Home

Sunday, 10 August 2025

இனிய தாளம், இனிய பாடல்

 

இந்த உலகத்தில் பிறருடைய கோணத்திலிருந்து சிந்தித்துப் பார்க்கவும் அந்தச் சிந்தனைகளைச் சித்தரிக்கவும் தெரிந்தவர்கள் எழுத்தாளர்கள்.  கண்ணிமைக்கும் நேரங்களில் எல்லாப் பாத்திரங்களாகவும் உருமாறிச் சிந்தித்துப் பேசும் ஆற்றல் அவர்களுக்குக் கைவந்த கலை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவருடைய பேச்சிலும் ஒரு தர்க்கம் இருக்கிறது. அது ஒரு கண்ணாடியைப்  போல. அதன் வழியாக ஆழ்நெஞ்சில் இருப்பவற்றை அவர்களால் அறிந்துகொள்ள முடியும். ஆனால் அத்தகு எழுத்தாளர்களுக்குக் கூட சவாலான ஒரு விஷயம் இருக்கிறது. அது குழந்தைகளைப்போல சிந்திப்பது மற்றும் குழந்தைகளுக்காக எழுதுவது.

குழந்தைகளுடைய உலகின் தர்க்க அடுக்குகள்தாம் எழுத்தாளர்களுக்கு சவாலாக இருக்கின்றன. அந்த அடுக்கு மிகமிக எளிமையானது. மென்மையானது. பல நேரங்களில் நம்புவதற்கு அரிதானது. ஆதலாலேயே  சிரமமானது. பூவில் அமர்ந்து தேனருந்தும் வண்டின் நுட்பமும் இயக்கமும் கொண்டிருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும். சற்றே நிலை பிசகினாலும் கைகூடாமல் சரிந்துவிடும். அதுதான் அவர்களுடைய சிரமத்துக்கு முதன்மையான காரணம்.  

எழுத்தாளனின் மனமோ, முழுக்க முழுக்க தர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டது. தர்க்க அறிவை முற்றிலுமாக உதறிவிட்டு தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட புள்ளியை நோக்கி நகர்வது அனைவருக்கும் உடனடியாகச் சாத்தியமாகக்கூடிய ஒன்றல்ல. பழக்கமில்லாத பாதையில் நடப்பதுபோன்றது அது.

சிறுவர்களுடைய  உலகத்தின் இனிமையைத் துய்க்கவேண்டும் என்னும் ஆவல் உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே அந்த உலகத்தை நோக்கிச் செல்லவும் அந்த உலகத்திலேயே திளைத்திருக்கவும் சாத்தியமாகிறது. அத்தகையோரே எல்லா மொழிகளிலும் சிறார் படைப்பாளிகளாகத் திகழ்ந்து வெற்றியடைகிறார்கள். ’வவ்வவ்வவ்’ தொகுப்பை எழுதி வெளியிட்டிருக்கும் செந்தில் பாலா தமிழின் சிறந்த சிறார் படைப்பாளிகளில் ஒருவர்.

 

காக்கை அண்ணே காக்கை அண்ணே

கடைக்குப் போகலாமா

கமரக்கட்டு ரெண்டு வாங்கி

நாம திங்கலாமா

 

தூரமான கடைக்கு நீயும்

துணைக்கு வருவாயா

கூட வந்தா கூட்டிப் போறேன்

வராட்டி நீ போயா

 

காக்கையுடன் ஒரு குழந்தை  நிகழ்த்தும் உரையாடலின் அமைப்பில் அமைந்திருக்கும் இப்பாடல் இனிமையானதாக அமைந்திருப்பதற்கு முக்கியக்காரணம் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டு நிகழும் இந்த உரையாடல். நம்புவதற்கு ஏற்றபடி எழுதியிருப்பதுதான். அதுவே கவிஞரின் வெற்றி

 

வானத்திலே இட்டிலி

மேகம்தானே சட்டினி

சிந்திக் கிடக்கு சர்க்கரை

மாதம் இது சித்திரை

 

ஒரு சின்ன கோட்டோவியத்தைப்போல தீட்டப்பட்டிருக்கும் இந்தப் பாடல் உருவாக்கும் மன எழுச்சி மறக்கமுடியாத அனுபவம். இதுவும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட கற்பனை. அதே சமயத்தில் புன்னகைக்க வைக்கும் கற்பனை.

 

கிணத்துல தவளை

எக்கி எக்கி பார்த்துச்சாம்

 

தண்ணீர் ரொம்பி

தரை மேல வந்துச்சாம்

 

பயிருல நீந்தி

கழனி களை தாண்டிச்சாம்

 

அந்த நேரம் பார்த்து

அடை மழை பேய்ஞ்சிச்சாம்

 

ஏரி குளம் ரொம்பி

ஆத்துல கலந்துச்சாம்

 

ஆற்றோடு தவளை

ஆனந்தமா சுத்திச்சாம்

 

வெளியில வாங்கன்னு

ஊர் ஊரா சொல்லிச்சாம்

 

ஒரு தவளையின் கதையை ஒரு குழந்தை சொல்வதுபோன்ற குரலில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இப்பாடலைப் பாடி முடித்ததும், நம்மால் புன்னகைக்காமல் இருக்க முடிவதில்லை. இவ்வளவு காலமும் கிணற்றுக்குள் அடைபட்டுக் கிடந்த தவளை, அடைமழையின் காரணமாக வீட்டுக்குள் தற்காலிகமாக அடைபட்டிருக்கும் மனிதர்களின் வீட்டு வாசலுக்கு முன்னால் நின்று ’வெளியே வாங்க வெளியே வாங்க’ என்று கூப்பிடும் கற்பனை மறக்கமுடியாத அனுபவமாக இருக்கிறது.

வாசிக்கும்போது ஒரு வாசகனின் நெஞ்சில் நம்பிக்கை ஏற்படும்  வகையிலான சித்தரிப்பும் சிறார் பாடலின் முக்கியமான அம்சம். கவிஞர் செந்தில் பாலாவுக்கு அத்தகு இனிய சித்தரிப்பும் கைவந்த கலையாக இருக்கிறது.

‘ஒத்தையா ரெட்டையா’ விளையாட்டு சிறுவர்களிடையில் நிகழும் மிகப்பெரிய விளையாட்டு. புளி விற்பனையாகும் கோடை காலத்தில் இந்த விளையாட்டில் பெரும்பாலான கிராமப்புறத்துச் சிறுவர்கள் ஈடுபடுவது வழக்கம். புளியம்பழத்திலிருந்து உரித்து எடுக்கப்பட்ட கொட்டைகள் ஒவ்வொரு வீட்டிலும் முறங்களில் நிறைத்துவைத்திருப்பார்கள். பழம் உரிக்க உதவி செய்யும் சிறுவர்சிறுமியர் வேலையை முடித்ததும் புளியங்கொட்டைகளை வைத்துக்கொண்டு ஒத்தையா ரெட்டையா ஆடுவார்கள். இரண்டு கொட்டை ஒரு ஜோடி. ஜோடி ஜோடியாக அடுக்கி ஒதுக்கிக்கொண்டே வரும்போது இறுதியாக எஞ்சுவது ஒரு கொட்டை என்றால் ஒத்தைக்கு வெற்றி. ஜோடியாக எஞ்சினால் ரெட்டைக்கு வெற்றி.

ஏதோ ஒரு திண்ணையில் அல்லது ஏதோ ஒரு மரத்தடியில் நிகழும் ஒத்தையா ரெட்டையா ஆட்டத்தை ஒரு பாடலில் சித்தரிக்கிறார் செந்தில் பாலா. ஒரு கை நிறைய கொட்டைகளை அள்ளி தனியே குவித்துவிட்டு ஒத்தையா ரெட்டையா என்று கேட்கிறது ஒரு குழந்தை. வெற்றி, தோல்வி அனைத்தும் தான் சொல்லும் ஒரு பதிலில்தான் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டதால் எதிர்ப்புறத்தில் உள்ள குழந்தை சட்டென பதில் சொல்லமுடியாமல்  தடுமாறுகிறது. அதனாலேயே பதில் சொல்ல காலம் தாழ்த்துகிறது. தாமதத்தைச் சுட்டிக் காட்டியபடி, கேள்வி கேட்ட குழந்தையின் குரல் உயர்ந்தபடி செல்கிறது. பட்டுன்னு சொல்லு, வெடுக்குன்னு  சொல்லு, ஒடனே சொல்லு, மடக்குன்னு சொல்லு, சுருக்கா சொல்லு,  சீக்கிரம் சொல்லு என்று அடுத்தடுத்து அழுத்தம் கொடுத்தபடி இருக்கிறது. அந்தக் காட்சியை உயிரோட்டத்தோடு செந்தில் பாலாவின் பாடலில் பார்க்கமுடிகிறது. கடைசியில் அந்தக் குழந்தை ரெட்டையைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கிறது. அடுத்த கணமே கேள்வி கேட்ட குழந்தை தீர்ப்பை வழங்கிவிடுகிறது. 

 

ஒத்தையா இருந்தா எங்கிட்ட தள்ளு

ரெட்டையா இருந்தா மொத்தத்தையும் அள்ளு

 

முழு விளையாட்டின் போக்கையும் சொற்சித்திரமாக மாற்றி அமைத்திருக்கிறார் செந்தில் பாலா.

 

அம்மா வாங்கி வந்தது

ச்சீ….  ச்சீ… புளிக்குது

 

அப்பா வாங்கி வந்தது

த்தூ … த்தூ.. கசக்குது

 

அக்கா வாங்கி வந்தது

ஆ…..ஆ… காருது

 

அண்ணன் வாங்கி வந்தது

உவ….. உவா… குமட்டுது

 

மாமா வாங்கி வந்தது

அத்தனையும் இனிக்குது

 

ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி அமர்ந்திருக்க, குழந்தைக்காக அவர்கள் கொண்டுவந்த இனிப்பையோ அல்லது பழத்தையோ ருசி பார்த்துவிட்டு அக்குழந்தை முன்வைக்கும் விதம்விதமான விமர்சனக்குறிப்புகள் இணைந்து இப்பாடலை இனிமையானதாக அமைத்துவிட்டது. பாடலில் இயல்பாகவே கூடி வந்திருக்கும் தாள அமைப்பு பாட்டுக்கு மிகவும் சிறப்பு சேர்க்கிறது.

 

ஆசைப்பட்ட ஜிமிக்கிக் கம்மல்

போட்டுக் கிட்டேனே

ஆட்டிவிட தலையைத் தலையை

ஆட்டி கிட்டேனே

 

ஆசைப்பட்ட ஒரு அணிகலனை அணிந்துகொண்டு, அத்தருணத்தை விதம்விதமாக கொண்டாடிக் களிக்கும் சிறுமியின் ஆனந்தக்கூத்தாக நீண்டு செல்லும் இப்பாடலைப் படிக்கும்தோறும், அந்தத் துள்ளல் நம் நெஞ்சிலும் படர்வதை உணரலாம்.

 

பளபள சட்டை போட்டானாம்

கலகல வண்டி பிடித்தானாம்

 

பலபல ஊர்கள் போனானாம்

சலசல தண்ணீர் குடித்தானாம்

 

மழமழ தரையில் நடந்தானாம்

மல்லாக்கத்தான் விழுந்தானாம்

 

கற்பனையான ஒரு கதையின் விவரிப்பும் அழகான தாள அமைப்பும் இணைந்து இந்தப் பாடலை எல்லா வயதினரும் பாடுவதற்கும் கேட்பதற்கும் உரிய பாடலாக அமைந்துவிட்டது.

 

அப்பாவுக்கு முருங்கைக்காய்

அம்மாவுக்கு பரங்கிக்காய்

தாத்தாவுக்கு வெண்டைக்காய்

ஆயாவுக்கு சுண்டைக்காய்

அக்காவுக்கு அவரைக்காய்

உனக்கு மட்டும் பாவற்காய்

 

வவ்வவ்வவ்

வவ்வவ்வவ்

 

உணவு மேசையில் அமர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான கூட்டுக்கறி பரிமாறப்படுகிறது. யாரோ ஒரு சிறுவன் அல்லது சிறுமி கறிவகையின் பெயரைச் சொன்னபடி ஒவ்வொருவருடைய இலையிலும் அள்ளிவைத்துக்கொண்டே செல்கிறார். எல்லோரும் விரும்பி உண்ணத்தக்க காயின் கூட்டை அள்ளி வைத்த சிறுமி ஒரே ஒருவருக்கு வேண்டுமென்றே பாகற்காய் கூட்டை  அள்ளிவைக்கிறாள். அதைத் தொட்டு எடுக்கவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தடுமாறித் தவித்து நிற்கும் அவரை ஏறிட்டுப் பார்த்து அழகு காட்டுகிறாள். உதடு மடித்தும் சுழித்தும் அழகு காட்டி வவ்வவ்வவ் என்று நாய்க்குட்டியைப்போல ஓசையெழுப்பி கேலி செய்கிறாள். பாடப்பாட பாடிக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றவைக்கும் பாடல் இது. எப்போதாவது நினைத்துக்கொண்டாலும் வரிகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சிகொள்ள வைக்கும் பாடல்.  

தம் வசீகரமான பாடல்களால் குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதில் வல்லவராக தன்னை நிறுவிக்கொண்டவர் செந்தில் பாலா. அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இந்தப் புதிய தொகுதி வெளிவந்துள்ளது. செந்தில் பாலாவுக்கு வாழ்த்துகள்.

 

 

(வவ்வவ்வவ். சிறார் பாடல்கள். செந்தில்பாலா. நறுமுகை வெளியீடு, 29/35, தேசூர்பாட்டை, செஞ்சி -604202. விலை. ரூ.60)

 

(புக் டே – இணையதளம். 24-07.2025)