ஹுச்சையா
ஒரு நகரத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் இளையவனை ஊரில் இருப்பவர்கள் அனைவருமே முட்டாள் என்னும் பொருளில் ”ஹுச்சையா ஹுச்சையா” என்றே அழைத்துவந்தனர்.
அது
அவனுடைய உண்மையான பெயர் கிடையாது. அவனுடைய பேச்சும் செயல்களும் எப்போதும் முட்டாள்தனமானவையாக
இருப்பதால், அவனுக்கு அப்படி ஒரு பட்டப்பெயர் அமைந்துவிட்டது. அதைப்பற்றி அவன் ஒருபோதும்
கவலைப்பட்டதே இல்லை. அவமானமாக உணர்ந்ததும் இல்லை.
“வாடா ஹுச்சையா, போடா ஹுச்சையா” என்றுதான் அவனுடைய அண்ணன்மார்கள் உட்பட அனைவரும்
அழைத்து உரையாடி வந்தார்கள்.
எந்த
விஷயத்தைக் கேள்விப்பட்டாலும் அதை ஹுசையாவுக்குத் தன் மனத்திலேயே அடக்கிவைத்துக்கொள்ளத்
தெரியாது. உடனேயே அதை நாலு பேரிடம் சொல்லிப் பரப்பினால்தான் அவன் மனம் நிம்மதியடையும்.
அப்படி ஒரு விசித்திரமான குணம். அவனை நம்பி எந்தச் செய்தியையும் ரகசியமாக யாரும் அவனிடம் சொல்லமுடியாது. அடுத்த
நிமிஷமே அதை ஊர்முழுக்க அவன் பரப்பிவிடுவான்.
யாராவது
ஒரு வதந்தியை ஊர்முழுக்கப் பரப்ப நினைத்தால் அவனிடம் தெரிவித்துவிட்டு “ஹுச்சையா, இது
ரொம்ப முக்கியமான செய்தி. ஒருவரிடமும் சொல்லிவிடாதே”
என்று சொன்னால் போதும். அவன் அந்த விஷயத்தை கண்ணில் தென்படுகிற எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே
செல்வான். எல்லாவற்றையும் வரிசைப்படி சொல்லிவிட்டு, கடைசியாக “தயவுசெஞ்சி இந்த விஷயத்தை
யார்கிட்டயும் சொல்லாதீங்க. ரொம்ப ரகசியமான விஷயம்” என்றும் சொல்வான்.
ஹுச்சையாவின்
இரண்டு அண்ணன்மார்களும் திருமணம் செய்துகொண்டார்கள். தந்தை வழியாகக் கிடைத்த சொத்துகளை
இரண்டு பாகங்களாகப் பிரித்து ஆளுக்கொரு பாகத்தை எடுத்துக்கொண்டார்கள்.
“எனக்கு
பாகம் எதுவும் இல்லையா?” என்று கேட்டான் ஹுச்சையா.
”நீ
தனிக்கட்டைதானே? உனக்கு எதற்குடா பாகம்? இருவருடைய வீட்டிலும் மாறிமாறி நீ தங்கி காலத்தைக்
கழிக்கலாம். உனக்கு எங்கே சாப்பிடப் பிடிக்கிறதோ, அங்கே விருப்பம்போல சாப்பிட்டுக்கொள்ளலாம்”
என்று சொல்லிவிட்டனர். ஆனால் ஹுச்சையாவுக்கு அந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. ”இல்லை அண்ணா,
இது ரொம்ப தப்பு. உங்களைப்போல நானும் அப்பாவுக்கு ஒரு பிள்ளைதானே? உங்களுக்குக் கிடைத்ததுபோல
எனக்கும் ஒரு பாகம் கிடைப்பதுதானே நியாயம்” என்று ஆற்றாமையுடன் முறையிட்டான்.
இரண்டு
அண்ணன்மார்களும் கொஞ்ச நேரம் யோசித்தனர். பிறகு அவனிடம் “நீ சொல்வதிலும் நியாயம் இருக்குது
ஹுச்சையா. சரி, உனக்கு என்ன வேண்டும்? கேள்” என்றனர்.
தன்
கோரிக்கைக்கு அவ்வளவு எளிதாக அண்ணன்மார்கள் உடன்படுவார்கள் என ஹுச்சையா எதிர்பார்த்திருக்கவில்லை.
அதனால் சட்டென அவனால் பதில் சொல்லமுடியவில்லை. யோசனையில் மூழ்கியபடி அக்கம்பக்கம் திரும்பிப்
பார்த்தான். அவன் பார்வை தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த காளை மாட்டின் மீது படிந்தது.
உடனே அவன் “எனக்கு இந்தக் காளைமாடு வேண்டும்” என்று சொன்னான்.
அந்தக்
காளைமாடு முதுமைப்பருவத்தை எட்டியிருந்தது. இப்பவோ அப்பவோ என்பதுபோல அதன் நிலைமை இருந்தது.
அதைப்போய்க் கேட்கிறானே இவன் என அவர்கள் நினைத்தார்கள். இப்படி ஒரு பைத்தியக்காரனாக
இருக்கிறானே என்ற எண்ணம் எழுந்தாலும் உள்ளூர மகிழ்ச்சியோடு சிரித்துக்கொண்டே மிகவும்
பெருந்தன்மையோடு நடந்துகொள்வதுபோல “உனக்கு இந்த மாடுதானே வேண்டும்? வா இங்கே, இதோ பிடித்துக்கொள்.
இனிமேல் இந்த மாடு உனக்கு மட்டுமே சொந்தமானது” என்று சொன்னபடி மாட்டை அவனிடம் ஒப்படைத்தனர்.
அதைக்
கேட்டு ஹுச்சையா ஆனந்தத்தில் மிதக்கத் தொடங்கினான். அன்றுமுதல், ஹுச்சையா அண்ணன்மார்கள்
வீட்டில் தங்குவதற்குப் பதிலாக, அந்த மாட்டோடு பின்கட்டிலிருந்த தொழுவத்திலேயே சுதந்திரமாகத்
தங்கத் தொடங்கினான்.
அந்த
வயதான காளைமாட்டை ஹுச்சையா மிகவும் பாசத்தோடு குழந்தையைப் பார்த்துக்கொள்வதுபோல அக்கறையோடு
பார்த்துக்கொண்டான். ஒவ்வொரு நாளும் காலை வேளையில் பச்சைப்பசேலென அடர்த்தியாக புல் முளைத்திருக்கும்
இடங்களுக்கு அதை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றான். மாலை வேளையில் குளிப்பாட்டினான்.
காளைமாடு எப்போது வேண்டுமானாலும் நீர் அருந்துவதற்குத் தோதாக, தொட்டி நிறைய தண்ணீர்
வைத்தான்.
எல்லாவற்றுக்கும்
மேலாக, மனிதர்களிடம் பேசுவதுபோல மிகவும் இயல்பான வகையில் அந்தக் காளைமாட்டிடம் அவன்
பேசத் தொடங்கினான். ஹுச்சையாவின் பேச்சை ரொம்ப கவனத்துடன் கேட்பதுபோல, அந்த மாடும்
அழகாக தலையை அசைத்துக் காட்டும். செவிகளையும் அசைக்கும். அல்லது வாலை ஆட்டும். அதையெல்லாம்
பார்த்ததும் மாடு தன் சொற்களைக் காதுகொடுத்துக் கேட்கிறது என நினைத்து மகிழ்ச்சியடைவான்.
எப்போதாவது அந்த மாட்டுக்கு புல்லோ அல்லது வைக்கோலோ வேண்டுமென்று தோன்றினால், அவனுக்குப்
பக்கத்தில் சென்று நாக்கை நீட்டி அவன் முகத்தையோ கையையோ தொடும். உடனே அவன் மனம் பூரித்துப்
போய்விடும். “ஆகா, என் மாடு எவ்வளவு அழகாக என்னிடம் கொஞ்சுகிறது” என்று உள்ளூர மகிழ்ச்சியடைவான்.
சில
நாட்களுக்குப் பிறகு ஹுச்சையா அந்த மாட்டுடன் பேசவும் தொடங்கிவிட்டான். தான் சொல்ல
நினைப்பதையெல்லாம் யாரோ ஒரு மனிதனிடம் சொல்வதுபோல அந்த மாட்டிடம் சொல்வான். சில சமயங்களில்
அந்த மாடு தலையை ஆட்டும். அல்லது காதுகளை அசைக்கும். அல்லது வாலை அசைக்கும். அதையெல்லாம்
பார்த்ததும் தன் பேச்சைக் கேட்டு மாடு புரிகிற எதிர்வினைகளாக நினைத்து ஆனந்தமடைந்தான்.
மாட்டின்மீது
அவனுடைய பாசம் அதிகரித்ததும், அதற்கு பசவகுமாரன் என்று பெயர் சூட்டி, ’பசவா, பசவா’
என செல்லமாக அழைக்கத் தொடங்கினான். தெருவில் நடக்கும்போது கண்ணில் தென்படுகிறவர்களிடம்
எல்லாம் தன் பசவகுமாரனின் புராணத்தைப் பேசுவதையே தன் முதல் வேலையாக வைத்துக்கொண்டான்.
“என்
பசவா இன்றைக்கு சரியாக தண்ணீர் குடிக்கவில்லை”
“என்
பசவா இன்றைக்கு சரியாக புல் தின்னவில்லை”
”ஐயோ,
இன்று முழுக்க என் பசவா வாலையே அசைக்கவில்லை”
சந்திக்கிறவர்களிடம்
எல்லாம் இப்படி பசவ புராணம் படிப்பதே அவனுடைய வேலையாகிவிட்டது. ஒரு தாய் தன் குழந்தையைப்பற்றி வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே
இருப்பதுபோல, அவன் எப்போதும் தன் மாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.
சில
வாரங்களுக்குப் பிறகு, ஒருநாள் அந்த மாடு உண்மையாகவே வாலைக்கூட அசைக்கமுடியாத நிலையில்
நின்றிருந்தது. அதைப் பார்த்த ஹுச்சையா வருத்தத்தோடு அந்த மாட்டின் அருகில் சென்று
முகத்தைத் தொட்டு தன் பக்கமாகத் திருப்பியபடி “இன்றைக்கு உனக்கு என்னடா ஆச்சு பசவா?
ஏன் வாலைக்கூட அசைக்காமல் இருக்கிறாய்?” என்று கனிவான குரலில் கேட்டான். அடுத்த கணம்
அந்த மாடு தன் வாலை ஒருமுறை அசைத்தது. அதற்கு அடுத்த கணமே நிற்க வலிமையின்றி தடாலென
கீழே விழுந்தது. அந்த மாடு தரையில் கிடந்த கோலம் அவனுக்கு மிகவும் வேதனை அளித்தது.
ஹுச்சையாவின்
அண்ணன்மார்களிடம் ஆளுக்கொரு பசு இருந்தது. அவற்றைப் பராமரித்து வளர்ப்பதை பெரிய சுமையாக
அவர்கள் நினைத்தார்கள். அதனால் அவற்றை அடுத்த ஊரில் இருந்த சந்தைக்கு ஓட்டிச் சென்று
நல்ல விலைக்கு விற்றுவிட்டு வந்தார்கள். அண்ணன்மார்கள் பசுக்களை விற்பதைப் பார்த்ததும்
ஹுச்சையாவுக்கும் தன் மாட்டை விற்றுவிடும் ஆசை வந்தது. அடுத்த நாளே, அதே சந்தைக்கு
அவன் தன் மாட்டை ஓட்டிக்கொண்டு சென்றான். ஆனால் அந்த வயதான மாட்டை வாங்குவதற்கு ஒருவரும்
விரும்பவில்லை. பொழுது சாய்கிற வரைக்கும் அவன் சந்தையிலேயே நின்றிருந்தான். பிறகு ஏமாற்றத்தோடு
தன் மாட்டை ஓட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்பி நடக்கத் தொடங்கினான்.
திட்டமிட்டபடி
தன் மாட்டை விற்கமுடியவில்லையே என நினைத்து ஹுச்சையாவின் மனம் ஏங்கியது. எதைஎதையோ நினைத்துக்
குழம்பியபடி நடந்துகொண்டிருந்தபோது, காற்று பலமாக வீசத் தொடங்கியது.
பாதையோரமாக
ஒரு பெரிய ஆலமரம் நின்றிருந்தது. அது நூறு இருநூறு வருஷம் பழமையான மரம். ஏராளமான கிளைகளோடு
அடர்த்தியானதாகவும் விரிந்தும் நின்றிருந்தது. காற்றின் வீச்சுக்கு ஏற்றபடி அதன் கிளைகள்
’உய்ங் உய்ங்’ என்று ஓசையிட்டபடி அசைந்தன.
மாட்டை
விற்கமுடியவில்லையே என்னும் ஏக்கத்தோடு நடந்துவந்த ஹுச்சையா அந்த சத்தத்தைக் கேட்டான்.
அந்த ஆலமரம் தன்னை அழைத்து எதையோ சொல்வதுபோல அவன் நினைத்துக்கொண்டான்.
அடுத்த
கணமே ”என்ன சொல்றே?” என்று கேட்டபடி மரத்தை நெருங்கிச் சென்றான். காற்றின் விசைக்கு
ஏற்றபடி ஒரு திசையின் பக்கமாக கிளைகள் முறுக்கிய நிலையில் “உய்ங் உய்ங்” என்று சத்தமெழுப்பின.
அந்த சத்தத்தை அவன் கூர்ந்து கவனத்தோடு கேட்டான். பிறகு அதன் பேச்சைப் புரிந்துகொள்ள
முடியாதவன்போல ”என்ன சொல்றே ஆலமரம்? சொல்றத கொஞ்சம் தெளிவா சொல்லு” என்று கேட்டான்.
கிளைகள் அசைந்து மீண்டும் “உய்ங்க் உய்ங்க்” என்று சத்தம் எழுந்தது.
உடனே
அவன் அந்த மரத்தின் பேச்சைப் புரிந்துகொண்டவனைப்போல “ஓ, இந்த மாடு உனக்கு வேணுமா? நீ வாங்கிக்கணும்னு நெனைக்கறியா?” என்று கேட்டான்.
மீண்டும்
உய்ங்க் உய்ங்க் சத்தம்.
“நான்
கூட இந்த மாட்டை விக்கலாம்னுதான் ஓட்டிட்டு வந்தேன். என்னை விலைன்னு கேக்கறியா?”
மீண்டும்
”உய்ங்க் உய்ங்க்” சத்தம்.
”இங்க
பாரு ஆலமரம். ஒரு இருபத்தஞ்சி ரூபா கெடைச்சா போதும்னு நெனைச்சித்தான் நான் மாட்டை சந்தைக்கு
ஓட்டிட்டு வந்தேன். அங்க ஒரு பேச்சு இங்க ஒரு பேச்சுங்கறது என் அகராதியிலயே இல்லை.
இருபத்தஞ்சி ரூபாயை கொடுத்துட்டு நீ இந்த மாட்டை தாராளமா எடுத்துக்கலாம்”
மீண்டும்
”உய்ங்க் உய்ங்க்” சத்தம்.
”ஓ.
நியாயமான விலைதான், சம்மதம், எடுத்துக்கறேன்னு சொல்றியா?”
மீண்டும்
”உய்ங்க் உய்ங்க்” சத்தம்.
”இருபத்தஞ்சி
ரூபா கொடுக்கறதுக்கு உனக்குச் சம்மதம்னா நானும் விக்கறதுக்குத் தயாராக இருக்கேன். இந்தா
மாடு, இப்பவே வச்சிக்கோ” என்று சொல்லிக்கொண்டே தன் மாட்டை ஆலமரத்துக்கு அருகில் ஓட்டிச்
சென்று, அதன் கழுத்திலிருந்த கயிற்றை கீழே தொங்கியிருந்த ஒரு விழுதோடு இணைத்துக் கட்டினான்.
மீண்டும்
”உய்ங்க் உய்ங்க்” சத்தம்.
”என்ன
சொல்ற? பணம் இப்ப இல்லை, நாளைக்கு கொடுக்கறேன்னு சொல்றியா? சரி சரி. உன் இஷ்டம். மாட்டை
பத்திரமா வச்சிக்கோ. பணத்தை நாளைக்கு வந்து வாங்கிக்கறேன்”
மீண்டும்
”உய்ங்க் உய்ங்க்” சத்தம்.
ஹுச்சையா
மாட்டை விற்றுவிட்ட திருப்தியோடு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அன்று
இரவு உணவுக்காக சகோதரர்கள் மூவரும் உட்கார்ந்தார்கள். அப்போது பெரியண்ணன் “உன் மாடு
எங்கே?” என்று ஹுச்சய்யனிடம் கேட்டான்.
“அதை
வித்துட்டேன்” என்றான் ஹுச்சய்யா.
“என்ன,
வித்துட்டியா? என்ன விலைக்கு வித்த?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான் பெரியண்ணன்.
“ஆமாம்.
இருபத்தஞ்சி ரூபாய்க்கு வித்தேன்”
“பரவாயில்லையே.
கிழட்டு மாட்டுக்கு இருபத்தஞ்சி ரூபா கெடைச்சிருக்கே. அதிர்ஷ்டக்காரன்தான் நீ. அது
சரி, பணம் எங்க? அதை எடு”
“பணமா?
இப்ப இல்லை. இன்னும் கைக்கு வரலை. நாளைக்கு கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க”
ஹுச்சய்யாவின்
சொற்களை நம்புவதா, நம்பக்கூடாதா என்றே அவர்களுக்குப் புரியவில்லை. குழப்பத்தோடு ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்டனர். எப்படியோ, பணம் வந்தால் சரி என்று நினைத்தபடி மேற்கொண்டு அதே விஷயத்தைப்பற்றிப்
பேசாமல் வேறு ஏதோ ஒரு விஷயத்தைப்பற்றிப் பேசத் தொடங்கினர்.
அடுத்தநாள்
காலையில் எழுந்ததும் “நான் போய் பணத்தை வாங்கி வரேன்” என்று சகோதரர்களிடம் சொல்லிவிட்டு
ஆலமரத்தை நோக்கி நடந்துசென்றான் ஹுச்சையா.
ஆலமரத்தின்
விழுதுகளைப் பிடித்துத் தொங்கியபடி விளையாடிக்கொண்டிருந்த குரங்குகள் அவனைக் கண்டதும்
விலகி ஓடின. சில கிளைகளில் தாவியேறி உச்சிக்குச் சென்றன. அங்கு அமர்ந்திருந்த காக்கைகள்
பதறி கா கா என்று சத்தமிட்டபடி பறந்தன. அப்போதும் காற்று ஓசையிட்டபடி வேகமாக வீசிக்கொண்டிருந்தது.
தாழ்ந்திருந்த
விழுதோடு அவன் கட்டிவிட்டுச் சென்ற மாடு அந்த இடத்தில் இல்லை. சிறிது தூரம் நடந்துசென்று
சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தான். எங்கும் தென்படவில்லை. பிறகு ஆலமரத்தை நோக்கித் திரும்பி வந்து “சரி சரி,
எனக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடு ஆலமரம். நான் கெளம்பணும். நெறய வேலை இருக்குது”
என்று சொன்னான்.
அப்போது
காற்றின் வேகத்தில் ”உய்ங்க் உய்ங்க்” சத்தம் எழுந்தது.
“என்னது?
இப்ப பணம் இல்லையா? நாளைக்கு தரேன்னு சொல்றியா?”
மீண்டும்
”உய்ங்க் உய்ங்க்” சத்தம்.
”சரி
சரி. நீ சொல்றபடியே நாளைக்கே வரேன். ஆனா கட்டாயமா பணத்தை கொடுத்துடணும். மறுபடியும்
நாளைக்கு வான்னு சொல்லக்கூடாது, புரியுதா?”
மீண்டும்
”உய்ங்க் உய்ங்க்” சத்தம்.
தலையை
அசைத்துக்கொண்டே வீட்டுக்குத் திரும்பி நடந்தான் ஹுச்சையா. அன்று இரவு சாப்பிட உட்கார்ந்த
நேரத்தில் அவனுடைய சகோதரர்கள் பணத்தைப்பற்றி அவனிடம் மீண்டும் கேட்டனர். “நாளைக்கு கண்டிப்பா கொடுக்கறதா சொல்லியிருக்காங்க”
என்றான் ஹுச்சய்யா.
“அப்படியா?
நாளைக்கே வாங்கிட்டு வா. பரவாயில்லை. யாருகிட்ட மாட்டை வித்த? அதைச் சொல்லு” என்று
கேட்டான்.
“நம்ம
ஊருக்கு வர வழியில ஆத்தோரமா ஒரு ஆலமரம் இருக்குது, தெரியுமா? அந்த மரத்துக்குத்தான்
வித்தேன்”
ஹுச்சையாவின்
பேச்சைக் கேட்டு அவர்கள் தம் நெற்றியில் அடித்துக்கொண்டார்கள். “கடவுள் உனக்கு எப்பதான்
நல்ல புத்தியைக் கொடுப்பானோ தெரியலை” என்று சத்தம் போட்டார்கள்.
“மரம்
எப்படிடா பணம் கொடுக்கும்?”
“அந்த
மரம் ரொம்ப பாவம். நாளைக்கு கண்டிப்பா கொடுக்கறேன்னு சொல்லிச்சி. நானும் அதும் மேல
ரொம்ப இரக்கப்பட்டு சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன்”
எப்போது
வேண்டுமானாலும் செத்து விழுந்துவிடக்கூடிய நிலையில்தான் அந்த மாடு இருந்தது. ஏதோ நல்ல
காலம். விற்றுவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு,
வீட்டிலிருந்து மாட்டை ஓட்டிக்கொண்டு சென்றான். ஒருவேளை இங்கேயே இருந்து செத்து விழுந்திருந்தால்,
அதை எடுத்து புதைப்பதற்கு ஏகப்பட்ட பணம் செலவாகியிருக்கும். அதெல்லாம் இப்போது மிச்சம்”
என நினைத்துக்கொண்டு சகோதரர்கள் இருவரும் அமைதியாகச் சென்றார்கள்.
அடுத்த
நாள் காலையில் எழுந்ததும் ஹுச்சையா மீண்டும் அந்த ஆலமரத்தை நோக்கிச் சென்றான். “என்ன,
இன்னைக்காவது பணத்தைக் கொடுத்து கணக்கை முடிச்சிக்கறியா?” என்று கேட்டான். “அதுதான்
ரெண்டு பேருக்கும் நல்லது” என்று சொன்னான்.
ஏதோ
தயங்கித்தயங்கிப் பேசுவதுபோல, மரம் நிதானமான ஓசையில் ”உய்ங்க் உய்ங்க்” என சத்தம் எழுப்பியது.
அதைக்
கேட்டு உதட்டைப் பிதுக்கி தன் அதிருப்தியையும் கசப்பையும் வெளிப்படுத்தினான். “இப்படி
நாளைக்கு நாளைக்குன்னு நாள் கடத்தற விஷயமெல்லாம் இனிமேல எங்கிட்ட நடக்காது. இன்னைக்கு
ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாவணும். ஒழுங்கா பணத்தைக் கொடு. இல்லைன்னா ஒவ்வொரு ரூபாய்க்கும்
ஒரு வெட்டுன்னு இதோ இந்தக் கோடாலியால உன்னை வெட்டி துண்டு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.
யாருக்கும் பயப்படமாட்டேன். புரிஞ்சிக்கோ” என்று கோபமாகச் சொன்னான்.
ஆலமரம்
எதையோ தயக்கத்தோடு சொல்வதுபோல மெதுவாக வீசிய காற்றில் ”உய்ங்க் உய்ங்க்” என சத்தமிட்டு
முணுமுணுத்தது.
“ம்ஹூம்.
இனிமேலும் இந்த சமாதானம் சொல்ற கதையெல்லாம் என்கிட்ட நடக்காது. பணத்தைக் கொடுப்பியா
இல்லையா அதுமட்டும்தான் பேச்சு. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுங்கற கதைதான்.
ஆலமரத்திடமிருந்து
எந்தப் பதிலும் இல்லை. ”உய்ங்க் உய்ங்க்” என்ற
சத்தம் மட்டும் வந்துகொண்டிருந்தது.
ஆலமரத்தின்
அமைதி ஹுச்சையாவை பொறுமை இழக்கவைத்தது. கோபத்தோடு கோடாலியை எடுத்து தாழ்வாக இருந்த மரக்கிளையை
ஓங்கி ஓங்கி வெட்டினான். இருநூறாண்டு பழைமையான மரம் என்பதால் பத்து பதினைந்து வெட்டிலேயே
அந்தக் கிளை சடசடவென முறிந்து விழுந்தது. கிளை முரிந்து பள்ளம் விழுந்த இடத்தில் ஒரு
பொந்து இருப்பதை அப்போதுதான் ஹுச்சையா பார்த்தான். அந்தப் பொந்துக்குள் ஒரு துணிமூட்டை
காணப்பட்டது. அதைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்துபோன ஹுச்சையா அந்தத் துணிப்பொதியை எடுத்துப்
பிரித்துப் பார்த்தான். அதற்குள் ஏராளமான தங்க நகைகளும் வைர ஆபரணங்களும் இருந்தன. அவற்றைப்
பார்த்து ஆனந்தம் கொண்டான் ஹுச்சையா. எல்லாவற்றையும் மீண்டும் துணிப்பொதிக்குள் வைத்து
மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு வேகவேகமாக வீட்டுக்குத் திரும்பினான்.
அவனால்
தன் ஆனந்தத்தை சகோதரர்களிடம் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. அவனுடைய நாக்கு பரபரவென்று
இருந்தது. அவர்களை அழைத்து, தன்னிடமிருந்த துணிப்பொதியைப் பிரித்துக் காட்டினான். மூட்டைக்குள்
தகதகவென மின்னும் ஆபரணங்களைப் பார்த்து பேச்சிழந்தவர்களாக நின்றுவிட்டார்கள் அவர்கள்.
ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு தன்னுணர்வுக்குத் திரும்பிய அவர்கள் “எங்கே கிடைத்தது
இது? எப்படி கிடைத்தது?” என்று ஹுச்சையாவிடம் கேட்டார்கள்.
“நம்ம
மாட்டை ஒரு மரத்துக்கு இருபத்தஞ்சி ரூபாய்க்கு வித்தேன்னு சொன்னேனே, ஞாபகமிருக்குதா?
மாட்டைமட்டும் எடுத்துகிட்டு, பணத்தை கொடுக்காம இன்னைக்கு நாளைக்குன்னு இழுத்தடிச்சிகிட்டே
இருந்தது அந்த மரம். இன்னைக்கு கோடாலியை எடுத்துகிட்டு போய் ஒரே போடா போட்டேன். அதுக்குள்ள
இந்தப் புதையல் கிடைச்சது.”
“அப்படியா?”
என்று வாய் பிளந்தபடி சகோதரர்கள் ஹுச்சையா சொன்ன கதையையெல்லாம் கேட்டார்கள்.
“இன்னும்
கூட அதுக்குள்ள ஏராளமான நகைகள் இருக்குது” என்று உற்சாகமாகச் சொன்னான் ஹுச்சையா.
“இதை
ஏன்டா முதல்லியே சொல்லலை? வாடா வாடா, முதல்ல போய் அதையும் எடுத்துட்டு வருவோம்” என்று
அவசரப்பட்டார்கள் சகோதரர்கள். “வா. வா. வந்து அந்த ஆலமரத்துக்குப் போற வழியைக் காட்டு”
என்றார்கள்.
துணிப்பொதியை
அறைக்குள் வைத்துவிட்டுத் திரும்பி வந்த ஹுச்சையா ஆலமரத்துக்குச் செல்லும் பாதையில்
நடக்கத் தொடங்கினான். அவனைப் பின்தொடர்ந்து அவனுடைய இரண்டு அண்ணன்மார்களும் நடந்து
சென்றார்கள்.
ஆலமரத்தின்
பொந்தில் இன்னும் நகைகள் சிதறிக் கிடந்தன. அவை எல்லாவற்றையும் இரு சகோதரர்களும் எடுத்துச்
சேகரித்து உடுத்தியிருந்த வேட்டியை அவிழ்த்து மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டனர்.
பிறகு எல்லோரும் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குத் திரும்பி நடக்கத் தொடங்கினர். ”இங்க
பாரு ஹுச்சையா, இந்த புதையல் கிடைச்ச விஷயத்தைப் பத்தி யாருகிட்டயும் மூச்சு கூட விடக்கூடாது,
தெரியுதா?” என்று எச்சரித்தனர். ”சரி சரி” என்று தலையை அசைத்துக்கொண்டான் ஹுச்சையா.
மூன்று
பேரும்
வீட்டுக்குத் திரும்பிவரும்போது, அவர்களுக்கு எதிரில்
அந்தக் கிராமத்து பூசாரி வந்தார். மரியாதையின்
பொருட்டு அவர்களுக்கு மூன்று பேரும் வணக்கம் சொன்னார்கள். அந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டு பூசாரியும் பதில்வணக்கம்
சொன்னார். பிறகு “மூனு பேருமா சேர்ந்து எங்கடா போய்ட்டு வரீங்க? மூட்டைக்குள்ள என்னடா எடுத்து வரீங்க?” என்று கேட்டார்.
“மாந்தோட்டத்துக்குப் போயிருந்தோம் பூசாரி. ரெண்டு நாளா அடிச்ச காத்துல நிறைய மாம்பழங்கள்
விழுந்து கிடந்தது. அதையெல்லாம் எடுத்து மூட்டையா கட்டி வீட்டுக்கு போயிட்டிருக்கோம்”
என்றான் பெரியண்ணன்.
பெரியண்ணன்
பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஹுச்சையா குறுக்கிட்டு அவனைத் தடுத்தான். “அண்ணா,
என்ன இது? பூசாரிகிட்ட பொய் சொல்லலாமா? கடவுள் குற்றமில்லையா?” என்று சொன்னான். பிறகு
பூசாரியின் பக்கம் திரும்பி, “மாம்பழம் கிடையாது பூசாரி. எல்லாமே தங்க நகைகள், வைர
நகைகள். வேணும்னா நீங்களே பாருங்க” என்று சட்டென தன் கையிலிருந்த மூட்டையின் முடிச்சை
அவிழ்த்துப் பிரித்துக் காட்டினான். பளபளவென ஜொலிக்கும் நகைகளைப் பார்த்து உறைந்து
நின்றுவிட்டார் பூசாரி.
சில
கணங்களுக்குப் பிறகு தன்னுணர்வுக்குத் திரும்பிய பூசாரி ”அடேய், இதெல்லாம் சாமி சொத்துடா.
சாமி சொத்து பூசாரிகிட்டதான் இருக்கணும். நீங்கள்ளாம் எடுத்துட்டு போகக்கூடாது. எங்கிட்ட
குடுங்க” என்றபடி மடித்த துணிமூட்டையை வெடுக்கென பிடுங்கினார் பூசாரி.
அதைப்
பார்த்த ஹுச்சையாவுக்குக் கோபம் வந்தது. தன்னிடம்
இருப்பதைப் பிடுங்கிக்கொள்ள வருகிறானே என எரிச்சலோடு, கையிலிருந்த கோடாலியை ஓங்கி பூசாரியின்
தலையிலேயே அடித்தான். ஒரே அடியில் அவர் ஐயோ என தரையில் விழுந்துவிட்டார்.
ஹுச்சையாவின்
வேகத்தையும் ஆவேசத்தையும் பார்த்து அண்ணன்மார்கள் உடல்நடுங்க நின்றுவிட்டனர். பிறகு
தரையில் விழுந்துகிடந்த பூசாரியின் உடலை இழுத்துச் சென்று அருகிலிருந்த புதரின் பக்கத்தில்
இருந்த பள்ளத்தில் உருட்டிவிட்டு நகைமூட்டைகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வேகவேகமாக
நடந்தனர்.
அன்று
இரவு ஹுச்சையாவின் சகோதரர்கள் இருவரும் ஹுச்சையா உறங்கச் செல்வதற்காகக் காத்திருந்தனர்.
அதற்குப் பிறகு இருவரும் சத்தமெழுப்பாமல் வீட்டைவிட்டு வெளியே சென்றனர். பூசாரியின்
உடலை உருட்டிவிட்டு வந்த பள்ளத்துக்குள் இறங்கித் தேடி னர். அந்த உடல் அங்கேயே கிடந்தது.
அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த உடலை அங்கிருந்து தூக்கிச் சென்று ரகசியமாக வேறொரு
இடத்தில் குழி தோண்டிப் புதைத்தனர். பிறகு இறந்துபோன ஒரு ஆட்டுக்குட்டியின் உடலை இழுத்துவந்து,
பூசாரியின் உடல் கிடந்த புதரோரப் பள்ளத்தில் வீசிவிட்டு வீட்டுக்குத் திரும்பி உறங்கிவிட்டனர்.
சில
நாட்கள் கழிந்தன. அதற்குள் ஊருக்குள் பூசாரியின் நடமாட்டம் இல்லாததை ஊர்க்காரர்கள்
உணர்ந்தனர். இத்தனை நாட்கள் ஊரைவிட்டு எங்கே
போயிருப்பார் என்று அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.
ஒருநாள்
ஊர்ச்சத்திரத்தில் இரண்டு பேர் பூசாரி தொடர்பாக பேசிக்கொண்டிருந்த சமயத்தில் ஹுச்சையா
அந்த வழியாக நடந்து சென்றான். அவர்களுடைய உரையாடல் அவன் காதில் விழுந்தது. உடனே அவர்களை
நெருங்கிச் சென்று “பூசாரி எங்க போயிருக்காருன்னு
எனக்குத் தெரியும். அவர் இந்த உலகத்திலயே இல்லை. மேல் உலகத்துல இருக்காரு. நான்தான்
அவரை அடிச்சி சாவடிச்சி புதருக்குப் பக்கத்துல பள்ளத்துல உருட்டிவிட்டேன்” என்று சொன்னான்.
அதைக்
கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஊருக்குள் சென்று செய்தியைப் பரப்பினர். அதைக்
கேட்ட சிலர் ஹுச்சையனைத் தேடி வந்து ”பூசாரியை அடிச்சி தூக்கி போட்டுட்டதா பேசிக்கறாங்களா,
உண்மையாடா?” என்று கேட்டார்கள்.
அவன்
கொஞ்சம் கூட பயமில்லாமல் “ஆமாம். நான்தான் அடிச்சி தூக்கி போட்டேன்” என்று பெருமையோடு
நெஞ்சை நிமிர்த்தியபடி சொன்னான். அவர்களுக்கு அப்போதும் நம்பிக்கை வரவில்லை. பார்ப்பதற்கு
பைத்தியக்காரன் போல இருக்கும் இவனா ஒரு கொலை செய்திருப்பான் என்று நினைத்தனர். இருந்தாலும்
உறுதிப்படுத்திக்கொள்வதற்காக “என்னடா சொல்ற? நீயா அடிச்சி போட்ட?” என்று திகைப்போடு
மீண்டும் மீண்டும் ஹுச்சையனிடம் கேட்டனர். அவன் முதலில் சொன்னதையே திருப்பித்திருப்பிச்
சொன்னான். பிறகு “உங்களுக்கு சந்தேகமா இருந்தா இப்பவே என்கூட வாங்க. நானே உங்களை அழைச்சிட்டுப்
போய் அவரை அடிச்சி போட்ட இடத்தைக் காட்டறேன்” என்றான்.
“சரி
வா. காட்டு பார்ப்போம்” என்று அவர்கள் சொன்னதும், அனைவரையும் அழைத்துக்கொண்டு அவன்
ஊருக்கு வெளியே இருந்த புதரை நோக்கிச் சென்றான். புதரை விலக்கி, அங்கிருந்த பள்ளத்தின்
பக்கம் சுட்டிக் காட்டி “அதோ, அங்கதான் பூசாரியைத்
தூக்கி வீசினேன்” என்றான்.
எல்லோரும்
அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் இறங்கிப் பார்த்தனர். அங்கே பூசாரியின் உடல் இல்லை.
அதற்குப் பதிலாக ஓர் ஆட்டின் உடல் கிடந்தது. நாலைந்து நாட்கள் கடந்துபோய்விட்ட காரணத்தால்
அந்த ஆட்டின் உடல் சிதைந்து அழுகிய துர்நாற்றம் வீசியது.
அதைப்
பார்த்ததும் அனைவரும் குழப்பமுற்றனர். “என்னடா இது? ஆட்டைக் காட்டி பூசாரின்னு சொல்ற”
என்று கேட்டார்கள். அவன் மறுபடியும் “இதுதான்
பூசாரியைத் தூக்கி போட்ட இடம். அவர் எப்படி ஆடா மாறினாருன்னு தெரியலையே” என்றான்.
“ஒழுங்கா
சொல்லுடா, உண்மையா நீ பூசாரியை கொன்னு இங்க தூக்கி போட்டியா?”
“ஆமாம்”
“அப்படின்னா,
அவர் உடல் எங்கடா போச்சி? ஆட்டினுடைய உடம்புதான இங்க இருக்குது”
எல்லோரும்
ஹுச்சையாவைத் திட்டத் தொடங்கினர். கடைசியில் “இவன் ஒரு பைத்தியக்காரன். இவன் பேச்ச
நம்பி இவன் பின்னால வந்தது நம்ம தப்பு. இந்தப் பைத்தியக்காரன் நம்மை எல்லாரையுமே பைத்தியக்காரனாக்கிட்டான்”
என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு அனைவரும் ஊரை நோக்கித் திரும்பி நடந்தனர்.
தன்
பேச்சை நம்பாமல் செல்பவர்களுக்கு நம்பிக்கை பிறக்கவேண்டும் என்பதற்காக, மரத்தை வெட்டியபோது
தனக்கு தங்க நகைகளும் வைர நகைகளும் கிடைத்த விவரங்களைச் சொல்லத் தொடங்கினான்.
அதைக்
கேட்டதும் அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. “ஒழுங்கா வாயை மூடிகிட்டு வாடா. கதை சொல்றதுக்கும்
ஒரு அளவு வேணும். கன்னாபின்னான்னு உளறாம வா. இல்லைன்னா, இங்கயே எல்லாரும் அடிச்சி உன்ன
இங்கயே தூக்கிப் போட்டுட்டு போயிடுவோம்” என்று அவனுடைய வாயை அடக்கினர். அவன் சொன்னதை
நம்புவதற்கு ஒருவரும் தயாராக இல்லை.
அதற்குப்
பிறகு ஹுச்சையாவின் பேச்சை அந்த ஊரில் ஒருவரும் நம்பவில்லை. “பாவம் பைத்தியக்காரன், என்னமோ உளறிட்டு கெடக்கறான். போனா போவுது விடு”
என்று சொல்லத் தொடங்கினர்.
(கிழக்கு டுடே - மின்னிதழ் - 14.03.2025)