தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடு தழுவிய நீண்டதொரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் காந்தியடிகள். அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலமாக ஆந்திரப்பிரதேசத்தில் பயணம் செய்து பல்வேறு கிராமங்களில் மக்களைச் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக உரையாற்றினார். அங்கிருந்து புறப்பட்டு 20.12.1933 அன்று சென்னைக்கு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்கான இயக்கத்தில் காந்தியடிகள் ஈடுபடுவதை விரும்பாதவர்கள் ‘காந்தி திரும்பிப் போ’ என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டி தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆயினும் பெரும்பாலானோர் அவர் வருகையை மனமார வரவேற்றனர். அன்று ஒரே நாளில் அவர் ஆறு கூட்டங்களில் கலந்துகொண்டார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தீண்டாமை ஒழிப்பின் தேவையைப்பற்றியும் கதரியக்கம் வளரவேண்டிய தேவையைப்பற்றியும் விரிவாகப் பேசினார்.
ஒரு சொற்பொழிவில் ‘அடியோடு தீண்டாமையை நாம் ஒழிக்காவிட்டால் நாம் அனைவரும் அழிந்துபோவோம், இந்து மதமும் அழிந்துபோகும். நாம் அதற்குக் காரணமாகவும் இருப்போம். ஆண்டவன் அருளால் இச்செய்தி உங்கள் உள்ளத்தில் பதிந்தால், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாட்டை நீங்கள் மறந்துவிடுவீர்கள்’ என்று குறிப்பிட்டார்.
அடுத்த நாள்
21.12.1933 அன்று தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் குடியிருப்புப்பகுதிகளுக்குச் சென்று
அவர்களிடையில் உரையாற்றினார். வடசென்னையில் தாழ்த்தப்பட்டோருக்குத் திறந்துவிடப்பட்ட
சுந்தரவிநாயகர் ஆலயத்துக்கும் தம்மைத் தேடிவரும் நோயாளிகளுக்கு இலவசமாகவே மருத்துவ
உதவி செய்துவந்த பாலகுருசாமி என்ற துறவி நடத்திவந்த மடத்துக்கும் சென்றார். திரும்பும்
வழியில் இராயபுரத்தில் ராபின்சன் பூங்கா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில்
கலந்துகொண்டு உரையாற்றினார். வடசென்னை அரிசன சேவா சங்கத்தின் செயலாளர் என்ற முறையில்
அந்த வரவேற்புக்கூட்டத்தை நிகழ்த்துவதிலும் அரிசன நிதிக்காக பொருள்திரட்டி காந்தியடிகளிடம்
அளிப்பதிலும் இளைஞரொருவர் ஆர்வத்துடன் பாடுபட்டார். அன்றைய நிகழ்ச்சியில் அந்த இளைஞரே
காந்தியடிகளுக்கு தமிழில் வரவேற்பு மடலை வாசித்து வழங்கினார். மேடையில் காந்தியடிகளுக்கு
அருகிலேயே அமர்ந்திருக்கவும் அவரோடு உரையாடவும் அந்த இளைஞருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அவர் பெயர் ம.பொ.சிவஞானம்.
அபோது வடசென்னை அரிசன சேவா
சங்கத்தின் தலைவராக இருந்தவர் சர்தார் பு.ம.ஆதிகேசவலு நாயக்கர். அன்று காந்தியடிகள்
மேடையில் ஆற்றிய உரையை அவரே தமிழில் மொழிபெயர்த்துக் கூறினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில்
ஈடுபடுவதன் வழியாக அனைவரும் தம் ஆன்மாவைத்
தூய்மை செய்துகொள்ளலாம் என்றும் ஒவ்வொருவரும் இதுவரை மேற்கொண்டுவந்த முறையில்லாத பழக்கவழக்கங்களை
உதறிவிட்டு குழந்தைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் காந்தியடிகள்.
ராபின்சன் பூங்கா நிகழ்ச்சியை அடுத்து, அருகிலிருந்த கண்ணப்பர் வாசக சாலை, வரதராஜபுரம்,
பெரியமேடு, அருந்ததிபுரம், வாடியா பூங்கா ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தங்குமிடத்துக்குத் திரும்பிச் சென்றார்.
ரெளலட் சட்டத்தை எதிர்த்தும்
சத்தியாகிரகப் பாதையின் மேன்மையை எடுத்துரைப்பதற்காகவும் 1919இல் சென்னை வழியாக மேற்கொண்ட
சுற்றுப்பயணத்தில் காந்தியடிகள் ஆற்றிய உரையால் கவரப்பட்டு, அவருடைய அகிம்சைப்பாதையையே
தம் அரசியல் வழியாக அமைத்துக்கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களில் சிவஞானமும் ஒருவர். தொடர்ந்து
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தபடி 1920இல் காந்தியடிகள்
சென்னைக்கு வருகை புரிந்தபோதும் திலகர் சுயராஜ்ஜிய நிதி திரட்டுவதற்காக 1921இல் வந்தபோதும்
அவருடைய உரைகளைக் கேட்கும் வாய்ப்பு சிவஞானத்துக்கு
அமைந்தது. அவர் பேசிய கருத்துகள் அவருக்கு புதிய விழிப்புணர்ச்சியைக் கொடுத்தன.
1923இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் நேரிடையாகப் பங்கேற்காவிட்டாலும்
அதன் பார்லிமெண்டரி அமைப்பாக விளங்கிய சுயராஜ்ஜியக்கட்சி தேர்தலில் ஈடுபட்டது. காங்கிரஸே
தேர்தலில் போட்டியிடுவதாக நினைத்து, சுயராஜ்ஜியக்கட்சியின் வெற்றிக்காக பிரச்சாரக்
கூட்டங்களில் பங்கெடுத்தார் சிவஞானம்.
டாக்டர் எம்.ஏ.அன்சாரி
தலைமையில் அனைத்திந்திய காங்கிரஸ் மகாசபை. 26.12.1927 முதல் 28.12.1927 வரை சென்னையில் எழும்பூர்
திடலில் நடைபெற்றது. விநோதினி என்னும் பத்திரிகையில் அப்போது அச்சுக்கோர்ப்பாளராக பணியாற்றி
வந்த சிவஞானம் காங்கிரஸ் மகாசபைத் தொண்டர் படையில் சேர்ந்து, அதன் வெற்றிக்காகப் பாடுபட்டார்.
எதிர்பாராதவிதமாக ஒருநாள்
மயிலை குயப்பேட்டை குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிவஞானத்தின் குடிசை எரிந்து
சாம்பலானது. அந்த அதிர்ச்சியில் உடல்நலம் குன்றி படுக்கையில் விழுந்துவிட்ட சிவஞானத்தின்
தம்பி பத்துநாள் இடைவெளியில் இறந்துபோனார்.
அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளால் திகைத்து மனம் குழம்பிய சிவஞானத்தின் தந்தையார்
துயரத்தை மறக்க மதுப்பழக்கத்துக்கு அடிமையானார்.
இந்தியாவுக்கு சுதந்திரம்
வழங்குவது பற்றி ஆராய்வதற்காக பிரிட்டன் அரசால் அமைக்கப்பட்ட குழுவினர் சைமன் என்பவர்
தலைமையில் 03.02.1928 அன்று பம்பாய் துறைமுகத்தில் இறங்கினர். அதன் வருகைக்கு எதிர்ப்பு
தெரிவித்து சென்னை நகரெங்கும் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. அச்சகத்தொழிலாளியாக
இருந்த சிவஞானம் புரசைவாக்கத்தில் தன் நண்பர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
ஒரு கட்டத்தில் காந்தியடிகள் வகுத்தளித்த அகிம்சைக்கொள்கையை மறந்து ஆவேசம் கொண்ட கூட்டத்தினருடன்
சேர்ந்து சிவஞானமும் வழியில் தென்பட்ட ஆங்கிலேய முதலாளி ஒருவரின் கடை மீது கற்களை வீசி,
கடையை அடைக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்ற
காவலர்கள் வேப்பேரி காவல் நிலையத்தில் அடைத்தனர். நள்ளிரவுக்குப் பிறகு விடுதலை செய்தனர்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ்
சார்பாக சென்னையில் நடைபெற்ற எல்லா ஊர்வலங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்வதை
வழக்கமாகக் கொண்ட சிவஞானம், அப்போது மேடைகளில் உணர்ச்சிப்பெருக்குடன் உரையாற்றிய சத்தியமூர்த்தியுடன்
பழகி அவருடன் நெருக்கமானார்.
காந்தியடிகள் 1930இல் தொடங்கிய
தண்டி யாத்திரையைத் தொடர்ந்து தேசமெங்கும் கடற்கரையை ஒட்டிய நகரங்களில் உப்பு சத்தியாகிரகம்
நடைபெற்றது. சென்னை கடற்கரையில் டி.பிரகாசம் தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில்
சிவஞானமும் கலந்துகொண்டார். கடற்கரையை ஒட்டி உப்பு காய்ச்சிய தொண்டர்களை காவலர்கள்
பிரம்பால் அடித்துக் கலைத்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு
அயல்நாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் சூனஸ் சேட் என்பவருக்குச் சொந்தமான கடையின்
முன்னால் ஓ.பி.இராமசாமி, காசா சுப்பாராவ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மறியலில் கலந்துகொண்ட
சிவஞானம் மீண்டும் தடியடிக்கு உள்ளானார். அப்போது அடிபட்ட தொண்டர்களுக்கு மருத்துவ
உதவியை அளிப்பதற்காக சீன பஜாரில் ஜோன்ஸ் தெருவில் ‘காங்கிரஸ் மருத்துவமனை’ ஒன்று தற்காலிகமாக
உருவாக்கப்பட்டு இயங்கி வந்தது. அடிபட்ட சிவஞானம் அங்கே சிகிச்சை பெற்று வீட்டுக்குத்
திரும்பிச் சென்றார்.
காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்
விளைவாக மதுவிற்பனை செய்யும் கடைகள் முன்னாலும் அயல்நாட்டுத்துணிகளை விற்கும் கடைகள்
முன்னாலும் நின்று மறியல் செய்யும் உரிமை காங்கிரஸ் தொண்டர்களுக்குக் கிடைத்தது. அதனால்
தமிழகமெங்கும் தலைவர்களும் தொண்டர்களும் உற்சாகத்துடன் இணைந்து பல்வேறு பகுதிகளில்
கள்ளுக்கடை மறியலில் ஈடுபடத்தொடங்கினர். இத்தருணத்தில் சிவஞானம் மாபெரும் மனப்போராட்டத்தில்
சிக்கித் தவித்தார். அவருடைய தந்தையார் கள்ளிறக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவருடைய
தம்பி கள்ளுக்கடையில் ஊழியராக வேலை பார்த்துவந்தார். அவர்களை அத்தொழிலிலிருந்து வெளியேற்றும்
வழி தெரியாமல் தவித்தார் சிவஞானம். இறுதியில் குடும்பநலனைவிட தேசநலனே பெரிதென எண்ணி
மறியலில் ஈடுபட்டார் சிவஞானம்.
அதற்கிடையில் சென்னை மாகாணத்துக்கு
மதுவிலக்குக் குழு அமைக்கப்பட்டு, அதற்கு சத்தியமூர்த்தி தலைமைப்பொறுப்பேற்றிருந்தார்.
வடசென்னை பகுதிக்கு ஆதிகேசவலு நாயக்கரும் சிவஞானமும் பொறுப்பேற்றனர். எங்கெங்கும் மறியல்கள்
வெற்றிகரமாக நடைபெற்றன. அதனால் சிவஞானம் பலருடைய வெறுப்புக்கு இலக்காக நேர்ந்தது. அவருடைய
குடும்பமே அத்தெருவிலிருந்து வெளியேற்றப்பட்டு தங்கவேலு பிள்ளை சேரியில் குடிபுகுந்தது.
அவருடைய தந்தையார் கள்ளிறக்கும் தொழிலை உதறினார். அவருடைய தம்பியும் கள்ளுக்கடை வேலையை
உதறிவிட்டு வெளியேறினார். அப்போது தமிழ்நாடு அச்சகத்தில் பதினாகு ரூபாய் சம்பளம் வாங்கிவந்த
சிவஞானத்தின் வருமானம் ஒன்றே குடும்பத்தைப் பாதுகாக்கும் ஆதாரமாக இருந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு
கள்ளுக்கடை மறியல்களும் துணிக்க நடை மறியல்களும் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைந்தன. அதனால்
காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் கதர்விற்பனையிலும் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்திலும்
ஈடுபட்டனர். ’வண்ணை தேசிய சேவா சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தை நிறுவிய சிவஞானம்
தினமும் காலை நேரங்களிலும் பிற ஓய்வு நாட்களிலும் கதர்த்துணிகளை தோளில் சுமந்துகொண்டும்
கைவண்டியில் வைத்துக்கொண்டும் வீடுவீடாகச் சென்று விற்பனை செய்தார்.
வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக
லண்டனுக்குச் சென்றிருந்த காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பியதும் 04.01.1932 அன்று
நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். வண்ணாரப்பேட்டை குடியிருப்பிலிருந்து தமிழ்நாடு அச்சகத்துக்கு
நடந்துசெல்லும் வழியெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் வழியாக அச்செய்தியைத் தெரிந்துகொண்ட
சிவஞானம் ஆழ்ந்த துயரடைந்தார். அதைத் தொடர்ந்து நாடு முழுதும் பல தலைவர்களும் பல்லாயிரக்கணக்கான
தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் மகாசபையை சட்டவிரோதமான அமைப்பென ஆங்கிலேய
அரசு அறிவித்தது. சென்னையிலிருந்த காங்கிரஸ் அலுவலகத்தை காவல்துறையினர் கைப்பற்றி வாசலை
அடைத்தனர்.
அன்று மாலை சோர்வுடன் வீட்டுக்குத்
திரும்பிய சிவஞானம் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த தன் அப்பாவைப் பார்த்தார். காங்கிரஸ்
தலைவர்களுடைய கைதைத் தொடர்ந்து தன் மகனையும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்களோ
எனக் கருதி அவர் மனம் தவித்தது. சிவஞானத்துடைய ஒற்றை வருமானத்தில்தான் அக்குடும்பமே
பிழைத்திருந்தது. சிவஞானம் சிறைக்குச் சென்றால் அனைவரும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள்.
அதனால் சிறைக்குப் போகமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்குமாறு மகனிடம் மன்றாடிக்
கேட்டுக்கொண்டார் அவர்.
தந்தைக்கு என்ன பதில் சொல்வதென்று
குழம்பிக்கொண்டிருந்த தருணத்தில் வீட்டு வாசலுக்கு எதிரில் வந்து நின்ற காவல்துறை வாகனத்திலிருந்து
இறங்கி வந்த ஓர் அதிகாரி எக்காரணத்தை முன்னிட்டும் சென்னையைவிட்டு வெளியே செல்லக்கூடாது
என அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுப் பிரதியை அவரிடம் கொடுத்தார். ஆட்சியைக்
கவிழ்க்கக்கூடிய சட்டவிரோதச் செயல்களில் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ ஈடுபடக்கூடாது,
காந்திக்கு ஜே, வந்தே மாதரம் போன்ற முழக்கங்களை முழங்கக்கூடாது என பல விதிகள் அந்த
உத்தரவில் எழுதப்பட்டிருந்தன. குறிப்பிடப்பட்டிருந்த எல்லா விதிகளுக்கும் உடன்படுவதாக
கையெழுத்திட்டு அளிக்குமாறு வற்புறுத்தினார் அந்த அதிகாரி.
தன்மானத்தைச் சீண்டும்
வகையில் எழுதப்பட்டிருந்த அந்த வாசகங்களை ஏற்க மனமில்லாத சிவஞானம் கையெழுத்திட மறுத்தார்.
மேலும், அந்த அதிகாரியின் முன்னிலையிலேயே வந்தே மாதரம், காந்திக்கு ஜே என்று உணர்ச்சிப்பெருக்குடன்
முழக்கமிட்டார். அதனால் காவல்துறை அவரை உடனடியாக கைது அழைத்துச்சென்றனர் ஓர் இரவும்
ஒரு பகலும் காவல் நிலையத்தில் வைத்திருந்து அனுப்பிவைத்தனர். சில நாட்கள் கழித்து ஊர்வலமொன்றில்
கலந்துகொண்டதற்காக மீண்டும் கைது செய்து அழைத்துச் சென்று காவலில் வைத்திருந்து அனுப்பினர்.
மன உளைச்சலை ஏற்படுத்தும் இத்தகு தொடர் கைது நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஒருமுறை விசாரணைக்கைதியாக
ஒருமாதம் வரைக்கும் சிறையில் அடைத்துவைத்திருந்தனர். இறுதியாக, 30.09.1932 அன்று திருவல்லிக்கேணி கடற்கரைக்
கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக கைது செய்தபோது, அவருக்கு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை
விதித்தனர்.
விடுதலையாகி வெளியே வந்தபிறகு,
’தமிழ்நாடு’ பத்திரிகை அலுவலகம் அவருக்கு வேலைதர மறுத்துவிட்டது. அவர் வேலையற்றவரானார்.
அந்நிலையிலும் வடசென்னை அரிஜன சேவா சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டு செயல்பட்டார்.
பகல்வேளைகளில் தொண்டர்களோடு சேர்ந்து சென்று தூய்மைப்பணிகளில் ஈடுபட்டார். இரவுவேளைகளில் சிறுவர்சிறுமியருக்கும் வயதான தொழிலாளர்களுக்கும்
எழுதவும் படிக்கவும் கற்பிக்கும் பணிகளில் ஈடுபட்டார். கள்ளிறக்கும் தொழிலாளர்கள் வசிக்கும்
குடிசைப்பகுதிகளிலும் இதைப்போலவே ஓர் இரவுப்பள்ளியை அமைத்து அங்குள்ள சிறுவர்களும்
பெரியவர்களும் எழுத்தறிவு பெற பாடுபட்டார். தொடக்கத்தில் ஆறு தொழிலாளர்களோடு தொடங்கப்பட்ட
அந்தப் பள்ளி ஓராண்டுக்குள் நாற்பது பேரைக் கொண்டதாக வளர்ந்தது. அதனால் சங்கத்தின்
சார்பில் சம்பளமளித்து ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஒருபுறம் சீர்திருத்த வேலைகளில்
ஈடுபட்டபடியே, இன்னொருபுறம் வேலைவாய்ப்புகளுக்காக அலைந்தார். பல அலுவலகங்களின் படிகளில்
ஏறி இறங்கினார். நாளுக்குநாள் குடும்பச்சூழல் பொருளாதாரப்பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கத்
தொடங்கியது.
நெருக்கடிகளுக்கு நடுவில்
என்ன செய்வதென்று தெரியாமல் ஒருநாள் ஒரு கள்ளுக்கடைக்குச் சென்று குமாஸ்தா வேலை கொடுக்குமாறு
கேட்டார். ஒரு நாளைக்கு ஒன்றே கால் ரூபாய் கூலிக்கு என்னை வேலையில் அமர்த்திக்கொள்ள
அந்தக் கடையின் முதலாளியும் இசைந்தார். மறுநாள் காலை முதல் வேலைக்கு வருமாறு சொல்லி
அனுப்பிவைத்தார். அடுத்த நாள் காலையில் வேலைக்குப் புறப்பட்டபோது, உண்மையைத் தெரிந்துகொண்ட
அவருடைய தாயார் கொள்கைப்பற்றோடு மறியல் செய்த ஒரு கடையில் சொந்தத் தேவைக்காக கொள்கையை
உதறி வேலைக்குச் சேர்வது இழுக்காகும் என்று கூறி அந்த வேலைக்குப் போகவேண்டாமெனத் தடுத்துவிட்டார்.
மேலும், அதே நேரத்தில், நல்லூழின் விளைவாக அதற்கு முன்பு அவரை வேலையைவிட்டு நீக்கியிருந்த
தமிழ்நாடு பத்திரிகை அலுவலகமே அவரை வேலைக்கு எடுத்துக்கொண்டது.
நாடெங்கும் விடுதலைப்போராட்டம்
நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், அவ்வப்போது எல்லா மாகாணங்களிலும் இந்திய அசெம்ப்ளி,
மாநில சட்டமன்றங்கள், ஜில்லா போர்டுகள், தாலுகா போர்டுகள், மாநகராட்சிகள், நகர மன்றங்கள்
ஆகியவற்றுக்கான தேர்தல்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. எல்லாத் தேர்தல்களிலும் காங்கிரஸ்
நேரிடையாகவே பங்கெடுத்துக்கொண்டது. மேடையில் முழங்கி பிரச்சாரம் செய்யும் பேச்சாற்றல்
மிக்கவராக சிவஞானம் விளங்கியதால், சென்னை நகரத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டங்களில்
அவர் பேசி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார்.
1935இல் நடைபெற்ற டெல்லி
அசெம்பிளித் தேர்தலில் சென்னை நகரத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக சத்தியமூர்த்தி
அவர்களை காங்கிரஸ் நிறுத்தியது. அவருக்கு ஆதரவாக பிரச்சாரக்கூட்டங்களில் முழங்கி மக்கள்
நெஞ்சில் அவருடைய முகத்தை பதியும்படி செய்தார். அத்தேர்தலில் சத்தியமூர்த்தி மகத்தான
வெற்றியைப் பெற்றார். அதைத் தொடர்ந்து 1936இல் சென்னை மாநகராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் வெற்றி பெறும் வகையில் வடசென்னைப் பகுதியில் மூலைமுடுக்குகள் எங்கெங்கும்
பிரச்சாரக்கூட்டங்களை ஏற்பாடு செய்து முழக்கமிட்டார் சிவஞானம். சென்னை நகரம் முழுவதிலும்
பெரும்பாலான வட்டங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அடுத்த ஆண்டான 1937இல்
நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் சிவஞானம் பிரச்சாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு காங்கிரஸ்
கட்சிக்கு ஆதரவு திரட்டினார். வடசென்னையில் காங்கிரஸ் சார்பில் பு.ம.ஆதிகேசவலு நாயக்கர்
வேட்பாளராகப் போட்டியிட்டார். தேர்தல் வேலைகள் அனைத்தும் சிவஞானத்தின் பொறுப்பாகிவிட்டன. அதற்காக இரண்டு மாத காலம் கடுமையாகப் பாடுபட்டு
வேலை செய்தார். இறுதியில் நாயக்கர் வெற்றி பெற்றார். மாகாண அளவிலும் அதிக எண்ணிக்கையில்
இடங்களைப் பெற்று காங்கிரஸே வெற்றி வெற்றி பெற்றது. இராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை
உருவானது. அதைத் தொடர்ந்து சென்னை மாவட்ட காங்கிரஸ் அமைப்பின் தலைவராக சத்தியமூர்த்தியும் செயலாளராக
சிவஞானமும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
சுப்பிரமணி பாரதியாரின்
பாடல்களை மேடைதோறும் முழங்கிய காங்கிரஸ் பேச்சாளர்கள் மக்களிடையில் அவ்வரிகள் பதிவதற்கு
பேருதவி புரிந்தனர். ஆயினும் பாரதியாருக்காக அதுவரை காங்கிரஸ் ஒரு விழாவையும் நடத்தவில்லை.
பாரதியார் நினைவு நாளை சென்னை மகாஜன சபையும் திருவல்லிக்கேணி பாரதி பிரசுராலயமும் மட்டுமே
கொண்டாடி வந்தன. 1938ஆம் ஆண்டில் முதன்முதலாக சிவஞானம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக
செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் தொடங்கி ஒரு வார காலத்துக்கு சென்னை நகரம் முழுதும் பல்வேறு
பகுதிகளில் காங்கிரஸ் சார்பாக பாரதி விழா கொண்டாடப்பட்டது. இராஜாஜி, சத்தியமூர்த்தி,
திரு.வி.க., தெ.பொ.மீனாட்சிசுந்தரம் போன்றோர் அவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
காங்கிரசுக்கு எதிர்க்கட்சியாக இருந்த சர்க்கரை செட்டியார், வரதராஜுலு நாயுடு ஆகியோரை
பாரதியாரின் நண்பர்கள் என்கிறவகையில் அழைத்து உரையாற்றச் செய்தார் சிவஞானம்.
கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரம்
பிள்ளை 18.11.1936 அன்று மறைந்தார். அவர் மறைவையொட்டி தமிழகத்தில் வெளிவந்த எந்தப்
பத்திரிகையும் ஓர் அஞ்சலிக்குறிப்பைக்கூட எழுதவில்லை. எந்த ஊரிலும் ஓர் இரங்கல் கூட்டம்
கூட நடக்கவில்லை. வ.உ.சி. தன் இறுதிக்காலத்தில்
ஆற்றிய சில உரைகள் நீதிக்கட்சியின் சார்புநிலையோடு இருந்ததாகக் குற்றம் சுமத்தி அவரைப்பற்றிய
நினைவையே ஒதுக்கி நடக்கத் தலைப்பட்டனர். அந்த மெளனத்தைக் கண்டு வேதனையுற்ற சிவஞானம்
வ.உ.சி. அவர்களுடைய தியாகவாழ்க்கையை ஒரு தனி நூலாக எழுதவும் அவருடைய உருவச்சிலையொன்றை
சென்னை நகரில் நிறுவவும் விரும்பினார்.
வ.உ.சி. பற்றிய நூல் முயற்சி
வெற்றிகரமாகவே முடிந்தது. ’கப்பலோட்டிய தமிழன்’ என்னும் தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தை
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் முன்னுரையோடு தமிழ்ப்பண்ணை பதிப்பகம்
நூலாக வெளியிட்டது. அதே பதிப்பகம் வ.உ.சி.யின் உருவப்படத்தை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு
வழங்கியது.
எதிர்பாராதவிதமாக, சிவஞானத்தின்
சிலைமுயற்சிகளுக்கு அவர் நினைத்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. வ.உ.சி. சிலை நிறுவுவதற்காக
அவர் முன்மொழிந்த தீர்மானம் மாவட்ட காங்கிரஸ் குழுவில் நிறைவற்றப்பட்டுவிட்டது என்றபோதும் அவர் எதிர்பார்த்தபடி
காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கிடைக்கவில்லை. ஆயினும் மனம் சோர்வுறாத சிவஞானம் சென்னை
டிராம்வே தொழிலாளர் சங்கம், இராயபுரம் கணேஷ் அலுமினியம் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட
பல அமைப்புகளை அணுகி பொருளுதவி பெற்றார். மேலும் ஹாமில்டன் பாலத்துக்கு அருகில் கடைவைத்திருந்த
கடைக்காரர்களிடமிருந்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என நன்கொடை திரட்டினார். என்ன திரட்டினாலும்
வ.உ.சி.யின் முழு உருவச்சிலை செய்வதற்குப் போதுமானதாக அத்தொகை இல்லை. அதனால் முகத்தை
மட்டும் கொண்ட கழுத்துயரச்சிலையைச் செய்யும் முடிவுக்கு வந்தார். ஒரு வழியாக சிலை தயாரானதும்
அதை எங்கே நிறுவுவது, எப்படி திறப்புவிழா நடத்துவது என்பதில் ஏற்பட்ட தேவையற்ற விவாதங்களால்
தாமதம் உருவானது. எப்படியோ எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து 21.12.1939 அன்று வ.உ.சி.சிலை
திறக்கப்பட்டது.
வ.உ.சி.சிலை திறப்புவிழா
நடைபெற்றதற்கு மறுநாள் இராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் கதர் சுதேசிப் பொருட்காட்சியொன்றை
காங்கிரஸ் பொறுப்பேற்று நடத்தியது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயங்கி வந்த கதர்
அமைப்புகள் தம் உற்பத்திப்பொருட்களை அப்பொருட்காட்சியில் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய,
அது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. எதிர்பாராத விதமாக அப்பொருட்காட்சியில் தீவிபத்து ஏற்பட்டு,
அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. நல்லூழின் விளைவாக
வ.உ.சி.சிலை மட்டும் எந்தச் சேதமும் இல்லாமல் தப்பியது. சில நாட்களுக்குப் பிறகு யாரோ
அடையாளம் தெரியாத சிலர் அந்தச் சிலையைச் சேதப்படுத்திவிட்டனர். அதனால் பழுது பார்ப்பதற்காக
அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டியதாயிற்று.
17.10.1940 அன்று தனிநபர்
சத்தியாகிரகம் தொடங்கியது. காந்தியடிகளின் ஆணைப்படி ஆச்சாரிய வினோபா பாவே முதல் நபராக
சட்டத்தை மீறி சிறை சென்றார். தமிழ்நாட்டில் இராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றோர் சத்தியாகிரகத்தில்
ஈடுபட்டுச் சிறை புகுந்தனர். அதே சமயத்தில் பர்மாவிலிருந்து வெளியேறிய அகதிகள் அரக்கான்
வழியாக கால்நடையாக நடந்து கல்கத்தாவுக்கு வந்து அங்கிருந்து நிவாரணக்குழுவினரின் உதவியோடு
ரயில் வழியாக தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சக்கரை செட்டியார்
தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழுவில் சிவஞானமும் இருந்தார். அவர்கள் அனைவரையும் சென்ட்ரல்
நிலையத்தில் சந்தித்து, அவர்களுக்குரிய தங்குமிடங்களில் தங்கவைத்து உணவு வழங்கும் பொறுப்பை
மேற்கொண்டிருந்தார். அதே சமயத்தில் ஜெர்மன் விமானங்கள் சென்னையைத் தாக்கக்கூடும் என்னும்
அச்சத்தால் மக்கள் தம் உடைமைகளை அப்படி அப்படியே விட்டுவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு
வெளியேறிவிட்டனர். அப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக காங்கிரஸ் சார்பாக நிறுவப்பட்ட ஊர்க்காவல்
சங்கத்திலும் செயலாளராக ஓய்வின்றி பணிபுரிந்துவந்தார் சிவஞானம்.
நீண்ட காத்திருப்புக்குப்
பிறகு சிவஞானத்துக்கு அச்சத்தியாகிரகத்தில்
ஈடுபடும் நாள் வந்தது. இராயபுரத்தில் ராகவலு நாயுடு அன்ட் சன்ஸ் தேக்குமரத்தொட்டிக்கு
எதிரில் நின்று யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியபடி 15.05.1941 அன்று சத்தியாகிரகத்தைத்
தொடங்கினார் சிவஞானம். அவர் வருவதற்கு முன்னரே அந்த இடத்தை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டனர்.
அவர்கள் நடுவில் மேசை மீதேறி நின்று வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே என முழக்கமிட்ட
பிறகு தமிழ்மக்களே, யுத்த நிதிக்கு பணம் கொடுக்காதீர்கள், பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைக்காதீர்கள்
என யுத்த எதிர்ப்பு முழக்கங்களை அடுத்தடுத்து எழுப்பினார் சிவஞானம். அதே நேரத்தில்
அவரை நெருங்கிய காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்துக்கு
அழைத்துச் சென்று நிறுத்தினர்.
சத்தியாகிரகிகள் நீதிமன்றத்தில்
எதிர்வழக்காடாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதற்காக வழங்கப்படும் தண்டனையை முகமலர்ச்சியுடன்
ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது காந்தியடிகளின் கட்டளையாக இருந்தது. சிவஞானம் தன் மீது
சொல்லப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதால் முழுவிசாரணையும் பத்து நிமிடங்களில் முடிவடைந்துவிட்டது.
தீர்ப்பு எழுதும் முன்பு நீதிபதி சிவஞானத்தைப் பார்த்து “உங்களுக்குச் சொத்து ஏதேனும்
இருக்கிறதா?” என்று கேட்டார். அவர் “இல்லை” என்று சொன்னார். நேரிடையாக அவர் பெயரில்
சொத்து இல்லையென்றாலும் அவர் மனைவிக்கு ஒரு வீடு சொந்தமாக இருந்தது. சிவஞானம் அதைச்
சொல்லக்கூடும், அவருக்கு சிறையில் உயர்வகுப்பு வழங்கலாம் என நீதிபதி கருதியிருந்தார்.
ஆனால் சிவஞானத்தின் நேரடி பதில் அவருக்கு ஏமாற்றமளித்தது. வழக்கறிஞர் வழியாக ஒரு குறிப்பையும்
சொல்லி அனுப்பினார். அந்த வழக்கறிஞர் உடனடியாக சிவஞானத்தை நெருங்கி ரகசியமாக செய்தியைத்
தெரிவித்தார். ஆயினும், உண்மைக்கு மாறாக எதையும் சொல்ல விரும்பாத சிவஞானம் முதலில்
சொன்ன பதிலையே மீண்டும் சொன்னார். நீதிபதி அவருக்கு ஆறுவார கடுங்காவல் தண்டனை சி வகுப்பு
என்று தீர்ப்பு வழங்கினார். அன்றே அவர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.
’இந்தியாவை விட்டு வெளியேறு’
தீர்மானத்தை 08.08.1942 அன்று அகில இந்திய காங்கிரஸ் ஒருமனதாக நிறைவேற்றியது. அடுத்தநாள்
அதிகாலையிலேயே காந்தியடிகள் பம்பாயில் கைது செய்யப்பட்டார். ஆங்கிலேய அரசு தேசபக்தர்களை
நாடெங்கும் வேட்டையாடி சிறையில் அடைத்தது.. மீண்டும் மீண்டும் சிறைக்குச் செல்வதில்
பொருளில்லை என்று அப்போராட்டத்திலிருந்து விலகி ஒதுங்கியிருந்தார் இராஜாஜி. அதே சமயத்தில்
பிறர் எடுக்கும் முடிவில் அவர் குறுக்கிடவுமில்லை.
13.08.1942 அன்று கைது
ஆணையோடு சிவஞானத்தின் வீட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்து அழைத்துச்
சென்றனர். அன்று மாலையில் வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர். காங்கிரஸ் அமைப்பையே சட்ட விரோத அமைப்பென
அறிவித்த அரசு வட இந்தியச் சிறைகளில் இருக்கும் சில தலைவர்களை தென்னிந்தியச் சிறைச்சாலைகளுக்கும் தென்னிந்தியச்சிறைகளில்
உள்ள சில தலைவர்களை வட இந்தியச் சிறைச்சாலைகளிளுக்கும் மாற்றல் செய்தது. சிவஞானம் வட
இந்தியாவில் உள்ள அமராவதி என்னும் இடத்திலுள்ள சிறைக்கு மாறுதல் செய்யப்பட்டார். அங்கு
சென்ற சில நாட்களிலேயே குளிர்காலம் தொடங்கிவிட்டது. அந்தக் குளிரைத் தாங்கமுடியாமல்
சிவஞானம், சத்தியமூர்த்தி போன்றோர் கடுமையான துயரங்களை அனுபவித்தனர்.
சிவஞானம் சிறையில் கழித்த
நாட்களை இலக்கியத்தில் தேர்ச்சி பெற நல்லவிதத்தில் பயன்படுத்திக்கொண்டார். அவரோடு சிறையில்
இருந்தவர்களில் ஒருவர் காரைக்குடி அரு.ராம.சொக்கலிங்கம் செட்டியார். சிவஞானம் படிக்க
விரும்பும் நூல்களின் பெயர்களைக் கேட்டு கடிதம் வழியாக ஊருக்குத் தெரிவித்து, அப்புத்தகங்களை
வரவழைத்து ஒரு பையில் போட்டுக் கொடுத்தார் அவர். திருக்குறள், உரைநடையில் எழுதப்பட்ட
இலக்கியநூல்கள், தேவாரம், திருவாசகம், நாலாயிரத்திவ்விய பிரபந்தம், கம்பராமாயணம் என
ஏராளமான நூல்கள் அந்தப் பையில் இருந்தன. உண்மையான ஆர்வத்தோடு ஒவ்வொரு நூலையும் படித்துத்
தேர்ச்சி பெற்றார் சிவஞானம். மனனம் செய்வதற்கு இசைவான பாடல்களை அதிகாலை நேரத்தில் எழுந்து
படித்து மனப்பாடம் செய்தார். அவற்றைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகாரம்
உள்ளிட்ட ஐம்பெரும்காப்பியங்களையும் ஓர் இலக்கிய மாணவனுக்கே உரிய ஆர்வத்துடனும் வேகத்துடனும்
படித்துத் தேர்ச்சி பெற்றார். ஓராண்டு கால தொடர்வாசிப்பு சிலப்பதிகாரத்தில் அவரைத்
தேர்ச்சி கொண்டவராக மாற்றியது.
சிறையில் அமீபியா தொற்றின்
காரணமாக சிவஞானத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அங்கே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
அளிக்கப்பட்ட மருத்துவம் பயனளிக்கவில்லை. அதே நேரத்தில் அவருடைய மனைவி உடல்நலம் குன்றி
அபாய கட்டத்தை அடைந்துவிட்டதாக அவருடைய அப்பாவிடமிருந்து அடுத்தடுத்து தந்திகள் வழியாக
ஒரு செய்தி வந்தது. அதனால் சிவஞானத்துக்கு
15 நாட்கள் பரோலில் செல்ல அரசு அனுமதியளித்தது. கணவரைப் பார்த்ததும் மனைவியின் உடல்நிலை
மெல்ல மெல்ல சீரடைந்தது. பரோல் காலம் முடிவடைந்ததும் அவர் மீண்டும் அமராவதி சிறைக்குச்
செல்லவேண்டிய அவசியம் இல்லாதபடி, அரசு அவரை வேலூர் சிறைக்கு அனுப்பிவைத்தது.
இரண்டாண்டு, மூன்றாண்டு
சிறைவாசத்துக்குப் பிறகு தலைவர்கள் ஒவ்வொருவராக விடுதலை பெற்று வந்தனர். மீண்டும் விடுதலைப்போராட்டம்
சூடுபிடித்தது. இதற்கிடையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை தனியாகப் பிரித்து சுதந்திரம்
அளிக்குமாறு ஜின்னா குரலெழுப்பினார். நாடெங்கும் இனக்கலவரம் மூண்டு பதற்றத்தில் மூழ்கியது.
காங்கிரஸ் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்த இராஜாஜி மீண்டும் காங்கிரஸுக்குள் வர
விரும்பினார். அதை தேசியத்தலைவர்கள் ஏற்றுக்கொண்ட போதும் மாகாணத்தலைவர்கள் விரும்பவில்லை.
அதனால் சிறுசிறு பூசல்கள் நீடித்தன. இக்கட்டத்தில் இராஜாஜியின் பக்கம் நின்ற சிவஞானம்
தன் நிலைபாட்டுக்கான காரணத்தை விளக்கி பலமுறை அறிக்கைகள் விடவேண்டியிருந்தது.
எல்லாத் தேர்தல்களைப்போலவே
1946இல் நடைபெற்ற மாகாணத்தேர்தலிலும் தொடர்பிரச்சாரத்தில் ஈடுபட்டு காங்கிரஸின் வெற்றிக்காக
பாடுபட்டார் சிவஞானம். அத்தேர்தலில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதும்
மாகாண முதல்வராக இராஜாஜி பொறுப்பேற்கக்கூடும் என்னும் அவருடைய கனவு வெற்றிபெறவில்லை.
சிவஞானம் தன் இலக்கியவாசிப்பினால்
உருவான சிந்தனையின் விளைவாக, இந்தியா விடுதலை அடைந்த பிறகு விரிந்த தமிழகத்தின் எல்லைகள்
எப்படி அமையவேண்டும் என்பதுபற்றி ஒரு புதிய கருத்தாக்கத்தை வகுத்துவைத்திருந்தார்.
அதையே அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியும் பேசியும் வந்தார். 1946ஆம் ஆண்டு மே மாதம் முதல் தமிழ்முரசு என்னும்
தலைப்பில் ஒரு மாத இதழைத் தொடங்கி, தம் எண்ணங்களைக் கட்டுரைகளாக எழுதத் தொடங்கினார்.
’மத்தியில் சமஷ்டி, மாநிலத்தில் சுயாட்சி’ என்னும் எண்ணம் அவருடைய ஆழ்மனத்தில் பதிந்தது.
திரு.வி.க., தெ.பொ.மீ போன்ற தமிழ்ச்சான்றோர்களுடன் நிகழ்த்திய தொடர் உரையாடலின் விளைவாக
21.11.1946 அன்று தமிழரசுக்கழகத்தைத் தோற்றுவித்தார்.
தேச விடுதலைக்குப் பிறகு
சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரத்தைப் பிரித்து தனிமாநிலமாக அமைக்க மத்திய அரசு முடிவு
செய்தபோது, சென்னை நகரம் தமக்கே சேரவேண்டும் என்று ஆந்திரமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
‘மதராஸ் மனதே’ என எழுந்த அக்குரலுக்கு எதிர்க்குரலாக ‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்’ என பதில் முழக்கம் எழுப்பினார் சிவஞானம். அவருடைய கடும்போராட்டத்தைத் தாங்கமுடியாமல்
ஒரு கட்டத்தில் முதல்வராக இருந்த இராஜாஜி அவரைக் கைது செய்து சிறையில் வைக்க நேர்ந்தது.
இறுதியில் சிவஞானத்தின் கனவு நிறைவேறியது. சென்னை தமிழ்நாட்டின் தலைநகரானது.
திருப்பதி நகரம் தமிழ்நாட்டிலேயே
நீடிக்கவேண்டும் என்றொரு போராட்டத்தை சிவஞானம் தொடங்கினார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி
கிடைக்கவில்லை. இருப்பினும் அதன் விளைவாக தமிழகத்துக்கு திருத்தணி கிடைத்தது. அதைப்போலவே குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர்மேடு,
தேவிகுளம் போன்ற ஊர்களும் தமிழகத்துடன் நீடித்திருக்க சிவஞானம் முன்னெடுத்த போராட்டமும்
மிகமுக்கியமானது. தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை இழந்தபோதும் தமிழகத்துக்கு குமரியும்
செங்கோட்டையும் கிடைத்தன.
முன்னேற்றத்துக்கு ஏழ்மை
ஒருபோதும் தடையாக இருக்கமுடியாது என்னும் கூற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர்
சிவஞானம். தம் சொந்த வாழ்க்கையே போராட்டமயமானதாக அமைந்துவிட்ட நிலையில் ஒருவர் அதைப்பற்றி
மட்டும் அக்கறை கொண்டு, அதிலிருந்து மீண்டெழும் வழிமுறைகளைத் தேடி ஓடுவதே உலக இயற்கை.
ஆனால் அதற்கு மாறாக, வாழ்க்கைப்போராட்டத்தை எதிர்கொண்டபடி, நாட்டின் விடுதலைப்போராட்டத்திலும்
ஊக்கமுடன் செயல்பட்டவர் சிவஞானம். அதற்கு முக்கிய காரணம் காந்தியக்கொள்கைகள் மீது அவர்
கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடு ஒன்றே. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை தமக்குரிய வேதமென்றும்
காந்தியடிகளின் சத்தியசோதனையை வழிகாட்டியென்றும் வகுத்துக்கொண்டு வாழ்ந்தார் சிவஞானம்.
அரசியல், சமயம், சமூகம், மொழி, கலை, பண்பாடு, ஆன்மிகம் என எல்லாத் தளங்களிலும் காந்தியடிகளின்
பார்வையே தமக்கு வழிகாட்டி நடத்திச் செல்வதாகவும் அவர் தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
ம.பொ.சி. என அழைக்கப்படுகிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்
சென்னையைச் சேர்ந்த ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்னும் இடத்தில்
26.06.1906 அன்று பிறந்தார். தந்தையார் பெயர் பொன்னுசாமி. தாயார் பெயர் சிவகாமி. வறுமையின்
காரணமாக மூன்றாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடரமுடியாமல் பல்வேறு சிறுசிறு வேலைகளைச்
செய்து குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அச்சுக்கோர்ப்பாளராகவும்
நெசவாளராகவும் நீண்ட காலம் உழைத்தார். காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இளம்பருவத்திலேயே
விடுதலைப்போரில் பங்கேற்றார். அதன் காரணமாக பல முறை தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைவாசத்தின்போது சொந்த முயற்சியால் ஆர்வத்துடன் பல்வேறு இலக்கியநூல்களை வாசித்து
தேர்ச்சி பெற்றார். 1950இல் முதன்முதலாக மு.வரதராசனாரைத் தலைவராகக் கொண்டு சிலப்பதிகார
மாநாட்டை நடத்தினார். ரா.பி.சேதுப்பிள்ளை அவருக்கு சிலம்புச்செல்வர் என்னும் பட்டத்தை
அளித்துச் சிறப்பித்தார். தமிழ்முரசு என்னும் மாத இதழைத் தொடங்கி புதிய தமிழகம் என்னும்
கருத்தாக்கத்தைப் பரப்பினார். நாமக்கல் கவிஞரின் முன்னுரையுடன் ம.பொ.சி.எழுதிய கப்பலோட்டிய
தமிழன் என்னும் புத்தகத்தை தமிழ்ப்பண்ணை வெளியிட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை
எழுதிய ம.பொ.சி. தன் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்காக 1966இல் சாகித்திய
அகாதெமி விருதைப் பெற்றார். ஆயிரம் பக்க அளவில் எனது போராட்டம் என்னும் தலைப்பில் அவர்
எழுதிய தன்வரலாற்று நூல் மிகமுக்கியமான ஆவணம். அறிஞர்கள் பார்வையில் ம.பொ.சி. என்னும்
தலைப்பில் அவருடைய மகள் மாதவி பாஸ்கரன் உருவாக்கிய புத்தகமும் குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
1976 முதல் 1986 வரை சட்டப்பேரவைத்தலைவராக செயல்பட்ட ம.பொ.சி. 03.10.1995 அன்று மண்ணுலகைவிட்டு
மறைந்தார்.
(சர்வோதயம் மலர்கிறது - மே 2023)