கர்நாடகத்தின் வடகிழக்கு எல்லையை ஒட்டி இருக்கும் மாவட்டம் பீஜப்பூர். வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நகரம். தொடக்கத்தில் சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நகரம் பதினான்காவது நூற்றாண்டில் பாமினி சுல்தான்களின் ஆட்சியின் கீழ் சென்றது. அடுத்து இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு தக்காண சுல்தான்களின் கைகளுக்கு மாறியது. பதினேழாம் நூற்றாண்டில் முகலாய வம்சத்தைச் சேர்ந்த ஒளரங்கசீப் அந்நகரத்தின் மீது படையெடுத்து வென்று வசப்படுத்திக்கொண்டார். நிர்வாகவசதிக்காக அது ஐதராபாத் நிஜாமின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஆயினும் அரைநூற்றாண்டுக்குப் பிறகு நிஜாம் அரசு அந்நகரத்தை மராத்திய பேஷ்வாக்களிடம் போரில் இழந்தது. அடுத்த அரைநூற்றாண்டு காலம் மட்டுமே அவர்கள் கட்டுப்பாட்டில் அந்நகரம் இருந்தது. பிறகு அவர்கள் மீது போர்தொடுத்த கிழக்கிந்திய கம்பெனி அந்நகரத்தைக் கைப்பற்றியது. சதாரா மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு பம்பாய் மாகாணத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தியா விடுதலை பெறும் வரை அந்த நிலை மாற்றமின்றி நீடித்தது. விடுதலைக்குப் பிறகு கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டது.
மாவட்டத்துக்கு தலைநகராக
உள்ள நகரங்களையெல்லாம் தேசிய தொலைபேசி கேபிள்வழித் தடத்தில் கொண்டுவர மேற்கொண்ட முதல்கட்ட
திட்டத்தின் கீழ் பீஜப்பூர் நகரத்துக்கும் எஸ்.ட்டி.டி. வசதி வழங்கப்பட்டுவிட்டது.
அது முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் பீஜப்பூரைச் சுற்றியிருக்கும் பசவனபாகேவாடி,
சிந்தகி, இன்டி, முத்தேபீஹாள், பாபலேஷ்வர், தேவரஹிப்பர்கி போன்ற சிறுநகரங்களையும் இணைக்கும்
திட்டத்தை செயல்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக கடந்த நூற்றாண்டின்
தொண்ணூறுகளின் இறுதியில் வழித்தடங்களைத் தீர்மானிக்கும் விதமாக நேரடி களஆய்வுக்காக
என்னுடைய குழுவுடன் நான் சென்றிருந்தேன்.
ஒரு வார காலம் பீஜப்பூரிலேயே
தங்கி எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து வேலையை முடித்தோம். வேலையைத் தவிர வேறெந்த
சிந்தனையும் மனத்தில் இல்லை. வேலை முடிந்த அன்றிரவே குழுவில் இருந்த நண்பர்கள் பெங்களூருக்குப்
புறப்பட்டுவிட்டார்கள். பீஜப்பூரைப்பற்றி ஏற்கனவே தெரிந்துவைத்திருந்த சில தகவல்களால்
அந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்கும் ஆசையை நான் வளர்த்துவைத்திருந்தேன். அதனால் நான்
மட்டும் பீஜப்பூரிலேயே தங்கிவிட்டேன்.
அடுத்த நாள் காலையில் சிற்றுண்டியை
முடித்ததுமே சுற்றிப் பார்க்க கிளம்பினேன். ஏற்கனவே உள்ளூரைச் சேர்ந்த நண்பர்களிடம்
உரையாடி முக்கியமான இடங்களைப்பற்றிய ஒரு பட்டியலை எழுதிவைத்திருந்தேன். அதை எடுத்து
ஒருமுறை படித்துப் பார்த்தேன். கோட்டை. இப்ராஹிம் ரெளசா. ஜும்மா மசூதி. மேதார் மகால்.
ககன் மகால். சங்கீத்நாரி மகால். பாரா கமான். கோல்கும்பஸ். ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும்
ஒரு வரலாறு இருக்கிறது, எல்லாவற்றையும் இணைத்துத்தான் அந்த நகரத்தைப்பற்றிய சித்திரத்தை
உருவாக்கிக்கொள்ள முடியும் என்று தோன்றியது. அதனால் எதையும் தவிர்க்கவேண்டாம், எல்லாவற்றையும்
பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். எந்த இடத்திலிருந்து தொடங்குவது என்பதைத்தான் என்னால்
முடிவெடுக்க முடியவில்லை. குழப்பத்துடன் அந்தப் பெயர்களையே மீண்டும் மீண்டும் வாசித்தபடியே
இருந்தேன்.
விடுதியின் வாசலைக் கடந்தபோது
எதிர்பாராமல் உதித்த எண்ணத்தால் மேலாளர் மேசைக்கு அருகில் நின்றிருந்தவருக்கு வணக்கம்
சொல்லி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். உதட்டோரம் அரைப்புன்னகையோடு அவர் என்னை நிமிர்ந்து
பார்த்தார் அவர். நான் என்னிடம் இருந்த பட்டியலை அவரிடம் கொடுத்தேன். ”இது எல்லாமே
இந்த ஊரில் இருக்கும் இடங்களுடைய பெயர்கள். எந்த இடத்திலிருந்து தொடங்கினால் எல்லாவற்றையும்
பார்க்க வசதியாக இருக்கும்? நீங்கள் உள்ளூர்க்காரர்தானே. கொஞ்சம் பார்த்துச் சொல்கிறீர்களா?”
என்று கேட்டேன்.
அவர் அச்சீட்டை வாங்கி
ஒவ்வொரு பெயராகப் படித்தார். பிறகு கன்னத்தின் மீது வலதுகை விரல்களை உயர்த்தி அழுத்தமாகத்
தடவியபடி ஒரு கணம் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு என்னிடம் “கோல்கும்பஸ்லேர்ந்து ஆரம்பிங்க
சார். சந்தேகமே வேணாம். அதுதான் ரொம்ப முக்கியமான இடம். உலகத்துலயே உயரமான கோபுரம்.
உலக அதிசயங்கள் பட்டியல்ல பேர் இல்லையே தவிர, உண்மையான அதிசயம். பீஜப்பூர்னு சொன்னா கோல்கும்பஸ். கோல்கும்பஸ்னு
சொன்னா அது பீஜப்பூர். அதனால நீங்க முதல்ல அங்க போங்க” என்றார்.
அந்த ஆலோசனையக் கேட்டதுமே
உடல்முழுவதும் ஒரு சுறுசுறுப்பு பரவத் தொடங்கியது. நன்றி சொல்லிவிட்டு சீட்டை வாங்கி
பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தேன். ஓர் ஆட்டோவை நிறுத்தி, கோல்கும்பஸுக்குச் செல்லும்படி
சொன்னேன்.
இருபுறங்களிலும் கடைகள்
அடர்ந்த நெரிசலான தெருக்களின் ஊடாக ஓடிய வாகனம் ஒரு திருப்பத்தில் பச்சைப்புல் படர்ந்த
வெட்டவெளியின் ஊடாக சிறிது தொலைவு ஓடி நின்றது. வண்டிப்பாதையை ஒட்டி ஒருசில மரங்கள்
மட்டுமே நின்றிருந்தன.
தொலைவில் கோல்கும்பஸின்
உயரமான குவிமாடம் நீல வானத்தின் பின்னணியில்
கண்ணைக் கவர்ந்தது. தொடக்க காலத்தில் செவ்வண்ணம் படிந்த கட்டடமாக இருந்திருக்கவேண்டும்.
அப்போது நிறம் மங்கி செம்மையும் வெண்மையும் கலந்த ஒரு நிறத்தில் காணப்பட்டது.
நெருங்கிச் சென்று அண்ணாந்து
பார்த்தேன். திரைச்சீலையில் தீட்டப்பட்ட ஓவியமென கண்முன்னால் தெரிந்த குவிமாடத்தைவிட்டு
பார்வையை அகற்ற மனமே வரவில்லை. என்ன உயரம், என்ன உயரம் என்று மனம் குரலெழுப்பியபடி
இருந்தது.
ஒரு பெரிய சதுரமான கட்டடத்தின்
நான்கு மூலைகளிலும் இணையான உயரமுடைய நான்கு கலங்கரை விளக்கங்களை தூண்களென நிற்கவைத்து
இணைத்ததுபோன்ற அடித்தளம். அதற்கு மேல் எல்லா மூலைகளையும் இணைத்தபடி வானத்தைப் பார்த்தபடி
இருக்கும் அரைவட்டக் குவிமாடம். கதவுகளும்
குவிமாடத்தின் அமைப்பில் இருந்தன. சொக்கவைக்கும் அதன் அழகில் மயங்கி அந்தக் கட்டுமானத்தையே
சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்தபடி நடந்தேன். ஒவ்வொரு கோணத்திலும் அதன் வடிவமும் அழகும்
மாறிமாறி மனத்தை ஈர்த்தது. ஒன்றைப் பார்க்கும்போது இன்னொன்றைக் கவனிக்க முடியவில்லை.
தூண் என்று பெயருக்குச்
சொன்னாலும் அது உண்மையில் தூணல்ல. ஏழு செங்குத்தான பார்வை மாடங்களை உருவாக்கி ஒன்றன்
மீது ஒன்றென அடுக்கிவைக்கப்பட்டதுபோல இருந்தது. ஒவ்வொரு பார்வை மாடமும் இரண்டு மூன்று
ஆள் உயரத்தில் இருந்தது. ஏழாவது மாடத்தின் மேல்தளமும் சதுரக் கட்டுமானத்தின் மேல்தளமும்
இணைந்து அரைவட்டக் குவிமாடத்தைத் தாங்கும் புற இதழ்களென விரிந்திருந்தன. ஒவ்வொரு பார்வைமாடத்தின்
உச்சியிலும் அழகான ஒரு குவிமாடம். அவற்றுக்கு நடுவில் அகலமும் உயரமும் கொண்ட பெரிய
குவிமாடம். பாதியாக வெட்டி தலைகீழாக கவிழ்த்துவைத்த தேங்காய் போல இருந்தது. ’நீளாதுங்க
ஸ்தனகிரி தடீசூப்த முத்போத்ய க்ருஷ்ணம்’ என்று எப்போதோ கேட்ட பாடல் வரி மனத்தில் எழுந்தது
பார்வை மாடத்தின் நுழைவாயில்
வழியாக கோல்கும்பஸைப் பார்க்க வந்திருக்கும் வெளியூர்க்காரர்கள் நுழைந்து படிக்கட்டின்
வழியாக மேலே ஏறிக்கொண்டிருந்தார்கள். ’என்ன
உயரம், என்ன உயரம்’ என்பதே ஒவ்வொருவரும் உரையாடிக்கொள்ளும் சொற்களாக இருந்தன.
ஒவ்வொரு தளத்தின் பார்வைமாடத்திலும்
ஆட்கள் நின்று சாளரங்கள் வழியாக வெளிப்புறத்தில் இருப்பவர்களைப் பார்த்து கைகளை அசைத்து
சத்தமிட்டு அழைத்தபடியும் இருந்தார்கள். சாளரத்தின் அருகில் நிற்கும்போது அவர்கள் அனைவரும்
ஏதோ வரலாற்றுக் காலத்துக்குள் நுழைந்துவிட்டதுபோலத் தோன்றியது. நானும் நிகழ்காலத்துக்கும்
இறந்தகாலத்துக்கும் இடையில் ஊடாடிக்கொண்டே இருந்தேன்.
”கோலான்னு சொன்னா வட்டம்னு
அர்த்தம்” என்று எனக்கருகில் எழுந்த குரலைக் கேட்டபிறகே நான் தன்னுணர்வை அடைந்தேன்.
சிலிர்ப்புடன் திரும்பியபோது கல்லூரி ஆசிரியரைப்போல தோற்றமளித்த ஒருவர் அங்கே நின்றிருந்தார்.
அவரைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளம்பெண்களும் அவர் சொல்வதைக் கவனித்தபடியே
நின்றிருந்தார்கள். நானும் அவர் சொல்வதை ஆர்வமுடன்
கேட்கத் தொடங்கினேன்.
“கும்பஸ்னு சொன்னா கும்மட்டம்னு
அர்த்தம். கும்மட்டம்னா என்னன்னு தெரியுமில்லையா, குவிமாடம். கோலா கும்பஸ்னா வட்டவடிவ
குவிமாடம்னு அர்த்தம். கோலா கும்பஸ்ங்கற வார்த்தைதான் காலப்போக்குல கோல்கும்பஸா மாறிட்டுது”
அவரைச் சுற்றி பத்துக்கும்
மேற்பட்ட இளைஞர்களும் இளம்பெண்களும் நின்றிருந்தார்கள். அப்படி யாராவது ஒருவர் சொல்லச்சொல்ல
ஓர் இடத்தைப் பார்க்கும்போது என்னையறியாமலேயே நானும் ஒரு கல்லூரி மாணவனின் மனநிலைக்கு
மாறிவிடுவதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அன்றும் அதுதான் நேர்ந்தது. அந்த இளைஞர்களின்
பின்னால் சென்று நானும் நின்றுகொண்டேன். அந்த ஆசிரியரின் பார்வை ஒருகணம் என்மீது படர்ந்தது.
அக்கணமே நான் அவரை நோக்கிச் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ”நீங்க சொல்றத
கேக்கணும்போல இருக்குது. நானும் உங்க கூட வரலாமா?” என்று கேட்டேன். ஒரு புன்னகையோடு
அவர் தலையசைத்ததும் நான் ஒரு மாணவனுக்குரிய
உற்சாகத்துடன் அவர்களைத் தொடர்ந்தேன்.
”இதைக் கட்டியது யார் தெரியுமா?”
என்று வினா எழுப்பியபடி திறந்திருந்த நுழைவுவாயில்
வழியாகச் சென்றார் ஆசிரியர்.
“அடில் ஷா சார்” என்று
ஒரே ஒரு பெண் பதில் சொன்னாள், ஆசிரியர் புன்னகையுடன் திரும்பி “கரெக்ட்டான பதில். தயக்கமில்லாம
உரத்த குரல்ல சொல்” என்று ஊக்கம் கொடுத்தார். மறுகணமே அப்பெண் உரத்த குரலில் ”அடில் ஷா” என்றாள்.
“கரெக்ட். ஆனால் வெறும்
அடில் ஷா இல்லை. முகம்மது அடில் ஷா ன்னு சொல்லணும்.
அடில் ஷாங்கறது அவங்களுடைய வம்சப்பெயர். முகம்மது அடில் ஷா அந்த வம்சத்துடைய ஏழாவது
அரசர். அவர் எதுக்காக இதை கட்டினார் தெரியுமா?”
அந்தப் பெண் உதட்டைப் பிதுக்கி
தெரியாது என்பதற்கு அடையாளமாக தலையசைத்தார். அப்போது அவள் காதுகளில் அசைந்த ஜிமிக்கி
கம்மல்கள் அசையும் குவிமாடத்தொங்கலெனத் தோற்றமளித்தன.
“ஷாஜகான் மாதிரி காதலுக்காகவா
சார்?” என்று அந்தப் பெண்ணின் தோளையொட்டி நின்றிருந்த மற்றொரு பெண் கேட்டாள்.
இல்லை என்பதுபோல ஆசிரியர்
தலையசைத்தார்.
“வேற நாட்டின் மீது படையெடுத்து
அடைந்த வெற்றியின் நினைவுச்சின்னமாகாவா?” என்று கேட்டான் ஓர் இளைஞன். ஆசிரியர் அதுவும்
இல்லை என்றார்.
“அம்மா அல்லது அப்பா அல்லது
நண்பன் நினைவாகவா?” என்று சொல்லிக்கொண்டே போனான் இன்னொரு இளைஞன். ஆசிரியர் புன்னகைத்தவாறே
அவன் தோளைத் தட்டினார்.
“யாருக்காகவாவது கொடுத்த
அன்பளிப்பின் நினைவா?” என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள் ஒரு பெண். இல்லை என்பதற்கு
அடையாளமாக கையை உயர்த்தி அசைத்தார் ஆசிரியர்.
நான் யோசித்துப் பார்த்தேன்.
எனக்கும் பதில் தெரியவில்லை. ”சரி சரி, நானே சொல்றேன்” என்று அவரே சொல்லத் தொடங்கினார்.
“அடில் ஷா வம்சத்துலதான்
அதுக்கு முன்னால இல்லாத அளவுக்கு பீஜப்பூர் பெரிய வளர்ச்சியை அடைஞ்சது. அவுங்கதான்
விவசாயத்தை வளர்த்தாங்க. தொழிலை வளர்த்தாங்க. அதனால் அரசாங்கத்துக்கு நிறைய வரிப்பணம்
சேர்ந்தது. அதை செலவு பண்ணி இந்த மண்ணுல சில அதிசயமான கட்டுமானங்களை கட்டணும்னு அவுங்க
நினைச்சாங்க. அந்த வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டட வடிவமைப்பாளர்கள் இஸ்லாமியக்
கட்டடக்கலையையும் இந்தியக்கட்டடக்கலையையும் இணைச்சி ஒரு புதுமையான விதத்துல கட்டினாங்க.
ஏற்கனவே ஒவ்வொரு ராஜாவும் மசூதி, மகால்னு புது புது அமைப்புல ஏராளமா கட்டிட்டாங்க.
இப்ராஹிம் ரெளசாவ பார்த்தீங்கன்னா அச்சு அசலா அப்படியே தாஜ்மகால் மாதிரியே இருக்கும்.
தனக்கு முன்னால வாழ்ந்த ஆறு அரசர்கள் செய்ததைவிட இன்னும் ஏதாவது புதுமையா செய்யணும்னு
நினைச்சார் முகம்மது அடில் ஷா. அதுதான் இந்த கோல்கும்பஸ்”
“இதுல என்ன சார் புதுமை?”
ஒரு இளைஞன் தயக்கத்தோடு
கேட்டான்.
“நிறைய புதுமை இருக்குது.
இந்தக் கட்டுமானத்தின் ஒவ்வொரு பக்கமும் நாற்பது மீட்டர் நீளம். உயரம் அறுபது மீட்டர்.
கிட்டத்தட்ட இருநூறு அடி. அந்த வட்டவடிவக் கோபுரம் இருநூறு அடி உச்சியில இருக்குது.
இவ்வளவு பெரிய சுற்றளவு கொண்ட அரைவட்டத்தைத் தாங்கக்கூடிய மைய ஆதாரம் எதுவுமே இங்க
இல்லை. இதுவே ஒரு அதிசயம்தானே?”
அந்த இளைஞன் மெளனமாக அவர்
சொல்வதை ஏற்றுக்கொள்வதுபோல தலையசைத்தான்.
“ஒரு குடையை மனசுக்குள்ள
கற்பனை செஞ்சி பாத்துக்க. அந்தக் குடைக்கு நடுவில ஒரு தாங்கறதுக்கு ஒரு தண்டு இருக்குது.
நடுத்தண்டே இல்லாத ஒரு குடையை உங்களால கற்பனை செய்ய முடியுமா? அப்படிப்பட்ட ஒரு கற்பனையை
அந்த காலத்துல ஒருத்தர் சாத்தியப்படுத்தியிருக்கிறார். இந்த உலகத்துலயே இதுதான் உயரமான குவிமாடம் அதைவிட
வேறென்ன புதுமை வேண்டும்?”
கேள்வி கேட்ட இளைஞன் பெண்கள்
பக்கம் பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்துவிட்டு திரும்பிக்கொண்டான்.
ஆசிரியர் தன்னிச்சையாக
“நம்ம வீட்டுக்குள்ளயே சில சமயங்கள்ல நம்ம பேச்சு எதிரொலிக்கறத யாராவது கேட்டிருக்கீங்களா?”
என்ற கேள்வியோடு மீண்டும் தொடங்கினார்.
”நான் கேட்டிருக்கேன் சார்.
நம்ம காலேஜ்ல எதிரொலி வராத அறையே இல்லை” என்றான் ஒரு இளைஞன். உடனே எல்லோருடைய முகங்களும்
புன்னகையுடன் அதை எதிரொலித்தன. ஆசிரியர் அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்து சொல்லிக்கொண்டே
இருந்தார்.
“ஆனா, இவ்வளவு பெரிய கட்டுமானத்துக்குள்ள
நீங்க எங்க நின்னு எவ்வளவு சத்தமா பேசனாலும் எதிரொலியே கேட்காது. அவ்வளவு நுட்பமா கட்டியிருக்காங்க.”
உரையாடிக்கொண்டே அவர்களை
உள்ளே அழைத்துச் சென்றார் ஆசிரியர். உயரமான கூரை. அண்ணாந்து பார்க்கும்போது மயக்கம்
வரும்போல இருந்தது. உச்சியில் எரிந்த விளக்குகள் நட்சத்திரங்களைப்போல மின்னி கண்களைக்
கூச வைத்தன.
அங்கே உச்சியில் ஒரு தளம்
இருப்பதையும் அதன் தடுப்புச்சுவருக்கு அருகில் நின்று சிலர் எட்டிப் பார்த்து சிரிப்பதையும்
அப்போதுதான் பார்த்தேன். தரையிலிருந்து பார்க்கும்போது ஏதோ விண்ணுலக மாந்தர்கள் போல
அவர்கள் தோற்றமளித்தார்கள்.
அப்போதுதான் நடுக்கூடத்தில்
ஐந்து கல்லறைகள் அடுத்தடுத்து இருப்பதைப் பார்த்து சற்றே திகைத்து நின்றேன்.
என்னைப்போலவே திகைப்புற்ற
ஒரு பெண் “யாருடைய கல்லறை சார் இது?” என்று ஆசிரியரிடம் கேட்டாள்.
“இது அடில்ஷாவுடைய கல்லறை.
இந்தப் பக்கம் இருப்பது அவருடைய இளைய மனைவியின்
கல்லறை. அந்தப் பக்கம் இருப்பது மூத்த மனைவியின் கல்லறை. இன்னொன்று அவருடைய மகளுடைய
கல்லறை. அந்தக் கடைசியில் இருப்பது பேரனுடைய கல்லறை”
“இங்க எதுக்கு சார் கல்லறை?”
“அதுதான் அந்த அரசருடைய
விருப்பம். தன்னுடைய கல்லறை மீது இந்த உலக அதிசயம் நிக்கணும்னு அவர் நினைச்சிருக்கார்.”
”உயிரோடு இருக்கும்போதே
கல்லறைக்கான இடத்தைத் தீர்மானிச்சிட்டு இந்த அதிசயத்தை கட்டினாரா?”
”ஆமாம். அவர் ஆட்சிக்கு வந்ததுமே அதைப்பத்தி அவர்
யோசிச்சி வேலையை ஆரம்பிச்சிருக்கார். இருபது வயசுலயே அவர் ஆட்சிக்கு வந்துட்டார். ஆனா
அந்த வயசுலயே அவருக்கு அந்த அளவுக்கு பக்குவமான யோசனைகள் வந்திருக்குது. ஒருபக்கம்
ஷாஜகான் கூட நல்லுறவு ஒப்பந்தம் போட்டு இந்த நாட்டுக்கு தன்னாலான நல்லதையும் செஞ்சிருக்கார்.
இன்னொரு பக்கம் இந்த மாதிரி அதிசயத்தை கட்டியெழுப்பும் முயற்சியையும் செஞ்சிருக்கார்.”
“அப்பவே கட்டிட வேலையை
ஆரம்பிச்சிட்டாங்களா சார்?”
“ஆமாம். ஆட்சிக்கு வந்ததுமே
அவர் ஆரம்பிச்சிட்டார்னுதான் வரலாறு சொல்லுது. மொத்தம் முப்பது வருஷம் அவர் ஆட்சி புரிஞ்சிருக்காரு.
முப்பது வருஷமும் இந்த வேலை நடந்திருக்குது”
“முப்பது வருஷமா?” எல்லோருமே
கைவிரலை உயர்த்தி முகவாயில் வைத்தனர்.
“இதனுடைய கலைவேலைப்பாட்டுக்கு
அந்த அளவுக்கு கால அவகாசம் தேவைப்பட்டிருக்குது. அந்தப் பார்வையாளர் மாடத்தையும் அதிலிருக்கிற
சாளரங்களையும் பாருங்க. என்ன மாதிரி அழகு. என்ன மாதிரி கச்சிதம். ஒரு நூல் அளவு கூட
ஒன்னுக்கொன்னு வித்தியாசம் இல்லை. அத்தனை வருஷம் வேலை செய்தும் அவர்களால இந்த கட்டுமானத்தை
முடிக்கமுடியலை.“
“ஏன்?”
“ஒளரங்கசீப் கூட போரிட்ட
சமயத்துல அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரும் இல்லாம, ஆட்சியும் இல்லாம யாரு கட்டறது?
அதனால முடிவுறாத கட்டடமா நின்னுட்டுது”
பேசிக்கொண்டே ஆசிரியர்
நடந்தார். அதைக் கேட்டுக்கொண்டே ஆறு மாடங்களையும் கடந்து ஏழாவது மாடம் வழியாக உள்தளத்துக்கு
நாங்கள் வந்தோம். வெளிச்சம் சூழ்ந்த ஏதோ ஒரு
பளிங்குப்பாறைகளால் சூழப்பட்ட குகைக்குள் இருப்பதுபோலத் தோன்றியது.
அந்த இளைஞர்கள் ஆசிரியரிடம்
ஓய்வில்லாமல் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டபடி இருந்தனர். எல்லோருடைய கேள்விகளுக்கும்
அவரும் சலிப்பில்லாமல் பதில் சொல்லிக்கொண்டே இருந்தார். அன்று அவர் வழியாகவே நான் எல்லாவற்றையும்
தெரிந்துகொண்டேன். அந்தக் கூட்டத்தினரை நான் பார்த்திராவிட்டால் ஏதோ ஒரு உயர்ந்த கட்டிடம்,
இந்தோ இஸ்லாமிய கட்டடக்கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட கட்டடம் என்ற அளவில் நினைத்துக்கொண்டு
கிளம்பியிருப்பேன். அன்றைய நாள் எனக்குச் சாதகமான நாளாக அமைந்துவிட்டது.
அவர்கள் கீழே இறங்கத் தொடங்கியதும்
நானும் அவர்களைத் தொடர்ந்து இறங்கினேன். தரைக்கு வந்ததும் அனைவரும் தமக்காக காத்திருக்கும்
வாகனத்தை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார். “நில்லுங்க நில்லுங்க” என்று தடுத்தார்
ஆசிரியர். “அதுக்குள்ள என்ன அவசரம்? பார்த்தது போதும்ன்னு நினைச்சிட்டீங்களா?” என்று
சிரித்தார். இன்னும் என்ன பாக்கி என்பதுபோல ஆசிரியரைப் பார்த்தனர் அவர்கள். அப்போதுதான்
அவர் கும்பாஸ்க்கு அருகில் இருந்த இன்னொரு இடத்தைச் சுட்டிக் காட்டினார்.
“அது என்ன சார்?”
”வாங்க, போய் பார்க்கலாம்”
முகத்தில் கேள்விக்குறியோடு
அனைவரும் ஆசிரியரைப் பின்தொடர்ந்தனர். நானும் அவர்களைத் தொடர்ந்து சென்றேன். கும்பாஸின்
சுற்றுச்சுவருக்கு அப்பால் ஒரு திருப்பம் இருந்தது. அதில் திரும்பி நடந்தோம். எல்லாமே
பழைய கட்டிடங்கள். ஆனால் பொலிவோடு பராமரிக்கப்பட்டிருந்தன.
சில அடிகள் நடந்த பிறகுதான்
வரிசை வரிசையாக கல்லறை மேடுகள் தெரிந்தன. சட்டென ஒரு பெண் தயங்கி “என்ன சார்? எல்லாமே
கல்லறையா இருக்குது?” என்று சற்றே பின்வாங்கியபடி தயக்கத்துடன் கேட்டாள்.
“கல்லறைதான். அதுக்கு ஏன்
பயப்படறே? தைரியமா வா” என்றார் ஆசிரியர். முன்னால் நடந்து அவ்விடத்தில் சிறப்புடன்
பராமரிக்கப்பட்ட ஒரு கல்லறைக்கு அருகில் நின்றார். அதன் மீதிருந்த பச்சை விரிப்பு வெளிச்சம்
பட்டு தகதகத்தன.
“இது முகம்மது அடில் ஷா
காலத்துல வாழ்ந்த சூஃபி ஞானி. பெயர் ஹஷிம் பீர். அகமதாபாத்லேருந்து வந்து பீஜப்பூர்ல
தங்கிட்டார். சிவாலயத்தின் திருநீறைப் பூசியதும் திருநாவுக்கரசரை வாட்டி வந்த சூலை
நோய் நீங்கியதுன்னு படிச்சிருக்கிறோம் அல்லவா? அதேபோல இந்த ஞானியின் பிரார்த்தனையால்
அடில் ஷாவைத் தாக்கிய நோய் நீங்கி ஆயுள்பலம் பெருகியதுன்னு ஒரு நம்பிக்கை இருக்குது.
அதற்கு நன்றிக்கடனா, வாழ்க்கை முழுக்க அவரையே தன் குருவா நினைச்சி மதிச்சிருக்கார்
அடில் ஷா. அதனால குருவுடைய கல்லறைக்கு பின்னால தன்னுடைய கல்லறை இருக்கணும்னு நினைச்சி,
கோல்கும்பஸ கட்ட இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். குருவுக்கும் மாணவனுக்கும் ஒரே இடத்தில்
கல்லறை. அரசர் என்பதால மட்டும் அடில் ஷாவை மக்கள் மதிக்கலை, அவருக்கு இருந்த குருபக்தியும்
ஒரு காரணம்”
தொடர்ந்து அனைவருக்கும்
சூஃபி ஞானிகள் மரபை விளக்கிக்கொண்டே ஆசிரியர் வெளியே நடந்தார். அனைவரும் வாகனத்தை நெருங்கி
ஒவ்வொருவராக உள்ளே செல்லத் தொடங்கினர். நான் அந்த ஆசிரியரின் கைகளைப் பற்றி குலுக்கி
”ரொம்ப நன்றி” என்றேன். வாகனம் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந்து கையசைத்து விடைகொடுத்தேன்.
எனக்கும் அங்கிருந்து கிளம்பவேண்டும்
என்று தோன்றியது. பட்டியலில் உள்ள இடங்களை இனிமேல்தான் பார்க்கவேண்டும் என்ற எண்ணம்
எழாமலில்லை. ஆயினும் அந்த இடத்திலிருந்து புறப்பட மனமே இல்லை. குவிமாடத்தின் உயரமும்
அலங்கார மாலைத் தொங்கலென நீண்டிருக்கும் பார்வைமாடங்களின் தொகுப்புக் கோபுரமும் காந்தமென
இழுத்தபடி இருந்தன.
“போவலாமா தாத்தா?” என்று
சத்தமாக ஒலித்த ஒரு சிறுவனின் குரலைக் கேட்டு என் கவனம் சிதைந்தது. குரல் வந்த திசையில்
திரும்பிப் பார்த்தேன். சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் புன்னகைத்தபடி
“ம்” என்று சொல்ல, வண்டியை லாவகமாகத் திருப்பி்னான் சிறுவன். “வரேன் மாமா, எங்கயும்
போயிடாதீங்க. இங்கயே இருங்க” என்று ஆட்டோக்காரரைப் பார்த்து சொல்லிவிட்டு வண்டியைத்
தள்ளிக்கொண்டு சென்றான். அவன் சிறிது தொலைவு செல்லும் வரைக்கும் “ஜாக்கிரதைடா மகேஷ்.
மெதுவா தள்ளிட்டு போ. பள்ளம் மேடு பார்த்து போ” என்று சொல்லிக்கொண்டே இருந்தார் ஆட்டோக்காரர்.
கும்பஸைச் சுற்றியிருக்கும்
கூட்டத்தோடு கூட்டமாக சக்கர நாற்காலியும் கலந்துவிடும் வரை, அந்தத் திசையையே பார்த்துக்கொண்டிருந்த
ஆட்டோக்காரர் திரும்பி வந்து ஆட்டோவுக்கு அருகில் இருந்த கல்திண்டு மீது உட்கார்ந்தார்.
நான் அவரையே பார்ப்பதை உணர்ந்தவராக “என்ன சார்? என்னயே பார்க்கறீங்க?” என்று கேட்டார்.
அவரையே கவனித்தபடி இருப்பதை நானும் அப்போதுதான் உணர்ந்தேன்.
“ஒன்னுமில்ல, சும்மாதான்”
என்று புன்னகைத்தபடி தலையசைத்தேன். பிறகு “சக்கர நாற்காலியில யாரு? அப்பாவா?” என்று
கேட்டேன்.
ஆட்டோக்காரர் சிரித்தார்.
“அப்பாவா? ஐய, நான் சின்ன புள்ளையா இருக்கும்போதே எங்க அப்பா செத்து சிவலோகம் போய்
சேந்துட்டாரு சார்” என்றார். ”இவரு ஆஞ்சனப்பா. பெரிய வள்ளல். புள்ளைங்க எல்லாம் வெளிநாட்டுல
இருக்காங்க. இவரும் பாட்டியம்மாவும் மட்டும் இங்கயே இருக்காங்க“
“தனியாவா?”
“தனியாத்தான வந்தம் சார்?
தனியாத்தான் பொழைச்சாவணும். ரெண்டு மூனு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் தாத்தா ஊக்கமா
நடமாடிட்டுத்தான் இருந்தாரு. திடீர்னு ஒருநாள் ரெண்டு காலும் உழுந்துடிச்சி. இப்ப ஆளுங்கள
வச்சித்தான் பாத்துக்கறாங்க”
“இந்த நிலையில இவ்ளோ தூரம்….”
“அதுவா? அவரு நல்ல நிலையில
நடமாட்டத்துல இருந்த சமயத்துல இதுதான் தாத்தாவுக்கு வாக்கிங் ஸ்பாட். வீட்டிலிருந்து
இங்க வரைக்கும் நடந்து வருவாரு. கோல்கும்பஸ ஒரு பத்து சுத்து சுத்துவாரு. திடீர்னு எல்லாமே நின்னு போனதும் அவருக்கு பைத்தியம்
புடிச்ச மாதிரி ஆயிட்டுது.”
“த்ச். பாவம்”
“வாழ்க்கை முழுக்க புண்ணியங்கள
சேத்தவருக்கு இப்படி ஒரு நிலைமை. எல்லாமே விதி. நாம என்ன செய்யமுடியும், சொல்லுங்க”
“என்ன சொல்றீங்க?”
“ஆமா சார். தாத்தாவுக்கு
ரொம்ப தாராள மனசு. இந்த ஊர் ஸ்கூலுக்கு பில்டிங் வாங்கி கொடுத்ததே இவருதான். எங்க தெருவுல
ஆறேழு ஏழை பசங்கள அவருதான் பணம் கட்டி யூனிஃபார்ம் வாங்கி குடுத்து படிக்க வைக்கறாரு.
என் பொண்ணுங்களுக்கு கூட அவருதான் மாசாமாசம் பணம் கட்டறாரு. தெனமும் ராத்திரியில இங்க்லீஷ்
வராத பசங்களுக்கு டியூஷன் எடுப்பாரு.“
“அதெல்லாம் சரி, அவரு இருக்கிற
நிலைமையில அவர ஏன் இங்க கூப்ட்டு வந்தீங்க?”
“அதுவா? தாத்தா ஊட்டுலதான்
என் ஊட்டுக்காரி வேலை செய்யுது. தாத்தா தெனமும் பாட்டிகிட்ட புலம்பறத, என் ஊட்டுக்காரிகிட்ட
ஒருநாள் சொல்லியிருக்காங்க. அது என்கிட்ட சொல்லிச்சி. அதுக்கப்புறம் நானா போய் ஆட்டோவுல
தூக்கி வச்சிட்டு வர ஆரம்பிச்சிட்டேன். தாத்தாவுக்கு சந்தோஷம்னா அவ்ளோ சந்தோஷம். வாரம்
ஒரு நாள். ஞாயித்துக்கெழமையில காலையில சவாரிக்கு போவறதுக்கு முன்னால ஒரு மணி நேரம்
இங்க வந்து ஒரு சுத்து சுத்த வச்சிட்டு அழச்சிம் போயி ஊட்டுல உட்டுடுவேன். தாத்தாவுக்கு
இந்த சக்தி ஒரு வாரத்துக்கு தாங்கும்”
“பணம் வாங்க மாட்டீங்களா?”
“பணமா? நம்ம புள்ளைங்களுக்கும்
ஊரு புள்ளைங்களுக்கு இவ்ளோத்தம் செய்யறவருக்கு நாம இதுகூட செய்யலைன்னா எப்படி சார்?
அது மட்டுமில்ல, இந்த முன்னா கால் இல்லாதவங்க, கை இல்லாதவங்க, பிரசவத்துக்கு போகிறவங்க,
ரோட்டுல அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு போகிறவங்க யாருகிட்டயும் பணம் வாங்கறதில்லை சார்.
எங்க போகணும்னு சொன்னாலும் இலவசமாவே அழச்சிட்டும் போய் விட்டுடுவேன். அப்படி ஒரு கொள்கை”
“அப்படியா?” அவர் சொல்வதைக்
கேட்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “பிரசவத்துக்கு இலவசம்னு போர்டு வச்சிருக்கிற ஆட்டோவ
பார்த்திருக்கேன். நீங்க சொல்றது புதுமையா இருக்குது”
“இதுல புதுமை என்ன சார்
இருக்குது? எல்லாம் தாத்தாவ பார்த்து கத்துகிட்டதுதான்
சார். இதுக்கு முன்னால இந்த முன்னாவை யாருக்குமே தெரியாது. இப்படி இலவசமா சவாரி போக
ஆரம்பிச்ச பிறகு ஆட்டோ முன்னான்னு சொன்னா இந்த பீஜப்பூருக்கே தெரிய தொடங்கிடுச்சி.
பணத்த ரொம்ப சுலபமா சம்பாதிக்கலாம் சார். ஆனா பேர சம்பாதிக்கறதுதான் ரொம்ப கஷ்டம்”
அவரோடு இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டும்
போல இருந்தது. அதைவிட கோல்கும்பஸைச் சுற்றிவிட்டு திரும்பிவரும் தாத்தாவிடமும் பேசவேண்டும்
போல இருந்தது. ஆனால் காத்திருக்கும் அளவு நேரம் குறைவாக இருந்ததுதான் வருத்தத்தை அளித்தது.
குறிப்புட்ட இடங்களைப் பார்க்காமல் செல்லவும் மனமில்லை.
“சரி முன்னா. நான் கெளம்பணும்.
என்னை கொஞ்சம் இப்ராஹிம் ரெளசா வரைக்கும் அழச்சிட்டு போக முடியுமா?” என்று கேட்டேன்.
“நாம் எப்படி சார் வரமுடியும்.
தாத்தாவை அழச்சிட்டு போய் வீட்டுல விடறவரைக்கும் எனக்கு அடுத்த சவாரி கிடையாது” என்றார்
முன்னா. பிறகு “ஒரு நிமிஷம் இருங்க” என்று
சொல்லிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார். சிறிது தொலைவில் இளநீர் அடுக்கிய ஒரு தள்ளுவண்டிக்குப்
பக்கத்தில் நின்றிருந்த ஆட்டோவை கைதட்டி கூப்பிட்டார். அவர் வந்து நின்றதும் “சார்
இப்ராஹிம் ரெளசாக்கு போகணுமாம். போறியா?” என்று கேட்டார். அவர் தலையசைத்ததும் “போய்
உக்காருங்க சார். நம்ம தம்பிதான். தைரியமா போங்க” என்று என்னிடம் சொன்னார். அதே கணத்தில்
ஆட்டோக்காரரின் தோளில் கைவைத்து “நமக்கு வேண்டப்பட்டவருப்பா. பார்த்து கேட்டு வாங்கிக்க”
என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து புன்னகையுடன் கையை அசைத்தார்.
ஒரு வட்டமடித்துவிட்டு
ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டது. பார்வையிலிருந்து மறையும் வரை முன்னாவை ஒரு கணமும்
கோல்கும்பஸை மறுகணமும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.