Home

Sunday 10 September 2023

ஜெயதேவி இல்லம் - கட்டுரை

   

பஞ்சாயத்து போர்டு தெருவும் பிள்ளையார் கோவில் தெருவும் சந்திக்கிற இடத்தில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. இரண்டு தெருக்களும் சந்திக்கும் புள்ளியில் அந்தக் கடை இருந்ததால், அதற்கு மூலைக்கடை என்ற பெயர் இயல்பாகவே அமைந்துவிட்டது. அதை நடத்தி வந்தவர் ஜெயராமன் என்பவர். அதனால் ஜெயராமன் கடை என்று இன்னொரு பெயரும் உண்டு.  வயது குறைந்த சின்னப்பிள்ளைகள் மூலைக்கடை என்று குறிப்பிட்டனர். வயதில் பெரியவர்கள் ஜெயராமன் கடை என்று அழைத்தனர். ஆனால் நான் அந்தக் கடைக்கு இந்த இரு முறைகளிலிருந்தும் வேறுபட்ட வகையில் மற்றொரு பெயரைச் சூட்டியிருந்தேன்.

உரையாடும்போது எங்கள் அப்பாவை அவர் “வாங்கண்ணே, போங்கண்ணே” என்றும், அப்பா அவரிடம் “ஆமாம் தம்பி, இல்லை தம்பி” என்றும் அழைப்பது வழக்கம். அந்த உரையாடலை நீண்ட காலமாகப் பார்த்தவன் என்கிற வகையில் நான் அவரை சித்தப்பா என்று அழைத்துப் பழகிவிட்டேன். ஆகவே நான் அந்தக் கடையை சித்தப்பா கடை என்று குறிப்பிடத் தொடங்கி, பிறகு அதுவே எனக்குப் பழகிவிட்டது.

சாயங்கால நேரங்களில் அம்மாவிடம் ”அஞ்சி பைசா கொடும்மா. சித்தப்பா கடையில ஏதாச்சிம் வாங்கித் தின்னுட்டு ஆடப் போறேன்” என்று கேட்பேன். எனக்கு தேன்மிட்டாய்தான் மிகவும் பிடிக்கும். அம்மா சில்லறையைக் கொடுத்ததும் ஓட்டமாக ஓடி சித்தப்பா கடையின் முன்னால்தான் நிற்பேன். பெரிய இலந்தம்பழத்தின் அளவில் சிவப்பு நிறத்தில் அந்த மிட்டாய் இருக்கும். சித்தப்பா அதை ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலிலிருந்து எடுத்து என்னிடம் கொடுப்பார். அந்த மிட்டாயைச் சுற்றி சர்க்கரைத்துணுக்குகள் ஒட்டியிருக்கும். அதை நாக்கு நுனியில் வைத்து சப்பிக்கொண்டே விளையாடுவதற்கு ஓடிவிடுவேன் நான்.

சின்னப்பிள்ளைகள் சாப்பிடுவதற்கு உகந்த எல்லா மிட்டாய் வகைகளையும் இனிப்புகளையும் வாயகன்ற பாட்டில்களில் அடைத்து மேசை மீது வைத்திருப்பார் சித்தப்பா. முறுக்கு, எள்ளடை, கடலை உருண்டை, எள்ளுருண்டை, பொரி உருண்டை போன்றவற்றை அடைத்த பாட்டில் வரிசை மற்றொரு மேசையில் இருக்கும். இன்னொரு மேசையில் மாம்பழம், கொய்யாப்பழம், பப்பாளி, நாவல்பழம், வாழைப்பழம் என எல்லா விதமான பழவகைகளும் இருக்கும். ஐந்து பைசாவைக் கொடுத்துவிட்டு எடுத்துச் செல்வதற்குத் தோதாக, ஒரு சின்ன முக்காலி மீது சின்னச்சின்ன துண்டுகளாக கரும்பு கூட வெட்டிவைக்கப்பட்டிருக்கும். அவசரத்துக்கு பெண்கள் வந்து கால்படி அரைப்படி என்ற அளவில் வாங்கிக்கொண்டு செல்லும் வகையில் பொட்டுக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி போன்றவற்றைக் கூட சின்னச்சின்ன கூடைகளில் வைத்திருப்பார். 

சித்தப்பா தன் வீட்டின் முன்பகுதியைத்தான் கடையாக வடிவமைத்திருந்தார். வீடு, கடை இரண்டுமே ஒரே கூரையின் கீழேதான் இருந்தன. அதற்கு இரண்டு கதவுகள். வீட்டின் மையப்பகுதியில் இருக்கும் கதவு வழியாகவும் வீட்டுக்குள் செல்லலாம். கடையின் பின் சுவரை ஒட்டி இருக்கிற கதவைத் திறந்துகொண்டும் வீட்டுக்குள் செல்லலாம். கோவிலுக்குச் சொந்தமான மண்ணில் கட்டப்பட்ட வீடுகள் என்பதால், அந்த வரிசையில் எல்லா வீடுகளும் கூரை வீடுகளாகவே இருந்தன.

சித்தப்பா இல்லாத நேரத்தில் சித்தி வந்து கடையைப் பார்த்துக்கொள்வார். அவர் பெயர் தேவி. நாங்கள் அவரை தேவி சித்தி என்று அழைப்போம். அவர் வீட்டுக்குள்ளிருந்தே கடைக்குள் வந்துபோக அந்தக் கதவு வசதியாக இருக்கும்.

எங்கள் தெருவுக்கு மின்சாரம் வந்ததும், முதன்முதலாக சித்தப்பாவின் கடையை ஒட்டி ஒரு பெரிய விளக்குக்கம்பமும் பஞ்சாயத்து போர்டு அலுவலகத்தை ஒட்டி இன்னொரு விளக்குக்கம்பமும் தோன்றின. உடனே அந்த இடங்கள் ஒளிமயமாகிவிட்டன.

மின்விளக்கின் காரணமாக சித்தப்பாவின் கடையில் பரவியிருக்கும் வெளிச்சம் வண்டிகள் செல்லும் பாதை வரையில் நீண்டு சென்றது. வெகுதொலைவில் இருப்பவர்கள் கூட அங்கே ஒரு கடை இருப்பதைப் புரிந்துகொள்ள அது ஒரு வசதியாக இருந்தது.  

மின்சார வெளிச்சம் எங்களால் நம்பமுடியாத ஒரு மாயசக்தியைப் போல இருந்தது. இருளின் அடர்த்தியில் தெருவோரத்து மரங்களின் கிளைகள் அசையும்போதெல்லாம் ஏதோ ஒரு பேருருவம் எழுந்து நின்று ஆடுவதுபோலக் காட்சியளித்த தோற்றமெல்லாம் திடீரென கரைந்து காணாமல் போய்விட்டது. சுவர்மீது விழுந்து மிரளவைத்த நிழல்கள் சுவாரசியமான ஆச்சரியத்தை உருவாக்கின. அச்சத்தோடு இரவைப் பார்த்த காலம் மறைந்துவிட, இரவை ஒருவித ஆர்வத்தோடும் வசீகரத்தோடும் பார்க்கத் தொடங்கினோம்.

வெளிச்சத்தின் காரணமாக எங்கள் விளையாட்டு நேரம் திடீரென கூடுதலாகிவிட்டது. நீண்ட நேரம் சடுகுடு விளையாடினோம். களைப்பு ஏற்படும் வரையில் கல்லா மண்ணா விளையாடினோம்.  அதற்குப் பிறகுதான் வீட்டுக்குச் சென்றோம்.

பொதுமக்களும் விண்ணப்பம் கொடுத்து தத்தம் வீடுகளுக்கு மின்சார வசதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, எங்கள் தெருவில் மூன்று குடும்பங்கள் அந்த வசதியை முதன்முதலாக அடைந்தன. அவர்கள் அனைவரும் சொந்த மண்ணில் வீடு கட்டியிருந்தவர்கள். இரவு நேரங்களில் அவர்கள் வீட்டுக்குள் விளக்கு எரிந்தாலும், அந்த வெளிச்சம் கொஞ்சம் கூட வெளிப்பக்கம் எட்டிப் பார்த்துவிடாதபடி பெரும்பாலான நேரங்களில் அந்த வீட்டுக்காரர்கள்  கதவுகளை  மூடிவைத்திருந்தார்கள்.

தேர்வுத்தேதிகள் பள்ளியில் அறிவிக்கப்பட்டதும் நாங்கள் விளையாடும் நேரத்தைச் சுருக்கிக்கொள்வது அவசியமானது. அதனால் சிறிது நேரம் மட்டும் விளையாடிவிட்டு, வீட்டுக்குச் சென்று வழக்கம்போல மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்க உட்கார்ந்தோம். ஆனால், பளிச்சென்ற வெளிச்சத்தில் விளையாடிவிட்டு, வீட்டுக்குள் சிம்னி விளக்குக்கு அருகில் உட்கார்ந்து மங்கலான வெளிச்சத்தில் படிக்க தடுமாற்றமாக இருந்தது.  படிப்பில் மனம் ஒட்டவில்லை. அதனால் ஒவ்வொருவராக மீண்டும் தெருவிளக்கு வெளிச்சத்தைத் தேடிச் சென்றோம். அதன் கீழே வட்டமாக உட்கார்ந்து கேள்வி பதில்களைப் படித்தோம்.  மனப்பாடம் செய்த பதில்களை இன்னொருவரிடம் சொல்லிச் சரிபார்த்துக்கொண்டோம். எல்லாமே இயல்பாக நடைபெற்றன.

நாலைந்து நாட்களாக  தொடர்ந்து தெருவிளக்கு வெளிச்சத்தில் படிப்பதைப் பார்த்த சித்தப்பா ஒருநாள் “என்னடா பசங்களா, இங்கயே எதுக்குடா வட்டமடிக்கிறீங்க. வீட்டுக்குள்ள கால் தங்கலையா?” என்று கேட்டார். நாங்கள் தயக்கத்தோடு அவரிடம் விஷயத்தைச் சொன்னோம். “அப்படியா?” என்று தலையசைத்துக்கொண்டே ”சரி சரி படிங்க” என்று சொல்லிவிட்டு கடைக்குத் திரும்பிச் சென்றார் சித்தப்பா.

மறுநாள் காலையிலேயே மின்சார அலுவலகத்துக்குச் சென்று ஒரு விண்ணப்பத்தை எழுதிக் கொடுத்தார் சித்தப்பா. ஆனால் கோவில் மண்ணில் கட்டப்பட்ட வீட்டுபுக்கு மின் இணைப்பைக் கொடுக்க முடியுமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தது. அதற்கு ஏதேனும் விதி இருக்கிறதா என்று ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு பத்து நாட்கள் தேவைப்பட்டன. முடிவில் ஏதோ ஒரு விதியின்படி சித்தப்பா வீட்டுக்கு இணைப்பு கிடைத்துவிட்டது. அதுவரை கடைவாசலில் பரவியிருந்த வெளிச்சம் கடைக்குள்ளும் வீட்டுக்குள்ளும் வீசத் தொடங்கியது. அந்த வெளிச்சத்தைப் பார்த்தபோது பிரகாசமான ஒரு நதி வீட்டுக்குள் நுழ்ழைந்து நுரைததும்ப நிறைந்ததுபோல இருந்தது.

கடையை ஒட்டி ஒரு பெரிய வெட்டவெளி இருந்தது. மூலைக்கு ஒன்றாக நான்கு மூங்கில்களை நட்டு மேலே கழி பரப்பி கீற்றுகளைப் பரப்பி பந்தல் போல வைத்திருந்தார் சித்தப்பா . அந்த இடத்தில்தான் சித்தி அவித்த நெல்லைப் பரப்பி உலர வைப்பது வழக்கம். சில நேரங்களில், மிளார்களையும் எருமுட்டைகளையும் கூட உலரவைப்பார். சித்தியிடம் சொல்லிவிட்டு நாங்களும் அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் கூட அந்த இடத்தில் நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களைப் பரப்பி உலரவைப்போம்.  வீட்டுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டதற்கு அடுத்த நாள் காலையில் சித்தப்பாவும் சித்தியும் அந்த வெட்டவெளியிலிருந்து எல்லாவற்றையும் அப்புறப்படுத்திவிட்டு சுத்தப்படுத்தினர். பிறகு யாரோ ஒருவர் கடைத்தெருவிலிருந்து வந்து வீட்டுக்குள்ளிருந்து ஒயர்கம்பிகளை இழுத்துவந்து இரண்டு பெரிய டியூப் லைட்களைப் பொருத்திவிட்டுச் சென்றார்.

வழக்கம்போல இரவு கவிந்ததும் நாங்கள் புத்தகங்களை எடுத்துக்கொண்டு தெருவிளக்கை நாடிச் சென்றபோது, சித்தப்பாவின் வீட்டு வாசலில் பகல்போல பளிச்சென்றிருந்தது. சித்தப்பா வெளிச்சத்துக்கு நடுவில் நின்றிருந்தார்.  சித்தப்பா வீட்டு வாசலில் நின்றபடியே “வாங்கடா வாங்க, இந்தப் பக்கமா வந்து உக்காருங்க” என எல்லோரையும் முற்றத்துக்கு வழிகாட்டிக்கொண்டிருந்தார்.  

“என்ன சித்தப்பா இது?” என்று ஆச்சரியம் தாங்காமல் நான் கேட்டேன். “போடா போ. என்ன ஏதுன்னுலாம் கேட்காத. படிக்கிறதுதான் உன் வேலை. போய் முதல்ல அதைச் செய்” என்று சிரித்துக்கொண்டே அனுப்பிவைத்தார் சித்தப்பா.

தொடக்கத்தில் நாங்கள் ஆறேழு பேர் மட்டுமே அந்தப் பந்தலுக்குக் கீழே சென்று படிக்கத் தொடங்கினோம். பிறகு ஒவ்வொரு நாளும் ஒருவராக வந்து சேர்ந்துகொண்டனர். சில நாட்களுக்குப் பிறகு அடுத்த தெருவிலிருந்து கூட பிள்ளைகள் வந்து படித்துவிட்டுச் செல்லத் தொடங்கினர். ஒரு கட்டத்துக்குப் பிறகு ஒரு அந்த முற்றம் நிறைந்து வழிய ஒரு வகுப்பறை மாதிரி மாறிவிட்டது.

ஒருநாள் நாங்கள் அனைவரும் முற்றத்தில் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்த சமயத்தில் சித்தி ஒரு பெரிய பாத்திரத்தில் சுண்டலை நிரப்பி எடுத்துவந்தார். ”என்ன சித்தி இது?” என்று கேட்கும் முன்பே சிரித்துக்கொண்டே ”இந்தாங்கடா. சுண்டல். சாப்புடுங்கடா” என்றபடி ஆளுக்கொரு பிடி எடுத்துக் கொடுத்தார்.

“எதுக்கு சித்தி சுண்டல்? இன்னைக்கு உங்க பொறந்த நாளா?” என்று அவசரமாக ஒரு சிறுவன் கேட்டான்.

“பொறந்த நாளுக்குத்தான் சுண்டல் குடுக்கணுமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் சித்தி.

“சாமிக்கு வச்சி படைக்கிறதுக்காக செஞ்சிங்களா?” என்று அவனே மறுபடியும் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்.

“எதுவும் இல்லடா ராஜா. உங்களுக்கு குடுக்கம்லாம்னுதான்டா சுண்டல் அவிச்சேன்”

அந்தப் பதிலுக்குப் பிறகு ஒருவரும் பேசவில்லை. சில கணங்களுக்குப் பிறகு சித்தி “என்னடா பசங்களா, பேச்சுமூச்சு விடாம சாப்படறீங்க? நல்லா இருக்குதா இல்லையா? வாயைத் தெறந்து சொல்லுங்கடா” என்றார்.

“ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது சித்தி. நம்ம பிள்ளையார் கோயில்ல படைக்கும்போது குடுப்பாங்களே, அது மாதிரி ருசியா இருக்குது சித்தி”

சுண்டலை மென்றுகொண்டே எல்லோரும் ஒரே குரலில் சொன்னோம்.

சுண்டல் முடிந்ததும் ஆளுக்கொரு தம்ளர் சுக்குக்காப்பியைக் கொண்டுவந்து கொடுத்தார் சித்தி. எங்களுக்கு எல்லாமே புதிய அனுபவமாக இருந்தது. உதடு குவித்து ஊதி ஊதிக் குடித்துக்கொண்டிருந்த சேகரிடம் சித்தப்பா “நீ படிச்சி பெரிய ஆளானதும் எந்த வேலைக்குடா போவ?” என்று ஒரு கேள்வி கேட்டுத் தூண்டினார்.

அவன் உடனே தொண்டையைச் செருமி சரிசெய்தபடியே “எனக்கு ஸ்டேஷன் மாஸ்டர் வேலை ரொம்ப புடிக்கும் சித்தப்பா.  எல்லா ரயில்ங்களயும் கொடியை காட்டி காட்டி நிறுத்தி அனுப்பலாம். ரொம்ப ஜாலியான வேலை” என்று உற்சாகமுடன் முகத்தையும் கைகளையும் திருப்பித்திருப்பி அசைத்தவண்ணம் பதில் சொன்னான் சேகர்.

“கணேஷு, நீ எந்த வேலைக்குடா போவ ?”

“நான் ஏரோப்ளேன் ஓட்டற வேலைக்கு போவேன் சித்தப்பா?”

பதில் சொல்லும்போதே அவன் தன் கையை வளைத்து விரல்களைக் குவித்து விமானம் வானத்தில் ஏறுவதுபோல செய்துகாட்டினான்.

“ராமச்சந்திரன், நீ?”

“நான் பெரிய பெரிய கட்டடங்கள்லாம் கட்டற  இஞ்சினீரா போவேன்”

“சுந்தரம், நீ?”

“நான் டாக்டருக்கு படிச்சி ஆஸ்பத்திரியில வேலை செய்யப் போறேன் சித்தப்பா. காயலாகாரங்க வந்தாங்கன்னா, எல்லாருக்கும் ஊசி போட்டு மருந்து குடுத்து டக்குடக்குனு சரியாக்குவேன்”

“பாலு, நீ?”

“எனக்கு டீச்சர் வேலைதா ரொம்ப ரொம்ப புடிக்கும்”

அதற்குப் பிறகு யாரையும் பெயர் சொல்லி கேட்கவேண்டும் என்ற அவசியமே ஏற்படவில்லை. ஒவ்வொருவரும் தானாகவே கையைத் தூக்கிவிட்டு உற்சாகத்துடன் பதில் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

“போஸ்ட்மாஸ்டர்”

“போலீஸ்”

“பேங்க் ஆபீசர்”

”போதும் போதும்” என்றபடி கைகளை உயர்த்தி புன்னகையுடன் அனைவரையும் அமைதிகொள்ளுமாறு செய்தார் சித்தப்பா.

அந்த நேரத்துக்குச் சரியாக யாரோ ஒருவர் கடைக்கு முன்னால் வந்து நின்றார். உடனே  ”சரி, இன்னொரு நாளைக்கு நாம இத பத்தி பேசலாம். இப்ப எல்லாரும் போய் உக்காந்து படிங்க, போங்க” என்று சொல்லிவிட்டு அவரை நோக்கிச் சென்றார்.

ஒரு விடுமுறை நாளில் நானும் நண்பர்களும் சேர்ந்து வழக்கம்போல ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி பந்து விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது யாரோ ஒருவர் ஏரிக்கரையின்  பக்கத்திலிருந்து உலர்ந்துபோன இரண்டு தென்னங்கீற்றுகளை கைக்கு ஒன்றாகப் பிடித்துக்கொண்டு இழுத்துவருவது தெரிந்தது. தொலைவாக இருந்ததால் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நெருங்கி வந்த பிறகுதான் வந்துக்கொண்டிருப்பது சித்தப்பா  என்று புரிந்தது.

அவர் ஏன் அந்தத் திசையிலிருந்து வருகிறார் என்பது முதலில் புரியவில்லை. அதனால் ஆட்டத்தை நிறுத்திவிட்டு நாங்கள் அருகில் வரும் நேரத்துக்காகக் காத்திருந்தோம்.  அருகில் நெருங்கி வந்ததும் ”என்ன சித்தப்பா இது?” என்று கேட்டேன்.

“தாதம்பாலையத்துல ஒரு ஆள பாக்கவேண்டிய வேலை இருந்தது. பார்த்துட்டு இப்படியே குறுக்கு வழியில வந்துட்டிருந்தேன். வெள்ளைக்காரன் பங்களா கிட்ட வரும்போது இந்த கீத்துங்க விழுந்து கெடந்தது. கண்ணுல பட்டபிறகு அப்படியே கெடக்கட்டும்னு விட்டுட்டு வரமுடியலை. அதான் இழுத்துட்டு வந்தேன்”

நான் சித்தப்பாவை நெருங்கி “ஒரு கீத்த கொடுங்க. நான் இழுத்துட்டு வரேன்” என்றபடி அவரிடமிருந்து ஒரு கீற்றை வாங்கிக்கொண்டேன். வற்றலாக உலர்ந்து தக்கையாக இருந்தது. “நீங்க ஆடுங்கடா, தோ வந்துர்ரன்” என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு சித்தப்பாவோடு நடக்கத் தொடங்கினேன்.

”எதுக்கு சித்தப்பா இது? அடுப்புக்கா?” என்று நான் சும்மா பேச்சைத் தொடங்கினேன்.  சித்தப்பா உடனே “முரிச்சி அடுப்புல வைக்க வசதியாதான் இருக்கும். ஆனா நான் அதுக்காக எடுத்துவரலை” என்று தலையசைத்தார்.  “வேற எதுக்கு?” என்று கேட்க நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை.. அவராகவே சொல்லட்டும் என்று நான் அவரைப் பார்த்தேன்.

“தென்னங்குச்சிய உருவி எடுக்கறதுக்குடா”

குச்சி என்று அவர் சொன்னதுமே எனக்குப் புரிந்துவிட்டது. “ஓ, துடைப்பம் செய்யறதுக்கா?” என்று நானே கண்டுபிடித்துவிட்டது போன்ற பெருமையுடன் கேட்டேன்.

அவர் ஒருகணம் புன்னகைத்தபடி இல்லை என்பதுபோல தலையசைத்தார். பிறகு “வேணும்ன்னா துடைப்பமும் செஞ்சிக்கலாம். ஆனால் நான் எடுத்து வந்தது அந்த நோக்கத்துக்காக கிடையாது” என்றார்.

என்ன நோக்கமாக இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. அவராகவே சொல்லட்டும் என அமைதியாக அவர் முகத்தையே பார்த்தேன்.

“நீ குருவிக்கூடு பார்த்திருக்கியா?”

“ம்”

“குருவி அந்தக் கூட்ட எப்படி கட்டுது, சொல்லு பார்ப்போம்?”

“சின்னச்சின்ன சுள்ளிகள், சருகு, புல், செத்தை எல்லாத்தயும் ஒன்னொன்னா கொண்டுவந்து சேர்த்து கூட்டைக் கட்டுது”

”அந்தச் சுள்ளிகளுக்காக அது ஓடி ஓடி அலையணும். எல்லா இடங்கள்லயும் அதுக்கு சுள்ளி கிடைக்குமா கிடைக்காதான்னு தெரியாது.”

“ஆமாம், அதுக்காக?”

“நாம என்ன செய்ய போறோம்னு சொன்னா, இந்தத் தென்னங்குச்சிகளை சின்னச்சின்ன அளவா ஒடைச்சி குருவி கண்ணுல படறமாதிரி அங்கங்க வைக்கப் போறோம். குருவிங்களுக்கு எப்ப வேணுமோ அப்ப எடுத்துக்கும். கூடு கட்டிக்கறதுக்காக நாம அதுக்கு செய்யற சின்ன உதவி. புரியுதா?”

நான் அவரை மலைப்புடன் பார்த்தேன். இப்படியெல்லாம் ஒருவரால் யோசிக்கமுடியுமா என்ற எண்ணமே முதலில் நெஞ்சில் எழுந்தது.

அதற்குப் பிறகு நான் அவரிடம் எதையும் கேட்கவில்லை. அமைதியாக அவரோடு சேர்ந்து கீற்றை இழுத்துக்கொண்டு சென்றேன். வீட்டை அடைந்ததும் அவரோடு சேர்ந்து குச்சிகளைப் பிரித்தெடுக்க உதவி செய்தேன். பிறகு அவரைப்போலவே ஒவ்வொரு குச்சியையும் இரண்டாகவும் மூன்றாகவும் மடித்து உடைத்து ஒரு கூடைக்குள் போட்டேன்.

“இந்தக் கூடையை எடுத்துகினு என் பின்னாலயே வா. நான் என்ன செய்றேன்னு பாரு. அப்பதான் உனக்குப் புரியும்” என்று சொன்னார் சித்தப்பா. குச்சித்துணுக்குகளால் நிறைந்த அந்தக் கூடையை எடுத்துக்கொண்டு அவருக்குப் பின்னாலேயே நடந்தேன் நான்

முதலில் நாங்கள். கோவில் மதில் பக்கமாகச் சென்றோம். அங்கங்கே சிதைந்து பள்ளம்பள்ளமாக காணப்பட்ட அந்த மதில் மீது குச்சிகளை அள்ளியள்ளி வைத்தபடி வந்தார் சித்தப்பா. பிறகு கைக்கு எட்டும் உயரத்தில் இருக்கும் மரக்கிளைகளுக்கு நடுவிலும் அள்ளி வைத்தார். தோப்புக்கு நடுவில் ஒரு பாழடைந்த கிணறு இருந்தது.  அந்த மதிலைச் சுற்றி நிறைய வேப்பமரங்களும் பூவரசமரங்களும் இருந்தன. அந்த வட்டாரத்தில் குருவி நடமாட்டம் உள்ள இடங்களிலெல்லாம் கூடையிலிருந்த குச்சிகளையெல்லாம் தூவுவதுபோல வைத்துமுடித்தார்.

சித்தப்பாவின் செயல் எனக்கு விசித்திரமாக இருந்தது. அதைப்பற்றி உடனே யாரிடமாவது சொல்லிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

அன்று இரவு அம்மாவிடமும் அப்பாவிடமும் அதைச் சொன்னேன். “அவன் ஒரு பெரிய அற்புதப் பிறவிடா. எச்ச கையால கூட காக்காவ ஓட்டாத மனுஷங்கள் வாழற ஊருல இப்படி ஒரு அபூர்வமான ஜென்மம். என்னமோ நாம செஞ்ச புண்ணியம், அவன் கூட நாம இருக்கோம்” என்றார் அப்பா.  “ஒரு பக்கம் குருவிங்கள சுட்டுத் தின்னறவங்களும் இருக்காங்க. இன்னொரு பக்கம் இப்படி குருவிக்கு கூடு கட்ட குச்சி குடுக்கறவங்களும் இருக்காங்க. என்ன மாதிரியான உலகமோ இது. ஒன்னயும் புரிஞ்சிக்க முடியலை” என்று சொல்லிவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி கைகளை விரித்தார் அம்மா.

மறுநாள் எங்கள் ராதாகிருஷ்ணன் ஐயாவிடம் விவரமாக எல்லாவற்றையும் சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டதும் அவர் முகம் கனிந்துவிட்டது. ”அப்படி ஒரு மனுஷன் உண்மையாவே உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்காரா” என்று வியப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து “அவர நான் ஒருமுறை பார்க்கணுமே. என்னைக்காவது ஒருநாள் என்னை அந்தக் கடைக்காரர்கிட்ட அழச்சிகிட்டு போடா” என்றார். பிறகு ஒரு பெருமூச்சுடன் “இதுக்குப் பேருதான் ஜீவகாருண்யம். உலகத்துல இருக்கிற எல்லா உயிர்களயும் தன்னைப்போலவே நேசிக்கிறது பெரிய விஷயம். பெரிய பெரிய ஞானிகளுக்கு மட்டும்தான் அப்படித் தோணும்” என்றார்.

அதையெல்லாம் கேட்கக்கேட்க நான் சித்தப்பாவின் மீது வைத்திருந்த அன்பும் மதிப்பும் பெருகிக்கொண்டே சென்றன.

மற்றொரு நாள் நான் எருமுட்டை வாங்கி வருவதற்காக ஏரிக்கரையில் இருக்கும் வெள்ளைக்காரன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது வெள்ளைக்காரன் வீட்டில் இல்லை. நான் அவருக்காக குடிசைக்கு வெளியே மரத்தடியில் காத்திருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக ஏரிக்கரையோரமாக சித்தப்பாவைப் பார்த்தேன். அவர் கையில் ஒரு வாளி இருந்தது. தரையையே பார்த்தபடி சிறிது தொலைவு நடப்பதும் பிறகு வாளியிலிருந்து ஒரு குவளையால் தண்ணீரை எடுத்து குனிந்து செடிக்கு ஊற்றுவதுபோல ஊற்றுவதுமாக இருந்தார். செடிகொடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கும் இந்த இடத்தில் எந்தச் செடிக்கு அவர் தண்ணீர் ஊற்றுகிறார் என்பதே புரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.

எருமுட்டைக் கூடையை குடிசைக்கு அருகிலேயே வைத்துவிட்டு, ”சித்தப்பா” என்று சத்தமாக அழைத்தபடி வேகமாக அவரை நோக்கி நடந்தேன். முதல் இரு அழைப்புகள் அவரை எட்டவில்லை. மூன்றாவது அழைப்பைக் கேட்டதும் என் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். “என்னடா இந்த பக்கம்? ஜோடி ஆளுங்க இல்லாம நீ மட்டும் தனியா வந்திருக்க?” என்று சிரித்தார்.

“விளையாடறதுக்கு வரலை சித்தப்பா. எருமுட்டை வாங்கிட்டு வரச் சொன்னாங்க அம்மா. அதுக்காக வந்தேன்”

“அப்படியா?” என்றபடி  வேறு பக்கம் திரும்பி குனிந்து தண்ணீர் ஊற்றினார். அப்போதுதான் அவர் செடிக்கு தண்ணீர் ஊற்றவில்லை. ஏற்கனவே அங்கே மண்ணில் குழியைப்போல புதைந்திருக்கும் ஒரு பானை ஓட்டில் தண்ணீர் ஊற்றுகிறார் என்பது புரிந்தது.

என் குழப்பம் இன்னும் அதிகரித்தது. “பானை ஓட்டுல எதுக்கு தண்ணி ஊத்துறீங்க சித்தப்பா? ஏதாச்சும் செடி வைக்கப்போறீங்களா?” என்று கேட்டேன்.

சித்தப்பா அதைக் கேட்டு சிரித்தபடி மேலும் நாலு எட்டு நடந்து மற்றொரு பானை ஓட்டில் தண்ணீர் ஊற்றினார். பிறகு “இது செடிக்காக கிடையாதுடா” என்று என்னைப் பார்த்தார். அப்படியானால் எதற்கு என்று கேட்பதுபோல குழப்பத்துடன் புருவத்தைச் சுருக்கி அவரைப் பார்த்தேன்.

“இப்ப உனக்கு தண்ணி தாகமெடுத்தா என்ன செய்வ? என்கிட்ட வாங்கிக் குடிப்ப. என்கிட்ட இல்லைன்னா வேற யாருகிட்டயாவது வாங்கி குடிச்சிட்டு போயிடுவ. அதேமாதிரி எனக்கு தாகமெடுத்தா உன்கிட்ட வாங்கி குடிப்பேன். இல்லைன்னா வேற யாருகிட்டயாவது வாங்கி குடிச்சிட்டு போயிடுவேன். இல்லையா?”

“ஆமா. அதுக்கு?”

“நமக்கு வாயிருக்குது. கேக்கறம். வாயில்லாத சின்னச்சின்ன குருவி, கோழி, காக்கா, குயிலு, கிளி, கவுதாரி எல்லாம் என்ன செய்யும்? சொல்லு. தண்ணிக்காக அலைஞ்சிஅலைஞ்சி ஓடறதைத் தவிர அதுக்கு வேற வழி என்ன இருக்குது? இப்படி அங்கங்க அதுங்க கண்ணுல படறமாதிரி தண்ணிய வச்சிட்டு போனோம்னு வை. எப்பவாவது அதுக்கு தண்ணி தேவைப்படற சமயத்துல வந்து தகிரியமா குடிச்சிட்டு போகும். புரியுதா?”

அவருடைய கவலை புதிதாகவும் அதுவரை யாரும் தெரிவிக்காததுமாக இருந்தது. நான் மெளனமாக அவரை நெருங்கி, அவரிடமிருந்த வாளியை வாங்கிக்கொண்டேன். அவர் திரும்பி நடக்கும் திசையில் எல்லாம் அதைத் தூக்கிக்கொண்டு அவருக்குப் பின்னாலேயே நடந்தேன். சிறிது தொலைவு நடந்து சென்ற பிறகு, அவர் குறிப்பிட்டதுபோலவே மரக்கிளையிலிருந்து வேகமாக இறங்கி தரைக்கு வந்த ஒரு காகம் ஒரு இடத்தில் குனிந்து தண்ணீர் அருந்துவதைப் பார்த்தேன். ஒரு கணம் உடல் சிலிர்த்தது. அந்தக் காகத்தை சித்தப்பா கவனிக்கிறாரா என்று திரும்பி அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் வேறொரு திசையில் ஓடு இருக்கும் இடத்தைத் தேடும் முனைப்பில் இருந்தார்.

வெள்ளைக்காரன் குடிசையின் பக்கத்திலிருந்து வந்த சத்தத்தை சித்தப்பாதான் முதலில் கேட்டார். “எருமுட்டகாரன் வந்து குரல் குடுக்கிறான் பாரு. ஓடு. ஓடு” என்று அவர் சொன்ன பிறகுதான் அதை நான் உணர்ந்தேன். கையிலிருந்த வாளியை கீழே வைத்துவிட்டு “வரேன் சித்தப்பா” என்று சொல்லிக்கொண்டு விடைபெற்றேன். சில்லறையைக் கொடுத்துவிட்டு எருமுட்டைகளை எண்ணி வாங்கிக்கொண்டு கூடையைத் தூக்கி தலையில் வைத்தபடி திரும்பிப் பார்த்தபோது சித்தப்பா தொலைவில் குட்ஸ் ஷெட்டைக் கடந்து வேறு பக்கமாக போய்க்கொண்டிருந்தார்.

நாலைந்து மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முடித்து பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சித்தப்பா வாசலில் வந்து நின்றார். முழு உருவம் தெரியவில்லை. நிழலைப் பார்த்து “யாரு அங்க, ஜெயராமனா? என்று கேட்டார் அப்பா. “ஆமாம்ண்ணே” என்றபடி அவர் வேலிப்படலைத் தள்ளிவிட்டு வாசலை நோக்கி வந்தார் அவர். “வா ஜெயராமா, வா வா. என்ன இந்த நேரத்துல?” என்று கேட்டார் அப்பா. “உங்கள பார்த்து ஒரு நல்ல விஷயம் சொல்லிட்டு போவலாம்னு வந்தேண்ணே” என்றபடி குனிந்து கையை ஊன்றியபடி மெழுகிய தரையின் மீது விரிக்கப்பட்டிருந்த சாக்கு மீது உட்கார்ந்தார்.

“நல்ல விஷயமா? சொல்லு, சொல்லு? ஏதாவது பிரசவ செய்தியா?”

“ஐயோ, அண்ணனுக்கு எப்பவும் கிண்டல் செஞ்சி பேசறதே வேலையா போச்சி. அதான் ஏற்கனவே வீடு நிறைய மூனு இருக்குதே, இதுக்கு மேல இன்னொன்னு எதுக்குண்ணே”

“சரி சரி. வேற என்ன விஷயம், சொல்லு?” என்று அப்பா அவரைத் தூண்டினார்.

“நம்ம சுப்பிரமணியர் கோயில் தெருவுல ஒரு நாலு சதுரம் இடம் வெலைக்கு வருதுண்ணே. வாங்கி சின்னதா ஒரு வீடு கட்டிகிட்டு போயிடலாம்னு  ஊட்டுக்காரி சொல்றா. நீங்க ஒரு தரம் வந்து எடத்த பார்த்துட்டு சரின்னு சொன்னா தகிரியமா முடிச்சிடுவேண்ணே. இன்னும் எவ்ளோ காலம்தான்னே இந்த கோயில்மண்ணே கதின்னு கெடக்கறது?”

அப்பா உடனே சித்தப்பாவின் கையைப்பற்றி இழுத்து அவர் தோளில் தட்டிக் கொடுத்தார். “ரொம்ப ரொம்ப சந்தோஷம்டா ஜெயராமா. ரொம்ப ரொம்ப சந்தோஷம்” என்று சொன்னபோது அவர் முகத்தில் வெளிச்சம் படர்ந்திருந்தது. தொடர்ந்து பேச அவருக்கு உடனடியாக சொற்கள் கிடைக்காமல் ஒருகணம் அவர் முகம் தவித்தது.

“குருவி பின்னால, காக்கா பின்னால வெள்ளந்தியா ஓடிட்டிருக்கானே, இவன காப்பாத்துடி மாரியாத்தான்னு அப்பப்ப மனசுக்குள்ள தோணும் ஜெயராமா. அந்தத் தெய்வம் உண்மையிலயே உனக்கு நல்ல வழியை காட்டியிருக்குது. நீயாவது இங்கயே கெடந்து லோள்படாம வெளியே போய் நல்லா இருடா, நல்லா இரு” என்று ஆசி வழங்குவதுபோல  புன்னகையோடு கையை உயர்த்தினார். தொடர்ந்து “குடுக்கற ஆளு யாரு? எந்த இடம்? நாளைக்கு காலையிலயே போய் பார்த்துடலாம் வா”  என்றார்.

அடுத்த நாள் காலையில் திட்டமிட்டபடியே அப்பாவும் சித்தப்பாவும் புறப்பட்டுச் சென்று இடத்தைப் பார்த்துவிட்டு வந்தார்கள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு அம்மாவிடம் “தெற்குப் பார்த்தமாதிரி வாசப்படி வச்சி கட்டறதுக்கு தோதானா இடம். கோயில்லேர்ந்து நாலு வீடு தள்ளியிருக்குது. தற்சமயம் ஒரு பழைய ஓட்டுவீடு இருக்குது. அந்த குடும்பத்து பையன் மெட்ராஸ்ல செட்டிலாவப் போறானாம். அம்மா அப்பாவையும் பையன் கையோடு அழச்சிகினு போயிடணும்னு  ஒரு திட்டம் வச்சிருக்கான். கைமாறின உடனே இடிச்சிட்டு கட்ட ஆரம்பிச்சா, ஆறேழு மாசத்துல கட்டி முடிச்சிடலாம். ஜெயராமன் குணத்துக்கு எல்லாம் நல்லபடி அமையணும்” என்று அப்பா சொன்னதைக் கேட்டேன்.

அடுத்து வந்த செவ்வாய்க்கிழமை அன்று சுப்பிரமணியர் கோயிலுக்கு அம்மாவும் சித்தியும் புறப்பட்டபோது, அவர்களோடு நானும் சேர்ந்துகொண்டேன். முருகரைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் எல்லோரும் சித்தப்பா வாங்கவிருக்கும் புதிய வீட்டுமனையைப் பார்த்தோம். அந்த வீட்டு வாசலில் ஒரு பெரிய வேப்பமரமும் வாதுமை மரமும் திசைக்கொன்றாக நின்றிருந்தன. காற்று அருமையாக வீசியது. தள்ளிவிடுவதுபோல எங்கள் முதுகைத் தழுவிக்கொண்டு சென்றது.  ”அதிர்ஷ்டக்காரிடி நீ. அருமையான இடம் கிடைச்சிருக்குது” என்று சொன்னார் அம்மா.

பதிவுவேலை முடிந்து பூமிபூஜை போட்டு வேலையைத் தொடங்குவதற்குள் ஒரு மாதம் கரைந்துவிட்டது.  பூஜைக்கு அம்மா, அப்பா, நான், தம்பிகள், தங்கைகள் எல்லோரும் சென்றிருந்தோம். பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் சுண்ணாம்புக்கோடு இழுத்திருப்பதுபோல வீட்டுமனையில் குறுக்கும் நெடுக்குமாக பல கோடுகள் போட்டிருந்தார்கள். 

அவசரத்தில் “இது என்ன சித்தப்பா? பாண்டி விளையாடறதுக்கு கோடு போட்ட மாதிரி இருக்குது?” என்று கேள்வி எழுப்பினேன். அதைக் கேட்டதும் சித்தப்பா சிரித்துவிட்டார். பிறகு “இது விளையாடறதுக்குப் போட்ட கோடு இல்லடா.  வீடு எப்படி இருக்கணும்ங்கற திட்டம்” என்றார்.

“திட்டமா?”

“ஆமாம். இங்க பாரு. இது கூடம், இது சமையலறை, இது குளிக்கிற அறை“ என்று ஒவ்வொரு சதுரத்தயும் சுட்டிக்காட்டி உற்சாகத்தோடு சொன்னபடி வந்தார் சித்தப்பா. கடைசியாக ஒரு பெரிய சதுரமான இடத்தை நெருங்கியதும் “இது பிள்ளைங்க படிக்கிறதுக்கான பொதுவான அறை. அந்த வீட்டுல வந்து படிச்சிட்டு போறமாதிரி இங்கயும் வந்து படிக்கலாம்” என்றார்.

அதற்குள் அப்பா குறுக்கிட்டு ”எங்க போனாலும் இத மட்டும் நீ விடமாட்ட” என்று சித்தப்பாவின் முதுகில் தட்டிச் சிரித்தார்.  பள்ளிக்கூடத்தில் எங்கள் வகுப்பறை அளவுக்கே அந்த இடம் இருந்தது. வரிசையாக டெஸ்க் இருந்தால், வகுப்பறை என்றே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு பெரிதாக இருந்தது.

பூஜை முடிந்ததும் தொழிலாளர்கள் பள்ளமெடுக்க ஆரம்பித்தார்கள். அப்போது எங்கள் பள்ளியில் அரையாண்டுத்தேர்வுக்கான அட்டவணையை எழுதிப் போட்டுவிட்டனர். நாங்கள் அதற்காகப் படித்துக்கொண்டிருந்தோம். சித்தப்பா பகல் முழுக்க வேலை நடக்கும் இடத்திலேயே இருந்தார். மணல், ஜல்லி, இரும்பு, சிமெண்ட் என ஒவ்வொன்றுக்கும் அலைந்துகொண்டே இருந்தார். கடையை நடத்தும் முழு பொறுப்பையும் சித்தி எடுத்துக்கொண்டார். மிகவும் அபூர்வமாகத்தான் எங்களுக்கு சித்தப்பாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஏழாம் வகுப்பை முடித்துக்கொண்டு நான் எட்டாம் வகுப்புக்கு வந்து காலாண்டுத் தேர்வையும் எழுதிமுடித்துவிட்டேன். என்னைப்போலவே எல்லாச் சிறுவர்களும் சிறுமிகளும் அடுத்தடுத்த வகுப்புக்குச் சென்றுவிட்டனர். நினைத்ததுபோலவே வீடு கம்பீரமாக எழுந்து நின்றது. சின்னச்சின்ன வேலைகள் மட்டுமே பாக்கியிருந்தன.

“வீட்டுக்கு ஒரு பேர் வைக்கணும்டா. ஒரு நல்ல பேர் சொல்லுங்கடா” என்று ஒரு நாள் சித்தப்பா பொதுவாக எங்களைப் பார்த்துக் கேட்டார்.

“சித்தப்பா, தாஜ்மகால்னு வைங்க சித்தப்பா. ஒரு உலக அதிசயத்துடைய பேரு நம்ம ஊருலயும் இருக்கட்டும்” என்று சீனிவாசன் வேகமாக எழுந்து நின்று சொன்னான். “அப்படிலாம் வைக்கக்கூடாதுடா தம்பி. அது கல்லறைக்கு வைச்ச பேரு. வேற சொல்லு” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சித்தப்பா.

“உதயசூரியன் இல்லம்னு வைங்க சித்தப்பா” என்றான் ஒருவன்.

“யாருடா அது? நாம என்ன கட்சியாடா நடத்தறம்? வேற ஏதாவது  ஒரு பேரு சொல்லுடா” என்றார் சித்தப்பா.

“மல்லிகை இல்லம்”

“தங்க மாளிகை”

“அன்புக்கோயில்”

“அழகு இல்லம்”

“முருகர் இல்லம்”

“முத்தமிழ் இல்லம்”

ஆளாளுக்கு ஒன்றென மனத்தில் தோன்றும் பெயர்களையெல்லாம் சித்தப்பாவிடம் சொன்னோம். அவர் ஒவ்வொரு பெயரையும் ஒருமுறை மனத்துக்குள் சொல்லிப் பார்ப்பதும் பிறகு உதட்டைப் பிதுக்கி அதிருப்தியை வெளிப்படுத்துவதுமாக இருந்தார். அவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

சித்தப்பாவின் பெயர் ஆராய்ச்சியைப்பற்றி அன்று இரவு சாப்பிடும் சமயத்தில் அம்மாவிடமும் அப்பாவிடமும் சொன்னேன். அம்மா மிகவும் சர்வசாதாரணமாக “அந்தப் பேரு இந்தப் பேருன்னு எதுக்கு அலையணும். ஒன் சித்தி பேரு தேவி. அந்தப் பேரு புடிச்சிருந்தா தேவி இல்லம்னு வைக்கச் சொல்லு. அவரு பேரு ஜெயராமன், அதுவும் நல்லாதான் இருக்குது. அது புடிச்சிருந்தா ஜெயராமன் இல்லம்னு வைக்கச் சொல்லு” என்று ஒரு தீர்வைக் கொடுத்தார். அவர் யோசிக்கிற வேகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அப்போது நான் வேண்டுமென்றே “அந்த ரெண்டுமே புடிக்கலைன்னு வை, அப்ப என்ன செய்யறது?” என்று இழுத்தேன். ”அந்த ரெண்டுமே வேணாம்ன்னா, மூனு புள்ளைங்கள்ல ஏதாவது ஒரு புள்ள பேர வைக்கச் சொல்லு. அதுவும் வேணாம்ன்னா மூனு புள்ளைங்க பேரயும் சேர்த்து ஒரு பெரிய பேரா வைக்கச் சொல்லு” என்று தீர்வுகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.

அம்மா கொடுத்த ஆலோசனைகள் எல்லாமே எனக்குப் பிடித்திருந்தன. அதை உடனே சித்தப்பாவுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று மனம் துடித்தது. அதனால் சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டு உதறியபடியே தோட்டத்திலிருந்து நேராக சித்தப்பா வீட்டுக்கு ஓடினேன். “என்னடா?” என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் அம்மா சொன்னதையெல்லாம் அவர் முன்னால் அடுக்கினேன்.

“தேவி இல்லம். ஆகா, நல்லாதான்டா இருக்குது. அப்படியே வச்சிடலாமா?” என்று என்னிடம் கேட்டார். பிறகு சித்தியைப் பார்த்தார். சித்தி உடனே சிரித்துக்கொண்டே “அதெல்லாம் வேணாம். ஜெயராமன் இல்லம்ங்கற பேரயே வைங்க. உங்க ஆசை, உழைப்பு எல்லாத்துக்கும் அதுதான் கெளரவம்” என்றார்.

சித்தப்பா ஒரு கணம் ஆழமாக சித்தியைப் பார்த்தார். பிறகு என்னைத் திரும்பிப் பார்த்தார். “ரெண்டும் வேணாம். உன் பேருல பாதி, என் பேருல பாதி. ரெண்டயும் இணைச்சி ஜெயதேவி இல்லம்னு வச்சிடலாமா?” என்று கேட்டார்.

சித்தி இரண்டுமூன்று முறை அந்தப் பெயரை வெவ்வேறு ஏற்ற இறக்கத்துடன் முணுமுணுத்துப் பார்த்தார். அவர் கண்கள் மலர்ந்தன. உடனே திருப்தியுடன் ”உங்க விருப்பம். எப்படி வச்சாலும் சரி” என்று சொல்லிக்கொண்டே எழுந்து சென்றார்.

“நீ என்னடா சொல்ற?” என்று சித்தப்பா என்னைத் திரும்பிப் பார்த்தார். ஜெயதேவி என்னும் பெயரைக் கேட்டதுமே நான் அவசரத்தில் “யாரோ சரோஜாதேவின்னு சொல்ற மாதிரி இருக்குது சித்தப்பா” என்று சொல்லிவிட்டேன். மறுகணமே நாக்கைக்கடித்தபடி சிரித்துக்கொண்டே “நல்லா இருக்குது சித்தப்பா” என்று தெரிவித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.

”என்னடா, போய் உளறிட்டு வந்துட்டியா? சரியான ஓட்டைவாயன்டா நீ” என்றார் அம்மா. நான் அதைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ஜெயதேவி இல்லம் என்கிற பெயர் முடிவாகியிருக்கும் செய்தியைச் சொன்னேன். “இந்தப் பேருல ரெண்டெழுத்து. அந்தப் பேருல ரெண்டெழுத்து. அதுவும் நல்லாதான் இருக்குது” என்றார் அம்மா.

அடுத்த நாள் காலையில் நான் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டிருந்தபோது கடையிலிருந்தபடி சித்தப்பா என்னை அழைத்தார். ”என்ன சித்தப்பா?” என்று அவருக்குப் பக்கத்தில் சென்றேன்.

அவர் ஒரு வெற்றுத்தாளை என்னிடம் கொடுத்து “இந்தப் பேப்பர்ல தப்பில்லாம திருத்தமா கொட்டை எழுத்துல ஜெயதேவி இல்லம்னு எழுதிக் கொடு” என்று கேட்டுக்கொண்டார். நான் பேனாவை எடுத்து அவர் சொன்ன மாதிரி நிறுத்தி அழகாக எழுதிக் கொடுத்தேன். அதை வாங்கிய சித்தப்பா ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு திருப்தியுடன் மடித்து பைக்குள் வைத்துக்கொண்டார்.  “மேஸ்திரிகிட்ட கொடுத்தா, பேர் பதிக்கிற வேலையை முடிச்சிடுவாரு. பெயிண்டிங் வேலையைத் தொடங்கறதுக்குள்ள எல்லா சில்லறை வேலைங்களையும் முடிக்கணும்” என்றார்.

ஒரு வாரம் கழித்து, அம்மாவும் நானும் சுப்பிரமணியர் கோயிலுக்குச் சென்றபோது, சித்தப்பாவின் புதுவீட்டு உச்சியில் கல்லில் செதுக்கியதுபோல  கச்சிதமாக சிமெண்ட் புடைப்புகளால் ஜெயதேவி இல்லம் என்ற பெயர் பதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.

அன்று இரவு சாப்பிட்டுவிட்டு பாய்களை விரித்து உறங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த சமயத்தில் ”அண்ணே அண்ணே” என்று கலவரம் படிந்த முகத்துடன் ஓடிவந்து நின்றார் சித்தப்பா. “என்னடா, என்னாச்சி? ஏன் இப்படி மூஞ்சியெல்லாம் வேர்த்திருக்குது?” என்று கேட்டார் அப்பா. அதற்குள் குரல் உடைந்து ஓவென்று அழுதார் சித்தப்பா. ”வயித்துவலின்னு தேவி சுருண்டு சுருண்டு துடிக்குதுண்ணி. மூச்சு கூட இழுத்து உடமுடியலை. கொஞ்சம் வந்து பாருங்கண்ணி” என்று அம்மாவைப் பார்த்து பதறினார்.

அம்மாவும் அப்பாவும் உடனே எழுந்து சித்தப்பா வீட்டுக்குப் புறப்பட்டார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் கிளம்பினேன். ஆனால் அம்மா என்னைத் தடுத்து “நீ எதுக்குடா இந்த நேரத்துல அங்க வர? இங்கயே இருந்து தம்பி தங்கச்சிங்கள பார்த்துகிட்டிரு” என்று தடுத்துச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

கால் மணி நேரத்திலோ, அரை மணி நேரத்திலோ, அவர்கள் திரும்பி வந்துவிடக்கூடும் என்ற எண்ணத்தோடு தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும்  கதை சொன்னபடி காத்திருந்தேன் நான். ஆனால் ஏதோ ஒரு கணத்தில், என்னையும் அறியாமல் காலை நீட்டி உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.

விழித்தபோது நன்றாக விடிந்திருந்தது. அப்பா மட்டும் படுத்திருந்தார். அம்மாவைக் காணவில்லை.  ஒரு கணம் எதுவும் புரியாமல் குழம்பினேன்.

அப்பா எழுந்த பிறகுதான் நடந்த செய்திகளைச் சொன்னார். கைவைத்தியமாக அம்மா வைத்துக்கொடுத்த கஷாயத்தால் எந்தப் பயனும் தெரியவில்லை. சித்தியின் வயிற்றுவலி கொஞ்சம் கூட குறையவே இல்லை. கைத்தாங்கலாக மெல்ல நடக்கவைத்து அடுத்த தெருவிலிருந்த அரசாங்க மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்று சேர்த்துவிட்டனர். வலி குறைவதற்காக அங்கே ஊசி போட்டார்கள். அதற்குப் பிறகே சித்தி தூங்கத் தொடங்கினார். சித்திக்குத் துணையாக அம்மாவை விட்டுவிட்டு அப்பாவும் சித்தப்பாவும் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர்.

இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகும் சித்தியின் வலி குறையவே இல்லை. ஊசி போட்டால் மட்டுமே வலி குறைந்தது. ஏழெட்டு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் வலி அதிகரித்தது.  அரசாங்க மருத்துவரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. கூடுதலான பரிசோதனைகளுக்கு அந்த ஆஸ்பத்திரியில் வழியில்லை. ஒருவேளை குடல்வால் பிரச்சினையாக இருக்கலாம் என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. நிபுணரைப் பார்த்து ஆலோசனை பெறுவதற்காக பாண்டிச்சேரிக்கோ, சென்னைக்கோ செல்லுமாறு சொல்லி அனுப்பிவிட்டார் அந்த மருத்துவர்.

முடியும் கட்டத்திலிருந்த வீட்டு வேலையை அப்படியே நிறுத்திவைத்தார் சித்தப்பா. தேவி சித்தியின் பெற்றோர்களும் சகோதரர்களும் வந்து வீடு முழுதும் நிறைந்துவிட்டனர். அவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில்  சித்தியை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரிக்குச் சென்றார் சித்தப்பா.

ஒரு வாரத்துக்குப் பிறகுதான், நோய்நிலவரத்தைப்பற்றி உத்தேசமான சித்திரத்தை பாண்டிச்சேரி மருத்துவர்கள் சுருக்கமாகச் சொன்னார்கள்.  அவர்கள் சந்தேகப்பட்டதுபோல அவர் துன்பத்தில் நலிவு கொண்டதற்குக் காரணம் குடல்வால் நோயல்ல. வலி அந்த இடத்தைச் சுற்றி சூழ்ந்திருந்தாலும் அதற்கும் குடல்வாலுக்கும் ஒரு தொடர்புமில்லை என்னும் உண்மையை மட்டுமே அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. வலிக்கான உண்மையான காரணம் அவர்கள் அறிவுக்கு எட்டாததாக இன்னும் மர்மமாகவே இருந்தது.  

அந்த நேரத்தில் சித்தப்பா ஆங்கில மருத்துவத்தின் மீதிருந்த நம்பிக்கையை இழந்தார். நோயைக் கண்டுபிடிக்க முடியாத இயலாமையை மறைத்துக்கொண்டு மருத்துவர்கள் ஏதேதோ இல்லாத விஷயங்களைப் பேசுவதாக நினைத்துக்கொண்டார்.

இந்த மாதிரியான வயிற்றுவலிக்கு திருபுவனையில் ஒரு மருத்துவர் சூரணமும் கஷாயமும் கொடுத்து பத்தே நாட்களில் குணப்படுத்துவதாக சித்தியின் உறவினர்கள் தெரிவித்தார்கள். அந்தச் செய்தியை நம்பி மருத்துவமனையிலிருந்து சித்தியை வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டார் சித்தப்பா. அம்மாவோ அப்பாவோ, அவருடைய நம்பிக்கைக்குக் குறுக்கில் செல்ல இயலாமல் நின்றுவிட்டனர்.

ஒரு வாடகைக்காரில் தினமும் சித்தியை திருபுவனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் நாடிமாற்றத்தைக் கவனித்து அதற்குத் தகுந்த மாதிரி மருந்துப்பொடிகளைச் சேர்க்கும் விகிதாச்சாரத்தைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டியிருப்பதால், ஒவ்வொரு நாளும் நோயாளியை அழைத்துவர வேண்டும் என்று சொல்லிவிட்டார் மருத்துவர்.

வைத்தியர் குறிப்பிட்ட பத்து நாட்கள் கடந்த  பின்னும் சித்தியின் வலியும் வேதனையும் நிற்கவே இல்லை. அதற்குள் சித்தி துரும்பாக இளைத்துவிட்டார். எதைச் சாப்பிட்டாலும் வயிற்றில் தங்காமல் வாந்தியெடுக்கத் தொடங்கினார். சித்தப்பா பல இடங்களில் பணத்தைக் கடனாக வாங்கி தண்ணீர்போல செலவு செய்துகொண்டே இருந்தார்.

சோதனை வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதுதான் ஒரே தீர்வு என்று மற்றொரு உறவினர் குழு சொன்னது. அதைக் கேட்டு சித்தப்பா பெருந்தொகை ஒன்றைக் கடனாக வாங்கிக்கொண்டு சித்தியுடன் சென்னைக்குச் சென்றார். ஏறத்தாழ ஒரு மாத காலம் தொடர் மருத்துவத்திலேயே சித்தி இருந்தார். அவருடைய வயிற்றுவலிக்கான காரணம் குடலோ வயிறோ அல்ல என்பதும் கல்லீரலின் ஒரு பகுதி செயலிழந்து போனதுதான் காரணம் என்பதை அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் கண்டறிந்து சொன்னார்கள். அதற்குக் காரணம் அந்தப் பகுதியில் பரவியிருக்கும் புற்றுநோய் என்பதையும் தெரிவித்தனர். சித்தப்பா மிகவும் உடைந்துவிட்டார். வெறிகொண்டவர் போல மேலும் மேலும் கடன் வாங்கி தன் சக்திக்கு மேல் செலவழித்தார். சித்தியை எப்படியாவது நோயிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

முதல் ஒரு மாதம் அந்த நம்பிக்கை வலிமையாகவே இருந்தது.  அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் பயனளிப்பதுபோல அதன் தொடக்கம் அமைந்திருந்தது. வயிற்று வலி குறைந்து சித்தி எளிய வகையான கஞ்சியை உட்கொள்வதாக ஊருக்கு வந்தபோது சித்தப்பா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஒருநாள் அப்பாவும் அம்மாவும் மருத்துவமனைக்குச் சென்று சித்தியை நலம் விசாரித்துவிட்டு வந்தனர்.

அடுத்த மாதத்திலேயே அவருடைய ஆரோக்கியம் மீண்டும் நிலைகுலைந்து சரிவடையத் தொடங்கியது. திடீரென சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இரண்டாவது வார முடிவில் மருத்துவத்தால் இனி பலனில்லை என்று கைவிரித்துவிட்டனர். அதற்கு மேல் செலவழிக்க சித்தப்பாவிடமும் பணமில்லை. கடன் வாங்கவும் வழியில்லை.  மனபாரத்துடன் ஒருநாள் மாலை வாடகை வாகனத்தில் சித்தியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். பத்து நாட்கள் நரகவேதனை. ஒவ்வொரு கணமும் வலியால் துடித்துக்கொண்டே இருந்தார் சித்தி. அவருடைய முனகலும் கூக்குரலும் இரவும் பகலும் ஒலித்தபடியே இருந்தன. ஒருநாள் அதிகாலையில் அவர் உயிர் பிரிந்தது..

சடங்கு முடிந்து ஒரு வாரத்துக்குப் பிறகு சித்தப்பா கடையைத் திறந்தார். அவர் முகத்தில் களையே இல்லை. தாடிமீசையோடு அவருடைய உருவமே மாறிவிட்டது. எலும்புக்கூடுக்கு சட்டைபோட்டதுபோல இருந்தார்.

இரவு நேரத்தில் நாங்கள் முற்றத்தில் நிறைந்திருந்த விளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் சித்தப்பா கடையைவிட்டு எழுந்துவந்து எங்களைப் பார்த்தார். ஒவ்வொருவரையும் புதிதாகப் பார்ப்பதுபோலப் பார்த்து ”இப்ப நீ எந்த க்ளாஸ் படிக்கிற? நல்லா படிக்கிறியா? நல்லா மார்க் வாங்கறியா?” என்று விசாரித்தார்.

அன்று இரவு சாப்பிடும்போது, சித்தப்பாவுடைய கோலம், பேச்சு ஆகியவற்றைப்பற்றி அம்மாவிடம் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்த போது, முற்றிலும் எதிர்பாராத வகையில் “அண்ணே” என்று அழைத்துக்கொண்டே வாசலில் வந்து நின்றார் சித்தப்பா. “வா ஜெயராமா, வா” என்று உள்ளே அழைத்தார் அப்பா. ஆனால் அவர் உள்ளே வரவில்லை. வாசலில் இருந்தபடியே ”வீட்டுல பசங்க தனியா படுத்திருக்கும்ண்ணே. நான் வீட்டுக்கு போறேன். சாப்ட்டு முடிச்ச பிறகு ரெண்டு நிமிஷம் வீட்டுப்பக்கம் வந்துட்டுப் போங்கண்ணே” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். சிறிது நேரத்துக்குப் பிறகு அப்பா சாப்பிட்ட கையைக் கழுவிக்கொண்டு சித்தப்பா வீட்டுக்குச் சென்றார்.

சாப்பிட்ட பிறகு பாய்களை விரித்து நாங்கள் படுத்துக்கொண்டோம். அம்மா எங்களுக்கு ஒரு கதையைச் சொன்னார். கதை கேட்டபடியே தம்பிகளும் தங்கைகளும் உறங்கிவிட்டனர். நானும் அம்மாவும் மட்டும் விழித்திருந்தோம். நீண்ட நேரத்துக்குப் பிறகு அப்பா திரும்பி வந்தார். “என்ன விஷயம்?” என்று அம்மா கேட்டார். “என்னத்த சொல்றது, போ” என்று அப்பா சலிப்புடன் பெருமூச்சு விட்டார்.

பிறகு அவரே தொடர்ந்து “கணக்கில்லாம ஏகப்பட்ட கடன் வாங்கி செலவு பண்ணிட்டான். இப்ப எல்லாமே தலைக்கு மேல போயிடுச்சி. கட்டன வீட்ட வித்தாதான் கடன்லேருந்து மீளமுடியும்னு சொல்றான். யாரோ சடராமன் கோயில் தெருவுல இருக்கற ஒருத்தர்கிட்ட பேசி முடிச்சிட்டானாம். காலையில கெரயம் பண்ண போறானாம். ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு ஒரு தொணைக்கு கூட வாங்கன்னு சொன்னான்” என்றார். அதைக் கேட்டு அம்மாவும் பெருமூச்சு விட்டார். “என்னதான் உருண்டு பொரண்டாலும் நமக்கு ஒட்டறதுதான் ஒட்டும் போல” என்று முணுமுணுத்துக்கொண்டே சமையலறையின் பக்கம் சென்றார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு வழக்கம்போல இரவு நேரத்தில் படிப்பதற்காக சித்தப்பாவின் கடையைக் கடந்து, அதையொட்டிய முற்றத்துக்குச் சென்றிருந்தேன். கடைக்குள் சுவரையொட்டி புதிதாக சட்டமிட்ட இரு பெரிய போட்டாக்கள் தொங்குவதை அப்போதுதான் பார்த்தேன். ”இத எப்ப மாட்டினீங்க சித்தப்பா?” என்று கேட்டபடி கடை வாசல் பக்கமாக திரும்பி வந்தேன்.

ஒவ்வொரு போட்டாவிலும் ஒரு பெரிய மாலை தொங்கியது. புத்தம்புதிய ரோஜாமாலை.

முதல் சட்டகத்தில் சித்தியின் படம் இருந்தது. படத்துக்குக் கீழே நடுப்பகுதியில் சித்தியின் பெயரும் அதற்குக் கீழே தோற்றம், மறைவு என்று பெரிய கரிய எழுத்துகளில் எழுதப்பட்ட சொற்களும் தேதிகளும் காணப்பட்டன.

அடுத்த சட்டகத்தில் சொந்தமென கனவுகளுடன் கட்டிமுடித்து சொந்தமில்லாமல் போய்விட்ட வீட்டின் படம் இருந்தது. வண்ணம் பூசப்படாத வீடு.  பக்கத்துக்கு ஒன்றாக பூவரசமரம் நின்றிருந்தது. வீட்டின் உச்சியில் பதிக்கப்பட்ட ஜெயதேவி இல்லம் என்னும் வரி பளிச்சென்று இருந்தது.   அதற்குக் கீழே தோற்றம், மறைவு என்று பெரிய கரிய எழுத்துகளில் எழுதப்பட்ட சொற்களும் கட்டத் தொடங்கிய தேதிக்குறிப்பும் விற்பனை செய்த தேதிக்குறிப்பும் காணப்பட்டன.

“என்ன சித்தப்பா இது?” என்று சற்றே திகைப்புடன் நான் கேட்டேன். அவர்  என் கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லாமல் “நம்ம புனிதா ஸ்டுடியோ ஆளுதான் கேமிராவோடு வந்து படம் எடுத்துக் குடுத்தாரு, எப்படி இருக்குது?” என்று சித்தப்பா வேறொரு கேள்வியைக் கேட்டார்.