். நூலகத்தைப்பற்றிய பேச்சை எடுத்தால் “இன்னும் கொஞ்ச காலம்தான். சீக்கிரம் தெறந்து முன்பு இருந்ததைவிட நல்லபடியா சிறப்பா நடத்துவேன்” என்று நம்பிக்கையோடு சொன்னார். துரதிருஷ்டவசமாக, அந்த நல்ல காலம் வரவே இல்லை.

அல்சூர் கடைத்தெருவுக்குப் பின்னால் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து நல்வாழ்வகம் என்னும் பெயரில் இயற்கை உணவு சார்ந்த அரிசி, கேழ்வரகு, கம்பு, தினை போன்ற தானியங்களை விற்பனை செய்யும் ஒரு கடையைத் திறந்து நடத்தத் தொடங்கினார். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நான் அவரைச் சந்திக்க அந்தக் கடைக்குச் சென்றேன். ஏதோ ஒரு மூலையிலிருந்து ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை’ என்னும் வள்ளலார் வரி இசையோடு ஒலித்தபடி இருந்தது. இசை கேட்பது அதுவரை அவரிடம் இல்லாத ஒரு பழக்கம். புதுசாக ஒலிப்பதைக் கேட்க மகிழ்ச்சியாகவே இருந்தது.

வழக்கம்போல உற்சாகமான புன்னகையோடுதான் அவர் உரையாடினார். ஆனால் நூலகம் தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் அவர் பதில் சொல்லவில்லை. ”த்ச், விடுங்க. நடக்கும்போது நடக்கும். பார்ப்போம்” என்று நாக்குச் சப்புக்கொட்டியபடி உரையாடலை வேறு பக்கம் திருப்பிவிட்டார். “புத்தகங்களையெல்லாம் யாருக்குக் கொடுத்தீங்க? எப்படி எடுத்துட்டு போனாங்க?” என்று பல கேள்விகளைக் கேட்டேன். அவர் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. அவருடைய அமைதியை உடைக்க என்னால் முடியவில்லை.

சோமேஸ்வரர் கோவிலிலிருந்து தாமோதர முதலியார் தெரு வழியாக நடப்பதுதான் போக்குவரத்துச் சந்தடியில் சிக்காமல் எங்கள் வீட்டுக்கு வருவதற்கு எளிய வழியாகும். அதனால் அந்தத் தெரு வழியாக நடந்து வரும்போதெல்லாம், பாழடைந்துபோய் வெறுமை சூழ்ந்து நின்றிருக்கும் அந்த மடத்துக் கட்டிடத்தையும் நூலகம் இயங்கிய மாடியையும் இரண்டடி அகல மரக்கதவையும் பார்த்துக்கொண்டே நடப்பேன். கடந்த பத்தாண்டுகளில் இடிபாடுகளோடு அதன் கோலமே மாறிவிட்டது.

நல்லபெருமாளைச் சந்திக்கும் தருணங்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தன. திருக்குறள் மன்ற நூலகம் இயங்கியவரை  எனக்குத் தமிழ்ச்சங்க நூலகத்துக்குச் செல்லவேண்டிய தேவை ஏற்படவில்லை. எல்லா நூல்களும் எனக்கு அங்கேயே கிடைத்துவந்தன. திருக்குறள் மன்றம் முடங்கிய பிறகு என்னுடைய வாசிப்புத்தேவைக்காக தமிழ்ச்சங்க நூலகத்தில் உறுப்பினராக இணைந்து புத்தகங்களை எடுக்கத் தொடங்கினேன். அந்த நூலகமும் ஒரு பெரிய அறிவுச்சுரங்கம். தமிழகத்தில் இயங்கிவரும் முக்கியமான எந்தப் பெரிய நூலகத்துக்கும் இணையான ஒன்றாக அதைச் சொல்லலாம். புத்தகங்களை எடுத்துக்கொண்டு திரும்பிவரும்போது ஒருமுறை நல்வாழ்வகம் கடைக்குச் சென்று நல்லபெருமாளை நலம் விசாரித்துவிட்டுத் திரும்புவேன். அவரைப் பார்த்து உரையாடிவிட்டுத் திரும்பி வருவது என்பது என்னைப் பொறுத்தவரையில் சிறிது நேரம் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து இறந்த காலத்தில் வாழ்ந்துவிட்டுத் திரும்பியதுபோல இருக்கும்.

அவர் புத்தகங்களைக் கைவிட்டாலும் புத்தகங்கள் அவரைக் கைவிடவில்லை. அந்த அறையிலேயே ஒரு பக்கத்தில் இரும்புத்தாங்கியில் உணவு, மருத்துவம் தொடர்பான நூல்களை விற்பனைக்கு வைத்திருந்தார் நல்லபெருமாள். மெல்ல மெல்ல அவருடைய நண்பர்கள் வெளியிடும் இலக்கியப்புத்தகங்களின் பிரதிகளும் அங்கு வந்து சேர்ந்தன.

கடந்த மார்ச் மாதத்தில் நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருந்தபோது மறைந்த இறையடியான் முன்னுரையோடு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ‘வசனம்’ என்னும் பெருந்தொகை நூல் பற்றிய பேச்சு வந்தது. ஏறத்தாழ இரண்டாயிரம் வசனங்களைத் தமிழில் மொழிபெயர்த்து பசவசமிதி அத்தொகுதியை வெளியிட்டிருந்தது. நான் அதைப்பற்றி விரிவான ஒரு அறிமுகக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். நண்பர்கள் அத்தொகுதியைப் பார்க்க விழைந்தனர். ஆனால் அவர்களிடம் காட்ட புத்தகத்தைத் தேடும்போதுதான் புத்தகம் என்னிடம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். துரதிருஷ்டவசமாக. யாரோ ஒரு நண்பருக்குக் கொடுத்து திரும்பி வாங்க மறந்துவிட்டது. எப்போதோ ஒருமுறை நல்லபெருமாளின் நல்வாழ்வகம் கடையில் விற்பனைப்பகுதியில் அப்புத்தகத்தைப் பார்த்த நினைவு வந்ததால், அன்று மாலையே அவரைச் சந்திப்பதற்காகச் சென்றேன்.

சிறிது நேரம் பழைய கதைகளைப் பேசிவிட்டு ‘வசனம்’ புத்தகம் பற்றி விசாரித்தேன். “ஆமா, இறையடியான் எனக்கும் அந்தப் புத்தகத்தைக் கொடுத்தாரு. இங்கதான் ரொம்ப நாளா இருந்தது. பெரிய புத்தகம். விலை அதிகம்னு யாரும் வாங்கலை. ஒருநாள் சங்கரலிங்கத்துகிட்ட நான் எடுத்துக் கொடுத்துட்டேனே” என்றார்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என எனக்கு ஏமாற்றமாக இருந்தது. “அது யாரு சங்கரலிங்கம்?” என்று கேட்டேன். நல்லபெருமாள் அவரைப்பற்றி பல விவரங்களைச் சொன்னார். ஆனால் அந்த முகம் எனக்குப் பிடிகிடைக்கவில்லை. “நீங்க பார்த்திருக்கீங்க. ஒருவேளை நேருல ஆளப் பார்த்தா கண்டுபுடிச்சிடுவீங்க” என்றார்.

“எப்படியாவது அந்தப் புத்தகம் எனக்கு வேணுமே”

“அது ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒருநாள் கொண்டு வாப்பான்னு சொன்னா, சங்கரலிங்கம் கொண்டுவந்து கொடுத்துடுவாரு”

அவர் அதெல்லாம் மிக எளிதான செயல் என்பதுபோலத்தான் சொன்னார். ஆனால் அவர் சொன்ன அளவுக்கு அது எளிமையானதாக அமையவில்லை.  நான் தொடர்ந்து பத்து நாட்கள் வரைக்கும் அவரை தொலைபேசி வழியாக இரண்டுநாட்களுக்கு ஒருமுறை என அழைத்து புத்தகம் குறித்து விசாரித்தபடி இருந்தேன். அவர் சங்கரலிங்கத்தைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை என்றும் எப்போது அழைத்தாலும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக தகவல் வருவதாகவும் ஒரே பதிலைத்தான் சொல்லிக்கொண்டு இருந்தார்.

அடுத்த வாரத்தில் அல்சூர் மெட்ரோ நிலையத்தின் அருகில் ஒரு நண்பரைச் சந்திக்கவேண்டிய ஒரு வேலை வந்தது. அந்தச் சந்திப்பை முடித்துக்கொண்டு நல்லபெருமாளைச் சந்திப்பதற்காகச் சென்றேன். வழக்கம்போல வள்ளலாரின் வரிகள் மெல்லிய குரலில் ஒலிக்கும் பின்னணியில் அவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். புதிதாக வந்து இறங்கிய மருந்துப்பெட்டிகளையெல்லாம் கணக்குப் பார்த்து அடுக்கிவைத்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் பிற செய்திகளைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, நான் ’வசனம்’ புத்தகத்தைப்பற்றிய பேச்சை மெதுவாக எடுத்தேன். “உண்மையாகவே சங்கரலிங்கத்தைப் பிடிக்கமுடியலை” என்று உள்ளார்ந்த வருத்தத்தோடு அவர் சொன்னார்.

“அந்தப் புத்தகம் அவசியமா வேணும். அதுக்காகத்தான் கேட்டேன். உங்க கைக்கு புத்தகம் வந்ததுமே எனக்கு ஒரு குரல் கொடுங்க. நான் உடனே வந்து வாங்கிக்கறேன்” என்றேன். அதைத் தொடர்ந்து இன்னும் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். அன்று மார்ச் 28.

அதற்குப் பின் அவரிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. அவரிடம் மீண்டும் மீண்டும் விசாரிப்பதால் பயனில்லை என்பதால் நானும் அவரைத் தொடர்புகொள்ளவில்லை.

சித்திரை மாதம் பிறந்ததிலிருந்தே உறவினர் வகைகளிலும் நண்பர்கள் வகைகளிலும் நடைபெற்ற பல திருமண நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி ஊர்ப்பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு நண்பரின் வீட்டுத் திருமண ஏற்பாடுகளில் உதவி செய்வதற்காக கடந்த வாரம் எங்கள் கிராமத்துக்கு வந்திருந்தேன். பகல் முழுதும் அலைச்சல். இரவு வீட்டுக்குத் திரும்பிய பிறகே அலைபேசியில் வந்திருந்த செய்திகளைப் புரட்டிப் படித்தேன். 20.05.2025 அன்று நல்லபெருமாள் இயற்கையெய்தினார் என்ற செய்தியை பெங்களூர் நண்பரொருவர் அனுப்பியிருந்தார். என்னால் அச்செய்தியை நம்பவே முடியவில்லை. நல்ல நடமாட்டத்தோடு ஏழெட்டு வாரங்களுக்கு முன்பு பார்த்த ஒருவர் இப்போது இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

மீண்டும் மீண்டும் வசனம் புத்தகத்தை ஒரு காரணமாகக் கொண்டு அவரைச் சந்தித்து ஒரு நெருக்கடியை அவருக்கு அளிக்கவேண்டாம் என நினைத்துதான் நல்லபெருமாளை நான் சந்திப்பதைத் தவிர்த்தேன். இனி அவரைச் சந்திக்கவே முடியாது என மாறிவிட்ட சூழலில், என் தயக்கத்தை உடைத்து அவரை ஓரிரு முறைகளாவது சந்தித்திருக்கலாம் என இப்போது தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் பேசியிருக்கலாம். அவருடைய உடல்நிலை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்திருக்கலாம். எல்லாமே காலம் கடந்த ஞானம். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கூட எனக்குக் கிடைக்கவில்லை என்பது துயரளிக்கிறது.

நல்லபெருமாள் உலகியல் அனுபவம் மிக்கவர். மன உறுதியும் செய்துமுடிக்கும் செயல்வேகமும் அவருடைய முக்கியமான அடையாளம். ஏதோ ஒரு கட்டத்தில் திருக்குறள் அவரைப் பண்படுத்தியது. அதனால் மக்களைப் பண்படுத்தும் ஊடகமாக திருக்குறள் அமையக்கூடும் என அவர் உறுதியாக நினைத்தார். தன் எண்ணத்தில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. அதைத் தமிழ்ச்சமூகத்திடையில் கொண்டுசெல்வதைக் கடமையாக வரையறுத்துக்கொண்டு, இறுதிமூச்சுள்ள வரைக்கும் ஒரு தனிமனித இயக்கமாகவே செயல்பட்டார். வெற்றி, தோல்வி பற்றி அவர் ஒருநாளும் கவலைப்பட்டதில்லை. இடையறாது இயங்குவதை மட்டுமே அவர் தன் வாழ்நாள் நெறியாகக் கொண்டிருந்தார். அந்த மகத்தான மனிதர் நல்லபெருமாளுக்கு அஞ்சலிகள்.

 

(காவ்யா – இலக்கிய அரையாண்டிதழ் – ஏப்ரல் 2025- அக்டோபர் 2025)