Home

Saturday 16 April 2016

வஞ்சினங்களின் காலம் - (திரைப்படம் பற்றிய கட்டுரை)




வேட்டைச்சமூகம் ஆரம்பகாலத்தில் பசியைத் தணிக்கும் உணவுக்காக வேட்டையாடியது. பிறகு தற்காப்புக்காக வேட்டையாடியது. அதையடுத்து, வேட்டைப்பொருளுக்கு சமூகத்தில் ஒரு விலை உள்ளது என்று தெரிந்துகொண்டதும் வணிகத்துக்காகவும் வேட்டையாடியது. வேட்டையில் சாகசமும் வஞ்சினமும் இருமுனைகள். மனிதன்மீது விலங்கும் விலங்கின்மீது மனிதனும் கொள்ளும் வஞ்சினம் ஒருவகை. மனிதகுலமே ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் வஞ்சினம் வேறொரு வகை. வஞ்சினம் என்பது ஒரு கோணத்தில் அணையாத நெருப்பு. அது நெருங்கி வருபவர்களையும் எரித்துப் பொசுக்கும். வைத்திருப்பவர்களையும் எரித்துப் பொசுக்கும்.

வஞ்சினத்தின் கதை என்னும் குறிப்பே ’ரெவெனன்ட்’ திரைப்படத்தைப் பார்க்க நான் விரும்பியதற்கான முதல் காரணம். பல ஆண்டுகளுக்கு முன்பாக டைட்டானிக் படத்தில் ஜாக் என்னும் இளம் காதலனின் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்த டிகாப்ரியோவுக்கு இந்தத் திரைப்படம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுபெற உதவியிருக்கிறது என்பது இரண்டாவது காரணம். டைட்டானிக் திரைப்படத்தில் கப்பல்தளத்தில் கால்களால் வித்தியாசமான தாளத்தை எழுப்பி டிகாப்ரியோ ஆடிய ஆனந்த நடனம் இன்னும் என் கண்முன்னாலேயே இருக்கிறது. துடிப்பும் வேகமும் கொண்ட அந்த இளைஞன் இத்தனை ஆண்டுகால உழைப்பில் மெல்ல மெல்ல தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டு உயர்ந்து முன்வரிசையில் வந்து நிற்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அது ஒரு கலைஞன் தன்னை முழுமைப்படுத்திக்கொண்ட கணம் என்றே நினைக்கிறேன். புதிய படத்தில் ஒரு வேட்டைக்காரனாக அவர் எப்படியெல்லாம் தன்னை வெளிப்படுத்தியிருக்கக்கூடும் என்ற கற்பனை ஒவ்வொரு நாளும் எனக்குள் பெருகியபடி இருந்தது. போன வாரம் திரையரங்கத்துக்குச் சென்று நானும் நண்பர் விஜயனும் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம். சிறந்த நடிகருக்கான விருதுக்கு முற்றிலும் தகுதியுள்ளவராக டிகாப்ரியோ தன்னை வளப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதை உணரமுடிந்தது. திரைப்படமும் நல்ல காட்சியனுபவமாக இருந்தது.
நான்கு திசைகளிலும் பனிச்சிகரங்களால் சூழப்பட்ட கியோவா கோட்டை என்னும் இடத்தில் ஒரு வேட்டைக்காரக்குழு தங்கியிருக்கிறது.  ஹென்றி என்பவன் அக்குழுவின் தலைவன். அனைவருக்கும் சம்பளம் கொடுத்து தனக்குக் கட்டுப்பட்ட ஊழியர்களாக வைத்திருக்கிறான் அவன். காட்டுக்குள் சென்று கரடிகளை வேட்டையாடி அவற்றின் தோலைச் சேகரித்துக்கொண்டு வருவது அவர்களுடைய தொழில். பதப்படுத்தப்பட்ட கரடித்தோல் விற்பனை என்பது அக்காலத்தில் நல்ல லாபமீட்டித் தரக்கூடிய வணிகமாகும். கிளாஸ் என்னும் வீரன் ஹென்றியிடம் பணிபுரியும் முக்கியமான வேட்டைக்காரன். காட்டு வழிகளையும் பனிச்சிகரங்களுக்கு ஊடே பிரிந்து செல்லும் பாதைகளையும் நன்றாகத் தெரிந்துவைத்திருப்பவன். தன் வேட்டைக்குலத்துக்கு வெளியே ஓர் அமெரிக்க வனவாசிக் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை காதலித்து மணந்துகொள்கிறான் அவன். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை  ஹாக் வளரிளம்பருவத்தை அடைந்த தருணத்தில் எதிர்பாராமல் நடைபெற்ற அந்நியர் தாக்குதலொன்றில் அவள் இறந்துவிடுகிறாள். அதற்குப் பிறகு ஹாக்கை அவனே வளர்த்து வருகிறான். அக்குழுவில் பணிபுரியும் இன்னொரு வீரன் ஜெரால்ட். ஏதோ ஒரு தருணத்தில் வனவாசிக்குலத்தினரால் அவமானப்படுத்தப்பட்டு உயிர்பிழைத்து வந்தவன் அவன். அதனால் வனவாசிக்குலத்தையே அவன் வெறுக்கிறான். தன் குழுவிலேயே இருக்கும் கிளாஸையும் ஹாக்கையும் கூட வெறுத்தொதுக்கும் அளவுக்கு அவன் ஆழ்மனத்தில் வெறுப்பும் கசப்பும் மண்டிக்கிடக்கின்றன. ஒருநாள் கரடி வேட்டைக்காக எல்லா வீரரக்ளோடும் ஹென்றி குழு காட்டுக்குள் செல்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள். கிளாஸும் ஹாக்கும் அக்குழுவில் இருக்கிறார்கள். காட்டின் உட்பகுதியில் பொருத்தமான இடத்தில் முகாமிட்ட பிறகு ஒருசிலர் மட்டும் துப்பாக்கிகளுடன் கரடி வேட்டைக்காக புறப்படுகிறார்கள்.
அடர்த்தியான மரங்களைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்குக்கு அருகில் சில கரடிகள் நடமாடுவதை அவர்கள் பார்க்கிறார்கள். அடிமேல் அடிவைத்து மெல்ல மெல்ல மரங்களுக்குப் பின்னால் மறைந்து சென்று அந்தக் கரடிகளைச் சுட்டுக் கொல்கிறார்கள். இறந்து விழுந்த கரடிகளை அறுத்து தோலை உரித்தெடுக்கிறார்கள். அதே தருணத்தில் வனவாசிகளைக் கொண்ட குழுவொன்று முகாமைச் சுற்றி வளைத்து அம்புகளை எய்து ஹென்றியின் குழுவினரைக் கொன்று வீழ்த்துகிறது. அவர்களின் கூக்குரலைக் கேட்டு கிளாஸ் குழு முகாமை நோக்கி ஓடி வருகிறது. வனவாசிகள் குழுவுக்கும் வேட்டைக்காரர்கள் குழுவுக்கும் மோதல் வலுக்கிறது. ஒருபுறம் துப்பாக்கிகள். மறுபுறம் மறைந்திருந்து எய்யப்படும் அம்புகள். அம்புக்குப் பலியாகி வேட்டைக்குழுவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிடுகிறார்கள். எஞ்சியவர்கள் முடிந்த அளவுக்கு ஒருசில தோல்பொதிகளை தூக்கிக்கொண்டு ஆற்றின் நடுப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏறி தப்பித்துவிடுகிறார்கள். அம்புகளால் தொடமுடியாத தூரத்தில் கப்பலை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கிறார்கள். ஆற்றின் அகலம் குறுகிவரும் இடங்களில் வனவாசிகள் அம்புகளுடன் காத்திருக்கக்கூடும் என்னும் அச்சத்தால் தொடர்ந்து பயணம் செய்வதை அவர்கள் தவிர்க்கிறார்கள்.
விடிவதற்கு முன்பாக தப்பித்துவிட வேண்டும் என்பதால் ஹென்றி குழுவில் ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்கிறார்கள். நள்ளிரவில் யாருடைய பார்வையிலும் படாமல் கப்பலை விட்டு இறங்கி காட்டு வழியாகவே நடந்து சென்று தமது இடத்துக்குச் சென்றுவிடலாம் என்று யோசனை சொல்கிறான் கிளாஸ். அது ஜெரால்டுக்குப் பிடிக்கவில்லை. பயத்தில் பின்வாங்கிச் செல்லாமல் கப்பலிலேயே செல்வதுதான் பாதுகாப்பானது என்று சொல்லி கிளாஸின் திட்டத்தை நிராகரிக்கிறான் ஜெரால்டு. சொற்கள் தடித்து இருவருக்குமிடையே மோதல் எழுகிறது. ஆனால் தலைவனான ஹென்றி கிளாஸின் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறான். உடனே முடிந்த அளவிலான தலைச்சுமைகளுடன் கப்பலை விட்டு இறங்கி அவர்கள் காட்டுக்குள் புகுந்துவிடுகிறார்கள். விடிந்து வெகுநேரம் கழிந்த பிறகுதான் அவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டதை உணர்கிறார்கள் வனவாசிக்குலத்தினர். ஆத்திரத்துடன் அவர்களைத் தேடி நான்கு திசைகளிலும் பிரிந்து தேடத் தொடங்குகிறார்கள். வனவாசிக்குலத்தின் தலைவருடைய இளம்பெண்ணை சில வாரங்களுக்கு முன்பாக ஏதோ ஒரு குழு கடத்திச் சென்றுவிட்டது. அது ஹென்றி தலைமையிலான குழுவாக இருக்கலாம் என்றொரு சந்தேகமும் கோபமும் வனவாசிக்குலத்தினருக்கு இருக்கிறது. அதனால் தீராத பகைவெறியோடு அவர்களை விரட்டிச் செல்கிறார்கள்.
காட்டுக்குள் நுழைந்து தப்பித்த ஹென்றி குழுவினர் சுமைகளுடன் நடப்பதை சிரமமாக உணர்ந்ததால் தம் சுமைகளையெல்லாம் ஒரு மரத்தடியில் குவித்து அடையாளம் வைத்துவிட்டு நடக்கத் தொடங்குகிறார்கள். நெடுந்தொலைவு கடந்த பிறகு, ஒரு சரிவில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்புக்கு துப்பாக்கியை ஏந்தியபடி காட்டுக்குள் செல்கிறான் கிளாஸ். தொலைவில் இரு இளங்கரடிகள் ஒன்றையொன்று விரட்டிப் பிடித்து விளையாடியபடி இருப்பதைப் பார்க்கிறான். அவற்றை உடனடியாகக் கொல்ல விரும்புகிறான் அவன். துப்பாக்கியில் குறிபார்க்கப் பொருத்தமான இடத்தைத் தேடி சிறிது தொலைவு செல்லும் தருணத்தில் தன்னைச்சுற்றி நிகழும் இலையசைவுகளையும் கிளைகள் உரசும் ஓசைகளையும் கேட்டு திகைத்து ஒருகணம் அப்படியே நின்றுவிடுகிறான். தொடரும் ஓசைகளும் சட்டென்று நிற்கின்றன. மீண்டும் அடிவைத்து நடக்கும்போது அந்த ஓசை மறுபடியும் தொடர்கிறது. இலக்கைக் குறிபார்ப்பதை விட்டுவிட்டு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அறிய பார்வையை நான்கு புறங்களிலும் எச்சரிக்கையுடன் சுழல விடுகிறான்.  வனவாசிக்குலத்தினராக இருக்கக்கூடுமோ என்றொரு ஐயம் அவனுக்குள் எழுகிறது. ஆனால் மறுகணமே தன்னைச் சுற்றி வளைத்திருப்பது மனிதர்களல்ல, ஒரு பெரிய கரடி என்பதைப் புரிந்துகொள்கிறான். அவன் கொல்வதற்காக குறிபார்த்த குட்டிக்கரடிகளின் தாய்க்கரடி அது. உடனே அங்கிருந்து தப்பித்துச் செல்ல வழியைத் தேடுகிறான். ஆனால் மூர்க்கம் கொண்ட கரடி ஒரே கணத்தில் அவனை அடித்து வீழ்த்துகிறது. அவன் அங்கிருந்து எப்படியாவது ஓடிவிடவேண்டும் என்று நினைத்து அதன் பிடியிலிருந்து விலக முயற்சி செய்கிறான். அதற்கு இடம்கொடுக்காத கரடி அவனை தரையில் தள்ளி முதுகில் மாறிமாறி அறைகிறது. கடிக்கிறது. கொஞ்சம் கூட அசைவதற்கு தெம்பில்லாமலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாமலும் அவன் விழுந்து கிடக்கும் கோலத்தைக் கண்டு ஒருகணம் ஓய்ந்து ஒதுங்கி கரடி மூச்சு வாங்கிய கணத்தில் அவன் தனக்கு அருகில் விழுந்து கிடந்த துப்பாக்கியை எடுத்து கரடியின் நெஞ்சில் சுட்டுவிடுகிறான். ஏமாற்றப்பட்டோம் என உணர்ந்து வெறிகொண்ட கரடி அவனை மீண்டும் தாக்கத் தொடங்குகிறது. தன் உயிர் பிரியும் வரையில் அவனை இடைவிடாமல் தாக்கிவிட்டு, இறுதியில்  அவன் முதுகின் மீதே விழுகிறது.
கிளாஸின் கூக்குரலைக் கேட்டு அவனைத் தேடி மற்றவர்கள் ஓடி வருகிறார்கள். ஏராளமான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவனையும் அவன்மீது விழுந்து கிடக்கும் கரடியையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள். ஹாக் தன் தந்தையின்மீது விழுந்து கதறுகிறான். அனைவரும் சேர்ந்து மாண்டுபோன கரடியை இழுத்து கீழே தள்ளிவிட்டு அவனைத் தூக்குகிறார்கள். கிளைகளை வெட்டி குறுக்கும் நெடுக்குமாக வைத்துக் கட்டி ஒரு படுக்கையைப்போலச் செய்து, அதன்மீது அவனைக் கிடத்துகிறார்கள். முடிந்த அளவு முதலுதவி செய்து, ரத்தப்போக்கை நிறுத்தி மருத்துவம் செய்கிறார்கள். அவர்கள் பயணம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
கடுமையான ரத்தப் போக்கைத் தொடர்ந்து சுயநினைவு திரும்பாத கிளாஸ் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்றும், அவனைச் சுட்டுக் கொன்றுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தால்தான் மற்றவர்களாவது உயிர்பிழைக்க முடியும் என்று ஹென்றியிடம் ஜெரால்டு வாதிடுகிறான். கிளாஸின் ஆலோசனையைக் கேட்காமல் தான் சொன்ன ஆலோசனையின்படி கப்பலில் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் எரிச்சலைக் கொட்டுகிறான். தலைவனான ஹென்றி முடிவெடுக்கும் நெருக்கடிக்கு ஆளாகிறான். நீண்ட யோசனைக்குப் பிறகு அங்கிருந்து புறப்படும் முடிவுக்கு ஹென்றி உடன்படுகிறான். அதற்குமுன் அவன் ஒரு நிபந்தனையை விதிக்கிறான். அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால்தான் அங்கிருந்து புறப்படமுடியும் என்று சொல்கிறான். கிளாஸின் உயிர் பிரியும் வரை அவனுக்குப் பாதுகாப்பாக யாராவது மூன்று பேர் அங்கேயே தங்கியிருந்து, அவன் உயிர்பிரிந்த பிறகு நல்ல முறையில் அடக்கம் செய்துவிட்டு ஊர் திரும்பவேண்டும் என்பதுதான் அவன் விதிக்கும் நிபந்தனை. அந்தக் கூடுதல் காத்திருப்புக்கு ஊதியமாக தனியாக ஒரு தொகை தரப்படும் என்றும் அறிவிக்கிறான் ஹென்றி. ஒரு பெரிய தொகையை பேரம் பேசி உறுதிப்படுத்திக்கொண்டு அந்தத் திட்டத்துக்கு உடன்படும் ஜெரால்டும் பிரிட்ஜர் என்னும் இளைஞனும் மகன் என்கிற நிலையில் ஹாக்கும் அங்கேயே தங்கிவிடுகிறார்கள். குழுவின் மற்ற வேட்டைக்காரர்கள் ஊரை நோக்கிய பயணத்தைத் தொடர்கிறார்கள்.
செய்வதற்கு வேலை எதுவும் இல்லாத பிரிட்ஜரும் ஜெரால்டும் அங்கேயே சுற்றிச்சுற்றி வருகிறார்கள். காட்டுக்குள் அலையும்போது ஏதோ ஒரு வேட்டைக்காரக்குழுவால் தாக்கப்பட்டு சிதைந்துகிடக்கும் வனவாசிக்குழுவின் குடியிருப்பைக் கடந்து செல்கிறார்கள். இறந்துகிடக்கும் ஏராளமான உடல்களுக்கிடையில் உயிருக்குப் போராடியபடி கண்களை இமைக்கிற ஒரு பெண்ணைப் பார்த்து இரக்கம் கொள்கிறான் பிரிட்ஜ். உடனே ஜெரால்டுக்குத் தெரியாமல் தன்னிடம் இருக்கும் உணவுப்பொதியை அங்கேயே அவள் பார்வையில் படும் இடத்தில் வைத்துவிட்டு ஓடி வந்துவிடுகிறான். அக்கணத்திலிருந்து  ஏதேனும் ஒரு திசையிலிருந்து வனவாசிக்குழுக்கள் வந்து தம்மையும் தாக்கக்கூடும் என்று பிரிட்ஜருக்கு அச்சமூட்டியபடி இருக்கிறான் ஜெரால்டு.
ஒருநாள் பொழுதுபோகாமல் கிளாஸ் இறந்துபோனால் அடக்கம் செய்வதற்காக புதைகுழியைத் தோண்டுகிறான் பிரிட்ஜர். தனக்காக தோண்டப்படும் குழியைப் பார்த்தபடி அசைவில்லாமல் படுத்துக் கிடக்கிறான் கிளாஸ். இறந்துபோன மனைவியின் உருவம் மிக நெருக்கமாக தனக்கு அருகில் நடந்துசெல்வதுபோலத் தோன்றுகிறது. ‘இறுதிமூச்சு இருக்கும் வரை போராடு’ என்று சொல்லி ஊக்கமூட்டும் அவளுடைய வழக்கமான குரல் அவன் காதருகில் ஒலிப்பதுபோல இருக்கிறது. மயக்கத்தில் மனைவியின் உருவத்தையும் சுயநினைவோடு இருக்கும்போது மகன் முகத்தையும் பார்த்தபடி பொழுதைக் கழிக்கிறான் கிளாஸ்.
ஒருநாள் தண்ணீர்க்குவளையை நிரப்பிக்கொண்டு வருவதற்காக ஆற்றை நோக்கிச் செல்கிறான் பிரிட்ஜர். பொறுமையை இழந்த ஜெரால்டுக்கு கிளாஸ்மீது கோபமும் வெறுப்பும் எழுகின்றன. செத்துக்கொண்டிருக்கும் அவனுக்கு காவல் காத்தபடி தன் நாட்கள் வீணாகக் கழிவதை அவன் சிறிதளவும் விரும்பவில்லை. எல்லா வேட்டைக்காரர்களும் குடியிருப்புக்குத் திரும்பி உல்லாசமாகப் பொழுதுகளைக் கழித்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்படி தனிமையில் இருக்க நேர்ந்ததற்கு கிளாஸ்தான் காரணம் என்பதால் அவன்மீது வெறுப்பையும் எரிச்சலையும் கொட்டுகிறான். நகரமுடியாமல் கிளைப்படுக்கையின்மீது கிடக்கும் அவனை ஓயாமல் வசைபாடுகிறான். எட்டி உதைக்கிறான். படுக்கையிலிருந்து அவனைக் கீழே உருட்டித் தள்ளி கால்களாலும் கைகளாலும் தாக்குகிறான். கிளாஸை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான் ஹாக். ஆனாலும் கிளாஸை மூர்க்கமாக இழுத்துச் சென்று தயாராக உள்ள மரணக்குழியில் தள்ளிவிட்டு, அவனை மண்ணால் மூட முயற்சி செய்கிறான் ஜெரால்டு. ஹாக் அவனைப் பிடித்து இழுக்கிறான். ஒரே அடியில்  அவனைக் கீழே வீழ்த்திவிட்டு கிளாஸையும் மிருகத்தனமாக மிதிக்கிறான் ஜெரால்டு. ஹாக் மறுபடியும் எழுந்தோடி வந்து அவன் கைகளைப் பற்றி இழுத்துத் தடுக்கிறான். ஹாக் உயிருடன் இருக்கும் வரையில் கிளாஸைக் கொல்லமுடியாது என்று புரிந்துகொள்ளும் ஜெரால்டு, ஹாக்கை சிறிது தூரம் இழுத்துச் சென்று கொன்று ஒரு மரத்தடியில் தள்ளிவிடுகிறான். தன் கண்ணெதிரிலேயே தன் மகனைக் கொல்வதைப் பார்த்துவிட்டு இயலாமையில் கதறுகிறான் கிளாஸ். அவன் கதறலைப் பொருட்படுத்தாத ஜெரால்டு முடிந்தவரையில் அவனை மண்ணால் மூடுவதற்கு முயற்சி செய்கிறான்.
தண்ணீர்க்குவளையை நிரப்பிக்கொண்டு திரும்பிய பிரிட்ஜர் கிளாஸின் கதறலைப் பார்த்துத் திகைத்து ஓடிவந்து ஜெரால்டைத் தடுக்கிறான். பிரிட்ஜின் வருகையை எதிர்பார்க்காத ஜெரால்டு ஒருகணம் தடுமாறி, மறுகணமே புதிய கதையொன்றைக் கட்டி அவனிடம் சொல்கிறான் ஜெரால்டு. இருபதுக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட ஒரு வனவாசிக்குழுவின் நடமாட்டத்தை சற்று நேரத்துக்கு முன்பாகப் பார்த்ததாகவும் தொடர்ந்து அவ்விடத்தில் தங்கியிருப்பது ஆபத்தையே விளைவிக்கும் என்றும் அவர்களிடம் கிளாஸ் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாது என்பதால்தான் புதைக்க முயற்சி செய்ததாகவும் சொல்லி நம்பவைக்க முயற்சி செய்கிறான். உணவைத் தேடிச் சென்ற ஹாக் கூட அவர்களின் பிடியில் சிக்கியிருக்கக்கூடும் என்றும் சொல்லிக் குழப்புகிறான். உயிர்மீதான பயத்தை பேசிப்பேசி பிரிட்ஜரிடம் உருவாக்குகிறான்.  இருவரும் அங்கிருந்து தப்பித்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என இறுதியில் பிரிட்ஜரைக் கட்டாயப்படுத்துகிறான். குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறான் பிரிட்ஜர். ஹென்றியின் ஆணையை நினைவுபடுத்தி, அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று குழப்பத்தோடு கேட்கிறான். தாக்குதலில் கிளாஸ் இறந்துவிட்டதாகவும் கெளரவமான முறையில் அடக்கம் செய்துவிட்டதாகவும் சொல்லிவிடலாம் என தைரியமூட்டுகிறான் ஜெரால்டு. கிளாஸ்தான் இன்னும் உயிருடன் இருக்கிறானே என்று சந்தேகத்தை எழுப்புகிறான் பிரிட்ஜர். எப்படியும் வனவாசிக்குலத்தினர் அவனைக் கொன்றுவிடுவார்கள் என்பதால் அவன் இறந்துவிட்டான் என்று சொல்வதில் பிழையில்லை என்று வாதிடுகிறான் ஜெரால்டு. முடிந்த வரையில் வெகுவிரைவில் அந்த இடத்திலிருந்து தப்பிப்பதுதான் நல்லதெனத் தூண்டியபடி இருக்கிறான். அரைகுறை மனத்துடன் ஜெரால்டின் முடிவுக்கு உடன்பட்டு உயிருக்குப் போராடும் கிளாஸ்க்கு அருகில் நீர்க்குவளையை வைத்துவிட்டு கிளம்புகிறான் பிரிட்ஜர்.
புதைகுழியிலிருந்து மண்ணை உதறிவிட்டு மேலே வரும் கிளாஸ் தவழ்ந்தபடியே சென்று இறந்துகிடக்கும் மகனுக்கு அருகில் அமர்ந்து அழுகிறான். அவன் தலைக்கு அருகில் பூத்துக் கிடக்கும் ஒரு காட்டுப் பூவைப் பறித்து அவன் நெற்றியின்மீது வைத்துவிட்டு திரும்புகிறான். சில நாட்களில் நடப்பதற்குப் போதிய தெம்பு வந்ததும் வனவாசிக்குழுவினரின் எல்லையிலிருந்து தப்பித்துச் செல்கிறான்.
வசிப்பிடத்தை நோக்கிய நடைப்பயணத்தில் நிகழும் உரையாடல்கள் வழியாக ஜெரால்டு சொன்னவை அனைத்தும் பொய் என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்துகொள்கிறான் பிரிட்ஜர்.  குற்ற உணர்ச்சியில் அவன் கூனிக் குறுகிவிடுகிறான். யாரிடமும் உண்மையைச் சொல்லக்கூடாதென்றும் சொன்னால் அவனைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டிவைக்கிறான் ஜெரால்டு. வசிப்பிடத்துக்குத் திரும்பியதும் அவர்கள் ஹென்றியைச் சந்திக்கிறார்கள். பிரிட்ஜரை அமைதிப்படுத்திவிட்டு எல்லாக் கேள்விகளுக்கும் ஜெரால்டே பதில் சொல்கிறான். கிளாஸ் மற்றும் ஹாக் இருவருடைய மரணச்செய்தியையும் கேட்டு வருத்தமடைகிறான் ஹென்றி. தொடக்கத்தில் பேசிய ஊதியத்தை இருவருக்கும் வழங்குகிறான். ஜெரால்டு அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறான். மெளனமாக இருக்கும் பிரிட்ஜர் அந்தப் பணத்தைத் தொடாமலேயே எழுந்து வெளியே வந்துவிடுகிறான்.
பனியிலும் குளிரிலும் தப்பிப் பிழைக்கும் கிளாஸ் ஆற்றங்கரையோரமாகவே மெதுவாக நடந்து செல்கிறான். பசியில் கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்து உண்ணுகிறான். ஒருநாள் மாலையில் ஆற்றங்கரையில் ஒரு காட்டெருதின் இறைச்சியைத் தின்னும் ஒரு வேட்டைக்காரனைப் பார்த்துவிட்டு அவனருகில் சென்று உணவுக்காக யாசிக்கிறான். கிளாஸை எதிரியென நினைக்கும் அந்த வேட்டைக்காரன் சட்டென வில்லையும் அம்பையும் எடுத்து அவனைக் கொல்ல குறி பார்க்கிறான். ஒருகணம் அவனுடைய யாசிக்கும் தோற்றத்தைக் கண்டு மனம் மாறி அவனுக்கும் இறைச்சியை வழங்குகிறான். அவன் பெயர் ஹிக்கு. வனவாசிக்குழுவின் தாக்குதலில் அவனும் தன் குடும்பத்தை இழந்தவன். இருவரும் அக்கணத்தில் நண்பர்களாகிறார்கள். கிளாஸின் கதையைக் கேட்டு வருத்தப்படுகிறான் ஹிக்கு. ஆனால் கிளாஸின் பழிவாங்கும் உணர்வை அவன் ஆதரிக்கவில்லை. தண்டிப்பதற்கு மனிதனுக்கு உரிமையில்லை, அது கடவுளின் வேலை என்று சொல்லிக்கொண்டே கிளாஸின் காயங்களுக்கு மருத்துவம் செய்கிறான். தன் குதிரையிலேயே அவனையும் ஏற்றிக்கொண்டு பிரயாணம் செய்கிறான். குளிரில் அவன் தங்குவதற்கு ஒரு கூடாரத்தை அமைத்துக்கொடுக்கிறான்.
மறுநாள் காலையில் கூடாரத்தைவிட்டு வெளியே வரும்போது உயிரற்ற அவனுடைய உடல் மரக்கிளையில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகிறான் கிளாஸ். சிறிது தொலைவில் கரடிவேட்டைக்காக வந்த இன்னொரு வேட்டைக்குழு முகாமிட்டு தங்கியிருப்பதைப் பார்க்கிறான். தனக்கு உதவிய ஹிக்குவை அவர்கள்தான் கொன்றிருக்கவேண்டும் என்பதை அவனால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. தண்டிப்பதற்கு மனிதனுக்கு உரிமையில்லை, அது கடவுளின் வேலை என்று அவன் சொன்ன சொல் அவன் நெஞ்சில் ஒலிக்கிறது.
உயர்ந்த மரங்களின் பின்னால் மறைந்து மறைந்து வேட்டைக்குழுவின் முகாமை நெருங்குகிறான் கிளாஸ்.  ஹிக்குவின் குதிரை அவர்களுடைய குதிரையுடன் கலந்து நிற்கிறது. யாருடைய பார்வையிலும் படாமல் சென்று அந்தக் குதிரையைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து நடத்திச்  செல்கிறான். அப்போது அக்குழுவின் தலைவன் வனவாசிக்குழுவிடமிருந்து கடத்தி வரப்பட்ட பெண்ணைக் கெடுப்பதற்கு முயற்சி செய்வதைப் பார்த்துவிட்டு, துப்பாக்கிமுனையில் அவனை மிரட்டி அந்தப் பெண் தப்பித்துச் செல்ல உதவி செய்கிறான். சத்தம் கேட்டு ஓடி வரும் இரண்டு வீரர்களைக் கொன்றுவிட்டு அவனும் குதிரையில் ஏறி தப்பித்துச் செல்கிறான். அவனைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் குதிரைகளில் துரத்தி வருகிறார்கள். மலையுச்சி என்றும் பாராமல் குதிரையை அங்கிருந்து தாவச் செய்து பள்ளத்தாக்கில் விழுந்து உயிர்பிழைக்கிறான் கிளாஸ். குதிரை இறந்துவிடுகிறது. அவன் மட்டுமே காயங்களுடன் பிழைக்கிறான். கடுமையான பனி. அன்று இரவு அங்கேயே தங்கவேண்டியிருக்கிறது. குதிரையின் வயிற்றை அறுத்து குடல்களை வெளியே அள்ளி வீசிவிட்டு அதன் வயிற்றுக்குள் முடங்கி குளிரிலிருந்து தப்பிக்கிறான். விடிந்ததும் பனிப்பாதையின் ஓரமாகவே நடந்து செல்கிறான்.
ஒருநாள் பசிக்கு உணவை யாசித்து கியோவா கோட்டை வாசலில் வந்து நிற்கிறான் ஒரு நாடோடி வேட்டைக்காரன். உணவுக்கு ஈடாகக் கொடுக்க பணமாக எதுவும் அவனிடம் இல்லை. ஒரே ஒரு உலோக நீர்க்குவளை மட்டுமே உள்ளது. அதை வைத்துக்கொண்டு ஏதேனும் கொடுக்கும்படி கேட்கிறான்.  அது அவர்கள் குழுவைச் சேர்ந்த ஹாக் வைத்திருந்த நீர்க்குவளை. காவலர்கள் அதை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். ஹென்றியிடம் தகவல் செல்கிறது. அவனை விசாரிப்பதற்காக கோட்டை வாசலுக்கே வந்த ஹென்றி, அந்த நீர்க்குவளையைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். ஹாக் உயிருடன் எங்கேனும் அருகில் இருக்கக்கூடும் என நினைக்கிறான். ஹாக் மற்றும் கிளாஸ் குறித்து ஜெரால்டும் பிரிட்ஜரும் சொன்ன சொற்களைப்பற்றி முதன்முதலாக அவனுக்குள் ஐயம் துளிர்க்கிறது. ஓடிச் சென்று ஜெரால்டைப் பிடித்து விசாரிக்கிறான். ஜெரால்டு முன்னுக்குப் பின்னாக மாற்றி மாற்றிச் சொல்கிறான். உடனே அவனை அடித்து ஓர் அறையில் அடைத்துவைத்துவிட்டு  ஒருசில வேட்டைக்காரர்களுடன் காட்டுக்குள் செல்கிறான் ஹென்றி. பனிப்பாதையில் நிலைகுலைந்து கிடக்கும் கிளாஸைக் கண்டுபிடித்து தம் வசிப்பிடத்துக்கு அழைத்து வருகிறார்கள். கிளாஸ் எல்லா உண்மைகளையும் ஹென்றியிடம் சொல்கிறான். கிளாஸ்க்கு முதலுதவி அளிக்கப்படுகிறது.
அடைக்கப்பட்டிருந்த ஜெரால்டு கதவை உடைத்து தப்பித்துவிடுகிறான். போகும்போது ஹென்றியின் சேமிப்புப்பணத்தையெல்லாம் திருடிக்கொண்டு செல்கிறான். அவனைத் தேடிச் சென்று கொல்லப் போவதாக புறப்படுகிறான் ஹென்றி. அவனுடன் கிளாஸும் செல்கிறான். நீண்ட தொலைவு பயணம் செய்த பிறகும் ஜெரால்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் பனிப்பாதையில் ஆளுக்கொரு பக்கம் சென்று தேட முடிவெடுத்து இருவரும் இரு திசைகளில் பிரிகிறார்கள். ஹென்றி செல்லும் பாதையில் துப்பாக்கியோடு ஜெரால்டு காத்திருக்கிறான். நம்பிக்கைத் துரோகத்துக்காக ஜெரால்டைத் திட்டுகிறான் ஹென்றி. ஹென்றியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான் ஜெரால்டு.
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அந்த இடத்தை நோக்கி வரும் கிளாஸ் உயிரற்ற ஹென்றியின் உடலைப் பார்த்து மனம் உடைந்துபோகிறான். அவன் உடலை குதிரையின் மீது ஏற்றிக்கொண்டு ஜெரால்டைத் தேடும் முயற்சியைத் தொடர்கிறான். தந்திரமாக ஹென்றியின் உடலை ஒரு முறிந்த மரக்கிளையின் உதவியோடு குதிரையின்மீது உட்கார்ந்திருப்பதுபோல ஜோடித்து முன்னால் நடக்கவிட்டு, பின்னால் நடக்கும் குதிரையில் அவன் பிணம்போல குறுக்கில் படுத்தபடி வருகிறான். தோற்றத்துக்கு முன்குதிரையில் செல்பவன் கிளாஸ்போலத் தெரிகிறது. கிளாஸ் எதிர்பார்த்ததுபோல எங்கிருந்தோ மறைவிலிருந்து ஜெரால்டு முன்குதிரையில் இருப்பவனைத் துப்பாக்கியால் சுடுகிறான். அவன் நிலைகுலைந்து சாய்ந்ததும், அவனை நெருங்கிப் பார்ப்பதற்காக குதிரைக்கு அருகில் வருகிறான் ஜெரால்டு. அதுவரை பிணம்போலக் கிடந்த கிளாஸ் சட்டென்று வெளிப்பட்டு அவனைத் தாக்குகிறான். ஆனால் குறி பிசகிவிடுகிறது. தப்பித்து ஓடும் அவனை விரட்டிச் செல்கிறான் கிளாஸ். இருவரும் ஆற்றங்கரையில் மோதிக் கொள்கிறார்கள். அவனைக் கொல்ல முடிவுசெய்யும் தருணத்தில் தண்டிப்பதற்கு மனிதனுக்கு உரிமையில்லை, அது கடவுளின் வேலை என்று ஹிக்கு சொன்ன வாசகம் அவன் நினைவுக்கு வருகிறது. கொல்ல நினைத்த கையைத் தாழ்த்திவிட்டு அவனை ஆற்றில் இழுத்துத் தள்ளிவிடுகிறான். அதே கணத்தில், நீண்ட கால தேடலுக்குப் பிறகு கண்டுபிடித்த தம் தலைவனின் பெண்ணோடு வனவாசிக்குழு கரையின் மறுபக்கத்தில் வந்து நிற்கிறது. தம் காலடியில் வந்து ஒதுங்கும் ஜெரால்டின் கதையை அவர்கள் முடித்து வைக்கிறார்கள். கிளாஸைப் பார்த்தும் பாராததுபோல சென்றுவிடுகிறார்கள். உயிர்பிழைக்கும் கிளாஸ் மனத்திரையில் புன்னகைத்தபடி காட்சியளிக்கும் மனைவியைப் பார்த்தபடி காட்டுக்குள் நடக்கத் தொடங்குகிறான்.
மரணத்தின் விளிம்புவரைக்கும் சென்று மீண்டவன் அடைந்ததென்ன என்று யோசிக்கத் தோன்றுகிறது. மகன் இல்லை. நண்பர்கள் இல்லை. தன்மீது நம்பிக்கை வைத்த தலைவனும் இல்லை. எல்லாரையும் அவன் இழந்துவிடுகிறான். புன்னகைக்கும் மனைவியின் கனவுத்தோற்றம் ஒன்றை மட்டுமே அவன் அடைகிறான். அது அவன் நெஞ்சை நிரப்பிவிடுகிறது.
திரைப்படத்தில் பல இடங்களில் உயர்ந்த மரங்களின் தொகையையும் காற்றின் மோதலையும் இணைத்துக் காட்டும் காட்சிகள் இடம்பெறுகின்றன.  காற்றின் வேகத்துக்கு இணையாக அது எழுப்பும் ஓசை பல விதங்களில் பதிவாகியிருக்கிறது. அருகிலிருந்து அழைப்பதுபோன்ற இதமான ஓசை. ஆங்காரத்துடம் கூச்சலிடும் ஓசை. வெறிகொண்டெழுந்து தாண்டவமிடும் ஓசை. அலறும் ஓசை. அழும் ஓசை. காற்று மரங்களைத் தாக்கி வீழ்த்த கணந்தோறும் முட்டி மோதுகிறது. மானுட உணர்வுகளை ஓசை எதிரொலிக்கிறது. மரங்கள் மண்ணில் அழுத்தமாக வேர்களை ஊன்றியபடி தம் வலிமையால் காற்றை எதிர்த்து நிற்கிறது. வலிமையுள்ளதே வாழும் என்னும் இயற்கை நெறியை அத்தகு காட்சிகள் மறைமுகமாக உணர்த்தியபடியே இருக்கின்றன.
மரங்கள் இடம்பெறாத காட்சிகளில் பனிச்சிகரங்கள் இடம்பெறுகின்றன. அழகும் ஆபத்தும் ஒருங்கே நிறைந்த சிகரங்கள். எங்கெங்கும் உறைந்துபோன பனி. இரக்கமற்ற மனம்போல. காற்று, பனி, மலை போன்ற பின்னணிக்காட்சிகள் ஒவ்வொன்றும் மானுட மனத்தில் உறையும் வஞ்சினத்தின் படிமங்களாகவே படம்முழுதும் இடம்பெற்றிருக்கின்றன. பனிச்சிகரம் அடக்கப்பட்ட வஞ்சினத்தின் வடிவம். காற்றோ கட்டற்றுத் திரியும் வஞ்சினத்தின் வடிவம். எங்கெங்கும் வெறியின் தாண்டவம்.
கரடிகளை மனிதர்கள் வேட்டையாடுகிறார்கள். மனிதர்களுக்குள் ஒரு குழு இன்னொரு குழுவை வேட்டையாடுகிறது. ஒரு குழுவுக்குள்ளேயே ஒருவன் இன்னொருவனை வேட்டையாடுகிறான். மானுடரின் நெஞ்சுக்குள் வேட்டை ஒரு தீராத இச்சையாக, முன்னோக்கிச் செலுத்தும் விசையாக இயங்குகிறது. பழிதீர்க்கும் வெறியின் பிடியிலிருந்து விடுபடும் தருணத்தில் மட்டுமே மானுடன் இச்சையின் பிடியிலிருந்தும் விடுபட முடியும். தண்டிப்பதற்கு மனிதனுக்கு உரிமையில்லை, அது கடவுளின் வேலை என்பதுபோலச் சொல்லப்படும் வாசகங்களெல்லாம் வஞ்சினத்தின் பிடியிலிருந்து மனிதர்களை விடுவிப்பதற்கான சொல்லப்பட்டவை.
தனிமனித வஞ்சினங்களின் காலமெல்லாம் இன்று ஓய்ந்துவிட்டது. ஒரு தேசமே இன்னொரு தேசத்தைப் பார்த்து வஞ்சினம் உரைப்பதையும் ஓர் இனக்குழுவே மற்றொரு குழுவைப் பார்த்து வஞ்சினம் உரைப்பதையும் பார்க்கும் காலம் வந்துவிட்டது. இது அதைவிட ஆபத்தானது. ஆபத்தின் விளிம்பில் அமர்ந்தபடிதான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்னும் எண்ணம் எழுந்தபோது வேதனையாக இருந்தது.