Home

Sunday 24 December 2023

திண்ணை வைத்த வீடு

 

எங்கள் தெருவில் சின்னச்சின்ன கூரை வீடுகளே அதிக எண்ணிக்கையில் இருந்தன. எட்டு வீடுகள் மட்டுமே மெத்தை வீடுகளாகவும் ஓட்டு வீடுகளாகவும் இருந்தன. சிறிதாகவோ பெரிதாகவோ, அந்த எட்டு வீடுகளும் திண்ணை வைத்துக் கட்டப்பட்டிருந்தன. சிமெண்ட் பூசிய திண்ணை எப்போதும் குளிர்ந்திருக்கும். ஒவ்வொரு திண்ணையும் பத்து பேர் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரியது. வழவழப்பான உருண்ட உயரமான மரத்தூண்கள் திண்ணைகளுக்கு அழகு சேர்க்கும்.

ஊற்று

  

ஒருநாள் நண்பர்களோடு ஸ்டேஷன் திடலில் வழக்கம்போல பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, தொலைவில் ரயில்வே குடியிருப்புக்கு முன்னால், உலக்கைபோல உறுதியானதும் அதைவிட நீளமானதுமான ஒரு குழாய் செங்குத்தாக நிறுத்தப்பட்டு பூமியைத் துளைத்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். ”அங்க ஒரு அடிபம்ப் வைக்கப்போறாங்கடா” என்று சொன்னான் நெடுஞ்செழியன்.

Monday 18 December 2023

அதிர்ஷ்டத்தைத் தேடி


சீனிவாசா பட்டாணிக்கடைக்கு பெயர்ப்பலகை எதுவும் கிடையாது. ஆனாலும் வளவனூரில் எல்லோருக்கும் தெரிந்த கடை அது. கடைத்தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்தக் கடை இருந்தது.

மூடும் கதவுகளும் திறக்கும் கதவுகளும்

 

எங்கள் அப்பாவுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர். ஒருவரை பெரிய பெரியப்பா என்றும் இன்னொருவரை சின்ன பெரியப்பா என்றும் அழைப்போம். இருவருமே கட்டட வேலை செய்பவர்கள். ஒருவர் பெரிய மேஸ்திரி. இன்னொருவர் சின்ன மேஸ்திரி.

Sunday 10 December 2023

தாத்தா

  

மட்டையும் பந்தும் கிடைக்காத நேரங்களில் நாங்கள் ஆடும் விடுமுறை விளையாட்டு கோட்டிப்புள். தரையில் கிடக்கும் புள்ளை நெம்பி யாருடைய கைக்கும் எட்டாத உயரத்தில் விர்ரென்று வானத்தை நோக்கிப் பறக்கவைக்கும்போதும் லாவகமாக தட்டி எழுப்பி கோட்டியால் அடித்து பறக்கவைக்கும்போதும் நாமும் அத்தோடு இணைந்து பறப்பதுபோல இருக்கும். பரவசமூட்டும் அந்த உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.

எஸ்.வி.எஸ். என்னும் மாமனிதர்

  

காந்தியத்தின் மீது ஈடுபாடு கொண்ட மூத்த பத்திரிகையாசிரியரும் கட்டுரையாளருமான அ.இராமசாமி அவர்களின் நூற்றாண்டையொட்டி, அவர் எழுதிய ’தமிழ்நாட்டில் காந்தி’ என்னும் நூலை சந்தியா பதிப்பகம் சிறப்புப்பதிப்பாக வெளியிட்டது. அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா 07.07.2023 அன்று சென்னையில் காந்தி கல்வி மையத்தில் நடைபெற்றது. நான் அவ்விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னைக்குச் சென்றிருந்தேன்.

Sunday 3 December 2023

முடிவு - சிறுகதை

 ஒரு கோழையைப் போல ஊரைவிட்டுப் போனவன் மீண்டும் திரும்பியிருக்கிறேன். நேற்றுப் போல்தான் நினைக்கத் தோன்றுகிறது. எட்டு வருஷங்கள் பறந்துவிட்டன. எல்லாவற்றிற்கும் அம்மாதான் காரணம் என்று நான் சொல்ல நினைக்கும் ஒரு காரணமே போதும், இன்னும் நான் கோழையாய்த்தான் இருக்கிறேன் என்பதற்கு. காலம் எதையுமே எனக்குள் மாற்றிவிடவில்லை.

சூறை - சிறுகதை

 

இரண்டு பதவி உயர்வுகளுக்கப்புறம் இந்த ரயில்வே ஸ்டேஷனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஸ்டேஷனா இது? குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல் தூரத்திலிருக்கிற இடத்தைப் பார்க்காமல் திரும்பினால் எப்படி? பொழுது போக எனக்கும் ஒரு வேலை வேண்டுமே. பதினைந்து ஆண்டுகளுக்குப்புறம் இந்த இடம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிற அல்ப ஆசை என்றுகூட நினைத்துக் கொள்ளுங்கள்.

Monday 27 November 2023

அண்ணல் தங்கோ என்கிற சுவாமிநாதன் : தேசமும் மொழியும்

  

1920ஆம் ஆண்டு தொடக்கத்தில் டில்லியில் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பான திட்டங்களை காந்தியடிகள் அறிவித்தார். அரசு வழங்கியிருக்கும் பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும் துறத்தல்,  ஊதியம் பெறும் அரசாங்கப்பதவிகளிலிருந்து விலகுதல், அந்நிய நாட்டுத்துணிகளை விலக்குதல். நீதிமன்றங்களிலிருந்து வழக்கறிஞர்கள் வெளியேறுதல்,  அரசு கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் வெளியேறுதல் என எல்லா விதங்களிலும் அரசுடன் ஒத்துழைப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதுதான் அவருடைய திட்டம்.

Sunday 26 November 2023

வண்ணவண்ண முகங்கள்

 

ஒருவருக்கு ஓர் ஊரின் மீது ஈர்ப்பு ஏற்பட அவர் அந்த ஊரில் பிறந்திருக்க வேண்டுமென்றோ, வாழ்ந்திருக்க வேண்டுமென்றோ எந்த அவசியமும் இல்லை. அந்த ஊரோடு அவரை ஏதோ ஒரு விதத்தில் இணைக்கும் ஒரு மாயம் நிகழ்ந்தால் போதும். அந்த ஊருக்கான ஓர் இடத்தை நெஞ்சம் தானாகவே உருவாக்கிக்கொள்ளும்.

Sunday 19 November 2023

கலைச்சாதனையின் வரலாறு

  

அர்ச்சுனன் தபசு, புலிக்குகையும் கிருஷ்ணமண்டபமும் என்கிற தலைப்பில் மாமல்லபுரம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய நூல்களை ஏற்கனவே எழுதி வெளியிட்ட முனைவர் சா.பாலுசாமி பொதுவாசகர்களுக்காக மாமல்லபுரம்  என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைத்தொகுதியை இந்திய அரசு நிறுவனமான பப்ளிகேஷன் டிவிஷன் தற்போது வெளியிட்டுள்ளது. வரலாறு சார்ந்தும் சிற்பக்கலை சார்ந்தும் ஆர்வம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு மாமல்லபுரம் பற்றிய குறுக்குவெட்டுத்தோற்றத்தை இந்தப் புத்தகத்தில் தெளிவாகச் சித்தரித்துள்ளார் பாலுசாமி. மாமல்லபுரத்தில் பார்க்கவேண்டிய எல்லா முக்கியச் சிற்பங்களின் படங்களும் எல்லாப் பக்கங்களிலும் கருப்புவெள்ளையில் இடம்பெற்றுள்ளன. ஒரு சிற்பத்தைப்பற்றிய குறிப்பைப் படிக்கும்போதே, அதன் படத்தை அருகிலேயே பார்ப்பது நல்ல அனுபவம். வாசிப்பவர்களின் தெளிவுக்கும் அது துணையாக இருக்கிறது.

இரண்டு ரோஜாக்கள் - கட்டுரை

  

’சர்வோதயம் மலர்கிறது’ இதழுக்காக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு காந்திய ஆளுமையைப்பற்றிய விரிவான தகவல்களுடன் ஒரு கட்டுரையை நான் எழுதி வருகிறேன். அந்த வரிசையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நான் லால் பகதூர் சாஸ்திரியைப்பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் விட்டல்ராவ் கைப்பேசியில் அழைத்தார். வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு ”இப்போ  என்ன எழுதிகிட்டிருக்கீங்க?” என்று கேட்டார். நான் லால் பகதூர் சாஸ்திரியைப்பற்றிய கட்டுரையை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னேன்.

Sunday 12 November 2023

கபாலி

  

தினமணி கதிர் இதழில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தான் எழுதி வெளிவந்த சிறுகதைகளையெல்லாம் தனியாகப் பிரித்தெடுத்து இரு பெருந்தொகுதிகளாக பைண்டிங் செய்துவைத்திருந்தார் விட்டல்ராவ்.  ஒருமுறை அவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது, படித்துவிட்டுத் தருவதாக ஒரு தொகுதியை வீட்டுக்கு எடுத்துவந்தேன்.

கருணையினால் - கட்டுரை

 

மணிப்பால் மருத்துவமனையில் நண்பரொருவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மூன்று நாட்கள் ஆழ்கவன சிகிச்சைப் பிரிவு அறையிலேயே வைத்திருந்தார்கள். பிறகுதான் வேறொரு சாதாரண தனி அறைக்கு மாற்றினார்கள். அதற்குப் பிறகுதான் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்தது. செய்தி கிடைத்ததும் நானும் இன்னொரு நண்பரும் அவரைச் சென்று பார்க்கத் திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் வசிப்பதோ வேறுவேறு திசையில் என்பதால் ஒன்றாகச் சேர்ந்து புறப்பட வழியில்லை. அதனால் நண்பர் “நான் முதலில் வந்தால் நீங்கள் வரும்வரை வெளியே விடுதிக்கு அருகில் காத்திருக்கிறேன். ஒருவேளை நீங்கள் முதலில் சேர்ந்துவிட்டால் நான் வரும்வரைக்கும் காத்திருங்கள்” என்று தெரிவித்துவிட்டார்.

Sunday 5 November 2023

வெளியேற்றம் - சிறுகதை

 முதுகில் துணி மூட்டையோடு காலை இழுத்து இழுத்து கழுதை முன்னால் நடக்க பின்னாலேயே நடந்தான் பிச்சையா.

அடுக்கு மாளிகை - சிறுகதை

 

நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள இது தான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணியபடி திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்தான் குப்புசாமி. உண்மையில் பம்பரம் எடுப்பதற்காகத் தான் வெளியேயிருந்து உள்ளே வந்திருந்தான் அவன். அரைக்கணத்துக்குள் மனம் மாறிவிட்டது. பம்பரத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டான். யாருமே இல்லாத சூழல் அவனுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தது. வா வா என்று யாரோ மனசுக்குள் கூப்பிடுகிற குரல் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தான். பெரிய கீழ்த்தளத்தில் ஆள் சந்தடியே இல்லை. வெறும் தட்டுகளும் துணித்திரைகளும் இருந்தன. ஒரு மூலையில் செங்கற் குவியல். இன்னொரு மூலையில் மணல். கட்டிடத்திற்கு வெளியே பெண்கள் கல் அடுப்பில் சோறாக்கிக்கொண்டிருந்தார்கள். மெதுவாகத் தளத்தின் உள்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பொக்கையும் பொறையுமாக இருந்தது தரை. ஓர் இடத்தில் தண்ணீர் ஓடித் தேங்கியிருந்தது. இறங்கி நடந்ததில் கால்களில் சேறு அப்பியது. உதறிக்கொண்டான். சீ என்று வாய்விட்டுச் சொன்னான். மூலையில் படுத்திருந்த பூனை சட்டென்று இவன் பக்கம் திரும்பி முறைத்து விட்டு மீண்டும் சுருண்டது.

Monday 30 October 2023

அன்புள்ள தாத்தா - புத்தக அறிமுகம்

 

காந்தியடிகளின் மகன்களில் ஒருவரான இராமதாஸ் காந்தியின் மகன் கனு காந்தி. குழந்தைப்பருவத்திலிருந்தே காந்தியடிகளின் ஆசிரமத்திலேயே வளர்ந்துவந்தவர். வங்காளத்திலிருந்து ஆசிரமத்துக்கு வந்து குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆபா. (பிற்காலத்தில் கனுவை மணந்து ஆபா காந்தியானவர்) இவ்விருவருமே ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காந்தியடிகளை மிக நெருக்கத்தில் நின்று பார்க்கும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தனர். காந்தியடிகளின் முதுமைக்காலத்தில் அவருக்குத் துணையாக இருக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது.

அரிதான தருணங்கள் - புத்தக அறிமுகம்

  

புறநானூற்றுப் பாடல்கள் ஒவ்வொன்றையும் ஒரு சிறிய ஓவியம் என்றே குறிப்பிடலாம். ஓவியத்துக்கே உரிய தேர்ந்தெடுத்த அரிய காட்சிகளை அழகான சொல்லோவியங்களாக உருமாற்றி வைத்திருக்கிறார்கள் கவிஞர்கள். உறையூர் தாமோதரனார் என்பவரின் பாடலொன்றை நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.  ஒன்றுக்குள் ஒன்றென இரு சித்திரங்களைக் கொண்ட பாடல் அது. ஒரு பெரிய சித்திரம். அதற்குள் ஒரு சின்னஞ்சிறு சித்திரம். ஓர் அண்மைக்காட்சி. ஒரு சேய்மைக்காட்சி.

Sunday 22 October 2023

மழைக்கதைகளும் மழைப்பாடல்களும் - கட்டுரை

 

 பத்து நாட்களுக்கு முன்னால் தொடங்கிய மழை பெங்களூரு முழுக்க விட்டுவிட்டு பொழிந்தபடியே இருந்தது. தொலைபேசியில் அழைத்து உரையாடுகிறவர்கள் அனைவரும் மழையைப்பற்றிய கேள்வி பதிலோடுதான் தொடங்கினார்கள். பலர் உற்சாகமாக உணர்வதாகச் சொன்னார்கள். சிலர் சலிப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

சுத்தானந்த பாரதியார் : சோதனையும் சாதனையும்

 

 

இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கில அரசு 1919ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு புதிய குற்றவியல் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. ரெளலட் என்பவருடைய தலைமையின் கீழ அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த சட்டம் என்பதால், அது ரெளலட் சட்டம் என்று அழைக்கப்பட்டது. யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதற்கும் சிறையில் அடைப்பதற்குமான அதிகாரங்களை ரெளலட் சட்டம் அரசு அதிகாரிகளுக்கு வழங்கியது. இச்சட்டத்தின் கடுமையை எதிர்த்து காந்தியடிகள் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.


Sunday 15 October 2023

பொறுப்பும் பொறுப்பின்மையும் - கட்டுரை

 

ராஜேந்திரன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். ஐம்பது வயதைக் கடந்த நிலையில் திடீரென அவருடைய உடல்நிலை குன்றியது. பல பரிசோதனைகளுக்குப் பிறகு அவருடைய சிறுநீரகம் முழு ஆற்றலுடன் செயல்படவில்லை என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். வாரத்துக்கு ஒருமுறை ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் வகையில் டயாலஸிஸ் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

அறிவியல் கதைகளும் அறிவியல் உண்மைகளும் - முன்னுரை

   

ஒரு காலகட்டம் வரைக்கும் நம்முடைய வாழ்க்கை நம்பிக்கைகளால் மட்டுமே நிறைந்திருந்தது. நல்லதோ, கெட்டதோ, அவையே நம் தினசரி நடவடிக்கைகளையும் கருத்துகளையும் தீர்மானிக்கும்  சக்திகளாக இருந்தன. இந்த உலகம் தட்டையானது. சூரியன், நிலவு, விண்மீன்கள் எல்லாம் ஒரு நிலையான இடத்தில் நின்று வெளிச்சத்தையும் இருட்டையும் வழங்குகின்றன. இப்படி ஏராளமான நம்பிக்கைகள் நம்மைச் சூழ்ந்திருந்தன.

Sunday 8 October 2023

வெளிச்சம் - சிறுகதை


‘தமிழ்தான தம்பி நீங்க . . .’

‘ரொம்ப நல்லதா போச்சி. நாப்பத்தஞ்சி வருஷமா இந்த ஊர்ல இருக்கம். இன்னம் இந்த கன்னட பாஷ  நாக்குல படியல. அடிவயித்லேந்து மூச்சுக் கட்டிப் பேச ரொம்ப சிரமம். அப்டி இப்டி கடகண்ணிக்கு போனா ரெண்டு வார்த்த பேசுவன். அவ்ளோதான் தெரியும். தொடச்சியா தமிழ் மாதிரி வராது. அதனாலயே எங்க போனாலும் தமிழ்ல பேச ஆரம்பிச்சிடுவன். ஆனா கன்னடத்தில யாரு பேசனாலும் பூரா புரிஞ்சுக்குவன்.’

லால் பகதூர் சாஸ்திரி : ஜெய் ஜவான் ஜெய் கிஸான்

 

கல்கத்தாவில் 04.09.1920 அன்று நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்  காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்துக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து உரையாற்றினார். அந்த உரையில், ஜாலியன்வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலைக்கு எல்லா வகையிலும் மூல காரணமாக இருந்த ஜெனரல் டயர் மீது பெயருக்கு ஒரு விசாரணை நடைபெற்ற போதும் அவருக்கு எவ்விதமான தண்டனையும் பிரிட்டன் அரசு வழங்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.  இப்போக்கு பிரிட்டன் அரசுக்கும் இந்திய வைசிராய்க்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதில் எவ்விதமான அக்கறையும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது என எடுத்துரைத்தார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் இனியொரு முறை நிகழாமல் இந்திய மக்களைப் பாதுகாப்பதற்கு சுயராஜ்ஜியமே சிறந்த தீர்வென்றும் அறவழியிலான ஒத்துழையாமை இயக்கத்தின் வழியாக சுயராஜ்ஜியத்தை அடைய இந்திய மக்கள் அனைவரும் இணைந்து போரிடவேண்டும் என்றும் தெரிவித்தார்.

Sunday 1 October 2023

விட்டல்ராவின் உரையாடல்கள் - சில நினைவுப்பதிவுகள் - புதிய நூலின் முன்னுரை

 

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று காலையில் ஓர் இசைக்கலைஞர் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வாதாமரத்துக்கு அருகில் வந்து நின்றுகொண்டு அலைபாயுதே பாடலை தன் குழல்வழியாக பாடியபடி சிறிது நேரம் நிற்பார். அதை முடித்ததும் ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே பாடலை இசைக்கத் தொடங்குவார். அப்படியே நடந்துபோய் அடுத்த மரத்தடியில் நின்றுகொண்டு நலம்தானா, உடலும் உள்ளமும் நலம்தானா பாடலில் லயித்துவிடுவார். அவருடைய குழலிசை ஒரு மெல்லிய காற்றைப்போல அங்கேயே சுழலும். அவர் எங்கள் தெருவைக் கடந்து சென்ற பிறகும் கூட அவருடைய இசை அந்த வாதாமரத்தடியிலேயே மித்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றும். கனவிலிருந்து அந்த இசை கேட்பதுபோல இருக்கும்.

தப்புக்கொட்டை - கட்டுரை

 

தயிர் விற்பனையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் மதிய வேளையில் ஓட்டேரிப்பாளையத்து சின்னம்மா தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்வது வழக்கம். மதியச் சாப்பாட்டுக்காக பள்ளிக்கூடத்திலிருந்து அதே சமயத்தில்தான் நானும் வீட்டுக்கு வருவேன்.

Saturday 23 September 2023

விடுதலை - கட்டுரை

 

காலையில் பத்து மணிக்குத் தொடங்கும் எங்கள் பள்ளிக்கூடம் மாலை நான்கரை மணிக்கு முடிவடையும். அதன் அடையாளமாக தலைமையாசிரியர் அறையின் வாசலையொட்டி இருக்கும் தூணுக்கு மேலே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் தண்டவாளத்துண்டில் கம்பங்கதிர் மாதிரி நீண்டிருக்கும் இன்னொரு இரும்புக்குச்சியால் அடித்து எழுப்பப்படும் நீண்ட டண்டண்டண் மணியோசை எழுந்து வரும். அதைப்போன்ற இனிமை மிகுந்த ஓசை இந்த உலகத்திலேயே இல்லை என்ற எண்ணம் தோன்றாத நாளே இல்லை.

மானுட வாழ்வின் ஆழத்தைத் தேடிச் செல்லும் பெரும்பயணம் - தீராநதி நேர்காணல். சந்திப்பு : அருள்செல்வன்

 

சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் நாடகம் என பல்வேறு வகைமைகளில் எழுதி சாதனை புரிந்திருப்பவர் பாவண்ணன். மொழிபெயர்ப்புக்குரிய சாகித்ய அகாதெமி விருது, கனடாவின் இலக்கியத் தோட்ட இயல் விருது உள்ளிட்ட பல பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றுள்ள அவருடன் ஓர் உரையாடல்.

Sunday 17 September 2023

காட்சி மயக்கம் - கட்டுரை

 

ஒவ்வொரு வாரமும் எங்கள் பள்ளிக்கூடத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கும் பழக்கம் இருந்தது.  அந்த இரு நாட்களில் ஞாயிறு ஒருநாள் மட்டுமே நண்பர்களோடு சேர்ந்து  என்னால் விளையாடமுடியும்.  சனிக்கிழமையில் அந்த வாய்ப்புக்கு வழியில்லை. அன்று அப்பாவுடைய தையல் கடைக்குச் செல்லவேண்டும். அங்கு காஜா எடுப்பது, பட்டன் தைப்பது, துணி மடிப்பது போன்ற கைவேலைகளில் உதவி செய்யவேண்டும். அது அப்பாவுடைய கட்டளை.  அந்தக் கட்டளைக்கு உடன்படவேண்டும் என்பது அம்மாவுடைய கட்டளை.

அழைப்பு - சிறுகதை

 

அமைதியா நாலஞ்சுமணிநேரம் தூங்குவாங்க மிஸ்டர் பார்த்திபன். அதுக்குத்தான் இப்ப மரு:நது குடுத்திருக்கேன். க்ளினிக்ல சேக்கறதபத்தி இப்பவாவது நீங்க சரியான ஒரு முடிவுக்கு வரணும். சரியான மெடிகேஷன் இல்லாம இங்க வச்சி நீங்களா கவனிச்சிக்கறது ரொம்ப கஷ்டம். எத்தன தரம் சொன்னாலும் ஒங்களுக்குப் புரியறதில்லை. நீங்க நிர்மலாவுக்கு ஒரு கணவனாதான் இருக்க முடியுமே தவிர ஒரு டாக்டரா இருக்க முடியாது. இது ஏன் தெரியலை உங்களுக்கு?” என்று கேட்டார் டாக்டர். வருத்தமான புன்னகையுடன் ஒருகணம் அவரை நிமிர்ந்து பார்த்தான் பார்த்திபன். “இனிமே எச்சரிக்கையா இருக்கிறேன் டாக்டர். இன்னொருமுறை இப்பிடி நடந்ததுன்னா ரெண்டாவது யோசனைக்கே இடமில்லை டாக்டர் நேரா அட்மிஷன்தான்என்றான் கசந்த புன்னகையோடு, சிறிது நேரம் அவனை ஆழ்ந்த அனுதாபத்துடன் பார்த்தார் டாக்டர். பிறகு.கே. டேக் கேர்என்று பெருமூச்சுடன் அவன் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். அறைக்குச் சென்று உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நிர்மலாவை சில நொடிகள் பார்த்தபடி நின்றான் பார்த்திபன். வெட்டி வீழ்த்தப்பட்ட வாழையைப்போல கிடந்தாள் அவள். தலைமுடி கலைந்து கிடந்தது. ஒட்டிப்போன கன்னம். இளஞ்சிவப்பில் வெடித்த உதடுகள். கீழுதடுமட்டும் சற்று பெரிதாக தூக்கலாக தெரிந்தது. சீரான மூச்சில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

Sunday 10 September 2023

சி.சுப்பிரமணியம் : உலகத்தார் உள்ளத்தில் உறைந்தவர்

  

காந்தியடிகள் 05.09.1920 அன்று அறவழியில் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார்.  ஒவ்வொரு குடிமகனும் தம் எதிர்ப்பைப் புலப்படுத்தும் விதமாக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். அவருடைய ஆணைக்கிணங்கி, வழக்கறிஞர்கள் அரசு நீதிமன்றங்களையும் மாணவர்கள் அரசு கல்லூரிகளையும் புறக்கணித்து வெளியேறினர். அரசு ஈட்டிவந்த வருமானத்தைக் குறைக்கும் வகையில், அயல்நாட்டு ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்பும் கள்ளுக்கடைகள் முன்பும் நின்றும் தொண்டர்கள் மறியல் செய்தனர். இவ்வியக்கத்துக்கு நாடெங்கும் கிடைத்த மகத்தான ஆதரவினால் எங்கெங்கும் அகிம்சை வழியிலான போராட்டம் பரவியது.

ஜெயதேவி இல்லம் - கட்டுரை

   

பஞ்சாயத்து போர்டு தெருவும் பிள்ளையார் கோவில் தெருவும் சந்திக்கிற இடத்தில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. இரண்டு தெருக்களும் சந்திக்கும் புள்ளியில் அந்தக் கடை இருந்ததால், அதற்கு மூலைக்கடை என்ற பெயர் இயல்பாகவே அமைந்துவிட்டது. அதை நடத்தி வந்தவர் ஜெயராமன் என்பவர். அதனால் ஜெயராமன் கடை என்று இன்னொரு பெயரும் உண்டு.  வயது குறைந்த சின்னப்பிள்ளைகள் மூலைக்கடை என்று குறிப்பிட்டனர். வயதில் பெரியவர்கள் ஜெயராமன் கடை என்று அழைத்தனர். ஆனால் நான் அந்தக் கடைக்கு இந்த இரு முறைகளிலிருந்தும் வேறுபட்ட வகையில் மற்றொரு பெயரைச் சூட்டியிருந்தேன்.

Monday 4 September 2023

மயக்கம் எனது தாயகம்

  

சினிமாப்பாட்டு பாடுவதும் கேட்பதும் அந்தக் காலத்தில் எங்களுக்கு வாய்த்த பெரிய பொழுதுபோக்கு. சினிமாப்பாட்டு பாட பெரிய சங்கீத ஞானமெல்லாம் தேவையில்லை. பாடல்வரிகளை தப்பில்லாமல் பாடினால் போதும். நாலைந்து முறை அடுத்தடுத்து கேட்டால், எல்லாப் பாட்டும் மனப்பாடமாகிவிடும். வரிகளை மறந்துபோனால் கூட பரவாயில்லை. ராகத்தின் போக்கை மட்டும் அடிப்படையாகக்கொண்டு இழுத்து இழுத்து சமாளித்துவிடலாம்.

உறவு - சிறுகதை

  

கடைசியாய் ஆப்பம் வாங்கித் தின்றவனையே கூடையைத் தூக்கிவிடச் சொல்லித் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் கிழவி.

ஏரிக்கு இந்தப் பக்கம் சாலையாம்பாளையம். அந்தப் பக்கம் வளவனூர். வனாந்தரமாய் நடுவில் வெடித்துக் கிடந்தது பூமி. வருஷத்தில் இரண்டு மாசமோ மூணு மாசமோதான் தண்ணீர் இருக்கும். அதுவும் எவனாவது புண்ணியவான் மனசுவைத்து சாத்தனூர் அணையைத் திறந்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் இல்லை. வெறும் மழைத்தண்ணீர்தான் தேங்கி நிற்கும்