Home

Monday 24 August 2015

தாவாரமும் தேவாரமும்

எங்கள் பள்ளியில் ராதாகிருஷ்ணன் ஐயாவுக்கு சிதம்பரம் ஜெயராமன் பாடல்கள் என்றால் உயிர்.  அவர் பாடும் பாடல்களைக் கேட்பதற்காகவே வாரத்துக்கு ஒருமுறை வரும் பொழுதுபோக்கு வகுப்புக்காகக் காத்திருப்போம்.  நாங்களும் பாடிப் பழக வேண்டும் என்பதற்காகவே அந்தப் பாட வேளை உருவாக்கப்பட்டது.  ஆனால் தொடக்கத்தில் எல்லாருமே வெட்கத்தில் தலை குனிந்திருப்போம்.  அதனால் எங்கள் தயக்கத்தையும் கூச்சத்தையும் போக்குவதற்காக வழக்கமாக அவரே முதல் இரண்டு பாடல்களைப் பாடுவார்.  ஒரு பெரிய கோட்டையின் கதவைக் காலாலேயே உதைத்துத் திறந்துவிடுவது போல அந்தப் பாடல்கள் எங்கள் தயக்கத்தை அகற்றிவிடும்.  உற்சாகம் பொங்க ஒவ்வொருவரும் ஐயா நான், ஐயா, நான் என்று வாய்ப்புக்குக் கை களை உயர்த்திக் காட்டுவார்கள்.  ஐயா ஒவ்வொரு வராகப் பாட அழைப்பார்.  மறுகணமே எங்கள் பாடல்கள் காற்றில் முழங்கத் தொடங்கும்.

காந்தி நினைவுகள்

 மாபெரும் சமூக ஆளுமைகளைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றை, அந்த ஆளுமை வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் படம்பிடித்து எழுதியிருக்கிறார்கள். எழுதாதவர்கள் சொற்களால் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதுவும் மதிப்புக்குரிய மகாத்மா காந்தியைப்பற்றி எழுதவும் சொல்லவும் அவருடைய காலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரிடமும் ஏராளமான செய்திகள் இருக்கக்கூடும். காந்தியைப்பற்றி அரசியலாளர்களும் சேவையாளர்களும் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உண்டு. அவற்றில் எண்ணற்ற சம்பவங்கள் காணக் கிடைக்கின்றன. ஆயினும், ஒரு சிறுவனின் பார்வையில் காந்தியைப்பற்றி எழுதப்பட்ட பதிவுகள் என்கிற வகையில் நாராயண் தேசாயின் புத்தகம் மிகமுக்கியமானது. பாரதியாரின் வரலாற்றைத் தொகுத்துக்கொள்வதில் தன் பால்யகாலத்து நினைவுகளை மீட்டிமீட்டி எழுதியிருக்கும் யதுகிரி அம்மாளின் பதிவுகள் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு நாராயண் தேசாயின் பதிவுகளும் மிகமுக்கியமானவை.

Tuesday 18 August 2015

பறவைகளின் பயணம்

எங்கள் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் ஒரு பெரிய தோட்டத்துடன் கூடிய வீடு இருந்தது. பெங்களூர் ஐயர் என்பவருக்குச் சொந்தமான தோட்டம். அதன் மதிலை ஒட்டி ஏராளமான மரங்கள் இருந்தன. கொய்யா மரங்கள், கொடுக்காப்புளி மரங்கள், மாமரங்கள். அவை பழுத்துத் தொங்கும் காலங்களில் தரையில் விழுந்து கிடக்கும் பழங்களை எடுத்து உண்ணுவதற்காகக் காலையில் ஒருமுறையும் மாலையில் ஒருமுறையும் மதிலைச் சுற்றி வருவோம். சில துடுக்குப் பிள்ளைகள். மதிலோரமாகக் கற்களை அடுக்கி, அதன்மீது கவனமாக ஏறி, மதிலில் கால்பதித்து. பிறகு மரங்களுக்குத் தாவிவிடுவார்கள். ஐயரின் பார்வையில் பட்டுவிட்டால் சரியாக வாங்கிக் கட்டிக்கொள்வார்கள். அவருடைய மகன் எங்கள் வகுப்புத்தோழன். அது அவருக்கும் தெரியும். அதனால் வசைகள் கடுமையாக
இருக்காது. ஆனால் புத்தி சொல்கிற போக்கில் இருக்கும். “மரத்தில் தொங்கும் காய்களை யாரும் அடித்துப் பறித்துத் தின்னக் கூடாது. அதற்கு யாருக்குமே உரிமை இல்லை. மரங்களில் உள்ள பழங்கள் மரங்களை உறைவிடமாகக் கொண்ட உயிரினங்களுக்கு - குறிப்பாக, பறவைகளுக்குச் சொந்தமானவை. அவற்றால் கொத்தப்பட்டோ அல்லது தானாகவோ கீழே உதிர்கிற பழங்களைத் தாராளமாக யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதில் எந்தத் தடையும் இல்லை.”

அழிவென்னும் உண்மை

பொங்கல் விழாவையொட்டி ஊருக்குச் சென்றிருந்த தருணத்தில் எல்லாரும் சேர்ந்து பரணைச் சுத்தப்படுத்தினோம். பரணிலிருந்து இறக்கப்பட்ட பல பெட்டிகளிடையே ஒரு புத்தக அடுக்கும் இருந்தது. அதைத்தனியாக இழுத்து என்முன்னால் வைத்துவிட்டு எதெது வேணும், எதெது வேணாமின்னு பாத்து இப்பவே பிரிச்சி வச்சிடுப்பா. வேணாங்கிறத தூக்கி கடயில போட்டுடலாம். எல்லா எடத்துலயும் ஒட்டட படிஞ்சி தூசும் தும்புமா ஒரே அழுக்கா இருக்குதுஎன்றார் அம்மா. எல்லாமே என்பள்ளிக்கூட, கல்லூரி நாட்களின் நோட்டு புத்தகங்களின் குவியல். ஒவ்வொன்றாகப் புரட்டப் புரட்ட எதையுமே தனிமைப்படுத்தி விலக்கிவைக்க மனம் வரவில்லை. மடிந்துபோன பக்கங்களின் விளிம்புகளைச் சரிப்படுத்தி. தூசுதட்டி மறுபடியும் அடுக்கி சின்னச்சின்ன கட்டுகளாகக் கட்டினேன். என்னப்பா இது, பிரிச்சி எடுன்னு சொன்னா, கட்டு கட்டறியே..என்று ஆச்சரியத்தோடு கேட்டபடி என்னைப் பார்த்துச் சிரித்தார் அம்மா. எல்லாமே வேணும்ன்னுதான் தோணுதும்மா, இருந்துட்டு போவட்டும்என்று சிரித்தேன். எல்லாத்தையும் வச்சிக்கறதுக்கு, வேல மெனக்கிட்டு எதுக்காக கலைக்கணும். அப்புறம் எதுக்காக மறுபடியும் அடுக்கணும்? பரண்ல எலி உருட்டற சத்தம் கேக்கும்போதெல்லாம் எதஎத கொதறி வைக்குமோ எதஎத கடிச்சிவைக்குமோன்னு மனசு திக்குதிக்குன்னு அடிச்சிக்குது..

Monday 3 August 2015

வாழ்வின் வண்ணமுகங்கள் - பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள் –

பாரதி கிருஷ்ணகுமார் தமிழுலகத்துக்கு அறிமுகமான நல்ல பேச்சாளர். பாரதியின் பாடல்களில் மனம் தோய்ந்தவர். முதல் முயற்சியாக அப்பத்தா என்னும் தலைப்பில் ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருக்கிறார். 2008 முதல் 2011 வரை எழுதிய அவர் எழுதிய பத்து சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. 2012-ல் முதல் பதிப்பும் 2013-ல் மேலும் இரு பதிப்புகளும் வெளிவந்துள்ளன.
கிருஷ்ணகுமாரின் கதைமாந்தர்கள் அனைவரும் மிக எளிய மனிதர்கள். சாதாரண வாழ்க்கைச் சம்பவங்கள் வழியாகவே அவர்களை கிருஷ்ணகுமார் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். மிகவும் குறைவான வரிகளிலேயே சம்பவங்களை முன்னும்பின்னுமாகக் கோர்த்து கதையை முன்வைத்தபடி செல்கிறார். சீரான வேகத்தில் செல்லும் சிறுகதையை அவர் முடித்துவைக்கும் தருணம் மிகவும் இயற்கையாகவும் நம்பகத்தன்மை மிகுந்த ஒன்றாகவும் இருக்கிறது. அத்தருணத்தில் கதையின் அடர்த்தியும் அழகும்  இன்னும் கூடுதலாகின்றன. அக்கணத்தில் எதிர்பாராமல் கதையின்மீது விழும் வெளிச்சம் கதையின் மற்றொரு பரிமாணத்தைக் காட்சிப்படுத்துவதை உணரமுடிகிறது.   இந்தச் சாத்தியத்தின் காரணத்தாலேயே கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள் கவனிக்கப்படுபவையாக உள்ளன.

ஆறாண்டு காலத் தவிப்பு

பாரதியார் 11.12.1882 அன்று நெல்லையைச் சேர்ந்த எட்டயபுரத்தில் பிறந்தார். 12.09.1921 அன்று சென்னையில் மறைந்தார். இன்னும் சில ஆண்டுகளில் அவருடைய மறைவு நிகழ்ந்து நூறாண்டுகள் நிறைவடைந்துவிடும். அவருடைய பாடல்களையொட்டியும் வாழ்க்கையை ஒட்டியும் இன்னும் பல ஆய்வுகள் நிகழ்ந்தபடி உள்ளன. அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற பல முக்கியமான சம்பவங்களை யதுகிரி அம்மாள், .ரா., செல்லம்மாள், கனகலிங்கம், சகுந்தலா பாரதி, .வி.சுப்பிரமணி ஐயர், .சுப்பையா பிள்ளை, சீனி.விசுவநாதன், ரா..பத்மனாபன், தொ.மு.சி.ரகுநாதன் போன்றோர் எழுதிய புத்தகங்கள் மூலம் அறிவதன் வழியாகவே அவருடைய வரலாற்றை நாம் தொகுத்துக்கொள்ளும் நிலையில்  இன்று இருக்கிறோம். பாரதியாரைப்பற்றிய முழுமையான ஒரு வரலாற்று நூல்  இன்னும் எழுதவேண்டிய நிலையில்தான் உள்ளது. பாரதியாரின் ஒட்டுமொத்தமான பாடல்களுக்கான ஓர் ஆய்வுப்பதிப்பே .ரா.போ.குருசாமியை பதிப்பாசிரியராகக் கொண்டு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக 1987 ஆம் ஆண்டில்தான் வெளிவந்துள்ளது. வரலாற்று நூலுக்கு இன்னும் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?.