Home

Friday 20 February 2015

நம்பிக்கை மிகுந்த பயணம்


எங்கே நிறுத்திக்கொள்வது என்று ஒருவன் தெரிந்துகொள்ளும்போது அவன் அழிவற்றவன் ஆகிறான்என்பது தாவோ தே ஜிங் நூலில் இடம்பெறக்கூடிய ஒரு வரி. சீன மொழியில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முன்பாக எழுதப்பட்ட வரி இது. பல தளங்களில் இவ்வரியைப் பொருத்திப் பொருள்கொள்ள முடியும். சாதாரண உரையாடலில் தொடங்கி உறவு, நட்பு, விருப்பம், வெறுப்பு, ஆசை, சீற்றம் என வாழ்வின் பல்வேறு தளங்களில் இவ்வரியின் வழியாக ஒரு புதிய பொருளும் புதிய வெளிச்சமும் கிடைக்கின்றன.
ஓர் எழுத்தாளனாக, ஒரு படைப்பை எழுதுகிற ஒவ்வொரு தருணத்திலும் என் ஆழ்மனத்தில் இவ்வரி என்னைச் செலுத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு வாசகனாக, ஒரு படைப்பை மதிப்பிடவும் இவ்வரி எனக்குத் துணையாக உள்ளது. ஒரு படைப்பின் தொடக்கம் என்பது அப்படைப்பை எழுதும் படைப்பாளி அடையும் உத்வேகத்தின் அடிப்படையில் எந்தக் கோணத்திலிருந்துவேண்டுமானாலும் அமையலாம். அது படைப்பாளியின் சுதந்திரம். அந்தச் சுதந்திரத்தில் எந்த வாசகனுக்கும் இடமில்லை. ஆனால் படைப்பின் முடிவுப்புள்ளி என்பது மிகவும் முக்கியம். எங்கே நிறுத்தவேண்டும் என்பதை படைப்பின் போக்கு மானசிகமாக உணர்த்திவிடும். அதைக் கடந்து எழுதப்படும் சொற்கள் ஒரு படைப்புக்குச் சுமையாக மாறும். இந்த அளவுகோல் ஒரு படைப்பை மதிப்பிட நமக்குக் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த கருவியாகும்.  

இக்கருவியைக் கொண்டு சூரியநிலாவின் கவிதைகளை மதிப்பிடும் வாசிப்பை நிகழ்த்தியபோது, பெரும்பாலான கவிதைகள் இயல்பான புள்ளியில் நிறைவடைவதை உணரமுடிந்தது. இதன்வழியாக ஒரு கவிஞனாக அவர் தன் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்கிறார் என்றே சொல்லவேண்டும். கவிதை நமக்குள் நிகழ்த்தும் அனுபவமும் அவரை நல்ல கவிஞர் என்றே உணரவைக்கிறது.
இத்தொகுப்பில் அப்பாவைப்பற்றி அவர் தீட்டிக் காட்டியிருக்கும்  பலவிதமான சித்திரங்கள் சுவாரசியமான அனுபவத்தை அளிக்கின்றன. அவருடைய கவியாற்றலுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
மதுவின் நீட்சிஎன்ற கவிதையில் அப்பாவின் வருகைக்காக காத்திருக்கும் குழந்தைகளைப்பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் வருகைக்காகக் காத்திருந்த குழந்தைகள் எதற்காகக் காத்திருந்தார்கள் என்கிற குறிப்பு கவிதையில் இல்லை. அது வாசகனின் ஊகத்துக்கு விடப்பட்டிருக்கிறது. அவர்களுக்குத் தேவையான ஏதேனும் ஒன்றை வாங்கிவருவார் என்பதற்காகவோ, ஆசையாக எடுத்துண்ணுவதற்கான உணவோ அல்லது அணிவதற்கான உடையோ வாங்கி வருவார் என்பதற்காகவோ, விரைவில் வந்து விளையாட்டு காட்டி கதைசொல்வார் என்பதற்காகவோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை. காத்திருக்கும் ஆயாசத்தை மறப்பதற்காக அவர்கள் அவரைப்போலப் பேசியும் நடந்தும் அசைவுகள் நிகழ்த்தியும் நடித்து மகிழ்கிறார்கள். அப்பாவாக நடிக்கும் நடிப்பு அவர்களுக்கு ஒருவிதமான புத்துணர்ச்சியை வழங்குகிறது. அப்புறம் வீட்டிலேயே பழுதாகிக் கிடக்கிற ஒரு மிதிவண்டியை குதிரையாக நினைத்து சவாரி செய்து நேரத்தைப் போக்குகிறார்கள். இறுதியில் அப்பாவின் மீசையை தம் முகத்தில் வரைந்துகொண்டு, அப்பாவாக நடித்து ஒருவரை ஒருவர் மகிழ்ச்சிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர் வராத ஏமாற்றத்தின் சோர்வாலும் நெடுநேரம் விழித்திருந்து ஆடிய சோர்வாலும் கடைசியில் மீசையைத் துடைக்காமலேயே உறங்கிவிடுகிறார்கள். மதுக்கடையிலிருந்து நிறைந்த போதையில் கடையிலிருந்து வெளியேறிய அப்பா நடக்கமுடியாமல் நடந்துவந்து முதலில் சாக்கடையோரத்தில் வெகுநேரம் விழுந்து கிடந்து, பிறகு அங்கிருந்து நடந்துவந்து வீட்டின் வாசல்வரைக்கும் வந்து மீண்டும் தடுமாறி விழுந்து உறக்கத்தில் ஆழ்ந்துபோகிறார். எதிர்பார்த்த குழந்தைகள் ஏமாற்றத்தோடு வீட்டுக்குள் உறங்குகிறார்கள். அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய அப்பாவோ மதுபோதையில் வாசலில் தடுமாறி விழுந்து உறக்கத்தில் மூழ்கிவிடுகிறார். இந்த உள்ளே-வெளியே சித்திரம் கவிதைக்கு துயரம் தோய்ந்த அழகான முடிவை அளிக்கிறது. இரு வெவ்வேறு புள்ளிகளில் தொடங்கிய கவிதை ஒரு கோட்டின் இரு பக்கங்களில் குவிந்து முடிவடைகிறது. நிறுத்தப்படவேண்டிய புள்ளியில் சரியாக நின்றுவிடுகிறது. ஒரே கூரையின் கீழே இருக்கவேண்டிய அப்பா-பிள்ளைகள் உறவை மதுவின் போதை உள்ளே-வெளியே என்று பிரித்துப் போட்டுவிடுகிறது.
என்னைத் துரத்தும் உருவம்கவிதையிலும் ஓர் இரவுக்காட்சி இடம்பெறுகிறது. தூங்கமுடியாமல் தவிக்கும் ஒரு சிறுவனின் அவலக்குரலாக ஒலிக்கிறது இக்கவிதை. இரவுகளில் தூக்கம் வராமல் தவிக்கும் சிறுவன் தன்னைத் துரத்தும் கனவால் தவித்துத் தடுமாறும் பதற்றம் கவிதையில் கச்சிதமாக விழுந்துள்ளது. அவனைத் துரத்தும் உருவத்தைப்பற்றிய குறிப்புகள் மறைமுகமாக மதுபோதையில் வீடு திரும்பும் அவன் அப்பாவைப்பற்றிய கோட்டுச்சித்திரத்தைத் தீட்டுக் காட்டுகிறது.
அப்பா எனும் ஒருவர்கவிதையிலும் ஒரு சிறுவன் அல்லது சிறுமி அடைந்திருக்கும் பதற்றம் சுருக்கமாக இடம்பெறுகிறது. ஒரே ஒரு மாற்றம். இந்தப் பதற்றம் அப்பாவால் நேரவில்லை. புகைப்படத்தில் காணப்படும் உண்மையான அப்பா உறைந்துபோய் வேடிக்கை பார்த்திருக்க, அப்பாவாக அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மனிதரால் ஏற்படுகிறது.
உயிர்க்கொல்லிஅப்பா பற்றிய கவிதைகளில் உச்சம்.  இதில் இடம்பெறும் அப்பா வெளியே சென்று மது அருந்திவிட்டுத் திரும்புகிறவர் மட்டுமல்ல. தேவைப்படும்போது வீட்டுக்குள்ளேயும் மதுச்சாலையை அமைத்துக்கொள்ளக் கூடியவர். உள்ளே-வெளியே எப்போதும் மதுவின் பிடியில் திரிகிறவராக இருக்கிறார் அப்பா. உள்ளே இருக்கும்போது மதுமயக்கத்தில் மூழ்கியிருக்கும் அப்பாவைப் பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் சிறுமி, போதையை நாடி வெளியே சென்றிருக்கும் அப்பா ஒழுங்காகத் திரும்பிவரும் தருணத்துக்காக விழிகளில் நீரைத் தேக்கியபடி வாசல் பார்த்துக் காத்திருக்கிறாள். இக்கவிதையில் இடம்பெற்றிருக்கும்வெற்றுச்சவமாக உருண்டு கிடக்கின்றன அத்தனை பாட்டில்களும்என்னும் வரியின் வழியாக விரிவடையும் காட்சி அமைதியிழக்கவைக்கிறது. உள்ளே-வெளியே காட்சிகள் வழியாக துலக்கமடையும் அப்பாவைப்பற்றிய சித்திரங்கள் சூரியநிலாவின் ஆற்றலுக்குச் சாட்சியாக உள்ளன.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள வாழ்வனுபவச் சித்தரிப்புக் கவிதைகளிலும் நல்ல வாசிப்பனுவத்தை வழங்கக்கூடிய பல கவிதைகள் உள்ளன.சமர்ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கனவில் ஆயிரமாயிரம் படைவீரர்கள் பின்தொடர போருக்குச் செல்லும் பெருவீரனாக தன்னைக் காணக்கூடிய ஒருவன் பால் வாங்கிவர ஏவப்படுபவனாக நனவில் வாழ்கிறான். எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். நனவின் பலவீனத்தை கனவின் பலத்தால் ஈடுசெய்து கொள்கிறது மனம்.எறும்புகள்இன்னொரு நல்ல எடுத்துக்காட்டு. இறப்பின் சுவட்டை அறிந்துகொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு இருக்கிறது. இறந்துபோன உடல்மீது சுதந்திரமாக ஏறி இறங்கி மொய்த்தும் இழுத்தும் திரிகின்றன. அதே நேரத்தில் அவற்றின் முதுகுக்கு அருகில் எப்போதும் நசுக்கி அழுத்திவிடும் மரணம் காத்துக்கொண்டே இருக்கிறது. மரணம் அருகில் இருந்தபோதும் அதைப்பற்றிய எண்ணமே இன்றி வாழ்வில் லயித்திருக்கின்றன எறும்புகள். எறும்புகள் வாழ்வை மகத்தானது என்பதா அல்லது துக்கம் நிறைந்தது என்பதா? சூரியநிலா தமிழுலகம் நன்கறிந்த கவிஞர். பல ஆண்டுகளாக தொடர்ந்து இடைவிடாமல் இயங்கிக்கொண்டு வருபவர். அவருடைய நம்பிக்கை மிகுந்த இயக்கத்துக்குபுனலில் மிதக்கும் முகம்தொகுதி நல்லதொரு எடுத்துக்காட்டு. இத்தொகுதி மூலமாக இன்னும் பரவலான வாசக கவனத்தை அவர் பெறுவார் என்று நம்புகிறேன். சூரியநிலாவுக்கு என் வாழ்த்துகள்.


(சூரியநிலாவின்புனலில் மிதக்கும் முகம்தொகுதிக்கு எழுதிய முன்னுரை)