Home

Friday 20 February 2015

நம்பிக்கை மிகுந்த பயணம்


எங்கே நிறுத்திக்கொள்வது என்று ஒருவன் தெரிந்துகொள்ளும்போது அவன் அழிவற்றவன் ஆகிறான்என்பது தாவோ தே ஜிங் நூலில் இடம்பெறக்கூடிய ஒரு வரி. சீன மொழியில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முன்பாக எழுதப்பட்ட வரி இது. பல தளங்களில் இவ்வரியைப் பொருத்திப் பொருள்கொள்ள முடியும். சாதாரண உரையாடலில் தொடங்கி உறவு, நட்பு, விருப்பம், வெறுப்பு, ஆசை, சீற்றம் என வாழ்வின் பல்வேறு தளங்களில் இவ்வரியின் வழியாக ஒரு புதிய பொருளும் புதிய வெளிச்சமும் கிடைக்கின்றன.
ஓர் எழுத்தாளனாக, ஒரு படைப்பை எழுதுகிற ஒவ்வொரு தருணத்திலும் என் ஆழ்மனத்தில் இவ்வரி என்னைச் செலுத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு வாசகனாக, ஒரு படைப்பை மதிப்பிடவும் இவ்வரி எனக்குத் துணையாக உள்ளது. ஒரு படைப்பின் தொடக்கம் என்பது அப்படைப்பை எழுதும் படைப்பாளி அடையும் உத்வேகத்தின் அடிப்படையில் எந்தக் கோணத்திலிருந்துவேண்டுமானாலும் அமையலாம். அது படைப்பாளியின் சுதந்திரம். அந்தச் சுதந்திரத்தில் எந்த வாசகனுக்கும் இடமில்லை. ஆனால் படைப்பின் முடிவுப்புள்ளி என்பது மிகவும் முக்கியம். எங்கே நிறுத்தவேண்டும் என்பதை படைப்பின் போக்கு மானசிகமாக உணர்த்திவிடும். அதைக் கடந்து எழுதப்படும் சொற்கள் ஒரு படைப்புக்குச் சுமையாக மாறும். இந்த அளவுகோல் ஒரு படைப்பை மதிப்பிட நமக்குக் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த கருவியாகும்.  

காலம்தோறும் பயன்படும் காந்திய வழிமுறை



பொதுவான மக்கள் உரையாடல்களில் காந்திய வழியை அகிம்சைப் போராட்ட வழியென்றும் இலட்சிய வழியென்றும் குறிப்பிடுவதையே நான் கேட்டிருக்கிறேன். வெற்றி பெறுவதற்கான வழி என்று யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. அதனால்வெற்றி பெற காந்திய வழிஎன்னும் புத்தகத்தின் தலைப்பைக் கண்டதும்  மிகவும் புதுமையாகத் தோன்றியது. அந்த ஈர்ப்புதான் புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. புத்தகத்தை மூல மொழியான ஆங்கிலத்தில் எழுதியவர் ஆலன் ஆக்ஸல்ராட் என்னும் அமெரிக்கர். நடுவயதைக் கடந்த வரலாற்று ஆய்வாளர். வணிகவியல், மேலாண்மையியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை எழுதியிருக்கிறார். காந்தியின் கடிதங்களிலிருந்தும் உரைகளிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் முக்கியமான சில தொடர்களை எடுத்துக்கொண்ட ஆக்ஸல்ராட், அவற்றை விரிவான வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எந்த நோக்கத்துக்காக அந்தச் சொற்கள் எழுதப்பட்டதோ, அதைப்பற்றிய சுருக்கமாக ஓர் அறிமுகத்தை முதலில் வழங்குகிறார். பிறகு, அதன் தொடர்ச்சியாக அந்தக் கருத்தின் மையத்திலிருந்து மேலாண்மை தொடர்பான சிக்கல்களின் மையத்துக்குச் சென்று, அப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்த்துவைக்க காந்தியின் கருத்து உதவும் விதம் பற்றி ஒரு சிறிய வரையறையைக் கொடுக்கிறார். அவ்வரையறைகள் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த உதவும் கொள்கைகளாக விளங்கக்கூடியவை என்றொரு முடிவை நெருங்குகிறார். இறுதியில் காந்திய வழியை வெற்றிக்கான வழியாக வகுத்துச் சொல்கிறார்
ஆக்ஸல்ராட்.

Friday 13 February 2015

உலகமும் நிகர் உலகமும் - பெரியசாமியின் ‘தோட்டாக்கள் பாயும் வெளி’


நம் பார்வையில் தென்படும் உலகத்துக்கு நிகரான இன்னொரு உலகை சொற்களால் கட்டியெழுப்பும் ஆற்றல் குழந்தைகளிடமும் குழந்தைமை மிகுந்த கவிஞர்களிடமும் மட்டுமே உள்ளது. கவிதைகளில் வெளிப்படும் உலகம், வெளியுலகத்தின் நேரடியான பிரதியல்ல. அதன் சாயலை உருவகமாகவும் படிமமாகவும் கட்டியெழுப்பவே கவிதை முயற்சி செய்கிறது. ஒரு சின்ன மரப்பாச்சியை குழந்தையாகவும் தாயாகவும் தந்தையாகவும் தாத்தாவாகவும் அரசனாகவும் சுட்டிக்காட்டி கதைசொல்வது  குழந்தையின் உலகத்தில் மிகவும் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றாகும். தன்னிச்சையான அந்தச் சொற்கோவையை உருவாக்க முடியும்போதுதான் கவிஞனுக்கும் அந்த வெற்றி சாத்தியமாகிறது. அந்தப் புள்ளியை தன் சொல்லால் தொடக்கூடிய ஒரு சில கவிஞர்களில் ஒருவர் பெரியசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த மதுவாகினி தொகுப்பில் அத்தகு அடையாளங்களைக் கொண்ட சில நல்ல கவிதைகள் இருந்தன. அதன் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும்தோட்டாக்கள் பாயும் வெளிதொகுப்பில் காண முடிகிறது.

அணிதிரட்டிய கவிதைகள்

சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை

கன்னடச் சிந்தனைமரபில் தலித்துகளின் பங்களிப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வசனக்காரர்களின் காலகட்டத்திலேயே உருவாகிவிட்டது. சாதிகளைத் துறந்த ஒரு மேலான சமூகத்தைக் கனவு கண்டார் பசவண்ணர். அதற்காக எல்லாச் சமூகத்தினரையும் அரும்பாடுபட்டு ஒருங்கிணத்தார். அவர் முன்னெடுத்துச் சென்ற சரணர் இயக்கம் உழைப்பின் வழியாகவும் மானுட உறவுகள் வழியாகவும் சமூகமாற்றத்தைச் சாத்தியப்படுத்த முயற்சி செய்தது. தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சமகார ஹரலய்யா, காக்கய்யா, மாதார சென்னய்யா போன்றோர் அவருடைய சமகாலத்தில் இயங்கிய வசனக்காரர்கள். வசன இலக்கியம் என்னும் பெருந்தொகுதியில் இவர்களுடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பிற்காலத்தில் இவ்வியக்கம் வீரசைவத் தத்துவமாக பெயர்பெற்றாலும், அது உருவாகி நிலைபெற்ற காலத்தில் உயர்ந்த நெறிகளைக் கொண்ட நீதிமுறையை நிறைவேற்ற அவ்வியக்கம் பாடுபட்டது. துரதிருஷ்டவசமாக, அதன் இறுதிக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீண்டும் விளிம்பைநோக்கித் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பது வரலாறு. பக்தி இலக்கியக் காலகட்டத்தில் கனகதாசரின் பங்களிப்பு போற்றுதற்குரியதென்றாலும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் அது எவ்விதமான மாற்றத்தையும் உருவாக்கவில்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சியும் தன் நிரந்தரத்துவத்துக்காக இந்தியர்களின் சாதிமத விஷயங்களில் தலையிடுவதில்லை என்கிற நிலைபாட்டில் உறுதியாக நின்றுவிட்டது. மேற்கத்திய கல்வியின் தாக்கத்தால் உருவான ஆர்யசமாஜமும் பிரம்ம சமாஜமும் பல சீர்திருத்த நடவடிக்கைகளில் முனைப்போடு இயங்கியபோதும், அவை எதுவுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலைகளில் எவ்விதமான மாற்றத்தையும் உருவாக்கவில்லை.

Monday 9 February 2015

கனவுகளும் கண்ணீரும்


இது என்னுடைய புதிய கட்டுரைத்தொகுதி. இலக்கியம் தொடர்பான 38 கட்டுரைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. இவை கடந்த நான்காண்டுகளில் அவ்வப்போது எழுதியவை.



நூல் கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 98

விலை. ரூ.200

‘கனவுகளும் கண்ணீரும்’ நூலுக்கு எழுதிய முன்னுரை

சமீபத்தில் ஒரு பகல்நேரத் தொடர்வண்டிப் பயணத்தின்போது படிப்பதற்காக ஜென் கவிதைப் புத்தகமொன்றை எடுத்துச் சென்றிருந்தேன். ஒவ்வொன்றும் நான்கு அல்லது ஐந்து வரிகள்மட்டுமே கொண்ட கவிதை.  ஆனால், சட்டென்று கடந்துசெல்லமுடியாதபடி ஒவ்வொரு கவிதையும் இழுத்துவைத்துக்கொள்ளும் சக்தியுள்ளதாக இருந்தது. ஒரு கவிதையைப் படிப்பது, அப்புறம் ஒவ்வொரு வரியாக அதையே மீண்டும் படிப்பது, பிறகு மனம்போன போக்கில் ஒவ்வொரு சொல்லாக பிரித்தும் இணைத்தும் புதுப்புது பொருளை உருவாக்கியபடி படிப்பது என அச்சொற்களின் உலகிலேயே திளைத்திருந்தேன். பிறகு திரும்பி ஜன்னல்வழியாகத் தெரியும் நீலவானத்தையும் பின்னோக்கி நகரும் மரங்களையும் புதர்களையும் பாதைகளையும் பார்த்தபடி அதே வரிகளை மீண்டும் மனத்தில் மிதக்கவிட்டு அசைபோட்டபடி இருந்தேன். அப்போது நெஞ்சிலிருந்து பொங்கிவந்த நினைவுகளெல்லாம் அந்தக் கவிதை வரிகளின் பொருளாக மாறித் தோன்றிய அதிசயத்தை உணர்ந்தேன்.
உனது மரணகாலம் நெருங்குகிறது
நீ இறந்துவிடுகிறாய் என்றால்
மிக நல்லது.
உனது மரணகாலம் நெருங்குகிறது
நீ இறக்காதிருக்கிறாய் என்றால்
மிகமிக நல்லது.

பூனையும் யானையும்: முரகாமியின் சிறுகதைகள்

தமிழ் நவீன சிறுகதையாக்கத்தில் உலகச் சிறுகதை மேதைகளின் செல்வாக்கு ஒரு முக்கியமான பங்கை நிகழ்த்தியிருக்கிறது. பால்ஸாக், மாப்பசான், செகாவ் ஆகிய மேதைகளின் சிறுகதைகளை தமிழின் நவீன சிறுகதையாசிரியர்களே தமிழ்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்கள். புதுமைப்பித்தன் தன்னுடைய சொந்தச் சிறுகதைகளுக்கு இணையான பக்க அளவுள்ள அயல்மொழிச்சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தினார். தமிழில் ஒரு சிறுகதையை வாசிக்கும் ஒரு வாசகன், உலகச் சிறுகதைகளில் நிகழ்ந்துள்ள உச்சங்களை அறிந்து தன் வாசிப்பு உலகத்தையும் பார்வையையும் விரிவு செய்துகொள்ள இத்தகைய அறிமுக முயற்சிகள் காலந்தோறும் உதவியபடி இருக்கின்றன. ரஷ்ய எழுத்தாளர்களையும் ஐரோப்பிய எழுத்தாளர்களையும் அமெரிக்க எழுத்தாளர்களையும் தமிழ் வாசகர்களுக்கு பலரும் அறிமுகம் செய்திருக்கிறார்கள். க.நா.சு., சந்தானம், டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோரின் அர்ப்பணிப்புணர்வும் அக்கறையும் போற்றத்தக்கவை. எண்பதுகளில் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளுக்கு உலக அளவில் ஒருகவனம் உருவான சமயத்தில், அத்தகு கவனம் தமிழிலும் உருவாகும் வகையில் மீட்சி பிரம்மராஜன் முயற்சியால் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைத்தொகுதியொன்று வெளிவந்தது. போர்ஹெயின் சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுதியொன்றை அவரே மொழிபெயர்த்து வெளியிட்டார். தாஸ்தாவெஸ்கிக்கும் மார்க்யூஸ்க்கும் கல்குதிரை ஒரு சிறப்புமலரையே வெளியிட்டது மறக்கமுடியாத ஓர் அனுபவம். எழுத்தாளர்களின் பல முக்கியமான படைப்புகள் அம்மலர்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பங்களிப்பின் தொடர்ச்சியாக சமீபத்தில் தமிழ்ப்படைப்பாளிகளால் கவனப்படுத்தப்படும் முக்கியமான ஓர் ஆளுமை முரகாமி.