Home

Thursday 27 September 2018

பதற்றமும் திகைப்பும் - முறிந்த பாலம்



இரவும் பகலும் எப்படி மாறிமாறி உருவாகின்றன என்பதை நாளைக்கு உங்களுக்குச் செய்முறையின் வழியாக விளக்கப் போகிறேன்என்று ஒருநாள் வகுப்பைமுடிக்கும் முன்பாகச் சொல்லிவிட்டுச் சென்றார் எங்கள் ராமசாமி சார். அப்போதே மின்சாரம் பாய்ந்ததுபோல ஒருவிதமான பரபரப்பு எங்களிடம் தொற்றிவிட்டது. “சார் சார், இன்னைக்கே காட்டுங்க சார்என்று கெஞ்சத் தொடங்கிவிட்டான் எனக்குப் பக்கத்தில் இருந்த கோவிந்தசாமி.  அதுக்கு பொருளெல்லாம் வேணும்டா. எச்.எம்.கிட்ட சொல்லி நாளைக்குத்தான் எடுக்கமுடியும். நாளைக்கி கண்டிப்பா பார்க்கலாம்என்று சிரித்தார் அவர். அவர் சொன்னதையே காதில் வாங்காமல் மாணவர்கள்சார் சார்என்று மறுபடியும் கெஞ்சத் தொடங்கிவிட்டார்கள். “பறக்காதிங்கடா பசங்களா, நாளைக்கு பார்க்கலாம்என்று முடிவாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் அவர். அன்று இரவு எனக்கு உறக்கமே வரவில்லை. அதே நினைவில் மூழ்கியிருந்தேன். ராமசாமியின் சொற்கள் காதில் ஒலித்தபடியே இருந்தன.

வண்ணவண்ண முகங்கள் - விட்டல்ராவின் ‘காலவெளி’



நிறங்களுக்கும் மனித குணங்களுக்கும் இருக்கும் உறவை உணர்த்துவதுதான் ஓவியத்தின் பாலபாடம். முகங்களே இன்றி, வண்ணத்தீற்றல்களைமட்டுமே கொண்ட ஓவியங்கள்கூட மறைமுகமாக மனித குணங்களை, மானுட உணர்வுகளை, வாழ்வின் கோலங்களை உணர்த்துபவையாகவே உள்ளன. ஓவியங்களுக்குள் பல்வேறு முகங்கள் புதைந்திருப்பதுபோலவே ஓவியர்களுக்குள்ளும் பல்வேறு முகங்கள் புதைந்திருக்கின்றன. நட்பை விரும்பும் முகம். நட்பை நிராகரிக்கும் முகம். தன்னை முன்னிறுத்தி முன்னேற விழையும் வேட்கைமுகம். தன் முயற்சியின் முழுமைக்காக அல்லும்பகலும் பாடுபடும் முகம். விட்டல்ராவின் காலவெளி நாவல் ஓவியர்கள் தீட்டும் வண்ணமுகங்களையும் ஓவியர்களுக்குள் புதைந்திருக்கும் வண்ணமுகங்களையும் ஒரே நேரத்தில் ஒளியையும் நிழலையும் இணைத்த சித்திரம்போலக் காட்சியளிக்கும் மரத்தடி நிழலென ஓவியமாகத் தீட்டிவைத்திருக்கிறது. 1988 ஆம் ஆண்டில் எழுதி 1990 ஆம் ஆண்டில் முதல்பதிப்பாக வெளிவந்த இந்த நாவல் இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலம் கடந்த நிலையிலும் இன்றைய சூழலுக்கும் ஏற்றதாகவே உள்ளது நாவல்.

Tuesday 18 September 2018

வாழ்வின் கோலங்கள் - மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’


ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் மீரான் மைதீன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி பல நண்பர்களிடம் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அக்கதையின் பெயர் மஜ்னூன்’. அரபுமொழியில் அது ஒரு ஏளனச்சொல். பைத்தியம் என்பதுபோல. அரபு சிறையில் அகப்பட்ட ஒருவன், விடிந்தால் தண்டனை என்கிற நிலையில் தன் பிரியமான மனைவிக்குக் எழுதும் கடிதம்தான் அச்சிறுகதை

கதவு திறந்தே இருக்கிறது - நினைவுத்தொகுப்பு



1914 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் இயங்கி வந்த இலக்கிய அமைப்பொன்று ஒரு கவிதைப்போட்டியை அறிவித்தது. படிப்பறிவில்லாத பாமரமக்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தேசபக்தியை ஊட்டக்கூடிய நூறு பாடல்களை கும்மி சந்தத்தில் எழுதி அனுப்பவேண்டும் என்பதுதான் விதி. பரிசுக்குப் பெயர் கோகலே பரிசு. அப்போது இருபத்தியாறு வயது இளைஞரான கவிஞரொருவர் நாட்டுக்கும்மி என்னும் பெயரில் நூறு பாட்டுகளை அப்போட்டிக்காக எழுதி அனுப்பினார். சில நாட்கள் கழித்து போட்டி அமைப்பாளர்களிடமிருந்து கவிஞருக்கு ஒரு கடிதம் வந்தது. போட்டிக்காக அனுப்பப்பட்டிருந்த பாடல்களில் நான்கு பாடல்களை நீக்கிவிட அனுமதி கேட்டு எழுதப்பட்டிருந்தது. ஒருவேளை அனுமதிக்காவிட்டால், போட்டிக்குரிய கவிதைப்பட்டியலிலிருந்து அக்கவிதை நீக்கப்பட்டுவிடும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Sunday 2 September 2018

கலைமாமணி - சிறுகதை




ஒரு வகுத்தல் கணக்குக்காக பதின்மூன்றாவது வாய்ப்பாட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டிருந்ததால் தெருமூலையில் ஒலித்த தமுக்குச்சத்தம் என் காதில் விழவில்லை.   ஆனால் என் தம்பி காதுகொடுத்துக் கேட்டுவிட்டான். மறுகணமே கன்றுக்குட்டிபோல துள்ளியெழுந்து வெளியே பாய்ந்து ஓடினான். “எழு பதிமூணு தொண்ணத்தொன்னு, எட்டு பதிமூணு…..” என்று மனத்துக்குள் முணுமுணுத்தபடியே அவன் பக்கமாகத் திரும்புவதற்குள் அவன் ஒரு குட்டிமுயலின் வேகத்துடன் வேலிப்படலைத் தாண்டியிருந்தான். எதுவுமே புரியாமல் நோட்டை அப்படியே கவிழ்த்துவைத்துவிட்டு நானும் இருடா ராமு, நானும் வரேன்டாஎன்றபடி அவனுக்குப் பின்னால் ஓடத் தொடங்கினேன்.

கதவு திறந்தே இருக்கிறது – அழிவற்ற செல்வம்


இலக்கியம் வழியாக வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடந்துபோகும் மேடுபள்ளங்களையும் உணர்வுகளின் உச்சத்தருணங்களையும் குணம் மாறும் விசித்திரங்களையும் மானுடத்தை அலைக்கழிக்கும் வஞ்ச உணர்வையும் அறிந்துகொள்வது என்பது முக்கியமான வாசிப்பனுபவம். உலக மொழிகள் அனைத்திலும் முதன்மைக்கட்ட படைப்பாளிகள் வாழ்க்கையின் சித்திரங்களை மிகவும் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்களைத் தொகுத்து ஒரு பட்டியலை எழுத முனைந்தால், அதில் பால்சாக், மாப்பசான் இருவருடைய பெயர்களும் முதலிடத்தில் வைக்கத்தக்கவை.