Home

Sunday, 24 May 2026

புரைதீர்ந்த உண்மை

  

பெங்களூர் தமிழ்ச்சங்கம் அல்சூர் ஏரியை ஒட்டி ஒரு பெரிய கட்டிடத்தில் இயங்கிவருகிறது. வாரம்தோறும் அங்கு இலக்கிய வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சியுள்ள ஆசிரியர்கள் அங்கு வந்து வகுப்பெடுத்துவிட்டுச் செல்வார்கள். அந்த வகுப்புக்கு ஆர்வத்துடன் தொடர்ந்து செல்பவர்கள் பலர். என் நண்பரும் அவர்களில் ஒருவர். கடந்த ஞாயிறு அன்று காலையில் வகுப்பை முடித்துக்கொண்டு என்னைச் சந்திப்பதற்கு வந்திருந்தார்.

வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்ததுமே “இன்னைய வகுப்புல பேராசிரியர் சொன்ன ஒரு கருத்து எனக்குச் சரியா புரியலை” என்று தொடங்கினார்.

“புரிஞ்சிக்கமுடியாத அளவுக்கு அப்படி என்ன சொன்னாரு அவர்?” என்று கேட்டேன்.

“அவர் தன்னுடைய கருத்தா அதை சொல்லலை.  திருக்குறள்ல சொல்லப்பட்ட கருத்துன்னு சொன்னாரு. அந்தக் குறளும் எனக்குச் சரியா புரியலை”

“என்ன குறள்?”

“பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்”

ஒருகணம் நான் அவர் முகத்தைக் கவனித்தேன். அவர் கண்களில் உண்மையிலேயே குழப்பத்தின் அடையாளம் தெரிந்தது. “இந்தக் கருத்துல என்ன குழப்பம்? தெளிவாத்தானே இருக்குது?” என்றேன்.

“ஒரு நல்ல விஷயத்துக்காக ஒரு பொய்யைச் சொல்லலாம்ங்கறதுல என்ன நல்ல கருத்து இருக்குது?  பொய் ஒரு குற்றம்தான? அதனால ஆயிரம் நன்மை விளைஞ்சாலும் அதை எப்படி ஏத்துக்கமுடியும்? அதுல புரைதீர்ந்த நன்மைன்னு ஒரு நிபந்தனை வேறு. நன்மை, புரைதீர்ந்த நன்மைங்கறதை என்னை மாதிரி ஒரு சாதாரணமான ஆள் எப்படி புரிஞ்சிக்குவான்?  ஒரு நல்லது நடக்கறதுக்காக ஒரு பொய்யைத் தாராளமா சொல்லலாம்னு தனக்குச் சார்பா நெனைக்கத்தான அவனுக்குத் தோணும்?”

“அவனுக்குத் தோணறது இருக்கட்டும். உங்களுக்கு எப்படித் தோணுது?”

ஒருகணம் அமைதியாக அவர் என் கண்களைப் பார்த்துவிட்டு “கிட்டத்தட்ட எனக்கும் அப்படித்தான் தோணுது. புரைதீர்ந்த நன்மைங்கறதை நாம எப்படித் தீர்மானிக்கமுடியும்? புரைன்னு சொன்னா குற்றம்னுதான அர்த்தம்? குற்றமில்லாத நன்மைன்னு ஒன்னு இருக்கமுடியுமா?” என்றார்.

“அந்தச் சொல்லுக்கான அர்த்தத்தை அப்படியே நேரடியா எடுத்துக்க வேண்டியதில்லை. யாருக்கும் பாதிப்பையோ ஆபத்தையோ கொடுக்காத, எந்தத் தீய விளைவையும் உண்டாக்காதங்கற அர்த்தத்தோடு யோசிச்சிப் பாருங்க. அவர் குறிப்பிடற நன்மை அந்தப் பொய்யைச் சொல்றவே அடையக்கூடிய நன்மை இல்லை. அந்தப் பொய்யால மற்றவங்க அடையக்கூடிய நன்மை. அந்தக் கோணத்துல யோசிச்சா உங்களுக்கு அது சரின்னு படும்” என்றேன்.

நண்பர் சில கணங்கள் ஜன்னலுக்கு அப்பால் நின்றிருந்த புங்கமரத்தின்பக்கம் பார்வையைத் திருப்பி யோசனையில் மூழ்கியிருந்தார். அவரால் அந்தச் சிந்தனையின் வேரைத் தேடிச் செல்லமுடியவில்லை என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவர் முகத்தில் படிந்திருந்த குழப்பத்தின் அடையாளம் மாறாமல் அப்படியே இருந்தது.

“இப்படி நேரா சொல்றதைவிட ஒரு உதாரணத்தோடு சொன்னா உங்களால சுலபமா புரிஞ்சிக்கமுடியும்னு நெனைக்கறேன். நாம ஆறாவது ஏழாவது படிக்கற சமயத்துல நம்ம பாடப்புத்தகத்துல வந்த ஒரு கதை ஞாபகத்துக்கு வருது. அதைச் சொன்னா உங்களால சுலபமா புரிஞ்சிக்கமுடியும்.”

“என்ன கதை?”

“ஒரு நாள் ராத்திரி நேரத்துல ஒரு திருடன் ஒரு பாதிரியார் வீட்டுக்கு வந்து அன்னைக்கு ராத்திரி தங்கறதுக்கு இடம் கேக்கறான். பாதிரியாரும் இரக்கப்பட்டு அவனுக்கு சாப்பாடுலாம் போட்டு அவனை ஒரு அறையில தங்கிக்கச் சொல்றாரு. அவனும் அந்த அறையில நிம்மதியா தூங்கறான். காலையில பாதிரியாரு அவனை எழுப்பறதுக்கு அந்த அறைக்குப் போறாரு. அவனைக் காணோம். அந்த அறை மாடத்துல ஏசுநாதர் படத்துக்குப் பக்கத்துல வச்சிருந்த ரெண்டு வெள்ளி குத்துவிளக்குங்களையும் எடுத்துட்டு ஓடிட்டான். அந்தக் கதை ஞாபகம் இருக்குதா?”

“கொஞ்சம் மங்கலாதான் ஞாபகம் இருக்குது. நீங்களே முழுசா சொல்லுங்க. கேட்டுக்கறேன்.”

“ரெண்டுமூனு மணி நேரம் கழிச்சி ரெண்டு போலீஸ்காரங்க அவனைப் புடிச்சிகிட்டு வந்து அதே பாதிரியாரைப் பார்க்க வராங்க. என்ன விஷயம்னு கேக்கறாரு பாதிரியார். ஊரு எல்லையில இந்தத் திருடனைப் புடிச்சோம். அவன் கையில இந்தக் குத்துவிளக்கு இருந்தது. எங்கேர்ந்துடா கெடைச்சிது உனக்கு இதுன்னு கேட்டோம். நீங்களே அவனுக்குக் கொடுத்தீங்கன்னு சொன்னான். எங்களுக்கு நம்பிக்கை வரலை. ஒருவேளை உங்க வீட்டுல திருடியிருப்பானோன்னு ஒரு சந்தேகம் வந்தது. உங்களைச் சந்திச்சி அதை நேரிடையாவே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்னு வந்தோம்னு சொல்றாங்க.”

“இப்ப ஞாபகம் வந்துட்டுது. அந்தப் பாதிரியார் போலீஸ்காரங்ககிட்ட தன்னுடைய வழக்கமான புன்னகையொடு ஆமாமாம். அவரு சொன்னதெல்லாம் உண்மைதான். இந்த விளக்குங்களை வச்சி உன் வாழ்க்கையைத் தொடங்கிக்கோன்னு நான்தான் அவருக்குக்  கொடுத்தேன்னு சொல்றாரு. போலீஸ்காரங்க அந்தத் திருடனை அங்கயே விட்டுட்டுப் போயிடறாங்க. அந்தத் திருடனும் மனசு மாறி திருந்தி வாழ ஆரம்பிக்கறாரு. அதான அந்தக் கதை?”

“அதேதான். இந்தக் கதையில பாதிரியார் பொய்தான் சொல்றாரு. பொய் பாவம்னு அவருக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் அவர் அந்த நேரத்துல தயக்கமே இல்லாம அந்தப் பொய்யைச் சொல்றாரு. அது ஒரு ஆபத்தில்லாத பொய். யாருக்கும் எவ்விதமான கெட்ட பாதிப்பையும் ஏற்படுத்தாத பொய். அதே சமயத்துல ஒருத்தன காப்பாத்தற பொய். அந்தப் பொய் அந்தத் திருடன அந்த இக்கட்டுலேர்ந்து காப்பாத்துது. அவன் திருந்தி நல்லவனா வாழறதுக்கும் உதவியா இருக்குது. அதுதான் புரைதீர்ந்த நன்மைங்கற சொல்லுக்கு அர்த்தம். சில சமயத்துல இப்படி நீட்டி நீட்டித்தான் ஒரு வார்த்தையை நாம புரிஞ்சிக்கணும்”

நண்பரின் முகத்தில் முதல் முறையாக ஒரு வெளிச்சம் படர்வதைப் பார்த்தேன். நான் சொன்ன சொற்களை அவர் ஒருமுறை தனக்குள்ளாகவே முணுமுணுத்துக்கொள்வதையும் பார்த்தேன். “இப்படி ஒரு கோணம் இருக்கலாம்கறதை நான் யோசிக்கவே இல்லை? சட்டுனு உருவான சங்கடத்தால மூளை வேலை செய்யலை” என்று சிரித்தார்.

“இன்னும் ரெண்டுமூனு கதைகள் இருக்குது. புராணக்கதைகள் இல்லை. தமிழ்லயே எழுதப்பட்ட எதார்த்தக்கதைகள். அதைச் சொன்னா இந்த விஷயத்தை நீங்க இன்னும் தெளிவா புரிஞ்சிக்கலாம்.”

“என்னென்ன கதைகள்? சொல்லுங்க”

“அந்தக் காலத்துல கி.ராஜநாராயணன் ஜூனியர் விகடன்ல கரிசல் காட்டு கடுதாசின்னு ஒரு தொடர் எழுதனாரு தெரியுமா? அதுல ஒரு அத்தியாயத்துல ஒரு உண்மைச்சம்பவத்தை கதைமாதிரி எழுதியிருக்காரு.”

“என்ன சம்பவம்?”

“கோவில்பட்டியை சுத்தி நடக்கறமாதிரி அந்தச் சம்பவம் இருக்கும். அதைச் சுத்தி இருக்கற ஒரு கிராமத்துல பி.எல்.தனுஷ்கோடின்னு ஒரு கம்யூனிஸ்ட்காரர்  இருக்காரு. மக்கள் மேல ரொம்ப அபிமானம் உள்ளவரு. ரொம்ப காலம் கழிச்சி ஒருநாள் அவரு தன்னுடைய கிராமத்துக்குப் போறாரு. ஊரு எல்லையில இருக்கற ஆலமரத்துல ஒரு பேய் நடமாட்டம் இருக்கறதாவும் வேளை கெட்ட வேளையில அந்தப் பக்கமா போறவங்களை பயமுறுத்தறதாவும் பேசிக்கறாங்க. அந்தப் பேய்த்தொல்லையால ராத்திரி நேரத்துல எல்லையைத் தாண்டி யாரும் போறதில்லன்னு சொல்றாங்க. ஊருகாரங்க எல்லாருமே  அந்தப் பேயப் பார்த்த அனுபவத்தை கதைகதையா சொல்றாங்க. தைரியமா இருக்கறவங்க கூட அந்தக் கதைகளைக் கேட்டா பயந்து நடுங்கி உழுந்துடுவாங்க. ஒவ்வொரு அனுபவமும் அந்த அளவுக்கு பயங்கரமா இருக்குது”

“சரி”

“பேய்ங்கறது நாமளா மனச்சுக்குள்ள நெனச்சிக்கிற எண்ணம்தானே தவிர, உண்மையிலயே பேய்னு ஒன்னு கிடையவே கிடையாதுன்னு அடிச்சி சொல்றாரு நம்ம கம்யூனிஸ்ட்காரு. அந்த அளவுக்கு தைரியம் உள்ள ஆளா இருந்தா, இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி நீங்க அந்த மரத்தடிக்குப் போய் தங்கிட்டு வாங்கன்னு ஊருகாரங்க சவால் விடறாங்க. பேய்னு ஒன்னு இல்லைங்கறதை ஊருகாரங்களுக்கு நிரூபிக்க அதுவும் ஒரு நல்ல வழின்னு நெனச்ச கம்யூனிஸ்ட்காரர் அந்த சவாலுக்கு ஒத்துக்கிடறாரு”

“இது நல்ல திருப்பமா இருக்குதே? அப்புறம் என்ன நடந்தது?”

“அன்னைக்கு ராத்திரியே அவரை ஊரு எல்லையில உள்ள ஆலமரத்தடிக்கு அனுப்பிவைக்க ஊருகாரங்க எல்லாரும் சேர்ந்து ஏற்பாடு செய்றாங்க. நடு ராத்திரி ஆனதும் அந்தத் தெருவுல இருக்கற எல்லா ஜனங்களும் அவரை அழைச்சிகிட்டு ஊர்வலமா கெளம்பறாங்க. வீடுங்க இருக்கற புள்ளி வரைக்கும் எல்லாரும் கூட்டமா அவரு பின்னாலயே வராங்க. பிறகு, இனிமேல நீங்க தனியாதான் போவணும்னு அவரை அனுப்பிவச்சிடறாங்க. அந்தக் கம்யூனிஸ்டும் மனசுக்குள்ளயே ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துகிட்டே அந்த மரத்தைப் பார்த்து போறாரு. உள்ளூர ஒரு உதறல் இருந்தாலும் வெளியே காட்டிக்காம நடந்து மரத்துக்குப் பக்கத்துல போய் உக்காரறாரு.”

“பரவாயில்லையே, உண்மையிலயே அவரு தைரியம் உள்ள ஆளுதான்”

”தனிமையில உக்காந்திருக்கும்போது அவரு நெஞ்சு திக்குதிக்குனு அடைச்சிக்குது. திடீர்னு மரத்தடியில ஒரு   புதர் பக்கமா எதோ அசையறமாதிரி தெரிஞ்சிது. இருட்டுல ஒன்னும் தெரியலை. ஒரு சந்தேகத்துல எழுந்து நடந்து போய் புதருக்குப் பக்கத்துல நின்னு பார்க்கறாரு. உண்மையிலயே அங்க யாரோ நடமாடறமாதிரி தெரியுது. ரெண்டு அடி முன்னால வச்சி போய் பார்த்தப்பறம்தான் அவருக்கு உண்மை புரியுது. ஒரு பையனும் ஒரு பொண்ணும் அங்க நின்னு பேசிட்டிருக்காங்க. எதிர்பாராத விதமா ஒரு ஆள் முன்னால வந்து நின்னதும் அந்த ரெண்டு பசங்களும் நடுங்கிப் போறாங்க. அவருகிட்ட வந்து எல்லா உண்மையையும் சொல்றாங்க. அந்தப் பேய் வதந்தியை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் பரப்பிவிட்டோம்னு சொல்றாங்க.”

“அப்படிகூட நடக்குமா? ஆச்சரியமா இருக்குதே”

“ரெண்டு பேரும் வேறவேற சாதியைச் சேர்ந்தவங்க.  சந்திச்சி பேசற ஒரு சந்தர்ப்பத்துக்கு மத்த மனுசங்களால ஆபத்து வந்துடக்கூடாதுங்கறதுக்காகத்தான் அந்தப் பேய்க்கதையை கட்டிவிட்டிருக்காங்க.  சரி சரி, எச்சரிக்கையா இருந்துக்கங்கன்னு சொல்லிட்டு நம்ம கம்யூனிஸ்டு அப்பவே அங்கேர்ந்து கெளம்பி வேகவேகமா ஊருக்குத் திரும்பிடறாரு. அவரு ஊருகாரங்ககிட்ட என்ன சொல்லியிருப்பாருன்னு நீங்க நினைக்கறீங்க?”

“என்ன சொல்லியிருப்பாரு? அங்க பேயும் கிடையாது. பிசாசும் கிடையாது. ஆம்பளையும் பொம்பளையுமா ஒரு ஜோடி அந்த இருட்டுல உக்காந்து காதல்கதை பேசுதுங்கன்னு சொல்லியிருப்பாரு”

“அதான் இல்லை. தன்னுடைய நம்பிக்கை, கொள்கை, தத்துவம் எல்லாத்தையும் தாண்டி ரெண்டு இளசுங்க காதல் முக்கியமானதுன்னு அவரு நெனைக்கறாரு. ஆமாம்பா. நீங்க சொன்னதெல்லாம். அங்க ஏதோ ஒரு பேய் நடமாட்டம் இருக்குது. காலம் பூரா பேய் இல்லை பூதம் இல்லைன்னு சொல்ற எனக்கே ஒரு பேய் மேல ஒரு நம்பிக்கை வந்துடிச்சி. நீங்க சொல்றமாதிரி ராத்திரி நேரத்துல அந்தப் பக்கமா போகாம இருக்கறதுதான் நம்ம உயிருக்கு நல்லதுன்னு சொல்லிட்டு போயிட்டாரு”

“ஏன் அப்படி பொய் சொன்னாரு?”

“பொய்தான். ஆனா ஒரு பொய்யால ஒரு காதலை காப்பாத்த முடியும்ங்கறபோது, அந்தப் பொய்யைச் சொன்னா தப்பில்லைன்னு அவருக்குத் தோணுது. ஊருகாரங்க தன்னைப்பத்தி என்ன வேணும்ன்னாலும் நெனச்சிக்கிடட்டும்னு கவலைப்படாம அந்தப் பொய்யைச் சொல்றாரு.”

முதன்முறையாக நண்பர் குழப்பம் நீங்கி வாய்விட்டுச் சிரித்தார். “ஒரு பொய்யால யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. அதே சமயத்துல அந்தப் பொய் யாரோ ஒருத்தவங்கள வாழ வைக்குது. அப்படிப்பட்ட பொய்க்கு ஒரு அனுமதி இருக்குது, அதான நீங்க சொல்ல வர விஷயம்?” என்று கேட்டார்.

“அதேதான்” என்றபடி நான் அவருடைய தோளைத் தட்டினேன். “இந்த விஷயத்தை வலியுறுத்தறமாதிரி இன்னொரு கதையும் இருக்குது. சுஜாதா செல்வராஜ்னு ஒரு பெண் எழுத்தாளர் எழுதன கதை. கதையுடைய பேரு கந்தாயி. அதையும் சொல்றேன், கேளுங்க” என்றேன்.

“சொல்லுங்க” என்றார் நண்பர்.

“ஒரு ஊருல கந்தாயின்னு ஒரு பெரியம்மா இருக்காங்க. நல்ல நிலபுலன் உள்ளவங்க. அவுங்களுக்கு ரெண்டு  மகன்ங்க. ரெண்டு பேருமே நல்ல உழைப்பாளிங்க. அந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த ரெண்டு மருமகளுங்களும் உழைப்பாளிங்க. பொழுதுவிடிஞ்சி பொழுது போவறவரைக்கும் எல்லாருமே கழனியில வேலை செஞ்சிட்டு வருவாங்க. பெரியம்மா கழனி வேலையையும் பார்த்துகிட்டு வீட்டு வேலையையும் வீட்டுத் தொழுவத்துல இருக்கற ஆடுமாடுங்களையும் பார்த்துக்குவாங்க.”

“சரி”

“ஒருநாள் அவுங்க கழனியில வேலை செய்யற ஒரு பொண்ணு அழுதுகிட்டே ஓடிவந்து பெரியம்மா காலைப் புடிச்சி காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கெஞ்சறா. என்னடின்னு கேக்கறாங்க பெரியம்மா. என் வீட்டுக்காரன் அடிக்கறதுக்கு கட்டையோடு விரட்டிகிட்டு வரான் பெரியம்மான்னு அழறா. கொஞ்சம்கூட யோசிக்காம அந்தப் பெரியம்மா சரி, சரி, போய் மாடியில இருக்கற அறையில மறைஞ்சிக்கோன்னு சொல்லி அனுப்பிவச்சிடறாங்க.”

“அப்புறம்?”

“கொஞ்ச நேரம் கழிச்சி அவ வீட்டுக்காரன் கையில கட்டையோடு அங்க வரான். என் பொண்டாட்டி இந்தப் பக்கம் வந்தாளா பெரியம்மான்னு கேக்கறான். அவ எதுக்குடா இந்தப் பக்கம் வரப்போறா? எங்கனா கழனி வேலைக்குப் போயிருப்பான்னு பதில் சொல்றாங்க பெரியம்மா. கட்டன புருஷன் குத்துக்கல்லாட்டம் உயிரோட இருக்கும்போதே அவ யாரோ ஒரு பையன் கூட சேர்ந்து சுத்தறான்னு ஊருல பேசிக்கறாங்க பெரியம்மா, இன்னைக்கு அவளை வெட்டி கூறுபோடாம விடமாட்டேன்னு கத்தறான். பெரியம்மா அவன்கிட்ட பேசிப்பேசி கொஞ்சம்கொஞ்சமா அவன் கோபத்தை அடக்கறாங்க. அவளைக் குறை சொல்றது இருக்கட்டும்டா, குடிச்சிகுடிச்சி ஊர சுத்தறதையே வேலையா வச்சிருக்கியே நீ? அந்தப் பொண்ணுக்கோ புள்ளைக்கோ ஒரு ஆம்பளையா இதுவரைக்கும் நீ என்ன செஞ்சிருக்கேன்னு   உக்காந்து யோசிச்சிப் பாருன்னு புத்திமதி சொல்லி அனுப்பி வைக்கறாங்க. அவனும் அமைதியா தலையாட்டிட்டு அருவாள தூக்கிப் போட்டுட்டு போயிடறான்.”

“சரி”

“பொழுது சாஞ்ச நேரத்துல மருமவளுங்க வராங்க. என்ன நடந்ததுன்னு கேட்டுத் தெரிஞ்சிக்கறாங்க. பெரியம்மாவை தனியா அழைச்சிட்டு போய் அந்தப் பெண்ணுக்கும் அந்த ஆடவனுக்கும் நடுவுல உண்மையிலயே உறவு இருக்கற விஷயம் உண்மைதான், அது எங்களுக்கே தெரியும்னு சொல்றாங்க. பெரியம்மா அதை ஒரு முக்கியமான விஷயமாவே நினைக்கலை. நான் அவன்கிட்ட சொன்னது பொய்யாவே இருக்கட்டும். அதனால என்ன? என் வார்த்தையால மனசு மாறினா, நாளையிலேர்ந்து அவளை நல்லா வச்சிக்குவான் இல்லை? அவன் நல்லா வச்சிகிட்டா அதுக்கப்புறம் அவள் ஏன் தப்பு செய்யப்போறா? ஒரு பொண்ணு கண்ணால பார்க்கறதை மண்ணால மறைக்கணும். புரியுதா? போங்கடி, போங்க. அவளுக்கு சாப்பட ஏதாவது கொடுத்து இங்கயே படுத்துக்கச்சொல்லுங்க. விடிஞ்ச பிறகு அவ வீட்டுக்கு போனா போதும்னு சொல்லி அனுப்பி வச்சிடறாங்க. அதான் கதை”

“அந்தப் பெரியம்மா சொல்றது பொய்தான். ஆனா அந்தப் பொய் அந்தப் பொண்ணுக்கு ஒரு மறுவாழ்க்கையைக் கொடுக்குது. அந்தப் பொய்யால யாருக்கும் கெட்டது நடக்கலை. நான் புரிஞ்சிகிட்டது சரிதானே?” என்று கேட்டபடி புன்னகைத்தார்.

“இன்னொரு கதையும் இருக்குது. அதையும் கேட்டீங்கன்னா, சந்தேகத்துக்கே இடமில்லாம உங்களுக்கு எல்லாமே முழுசா புரிஞ்சிடும்” என்றேன்.

“சொல்லுங்க. கேக்கறதுக்கு நான் தயாரா இருக்கேன்”

“இது ஜெயமோகன் எழுதன கதை. கதையுடைய பேரு பிறசண்டு. இங்கீஷ்ல ப்ரசென்ஸ் ஆஃப் மைண்ட்னு சொல்வோமில்லையா, அதைத்தான் பேச்சு வழக்குல பிறசண்டுன்னு எழுதியிருக்காரு”

“பொய்யைப்பத்திய கதைன்னு சொன்னீங்க?”

“கதை பொய்யைப்பத்தியதுதான். ஆனா ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் பத்திய கதை மாதிரியான ஒரு போக்குக்குள்ள அதை மறைச்சி வைச்சி சொல்றாரு. அது ஒரு டெக்னிக். அவ்ளோதான்”

“சரி. கதையைச் சொல்லுங்க”

“ஒரு ஊருல சிரோமணின்னு ஒரு பெரியவரு இருக்காரு. மறதி நோய் உள்ளவரு அவரு. அவருடைய மகன் பேரு ரத்தினம். அவுங்க வீட்டுக்குள்ள ஒருநாள் ராத்திரியில ஒரு திருடன் நுழைஞ்சி நாப்பது பவுன் நகை, அறுபதாயிரம் ரூபா பணம் எல்லாத்தையும் அடிச்சிட்டு ஓடிடறான்.”

“ஐயையோ, திருடன் வந்தது யாருக்குமே தெரியலையா?”

“சிரோமணி தாத்தா பார்த்திருக்காரு. அர்த்தராத்திரியில பாத்ரூம் போறதுக்காக எழுந்து பின்கட்டுக்குப் போய் திரும்பற நேரத்துல அந்தத் திருடன் படிக்கட்டுக்குப் பக்கத்துல உக்காந்திருக்கான். அப்ப பார்த்திருக்காரு.”

“சத்தம் போடலையா?”

“இல்லை. யாருடா நீன்னு அந்தத் திருடன்கிட்ட பேச்சு கொடுத்திருக்காரு. சும்மா காத்து வாங்க உக்காந்திருக்கேன் தாத்தான்னு அந்தத் திருட்டுப்பையன் சொல்லியிருக்கான். சரிசரி, போய் படு நேரமாவுதுன்னு சொல்லிட்டு தாத்தா உள்ள போயிட்டாரு. அவரு மனசுல வேற எதுவுமே பதியலை.  அவன்கிட்ட பேசனது மட்டும் பதிஞ்சிட்டுது”

“அப்புறம்?”

“விசாரணை நடத்தவந்த இன்ஸ்பெக்டர் அந்த வட்டாரத்துல திருட்டுக்குப் பேர்போன ஏழெட்டு பேர வரவழைக்கறாரு. அவனை அடையாளம் காட்டறதுக்கு  சிரோமணி தாத்தாவை மறுநாள் ஸ்டேஷனுக்கு வரச் சொல்றாரு. ரத்தினம் அவரை பத்திரமா அழைச்சி வந்து ஒரு மரத்தடியில ஒரு பெஞ்சுல உக்காரவச்சிட்டு ஸ்டேஷனுக்குள்ள போறாரு. கதையே அங்கதான் நடக்குது”

“சரி”

“யாரும் பார்க்காத நேரத்துல சிரோமணி தாத்தாவுக்கு பக்கத்துல ஒரு இளைஞன் வந்து உக்காந்து பேச்சு கொடுக்கறான். அன்னைக்கு ராத்திரியில திருட வந்தவன்ன்னு சொல்லி அறிமுகப்படுத்திக்கறான். திருடவந்தவன் படிக்கட்டுல உக்காந்துகிட்டு உண்மைமாதிரி ஒரு பொய்யை எப்படிடா சொன்னனு கேக்கறாரு தாத்தா. வீட்டுக்குள்ள பொருளை எங்க வச்சிருப்பாங்க, எப்படி திருடலாம்ன்னு மனசுக்குள்ள ஆலோசனை செஞ்சிட்டிருந்தேன்னு சொல்றான் திருடன். அப்பதான் அவனைப் பாராட்டறமாதிரி உன் ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் நல்லா இருக்குதுன்னு பாராட்டறாரு தாத்தா.”

“திருடனுக்கும் தாத்தாவுக்கும் நடக்கற உரையாடல் சுவாரசியமாதான் இருக்குது”

“எதுக்குடா திருடனன்னு தாத்தா அந்தத் திருடன்கிட்ட கேக்கறாரு. பைக்குக்கு பெட்ரோல் போடக்கூட பணமில்லை, அதனால திருடனேன்னு சொல்றான் திருடன். பக்கத்துல இருக்கற ஒரு சின்ன பொண்ணைக் காட்டி அவள கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்கேன்னு சொல்றான். அவ ஓடிவந்து தாத்தா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கறா.  எல்லாத் திருடங்களையும் வரிசையில நிக்கவச்சி அடையாளம் காட்டறதுக்காகத்தான் தாத்தாவை அங்க ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வந்திருக்காங்கன்னு திருடன் சொல்றான். எல்லாம் தெரிஞ்சாலும் ஒன்னுமே தெரியலைன்னு பொய் சொல்லச் சொல்றான்.  அந்த ஒரு பொய் போதும், அந்த வழக்கு தானா சரிஞ்சிடும்னு சொல்றான். தாத்தா எதைஎதையோ பழைய விஷயங்களை நினைச்சிக்கறாரு. கடைசியா சரி போடான்னு சொல்லி அனுப்பிவைக்கறாரு. விசாரிக்கறதுக்காக ஸ்டேஷன்லேர்ந்து எல்லாரும் அவர் உக்காந்திட்டிருக்கிற இடத்துக்கே வராங்க. அதோட கதை முடியுது.”

“இதுவும் அதே அமைப்புல உள்ள கதைதான். தாத்தாவுடைய பொய் உண்மையிலயே அவருடைய குடும்பத்துக்கு பெரிய நஷ்டத்தை உண்டாக்கப் போவுது. ஆனா அந்த நஷ்டத்தைவிட அந்தத் திருடனுக்கு அமையப் போகிற வாழ்க்கையை நெனச்சிப் பார்த்து, திருடன் எதிர்பார்க்கிற பொய்யைச் சொல்ல மனசளவுல தன்னைத் தயார்ப்படுத்திக்கிறாரு தாத்தா. பொய்மையும் வாய்மையிடத்தங்கற வார்த்தைக்கு பொருத்தமான கதைதான்”

நண்பரின் முகம் முழுக்கவே மலர்ந்துவிட்டது. “இன்னும்கூட சில கதைகள் இருக்குது. எல்லாத்தையும் எடுத்துவைக்கறேன். அடுத்தமுறை வரும்போது வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் நீங்களே படிச்சித் தெரிஞ்சிக்கலாம்” என்றேன். அச்சமயத்தில் என் மகன் தேநீர் நிரம்பிய இரு கோப்பைகள் வைக்கப்பட்ட ஒரு தட்டை எடுத்துவந்து மேசையில் வைத்துவிட்டு “என்னங்க அங்கிள், நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டுச் சென்றான். நாங்கள் தேநீரைப் பருகத் தொடங்கினோம்.

 

(சங்கு – இலக்கியக் காலாண்டிதழ் – ஜனவரி 2026- மார்ச் 2026)