Home

Wednesday 30 September 2020

கோ.வேங்கடாசலபதி : கிராம ராஜ்ஜியக் கனவு

 

அரிஜன நல நிதிக்காக நன்கொடை திரட்டும் நோக்கத்துடன் 1934 ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னிந்தியப்பயணத்தை மேற்கொண்டார். கேரளத்தில் கொச்சி, ஆலப்புழை, எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் வழியாக ஒரு வாரத்துக்கும் மேலாக நீண்ட அவருடைய பயணம் இறுதியில் கன்னியாகுமரியை வந்தடைந்தது. அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அவருக்குத் தாராளமாக நன்கொடை வழங்கினர். ஆபரணங்களாகவும் பொருட்களாகவும் கிடைத்தவற்றையெல்லாம் உரையாற்றும் மேடையிலேயே  ஏலத்துக்கு விட்டு, அதன் வழியாகக் கிடைக்கும் தொகையையும் அரிஜன நல நிதியின் கணக்கில் சேர்த்துக்கொண்டார் காந்தியடிகள்.

வல்லபாய் படேல் : வழிகாட்டும் வாழ்க்கை

 

தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட காந்தியடிகள் 09.01.1915 அன்று இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். பம்பாய் துறைமுகத்துக்குத் திரண்டு வந்த மக்கள் அவரை வாழ்த்தி வரவேற்றனர். அன்று அவரைச் சந்தித்த ஆங்கில நாளேடுகளின் நிரூபர்கள் கேட்ட கேள்விகளுக்கு காந்தியடிகள் விடையளித்தார். இனி தன் வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுதும் இந்திய தேசத்துக்காக உழைக்கவிருப்பதாக அவர்களிடம் அறிவித்தார்.

அகமதாபாத்தில் கோச்ரப் என்னும் இடத்தில் அவர் தமக்கென ஓர் ஆசிரமத்தை நிறுவிக்கொண்டார். ஒரு தேசியப்பள்ளியை நிறுவும் திட்டமொன்றும் அவர் மனத்தில் இருந்தது. அதைப்பற்றி பல கூட்டங்களில் அவர் தொடர்ந்து பேசி மக்களின்  கருத்தை அறிய முனைந்தார். அப்போது அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் வல்லபாய் படேல். அவருக்கு காந்தியடிகள்மீது எவ்விதமான ஈர்ப்பும் இல்லாத காலம் அது.

Tuesday 22 September 2020

தரிசனம் - சிறுகதை

 

இந்த ரெண்டு மாசமா நீ செஞ்ச சர்வீச விட இனிமே நீ செய்யப் போற சர்வீஸ்தான் ரொம்ப முக்கியமானது சிவகாமி. நல்லபடியா பாத்துக்கணும், என்ன?” என்றார் டாக்டர். “டியூபெல்லாம் எடுத்துட்டதால இனிமேல் சாப்பாடு, மருந்து எல்லாத்தயும் நேரிடையாவே மேடத்துக்கு கொடுக்கலாம்

டாக்டர் புறப்படும் நேரத்தில் மேடம் படுக்கையில் சாய்ந்து படுத்திருந்தார். அடிக்கடி படபடத்த அவர் கண்களில் சோர்வும் திகைப்பும் கலந்திருந்தன. இரண்டு மாதங்களாக சுயநினைவில்லாமல் படுத்திருந்தவருக்கு நேற்றுதான் விழிப்பு வந்தது. “நான் கெளம்பறேன் மேடம். ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வந்து பாக்கறேன். இடையில தேவைப்பட்டா எனக்கு ஒரு ஃபோன் பண்ண சொல்லுங்க. அர மணி நேரத்துல வந்துருவன்என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.

இரும்புக்கோட்டை - சிறுகதை

 

என்ன கேட்டா செல்லப்பா தன் பேர தானே கெடுத்துக்கறான்னுதான் சொல்வன்என்றார் முத்து. “ஜிம்னாஸ்டிக்ஸ் செல்லப்பா நம்ம சாந்தி சர்க்கஸ்ல ஒரு ஹீரோ மாதிரி. எப்பவும் க்ளைமாக்ஸ்ல அவன் சோலாவா பண்ற ரோல்தான் பவர்ஃபுல். போயும் போயும் ஒரு பொண்ணுக்காக இவ்ளோ தூரத்துக்கு அவன் எறங்கணுமான்னுதான் மனசுல ஒரு சங்கடம்.”

மனசுக்கு புடிச்சவகிட்ட ஒன்ன எனக்கு புடிச்சிருக்குதுன்னு சொல்றது ஒரு தப்பா? பேர் கெடுத்துக்க இதுல என்ன இருக்குது?” என்றார் ராஜாங்கம்.

Monday 14 September 2020

அரங்கசாமி நாயக்கர் : ஒரு போராட்டக்காரரின் விருப்பம் - கட்டுரை

 

01.08.1920 அன்று காந்தியடிகளால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் இரண்டாண்டுகளுக்கும் மேலாக நாடெங்கும் முழுவிசையுடன் நடைபெற்றது. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அந்த அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைத்தண்டனையை ஏற்றுக்கொண்டனர். எதிர்பாராத விதமாக அப்போராட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் செளரிசெளரா என்னும் இடத்தில் 05.02.1922 அன்று வன்முறை வெடித்தது. மூன்று சத்தியாகிரகிகளும் இருபத்திரண்டு காவலர்களும் அன்றைய வன்முறைக்குப் பலியானார்கள். அதையறிந்து வேதனையுற்ற  காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அக்கணமே நிறுத்தினார். பர்தோலி என்னுமிடத்தில் அவர் ஐந்துநாள் உண்ணாவிரதம் இருந்தார். நாட்டில் சிற்சில இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் மெல்ல மெல்ல அடங்கி அமைதி நிலவத் தொடங்கியது. மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் ஆகியோர் தலைமையில் காங்கிரஸிலிருந்து ஒரு பிரிவு விலகிச் சென்றது. காந்தியடிகளும் பிற தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

டி.என்.ஜெகதீசன் : தன்னம்பிக்கையும் சாதனையும் - கட்டுரை


19.09.1921 அன்று காந்தியடிகள் கடலூரில் அகிம்சையைப்பற்றியும் தீண்டாமைப்பழக்கத்தை கைவிடவேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் நீண்ட நேரம் உரையாற்றினார்.  தீண்டாமை என்னும் கறையை அகற்றாமல் நாம் பெறும் சுயராஜ்ஜியத்துக்குப் பொருளே இல்லை என்றும் நாட்டில் ஆறில் ஒரு பங்கு பிரிவினரை தீண்டத்தகாதவர்களாக்கி வைத்துள்ள நம் தேசத்தை நாளை இந்த உலகம் தீண்டத்தகாத இடமாகக் கருதி ஒதுக்கும் நிலை வரக்கூடுமென்றும் குறிப்பிட்டார்.

அரிஜன ஐயங்கார் கிருஷ்ணசாமி : செயல்வீரரின் வெற்றி - கட்டுரை


07.09.1931 முதல் 01.12.1931 வரை இரண்டாவது வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. இந்தியாவுக்கு முழு சுதந்திரம் அளிப்பதைப்பற்றிய விவாதத்துக்கான அழைப்பென ஆங்கில அரசு அறிவித்திருந்தது. காங்கிரஸ் சார்பாக காந்தியடிகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள லண்டனுக்குச் சென்றார். மாநாட்டில் அரசு சார்பான பிரதிநிதிகள் மையமான கருத்திலிருந்து விலகி அரசியலமைப்பின் பிரச்சினைகளை நோக்கி விவாதங்களை திசைதிருப்பினார்கள். அதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளுக்காக நடத்தப்படும் தேர்தலைப்பற்றியதாக பேச்சு மாறியது. சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் போல தாழ்த்தப்பட்டவர்களை சிறுபான்மையினர் என்னும் பிரிவில் அடக்கி விவாதிப்பது சரியல்ல என்று தொடக்கத்திலேயே தன் மறுப்பைத் தெரிவித்தார் காந்தியடிகள். தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்துக்குள்ளேயே இருக்கிற ஒரு பிரிவினர் என்றும் சிறுபான்மையினர் என அவர்களை அடையாளப்படுத்துவது இந்து மதத்தைப் பிளவுபடுத்தும் முயற்சியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.