Home

Sunday 25 June 2023

பச்சை நிறத்தில் ஒரு பறவை - கட்டுரை

 

     எங்கள் அலுவலக வளாகத்தையொட்டி இருக்கும் பள்ளி விளையாட்டு மைதானம் அளவில் மிகப்பெரியது.  ஒருபக்கம் சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடுவார்கள். இன்னொரு பக்கத்தில் பெண்களின் பந்துவிளையாட்டு நடக்கும். வேறொரு மூலையில் வலையைக் கட்டி சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிப் பழகுவார்கள். இன்னொரு மூலையில் உடற்பயிற்சி ஆசிரியரின் வழிகாட்டலின்படி சிறுவர்கள் கூடைப்பந்து பழகுவார்கள். எந்த நேரத்தில் போய் நின்றாலும் ஏதாவது ஒரு கூட்டம் ஆடியபடியே இருக்கும்.  மனச்சுமைகளையெல்லாம் மறந்துவிட்டு சிறிதுநேரம் வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம். சிறிய பிள்ளைகள்  ஆடுவதையும் ஓடுவதையும் துள்ளுவதையும் கைகொட்டிச் சிரிப்பதையும் பார்த்தபடி நின்றிருந்தாலேயே போதும். ஒரு மலரைப்போல மனம் தானாக மலரத் தொடங்கிவிடும். ஒரு கணமாவது நம் குழந்தைப்பருவம் நினைவைக் கடந்துபோகும்.

அருவி என்னும் அதிசயம் - கட்டுரை

 

     கர்நாடகத்தின் வற்றாத முக்கியமான நதிகளில் ஒன்று ஷராவதி. மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள தீர்த்தஹள்ளிக்கு அருகே உள்ள அம்புதீர்த்தத்தில் பிறந்து ஏறத்தாழ நு¡ற்றிஇருபத்தைந்து கிலோமிட்டர் தொலைவு ஷிமோகா, வடகன்னடப் பகுதிகளில் ஓடிப் பாய்ந்து ஹொன்னாவர் என்னும் இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையைப் பாதிக்கும் மேல் நிறைவேற்றி வைக்கிற மின்உற்பத்தி நிலையம் இந்த நதியின் குறுக்கில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் இன்றும் நினைத்துப் பெருமை பாராட்டுகிற பொறியியலாளரான விஸ்வேஸ்வரய்யாவின் மேற்பார்வையில் கட்டப்பட்ட லிங்கனமக்கி அணைக்கட்டும் இந்த நதியின் போக்கைத் தடுத்துக் கட்டப்பட்டது. (அவருடைய பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்  இன்னொரு அணைக்கட்டு காவிரியின் குறுக்கில் கட்டப்பட்ட கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு.) இந்தியாவிலேயே மிக உயரமான ஜோக் அருவி ஷராவதி நதியின் கொடையாகும். ஏறத்தாழ எண்ணு¡று அடிகள் உயரத்திலிருந்து இந்த அருவி பொங்கி வழிவதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

Monday 19 June 2023

மானுட வாழ்வின் ஆழத்தைத் தேடிச் செல்லும் பெரும்பயணம் - தீராநதி நேர்காணல்

 சந்திப்பு : அருள்செல்வன்

 

சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் நாடகம் என பல்வேறு வகைமைகளில் எழுதி சாதனை புரிந்திருப்பவர் பாவண்ணன். மொழிபெயர்ப்புக்குரிய சாகித்ய அகாதெமி விருது, கனடாவின் இலக்கியத் தோட்ட இயல் விருது உள்ளிட்ட பல பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றுள்ள அவருடன் ஓர் உரையாடல்.

 

உங்களை சிறுகதைத் தலைமுறையைச் சேர்ந்தவர் என்று இலக்கியவாதிகள் பேசுகிறார்கள் அப்படிப்பட்ட நீங்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு நிறைய கட்டுரைகள் எழுத ஆரம்பித்தீர்கள்.குறிப்பாக நீங்கள் திண்ணை இணைய இதழில் எழுதிய உலக மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் பற்றிய  கட்டுரைகள் புகழ்பெற்றவை.அது தந்த எதிர்வினைகள் பற்றிக் கூற முடியுமா?

Sunday 18 June 2023

ம.பொ.சிவஞானம் : நிலமிசை நீடு வாழ்பவர்

 

தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடு தழுவிய நீண்டதொரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் காந்தியடிகள். அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலமாக ஆந்திரப்பிரதேசத்தில்  பயணம் செய்து பல்வேறு கிராமங்களில் மக்களைச் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக உரையாற்றினார். அங்கிருந்து புறப்பட்டு 20.12.1933 அன்று சென்னைக்கு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்கான இயக்கத்தில் காந்தியடிகள் ஈடுபடுவதை விரும்பாதவர்கள் ‘காந்தி திரும்பிப் போ’ என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டி தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆயினும் பெரும்பாலானோர் அவர் வருகையை மனமார வரவேற்றனர். அன்று ஒரே நாளில் அவர் ஆறு கூட்டங்களில் கலந்துகொண்டார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தீண்டாமை ஒழிப்பின் தேவையைப்பற்றியும் கதரியக்கம் வளரவேண்டிய தேவையைப்பற்றியும் விரிவாகப் பேசினார்.

இயல் விருது ஏற்புரை

  

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்த மாபெரும் இலக்கிய விழாவுக்கு வந்திருக்கும் இலக்கிய ஆளுமைகளே. பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் விருதாளர்களே. உலகின் பலவேறு பகுதிகளிலிருந்து வந்து அரங்கில் நிறைந்திருக்கும் நல்லிதயங்களே. அன்பார்ந்த நண்பர்களே. நம் அனைவரையும் இந்த இடத்தில் ஒன்றிணைத்து இந்த மாபெரும் நிகழ்ச்சியின் சூத்திரதாரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளியான அ.முத்துலிங்கம் அவர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

Monday 12 June 2023

மழைமரம் - கட்டுரை

  

     பெங்களூருக்கு நான் குடிவந்த நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்த மரங்கள். ஒரு மாபெரும் தோப்புக்கு இடையே உருவான ஊராக இதை நினைத்துக்கொள்வேன். மரங்கள் இல்லாத தெருவே இருக்கமுடியாது. எத்தனை கடுமையான கோடையாக இருப்பினும் அதன் கடுமையை சற்றும் உணராத வகையில் இம்மரங்கள் காப்பாற்றின. கோடைச் சூரியனின்  ஒளிக்கற்றைகள் பூமியை நேரிடையாக தொட்டுவிடாதபடி எல்லா மரங்களும் தம் கைகளால் முதலில் அவற்றை வாங்கிக்கொள்ளும்.  அவற்றின் விரல்களிலிருந்து கசிகிற வெப்பம்மட்டுமே மெதுவாக நிலத்தைத் தொடும். அந்த வெப்பம் உடலுக்கு இதமாக இருக்கும். வியர்வையைக் கசியவைக்காத வெப்பம். அதெல்லாம் ஒரு காலம். இந்த ஊரை ஒரு பெருநகரமாக மாற்றிவிடத் துடித்த மானுடரின் அவசரம் இன்று எல்லாவற்றையும் சின்னாபின்னமாகச் சிதைத்துவிட்டது. குளிர்காலத்தில்கூட குளிர்ச்சியற்ற காற்று வீசும் நிலை ஏற்பட்டுவிட்டது.

மலைமீது கட்டிய வீடு - கட்டுரை

 

     இரண்டு ஊர்களுக்கிடையே தொலைபேசிக் கேபிள் புதைக்கும்  வேலையில் ஈடுபட்டிருந்தபோது அங்கங்கே வெட்டவெளிப் பிரதேசங்களில் கூடாரமடித்துத் தங்கியிருந்த இளமை நாட்களின் அனுபவங்கள்  ஒருபோதும் மறக்கமுடியாதவை. ஒருமுறை ஹொஸஹள்ளி என்னும் இடத்தில் நாங்கள் முகாமிட்டிருந்தோம். நானும் நண்பர்களும் சகஊழியர்களுமாக ஏழு கூடாரங்கள். சுற்றுவட்டாரத்தில் ஏழெட்டு மைல் நீளத்துக்கு ஒரே வெட்டவெளி. சில இடங்களில் மட்டும் விளைந்தும் விளையாததுமாக சோளவயல்வெளிகள். மழையைமட்டுமே நம்பிப் பயிரிடப்பட்டவை.

Sunday 4 June 2023

கனிந்து நழுவும் சூரியன் - கட்டுரை

 

     நேருக்குநேர் பார்க்கும்போது அளவற்ற ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் வழங்குகிற சூரியஅஸ்தமனக் காட்சி ஒருசில கணங்களில் சொற்களால் வடிக்கவியலாத தவிப்பையும் வலியையும் வழங்குகிற ஒன்றாகவும் மாறிவிடும் புதிரை என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ள இயல்வதில்லை. புரிந்துகொள்ள முயற்சிசெய்யும் ஒவ்வொரு தருணத்திலும் சிக்கலான ஒரு கணக்கின் விடைக்குரிய இறுதி வரிகளை எழுதத் தெரியாத சிறுவனுக்குரிய தத்தளிப்பையும் வருத்தத்தையுமே இயற்கை வழங்குகிறது.

சிவப்புக்கல் மோதிரம் - சிறுகதை

 

”இன்னைக்கு என்ன, பூமழையா? இப்பிடி ஏராளமா பூ உழுந்து கெடக்குது”

இரண்டுசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாசல் கதவைத் திறக்கிறவரைக்கும் தமிழிடம் எப்படி பேச்சைத் தொடங்குவது என்னும் குழப்பத்தில் தத்தளித்தபடி இருந்தேன். ஆனால் சுற்றுச்சுவர் கம்பிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் சுவருக்கும் வீட்டு வாசலுக்கும் நடுவில் நின்றிருக்கும் மகிழமரத்தடியில் விழுந்து கிடக்கும் பழைய பூக்களின் குவியல்மீது உதிர்ந்திருக்கும் புதிய பூக்களைப் பார்த்ததும் உரையாடலுக்கு ஒரு தொடக்கம் கிடைத்துவிட்ட வேகத்தில்தான் அப்படிக் கேட்டேன்.   ஆனால் மறுகணமே அந்த வேகம் வடிந்துவிட்டது.