Home

Monday, 7 April 2025

ஏவாளின் இரண்டாவது முடிவு - சிறுகதை

 

பிரதமர் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் வந்திருப்பதைப் பார்த்ததும் ‘‘பெண்கள் நம் கண்கள்’’ ‘‘தாய்  நம் நடமாடும் தெய்வம்’’ ‘‘தாய்மார்களின் சேவை இந்த நாட்டுக்குத் தேவை’’ என்று வழக்கமாக வரும் உபதேச வார்த்தைகளாக இருக்கக்கூடும் என்று அலட்சியமாகக் கணிப்பொறித் திரையில் மௌஸைக் கிளிக்கினேன். நான் நினைத்ததற்கு மாறாக அது வேறொரு செய்தி. அஞ்சலின் மூலையில் பிரதமரின் படம். அவர் என்னைப் பார்த்து வணங்கியபடி அந்த வாசகங்களைச் சொல்வதுபோல அந்த அஞ்சல் வடிவமைக்கப்பட்டிருந்தது.

”அன்புடையீர், உங்களுடன் தனிமையில் பேச விரும்புகிறேன். அவலங்களின் பிடியிலிருந்து நம் தேசத்தை மீட்டெடுக்கும் வழிகளை விவாதிக்க விரும்புகிறேன். அவசியம் வரவும், சந்திப்பு நேரம் மாலை 07.45.’’

என்னால் அந்த அஞ்சலை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அந்த முகவரியைப் பார்த்தேன். பிரதமரின் அலுவலக முகவரியேதான். இருப்பினும் என் அவநம்பிக்கை குறையவில்லை. சட்டென்று தொலைபேசி விவரப் புத்தகத்திலிருந்து பிரதமரின் எண்களைக் கண்டுபிடித்துச் சுழற்றினேன். இரண்டு மூன்று நீள மணியடிப்புக்குப் பிறகு பிரதமேரே பேசினார். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதுமே   ‘‘ஓ நீங்களா? என் அஞ்சல் கிடைத்ததா ராஜ்? உங்களைக் காண ஆவலாக உள்ளேன். இந்த நாட்டின் தலையெழுத்த மாற்றி எழுத   உங்களை அழைக்கிறேன் ராஜ். அவசியம் வாருங்கள் ராஜ்”   என்றார். அவர் பேசப்பேச என் இதயத்துடிப்பு அதிகரித்தபடி இருந்தது. நான்கு வாக்கியங்கள் பேசுவதற்குள் அவர் நான்கு முறை ‘‘ராஜ் ராஜ்”  என்று பெயர் சொல்லி அழைத்துவிட்டார். அச்சொல்லில் கசிந்த அன்பு மனத்தைப் பிசைந்தது. அவர் எதைச் சொன்னாலும் அதைக் கட்டளையாக ஏற்று நடத்திக் கொடுக்க அக்கணமே முடிவெடுத்தேன். அவர் சாகச் சொன்னாலும்கூடச் சந்தோஷமாகச் செத்துவிடவேண்டும் என்கிற அளவுக்குப் பெருமித உணர்வு எனக்குள் பொங்கியது.   ‘‘தேசத்தின் தலையெழுத்து”   என்கிற சொல் மனத்தில் மிதக்கத் தொடங்கியது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக எங்கள் தேசத்தில் எந்தப் பிரசவ மனையிலும் ஒரு குழந்தைகூட பிறக்கவில்லை. குழந்தை அழும் சத்தம் எப்படி இருக்கும் என்பது வளரும் தலைமுறை அறியாத சங்கதியாகிவிட்டது. தேசத்தில் பல திறந்தவெளி அரங்குகளில் பெரிய பெரிய மின்திரைகளை வடிவமைத்து வேறு ஒரு தேசத்திலிருந்து வரவழைக்கப்பட்ட குழந்தைகளின் குரல்களைப் பதிவு செய்த ஒளி நாடாக்களை ஒளிபரப்புவது தினசரி வாடிக்கையாகிவிட்டது. தினசரி இரவு நடக்கும் அக்காட்சிக்கு மக்கள் திரள்திரளாக வந்து போனார்கள். அந்தத் தேசத்தின் பெண்கள் தவறாமல் வந்து அக்காட்சியைப் பார்க்கவேண்டும் என்பது பிரதமரின் உருக்கமான வேண்டுகோள். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வானொலியிலும் தொலைக் காட்சியிலும்கூட அந்த வேண்டுகோள் ஒலித்தபடி இருந்தது. ‘‘இன்றைய குழந்தைப்படம் பார்த்து விட்டீர்களா?’’  என்றும்  ‘‘தேசம் ஒரு குழந்தைக்காக உங்களிடம் மடியேந்தி நிற்கிறது”   என்றும் வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. பிரதான சந்திப்புகளில் இருபது அடிக்குப் பதினைந்து அடி செவ்வகத் தட்டிகளில் விளம்பரங்கள் எழுதி வைக்கப்பட்டன. பெண்களின் இதயத்தை உருக்கும் அளவுக்கு விளம்பரப் படங்கள் எடுத்துத் தருவோருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்தது. தொலைக்காட்சியில் எல்லாச் சேனல்களிலும் கால்மணிநேரத்துக்கு ஒருமுறை இடம்பெறும் விளம்பர இடைவேளையில் இத்தகு விளம்பரங்கள் ஒளிபரப்பட்டன. அந்த வாசகங்களோ, வேண்டுகோள்களோ அவர்களைத் துளியும் அசைக்கவில்லை.

தனிப்பட்ட முறையில் ஒரு ஆணின் கவலையாக இருந்த விஷயம் மெல்லமெல்ல ஆண் சமூகத்தின் கவலையாக மாறி கடைசியில் அரசாங்கத்தின் கவலையாக மாறத் தொடங்கிவிட்டது.

அரசாங்கத்தின் நலவாழ்வுத்துறை படும் கவலைகளைச் சொல்லில் அடக்கமுடியாது. எதிர்க்கட்சிகளும் பிற தேசத்தவர்களும் கேட்கிற கேள்விகளுக்கு அரசிடம் நம்பிக்கையூட்டும் விதமாக எந்தப் பதிலும் இல்லை. நாற்பது ஆண்டுகளாக உலக வங்கியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. நாற்பது ஆண்டுகளாக உலக வங்கியிடமிருந்து எந்தக் கடன் உதவியும் இல்லை. உலக வங்கியின் நடவடிக்கையைத் தொடர்ந்து மத்தியதரைக்கடலுக்கு நடுவில் இருந்த ஒரு தேசம் லாபகரமாக ஓடிக்கொண்டிருந்த தன் விமான சேவையைச் சட்டென்று நிறுத்தியது. வந்து செல்லும் பெண்கள் வழியாகத் தன் தேசமும் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதாக அறிக்கை வெளியிட்டது. தம் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொண்ட மற்ற தேசங்களும் மெல்ல மெல்ல தம் விமான, கப்பல் போக்குவரத்துகளையும் வணிக முயற்சிகளையும் ரத்து செய்தன. உலக வரைபடத்திலிருந்தே எங்கள் தேசம் துண்டாகித் தொங்குவதுபோலிருந்தது. எங்கள் நாட்டைப் பற்றிய பேச்சு அடுத்த தேசத்தவர்களின் நாக்கில் ஒரு நகைச்சுவைபோலப் புரள்வது வழக்கமாகிவிட்டது. அதே சமயத்தில் இப்பிரச்சினையின் உளவறிய எங்கள் சின்னஞ்சிறு தேசத்தை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கிவிட்டன. அவர்களின் விஞ்ஞான மூளைகள் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் அப்பிரச்சனையை ஆராயத் தொடங்கின. உலக அரங்கில் இது மாபெரும் பிரச்சனையாக மாறியதும் பெட்ரோலுக்குப் பேர் போன ஒரு நாடு ஐ.நா. சபையில் ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது. தபால் போக்குவரத்தும் நின்றது. தேசத்தைவிட்டு வெளியே செல்லும் மின்னஞ்சல்கள் அஞ்சல் விநியோகப் பெட்டிகளில் கடுமையான தணிக்கைக்குட்பட்டன.

நாற்பதாண்டுகளுக்கு முன்பு தேசமே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது ‘‘சூரியோதயம”  என்னும் பத்திரிகையின் சிறப்பு நிரூபரான ராஜராமன் தேசம் முழுக்கப் பிரயாணம் செய்து ஆறு மாத காலம் கிராமம் கிராமமாக அலைந்து திரட்டிய தகவல்களைத் தொகுத்து எழுதிய ‘‘சாபங்களும் விமோசனங்களும்” என்னும்  புத்தகம்தான் இன்னும் அந்த துர்ப்பாக்கியத்தைச் சொல்லும் முதல் ஆவணம். இதை அரசாங்கத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட தகவல்திரட்டு என்று குற்றம் சாட்டுகிறவர்களும் உண்டு. இதற்கு முற்றிலும் எதிரான நிலையில், சிவராஜ்குமார் என்னும் நாவலாசிரியர் எழுதி வெளியிட்ட ‘ஏவாளின் இரண்டாவது முடிவு’ என்கிற நாவலை அதற்கடுத்த ஆவணமாகக் கொள்ளலாம். தாமே தேடித் திரட்டிய தகவல்களையும் கற்பனையையும் பிரித்தறியாதபடி குழைத்து எழுதியிருந்தார் சிவராஜ்குமார். அந்த நாவல் இலக்கிய   உலகையே கலக்கிவிட்டது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்ததுமே அந்நாவலுக்கு உலகத் தன்மை கிடைத்துவிட்டது. உலகெங்கிலுமுள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் அந்நாவலை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வெளிவந்துள்ள மிகச்சிறந்த நாவல் என்று கொண்டாடின. வாழ்க்கையின் சாரத்தைத் தத்துவப் பின்னணியில் முன்வைக்கும் நாவல் என்று உலக விமர்சகர்கள் அனைவரும் எழுதத் தொடங்கினார்கள். அந்த நாவலுக்கு அதே ஆண்டில் உலகில் மிகச்சிறந்த நாவல் பரிசு கிடைத்தது. ஆனால் அப்பரிசை வாங்கிக்கொள்ள அவரால் முடியவில்லை. விமானத்தடை ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது. பரிசை அறிவித்த தேசமும் அவரை அழைக்கவில்லை. பிறந்த தேசமோ அவருக்குக் கிடைத்த கௌரவமானது தேசத்துக்குப் பெரும் தலைக்குனிவு என்று கண்டித்தது. அக்கௌரவம் அரசியல் காரணங்களுக்காகக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லி அவரை நாட்டை விட்டு வெளியேறாதபடி தடையுத்தரவு விதித்தது. அந்த நாவலுக்கும் தடைவிதிக்கப்பட்டது. அவரது வீடு கடும் பரிசோதனைக் குள்ளானது. சில நாட்கள் விசாரணயின்றி அவர் சிறையில் இருக்க நேர்ந்தது. அவர் வீட்டிலிருந்த அவருடைய படைப்புகளும் அவர் படித்த நூல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டில் பரவத் தொடங்கியிருந்த பயங்கரவாதக் குழுவுக்கும் அவருக்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததாக அரசு உறுதிப்படுத்தியது. அதற்கப்புறம் சில நாட்களிலேயே அவர் சாலை விபத்தொன்றில் இறந்து போனார்.

பயணத்துக்குத் தேவையான ஏற்பாட்டைக் கவனித்தவண்ணம் அந்த நாவலின் சம்பவங்களை அசைபோடத் தொடங்கினேன். நாவல் முழுக்க வேறு வேறு பிரசவ மருத்துவமனைக் காட்சிகளாலேயே கட்டப்பட்டிருந்தன. முதலில் ஒரு மருத்துவமனை இடம் பெறுகிறது. அங்கே பிரசவப்படுக்கையில் படுத்தபடி இடுப்பை அசைக்க முடியாமல் வலியுடன் ஒரு பெண் அலறுகிறாள். காற்றுபோல மிதந்து வந்த ஒரு சொல் அவள் சுவாசத்தோடு கலந்து விடுகிறது. சட்டென எழுந்து உட்கார்ந்து சிரித்தபடி   ‘‘ஏன் சுற்றி நிற்கிறார்கள்?’’ என்று தாதிகளைக் கேட்கிறாள். ‘‘குழந்தை”   என்ற தடுமாறுகிறார்கள் தாதிகள். ‘‘நீயும் குழந்தை, நானும் குழந்தை, அவளும் குழந்தை”  என்று சிரிக்கிறாள் அவள். தாதிகளின் சுவாசத்தோடும் கலந்து விடுகிறது சொல்.   உடனே அவர்களும் சிரிக்கிறார்கள். எல்லாருமே கூடிக் கும்மியடித்து விளையாடுகிறார்கள். அதே நேரத்தில் பிரசவ மருத்துவமனையில் எல்லா அறைகளிலும் சிரிப்பொலி    கேட்கிறது. அந்த நாவல் முழுக்க வேறு வேறு மருத்துவமனைகள் காட்டப்படுகின்றன.

சம்பவம் நடந்த சமயத்தில் மொத்த மக்கள் தொகை 47 கோடி. இதில் 24 கோடி ஆண்கள். 23 கோடி பெண்கள். கடந்த நாற்பது ஆண்டுகளில் மரணப்பதிவுகளுக்குப் பின்னர் மக்கள் தொகை 25 கோடியாக இறங்கிவிட்டது. இதில் 14 கோடி ஆண்கள். 11 கோடி பெண்கள். பெண்களின் சராரி வயது 40க்கு மேல். மூத்த பெண்ணின் வயது 80 என்றும் இளைய பெண்ணின் வயது 40 என்றும் எடுத்துக் கொள்ளலாம். நகரத்தின் நடுவில் இன்றைய மக்கள் தொகை எனக் குறிப்பிடப்படும் தொகை நாளுக்கு நாள் குறைந்தவண்ணம் இருப்பதைப் பார்க்கும்போது அரசாங்கத்தின் கவலையைப் புரிந்துகொள்ளமுடியும்.

”சேர்ந்து விளையாட ஒரு குட்டிப் பாப்பா வேண்டும் அம்மா”   என்ற தூதுச் செய்தியை அப்பாவிடமிருந்து அம்மாவிடம் கொண்டு சென்ற சின்ன வயது நினைவுகள் திரண்டெழும்போதெல்லாம் மனம் வலிக்கத் தொடங்கிவிடும். என் அம்மா மிகவும் நல்லவள். அவள் அளவுக்கு என் மீது அன்பைப் பொழிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்பா மீதும் அவளுக்கு ஆசை அதிகம். ஆனாலும் அப்பாவின் விருப்பத்தை அவள் நடத்திக்கொடுக்கவே இல்லை. நச்சரித்துக் கேட்ட ஒருமுறை ‘‘நீயே தப்பிப் பிறந்தவன்”   என்று சிரித்தாள். அம்மாவின் வார்த்தைப்படி அன்று மருத்துவமனையில் பிறந்த ஒரே குழந்தை நான் மட்டும்தான். மயக்கம் தெளிந்து பார்த்தபோது பக்கத்தில் நான் கிடக்க எங்கெங்கும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்ததாம். அந்த மருத்துவமனையில் அதற்குப் பிறகு குழந்தையின் சத்தம் கேட்கவில்லை என்று சொன்னாள். பல இரவுகளில் தூக்கமின்றி ஜன்னலோர  இரவை வெறித்தபடி அப்பா சிகரெட்டுகளை ஊதித் தள்ளுவதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும்.

நாவலின் ஒரு அத்தியாயத்தில் அன்றைய தினம் பிரசவத்துக்குச் சேர்க்கப்பட்ட பெண்கள் எல்லாரும் கலகலவென்று சிரித்தவண்ணம் தத்தம் வீடுகளுக்குத் திரும்பி விடுகிறார்கள். குழந்தை பிறக்காதது எப்படி என்பது மருத்துவத்துறைக்கே புதிராகவும் சவாலாகவும் இருக்கிறது. மருத்துவப் பரிசோதனையில் எல்லாக் குழந்தைகளும் வயிற்றுக்குள்ளேயே இறந்துவிட்டது தெரிய வருகிறது. ஆனால் அதிசயமாக யாருக்கும் ஆண்டுக்கணக்கில் வலியே எடுப்பதில்லை. ஒன்றிரண்டு மாதக் கருக்கள்கூடக் கலைந்து விடுகின்றன. அதற்கப்புறம் பெண்கள் யாரும் கருவுறவே இல்லை. எந்தக் குடும்பத்திலும் தாம்பத்ய   உறவில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாரும் வழக்கமான வாழ்வையே வாழ்ந்தார்கள். ஆனால் யாரும் கருத்தரிக்கவில்லை.

”எங்கே பயணம்?’’ என்று அம்மா குறுக்கே வந்தாள். நான் அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று முதலில் தயங்கினேன். பிறகு ‘‘பிரதமர் அலுவலகம் வரைக்கும் போய் வருகிறேன்”   என்று பதில் சொன்னேன். ‘‘என்ன, வேலை விஷயமா?’’  என்றாள் ஆவலுடன்.  ‘‘தெரியவில்லை, போனால்தான் தெரியும்”  என்றபடி வெளியேறினேன். பழுது பார்க்கக் கொடுத்த வாகனம் திரும்ப வரும்வரை காத்திருக்கவேண்டாம் என்று தோன்றியது.

தெருவில் நடமாட்டம் மந்தகதியில் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் நாலைந்து நிமிடங்கள் கூடக் காத்திருக்கவில்லை. பேருந்து வந்துவிட்டது. சீட்டு வாங்கிக்கொண்டு உட்கார்ந்தேன். காதை அடைக்கிற மாதிரி பக்கத்தில் இரண்டு கிழவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். நேற்று இரவு தொலைக்காட்சியில் அபூர்வமான காட்டுச்செடி ஒன்றைக் காட்டியதாகவும் அந்த செடியின் அரும்புகள் மலர்வதே இல்லையென்றும் மலராத நிலையிலும் அதன் மணத்துக்குக் குறைவில்லை என்றும் தெரிவித்ததாகச் சொன்னார். ‘‘என்ன பெயர் சொன்னார்கள்?’’ என்று கேட்டார் ஒரு முதியவர். ‘‘இருங்கள் யோசித்துச் சொல்கிறேன்”   என்று தலையை இப்படியும் அப்படியும் அசைத்தபடி இருந்தார் மற்றொரு முதியவர். நான் இறங்கும் வரை அவருக்கும் அந்தச் செடியின் பெயர் நினைவுக்கு வரவே இல்லை.

மணியைப் பார்த்துக்கொண்டேன். 6.20 தான் ஆகியிருந்தது. குறித்த நேரத்துக்கு இன்னும் பொழுதிருந்ததால் பக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த தகவல் திரையின் அருகில் சென்றேன். திரையைத் தொட்டதும் அன்றைய பாராளுமன்ற விவாதங்கள் பற்றிய செய்திகள் வரிசையாக வரத்தொடங்கின. நாற்பதாண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பல அரசாங்கக் கட்டிடங்களையெல்லாம் மாற்று வழிகளில் பயன்படுத்த அமைச்சரொருவர் ஆலோசனை வழங்கி யிருந்தார். அது பெரிய பட்டியலாக நீண்டிருந்தது. பிரசவ மருத்துவமனைகளை மனநோய் மருத்துவமனைகளாகவும் குழந்தைகள் காப்பகங்களைக் கோழிப்பண்ணைகளாகவும் தொடக்கப் பள்ளிக் கட்டிடங்களையெல்லாம் முட்டைக்கிடங்குகளாக உயர்நிலைப் பள்ளிகளைத் தானிய சேமிப்புக்கிடங்குகளாகவும் கல்லூரிக் கட்டிடங்களை உரக்கிடங்குகளாகவும் பல்கலைக்கழகங்களை யெல்லாம் விலங்குக்காட்சிச்சாலைகளாகவும் விளையாட்டு  

மைதானங்களைப் புல்வெளிகளாகவும் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருந்தார். தொடர்ந்து அப்பட்டியலைப் படிப்பது அலுப்பாக இருந்ததால் அதையெல்லாம் ஒரேயடியாகத் தாண்டி விட்டேன். இறுதியில் எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த ஆலோசனையைக் கடுமையாக எதிர்த்ததாகவும் பெண்களின் நிலையில் திடுமென ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து களைய முற்படாத அரசு கையாலாகாத செயல்படாத அரசு என்றும் வசைபாடியிருந்தன. படிக்கப் படிக்க உடல் வியர்த்தது.

பிரதமர் அலுவலகத்தில் ஒன்றிரண்டு ஆட்கள் தவிர யாரும் இல்லை. வரவேற்பறையில் வயதான ஒருவர் உட்கார்ந்திருந்தார். ஓய்வு பெறும் வயதைத் தாண்டியவராகவே தெரிந்தார் அவர். அரசு விதிகள் தளர்த்தப்பட்டதால் அவருக்கு நீட்டிப்பு வழங்கப் பட்டிருக்கக்கூடும் என்று தோன்றியது.

நான் விவரங்களைக் கூறியதுமே எனக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைத்துவிட்டது. தொடர்ந்து கதவுகள் திறந்தன. வாசலில் சிறிய சோதனைக்குப் பிறகு பிரதமர் அறை திறந்தது. இதமாகக் குளிரூட்டப்பட்ட அறை. தரையில் அழகான சிவப்புக் கம்பளம். சுவரோரம் ஓடிக்கொண்டே இருக்கும் விவரத் திரைகள். சங்கேதக் குறிகளில் எழுத்துக்கள் தோன்றி மறைந்தவண்ணம் இருந்தன. ‘‘இனிய மாலை வணக்கம்”    என்று நான் குரல் கொடுத்ததும் சிரிப்பு மாறாத முகத்துடன் ‘‘ராஜ்?”  என்ற கேள்வி தொனிக்கும் குரலுடன் முகத்தைப் பார்த்துவிட்டு எழுந்து கைகுலுக்கினார். மிருதுவான அவரது உள்ளங்கை என் கையை அழுத்தும்போது கூச்சமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஒரு கண நலவிசாரிப்புகளுக்குப் பிறகு அவர் நேரிடையாகவே விஷயத்துக்கு வந்துவிட்டார்.

”ராஜ், இதோ பாருங்கள்...’’

என் முன்னே கணிப்பொறி அச்சிட்டுத் தந்த சில தாள்களைக் காட்டினார். பெயர்ப்பட்டியல்போல இருந்த அத்தாளில் என் பெயர் இடம்பெற்றிருப்பது வியப்பாக இருந்தது. என் பெயர், என் பிறந்த நாள், இடம், தாயார் பெயர், மருத்துவமனையின் பெயர் எல்லாம் இருந்தன.

”ராஜ்... இந்த தேசத்தைப் பீடித்துள்ள சாபத்தின் விமோசனத்துக்கு நாங்கள் எடுக்கும் கடைசி முயற்சி இது. நாற்பது ஆண்டுகளாக உதிக்காத யோசனை இப்போதுதான் உதித்திருக்கிறது. இந்தப் பட்டியலில் உங்கள் பெயரைப் பார்க்கிறீர்கள் அல்லவா?  இது இந்த நாட்டிலுள்ள சின்னதும் பெரியதுமான எல்லா மருத்துவமனைகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் சாரம். அதாவது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கடைசியாகப் பிறந்த பத்து குழந்தைகள் இவர்கள். நீங்களும் அதில் ஒருவர். உங்கள் பிறப்புக்குப் பிறகுதான் குழந்தைப்பேறு என்பதே இத்தேசத்தில் இல்லாமல் போயிருக்கிறது.’’

பிரதமர் சற்று நிறுத்தி மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தினர். எனக்குள் பதற்றம் அதிகரித்து    ‘‘நான்...’’   என்று ஏதோ கேட்க எழுந்தேன். ‘‘குழந்தைப்பேறு நின்றதற்கான காரணங்கள் இந்தத் தாயார்களுக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறது அரசு. அரசின் விசாரணையைவிட குழந்தையின் அன்பு விசாரணையில் தாயார்கள் வாய் திறக்கக்கூடும். எப்படியாவது அந்த உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் ராஜ். உங்களை மலைபோல நம்பியிருக்கிறது நம் அரசாங்கம்.’’

என்னை ஒரு உளவாளியாக என் வீட்டுக்குள்ளேயே பயன்படுத்த நினைக்கும் அவர்கள் தந்திரம் அருவருப்பூட்டியது. ஒருகணம் பிரதமர் மீது வெறுப்பும் கோபமும் எழுந்தன. சிரமப்பட்டுக் கட்டுப்படுத்தினேன்.

”மற்ற ஒன்பது பேர்களின் தகவல்கள் ஏமாற்றத்தையே தந்தன ராஜ். பாதி பேர்கள் உயிருடன் இல்லை. மிச்ச பேர்களின் தாய்மார்கள் மறைந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. இந்தப் பத்து பேர்களில் எஞ்சியிருப்பது நீங்கள் ஒருவரே ராஜ். உங்களைத்தான் நம்பியிருக்கிறது தேசம்.”

தொடர்ந்து குளிரக்குளிரப் பேசினார் பிரதமர். தேசத்துக்கு உதவுவது என் தலையாய கடமை என்று என் இதயம் துடிக்கத் தொடங்கியது. சில கணங்களுக்கு முன்பு அவர்மீது எழுந்த கோபம்கூட மறைந்துவிட்டது. அவருக்கு நம்பிக்கையூட்டும் விதமாகக் கைகுலுக்கிவிட்டு வெளியே வந்தேன்.

அன்று இரவு பிரதமர் சந்திப்பைப்பற்றி அம்மாவிடம் அப்பாவிடமும் விரிவாகச் சொன்னேன். நான் சொன்னதையெல்லாம் அம்மா அக்கறையுடன் கேட்டாள். இந்தத் தேசத்தின் கடைசிக் குழந்தை நான்தான் என்றதும் அவள் உடல் சிலிர்த்தது. நான் கடைசிக் குழந்தை என்றால் அவள் கடைசித்தாய் அல்லவா? அவள் உள்ளூர நெகிழ்ந்துகொண்டிருப்பதை அவள் முகம் காட்டியது.

”அம்மா, எனக்குப் பிறகு ஏன் குழந்தை பிறக்கவில்லை அம்மா?’’ என் குரல் அவளை உருக்கியது. அவள் கண்கள் தளும்பின.

”உண்மையிலேயே தெரியாது மகனே.’’

”குறிப்பாக உங்களுக்கு ஏன் பிறக்கவில்லை அம்மா?’’

”தெரியாது மகனே.’’

அவள் தலை தாழ்ந்தது. சில கணங்களுக்குப் பிறகு நனைந்த கண்களுடன் ‘‘எத்தனை முறை நீ கேட்டாலும் எனக்குத் தெரிந்த பதில் ஒன்றுதான் மகனே. நீ பிறந்த மறுகணமே ஏதோ ஒரு சொல் காற்றைப்போல மிதந்து வந்து என் நெஞ்சைக் கிழித்துக்கொண்டு புகுந்தது போலிருந்தது. அச்சொல்லை முணுமுணுக்கவேண்டும் என்று மனம் உத்வேகம் கொண்டது. அவசரமாக அச்சொல்லை உச்சரித்ததுமே அச்சொல் நினைவிலிருந்து மறந்துவிட்டது. இச்சொல்லுக்கும் மகப்பேறுக்கும் தொடர்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை ராஜ். எல்லாம் ஒரு விளையாட்டைப்போல நடந்து விட்டது.’’

எனக்குச் சிரிப்பு வந்தது. சிவராஜ்குமாரின் ‘‘ஏவாளின் இரண்டாவது முடிவு’’ நாவலின் வரிகளையே அம்மா திருப்பிச் சொல்வது வியப்பாக இருந்தது. ஆனால் அம்மா படிப்பறிவில்லாதவள். நாவலை அவள் படித்திருக்க வாய்ப்பே இல்லை என்று தோன்றியது. அரசால் தடைசெய்யப்பட்ட புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ளும் அளவுக்கு அப்பாவுக்கும் தைரியமில்லை. அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேச்செழுந்தபோதுகூட ‘‘இலக்கியத்துக்கெல்லாம் என் வாழ்வில் எங்கே மகனே இடம் இருந்தது?’’ என்று பெருமூச்சுவிட்டார்.

இரவெல்லாம் தூக்கமில்லை. தொடர்ச்சியே இல்லாமல் ஏகப்பட்ட கனவுகள் முளைப்பதும் அறுபடுவதுமாக இருந்தன. நாவலின் பக்கங்கள் தலைக்குள் புரண்டன. ஒருவேளை நாவலில் சொல்லப்படுவது உண்மையாக இருக்குமோ என்று தோன்றியது. சிவராஜ்குமாரைப் பற்றிய தகவல்களைத் திரட்டினால் சிறிதளவாவது பயனுடையதாக இருக்கும் என்று தோன்றியது.

விடிந்ததும் என் வழக்கறிஞரைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். என் உற்சாகம் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘‘என்ன, தேசபக்தி ஊற்றெடுத்து விட்டதா?’’ என்ற கிண்டல் செய்தார். உள்ளார்ந்த ஈடுபாட்டோடு இப்பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறேன் என்றும் இதில் விளையாட்டுக்கு இடமில்லை என்றும் பதற்றத்துடன் சொன்னேன். வெகுநேர யோசனைக்குப் பிறகு சிவராஜ்குமாரின் நாவல் தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதால் நூலகம், மின் இணையங்கள், கலைக்களஞ்சியம் என எல்லா இடங்களிலிருந்தும் அவரைப் பற்றிய தகவல்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றார்.

ஒருவேளை சிவராஜ்குமாரிடமிருந்தும் அவரது இல்லத்தாரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட தகவல்களைப் பாதுகாத்திருந்தால் அவற்றைத் தகவல் கிடங்கிலிருந்து பிரதமரின் விசேஷ அனுமதியுடன் பார்வையிட முடியும் என்றார். அவர் சொன்ன ஆலோசனை பயனுடையதாக இருந்தது. உடனே பிரதமருடன் தொடர்புகொள்ள எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த தனி எண் வழியாகத் தொலைபேசியில் பேசினேன். நான் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்ட பிரதமர் சிறிது நேரம் மறுமுனையில் யாரிடமோ பேசிய பின்னர் விசேஷ அனுமதிக்கடிதத்தை அவரது அலுவலகத்துக்கு உடனே வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார். வழக்கறிஞருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியேறினேன்.

என் வாகனம் எங்கும் நிற்காமல் ஓடியது. அரைமணி நேரப் பயணத்துக்குப் பிறகு பிரதமர் அலுவலகத்தை அடைந்தேன். வரவேற்பறையில் இருந்த கிழவர் என்னைக் கண்டதும் மிகவும் மரியாதையுடன் ஒரு கடித உறையை அளித்தார். அடுத்த அரைமணி நேரத்தில் தகவல் கிடங்கை அடைந்தேன். பொறுப்பாளராக இருந்த மூதாட்டி ஒருத்தி நான் காட்டிய கடிதத்தை வாங்கி மூக்குக் கண்ணாடிக்கு அருகில் கொண்டு சென்று எழுத்து எழுத்தாகப் படித்து முடிப்பதற்குள் என் பதற்றம் பல மடங்காகியது. அம்மூதாட்டி நிதானமாக என் பக்கம் திரும்பி ‘‘சிவராஜ்குமாரின் தகவல்களைப் பார்க்க விரும்புகிறீர்களா?’’ என்று மெதுவாகக் கேட்டார். நான் ‘‘ஆமாம்”   என்று புன்சிரிப்பு மாறாமல் பதில் சொன்னேன். அறையைத் திறந்து உள்ளே வருமாறு சொன்னார் மூதாட்டி. விளக்குகளைப் போட்ட பிறகு அலமாரியில் அடுக்கடுக்காக இருந்த தடித்தடிப் புத்தகங்களில் ஒன்றை உருவி சம்பந்தப்பட்ட விவரத்தைத் தேடினார். பத்துப் பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு ‘‘247வது அலமாரி, மூன்றாவது தட்டு’’ என்று படித்தார். பிறகு ‘‘தயவு செய்து நீங்களே சென்று எடுத்து வருகிறீர்களா? என் உடல் நிலைக்குத் தூசு ஒத்துக்கொள்வதில்லை”   என்றார். தலையாட்டியபடி நான் அலமாரிகளுக்கு நடுவில் புகுந்து சென்றேன்.

சில நிமிடங்களுக்குள் சிவராஜ்குமார் தகவல்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டேன். பாலித்தீன் தாள்களால் அழகாகச் சுற்றி மடிக்கப்பட்ட மூட்டை ஒன்றிருந்தது. பார்த்ததுமே என் இதயத் துடிப்பு அதிகரித்தது. என் எதிரில் சிவராஜ்குமாரே நிற்பது போலிருந்தது. கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் வரை சுயநினைவில்லாதவனாக இருந்தேன். துப்பறியும்  அதிகாரி ஒருவனுக்குரிய துடிப்பும் வேகமும் பதற்றமும் என் மனத்தில் குடியேறிவிட்டதைப்போல உணர்ந்தேன்.

மூன்று இரவு, இரண்டு பகல்களை அக்குறிப்புகளைப் படிப்பதில் செலவிட்டேன். அந்தத் தாள்களையெல்லாம் குப்பை போல வாரிக் கட்டியிருந்தார்கள். அவற்றை ஒழுங்குபடுத்தவே எனக்கு ஒரு இரவு பிடித்தது. ‘‘ஏவாளின் இரண்டாவது முடிவு”  நாவலின் மூன்று கையெழுத்துப்படிகள் அரைகுறையாக இருந்தன. ஒரே கதைதான். வேறுவேறு விதமாக எழுதிப் பார்த்தற்கான அடையாளமாக இருந்தன அவை. அவரைப்பற்றி மேலைநாட்டுப் பல்கலைக்கழகத்தின் என்சைக்ளோப்பிடியாவில் வெளிவந்த ஒரு குறிப்பின் பிரதி தாள்களின் இடையில் கிடைத்தது. தகவல்களின் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் படைக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர் என்றும் மானுடத்தின் சாரத்துக்கும் எதார்த்தத்துக்கும் உள்ள முரணைச் சுட்டுவதே அவரது படைப்புலகம் என்றும் அக்குறிப்பு சொன்னது. சில ஆண்டுகள் விட்டுவிட்டு எழுதப்பட்ட அவரது நாட்குறிப்புகள் சுவராஸ்யமாக இருந்தன. ஏவாளின் இரண்டாவது முடிவு நாவல் உருவாகிய விதம் பற்றிய பல குறிப்புகள் அவற்றில் இருந்தன. தன் தாயுடனான உரையாடலை அவர் நினைவுகூரும் பகுதி நெகிழ்ச்சியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொரு வரியையும் கவிதை என்றே சொல்லவேண்டும். நாவலிலும் அப்பகுதி வருவதைப் படித்திருக்கிறேன். அந்த இடத்தைப் படிக்கும்போதெல்லாம் நெஞ்சு தழுதழுத்துவிடும். என் அம்மாவும் அதே பகுதியைத்தான் சொன்னாள். என் மனத்தில் திடுமென அழுத்தம் கூடியது. அச்சொல் மிதந்து வந்தது உண்மையாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. கண்களைக் கனநேரம் மூடித் திறந்தேன். ஏறத்தாழ தன் பகுதியில் வசித்த ஏழாயிரத்துச் சொச்ச பெண்களையும் அவர் நேரில் சந்தித்துத் தகவல்கள் திரட்டியிருப்பது தெரிந்தது. அவ்வளவு பேரும் மிதந்து வந்து ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்துவிட்ட சொல்லைப் பற்றியே கூறியிருந்தார்கள்.

அச்சொல் மிதந்து வந்ததாகப் பெண்கள் குறிப்பிட்ட திசையை நோக்கி சிவராஜ்குமார் மாதக்கணக்கில் நடந்து சென்றார். ஏதோ ஒரு உத்வேகம்தான் அவரை அந்தத் திசையில் செலுத்தியிருக்கிறது. சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் முயற்சியைக் கைவிடாமல் கேட்டார். மலையும் காடுமாக இருந்த ஒரு இடத்தில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது ஒரு இசையின் துணுக்கொன்று மிதந்து வந்து மனத்துக்குள் நுழைவதை உணர்ந்து   துணுக்குற்று எழுந்தார். அதிர்ச்சி மீளாத அதே தருணத்தில் தொடர்ச்சியாக சொல்லின் துணுக்குகள் வந்தபடி இருந்தன. தூண்டப்பட்டவர்போல அச்சொற்களைப் பின் தொடர்ந்து செல்ல சிறிது தொலைவில் மூன்று மூதாட்டிகள் மரத்தடியில் சிரித்தபடி தாயம் விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அச்சொற்களை மிதக்கவிட்டவர்கள் அவர்கள்தாம் என்று புரிந்ததும் அவர்களை நெருங்கி வணங்கினான் அவர். ஒரு மூதாட்டி அவரைப் பார்த்து ‘‘யார் நீ?’’ என்று கேட்டாள். தன்னைப்பற்றியும் தன் வரவுக்கான காரணத்தைப்பற்றியும் விளக்கமாகச் சொன்னார் சிவராஜ்குமார். பிறகு ‘‘இப்போது மிதந்து வந்த சொற்களை அனுப்பியது நீங்கள் தானா?’’ என்று கேட்டார். அவர்கள் மர்மப் புன்னகையுடன் தலை யசைத்தார்கள். சொல் மிதந்து வந்து தன்னுடன் கலந்துவிட்டது அவருக்குப் புரிந்ததே தவிர அது என்ன என்று புரியவில்லை. தன் குழப்பத்தை அவர் முன்வைத்ததும் அம்மூதாட்டிகள் அவரைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்துக்கொண்டார்கள். ‘‘அது அப்படித்தான் பேராண்டி’’ என்றாள் ஒருத்தி. ‘‘சில ஆண்டுகளுக்கு முன் பெண்களின் கருவைத் தடுக்கும் சொற்களை அனுப்பியதும் நீங்கள்தானா?’’ என்று பாதி சந்தேகத்துடனும் பாதி உறுதியுடனும் கேட்டார் அவர். அதைச் செய்ததும் தாங்களே என்று பொருள்படும்படி சிரித்தார்கள் அவர்கள். அம்மூதாட்டிகளின் சிரிப்பு ஒரு குழந்தையின் சிரிப்பு போலக் கேட்டதாகவும் சிரிக்கச் சிரிக்கக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலவும் சிவராஜ்மார் தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முந்தைய நாட்குறிப்புகள் என்பதால் படிப்பதில் பக்கங்கள் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கிடந்தன. பிரிக்கும்போதே துண்டுதுண்டாகக் கிழிந்தன. முழு வாக்கியமாக எதையும் படிப்பதற்கு இயலவில்லை. எங்கேயோ ஒரு சொல் படிக்கச் சுவாரஸ்யமாக இருக்கும். தொடர்ந்து தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் சொற்களைக் கூட்டி வாக்கியமாக மாற்றிப் படிப்பதற்குள் இருட்டில் தூணில் மோதிக்கொண்டதைப் போலிருக்கும். தற்செயலாகக் கிடைத்த ஒரு துண்டுத்தாளில் அம்மூதாட்டிகள் துஷ்யந்த மகாராஜாவின் பிரியத்துக்கு ஆளான சகுந்தலைக்குத் தோழியாக இருந்த காட்டுப் பெண்ணின் வழி வந்தவர்கள் என்றும் வயிற்றில் உதித்த கருவைப் பிறக்க அனுமதிக்காமல் மாதக்கணக்கில் கருவறையிலேயே அடைத்துவைக்க சகுந்தலைக்கு மந்திரச் சொல்லைச் சொல்லிக் கொடுத்தவள் அந்தக் காட்டுப்பெண்தான் என்றும் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தேன் நான். அந்த மந்திரச்சொல் காட்டுப்பெண்ணின் தலைமுறை  வழியாகக் காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது. காட்டுப் பெண்கள் தமக்கு விருப்பமில்லாத கருக்களைச் சுமக்க விருப்பமில்லாதபோது அச்சொல்லாலேயே கலைத்தார்கள். அல்லது பேறு காலத்தைத் தாமதப்படுத்தினார்கள். பல காலமாகத் தமக்குள்ளேயே ஆடிப் பார்த்து ஆடிப் பார்த்துச் சலித்துப்போன பெண்கள் ஊரைநோக்கி அச்சொல்லை மிதக்க விட்டார்கள்.

எள்ளளவும் சந்தேகமின்றி அத்தகவலை நம்பினேன் நான். ஏதோ ஒரு குரல் மனத்துக்குள் இது உண்மை என்-று சொன்னபடி இருந்தது. மிதந்த சொல்லுக்கு மாற்றுச்சொல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என உள்ளூர நம்பினேன். அதைக் கண்டுபிடிக்காமல் உண்மையை யாரிடமும் சொல்லக்கூடாது என்று எண்ணியபடி சிவராஜ்குமாரின் தகவல் கட்டுகளைத் திருப்பிக் கொடுத்தேன்.

மறுநாள் காலை வரைபடத்தின் உதவியோடும் நாட்குறிப்புகளின் உதவியோடும் சிவராஜ்குமார் மலையை அடைய உத்தேசமாக எடுத்துக்கொண்ட நாள்கணக்கைக் கணக்கிட்டு அந்த மலைப்பகுதி எதுவாக இருக்கக்கூடும் என்று குறித்துக்கொண்டேன். வீட்டில் வெளியூர்ப் பயணம் என்று சொல்லிவிட்டு ரயிலேறினேன். இரண்டு இரவுகள் தொடர்ந்து பயணம் செய்த பிறகு குறிப்பிட்ட ரயில் நிலையத்தை அடையும் முன்னாலேயே ரயில் நிறுத்தப்பட்டுவிட்டது. எங்கும் புகைமயமாக இருந்தது. கண்கள் எரிந்தன. ஒன்றும் புரிய வில்லை. இறங்கி நான்கு மைல்கள் தொலைவு நடந்துதான் ஊரை அடைந்தேன். காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது. கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. ஒன்றும் புரியாத நிலையில் எதிர்ப்பட்ட ஒருவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன். அன்று அதிகாலை அந்தக் காட்டின் நடுவில் தொழிற்பட்டுக்கொண்டிருந்த அணுஉலைகளின் அடுப்புகள் வெடித்துச் சிதறியதால் காட்டில் தீப்பற்றிக் கொண்டது என்றார் அவர். அவரோடு சேர்ந்து நானும் ஓடினேன். மனம் கொந்தளித்தபடி இருந்தது. ஊரே எரியும் காட்டைப் பார்த்தபடி நின்றிருந்தது. எங்கும் அனல், புகை, கூச்சல். மனசைப் பிசையும் அந்த அழுகுரலைக் காது கொடுத்துக் கேட்கமுடியவில்லை. ஒரு கணம் என் நம்பிக்கைகள் அனைத்தும் சிதறத் தளர்ந்து உட்கார்ந்தேன். ஊரே மயானம்போல விரிந்து கிடந்தது. பதினைந்து நாட்கள் தீயணைப்புப்படை அல்லும் பகலும் தொடர்ந்து செய்த கடும் முயற்சியால் காட்டின் நெருப்பு தணிந்தது. ஆனால் காட்டுக்குள் வசித்த ஆதிவாசிகளில் ஒருவரைக்கூடக் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது. சாம்பல் மேடாக இருந்த இடத்தைப் பார்க்கப் பார்க்க நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.  

தோல்வியின் சுமையுடன் ஊருக்குத் திரும்பும் வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். வண்டி புறப்பட்டதும் என் கண்கள் தளும்பின. எரிந்து சாம்பலான காட்டிலிருந்து சாபம் தீர்க்கும் மாற்றுச் சொல் மிதந்து வராதா என்று ஏக்கத்துடன் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன்.

(கதைசொல்லி - 2002)