Home

Tuesday 19 December 2017

எட்டு மாம்பழங்கள் - சில பாடல்கள்



ஆசைகள்

அப்பா அப்பா ஏரிக்கரைக்கு
போகலாமா?
ஆல விழுதில் ஊஞ்சல் ஆடி
குதிக்கலாமா?

விழுந்து கிடக்கும் நாவல் பழத்தை
எடுக்கலாமா?
மண்ணை ஊதி அகற்றிவிட்டு
தின்னலாமா?

குளத்தில் இறங்கி நீச்சலடித்துப்
பழகலாமா?
மொக்கு விரிந்த அல்லிப் பூவைப்
பறிக்கலாமா?

வேப்பந்தோப்பில் வெயிலா நிழலா
ஆடலாமா?
மிரண்டு மறையும் முயலைத் தேடி
ஓடலாமா?

மொட்டைக் குன்றின் உச்சி வரைக்கும்
நடக்கலாமா?
வானைப் பார்த்து கையை விரித்துச்
சிரிக்கலாமா?
**

தலையணை

மெத்து மெத்து தலையணை
மிருதுவான தலையணை

தொட்டால் அழுந்தும் தலையணை
சொகுசு மிக்க தலையணை

உயரமான தலையணை
உருண்டு திரண்ட தலையணை

புத்தம் புதிய தலையணை
பூப்போன்ற தலையணை

வண்ண வண்ண உறையிலே
வைக்கப் பட்ட தலையணை

பஞ்சு மெத்தை நடுவிலே
பரப்பி வைத்த தலையணை

தலைக்கு பச்சைத் தலையணை
காலுக்கு நீலத் தலையணை

இடமும் வலமும் புரளவே
இருக்கும் மஞ்சள் தலையணை
 ** 

வண்டி


வத்திப் பெட்டி வண்டி
வளைந்து போகும் வண்டி

என்ன இருக்குது தெரியுமா?
மண்ணில் பிசைந்த உப்புமா

இழுத்த திசையில் வளையும்
இங்கும் அங்கும் அலையும்

பள்ளம் வந்தால் உருளும்
பாறையில் மோதிப் புரளும்

காலை மாலை என்னும்
வேறுபாடு இல்லை

ஓய்வும் தேவையில்லை
ஓடிக் கொண்டே இருக்கும்

வள்ளி இழுக்கும் வண்டி
வாசல் வரைக்கும் செல்லும்

வேந்தன் இழுக்கும் வண்டி
வீதி வரைக்கும் ஓடும்

எனது வண்டி மட்டும்
எல்லை தாண்டிப் போகும்

கடகடவென்றே நகரும்
களைப்பில்லாமல் உருளும்
 **

எப்படி இருக்குது?

கல்லை அடுக்கி குச்சி அடுக்கி
வீட்டைக் கட்டினோம்
எட்டிப் பார்த்துச் சொல்லுங்கம்மா
எப்படி இருக்குது?

தடித்த குச்சியை சீவிச்சீவி
தூண்கள் நிறுத்தினோம்
தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கம்மா
எப்படி இருக்குது?

சொப்பு வைத்து சோறு குழம்பு
ஆக்கி இறக்கினோம்
சுவைத்துப் பார்த்துச் சொல்லுங்கம்மா
எப்படி இருக்குது?

குழிகள் தோண்டி சாம்பல் தூவி
செடிகள் ஊன்றினோம்
நின்று பார்த்துச் சொல்லுங்கம்மா
எப்படி இருக்குது?

வண்ணத்தாளை நறுக்கி ஒட்டி
கொடிகள் கட்டினோம்
கண்ணால் பார்த்துச் சொல்லுங்கம்மா
எப்படி இருக்குது?
 **