’முத்தூ முத்தூ’ என இரண்டு தரம் கூப்பிட்டுப் பதில் வராமல் போகவே எரிச்சலுடன் முனகியபடியே நாலு எட்டு நடந்து பின்கட்டு இறவாணத்தைப் பிடித்தவாறே சாணம் பிசைந்து கொண்டிருந்த ருக்குவிடம் ‘எங்கடி போயி தொலைஞ்சிது ஒன் சிகாமணி?’ என்றான் ராமசாமி.
‘அங்கதா
ஆடிக்னிருந்தாம் பாரு!’
‘அங்க
அங்கன்னா அந்தரத்லியா தொங்கறான்? ஆவி போவ ஒரு மனுஷன் கத்திகினு இருக்கான். ஆளயே காணம்டின்னா
கொஞ்சமாச்சும் அக்கறயோட பதில் சொல்றியா நீ?’’
‘வண்டிக்காரமூட்டுல
பாட்டு கீட்டு கேட்டுணு ஒக்காந்திருப்பான்; பாத்து இழுத்தும் போறதவுட்டு சாணி தட்டறவகிட்ட
சரத்து கட்டறியே?’
பொசுபொசுவென்று
வந்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு திரும்பினான். வாசல் திண்ணையில் தயாராய்
இருந்த துணிமூட்டையில் கையை ஊன்றியபடி மீண்டும் முத்தூ முத்தூ என்று கூவினான். பதில்
வராதது ஏமாற்றமாய் இருந்தது. கடுப்புடன் தெரு மூலையில் இருந்த வண்டிக்காரர் வீட்டை
நோக்கி நடந்தான். வழியில் ஆடு மேய்த்துக்கொண்டு வந்த சிறுவனைப் பார்த்து ‘முத்துப்
பையனைப் பாத்தியாடா?’ என்று கேட்டான்.
‘இல்ல.’
‘மொளச்சி
மூனு எல உடல அதுக்குள்ளாற ஒரு தெருவத் தாண்டி இன்னோர் தெருவுல ஆட்டம் கேக்குதா தொரைக்கி.
கைல ஆப்டட்டும். இன்னிக்கு மொவன கால ரெண்டையும் ஒடச்சி திண்ணைல ஒக்கார வைச்சிட்டுதா
மறுவேல பாக்கணும்!’
ஏறிக்கொண்டிருந்த
வெயிலைப் பார்த்து நேரமாவதை நினைத்து மனசுக்குள் பதட்டம் கூடியது. இந்நேரத்துக்கு கடை
போட்டால்தான் மத்தியான வேள்க்குள் அரை கிலோவோ ஒரு கிலோவோ அரிசிக்குக் காசு தேற்றமுடியும்.
மாமூலான இடத்தில் இன்னொரு ஆள் வந்து சாக்குப் போட்டுவிட்டால் ஆளைக் கிளப்புவதும் கஷ்டம்.
‘எல்லாத்தையும் எடுத்து விரிச்சிட்டனே அண்ணாச்சி. இப்ப வந்து கௌப்பறியே’ என்று
வெற்றிலைக்கறை பிடித்த பற்கள்க் காட்டி எவனாவது அல்லது எவளாவது சிரிக்க நேரும். அடிவயிறு
பற்றி எரிந்தாலும் காட்டிக் கொள்ளாது வேறு இடம் தேடி லொங்கு லொங்கு என்று அலைவதற்குள்
இருக்கிற பொழுதும் உள்ளே போய்விடும்.
வாசல்
தூணைப் பிடித்தபடி ரேடியோ பாட்டில் லயித்துக் கிடந்தவனின் வெறும் முதுகில் பளீரென்று
ஓர் அறை விட்டான் ராமசாமி. ‘‘ஐயோ அம்மா’என்று பலமாக அலறிக் கொண்டு வீட்டை நோக்கி ஓட
ஆரம்பித்தான் முத்து.
‘நில்லுடா
அங்க!’
‘நிக்கல
மொவன பலி குடுத்துருவன் இன்னிக்கு!’
‘பழய சோத்துக்கே
லாட்ரி அடிக்குது இங்க. பாட்டா கேக்கற பாட்டு. ஒன் ஒடம்புத் தோல கிழிச்சி இன்னிக்கு
செருப்பா தய்க்கலன்னா ஏன்னு கேளுடா...’
அடியின்
வலி தாங்கமுடியாமல் அலறிக்கொண்டே வந்தவனின் கூச்சல் கேட்டு சாணிக் கையோடேயே வாசலுக்கு
ஓடிவந்த ருக்கு முத்துவை அணைத்துக்கொண்டாள். ‘உடுடி அவன, உடுடி அவன’ என்று
இடுப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறவனைப் பிரிக்க முயற்சித்தான் ராமசாமி. முத்துவுக்கு
விழவேண்டிய உதை ருக்குவின் தொடையில் விழுந்தது. கோபத்துடன் ருக்கு சத்தம் போட்டாள்.
அவள் சத்தம் பெரிசாகவும்தான் ராமசாமியின் சத்தம் அடங்கியது.
‘சரி சரி
மூட்டய தூக்குடா போவலாம்...’
சாக்குகள்
அக்குளில் இடுக்கிக்கொண்டு முத்துவைப் பார்த்துச் சொன்னான்.
‘நா வரல.’
‘வராம
எங்கடா நக்கப் போற?’
‘ஒங்ககூட
வரமாட்டேன்; தனியா போறன்.’
‘தனியா
போயி வந்து கிழிச்ச. பெரிய யேபாரி மயிரு. சீ கௌம்பு.’
‘நா தனியாதான்
போவேன்.’
‘ஆமா நேத்து
கிழிச்சத பார்த்தன்ல, கிளம்புடான்னா கத சொல்றான்.’
‘நா வல்ல
போ.’
முத்து
சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். ‘அவ்ளோ தூரத்துக்கு ஆயிருச்சா’ என்று
கைவீசிகைவீசி ராமசாமி அவனைப் பிடிக்க முயலும் போதெல்லாம் நகர்ந்துநகர்ந்து ருக்குவின்
முதுகிலோ பக்கத்தில் இருக்கிற தந்திக்கம்பத்தையொட்டியோ மறைந்துகொண்டான். மறைந்தபடி
ராமசாமியை உற்று நோக்கி அவன் அசைவுகள்க் கவனித்தபடியே நேற்று நடந்ததை நினைத்துக் கொண்டான்.
நேற்று
பகல் வேள். விரித்த சாக்குகளில் ரெடிமேட் கவுன்களோடு சிறுசிறு உள்ளாடைகளோடும் ராமசாமி
உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் வட்டக்கம்பிகளில் வரிசையாய் கட்டித் தொங்கவிடப்பட்ட
சுருக்குப்பைகள் வைத்துக் கொண்டு, முத்து உட்கார்ந்திருந்தான். நிமிஷத்துக்கு ஒரு தரம்
‘இன்னிக்கு உட்டா நாளைக்குக் கிடைக்காது. எடு எடு எட்டணாவுக்கு ஒன்னு. ரூபாய்க்கி ரெண்டு’ என சுறுசுறுப்பாய்க்
கூவிக் கொண்டிருந்தான். முத்துவின் குரல் மாத்திரம் எடுப்பாய்க் கேட்டுவிடாதபடிக்குப்
பக்கத்தில் ஒரே சமயத்தில் தத்தம் பண்டங்கள் விற்கும் குரல்களுடன் கலந்து ஒலித்தது.
சாப்பாட்டு நேரம் நெருங்கும்போது ஒரு கிழவி குனிந்து கண்கள்க் கசக்கியபடி முத்துவைப்
பார்த்துச் சுருக்குப்பை விலை கேட்டாள்.
‘எடுத்துக்க
ஆயா, எட்டணாதான் ஒன்னு.’
‘இன்னாடா
தம்பி இந்தச் சின்னப் பைக்கு எட்டணா வாடா? ஒன்னுக்குத்தா சொல்றியா, ஜோடிக்கு சொல்றியாடா?’
‘ஒரு பைதா
எட்டணா ஆயா.’
‘நாலணாவுக்குக்
குடுக்கிறயாடா.’
‘எட்டணாவுக்கு
ஒரு பைசா குறையாது ஆயா.’
’குடுக்கலாம் குடுடா.’
‘வராது
ஆயா.’
‘சரி முப்பது
பைசாவுக்குக் குடு.’
‘அதெல்லாம்
கட்டாது ஆயா.’
‘ஒரே வெலைடா,
நாப்பது பைசாவுக்குக் குடுக்கிறியா.’
முத்துவுக்குக்
கொடுத்து விடலாம் என்றிருந்தது. ‘சரி காசி கொடு’ என்று சொன்னவனின் குரலை மறித்தபடி ‘அதெல்லாம்
வராது போ ஆயா. பை வாங்கற மூஞ்சியப் பாரு’ என்று பக்கத்தில் இருந்து வந்த ராமசாமியின்
குரல் அழுத்திவிட்டது. ஆயாவும் பதிலுக்கு முனகிவிட்டுப் போனாள். ஆயா போய் வெகு நேரம்
ஆனபிறகு முத்து ‘நாப்பது பைசாவுக்கே கொடுத்திருக்கலாம்’ என்று
ராமசாமியிடம் சொன்னான். ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ ஒன்னும் சொல்லித் தர வேணாம்’ என்றான்
ராமசாமி. ‘இந்த மாதிரியே ஒக்காந்துக்னிருந்தா எப்பதா விக்கமுடியும், என்றான் முத்து.
‘எதுத்தாடா பேசற’
என்று படீரென்று அறைந்துவிட்டான் ராமசாமி. மாறிமாறிக் கன்னங்களில் நாலு அறைகள். முத்து
சுருக்குப்பை வள்யத்தைத் தூக்கிக்கொண்டு ‘நா சத்தரம் பக்கம் போறன் போ’ என்ற
கோபமும் அழுகையுமாய்க் கிளம்பி விட்டான். ‘ஒங்கிட்ட வாங்கறதுக்குதான் எல்லாரும் காணமே
காணமேன்னு பறக்கறாங்க போடா’
என்று காறித் துப்பிய ராமசாமியின் குரல் பின்பக்கம் கேட்டது.
சத்திரம்
ராமசாமிக்குப் பிடிக்காத இடம். சத்திரத்தில் உட்கார்கிற வருகிற போகிற ஜனங்கள் எல்லாம்
சும்மா உருப்படிகள்த் தடவிப் பார்த்து விலை கேட்டுவிட்டு அடிமாட்டு விலைக்குப் பேரம்
பேசிப் பார்த்துவிட்டு எழுந்து போகிறவர்கள் என்கிற எண்ணம் தான் ராமசாமிக்கு இருந்தது.
அவனைப் பொறுத்தவரைக்கும் மார்க்கெட்தான் அதிர்ஷ்டம் தழைக்கும் இடம். முத்துவுக்கு மார்க்கெட்டில்
இல்லாத அதிர்ஷ்டம் சத்திரத்தில் உண்டு என விற்றுக் காட்டவேண்டும் என்ற வைராக்கியம்
வந்தது. சத்திரம் வரைக்கும் நடந்து மகிழ மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு கம்பி வள்யத்தை
விரித்தான். சுருக்குப்பைகளின் பற்பல வண்ண ஜாலங்கள் அழகாய் நெளிந்தன. வெயில் ஏறஏற அதற்குத்
தகுந்தபடி முன்னும் பின்னும் நகர்ந்துகொண்டான். பக்கத்தில் கிடந்த கற்கள்யெல்லாம் பொறுக்கி
நறுவிசாய் அடுக்கி சிம்மாசனம் போல ஆக்கி மேலே ஏறி உட்கார்ந்துகொண்டான். சாயங்காலம்
வரைக்கும் ஒன்றும் வியாபாரம் ஆகவில்லை. முத்துவுக்குத் துக்கமாய் இருந்தது. சாயங்காலம்
வீடு திரும்பிய கையோடு ராமசாமியின் ‘இன்னாடா ஒரு லச்சமா ரண்டு லச்சமா? எவ்ளோ சம்பாரிச்ச?’
என்ற கிண்டலில் கூனிக் குறுகினான். ராமசாமி சிரித்த சிரிப்பில் உடம்பு எரிந்தது. ‘எத்தினி
வருஷமா இந்த ஊருல துணி விக்கறன். எனக்குத் தெரியாதத நீ கண்டுட்டியா? இந்த ஊருல எவன்
வாங்குவான். எங்க வாங்குவாங்கற சங்கதில்லாம் தலைகீழ்பாடம்டா எனக்கு. நேத்து பெஞ்ச மழையில
காலைல மொளச்ச காளான் நீ. நீ வந்து எனக்கு யேபாரம் சொல்லித் தரியா. இதுக்குத் தாண்டா
பெரியவங்க சொல்றதக் கேக்கணும்கறது’ என்று சிரித்துச்சிரித்து எகத்தாளமான தொனியில்
தன் அனுபவங்கள்ச் சொன்னான். அவன் சொன்னதையெல்லாம் கவனமாய்க் கேட்கிறவன் மாதிரி அங்கேயே
வெகுநேரம் நின்றிருந்தான். ‘பய நம்ம வழிக்கு வந்தாச்சி’ என்று
ராமசாமி நினைக்க ‘இனி என்ன ஆனாலும் சத்தரம் தா நம்ம எடம்’ என்று
மனசில் முடிவு கட்டியிருந்தான் முத்து.
முடிவைத்
தீர்மானிக்கிற ஆவேசத்துடன்தான் ராமசாமியின் கூச்சங்கள்யெல்லாம் பொருட்படுத்தாமல் திடமுடன்
இருந்தான் முத்து.
‘ஆட்டம்
கீட்டம் காட்டாம கௌம்புடா.’
‘நா வரல.’
‘எதுக்கு
வரல?’
‘சத்தரம்
பக்கம் தனியாப் போறன்.’
முத்து
மீது அளவு கடந்த கோபம் வந்தது. பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டான் ராமசாமி. தனக்குப்
பிறந்த பையன் இந்த ஒட்டாரத்தோடு பேசுகிறானே என்று எரிச்சல் மூண்டது.
‘இந்த
மூட்டயயாச்சும் கடவரிக்கும் எடுத்தாந்து குடுத்துட்டு வா. அதுகூட முடியுமா முடியாதா
தொரைக்கி...’
‘நீயே
தூக்கிம் போ.’
சட்டென்று
சொல்லி விட்டு திண்ணையில் மூட்டைக்குப் பக்கத்தில் இருந்த சுருக்குப்பைக் கொத்தைத்
தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டான் முத்து. அவன் ஓடி விட்டதையும் புருஷனின் ஆத்திரத்தையும்
பார்த்து ருக்குவுக்கும் சிரிப்பு வந்து விட்டது. சாணிக்கையைத் தூக்கி முழங்கையால்
வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.
‘இன்னாடி
சிரிப்பு கேக்குது, மானம் கெட்ட சிரிப்பு? போடி உள்ள. வந்துட்டா நடுத்தெருவுல ஆடுறதுக்கு.’
‘க்கும்.
நா ஆட வந்துட்டன். ஐயா பாட வந்துட்டாரு. பேசற மூஞ்சப் பாரு.’
‘உள்ள
போறியா இல்லயாடி, மூஞ்சி பேந்துரும் இப்ப. புள்ள வளர்க்கறாளாம் புள்ள.’
அவன்
குரல் உயர்ந்தது.
முணுமுணுத்தபடி
ருக்கு உள்ளே போக, துணி மூட்டையோடும், சாக்குப் பையோடும் மார்க்கட் பக்கம் நடந்தான்.
மார்க்கட்
சுறுசுறுப்பாய் இருந்தது. மாமூல் இடத்தில் காய்கறிக்கடைக்காரி ஒருத்தி கடை விரித்திருந்தாள்.
‘நல்லா வெத்தல போடற நேரத்துலதா வந்து நிக்குது, மாமா இந்தா போடு’ என்று
ஏற்கனவே சிவந்த வாயால் சிரித்து ஒரு பிடி வெற்றிலை பாக்கும் கொஞ்சம் சுண்ணாம்பும் கொடுத்தாள்.
இடம் பறிபோனதற்கு மறுப்பெதுவும் சொல்லாமல் வெற்றிலையை வாயில் அடக்கியபடி பக்கத்தில்
மரத்தடியிலேயே கடை போட்டான். ரகவாரியாய் துணிகள் அடுக்கி காற்றில் பறந்துவிடாமலிருக்க
கற்கள் வைத்தான்.
மதிய
நேரம் வரைக்கும் ஒன்றும் வியாபாரம் ஆகவில்லை. ராமசாமிக்குச் சலிப்பாக இருந்தது. கிளப்பில்
மரத்திலேயே சாய்ந்துகொண்டான். கூடைக்காரி சாப்பிடக் கூப்பிட்டபோது ரொம்ப மிதப்பாக
‘ஊட்டுல முடிச்சிட்டம்மா’
என்று பொய் ஏப்பம் விட்டுச் சமாளித்தான். கிறுகிறு வென்று வந்த மயக்கத்துக்கு எங்கேயாச்சும்
படுத்து எழுந்தால் பரவாயில்லை என்றிருந்தது.
கைவசம்
இருக்கிற சரக்குகள் தீர்ந்து போனால் அடுத்து விற்க சரக்கு இல்லை. மறுசரக்கு எடுக்க
என்று வைத்திருந்த கொள்முதல் பணத்தில் போனவாரம் கைவைத்தாகி விட்டது. நெருங்கிய சொந்தத்தில்
வயசான கிழவர் செத்துப் போக தலைகட்டு சமாச்சாரத்துக்கு உள்ளதெல்லாம் போய்விட்டது. இருக்கிற
சரக்கை விற்று சாப்பிடுவதா கொள்முதலுக்குப் போடுவதா என்று குழப்பமாய் இருந்தது. ‘பணம்
இந்தக் கையில் சரக்கு அந்தக் கையில் என்று கறாராய் இருக்கிற முதலாளி சாயுபுவிடம் இன்னோர்தரம்
எரநூறோ முந்நூறோ தண்டல் தா வாங்கணும்’ என்று சொல்லிக்கொண்டான். பசியில் வயிறு தளர்ந்து
சுருங்கியது. குறுக்கில் ஒரு வெட்டு வெட்டி இழுப்பது போல இருந்தது.
முன்னிரவு.
இனியும் உட்கார்ந்திருப்பதில் உபயோகமில்லை என்று நினைத்து எழுந்து அமைதியாய் எல்லாவற்றையும்
எடுத்து அடுக்கிக் கட்டினான். கடைசி நேரத்திலாவது யாராவது வர மாட்டார்களா என்று தலையை
வள்த்துவள்த்துப் பார்த்தான். தன் பக்கமாய் நடந்து வருகிறவர்களெல்லாம் தன்னை நோக்கியே
வருவதாய் எண்ணி ஏமாந்தான். சாக்கை உதறி மடித்துக்கொண்டு மூட்டையோடு வீடு திரும்பினான்.
திண்ணையில் வந்து உட்காரும்போது கஞ்சிக்குக் காசி எதுவும் தராததால் ருக்கு என்ன சொல்லப்
போகிறாளோ என்று தோன்றி மனசை அலைக்கழித்தது.
‘இன்னாச்சி
பேயடிச்சமாரி சத்தங்காட்டாம வந்து ஒக்காந்திருக்க. வந்து உள்ள ஒக்காரு வா.’
ருக்கு
மூட்டையை எடுத்து உள்ளே ஓரமாய் வைத்தாள். ராமசாமி பின்பக்கம் சென்று உடம்பு கழுவி வந்தான்.
‘மதியானத்துக்கு
வருவ வருவன்னு பார்த்தன், எதுக்கு வரல?’
‘ஒன்னுமே
பொரளல போ ருக்கு. வெறுங் கையோட எப்பிடி வர்ரதுன்னுதா வரல.’
‘சரி சரி.
சூடா கஞ்சி வச்சிருக்கன். ஆறிப் போறதுக்குள்ள ரெண்டு வாய் ஊத்திக்கோ; கருவாடு மாதிரி
காஞ்சி வந்திருக்க...’
‘ஏது கஞ்சி?’
‘ஒங்கிட்ட
சொல்ல மறந்துட்டன்ல, நம்ம பையனை அந்த அடி அடிச்சியே காலைல. எவ்ளோ சாமர்த்தியம் தெரிமா
அவன். பத்து ரூபாய்க்கிப் பை வித்திருக்கான். இன்னிக்கி.’
‘பத்து
ரூபாய்க்கா?’
‘ம். யாரோ
நரயூர் யேபாரி போல. சைக்கிள்ல போனவன் சத்திரத்தல இவன பார்த்துட்டு வெல கேட்டானாம்.
முக்கா ரூவா சொல்லி எட்டணா மேனிக்கு இருவது பை வித்திருக்கான். வித்ததோடு இல்லாம அறிவா
வரும்போது ஒரு கிலோ அரிசி வாங்கியாந்தான். அதுலதான் கஞ்சி காச்சனன். எம்மாம் புத்தி
தெரிமா அதுக்கு!’
சொல்லிக்கொண்டே
அலுமினியத் தட்டில் கஞ்சி ஊற்றிக் கொண்டு வந்து குத்துக்காலிட்டவன் முன்னால் வைத்தாள்.
‘எங்க
ஆளக் காணம்?’
‘அது எங்க
ஊடு தங்குது? இங்க தலைய காட்டும் அங்க வால காட்டும். எங்கணா கோயில்கிட்டதா ஆடிக்கிட்டிருக்கும்.
அங்கதான அதுஞ் செட்டு ஆடுது.’
‘அவனுக்குக்
குடுத்தியா?’
‘வருவாய்
வருவான், நீ சாப்டு’
‘புள்ள
சாப்டாம எனக்கெதுக்கடி சாப்பாடு? சரியான புண்ணாக்குடி நீ. சம்பாரிச்ச புள்ளக்கி போடாம
கொஞ்ச வந்துட்ட எங்கிட்ட.’
எழுந்து
துண்டை உதறித் தோளில் போட்டபடி ‘முத்தூ முத்தூ’ என்று கூவிக் கொண்டே இருளில் கோயில் பக்கம்
நடந்தான் ராமசாமி.
(ஒரு -1990)