புத்தாண்டு தொடங்கிய சமயத்திலேயே “இன்னும் ஒரு ஏழெட்டு வாரத்துக்கு உங்கள அடிக்கடி பார்க்கமுடியாது. மொபைல்ல பேசிக்கலாம்” என்று சொன்னார் செல்வம். “ஏதாவது வெளியூர்ப்பயணமா?” என்று கேட்டேன். “எந்த வெளியூரும் கிடையாது. எல்லாமே சொந்த ஊரு பயணம்தான். ஆனால் விட்டுவிட்டு ஆறேழு முறை போய் போய் வரணும்” என்று பதில் சொன்னார்.
எனக்குப் புரியவில்லை. நான் குழப்பத்தோடு அவருடைய முகத்தையே
பார்த்தேன். அதை உணர்ந்துகொண்டதும் அவர் “ஒவ்வொரு வாரமும் ஒரு கல்யாணம் இருக்குது.
எல்லாமே முக்கியமான சொந்தக்காரங்க கல்யாணம். வாரத்துக்கு ஒரு தரம் போய் திரும்பணும்”
என்று சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
அப்போது புறப்பட்டுச் சென்றவரை சரியாக இரு மாதங்கள் கழித்துத்தான்
பார்க்கமுடிந்தது. நலம் குறித்த விசாரிப்புகளுக்குப் பிறகு அருகிலிருந்த ஒரு உணவு விடுதியில்
காப்பி அருந்தியபடி உரையாடத் தொடங்கினோம். திருமணக்கூடங்களில் எதிர்பாராது சந்தித்த
பழைய உறவினர்களைப்பற்றியும் பால்யகாலத் தோழர்களைப்பற்றியும் பகிர்ந்துகொண்ட பழங்கதைகளைப்பற்றியும்
சொல்லி மகிழ்ந்தார். அந்தப் பயணங்களின் மிகப்பெரிய பயனாக அவர் அந்தச் சந்திப்புகளைக்
குறிப்பிட்டார். அப்போது செல்வத்தின் கண்களில் தெரிந்த பிரகாசத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக
இருந்தது.
தொடர்ந்து, “அத்தனை இனிமையான அனுபவங்களுக்கு நடுவுல ஒரு கசப்பான
அனுபவமும் உண்டு” என்று பெருமூச்சுடன் குறிப்பிட்டார் நண்பர். நான் கேள்விக்குறியுடன்
அவர் முகத்தைப் பார்த்தேன். “கல்யாணத்துல ஏதாவது பிரச்சினையா?” என்று அடங்கிய குரலில்
அவரிடம் கேட்டேன்.
“சேச்சே. அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. அது சிறப்பாவே நடந்தது.
வேற ஒரு இடத்துல நான் கண்ணால பார்த்த ஒரு காட்சியிலதான் அந்தக் கசப்பு இருந்தது”
அவராகவே தொடர்ந்து பேசட்டும் என எதுவும் கேட்காமல் அவர் முகத்தையே
பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
“எங்க ஊரு எல்லையில ஒரு பிள்ளையார் கோயில் இருக்குது. கோயிலச்
சுத்தி நிறைய சின்னச்சின்ன வீடுகள் உண்டு. அங்கதான் ரோட்டோரமா பஸ் ஸ்டாப். ஒருநாள்
பக்கத்தூருக்குப் போயிட்டு திரும்பி பஸ்ல வந்து எறங்கி வீட்டுக்கு நடந்துட்டிருந்தேன்.
கோவில் வாசல்ல ஒரு சின்ன வேன் நின்னுட்டிருந்தது. ஒரு ஆர்வத்துல என்ன நடக்குதுன்னு
தெரிஞ்சிக்கிறதுக்காக கொஞ்ச நேரம் அங்க நின்னேன். ஏதோ அன்னதானம். முப்பது நாப்பது பேரு
வரிசையில நின்னு சாப்பாடு வாங்கிட்டிருந்தாங்க. யாரோ ரெண்டு பேரு வண்டியிலேர்ந்து எடுத்து
எடுத்து சர்வ் பண்ணிட்டிருந்தாங்க.”
“சரி, அதுல என்ன கசப்பு?”
“அவசரப்படாதீங்க. சொல்றத கேளுங்க. அந்த நேரத்துல யாரோ ஒரு பெரியவரு
அந்த வேன் பக்கத்துல வந்து கை நீட்டி சாப்பாடு கேட்டாரு. சர்வ் பண்ணிட்டிருந்த ஆளுங்க
அந்த பெரியவரு நிக்கறதையோ கேக்கறதையோ கண்டுக்கவே இல்லை. வரிசையில நிக்கறவங்களுக்குக்
குடுக்கறதுலயே குறியா இருந்தாங்க.”
“சரி”
“நின்ன இடத்துலேர்ந்து ரெண்டு அடி
முன்னால வந்து அந்த ஆளு மறுபடியும் கை நீட்டினதும், வரிசையில நின்னுட்டிருந்த ஒரு ஆளு
சட்டுனு முன்னால போய் அவரைத் தள்ளிவிட்டு கன்னாபின்னான்னு பேச ஆரம்பிச்சிட்டாரு. ஒருத்தரு
ஆரம்பிச்சதும் பத்து பேரு கூட சேர்ந்து போ போன்னு அந்த ஆள விரட்ட ஆரம்பிச்சிட்டாங்க.
அவுங்க விரட்டறது போதாதுன்னு, அந்த வேன்ல வந்த ஆளுங்களும் சேர்ந்து விரட்ட ஆரம்பிச்சிட்டாங்க.”
“அன்னதானம் செய்ய வந்தவங்கதான அவுங்க? அவுங்க ஏன் விரட்டணும்?”
“அதைத்தான் என்னாலயும் புரிஞ்சிக்கமுடியலை. பசின்னு கை நீட்டறவனுக்குக்
கொடுக்க மனசில்லாதவங்க செய்யற அன்னதானத்துக்கு என்ன அர்த்தம்? தட்டிக் கேக்கவும் முடியாம, எடுத்துச் சொல்லவும்
முடியாம என் மேல எனக்கே ரொம்ப கோபமா இருந்திச்சி. சீ என்னடா ஊரு இதுன்னு நெனச்சிட்டு
அந்த இடத்தவிட்டு கெளம்பிட்டேன். அந்த விஷயத்தை
இப்ப நெனச்சாலும் எனக்கு உடம்பு கூசுது. எல்லாருமே அற்பப்பிறவிகளா இருக்கானுங்க.”
அவர் அந்த நிகழ்ச்சியால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்
என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தக் கசப்பிலிருந்து அவரை மீட்டெடுக்கும்
வகையில் படித்த பத்திரிகைச் செய்திகளையும் பழைய நினைவுகளையும் சொன்னேன். அது ஓரளவு
உதவியது. அவர் முகம் கொஞ்சம்கொஞ்சமாகத் தெளிந்து வந்தது.
“இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் காலம்காலமா நடந்துட்டேதான் இருக்குது
செல்வம். பழைய கதைகள்ல அந்த மாதிரியான குறிப்புகள் இருக்குது. நீங்க பார்த்ததைவிடவும்
கடுமையான நிகழ்ச்சிகளை எழுதியிருக்காங்க. அதையெல்லாம் கேட்டா உங்களுக்கு அதிர்ச்சியா
இருக்கும். ஆனா அதையெல்லாம் கேட்டாதான் உங்களுக்குத் தெளிவு கிடைக்கும்”
“அப்படியா, கதைதானே? சொல்லுங்க. எனக்கு எந்த அவசர வேலையும் இல்லை.
கேக்கறதுக்குத் தயாரா இருக்கேன்”
செல்வம் உடனடியாக கதை கேட்கும் மனநிலைக்குத் தயாராவார் என நான்
எதிர்பார்க்கவில்லை. அவரே எழுந்து சென்று இரண்டாவது சுற்று காப்பியை வாங்கிக்கொண்டு
வந்தார். ஒரு வேகத்தில் அப்படிச் சொல்லிவிட்டேனே தவிர, சட்டென எந்தக் கதையும் நினைவுக்கு
வரவில்லை. காப்பியை அருந்தியபடி மனத்துக்குள் யோசித்தபடி இருந்தேன். எதிர்பாராத கணத்தில்
தி.ஜானகிராமன் எழுதிய பரதேசி வந்தான் கதை நினைவுக்கு
வந்தது. நான் அக்கணமே உற்சாகம் கொண்டேன்.
கோப்பையை மேசையில் வைத்துவிட்டு “பரதேசி வந்தான்னு ஒரு கதை இருக்குது.
ரொம்ப முக்கியமான கதை” என்று தொடங்கினேன். அவரும் ஆர்வத்துடன் என் முகத்தைப் பார்த்தார்.
“ஒரு ஊருல ஒரு பெரிய வக்கீல் இருக்காரு. கோர்ட்ல அவருக்கு எதிரா
வாதாட வேற ஒரு ஆளு கிடையாது. அந்த அளவுக்கு பெரிய சாமர்த்தியசாலி. ஊரு பெரிய மனுஷங்க
எல்லாரும் அவருடைய கைக்குள்ள அடக்கம். ஒருநாள் அவருடைய மகனுடைய கல்யாணம் நடக்குது.
பெரிய பந்தல் போட்டு விருந்து நடக்குது. முதல் பந்தியை வக்கீலே நின்னு மேற்பார்வை பார்க்கறாரு.
எரநூறு எரநூத்தி அம்பது பேருக்கு மேல பந்தியில உக்காந்துட்டாங்க. சாப்பாடு பரிமாறியாச்சி.
யார்யாரெல்லா சாப்புடறாங்கன்னு பருந்துமாதிரி வக்கீலுடைய கண்ணு மண்டபத்துக்குள்ள மேயுது.
ஒரு வரிசையில பெரிய மனுஷங்களுக்கு சமமா ஒரு பரதேசி உக்காந்திட்டிருக்கறத பார்க்கறாரு.
அதப் பார்த்ததுமே அவருக்கு கோபம் சுள்ளுனு ஏறிடுச்சி.”
“ஐயோ, அப்புறம்?”
“நேரா அந்தப் பரதேசி முன்னால போய் நின்னு எழுந்திருடான்னு அதட்டறாரு.
அப்பதான் அவன் சோத்துல கையை வச்சி பெசைய ஆரம்பிச்சான். ஐயா, சோத்துல கைய வச்சிட்டேனேன்னு
சொல்றான் அவன். சீ எழுந்திருன்னு அவன் தலைமுடியை எட்டிப் புடிச்சி தூக்கி நிக்கவைச்சி
தரதரன்னு இழுத்துட்டு போய் பந்தலுக்கு வெளியே தள்ளிடறாரு.”
“ஐயோ”
“அந்தப் பரதேசிக்கு ஒருபக்கம் அவமானம். இன்னொருபக்கம் பசி. வயித்துக்குள்ள
எரிஞ்ச நெருப்பு கோபமா மாறுது. இன்னும் ஒரே மாசத்துல இங்க நான் மறுபடியும் வருவேன்.
நீ அழுதுகிட்டே போடற சாப்பாட்ட சாப்புடுவேன்னு சொல்லிட்டு வேகமா போயிடறான்.”
“அப்படின்னா என்ன அர்த்தம்? புரியலையே”
“இந்த வீட்டுல ஒரு சாவு விழப்போவுது. அதனுடைய கருமாதி நடக்கற
சமயத்துல வந்து சாப்புடுவேன்னு அர்த்தம்”
“ஐயையோ, சாபம் கொடுத்த மாதிரியில்ல இருக்குது. அப்புறம் என்ன
ஆச்சு?”
“வக்கீல் அத பெரிசா எடுத்துக்கலை. யாருமே அந்த வார்த்தையை பொருட்படுத்தலை.
விருந்து நடக்குது. அன்னைக்கு ராத்திரி அருமையான பாட்டுக்கச்சேரி. ஊரு சனம் முழுக்க
ஒன்னா உக்காந்து கேக்குது. அத சமயத்துல மாப்பிள்ளை பையன் ஏதோ வயித்துக்கு ஒத்துக்காம
வாந்தி எடுக்கறான். அப்படியே மயக்கம் வந்து சாஞ்சிடறான்”
“அப்புறம்?”
“பெரிய பெரிய டாக்டருங்க எல்லாம் வந்து பார்க்கறாங்க. ஒன்னும்
நடக்கலை. பணம் நஷ்டமானதுதான் மிச்சம். கண்ணே தெறக்காம பத்து பதினஞ்சிநாள் கெடக்கறான்.
அப்படியே உயிரு போயிடுது. அப்பதான் அந்த வக்கீலுக்கு அந்தப் பரதேசி சொன்னது உறைக்குது.
பன்னெண்டாம் நாள் துக்கம் நடக்கற அன்னைக்குத்தான் அவன் சொன்ன ஒரு மாசம் முடியற நேரம்.
சொல்லிவச்ச மாதிரி அந்தப் பரதேசி வாசல்ல வந்து நிக்கறான். வக்கீலுக்கு அழுகையா வருது.
வாய்யா காலபைரவா, நீ சொன்ன வார்த்தை பலிச்சிடுச்சின்னு சொல்றாரு அவரு. ஐயோ, நான் சொன்ன
வார்த்தை இல்லை ஐயா அது. பசி சொன்ன வார்த்தை. இங்க வரதுல எனக்கும் விருப்பமில்லை. ஆனா
நானே சொன்ன வார்த்தையை நான் மீறக்கூடாதுன்னுதான் வந்தேன்னு சொல்றான்.”
செல்வம் கதையைக் கேட்டு உறைந்துவிட்டார். சில கணங்களுக்குப்
பிறகு அவரிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. ”வசதி வந்துட்டா கூடவே மனுஷங்களுக்கு
ஆணவமும் வந்துடும்போல” என்று கசப்புடன் சொன்னார்.
”இதே மாதிரியான இன்னொரு கதையும் ஞாபகத்துக்கு வருது. சொல்லட்டுமா?”
“சொல்லுங்க. சொல்லுங்க”
“இது ஒரு தி.சு.சிவசங்கர்னு ஒரு புது எழுத்தாளர் எழுதுன கதை.
கதையுடைய தலைப்பு லெமன்சாதம்”
“சாதம் சம்பந்தப்பட்ட கதைன்னு சொன்னா கலகமும் சம்பந்தப்பட்ட
கதைன்னு சொல்லுங்க”
“முழுசா கேட்டுட்டு நீங்களே முடிவு செஞ்சிக்குங்க. ஹைஸ்கூல்ல
ஏழாம் கிளாஸ் படிக்கிற பையன் ஒருத்தனுடைய கதை இது. எட்டு வயசு இருக்கும்போது அவுங்க
பெரியம்மா ஒருநாள் அவசரத்துக்கு வீட்டுல எலுமிச்சை சாதம் செய்யறாங்க. அதுலேர்ந்து அவனுக்கு
அந்த சாதத்து ருசி மேல ஒரு பித்து உண்டாயிடுது. எப்ப எப்பன்னு காத்திருந்து சாப்புடுவான்.
அவுங்க ஸ்கூல் பக்கத்துல ஒரு மில்லுக்குச் சொந்தமான ஒரு கேண்டீன் இருக்குது. யாரு வேணும்னாலும்
உள்ள போய் வாங்கி சாப்புடலாம். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஸ்கூல்ல படிக்கிற வசதிக்கார
வீட்டுப் புள்ளைங்க கேண்டீனுக்கு உள்ள போய் காசு கொடுத்து விதவிதமா வாங்கி சாப்புடுவாங்க.
பையன்கிட்ட காசு கிடையாது. அவனுடைய கூட்டாளி ஒருத்தன் அந்தக் கேண்டீன்ல ஒருநாள் சாப்பிட
போறான். அவன் லெமன் சாதம் கேட்டு வாங்கிட்டு வந்து டேபிள்ள உக்காந்து சாப்புடறான். அவன் பக்கத்துல உக்காந்துகிட்டு
இந்த பையன் தன்னுடைய டப்பாவைத் திறந்து கொண்டுவந்ததை சாப்பிடறான். சும்மா ஒரு ருசிக்காக ஒரு கை லெமன் சாதத்தை அள்ளி
இவன் டப்பியில வைக்கிறான் அந்தக் கூட்டாளி. அந்தப் புது ருசி அவன் நாக்குல அப்படியே
ஒட்டிக்குது. அன்னைலேர்ந்து அவனுக்கு அந்த லெமன்சாதம் மேல ஒரு ஆசை உண்டாயிடுது”
“ஆகா, நீங்க சொல்லச்சொல்ல எனக்கே லெமன்சாதம் சாப்புடணும்போல
இருக்குது.”
”கேண்டீன்ல ஒரு ப்ளேட் லெமன் சாதம் முப்பது பைசா. அந்த அளவுக்கு
அவனால காசு பொரட்டமுடியலை. ஆசையை நெஞ்சுக்குள்ளயே வச்சிக்கறான். ஒருநாள் வெளியூருல
யாரோ சொந்தக்காரங்க செத்துட்டாங்கன்னு செய்தி வந்ததால அவுங்க அம்மா ஊருக்கு கெளம்பி
போயிடறாங்க. சாப்பாடு சமைச்சி கட்டிக் கொடுக்க நேரமில்லை, மதியத்துக்கு கேண்டீன்ல சாப்ட்டுக்கோனு
முப்பது காசு கொடுத்து அனுப்பறாங்க. ரொம்ப நாள் ஆசைப்பட்ட லெமன்சாதம் சாப்புடப் போறோம்னு
நெனச்சி நெனச்சி அவனுக்கு மனசு பூரிச்சி போவுது.”
“அப்புறம்?”
“லஞ்ச் டைம்ல கேண்டீனுக்கு ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் போறாங்க.
அவன் டோக்கன் வாங்கிட்டு போய் சர்வர்கிட்ட கொடுக்கறான். சர்வர் ஒரு தட்டுல லெமன்சாதத்தை
அள்ளி வச்சி பக்கத்துல வெங்காய மசாலாவையும் வச்சி கொடுக்கறாரு. அவனும் அதைத் தங்கத்தட்ட
ஏந்திட்டு வரமாதிரி எடுத்துட்டு டேபிளுக்கு வரான். அந்த நேரத்துல யாரோ ஒரு அவசரக்குடுக்கை
குறுக்குல வந்து அவன் மேல மோதிடறான். தட்டு தரையில கீழ விழுந்து சாதம்லாம் சிதறிடுது.”
“அச்சச்சோ”
“கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலை. என்ன செய்யறதுன்னு புரியாம
திகைச்சி போய் நிக்கறான் அந்தப் பையன். அந்த நேரத்துல அந்த சர்வர் கடுகடுனு திட்டறமாதிரி
திட்டிகிட்டே இன்னொரு கிண்ணத்துல லெமன் சாதத்தை வச்சி போடான்னு அதட்டி அனுப்பறான்.”
“நெஞ்சில ஈரமுள்ள மனுஷன்”
“அந்தப் பையனுக்கு ஒன்னும் புரியலை. ஆனாலும் கொடுத்த தட்ட வாங்கிட்டு
வந்து டேபிள்ள உக்காந்துட்டான். அந்த சர்வர் ரெண்டாவது தட்டு லெமன் சாதம் கொடுத்ததை
கல்லாவுல இருந்த முதலாளி பார்த்துட்டான். அவனுக்கு கோபம் சுர்ருனு ஏறிடுது. வேகமா எழுந்துவந்து
வாரிக் கொடுக்கறதுக்கு இது என்ன ங்கொப்பன் ஊட்டு சொத்தான்னு கேட்டுகிட்டே சர்வர் கன்னத்துல
அறைஞ்சி கழுத்த புடிச்சி வெளியே தள்ளிடறான்.”
“அப்புறம்?”
“அதைப் பார்த்தபிறகு அந்தப் பையனால அந்த சாதத்துல கை வைக்கவே
முடியலை. நம்மாலதான இவ்வளவும் ஆச்சின்னு நெனச்சி சங்கடப்படறான். தட்ட அப்படியே வச்சிட்டு
அவனும் அவன் கூட்டாளியும் வெளியே வந்துடறாங்க. கேண்டீனுக்கு வெளியே மரத்தடியில அந்த
சர்வர் அவனை பார்த்து சாப்ட்டியான்னு சைகையால கேக்கறான். அதைப் பார்த்ததும் அவனுக்கு
கண் கலங்குது. சாப்புடலைன்னு சொல்றதுக்கு அவனுக்கு மனசு வரலை. சாப்ட்டேன்னு சொல்றதுக்கு
அடையாளமா தலையை ஆட்டிகிட்டே போயிடறான்.”
“த்ச். என்ன சார் இந்த உலகம்? கொடுக்க மனசு இருக்கறவன்கிட்ட
ஒன்னும் இல்லை. வச்சிருக்கறவனுக்கு கொடுக்க மனசே இல்லை. பசியைப் பத்தி ஒருவனுக்குப் புரியலைன்னா, அவனுக்கு
உலகத்துல எதுதான் சார் புரியும்?”
உதட்டைப் பிதுக்கியபடி துயரத்தோடு பெருமூச்சு வாங்கியபடி த்ச்
என்று நாக்கை சப்புக்கொட்டினார். ”மனுஷன் ஆடம்பரமா இருந்துகிடட்டும். ஆணவத்தோடயும்
இருந்துகிடட்டும். அது அவுங்கவுங்க விருப்பம். ஆனா அடிமனசுல கொஞ்சம் கருணையோடு இருந்தா
நல்லா இருக்கும். அது ஏன் இந்த மக்களுக்குப் புரியமாட்டுது?” என்று கேட்டார். நான்
அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தேன். என்
மெளனத்தைக் கலைப்பதுபோல “அவ்ளோதானா கதைகள்? இன்னும் இருக்குதா?” என்று கேட்டார் செல்வம்.
“கதைகளுக்குப் பஞ்சமே இல்லை செல்வம். ஏராளமா இருக்குது. ஒரு
மனுஷன் தன்னுடைய வறட்டுப்பிடிவாதத்தையும் முரட்டு நம்பிக்கையையும் விடறவரைக்கும் அடுத்தவனுடைய வேதனையை அவனால புரிஞ்சிக்கவே
முடியாது செல்வம். சீட்ட மாத்தி மாத்தி அடுக்கிறமாதிரி எல்லாக் கதைகளும் மாத்தி மாத்தி
அதைத்தான் சொல்லுது”
செல்வம் சில கணங்கள் எதையோ யோசிப்பதுபோல அமைதியாக இருந்தார்.
பிறகு “நீங்க சொல்றதெல்லாம் சரி. இந்த மக்கள் ஏன் இப்படி இருக்கறாங்க? இவுங்க மாறவே
மாட்டாங்களா? இப்படியேதான் ஈவு இரக்கமே இல்லாமதான் இருப்பாங்களா?” என்று சந்தேகத்தோடு
கேட்டார்.
அவருக்குச் சொல்ல பொருத்தமான பதில் எதுவும் என்னிடம் இல்லை.
ஒரு மாதிரி கையறு நிலையில் அவர் தோளைத் தட்டி ஆறுதல் சொன்னேன். “ஒரு சிக்கலான கணக்குக்கு
விடை கண்டுபிடிக்கிற மாதிரி இந்த மனச்சிக்கலுக்கு விடை கண்டுபிடிக்கமுடியாது செல்வம்.
அது ரொம்ப கஷ்டம். நினைக்க நினைக்க அந்தச் சிக்கல் பெரிசாகிட்டே போகுமே தவிர, தீர்மானமான
ஒரு பதிலை நம்மால முன்வைக்கவே முடியாது” என்று சுற்றி வளைத்து ஒரு பதிலைச் சொன்னேன்.
என் பதில் அவருக்கு அவ்வளவு நிறைவை அளிக்கவில்லை. “சரி, உங்க
முன்னால ஒருத்தன் இப்படி கை நீட்டி நின்னான்னா நீங்க என்ன செய்வீங்க?” என்று நேரிடையாகக்
கேட்டார். நான் உடனே தயக்கமில்லாமல் “ரொம்ப சிம்பிள் செல்வம். இருக்கறத சட்டுனு எடுத்துக்
கொடுத்துடுவேன். யோசிக்கவே மாட்டேன். ஒருவேளை இல்லைன்னா, சாரி, அப்பறமா தரேன்னு நயமா
சொல்லிட்டு நடந்துடுவேன்” என்றேன்.
செல்வம் ஒருகணம் யோசித்தார். பிறகு “நல்ல யோசனைதான். யாரு சொல்லிக்கொடுத்தாங்க
இப்படி?” என்று புன்னகைத்தபடி கேட்டார்.
“எங்க அம்மாவைப் பார்த்து நானே கத்துகிட்டேன் செல்வம்.”
“அம்மாவா?”
“ஆமாம் செல்வம். எனக்கு அப்ப ஏழு எட்டு வயசு இருக்கும். அந்தக்
காலத்துல வாசல்ல நின்னு அம்மா பசிக்குது, அன்னம் போடுங்கம்மா தாயேன்னு யாராச்சும் குரல்
கொடுப்பாங்க. யாரா இருந்தாலும் சரி, ஒரு கிண்ணம் சோறாவது கொண்டுபோய் போட்டுட்டு வருவாங்க
அம்மா. ஒரு நாள் காலையில நானும் அம்மாவும் பழைய சோறு சாப்புட உக்காந்தம். அப்ப யாரோ
ஒருத்தர் வாசல்லேர்ந்து அம்மா பசிக்குதுன்னு குரல் கொடுத்தாரு. உடனே அம்மா தன்னுடைய
கிண்ணத்துலேர்ந்து பாதி சோறை எடுத்துட்டு போய் போட்டுட்டு வந்தாங்க. அவுங்க ஏன் அப்படி
செஞ்சாங்கன்னு தெரியாம குழப்பத்தோடு நான் உக்காந்திட்டிருந்தேன். தம்பி, பசின்னு வாசல்ல
வந்து கேக்கறது ஆம்பளையோ பொம்பளையோ கிடையாது. பசி எல்லாருக்கும் பொது. உனக்கு, எனக்கு,
இந்த உலகத்துல இருக்கற எல்லாருக்கு உள்ளயும் இருக்கற ஒன்னுதான் அது. இந்த உயிர் மாதிரி. பசிதான் தெய்வம். அம்மா பசிங்கிறதை யாரோ ஒரு பிச்சைக்காரனுடைய
குரலா பார்க்கக்கூடாது. அது தெய்வத்துடைய குரல்.
தெய்வமே நம்ம வீட்டு வாசல்ல வந்து நின்னு கேக்கும்போது நாம தெய்வத்துக்குக் கொடுக்கணும்னு
சொன்னாங்க. அப்ப இருக்கும்போது கொடுக்கறோம்,
இல்லாத சமயத்துல என்னம்மா செய்யறதுன்னு நான் கேட்டேன். சில நேரங்கள்ல அப்படியும் ஒரு
சந்தர்ப்பம் அமைஞ்சிடும். அதுல ஒன்னும் தப்பு இல்லை. அந்த மாதிரியான நேரத்துல அப்புறமா
வாம்மான்னு நயமா சொல்லி அனுப்பலாம். தெய்வம் அதைப் புரிஞ்சிக்கும்னு சொன்னாங்க. அந்த
வார்த்தைகள் என் நெஞ்சில ஆணியால எழுதனமாதிரி அப்படியே பதிஞ்சிபோச்சி”
செல்வம் எதுவும் பேசவில்லை. புன்னகைத்தபடி தலையை அசைத்துக்கொண்டார்.
(சங்கு
– காலாண்டிதழ், ஏப்ரல் 2025)