Home

Tuesday 19 December 2017

எட்டு மாம்பழங்கள் - புதிய சிறுவர் பாடல் தொகுதி முன்னுரை






ஹூப்ளி என்னும் ஊருக்குப் பக்கத்தில் பத்து நாட்கள் தொடர்ச்சியாக தங்கி வேலை பார்க்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஊர் தொலைபேசி நிலையத்திலேயே ஓர் அறையில் தங்கியிருந்தேன். வேலையிடத்துக்கு என்னை அழைத்துச் செல்லவேண்டிய நண்பர் தன் சொந்த வீட்டிலிருந்து கிளம்பி வந்து என்னை அழைத்துச் செல்வார். அவருடைய சிரமத்தைக் குறைப்பதற்காகவும் பயணத்தொலைவைக் குறைப்பதற்காகவும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு பொது இடத்தை, இருவரும் சந்தித்துப் புறப்படும் இடமாக அமைத்துக்கொண்டோம்.


அந்தப் பொது இடத்துக்கு அருகில் ஓர் அரசு தொடக்கப் பள்ளி இருப்பதை முதல் நாளே பார்த்தேன்.  மறுநாள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாகவே சென்று அந்தப் பள்ளிக்கூடத்துக்கு அருகில் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். கூட்டம்கூட்டமாக பிள்ளைகள் உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களுடைய உற்சாகமான முகங்களைப் பார்க்கப்பார்க்க நானும் உற்சாகம் கொண்டேன். பள்ளி தொடங்க இன்னும் நிறைய நேரம் இருந்தது. புத்தகப்பைகளை வைத்துவிட்டுத் திரும்பிய கையோடு விதவிதமான விளையாட்டுகளை அவர்கள் ஆடினார்கள். ஒரு குழுவில் ஐந்து பேர் அல்லது ஆறு பேர். அவ்வளவுதான். சிறுவர்களும் சிறுமிகளுமாக ஏகப்பட்ட கூட்டம். எந்தக் குழுவை முதலில் பார்ப்பது, எந்தக் குழுவை இரண்டாவதாகப் பார்ப்பது என்று தடுமாறினேன். பள்ளி வாசலில் எண்ணற்ற கடைகள். அங்கும் நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். தின்பண்டம், பழங்கள், முறுக்கு, கடலை என விற்பனை மும்முரமாக நிகழ்ந்தது.

அவர்கள் அனைவரையும் ஒருசேரப் பார்க்க எனக்கு இரண்டு கண்கள் போதவில்லை. அவர்கள் பேசுவதைக் கேட்க இரண்டு காதுகள் போதவில்லை. அவர்களுடைய உரையாடல்களும் பாடல்களும் கூச்சல்களும் சிரிப்புகளும் என்னைத் தீண்டித்தீண்டி கடந்துபோக, ஒருவிதமான ஆனந்தத்தில் மிதந்தபடி வேடிக்கை பார்த்தேன். ஒவ்வொரு பிள்ளையின் முகத்திலும் ஒருவித புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சிக்களையையும் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. அதற்குள் என்னை அழைத்துச் செல்லவேண்டிய நண்பர் வந்துவிட்டார். நானும் புறப்பட்டுவிட்டேன்.

அந்த ஊரில் தங்கியிருந்த பத்து நாட்களிலும் விடுமுறை நாளைத் தவிர மற்ற நாட்களில் காலை நேரங்களை இப்படியாகவே கழித்து, என் மனத்தை உற்சாகத்தால் நிறைத்துக்கொண்டேன். தொடர்ச்சியாக பார்க்க நேர்ந்த அவர்களுடைய ஆட்டங்களும் கூச்சல்களும் அசைவுகளும் காட்சித் தொகுதிகளாக என் மனத்தில் பதிந்துவிட்டன.

தனிமையில் ஓய்வாக இருக்கும் பல சமயங்களில் அந்தக் காட்சிகளை நினைத்துக்கொள்வேன். சந்திக்க வரும் நண்பர்களிடம் அந்தப் பள்ளிக்கூடக் காட்சிகளை விவரிக்க முனையும்போதும் அக்காட்சிகளை நினைத்துக்கொள்வேன். என் மனத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு பாதுகாப்புப்பெட்டகத்தில் அவற்றைச் சேமித்துவைத்திருக்கிறேன். ஒருசில சொற்களை அல்லது காட்சிகளை வெவ்வேறு கோணங்களில் அசைபோட்ட தருணங்களில் நான் பல பாடல்களையும் கதைகளையும் எழுதியிருக்கிறேன். ஒரு புதிய தொகுதிக்காக இந்தப் பாடல்களைத் தொகுக்கும்போது, வழக்கமாக எங்கள் சொந்தக்காரப் பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த பாடல்களைவிட அந்தப் பள்ளி அனுபவம் வழங்கிய பாடல்களே அதிகமாக இருப்பதை உணர்கிறேன். எளிமையான அந்தப் பள்ளி வளாகமும் அந்தக் குழந்தைகளின் இனிய முகங்களும் என் நெஞ்சில் படர்கின்றன. 


பள்ளிப்பருவத்தில் படிக்க நேர்ந்த ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு- அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி’ பாடல் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அழகான அச்சொற்களும் தாளமும் மறக்கமுடியாதவை. குழந்தைப்பாடல்கள் உருவான பாதையை வடிவமைத்ததில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பங்களிப்பு மகத்தானது. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது நடைபெற்ற ஒரு பேச்சுப் போட்டியில் எனக்குப் பரிசாகக் கிடைத்த ‘மலரும் மாலையும்’ தொகுதியில் அவருடைய எல்லாப் பாடல்களையும் விரும்பிப் படித்தேன். முன்னோடிக் கவிஞரான அவருக்கு இந்தப் பாடல் தொகுதியைச் சமர்ப்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்தொகுதியில் உள்ள ஒருசில பாடல்கள் பொம்மி, சிறுவர்மணி, சுட்டிவிகடன், புதுவைபாரதி ஆகிய இதழ்களில் வெளிவந்தன. இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் நன்றிகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன். என் துணைவியும் தோழியுமான அமுதாவின் அன்பும் நேசமும் என் அனைத்து முயற்சிகளிலும் எல்லாத் தருணங்களிலும் உற்ற துணையாக விளங்குபவை. அவர் என் மனத்தில் எப்போதும் நிறைந்திருப்பவர். இத்தொகுதியைச் சிறப்பான முறையில் வெளியிடும் பாரதி புத்தகாலயத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி.