Home

Monday 27 January 2020

கோ.ராஜகோபால் - நானூறுமைல் நடைப்பயணம் - கட்டுரை


18.11.1928 அன்று காந்தியடிகள் இலங்கையில் உள்ள மாத்தளைக்குச் சென்றிருந்தார். இராட்டையில் நூல் நூற்றல், கதராடை அணிதல், தீண்டாமை ஒழிப்பு, மதுவை விலக்குதல் ஆகியவற்றை ஒட்டி மக்களிடையில் விழிப்புணர்வை உருவாக்கும்பொருட்டும் கதர் நிதி திரட்டும்பொருட்டும் அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். நிகழ்ச்சி நடைபெறவிருந்த மைதானத்தில் உள்ள மேடை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடைக்கு எதிரில் ஐம்பது அறுபது பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் தொடங்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்குச் சரியாக மேடைக்கு வந்துவிட்ட காந்தியடிகள் பொழுதை வீணடிக்க விரும்பாமல் மேடையிலேயே கால்களை மடக்கி உட்கார்ந்தபடி மடிமீது ஒரு பலகையை வைத்துக்கொண்டு ஏதோ எழுதத் தொடங்கிவிட்டார். அரைமணி நேரத்தில் கொஞ்சம்கொஞ்சமாக கூட்டம் சேர மைதானமே மனிதர்களால் நிறைந்துவிட்டது.

ஜே.சி.குமரப்பா - உலகம் வாழ்க - கட்டுரை

09.05.1929 அன்று சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளைச் சந்திப்பதற்காக மேலைநாட்டுமுறையில் உடையணிந்த இளைஞரொருவர் வந்திருந்தார். இங்கிலாந்தில் வணிகநிர்வாகவியல் துறையில் இளநிலைப் பட்டமும் அமெரிக்காவில் பொதுநிதித் துறையில் உயர்நிலைப் பட்டமும் பெற்றவர் அவர். அயல்நாட்டிலேயே செய்யத் தொடங்கிய வேலையைத் துறந்து தாயின் விருப்பத்துக்கிணங்க இந்தியாவுக்குத் திரும்பி மும்பை நிறுவனமொன்றில் தணிக்கையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார் அவர்.

Tuesday 21 January 2020

நிலைகொள்ளாத பறவை - அஞ்சலிக்கட்டுரை



பெங்களூர் நகரத்தின் நடுப்பகுதியில் இருக்கும் சென்ட்ரல் கல்லூரி மிகப்பெரிய புல்வெளியைக் கொண்ட வளாகம். அந்தக் காலத்தில் இராஜாஜி அந்தக் கல்லூரியில்தான் சட்டப்படிப்பு படித்ததாகச் சொல்வார்கள். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இலக்கிய ஆர்வம் கொண்ட நண்பர்கள் பலரும் அங்குதான் சந்தித்து உரையாடுவோம். தமிழவன், கோ.ராஜாராம், காவ்யா சண்முகசுந்தரம், ஜி.கே.ராமசாமி, ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், கிருஷ்ணசாமி, மகாலிங்கம், முகம்மது அலி, கிழார், தேவராசன் என பலரும் வந்து கலந்துகொள்வார்கள். சமீபத்தில் படித்த புத்தகத்தைப்பற்றி யாராவது ஒருவர் முதலில் பேசி முடித்ததும் அதையொட்டி உரையாடல்கள் வளர்ந்துசெல்லும். இதுதான் கூட்டத்தின் நடைமுறை.

தண்ணீர் யாருக்குச் சொந்தம்? - கட்டுரை



ஆங்கிலவழிப் பள்ளியொன்றில் சேர்ந்து கல்வி பெறுவதற்கான தகுதித்தேர்வொன்றை ஆங்கில அரசு நடத்தி, அத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதத்துக்கு ஐந்து ரூபாய் வழங்கி வந்தது.  11 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாணவர்கள் அனைவரும் இத்தேர்வை எழுதத் தகுதியுள்ளவர்கள். கொலாபா மாவட்டத்தைச் சேர்ந்த அலிபாக் என்னும் சிற்றூரில் தொடக்கப்பள்ளியில் படித்த மாணவனொருவன் 1914 ஆம் ஆண்டில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றான். ஆங்கிலப்பள்ளியில் சேர்ந்து உயர்கல்வி கற்கும் கனவுகளைச் சுமந்தபடி மஹாத் ஆங்கிலப்பள்ளியில் சேர்க்கை விண்ணப்பத்தைக் கொடுத்தான். அங்கிருந்த பள்ளி அதிகாரிகள் அம்மாணவர் சாதியடுக்கில் கீழ்நிலையில் உள்ளவன் என்று புரிந்துகொண்டதும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள மறுத்தனர்.

Sunday 12 January 2020

ஆலமரத்தில் ஒரு பறவை - சிறுகதை



உலகம் முழுக்க வாசகர்களைக் கொண்ட லோட்டஸ்ஆங்கில
இணைய இதழில் புத்தக அறிமுகப்பகுதிகளை எழுதிக்கொண்டிருந்த
சந்திரன் என் இளம்பருவத்துத் தோழன். கூர்மையான அறிவாளி.
படிப்பும் எழுத்துமாகவே வாழ்பவன். ஒரு புத்தகத்தின் வலிமையான
வரிகளும் வலிமையற்ற வரிகளும் அவன் கண்களிலிருந்து
ஒருபோதும் தப்பிவிட முடியாது. இலக்குநோக்கி எய்யப்பட்ட
அம்பைப்போல அவன் கண்கள் சரியாக அவற்றில் படிந்து நிற்கும்.
எந்த மனச்சாய்வுமின்றி சுதந்திரமாக கருத்துரைப்பவன் என்று
சின்ன வயசிலேயே பெயரெடுத்திருந்தான். ஆலமரத்தில் ஒரு
பறவைஎன்னும் தலைப்பில் என் தந்தையாரைப்பபற்றி நான்
எழுதி முடித்திருந்த வாழ்க்கை வரலாற்று நூலின் கையெழுத்துப்
பிரதியை அச்சுக்குத் தரும்முன்னால் அவனிடம் ஒருமுறை
காட்டி கருத்துக் கேட்பது மிகமுக்கியம் என்று மீண்டும்
மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தாள் சுலோச்சனா.

அகத்தில் நிகழும் விளையாட்டு - கல்யாண்ஜியின் ”மணல் உள்ள ஆறு”




கல்யாண்ஜியின் கவிதைகள் காட்சித்தன்மை நிறைந்தவை. ஒருவகையில் நம் சங்கக்கவிதைகளை நினைவூட்டுபவை. உயிர்ப்பான அபூர்வமான தருணங்கள் அவை. அக்காட்சிகள் தன்னளவில் தீர்மானமான எந்தப் பொருளையும் சுட்டவில்லை. இனிப்பை விழுங்கிய பிறகு நாக்கைக் குழைத்துக்குழைத்து அசைபோட்டு, இனிப்பின் சுவையில் திளைப்பதுபோல கல்யாண்ஜி தீட்டிவைத்திருக்கும் காட்சிச்சித்திரங்களும் அசைபோட்டு திளைக்கத்தக்கவை. திளைக்கும்தோறும் அக்கவிதைகள் புதுப்புது அனுபவங்களையும் அர்த்தங்களையும் வழங்க்கிக்கொண்டே இருக்கின்றன.

Monday 6 January 2020

திறக்க முடியாத ஜன்னல் - கவிதை




தொடரும் பயணத்தில்
என்னையும் உலகையும் ஜன்னல் தான் இணைக்கிறது
அது கொண்டுவரும் காற்று
அது வழங்கும் காட்சிகள்
அது காட்டும் வானம்
அது சுட்டும் மனித முகங்கள்
ஒவ்வொரு கணத்தையும் உயிரூட்டுகிறது அது
எனினும் இந்தமுறை ஏமாந்து விட்டேன்
என்பது தான் சோகமான விஷயம்

வைத்தியநாத ஐயர் - செயலின் பாதையில் - கட்டுரை




சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக வெளிநாட்டுத் துணிமணிகளைப் புறக்கணித்து இராட்டையில் நூல் நூற்றலையும் கதராடைகள் அணிவதையும் தொடர்ச்சியாக வலியுறுத்தினார் காந்தியடிகள். கதர்ப்பிரச்சாரத்துக்காகவே நாடெங்கும் பயணம் செய்து மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்க முனைந்தார். 1921 ஆம் ஆண்டில் பிரச்சாரப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் சென்னையில் தங்கி கூட்டங்களில் கலந்துகொண்ட பிறகு மதுரைக்குப் புறப்பட்டார்.