Home

Friday 31 March 2023

சாட்சி - சிறுகதை

 வாரத்துக்கு ஏழு நாட்கள் என்கிற கணக்கு ரொம்பவும் அனாவசியம் என்பதுதான் துரைசாமி நாயக்கரின் எண்ணம். சிற்சில சமயங்களில் ஒருவார காலம் என்பது முடிவே இல்லாமல் நீண்டுகொண்டே இருப்பது மாதிரியும் யாரோ ஒருவர் வேண்டுமென்ற சதி செய்து ஓடுகிற ஒன்றை இழுத்துக் கட்டிப்போட்டு நத்தை வேகத்தில் உருட்டி விடுகிற மாதிரியும் தோன்றும். ஒரு நாள் கழிவது ஒரு யுகம் கழிகிற சிரமமாய் இருக்கும். இல்லை இல்லை. அது கூட தப்பு என்பதே நாயக்கரின் அபிப்பராயம். சாட்சிக் கையெழுத்துக்கு எவனாச்சும் கூப்பிடமாட்டானா என்று ரெஜிஸ்டர் ஆபீஸ் படிகளில் ஏறுகிற இறங்குகிற முகங்களை எல்லாம் கண்கொட்டாது பார்க்கிற தனக்கு ஒரு மணி நேரம் கழிவதே ஒரு யுகம் கழிவது போல என்பதுதான் சரியான வசனம் என்று சொல்வார்.

இருவித மழைத்துளிகள்

 

ஒரு மழைக்காலம். சிறிது நேரத்திலேயே திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் மழை இல்லை. ஆனால் வீட்டுக்குத் திரும்பும் வழியில் மழை தொடங்கிவிட்டது. அதுவரை சாலையில் நடந்துகொண்டிருந்த ஒவ்வொருவரும் கண்ணுக்குத் தெரிந்த தெருவோர மரங்களை ஒட்டியும் கடைச்சுவர் விளிம்புகளை ஒட்டியும் ஓட்டமாக ஓடிச் சென்று நிற்கத் தொடங்கினர். ஒன்றிரண்டு நிமிட இடைவெளியிலேயே மழையின் வீச்சு பெருகிவிட்டது.  நானும் ஓட்டமாக ஓடிச் சென்று ஒரு பெட்டிக்கடையை ஒட்டி நின்றுகொண்டேன்.

Saturday 25 March 2023

பறக்கவைக்கும் விசை

 

ஒரு கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு நான் ஒரே ஒரு அளவுகோலைத்தான் வைத்திருக்கிறேன். என் நெஞ்சில் ஒரு பறவை உட்கார்ந்திருக்கிறது. அது எப்போதும் தன் விழிகளால் உயர்ந்தோங்கிய மரக்கிளைகளையும் வான்வெளியையும்  பார்த்தபடி இருக்கிறது. தரையிலிருந்து எம்பியெழுந்து சிறகுகளை விரித்து விண்ணை நோக்கிப் பறப்பதற்கான கணத்துக்குக் காத்திருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு புறவிசை வேண்டும். அந்த விசை மட்டும் கிடைத்துவிட்டால், அக்கணமே அது பறந்து விண்ணில் வட்டமிடத் தொடங்கிவிடும். எனக்குள் இருக்கும் பறவையை விண்ணை நோக்கிச் செலுத்தும் விசையாக நான் கவிதையைக் கருதுகிறேன். அதற்காகவே நான் கவிதைகளை நாடி வருகிறேன். நான் விரும்பும் விசையை வழங்குகிற கவிதையை  மிகவும் விரும்புகிறேன்.

கடந்து வந்த காலம்

  

தமிழ் வளர்த்த பெரியார்கள் என்னும் தலைப்பில் இராஜ.சிவ.சாம்பசிவ சர்மா என்னும் தமிழாசிரியர் 1950இல் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்ட தென்னிந்தியப் பதிப்புக்கழகம் அந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. நூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்தப் புத்தகத்தில் பாண்டித்துரைத்தேவர், இருதாயலய மருதப்பத் தேவர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயர், ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள், நமசிவாய முதலியார் ஆகிய   ஏழு அறிஞர்களுடைய வாழ்க்கைச்சுருக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவருமே பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான காலத்தில் தமிழின் வளர்ச்சிக்குத் தம்மாலான பங்களிப்பை வழங்கியவர்கள்.

செங்கோல் ஏந்திய கை - கட்டுரை

 

எங்கள் ஊரான வளவனூரின் மிகமுக்கியமான அடையாளங்களில் ஒன்று  திரெளபதை அம்மன் கோவில். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி வடக்குப் பக்கத்தில் அக்கோவிலைப் பார்க்கலாம். அதற்கு எதிரிலேயே பழைய காலத்து அரசமரம். அந்த மரத்தடியில் ஒரு காலத்தில் ஓய்வில்லாமல் பகல்முழுக்க இயங்கியபடி இருக்கும் மரச்செக்கு இருந்தது. அதற்கு எதிரிலேயே மேடைபோல உயரமாக உருவாக்கப்பட்ட ஒரு திடலும் இருந்தது. ஆனால் ஊருக்குள் திசைக்கொன்றாக எண்ணெய் ஆலை தோன்றிய பிறகு செக்கு போய்விட்டது. மாலை நேரங்களில் அரசியல் கூட்டங்கள் நடைபெறுவதற்கு வசதியாக இருந்ததாலும் எல்லாக் கூட்டங்களுக்கும் நூற்றுக்கணக்கில் பார்வையாளர்கள் திரண்டு வந்ததாலும் திடல் மட்டும் அப்படியே நீடித்தது.

Sunday 19 March 2023

வனவாசி - கட்டுரை

  

புஷ்பகிரி மலைத்தொடர் பயணத்தில் எடுத்த படங்களையெல்லாம் தொகுத்து மடிக்கணினியில் சேமித்து முடித்தபோது ஏதோ ஒரு பெரிய வேலையைச் செய்துமுடித்தமாதிரி இருந்தது. அறைக்குத் திரும்பியதுமே செய்து முடித்திருக்கவேண்டிய வேலை. ஆனால் மலையில் ஏறி இறங்கிய களைப்பில் எந்த வேலையும் ஓடவில்லை. உறங்கிவிட்டேன். காலையில் எழுந்ததும் தேநீர் அருந்திமுடித்த கையோடு வேலையைத் தொடங்கி முடித்துவிட்டுத்தான் நடைப்பயிற்சிக்குக் கிளம்பினேன்.

இதயத்தால் பார்ப்பவன்

  

’சின்னஞ்சிறு இளவரசன்’ நாவல் இப்படித் தொடங்குகிறது. சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே யாரிடமும் மனம்விட்டுப் பேசமுடியாமல் வளர்ந்து பெரியவனாகிறார் ஒருவர். பிறகு விமான ஓட்டுநராக  பணிபுரியச் செல்கிறார். அவர் பறந்துவந்த தனிவிமானம் ஏதோ விளங்கிக்கொள்ள முடியாத பழுது காரணமாக பாலைவனத்தில் தரையிறங்கிவிடுகிறது.  கண்ணுக்கெட்டிய தொலைவுவரை யாருமே இல்லாத பாலைவனத்தில் என்ன செய்வது, அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல் குழப்பத்தில் தவிக்கிறார் அவர்.  அடுத்த திட்டம் பற்றி யோசனையில்  மூழ்கியிருக்கும்போது எதிர்பாராத விதமாக அவருக்குத் தன் இளம்பருவத்து அனுபவமொன்று நினைவுக்கு வருகிறது. .  

Sunday 12 March 2023

உயரம் - கட்டுரை

  

கர்நாடகத்தின் வடகிழக்கு எல்லையை ஒட்டி இருக்கும் மாவட்டம்  பீஜப்பூர். வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நகரம். தொடக்கத்தில் சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நகரம்  பதினான்காவது நூற்றாண்டில் பாமினி சுல்தான்களின் ஆட்சியின் கீழ் சென்றது. அடுத்து இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு தக்காண சுல்தான்களின் கைகளுக்கு மாறியது. பதினேழாம் நூற்றாண்டில் முகலாய வம்சத்தைச் சேர்ந்த ஒளரங்கசீப் அந்நகரத்தின் மீது படையெடுத்து வென்று வசப்படுத்திக்கொண்டார். நிர்வாகவசதிக்காக அது ஐதராபாத் நிஜாமின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஆயினும் அரைநூற்றாண்டுக்குப் பிறகு நிஜாம் அரசு அந்நகரத்தை மராத்திய பேஷ்வாக்களிடம் போரில் இழந்தது. அடுத்த அரைநூற்றாண்டு காலம் மட்டுமே அவர்கள் கட்டுப்பாட்டில் அந்நகரம் இருந்தது.  பிறகு அவர்கள் மீது போர்தொடுத்த கிழக்கிந்திய கம்பெனி அந்நகரத்தைக் கைப்பற்றியது. சதாரா மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு பம்பாய் மாகாணத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தியா விடுதலை பெறும் வரை அந்த நிலை மாற்றமின்றி நீடித்தது.  விடுதலைக்குப் பிறகு கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டது.

ஒட்டியும் ஒட்டாமலும்

  

பிரபாகரின் சிறுகதைகளில் பெரும்பாலானவை கிராமவாழ்க்கை என்னும் தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப உறவுநிலை என்பதைத் தாண்டி சமூக உறவுநிலையே இக்கதைகளின் மையமாக உள்ளது. ஒரு பண்ணைக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் மேல்சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அப்பண்ணையில் வேலை பார்க்கும் அடிமட்டச் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையிலான உறவின் பல பரிமாணங்களை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கிறார் பிரபாகர்.