சுதேசி இயக்கத்தின்
ஒரு பகுதியாக வெளிநாட்டுத் துணிமணிகளைப் புறக்கணித்து இராட்டையில் நூல் நூற்றலையும்
கதராடைகள் அணிவதையும் தொடர்ச்சியாக வலியுறுத்தினார் காந்தியடிகள். கதர்ப்பிரச்சாரத்துக்காகவே
நாடெங்கும் பயணம் செய்து மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்க முனைந்தார்.
1921 ஆம் ஆண்டில் பிரச்சாரப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் சென்னையில்
தங்கி கூட்டங்களில் கலந்துகொண்ட பிறகு மதுரைக்குப் புறப்பட்டார்.
அன்றைய பயணத்தில்
காந்தியடிகள் குஜராத்திய முறையில் எளிய வேட்டி சட்டையை அணிந்திருந்தார். ரயில்பெட்டியில்
தன்னுடன் பயணம் செய்தவர்களில் சிலரும் வெளியே பார்க்க நேரிட்ட பல விவசாயிகளும் அரைவேட்டியை
அல்லது நீண்ட கோவணத்தை மட்டுமே அணிந்திருந்த கோலத்தைக் கண்டு துயரத்தில் ஆழ்ந்தார்.
அவர்கள் முன்னிலையில் தான் மேலாடை அணிந்திருப்பதே ஆடம்பரமான தோற்றம்
என்று அவருக்குத் தோன்றியது. அன்று இரவு அவர் மதுரையில் தன் நண்பர்
ஒருவருடைய வீட்டில் தங்கினார். இரவெல்லாம் அந்த எளிய விவசாயியின்
தோற்றமே அவர் கண்முன்னால் நிழலாடியபடி இருந்தது. மறுநாள்
22.09.1921. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு இனிமேல் தான் அணியப்போகும் உடைகுறித்து
ஒரு முடிவையெடுத்தார் காந்தியடிகள். இடையில் ஒரு வேட்டியை மட்டும்
அணிந்து காமராஜர் சாலையென இப்போது அடையாளப்படுத்தப்படும் இடத்துக்கு அருகிலிருந்த மைதானத்தில் உரை நிகழ்த்துவதற்காக
அவர் புறப்பட்டார். அன்றைய உரையில் தன் உடைமாற்றத்துக்கான காரணத்தை
எடுத்துரைத்த பிறகு அங்கிருந்த தொண்டர்களிடம் நூல்நூற்கும்படியும் கதராடை அணியும்படியும்
கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலிக்குப் புறப்பட்டார்.
அந்தக் கூட்டத்தில்
காந்திய நிர்மாணப்பணிகளில் ஆழ்ந்த ஈடுபாட்டோடு பணியாற்றிக்கொண்டிருந்த இளம்வழக்கறிஞர்
ஒருவர் பார்வையாளராக நின்றிருந்தார். வழக்கறிஞர்
தொழிலில் கிடைக்கும் வருமானத்தை தனக்கென வைத்துக்கொள்ளாமல் ஏழை எளியவர்களுக்கும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும்
உதவி செய்வதற்காகச் செலவழிப்பதை பழக்கமாகக்
கொண்டவர் அவர். அவர் பெயர் வைத்தியாநாத ஐயர். பள்ளியிறுதித் தேர்விலும் எஃப்.ஏ. தேர்விலும் மாகாணத்திலேயே சிறப்பான இடம் பெற்று தங்கப்பதக்கங்களைப் பரிசாக
அடைந்தவர். சென்னை மாநிலக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த
பிறகு இரண்டாண்டுகள் திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியிலும் மசூலிப்பட்டினத்தில் இந்து உயர்நிலைப்பள்ளியிலும்
ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு வேலையை உதறிவிட்டு சட்டம் படித்து
வழக்கறிஞரானார். குறுகிய காலத்திலேயே சட்ட நுணுக்கங்களில் தேர்ச்சி
பெற்று மதுரை மாவட்டத்தில் எடுத்த வழக்குகளிலெல்லாம் வெற்றியைத் தேடித்தரும் மிகச்சிறந்த
வழக்கறிஞரானார்.
காந்தியடிகளின் சொற்களை கட்டளையாக ஏற்றுக்கொண்ட வைத்தியநாத ஐயர் மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கெல்லாம் சென்று இராட்டையை அறிமுகப்படுத்தி நூல்நூற்கவும் கதர் நெய்யவும் பழக்கப்படுத்தினார். கதர்த்துணிகளை மூட்டையாக தன் தலையில் சுமந்து சென்று விற்பனை செய்தார். கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து மக்களிடையே தேசிய உணர்ச்சியை ஊட்டும் வகையில் பேசினார். கதர் உற்பத்தியில் மதுரை மாவட்டம் முதலிடம் வகிப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவர் வைத்தியநாத ஐயர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை மதுரைக்கு வெள்ளிராட்டினத்தைப் பரிசாகக் கொடுத்து கெளரவித்தது.
ஒருமுறை மதுரைக்கு அருகில் உசிலம்பட்டி என்னும் கிராமத்தில் கதர்ப்பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தியநாத ஐயர் பேசிக்கொண்டிருந்தபோது காவல் துறையினரின் தூண்டுதலால் சிலர் கற்களை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். கல்லடி பட்டு ஐயருக்குக் காயமேற்பட்டது. ரத்தம் சிந்திய நிலையிலும் தன் உரையை நிறுத்தாமல் தொடர்ந்து நிகழ்த்தினார் ஐயர். அவருடைய அஞ்சாமையைக் கண்டு பொதுமக்கள் அந்த உரையை பொறுமையாகக் கேட்கத் தொடங்கினர். கலகம் செய்ய வந்தவர்கள் விலகிச் செல்லவேண்டிய சூழல் உருவானது. மற்றொருமுறை பேரையூர் என்னும் கிராமத்தில் உரைநிகழ்த்திக்கொண்டிருந்தபோது கலகக்காரர்கள் மலவண்டியை இழுத்துவந்து நிறுத்தி கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்தார்கள். சற்றும் மனம் தளராத ஐயர் உரையை நிறுத்தாமல் தொடர்ந்தார். மூன்று நாட்கள் அந்தக் கிராமத்திலேயே தங்கி வீடுவீடாகச் சென்று ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி அவர்களிடம் தேசிய உணர்ச்சியை ஊட்டி மனம் மாறச்செய்தார். அதுவரை
தனிமைப்பட்டிருந்த
கலகக்காரர்கள்
இறுதியில் ஐயரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டு கதரியக்கத்தில் ஈடுபட்டனர். மலவண்டிய இழுத்துவர ஏற்பாடு செய்த ஜமீன்தார் மனம் மாறி கதராடை அணிந்து ஐயருக்கு நண்பரானார்.
கதரியக்க வேலைகளில் ஈடுபட்டிருந்த சமயத்திலேயே கிராமத்தில் உள்ள இளைஞர்களைத் திரட்டி கிராம நிர்மாணப் பணிகளுக்கான பயிற்சிகளை வழங்கினார். மக்களிடையில் பேசி கல்வி பற்றி விழிப்புணர்வை உருவாக்குதல், பிள்ளைகளை அழைத்துவந்து பள்ளியில் சேர்த்தல், அவர்கள் படிப்பதற்கான வசதிகளைச் செய்துகொடுத்தல், சுகாதார முறைகளைக் கற்பித்து அவற்றைப் பின்பற்றும்படி செய்தல், மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தீண்டாமை மற்றும் மூடப்பழக்கவழக்கங்களைக் கைவிடும்படி வேண்டுதல், கிராமத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கிராமப் பஞ்சாயத்துகளை உருவாக்குதல் என அனைத்துவகையிலும் சேவையாற்றும் வகையில் இளைஞர்களை உருவாக்கினார். இவற்றை நிறைவேற்றுவதற்கான முழுச்செலவையும் ஐயரே ஏற்றுக்கொண்டார். அரிஜன சேவாசங்கமும் சமூக சீர்திருத்த இயக்கங்களும் உருவாவதற்கு முன்பே தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற வேலைகளைச் செய்து தீண்டாமை ஒழிப்புக்காக உழைத்தார் வைத்தியநாத
ஐயர். அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய அவருடைய உழைப்பின் காரணமாக மதுரையில் தேசிய இயக்கம் வலிமை பெற்றது.
1930ஆம் ஆண்டில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்துக்காக காந்தியடிகள் தண்டியாத்திரை மேற்கொண்டு கைதானார். அதேபோன்ற போராட்டத்துக்காக இராஜாஜியின் தலைமையில் திருச்சியில் தி.சே.செள.ராஜன் வீட்டிலிருந்து நூறுபேர் கொண்ட குழுவொன்று வேதாரண்யம் கடற்கரையை நோக்கிச் சென்றது. அந்த நூறு பேரில் முப்பத்திரண்டு பேர் மதுரை மாவட்டத்திலிருந்து ஐயரால் அனுப்பிவைக்கப்பட்டவர்கள். வேதாரண்யத்தில் இராஜாஜியும் தொண்டர்களும் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டார்கள். உடனே வேதாரண்யத்தில் 144 தடைச்சட்டம் அறிவிக்கப்பட்டது. மக்கள் எழுச்சி குறைவுறாதவகையில் சட்டத்தை மீறி பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து உரையாற்றினார் ஐயர். திடீரென கூட்டத்திடையில் புகுந்த காவலர்கள் அனைவரையும் புளியவிளாரால் தாக்கி கலைந்துபோகச் செய்தனர். மேடையில் ஏறி சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்த ஐயரையும் தாக்கினர். எல்லா அடிகளையும் தாங்கிக்கொண்டு அசையாமல் நின்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார் ஐயர். ஆத்திரமடைந்த காவலர்கள் அவரை கீழே தள்ளி அடித்தனர். அவருடைய சட்டையையும் வேட்டியையும் கிழித்தனர். கீழே விழுந்தவரை அடித்தபடியே கையைப் பற்றி ஒரு பர்லாங் தொலைவில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடம்வரைக்கும் இழுத்துச் சென்றனர். அப்போதும் ‘காந்திக்கு ஜே’ ‘வந்தே மாதரம்’ என முழங்கியபடியே இருந்தார் ஐயர். அவருக்கு ஆறுமாத காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. காந்தி இர்வின் ஒப்பந்தத்துக்குப் பிறகே அவர் விடுதலை பெற்றார்.
1932இல் சட்டமறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. அந்நியநாட்டுப் பொருட்களை புறக்கணிக்கும்படி கேட்டுக்கொள்ளும் முழக்கங்களுடன் நாடெங்கும் ஊர்வலங்கள் நிகழ்ந்தன. கள்ளுண்ணாமையை வலியுறுத்தி கள்ளுக்கடைகள் முன்னால் மறியல் செய்தனர். மேலூருக்கு அருகில் உள்ள வெள்ளலூர் என்னும் கிராமத்துக்கு பிரச்சாரக்கூட்டத்தில்
உரையாடுவதற்காகச்
சென்றார் ஐயர். ஊர்க்கூட்டத்தில் பேச விரும்புகிறவர்கள் மேல்சட்டையைக் கழற்றிவிட்டு இடுப்பில் துண்டணிந்துகொண்டு பேசவேண்டும் என்னும் விசித்திரமான கட்டுப்பாடு அந்த ஊரில் இருந்தது. அதைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கலைந்து துண்டைமட்டும் அணிந்துகொண்டு கள்ளுண்ணாமையை வலியுறுத்தி உரையாற்றி முடித்தார் ஐயர். அவர் உரை அனைவரையும் மனம்மாற வைத்தது. ஊரே புகழ்கிற ஒரு வழக்கறிஞர் தம் கட்டுப்பாட்டுக்கு இணங்கி வெறும் துண்டுடன் மேடையில் தோன்றி உரையாற்றும் கோலத்தைக் கண்டதும் அவருடைய உண்மை உணர்ச்சியைப் புரிந்துகொண்ட கிராமத்து மக்கள் அக்கணமே அந்த ஊரில் யாருமே கள் அருந்தக்கூடாது என்றொரு விதி செய்து அதை அறிவித்தார்கள். அன்று முதல் யாரும் அக்கிராமத்தில் மது அருந்தவில்லை. அது மட்டுமன்றி, அவர்கள் அனைவரும் தேசிய இயக்கத்தில் இணைந்து, ஐயருக்கு ஆதரவாக தொண்டாற்ற முனைந்தனர்.
காந்தியடிகளின் அறிவுப்புக்கிணங்க காங்கிரஸ்
தலைவர்கள் அனைவரும் நாடெங்கும் ஆலயப்பிரவேசப் பிரச்சாரங்களில் ஈடுபடத் தொடங்கினர். டாக்டர் இராஜேந்திர பிரசாத், இராஜாஜி, தேவதாஸ் காந்தி, ஜி.ராமச்சந்திரன், தக்கர்பாபா போன்றோர் தமிழகமெங்கும் ஆலயப்பிரவேசப் பிரச்சாரக்கூட்டங்களை நிகழ்த்தினர். தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, காஞ்சிபுரம், திருநெல்வேலி, சிதம்பரம், பழனி, திருசெந்தூர், காஞ்சிரம்பட்டி என பல இடங்களில் ஹரிஜன மாநாடுகள் நடைபெற்றன. அவை அனைத்திலும் ஆலயப்பிரவேசத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாடுகள் வழியாகவும் பொதுக்கூட்டங்கள் வழியாகவும் பொதுமக்களிடையே ஆலயப்பிரவேசத்துக்கு ஆதரவான மனநிலை உருவாக்கப்பட்டது. இதே தருணத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் 12.11.1935 அன்று சமஸ்தானத்தின் எல்லைக்குட்பட்ட எல்லா இந்து ஆலயங்களும் தாழ்த்தப்பட்டோர்களுக்குத் திறந்துவிடப்படுவதாக அறிவித்தது. தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற வேலைகளில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த ஐயர் தமிழ்நாட்டிலும் இதுபோன்றதொரு ஆலயப்பிரவேசம் உடனடியாக நிகழவேண்டுமென விரும்பினார்.
தேசியத் தலைவர்கள் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறினாலும் கூட தாழ்த்தப்பட்டோரிடம் காணப்பட்ட தயக்கமும் அச்சமும் முற்றிலுமாக விலகவில்லை.
ஒருவேளை அவர்களுக்காகத் திறந்துவிடப்பட்ட திருவிதாங்கூர் சமஸ்தான கோவில்களுக்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை அழைத்துச் சென்று வழிபடவைத்தால், அவர்கள் மனத்திலிருக்கும் அச்சம் விலகக்கூடும் என ஐயர் நம்பினார். உடனடியாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து எண்ணற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொண்டர்கள் வரவழைக்கப்பட்டனர். இரண்டு பேருந்துகளில் அவர்களனைவரையும் அழைத்துக்கொண்டு நாகர்கோவிலுக்குப் புறப்பட்டார் ஐயர். கோவிலில் சமஸ்தானத்தைச் சேர்ந்த திவானே நேரில் வந்து அனைவரையும் வரவேற்று தெய்வ தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தார். மிகுந்த பக்தி பரவசத்தோடு அவர்கள் அனைவரும் தெய்வத்தை வழிபட்டனர். நாகர்கோவிலை அடுத்து சுசீந்திரம், கன்னியாகுமரி, ஜனார்த்தன ஈஸ்வரர் ஆலயம், சங்கராச்சாரி ஆலயம் போன்ற முக்கிய கோவில்களுக்கும் சென்று வழிபட்டு மகிழ்ந்தனர். திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமியைத் தரிசிக்கச் சென்றிருந்த்போது திருவிதாங்கூர் மகாராஜாவே நேரில் வந்திருந்து அனைவரையும் சந்தித்து உரையாடினார். இருவார காலம் சமஸ்தானம் முழுவதும் சுற்றிப் பார்த்து எல்லா கோவில்களிலும் வழிபட்ட பிறகு மதுரைக்குத் திரும்பினார்கள்.
யாத்திரைக்குப் பிறகு ஐயர் எதிர்பார்த்தபடி ஆலயநுழைவு தொடர்பாக தாழ்த்தப்பட்டோரின் படிந்திருந்த அச்சம் அறவே நீங்கியிருந்தது. ஆனால் சனாதனிகளின் எதிர்ப்பு எதிர்கொள்ளமுடியாத வகையில் வலுத்திருந்தது. அதனால் மீண்டும் மீண்டும் ஐயரும் காந்தியடிகளின் தொண்டர்களும் ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவாக அல்லும் பகலும் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினர். அக்கூட்டங்களில் தேசிய அளவிலும் மாகாண அளவிலும் ஹரிஜன சேவா சங்கத்தில் பணியாற்றிய பல தலைவர்களும் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஈ.வெ.ரா.வும் தொடர்ச்சியாக கலந்துகொண்டு உரையாற்றினர். 1937ஆம் ஆண்டில் காங்கிரஸைச் சேர்ந்த சுப்பராமன் மதுரை நகராட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு ஆலயப்பிரவேசத்துக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே காலகட்டத்தில் சென்னை மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் சட்டசபையில் ஆலயப்பிரவேசத்தை ஆதரித்து பேசினார்கள். 1939 ஆம் ஆண்டில் மதுரையிலேயே ஆலயப்பிரவேச மாநாடு நடைபெற்றது. மதுரை மக்கள் மீனாட்சியம்மன் கோவிலை தாழ்த்தப்பட்டோருக்குத் திறந்துவிட்டு இந்து மதத்திலுள்ள களங்கத்தைப் போக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் இராஜாஜி. அவரைத் தொடர்ந்து இராமேஸ்வரி நேரு, தி.சே.செள.ராஜன், சுப்பராமன், வைத்தியநாத ஐயர் என பலரும் உணர்ச்சிகரமாக உரையாற்றி ஆலயப்பிரவேசத்துக்கு பொதுமக்களின் ஆதரவை வேண்டினர்.
08.07.1939 அன்று காலை ஐயரும் தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளரான கோபால்சாமியும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கக்கன், முத்து, பூவலிங்கம், சின்னையா, ஆவலம்பட்டி முருகானந்தம் ஆகிய ஐந்து ஐவரோடும் நாடார் வகுப்பைச் சேர்ந்த சண்முகநாடார் என்பவரோடும் ஒரு காரில் சென்று மீனாட்சியம்மன் கோவில் வாசலில் இறங்கினர். முதலில் பொற்றாமரைக்குளத்தில் கைகால்களைச் சுத்தம் செய்துகொண்டு கருவறைக்குச் சென்று மீனாட்சியம்மனை கண்குளிர வழிபட்டனர். அதைத் தொடர்ந்து கோவிலில் மற்ற இடங்களுக்கும் சென்று வழிபட்ட பிறகு தெற்கு கோபுரவாசல் வழியாக வெளியே வந்தனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நிகழ்ச்சி மிக அமைதியான முறையில் நடைபெற்றது. ஆலயப்பிரவேசம் நடந்ததாக ஐயர் பொதுமக்களுக்கு அறிவித்தார். காந்தியடிகள், இராஜாஜி போன்ற தலைவர்களுக்கு ஐயர் தந்தி மூலம் அச்செய்தியைத் தெரிவித்தார்.
ஆலயப்பிரவேச நிகழ்ச்சியைக் கேட்டு கொதித்தெழுந்தார் நடேச ஐயர். வைத்தியநாத ஐயரையும் அவருடைய குடும்பத்தாரையும் சாதிவிலக்கம் செய்துவிட்டதாக உடனே அறிவித்தார். தனக்கு ஆதரவான சில சனாதனிகளோடு கோவிலுக்குச் சென்ற நடேச ஐயர் ஒரு பொற்குடத்தை முன்வைத்து ஏராளமான சடங்காச்சாரங்களைச் செய்து முடித்து, அதை தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றார். பிறகு மீனாட்சியம்மன் கோவிலைவிட்டு வெளியேறி தன் வீட்டில் குடியேறியிருப்பதாக அறிவித்தார். ஏராளமானோர் நடேச ஐயரின் வீட்டுக்குச் சென்று வழிபடத் தொடங்கினர். கோவிலில் பூஜை செய்துவந்தவர்களை பூஜை செய்யவிடாமல் தடுத்தனர் சனாதனிகள். தம் சொல்லுக்குக் கட்டுப்பட மறுத்தால் சாதிவிலக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தனர். அதனால் அவர்கள் கோவிலிலிருந்து வெளியேறி நடேச ஐயரின் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். கோவிலில் மாலை நேரத்துப் பூஜை தடைபட்டுவிடுமோ என்று நினைத்த வைத்தியநாத ஐயர் பல இடங்களில் அலைந்து திரிந்து மதுரைக்கு அருகிலிருந்த அருப்புக்கோட்டையிலிருந்து பூஜை செய்பவரை வரவழைத்து வழிபாடு தொடர்ந்து நடைபெறும்படி செய்தார். துரதிருஷ்டவசமாக மறுநாள் மாரடைப்பின் காரணமாக அவர் மறைந்துவிட, அருப்புக்கோட்டைக்குச் சென்று வேறொருவரை பூஜை செய்வதற்காக அழைத்துவந்தார் ஐயர். மீனாட்சியம்மன் கோவிலில் ஆலயப்பிரவேசம் நடந்ததற்கு மறுநாளில் கூடலழகர் கோவிலில் ஆலயப்பிரவேசம் நடைபெற்றது.
ஐயர் மீது சனாதனிகள் கடும்கோபம் கொண்டனர். கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்று கோவிலில் களங்கம் ஏற்படுத்திவிட்டதாக வைத்தியநாத ஐயர் மீது நடேச ஐயர் சனாதனிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஐயர் மீதும் அவரோடு கோவிலுக்குள் சென்ற தாழ்த்தப்பட்டவர்கள்மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு ஐயரும் மற்றவர்களும் வந்தபோது, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் கூட்டம் நிறைந்திருந்தது. அனைவரும் ஐயருக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். அப்போது சென்னை மாகாண பிரதமராக இருந்த இராஜாஜி, கவர்னரின் சிறப்பு அனுமதியோடு அவசரப் பிரகடனமொன்றின் வழியாக ஆலயப்பிரவேசத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார். உடனே மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த அவசரப்பிரகடனத்தின் நகலை நீதிபதியிடம் அளித்தார். அதன்படி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, அது உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. பிறகு, அந்தப் பிரகடனம் சட்டசபையில் சட்டமாக இயற்றப்பட்டு தாழ்த்தப்பட்டோர் அனைவரும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சென்று கடவுளை வழிபட வழிவகை செய்யப்பட்டது.
மதுரையில் நிகழ்த்தியதைப்போன்றே ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயப்பிரவேசத்தையும் வைத்தியநாத ஐயரே நிகழ்த்திவைத்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் வைத்தியநாத ஐயர் தம்மோடு தாழ்த்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த சில
நண்பர்களோடு ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்து சேர்ந்தார். அதை அறிந்த பிராமணர்களும் பிராமண விதவைகளும் ஐயரை உள்ளே நுழையவிடாமல் வாசலில் படுத்துக்கொண்டார்கள். இதற்கிடையில் வேடிக்கை பார்க்க கூட்டம் திரண்டுவிட்டது. பாதுகாப்புக்காக காவலர்களும் வந்துவிட்டனர். காவலர்களுக்கு அரசு சட்டத்தை நினைவூட்டிய ஐயர் தமக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். காவலர்கள் வாசலை மறித்து படுத்திருந்த அனைவரையும் விலக்கி வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். ஒரு இன்ஸ்பெக்டர் ஐயரையும் தாழ்த்தப்பட்டோரையும் பாதுகாப்பாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். கோபம் கொண்ட சனாதனிகள் அவர்களை கல்லால் அடித்தார்கள். ஐயருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் அடிபட்டு காயமேற்பட்டது. இன்ஸ்பெக்டர் கோபம் கொண்டார். ஆனால் பொறுமை காக்கும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் ஐயர். வன்முறையைத் தூண்டுவதற்காகவே அவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள் எனவும், அதற்கான வாய்ப்புகளை நாமே அவர்களுக்கு வழங்கிவிடக்கூடாது எனவும் எடுத்துரைத்துப் புரியவைத்தார். இப்படி ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சிகள் நடக்க, அவற்றுக்கிடையில் ஆலயப்பிரவேசங்கள் வெற்றிகரமான முறையில் நடைபெற்றுவந்தன. திருச்சி, பழனி, தஞ்சாவூர், தென்காசி, திருப்பரங்குன்றம், காஞ்சிபுரம், கோவை, சேலம், காரைக்குடி என எண்ணற்ற ஆலயங்கள் 1939 ஆம் ஆண்டு முடிவடைதற்குள் தாழ்த்தப்பட்டோர்களுக்காக திறந்துவிடப்பட்டன.
தீண்டாமை ஒழிப்பிலும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறையோடும் துடிப்போடும் செயல்பட்டவர் வைத்தியநாத ஐயர். இவ்வுலகத்தில் தான் பிறந்ததே
தாழ்த்தப்பட்டோருக்கு
சேவை செய்யவே என்பதுதான் அவர் எண்ணம். தன்னை ஒரு படித்த வழக்கறிஞராகவோ அல்லது பிராமணராகவோ ஒருநாளும் அவர் கருதியதே இல்லை. தாழ்த்தப்பட்டோர்களை முன்னேற்றுவதற்காகவும் அவர்களின் குறைகளைக் களைந்தெறியவும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதனாகவே தன்னைக் கருதினார். அந்த எண்ணமே வேகத்தோடும் உற்சாகத்தோடும் செயல்படுவதற்குத் தேவையான
ஊக்கத்தை அளித்தது.
சுத்தம் செய்வதற்காக சேரிப்பகுதிகளுக்குச் செல்லும் ஒவ்வொருமுறையும் ஐயர் அங்கிருக்கும் குழந்தைகளை வைகைக்கரைக்கு அழைத்துவந்து குளிக்கச் செய்து, புதிய கதராடைகளைக் கொடுத்து அணியச் செய்வது வழக்கம். பிறகு அவர்களுக்கு பிரார்த்தனை வகுப்புகள் நடத்தப்படும். அவ்விதமாக செயல்பட்டுவரும் வேளையில் ஒருநாள் அக்குழந்தைகளுக்கு கல்வியறிவைப் புகட்டவேண்டுமென ஐயர் விரும்பினார். அவர்களுக்காக ஒரு பள்ளியைத் தொடங்க நினைத்தார். ஓர் இடத்தை வாங்கி கட்டடத்தைக் கட்டியெழுப்பும் அளவுக்கு அவருக்கு வசதியுமில்லை. அதனால் வைகையாற்றின் வடகரையிலிருந்த ஒரு மண்டபத்திலேயே பள்ளிக்கூடத்தைத் தொடங்குவதென அவர் முடிவெடுத்தார். அதன்படி காலையிலேயே குழந்தைகளை அழைத்துவந்து ஆற்றில் குளிக்கச் செய்து, கதராடைகளை அணியச் செய்து அம்மண்டபத்துக்கு அழைத்துவருவார். அங்கே அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதுதவிர, அவர்களுக்கு புத்தகங்களும் நோட்டுகளும் அளிக்கப்பட்டது. அம்மண்டபமே பள்ளியாகவும் விடுதியாகவும் விளங்கியது. காந்தி நினைவு நிதியின் தலைவராக விளங்கிய க.அருணாசலம் போன்றவர்கள் இப்பள்ளியின் ஆசிரியர்களாக விளங்கினார்கள். பள்ளியை நடத்துவதற்காகவும் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவும் பணம் தேவைப்பட்டது. அவருடைய வருமானத்தை மீறி செலவு அதிகமானது. அதனால் மாலை வேளைகளில் தம்முடன் சில ஊழியர்களை அழைத்துக்கொண்டு ஒரு சாக்குப்பையுடன் கடைவீதிகளுக்குச் செல்வார். பையை ஏந்தி “தாழ்த்தப்பட்டோர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறுவார். அரிசிக்கடைகளில் அரிசி கொடுப்பார்கள். காய்கறிக்கடைகளில் காய்கறிகளும் மளிகைக்கடைகளில் சில மளிகைப்பொருட்களும் கிடைக்கும். அன்றைய தினம் குழந்தைகளின் உணவுத்தேவைக்கு அது போதுமானதாக இருக்கும். மறுநாள் நகரத்தின் வேறொரு பகுதியில் அலைந்து திரிந்து பொருட்களைச் சேகரிப்பார்கள். எல்லாச் சிரமங்களையும் கடந்து
பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதில் அவர் அக்கறையோடு இருந்தார்.
தி.சே.செள.ராஜனைத் தொடர்ந்து 1935 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட வைத்தியநாத ஐயர் ஏறத்தாழ இருபதாண்டுகள் அப்பதவியில் நீடித்தார். தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளின் கல்விக்காக பல திட்டங்களை வகுத்துச் செயலாற்றினார். கல்வியறிவைப் பெறுவதன் வழியாகவே சமுதாயத்தில் சகலதுறைகளிலும் தாழ்த்தப்பட்டோர் முன்னேறமுடியும் என அவர் ஆழமாக நம்பினார். அதனால் தமிழகமெங்கும் தாழ்த்தப்பட்டோர்களுக்கென ஏராளமான பள்ளிகளையும் விடுதிகளையும் உருவாக்கினார். இப்பள்ளிகள் அனைத்தும் சேவா சங்கத்தினரால் நிர்வகிக்கப்பட்டன.
1940ஆம் ஆண்டில் நேரு கைது செய்யப்பட்டு காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டார், நேரு கைதைக் கண்டித்து மதுரையில் கடையடைப்பு நடைபெற்றது. அப்போது முஸ்லிம்களின் கடைகள் தாக்கப்பட்டதாக ஒரு வதந்தி நகரெங்கும் பரவியது. இந்துக்கள் ஒருபுறமும் முஸ்லிம்கள் மறுபுறமும் திரண்டெழத் தொடங்கினர்.
மேலமாசி வீதியும் தெற்குமாசி வீதியும் ஆளுக்கொரு புறத்தில் ஆயுதங்களுடன் நின்று வசைமழை பொழிந்தனர். அச்சமயத்தில் ஐயர் நீதிமன்றத்தில் இருந்தார். செய்தியை அறிந்ததுமே அந்த இடத்துக்கு ஓடோடி வந்தார். தமது உயிரைக்கூட பொருட்படுத்தாமல் காரைவிட்டு இறங்கி தோளில் போட்டிருந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு “உங்களில் யாராவது ஒருவர் மற்றொருவரைத் தாக்கவேண்டுமென நினைத்தால் முதலில் என்னைத் தாக்கி வீழ்த்திவிட்டு பிறகு உங்களுக்குள் மோதிக்கொள்ளுங்கள்” என்று உரத்த குரலில் முழங்கிவிட்டு இரு கும்பல்களுக்கு நடுவில் கைகூப்பியவண்ணம் தரையில் படுத்துவிட்டார். அதைப் பார்த்து இரு சாராரும் திகைத்து என்ன செய்வதெனப் புரியாமல் குழம்பி விழித்தனர். மறுகணமே அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
பொதுவாழ்வில் ஈடுபட்ட பிறகு ஐயர் சிறைசெல்ல அஞ்சியதே இல்லை. ஒவ்வொருமுறையும் ஆறுமாத தண்டனையோ அல்லது இரண்டாண்டு தண்டனையோ பெற்று சிறைக்குச் சென்றார்.
தன் மனைவியையும் பிள்ளைகளையும் பொதுவாழ்வில் ஈடுபடவைத்தார். அவர் மனைவி தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைபுகுந்தவர். அவர் பிள்ளைகளும் பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைத்தண்டனை அனுபவித்தனர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரை திலகர் சதுக்கத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஐயர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். காவலர்கள் நிகழ்த்திய தடியடிக்கும் அஞ்சாமல் மக்கள் கலையாமல் நின்று ஐயரின் உரையைக் கேட்டனர். அதைக் கண்டு வெகுண்ட காவலர்கள் துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தினர். அதில் பலர் உயிர்துறந்தனர். எண்ணற்றோர் காயமுற்றனர். ஐயர் கைது செய்யப்பட்டு கசையடிக்குப் பெயர்போன அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார். ஐயர் சிறையிலிருந்தபோது ஐயரின் மூத்தமகன் இறந்துவிட்டார். அச்செய்தி அவருக்கு தாமதமாகவே கிடைத்தது. பரோலில் வெளிவந்த ஐயர் மகனுக்குரிய சடங்குகளைச் செய்துமுடித்தார். பரோல் காலத்திலேயே தன் உதவிவழக்கறிஞர்கள் துணையோடு தன் மகளுக்குப் பொருத்தமான மணமகனைத் தேர்ந்தெடுத்து
திருமணவேலையையும்
முடித்துவிட்டு
சிறைக்குத் திரும்பினார்.
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் என்பது ஐயரின் மாபெரும் இலட்சியமாக இருந்தது. உணவைப்பற்றியோ ஓய்வைப்பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் அதற்காகவே அரும்பாடுபட்டார் அவர். கிராமந்தோறும் சென்று தீண்டாமை ஒழிப்பின் அவசியம் பற்றி பிரச்சாரம் செய்தார். பணக்காரர்களையும் பெரிய ஜமீந்தார்களையும் அணுகி தீண்டாமை ஒழிப்பைப்பற்றிப் பேசி புரியவைத்து, அவர்களையும் தன் பிரச்சாரப்பணியில் இணைத்துக்கொண்டார். அவர்களிடம் நிலங்களை நன்கொடையாகப் பெற்று தாழ்த்தப்பட்டோருக்கு பிரித்துக்கொடுத்தார். 1946 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றிபெற்று சட்டசபைக்குச் சென்றார். சட்டமசோதாக்கள் விவாதத்துக்கு வைக்கப்படும்போது வரிவரியாக அவற்றை அலசி குழப்பற்ற முறையில் தெளிவான கருத்துகளைச் சொல்லும் விதமாக அவற்றைத் திருத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். ஓய்வில்லாத உழைப்பின் காரணமாக ஐயர் தன் அறுபத்தைந்தாவது வயதில் காலமானார். அவருடைய வாழ்க்கை வரலாறு சந்திரபிரபு என்பவரால் எழுதப்பட்டு தமிழ்நாடு ஹரிஜனசேவா சங்கம் சார்பாக வெளியிடப்பட்டது.
தீண்டாமை என்பது
மக்களிடையே ஒரு பெரிய பிரிவினையை உருவாக்குகிறது. ஒரு பிரிவினரை விலக்கி
அல்லது வஞ்சித்து, மற்றொரு பிரிவினர் மட்டுமே எல்லா உரிமைகளையும்
வசப்படுத்தி வைத்திருப்பது மிகவும் அவமானத்துக்குரியது. கீழ்மையற்றவன்
என்றோ அல்லது மேன்மையானவன் என்றோ தன்னை முன்வைத்துக்கொள்ள விழையும் ஒவ்வொருவரும் தீண்டாமையுணர்வை
கைவிடவேண்டியது மிகமிக முக்கியம். ஒரு பிரிவினரின் வாழும் உரிமையை
மற்றொரு பிரிவினரே மறுப்பதைப்போன்ற மனிதாபிமானமற்ற செயல் வேறொன்றுமில்லை. தாழ்த்தப்பட்டோர் ஆலயப்பிரவேசம் என்பது நாம் அனைவரும் ஒன்றே என்னும் பார்வையை
உணர்வதற்கான ஒரு வழி. அது ஓர் எளிய தொடக்கம் மட்டுமே.
அத்தொடக்கத்தை உருவாக்கும் செயலை நோக்கி தன் தொண்டர்களைச் செலுத்தியவர்
காந்தியடிகள். அவர் சொற்களால் உத்வேகம் கொண்டு நாடுமுழுதும் அரும்பணியாற்றியவர்களின்
பெயர்வரிசை மிகவும் நீண்டது. அவ்வரிசையில் மிகமுக்கியமான ஒரு
பெயர் வைத்தியநாத ஐயர்.