Home

Monday, 12 January 2026

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - முன்னுரை


கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் இந்தியாவின் அஞ்சல் துறையும் தொலைபேசித்துறையும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே துறையாகச் செயல்படத் தொடங்கியது. ஒவ்வொரு ஊரிலும் பயன்பாட்டில் இருக்கும் தொலைபேசி இணைப்புகள் பழுதின்றி இயங்கும் வண்ணம் பராமரிப்பதும் புதிய இணைப்புகளை வழங்குவதும் அதன் முதன்மை வேலையாக இருந்தது. அதே சமயத்தில் அடுத்தடுத்து உள்ள இரு நகரங்களை கேபிள் வழியாக இணைத்துத் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் அதன் இலக்காக இருந்தது.

இரு வேலைகளையும் ஒரே சமயத்தில் நிர்வகிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக துறைக்குள்ளேயே இன்னொரு துணைத்துறை அறுபதுகளில் உருவாக்கப்பட்டு நான்கு மண்டலங்களாக இயங்கத் தொடங்கியது. பெருநகரங்களையும் சிறுநகரங்களையும் இணைக்கும் பணிகள் நாடெங்கும் வேகவேகமாக நடக்கத் தொடங்கின.

எண்பதுகளில் கர்நாடக மண்டலத்தால் இளநிலை பொறியாளராக நான்  தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  பொறியாளருக்கான பயிற்சியை முடித்துக்கொண்டு நான் பெல்லாரியில் 1982இல் என் பணியைத் தொடங்கினேன். அப்போது ஆந்திரத்தின் குண்டக்கல் நகரத்தையும் கர்நாடகத்தின் பெல்லாரி நகரத்தையும் இணைக்கும் வேலை முடிந்திருந்தது. பெல்லாரி, ஹொஸபேட்டெ, கொப்பல, கதக், ஹுப்ளி என அடுத்தடுத்த நகரங்களை இணைக்கும் பணி தொடங்கவிருந்த சமயத்தில் நான் வேலையில் சேர்ந்தேன். ஹொஸபேட்டெயில் தங்கி இரு திசைகளிலும் ஒரே சமயத்தில் வேலையைத் தொடங்கி நிறைவேற்றும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது.

என் பொறுப்பில் ஆண்களும் பெண்களுமாக அறுபது பேர் வேலை செய்தனர். கேபிள் புதைப்பதற்கேற்ற வகையில் ஐந்தரை அடி ஆழமுடன் பள்ளத்தைத் தோண்டுவதுதான் அவர்கள் வேலை. நகரத்தைவிட்டு வெகுதொலைவில் ஏதேனும் ஒரு தோப்பில் அல்லது வெட்டவெளியில் தண்ணீர் வசதி உள்ள இடமாகப் பார்த்து கூடாரங்களை ஏற்படுத்தி, துறையினர் ஒரு பக்கமாகவும் தொழிலாளர்கள் ஒரு பக்கமாகவும் நாங்கள் தங்கியிருந்தோம்.

அப்போதுதான் அரிச்சுவடி வாங்கி வைத்துக்கொண்டு  நான் கன்னட எழுத்துகளைக் கற்கத் தொடங்கியிருந்தேன். எழுத்துகள் பழகியதும் பாடசாலையில் படிக்கும் மாணவனைப்போலவே ஒன்றாம் வகுப்புக்குரிய புத்தகம், இரண்டாம் வகுப்புக்குரிய புத்தகம் என வாங்கி வைத்துக்கொண்டு தினந்தோறும் படித்து பயிற்சி செய்துவந்தேன். என்னோடு தங்கியிருந்த கன்னட நண்பர்கள் எனக்கு வழிகாட்டினர். சின்னச்சின்ன வாக்கியங்களையும் பேசத் தொடங்கினேன். நான் எப்போடும் தொழிலாளர்கள் கூடவே இருந்து, அவர்களை மெல்ல மெல்லப் பேசவைத்து, பேச்சுமொழியைப் பழகிக்கொண்டேன். தொடக்கத்தில் தப்பும் தவறுமாகப் பேசி, பிறகு அவர்களால் திருத்தப்பட்டு ஒருசில மாதங்களிலேயே திருத்தமாகப் பேசக் கற்றுக்கொண்டேன்.

அவர்களைத் தொடர்ந்து பேசவைப்பதற்கு ஒரே வழி அவர்களைக் கதை சொல்லவைத்துக் கேட்பதுதான். அவர்கள் ஒவ்வொருவரும் கதைச்சுரங்கமாக இருந்தனர். வேலை நேரத்தில் மட்டுமன்றி, இரவு நேரத்தில் உணவுக்குப் பிறகு அவர்களுடைய கூடாரங்களுக்குச் சென்று அவர்களிடம் கதை கேட்பேன். என் வேண்டுகோளைக் கேட்டு அவர்களும் ஆர்வத்துடன் கதை சொல்வார்கள். எல்லாமே அவரவர்களுடைய சொந்தக்கதைகள். அவர்களுடைய பிள்ளைகளைப்பற்றிய கதைகள். நண்பர்களைப்பற்றிய கதைகள். தூக்கம் வரும்வரை அவர்களுடைய கூடாரத்திலேயே தங்கியிருந்து அந்தக் கதைகளைக் கேட்டுவிட்டு என் கூடாரத்துக்குத் திரும்பி வருவேன்.

மட்டிமணி, பார்க்கர் என இரண்டு தொழிலாளர்களின் பெயர்கள் இப்போது உடனடியாக நினைவுக்கு வருகின்றன. அவர்கள்தான் எனக்கு வலதுகையும் இடதுகையுமாக இருந்தனர். முடியாது என்கிற சொல்லே அவர்களிடமிருந்து வெளிவந்ததில்லை. அசகாய சூரர்கள். இருவருமே ஐம்பது வயதுக்காரர்கள். பேச்சுமொழியின் நுட்பத்தை அறியும் ஆவலால் அவர்களிடம் நான் எப்போதும் உரையாடிக்கொண்டே இருப்பேன். அவர்களுடைய இளமைக்காலத்தைப்பற்றி, தொடர்ந்து படிக்காததன் காரணத்தைப்பற்றி, ஊரில் நடந்த விசித்திரமான நிகழ்ச்சிகள் பற்றி, நண்பர்களைப்பற்றி, அவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி மனம் போன போக்கில் ஏதாவது ஒரு கேள்வி கேட்டு உரையாடலைத் தொடங்கிவைப்பேன். அவ்வளவுதான், அவர்கள் அருவி மாதிரி கொட்டத் தொடங்கிவிடுவார்கள்.

ஊழியர்களுடன் உரையாடுவது தவிர, கன்னட மொழியின் நெளிவுசுளிவுகளையும் உச்சரிக்கும் விதத்தை அறிந்துகொள்வதற்காகவும் வாரத்துக்கு இரண்டு திரைப்படம் பார்ப்பதையும் வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். ஒரு பயிற்சியைப்போல அதுவும் எனக்குப் பேருதவியாக இருந்தது. இரண்டு வழிமுறைகள் வழியாகவும் கன்னட மொழியை என்னால் எளிதாகக் கற்றுக்கொள்ள முடிந்தது.

அப்போது ஹொஸபேட்டெயில் ஒரு திரையரங்கில் புட்டண்ணா கனகல் இயக்கிய ரங்கநாயகி என்னும் திரைப்படத்தைத்  திரையிட்டிருந்தார்கள். அந்தத் திரைப்படம் ஓராண்டுக்கு முன்பே ஏற்கனவே வந்துபோன படமென்றும் அத்தருணத்தில் வேறு படம் எதுவும் கிட்டாத காரணத்தால் இரண்டாவது  முறையாகத் திரையிட்டிருப்பதாகவும் பேசிக்கொண்டனர். எதுவாக இருந்தாலும் கன்னட உச்சரிப்பையும் சொற்களையும் பேசும் விதங்களையும் அறிவதே என் முதன்மை நோக்கமாக இருந்ததால் நான் அந்தப் படத்தை ஆர்வத்துடன் பார்த்தேன்.

ஏதோ ஒரு வகையில் அந்தப் படம் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு நாடக நடிகையை ஒருவன் திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்னும் நிபந்தனையின் பேரில் திருமணம் செய்துகொள்கிறான். அவளும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்கிறாள். அவர்களுடைய இல்வாழ்க்கையின் விளைவாக அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. மூன்றாண்டு காலம் ஓடுவது தெரியாமல் ஓடிவிடுகிறது. அதற்கிடையில் அவள் நடித்துவந்த நாடகக்குழு நலிவடையத் தொடங்குகிறது. அவர்களுக்காக அவள் வந்து ஒரு நாடகம் நடித்துக் கொடுத்தால் குழு உயிர்த்திருக்க வாய்ப்புள்ளது என்று அவளிடம் அவர்கள் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறார்கள்.

வேறு வழியின்றி, தான் ஏற்றுக்கொண்ட நிபந்தனையை மீறி, நாடகத்தில் நடிக்கச் செல்கிறாள் அவள். நாடகம் பிரபலமாகி வெற்றியடைகிறது. குழு உயிர் பெற்று விடுகிறது. ஆனால் அவள் திரும்பி வரும் நேரத்தில் பூட்டிய வீட்டைத்தான் அவளால் பார்க்கமுடிகிறது.  அவள் கணவன் குழந்தையோடு எங்கோ சென்றுவிடுகிறான். அவளுடைய இல்வாழ்க்கை அத்துடன் முடிந்துபோகிறது.

வேறு வழியில்லாமல் அவள் மீண்டும் நாடக அரங்கத்துக்கே  வருகிறாள். நாடகக்கலை நலியத் தொடங்கிய சமயத்தில் ஒரு நண்பர் உதவியோடு திரைத்துறைக்குச் சென்று பெரிய நடிகையாகிறாள். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் இளம்வயது ரசிகனொருவனைச் சந்திக்கிறாள். அவள் மீது பெரும்பற்று கொண்டவனாக அவன் அவளோடு உரையாடுகிறான். ஒரு சில சந்திப்புகளிலேயே இருவருக்கும் அவர்களிடையில் உள்ள தாய் மகன் உறவு தெரிந்துவிடுகிறது.

எனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது. அடுத்தநாள் பள்ளம் வெட்டும் இடத்தில் அனைவரிடமும் அந்தப் படத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். அப்போது மட்டிமணி “நான் போன வருஷம் அந்தப் படம் வந்த சமயத்துலயே அதைப் பார்த்துட்டேன். அது நல்ல படம்தான் சார். இல்லைன்னு சொல்லலை. ஆனா இந்த மாதிரியான நாட்டுப்புறக்கதைகளும் புராணக்கதைகளும் ஏராளமா இருக்குது. படம் பார்க்கும்போது எனக்கு அதுதான் ஞாபகத்துக்கு வருது” என்றார்.

எனக்கு அவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது. “அப்படியா, என்ன கதை, சொல்லுங்க பார்ப்போம்” என்று கேட்டேன்.

அவர் சிரித்துக்கொண்டே ”ராமாயணத்துல லவகுசா கதை கேட்டதில்லையா நீங்க? யாரு தன்னுடைய அப்பான்னு தெரியாமயே ரெண்டு பேரும் அம்மாவோடு வளர்ராங்க. அந்தப் புள்ளைங்களுடைய அப்பா யாருன்னு சொல்றதில்லை. கடைசியா அஸ்வமேத யாக குதிரையைப் புடிச்சி கட்டி வச்சதால வரக்கூடிய சண்டைக்குப் பிறகுதான் தம்முடைய அப்பா  யாருன்னு அந்தப் புள்ளைகளுக்குத் தெரியுது” என்றார்.

நான் ஒருகணம் உறைந்துவிட்டேன். அந்தக் கோணத்தை நான் யோசிக்கவே இல்லை. நான் கண்கள் விரிய விரியப் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் மறுபடியும் பேசத் தொடங்கி “மகாபாரதத்துலயும் இந்த மாதிரி கதைகள் இருக்குதே சார். கடோத்கஜன் யாருங்கறத பீமன் குருக்ஷேத்திரத்துல சண்டை நடக்கற சமயத்துலதான் தெரிஞ்சிக்கறான். அர்ஜுனன் கூட பப்பரவாகனன் சண்டை போடும்போதுதான் அவன் தன்னுடைய பிள்ளைங்கற விவரம் தெரியுது. இப்படி நெறய இருக்குது சார்” என்றார்.

அவர் கதை சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அன்று முன்னிரவுப் பொழுதில் சாப்பாட்டு வேளைக்கு முன்னால் அவருடைய கூடாரத்துக்குச் சென்று அவரை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த துங்கபத்திரையின் கரையோரமாக நடக்கத் தொடங்கினேன். அப்போதுதான் ஒரு சிறுவனைப்போல “ஏதாவது ஒரு கதை சொல்லுங்க. கேட்டுகிட்டே வரேன்” என்றேன்.

“கதையா, என்ன கதை சார்?” என்று கேட்டபடி என்னை ஆச்சரியமாகப் பார்த்தார் அவர். “காலையில சொன்னீங்க இல்லையா, அது மாதிரி உங்களுக்குத் தோணுகிற ஏதாவது ஒரு நாடோடிக்கதையைச் சொல்லுங்க” என்று கேட்டுக்கொண்டேன்.

அவர் ஒருமுறை என்னை விசித்திரமாகப் பார்த்துவிட்டு “கதைதான, சொன்னா போச்சு” என்றபடி மடியிலிருந்த புகையிலையை எடுத்து ஒரு துண்டு கிள்ளி வாயில் வைத்து மெல்லத் தொடங்கினார். பிறகு “ஒரு ஊருல…” என்று ஆரம்பித்து ஒரு கதையைச் சொல்லி முடித்தார்.

இப்படித்தான் எனக்குக் கன்னட நாட்டுப்புறக்கதைகள் அறிமுகமாயின. மட்டிமணி எனக்குக் கதை சொல்வதைத் தெரிந்துகொண்டு, நாங்கள் இரவு வேளையில் துங்கபத்திரையிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால் ஓரமாக நடக்கப் புறப்படும்போது பார்க்கரும் எங்களோடு சேர்ந்துகொள்ளத் தொடங்கினார். ஒரு சில சமயங்களில் அவரும் கதைகளைச் சொன்னார். அவர்கள் இருவரும் கதைகளைச் சொல்வதைப் பார்த்த பிற தொழிலாளர்களும் அவ்வப்போது அவரவர்களுக்குத் தெரிந்த கதைகளைக் கூறத் தொடங்கினர்.

அவர்கள் அனைவருமே என்னை ஒரு சிறுவனாகக் கருதி தமக்குத் தெரிந்த கதைகளையெல்லாம் மிகுந்த பாசத்துடன் பகிர்ந்துகொண்டனர். அவர்களோடு நான் நெருங்கிப் பழகுவது என் அதிகாரிக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் என்னிடம் அதை நேரிடையாகச் சொல்ல அவரால் முடியவில்லை.  ஜாடைமாடையாக ஒரு சில முறை சொல்லிப் பார்த்தார்.  “ஒரு எஞ்சனீயர் மாதிரியா நடந்துக்கறாரு அவரு? கூலிக்காரங்க கூட பேசறதுக்கும் பழகறதுக்கும் ஒரு எல்லை தெரியலைன்னா, இவரெல்லாம் வாழ்க்கையில என்ன கத்துக்கப் போறாரு?” என்று என் காதுபடவும் சொல்லிப் பார்த்தார். நான் அதையெல்லாம் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அவர்களிடம் தொடர்ந்து கதைகளைக் கேட்டு வந்தேன்.

அந்த ஊரில் மட்டுமல்ல, ஹொஸபேட்டெயைத் தொடர்ந்து நான் வேலை செய்த எல்லா ஊர்களிலும் என்னிடம் வேலை செய்த தொழிலாளர்களிடம் பேச்சு கொடுத்து நட்பைச் சம்பாதித்து கதை கேட்பது என் வழக்கமானது. கதை கேட்பது மட்டுமல்ல, அந்தந்த ஊர்களில் நடைபெறும் நாடகங்களுக்கும் அவர்களோடு சென்று பார்ப்பேன். ஏதாவது பேசிக்கொண்டே இருப்பேன். நான் பிழையின்றி கன்னடம் பேசுவதற்கு அந்தத் தொழிலாளர்களே காரணம். அவர்கள் என்றென்றும் என் நன்றிக்குரியவர்கள்.

’பன்னீர்ப்பூக்கள்’ தொடர் முடிவடைந்ததுமே நண்பர் மருதன் “அடுத்த ஆண்டுக்கும் நீங்க ஒரு தொடர் எழுதணும். என்ன எழுதறதுன்னு நீங்களே முடிவு செஞ்சிக்குங்க” என்று சொன்னார். பன்னீர்ப்பூக்கள் முழுக்கமுழுக்க என் பள்ளிப்பருவ அனுபவங்களின் பதிவுகள். அதனால் கல்லூரிக்கால அனுபவங்களை எழுதலாம் என முதலில் நினைத்தேன். ஆயினும் அவை சரியான வடிவத்தில் உருத்திரண்டு வரவில்லை. நாட்கள் கழிந்தனவே தவிர, புதிய திட்டமெதுவும் என் மனத்தில் உதிக்கவில்லை. தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் பற்றி எழுதலாம் என்ற எண்ணத்தில் ‘கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும்’ என்று தலைப்பு கொடுத்து சில கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதினேன். ஆயினும் அவற்றைத் தொடர்ச்சியாக எழுதும் வேகம் கைகூடி வரவில்லை. அதனால் நானே நிறுத்திக்கொள்ளும்படி நேர்ந்தது.

ஒருநாள் தற்செயலாக என்னைச் சந்திக்கவந்த நண்பரொருவருடன் துங்கபத்திரையின் கரையோரமாக கூடாரங்களில் தங்கியிருந்த அனுபவங்களை முன்வைத்து உரையாடிக் கொண்டிருந்த சமயத்தில் மட்டிமணியைப்பற்றியும் பார்க்கரைப்பற்றியும் அவர்களிடமிருந்து தெரிந்துகொண்ட கதைகளைப்பற்றியும் சொன்னேன்.

அன்றிரவு உறங்குவதற்குச் செல்லும்போது அவர்களைப்பற்றிய நினைவுகள் மீண்டும் நெஞ்சிலெழுந்தன. ஏதோ ஒரு தேசத்திலிருந்து புறப்பட்டு பறந்துவரும் வலசைப்பறவைகளென, அவர்கள் வழியாகக் கேட்டுத் தெரிந்துகொண்ட கதைகளெல்லாம் என்னை நோக்கிப் பறந்துவந்தன. அக்கணமே அக்கதைகளையெல்லாம் எழுதவேண்டும் என்று முடிவெடுத்தேன்.  நண்பர் மருதனுக்கு உடனடியாக அத்தகவலை ஒரு குறுஞ்செய்தியாக அனுப்பிவைத்தேன். அவர் உடனடியாக ஒரு பச்சைக்கொடியைக் காட்டி எழுத்துவேலையைத் தொடங்கும்படி உற்சாகமூட்டிவிட்டு, அன்றே தளத்தில் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டார்.

அடுத்த நாள் காலையில் ஹுச்சையா கதையை எழுதினேன். இந்த உலகத்தில் தந்திரங்கள் அடையக்கூடிய வெற்றியையும் உண்மை எதிர்கொள்ளும் தடுமாற்றத்தையும் சுட்டிக்காட்டும் கதை. நாற்பதாண்டுகளுக்கும் மேலாகக் காலம் நகர்ந்துவிட்டபோதும், நண்பர்கள் சொன்ன கதை என் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளது. இப்படியே ஒவ்வொரு கதையாக நினைவிலிருந்து திரட்டித்திரட்டி எழுதிய கதைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கதையையும் எழுதி முடித்ததுமே வழக்கம்போல முதல் வாசகியாகப் படித்து வந்தவர் என் மனைவி அமுதா. துங்கபத்திரைக் கரையோரம்தான் எங்கள் இல்வாழ்க்கை தொடங்கியது. நான் நெருங்கி உரையாடிய தொழிலாளர்கள் பலரும் அவருக்கும் அறிமுகமானவர்களே. பல சமயங்களில் அவரும் எங்கள் உரையாடல்களின்போது பக்கத்திலேயே நின்று கேட்டதுண்டு. என்னுடைய அனைத்து முயற்சிகளிலும் எனக்கு உற்ற துணையாக இருக்கும் அமுதாவுக்கு என் இனிய அன்பு.

என் மனைவியைப்போலவே எல்லாக் கதைகளையும் ஒன்றுவிடாமல் வாசித்தவன் என் பாசத்துக்குரிய நண்பன் பழனி. எல்லாக் கதைகளையும் விரும்பி வாசித்து, அவை அளித்த அனுபவங்களையெல்லாம் தொடர்ந்து பகிர்ந்துவந்தான். அவனுக்கும் என் அன்பு.

மட்டிமணியும் பார்க்கரும் அப்போதே ஐம்பது வயதைத் தொட்டவர்கள். இப்போது இருக்கிறார்களா, இல்லையா என்பது தெரியாது. ஆயினும் அவர்கள் வழிவந்த தொழிலாளர்கள் இன்னும் அந்தத் துங்கபத்திரைக் கரையோரமாக வாழ்வார்கள் என்றும் என்னைப்போல யாரோ ஒருவருக்கு தாம் அறிந்த கதைகளை சுவாரசியாமாகச் சொல்லிக்கொண்டிருப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

என் மனம் கவர்ந்த அந்தத் துங்கபத்திரை நதியை நான் இங்கிருந்தபடியே வணங்குகிறேன். அந்தக் கரையோரத்தில் பணிபுரியும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த என் துறையையும் வணங்குகிறேன். என்னை ஒரு அதிகாரியாகப் பார்க்காமல் ஒரு பிள்ளையைப் பார்ப்பதுபோன்ற பாசத்துடன் பேசிப் பழகிய துங்கபத்திரைக் கரையோரத் தொழிலாளர்களையும் வணங்குகிறேன். அவர்கள் சொன்ன நாட்டுப்புறக்கதைகளைக் கொண்ட இத்தொகுதியை அவர்களுக்கே காணிக்கையாக்கி மகிழ்கிறேன்.