எங்கள் ஊரான வளவனூரின் மிகமுக்கியமான அடையாளங்களில் ஒன்று திரெளபதை அம்மன் கோவில். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி வடக்குப் பக்கத்தில் அக்கோவிலைப் பார்க்கலாம். அதற்கு எதிரிலேயே பழைய காலத்து அரசமரம். அந்த மரத்தடியில் ஒரு காலத்தில் ஓய்வில்லாமல் பகல்முழுக்க இயங்கியபடி இருக்கும் மரச்செக்கு இருந்தது. அதற்கு எதிரிலேயே மேடைபோல உயரமாக உருவாக்கப்பட்ட ஒரு திடலும் இருந்தது. ஆனால் ஊருக்குள் திசைக்கொன்றாக எண்ணெய் ஆலை தோன்றிய பிறகு செக்கு போய்விட்டது. மாலை நேரங்களில் அரசியல் கூட்டங்கள் நடைபெறுவதற்கு வசதியாக இருந்ததாலும் எல்லாக் கூட்டங்களுக்கும் நூற்றுக்கணக்கில் பார்வையாளர்கள் திரண்டு வந்ததாலும் திடல் மட்டும் அப்படியே நீடித்தது.
வளவனூர் என்னும் சிற்றூரிலிருந்து
அதைவிட சிறிய சிற்றூரான நறையூருக்குச் செல்வதற்கு அந்த வழியாகத்தான் நடந்துசெல்ல வேண்டும்.
திரெளபதை அம்மன் கோவிலைக் கடந்து சிறிது தொலைவில் ஓர் அல்லிக்குளம் இருந்தது. குளத்தைச்
சுற்றி காட்டுவாகை மரங்களும் புளியமரங்களும் நிழல் கொடுத்தபடி நின்றிருந்தன.
பச்சை இலைகள் படர்ந்த குளமெங்கும்
இளஞ்சிவப்பு நிறத்திலும் இளமஞ்சள் நிறத்திலும் பூத்திருக்கும் அல்லிப்பூக்களை மணிக்கணக்கில்
நின்று பார்த்தாலும், சரி, திரும்புவோம் என்ற எண்ணம் வரவே வராது. அந்த அழகுக்கு அப்படி
ஒரு வலிமை இருந்தது. அழகு என்றால் என்ன விலை என்று கேட்பவனைக் கூட நின்று பார்க்கவைத்துவிடும்.
திரைப்படச் சுவரொட்டியை வேடிக்கை பார்த்தபடி நடப்பதுபோல நடந்தால் மட்டுமே அந்த அல்லிக்குளத்தை
எளிதாகக் கடந்து செல்லமுடியும்.
அல்லிக்குளம்தான் வளவனூரின்
எல்லைப்புள்ளி. நறையூருக்குத் தொடக்கப்புள்ளி. இருபுறமும் அடர்ந்த கருப்பந்தோட்டங்கள்
அந்த இடத்திலேயே தொடங்கிவிடும். இடையிடையே ஒருசில வயல்களில் பச்சைப்பசேலென நெற்பயிரும்
நிலக்கடலையும் வளர்ந்து படர்ந்திருக்கும்.
எட்டாம் வகுப்பை முடிக்கும்
வரைக்கும் நான் அல்லிக்குளத்தைக் கடந்து மறுபக்கமாக சென்றதில்லை. ஒன்பதாம் வகுப்புக்கு
வந்த பிறகுதான் அதைக் கடந்து செல்லத் தொடங்கினேன்.
என் அப்பா தையல்தொழில்
செய்துவந்தார். அவரைவிட மூத்தவரான இரண்டு பெரியப்பாக்களும்
கட்டடவேலை செய்துவந்தனர். அவர்களுக்குக் கூட்டாளிகளாக தெருவில் பல பேர் இருந்தனர்.
எல்லோருமே கூட்டமாக வேலைக்குச் செல்வார்கள். கூட்டமாகத் திரும்பி வருவார்கள். பெரியப்பாவின்
கூட்டணியில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவர் ஜானகிராமன் பெரியப்பா. அவர் நறையூரைச் சேர்ந்தவர்.
அவருடைய மகன் மாதவன் அண்ணன். படிப்பு வராத அவரை கட்டடத்தொழிலைத் தவிர வேறு ஏதேனும்
ஒரு தொழிலில் பயிற்சிகொடுக்க வேண்டும் என்பது ஜானகிராமன் பெரியப்பாவுடைய விருப்பம்.
பெரியப்பாக்களிடையில் நிகழ்ந்த உரையாடலின் விளைவாக, அவர் தையல் தொழிலைக் கற்றுக்கொள்ள
எங்கள் அப்பாவிடம் வந்து சேர்ந்தார். என்னைவிட வயதில் மூத்த எல்லோரிடமும் அண்ணா அண்ணா
என்று பேசி ஒட்டிக்கொள்கிற நான் அவரிடம் இயல்பாகவே ஒட்டிக் கொண்டேன்.
மாதவன் அண்ணன் வீட்டாருக்குச்
சொந்தமாக நறையூரில் ஒரு வயல் இருந்தது. அதில் அவர்கள் நிலக்கடலை பயிரிட்டிருந்தார்கள்.
அது அறுவடைக்காலம். வயலிலிருந்து நேரடியாகவே நிலக்கடலைச் செடியைப் பிடுங்கி சாப்பிடலாம்
என்று ஆசை காட்டி ஒருநாள் என்னை அவர் நறையூருக்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான்
முதன்முதலாக நான் அல்லிக்குளத்தைக் கடந்து சென்றேன்.
வயலில் இறங்கிய நாலைந்து
பேர் கடலைச்செடியை மெல்ல அசைத்து மண்ணின் பிடியிலிருந்து விலக்கியெடுத்து உதறிவிட்டு
கீழே வைத்துக்கொண்டே முன்னால் சென்றார்கள்.
அவர்களுக்குப் பின்னால் நடந்த இருவர் பிடுங்கி வைத்த செடிகளைச் சேகரித்து வேறொரு இடத்தில்
குவித்தனர். இன்னும் இருவர் செடியிலிருந்து கடலையைப் பிரித்தெடுத்துக் குவித்தனர்.
அக்குவியலிலிருந்து கைநிறைய கடலையை அள்ளிச் சென்ற மாதவன் அண்ணன் அருகிலிருந்த கால்வாயில்
சுத்தமாகக் கழுவி ஒரு கிண்ணத்தில் வைத்து என்னிடம் கொடுத்தார். ஒவ்வொரு கடலையாக எடுத்து
தோலை உடைத்துப் பிரித்து உள்ளிருக்கும் மணியை எடுத்துச் சாப்பிட்டேன். வாய்நிறைய ஊறிப்
படர்ந்த அதன் சுவையில் நான் இந்த உலகத்தையே மறந்தேன்.
நிலக்கடலையைத் தொடர்ந்து
ஒருமுறை கரும்பு சாப்பிடுவதற்காக மாதவன் அண்ணன் என்னை நறையூருக்கு அழைத்துச் சென்றார்.
இன்னொருமுறை பனம்பழம் சாப்பிடுவதற்காக அழைத்துச் சென்றார். இப்படியே விளாம்பழம், கொய்யாப்பழம்,
மாம்பழம், மரவள்ளிக்கிழங்கு என பலவற்றை விளையும் இடங்களுக்கே சென்று தேடி நாங்கள் சாப்பிட்டோம்.
பிறகு ஞாயிறு விடுமுறைப்பொழுதுகளில் பேசிக் கழிப்பதற்காகவே செல்வது வழக்கமாகிவிட்டது.
ஒருமுறை மாதவன் அண்ணனின்
அண்ணன் ஒருவர் தன் அறைக்குள் பழைய கல்கண்டு இதழில் வெளிவந்த தமிழ்வாணன் துப்பறியும்
கதைகளின் பக்கங்களையெல்லாம் சேகரித்து பைண்டிங் செய்து சேகரித்து வைத்திருப்பதைப் பார்த்துவிட்டேன்.
என் புத்தகப்பைத்தியத்தின் காரணமாக, அவரிடம் பேசிப்பேசி, கெஞ்சி கூத்தாடி விடுமுறை
நாட்களில் அந்த பைண்டிங் புத்தகங்களையெல்லாம் அங்கேயே எடுத்துப் படித்துவிட்டு வைத்துச்
செல்வதற்கு அனுமதி வாங்கிவிட்டேன். அதற்குப் பிறகு வயல்வெளியில் சுற்றுவதற்காக மட்டுமன்றி
படிப்பதற்காகவும் நறையூருக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது.
ஒருமுறை மூன்று நாட்கள்
தொடர்ச்சியாக விடுமுறை வந்துவிட்டதால் நான் என் புத்தகமூட்டையோடு அண்ணனோடு நறையூருக்கே
சென்றுவிட்டேன். ஒருசில மணி நேரங்கள் பாடப்புத்தகங்கள். அப்புறம் ஒருசில மணி நேரங்கள்
கதைப்புத்தகங்கள். அதற்கப்புறம் வயல்வெளிகள், பனந்தோப்பு, ஏரிக்கரை, கருப்பந்தோப்பு
என சுற்றித் திரிந்தோம். பொழுது போனதே தெரியவில்லை.
இரவு உணவுக்குப் பிறகு
நிலவு வெளிச்சத்தில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு
எங்கெங்கோ அலைந்து திரிந்து திரைப்படப்பாடல்களின் திசையில் திரும்பிவிட்டது. ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்தமான பாட்டைப்பற்றி
சொல்லத் தொடங்கினர். நான் எனக்குப் பிடித்த பாடலாக ’உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலைச் சொன்னேன். சொன்னதோடு மட்டுமன்றி, உற்சாகத்தில்
அப்பாட்டின் தொடக்கப்பகுதியைப் பாடியும் காட்டினேன்.
அந்த வரிகள் அங்கிருந்தவர்களை
என்னமோ செய்துவிட்டது. பாடிக்கொண்டிருக்கும்போதே எதிர்வீட்டிலிருந்தும் பக்கத்துவீட்டிலிருந்தும்
சில அண்ணன்மார்களும் ஒவ்வொருவராக வந்து திண்ணையில் உட்கார்ந்துவிட்டனர்.
நான் முதல் பகுதியோடு நிறுத்தியதும்
அவர்கள் “ஏன் அதுக்குள்ள தம்பி நிறுத்திடுச்சி. அச்சு அசலா சீர்காழி கோவிந்தராஜன் குரல்
மாதிரியே கணீர்னு இருக்குது. முழு பாட்டயும் பாடச் சொல்லுப்பா” என்று அண்ணனிடம் கேட்டனர்.
“என்னடா, முழு பாட்டும் தெரியுமா?” என்று அண்ணன் கேட்டார். நான் தெரியும் என்பதற்கு
அடையாளமாக தலையை ஆட்டினேன். “அப்ப பாடு, ஆசையா கேக்கறாங்க இல்ல” என்று தூண்டினார்.
நான் எல்லோரையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து அப்பாடலை
மீண்டும் பாடத் தொடங்கினேன். அவர்கள் அனைவரும் என்னையே பார்ப்பது கூச்சமாக இருந்தாலும்,
ஒரு வேகத்தில் முழு பாட்டையும் பாடி முடித்தேன்.
என்னைத் தொடர்ந்து அந்த
இடம் பாட்டுக்கச்சேரியாகவே மாறி விட்டது. ஒரு அண்ணன் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’
என்று பாடத் தொடங்கினார். அவருக்கு பாதி பாட்டுதான் தெரிந்திருந்தது. மீதி வரிகள் தெரியாமல்
ராகம் போட்டு இழுத்து இழுத்து நிரப்பத் தொடங்கியதும் எல்லோரும் புன்னகைத்தபடி கைதட்டினார்கள்.
இன்னொரு அண்ணன் மெல்லிய குரலில் ‘கண்போன போக்கிலே’ என்று பாடினார். அவர் முழு பாடலையும்
பிசிறில்லாமல் பாடிமுடித்தார். அவரைத் தொடர்ந்து ஒரு அக்கா ‘சிட்டுக்குருவி முத்தம்
கொடுத்து’ பாட்டைத் தொடங்கினார். அவர் முடிப்பதற்காகவே காத்திருந்ததுபோல நடுவயதுப்
பெண்மணி ஒருவர் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாட்டை இனிமை இழைந்தோடும் குரலில் எங்கோ
வானத்து நட்சத்திரத்தைப் பார்த்தபடி பாடினார்.
இப்படி பாட்டும் சிரிப்பும்
பேச்சுமாக பொழுது போய்க்கொண்டிருந்த நேரத்தில் சற்றே தொலைவில் ஒரு திசையிலிருந்து ஆர்மோனியம்
இசைக்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து யாரோ ஓங்கிய குரலில் பாடும் வரிகள் கேட்டன.
“அங்க யாரு பாடறாங்க?”
“அதுவா, அடுத்த வாரம் கூத்து
இருக்குது. அதுக்காக கோவில் வாசல்ல பாடி பயிற்சி எடுத்துக்கறாங்க”
திண்ணைக்கச்சேரி முடிந்து
அனைவரும் கலைந்து சென்ற பிறகு “அங்க ஒருதரம் போய் பார்த்துட்டு வரலாமா?” என்று அண்ணனிடம்
கேட்டேன்.
“எங்க?”
”அதான், பாட்டு பாடி பயிற்சி
எடுத்துக்கறாங்களே, அங்க”
“பாக்கறதுக்கு அது ஒன்னும்
கூத்து மாதிரி இருக்காது. வேஷமெல்லாம் கட்டியிருக்க மாட்டாங்க. ஆளாளுக்கு ஒரு பக்கம்
உக்கார்ந்து சும்மா பாடுவாங்க. அவ்வளவுதான்”
“இருக்கட்டும், சும்மா
கொஞ்ச நேரம் கேட்டுட்டு வரலாம்”
“சரி வா” என்று அண்ணன்
என்னை அழைத்துக்கொண்டு நடந்தார். அதே தெருவில் இரண்டு வீடுகள் தள்ளி ஒரு தென்னைமரத்துக்கு
அருகில் இருந்த ஒரு கூரைவீட்டைச் சுட்டிக்காட்டி “இதுதான் கூத்து வாத்தியார் வீடு.
அவரும் அவருடைய கூட்டாளிங்களும்தான் அங்க பாடிட்டிருக்காங்க” என்றார் அண்ணன். நான்
அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்தேன். உள்ளே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வாசலில்
நாலைந்து பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டு ஆடுகளும் ஒரு எருமையும்
சுவரோரமாக நின்றிருந்தன.
கோவில் வாசலில் நீளவாக்கில்
ஆறேழு பெஞ்ச்களை அடுத்தடுத்து அடுக்கி அதன் மீது வாத்தியக்காரர்கள் அமர்ந்து தம் கருவிகளை
இசைத்துக்கொண்டிருந்தனர். சில வீடுகளில் வயதானவர்கள் வாசலில் கட்டில் போட்டு அமர்ந்தபடி
பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
நாங்கள் ஒரு மரத்தடியில்
நின்று வாத்தியக்குழுவின் பாடல்களையும் உரையாடல்களையும் வெகுநேரம் கேட்டபடி நின்றிருந்தோம்.
அன்று பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. “வாடா, போகலாம்” என்று அண்ணன் அழைத்து வந்துவிட்டார்.
மறுநாள் காலை நேரத்தில்
வாத்தியாரைப் பார்க்கலாம் என்று புறப்பட்டுச் சென்றேன். வாசல் வரைக்கும் சென்றுவிட்டேனே
தவிர, நெருங்கிச் செல்லும் துணிச்சல் வரவில்லை. சற்றே தள்ளி நின்று எட்டி எட்டிப் பார்த்தேன்.
வீட்டுக்குள்ளிருந்து ‘செங்கோல் ஏந்திய கையால்…’ என்று ராகமாக இழுத்து பாடும் குரல்
கேட்டது. கேட்கும்போதே மனத்தைக் கலங்கவைக்கும் குரல். அந்தப் பாட்டைக் கேட்டபடி நான்
அப்படியே உறைந்து நின்றேன். அதனால் அவர் வீட்டிலிருந்து அவர் வெளியே வந்ததை சரியாகக்
கவனிக்கவில்லை.
”யாரு தம்பி நீ?” என்ற
குரலைக் கேட்ட பிறகே நான் தன்னுணர்வைப் பெற்றேன். பிறகு கூச்சத்தோடு “நான் வளவனூரு.
இங்க மாதவன் அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கேன்” என்றேன்.
“அது சரி, இங்க எதுக்கு
வந்து நிக்கற?”
“நேத்து கோயில் வாசல்ல
நீங்க பயிற்சி செஞ்சிட்டிருந்தத பார்த்தேன். உங்க பாட்டு புடிச்சிருந்தது. அதான் பார்த்துட்டு
போகலாம்ன்னு வந்தேன்”
அவர் என் முகத்தை விசித்திரமாகப்
பார்த்தார். பிறகு புன்னகைத்தபடியே “சரி, உள்ள வா” என்று வீட்டுக்குள் சென்றார். நான்
அவருக்குப் பின்னாலேயே சென்றேன்.
“கூத்துன்னா உனக்கு புடிக்குமா?
இந்த காலத்து பசங்க சினிமாவத்தான புடிக்கும்னு சொல்வாங்க”
“எனக்கு கூத்தும் புடிக்கும்.
சினிமாவும் புடிக்கும்”
“என்னென்ன கூத்து பார்த்திருக்க?”
“எங்க ஊருல கோயில் திருவிழா
வரும்போதெல்லாம் ராத்திரி ராத்திரி கூத்து வைப்பாங்க. நான் எல்லாத்தயும் விடியவிடிய
உக்காந்து பார்த்திருக்கேன்”
“அதெல்லாம் சரி தம்பி.
ஒவ்வொரு கூத்துக்கும் ஒரு பேரு இருக்கும் இல்ல, அத சொல்லு”
நான் சில கணங்கள் யோசித்தபடி
நின்றேன். பிறகு நினைவிலிருந்து ஒவ்வொரு பெயராக “அர்ஜுனன் தபசு, வள்ளித்திருமணம், சத்தியவான்
சாவித்திரி, கிருஷ்ணன் தூது” என்று அடுக்கிக்கொண்டே சென்றேன்.
“ஓ, போதும் போதும். அப்ப
பெரிய ரசிகன்தான் நீ” என்று புன்னகைத்தபடியே ஒரு கையை மட்டும் உயர்த்தி நிறுத்துமாறு
சொன்னார். நான் அவரைப் பார்த்து “எனக்கு கூத்துன்னா ரொம்ப புடிக்கும்” என்றேன்.
“அது சரி, படிக்கிறியா?”
“ம்”
“எங்க படிக்கிற? எத்தனாவது
படிக்கிற?”
“வளவனூர் ஹைஸ்கூல்ல படிக்கிறேன்.
ஒன்பதாவது க்ளாஸ்”
“பெரிய படிப்புதான். இன்னும்
ரெண்டு வருஷத்துல ஸ்கூல் படிப்பு முடிஞ்சிடும்னு சொல்லு. அதுக்கப்புறம் காலேஜ்க்கு
போய் படிப்பியா?”
“ம்” என்று உற்சாகமாக நான்
பதில் சொன்னேன்.
அப்போது வாசலில் நிழலாடியது.
என் வயதையொத்த பையன் ஒரு பையைத் தூக்கிக்கொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்ததைப் பார்த்தேன்.
அவன் ஒருகணம் என்னைப் பார்த்ததும் வாசலிலேயே தயங்கி நின்றான். பிறகு மெளனமாக உள்ளே
வந்து அறைக்குள் சென்று பையை வைத்துவிட்டு திரும்பி வந்தான். அடர்த்தியான தலைமுடி.
நல்ல உயரம். உருண்ட முகத்தில் அடர்த்தியான புருவமும் பெரிய கண்களும் அவனை மீண்டும்
மீண்டும் பார்க்கவைத்தன. அந்த முக அமைப்பே அவன் அவருடைய பிள்ளை என்பதை சொல்லாமல் சொன்னது.
“ஆறுமுகம். பக்கத்துல மாதவன்
வீட்டுக்கு வந்திருக்கானாம். கூத்துன்னா விடியவிடிய பார்க்கிற ஆளாம். வளவனூர் ஸ்கூல்ல
படிக்கிறானாம்”
அவன் அவரையே பார்த்துக்கொண்டு
நின்றான்.
“கூத்து கத்துக்கறதுலாம்
ஒருபக்கம் இருக்கட்டும். நான் வேணாம்னு சொல்லலை. அதுக்காக படிக்கிறத ஏன் நிறுத்தணும்?
நான் சொல்றத இப்பவாவது கேளு. இவன மாதிரி நீயும் ஸ்கூலுக்கு போய் படி. படிப்பு இருந்தாதான்டா
நாளைக்கு ஒரு மதிப்பு இருக்கும்”
அவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து
வேகமாக வெளியேறினான்.
சில கணங்களுக்குப் பிறகு
அவர் பெருமூச்சு விட்டபடி என்னைப் பார்த்து “உனக்கு நல்லா எழுத வருமா?” என்று கேட்டார்.
முதலில் எனக்குப் புரியவில்லை. குழப்பத்தோடு “ம். எழுதுவேனே” என்றேன்.
“ஒரு நோட்டுல சில பாட்டுங்க
இருக்கு. எப்பவோ ஒரு காலத்துல எழுதனது. பேப்பர் கசங்கி எழுத்துலாம் மங்கி போயிடுச்சி.
கொஞ்சம் எழுதி குடுக்கறியா?”
நான் உற்சாகமாக “ம்” என்று
தலையாட்டினேன். செங்கேணி வாத்தியார் அறைக்குள் சென்று ஒரு பழைய தாள்கட்டையும் ஒரு புதிய
நோட்டையும் கொண்டுவந்து கொடுத்தார். அதிகம் இல்லை. ஒரு பதினைந்து இருபது தாள்கள்தான்
இருக்கும். ஏகப்பட்ட கறைகள் படிந்து நைந்து
காற்று வீசினாலேயே கிழிந்துவிடுவதுபோல இருந்தது.
நான் அங்கேயே வெளிச்சம்
இருக்கும் இடமாகப் பார்த்து ஓரமாக உட்கார்ந்து தாட்களில் இருப்பதைப் பார்த்து நோட்டில்
எழுதினேன். வாத்தியார் எனக்குப் பக்கத்திலேயே நின்று நான் எழுதுவதைப் பார்த்தார். இரண்டுமூன்று
வரிகளுக்குப் பிறகு “உன் கையெழுத்து மணிமணியா இருக்குது. எழுதிட்டே இரு. மாட்டுக்கு
கொஞ்சம் புல்லு போட்டுட்டு வரேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
ஐந்து பக்கங்கள் எழுதிவிட்டு
ஆறாம் பக்கத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.
“இந்த வேலையை அவன்கிட்ட
குடுத்து மூனு மாசமாவுது. தோ தோன்னு என்னென்னமோ சாக்குபோக்கு சொன்னானே தவிர, எழுதன
பாடில்லை. மகா சோம்பேறி. எதிர்காலத்துல எப்படி பொழைக்க போறானோ தெரியலை”
வாத்தியார் பெருமூச்சு
விட்டபடி சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தார். ஒரு வெற்றிலையை எடுத்து காம்பினைக் கிள்ளி
எறிந்துவிட்டு முன்பகுதியையும் பின்பகுதியையும் வேட்டியில் வைத்து அழுத்தமாகத் தேய்த்துவிட்டு
சுண்ணாம்பைத் தடவின.
“ஆறாம் கிளாஸ் வரைக்கும்
நல்லாதான் படிச்சான். அதுக்கப்புறம் என்ன நினைச்சானோ தெரியலை. எனக்கு படிப்பு வரலைன்னு
சொல்லி ஸ்கூல விட்டு நின்னுட்டான். அடிச்சி பார்த்தாச்சி. திட்டியும் பார்த்தாச்சி.
எதுக்கும் சரிப்பட்டு வரலை. அதான் எக்கேடாவது கெட்டுப்போன்னு விட்டுட்டேன்”
ஒருவித சங்கடமும் சலிப்பும்
வெளிப்படும் வகையில் கையை உதறிக் காட்டிவிட்டு
மடித்த வெற்றிலையை எடுத்து மடித்து வாய்க்குள் வைத்துக்கொண்டார்.
எழுதி முடித்ததும் நோட்டையும்
தாட்களையும் அவரிடம் கொடுத்தேன். அவர் என் கையெழுத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் பாராட்டினார்.
”நல்லா முத்துமுத்தா இருக்குது உன் கையெழுத்து” என்றார்.
தாளில் எழுதப்பட்டிருந்த
பக்கங்களைப் புரட்டியபடியே “எதையும் விடலை இல்லையா?’ என்று கேட்டார். “ஒரு வரி கூட
விடாம எழுதியிருக்கேன்” என்றேன் நான். அவர் புன்னகைத்துக்கொண்டே என் முதுகைத் தட்டிக்
கொடுத்தார். அவர் மெதுவாக “எனக்கு படிக்கறது சுலபம். எழுதறதுதான் கஷ்டம். எழுதற பழக்கம்
விட்டுப்போனதால ஒவ்வொரு எழுத்தும் ஒரு தக்காளி சைஸ்க்கு போயிடும். அதனாலதான் உன்ன எழுதச்
சொன்னேன்” என்றார்.
அப்போது “இதுலேர்ந்து எனக்காக
ஒரு பாட்டு பாடறீங்களா?” என்று அவரைப் பார்த்துக் கேட்டேன். அவர் புருவத்தை உயர்த்தியபடி
வியப்போடு என்னைப் பார்த்தார். “என்ன?” என்று மறுபடியும் கேட்டார். நான் சற்றே அடங்கிய
குரலில் “முடிஞ்சா, இதுலேர்ந்து ஒரு பாட்ட எனக்காக பாடறீங்களான்னு கேட்டேன்” என்றேன்.
“அவ்ளோதானே, பாடிட்டா போச்சு.
உனக்கு எது வேணும் சொல்லு”
“எது வேணும்னாலும் பாடுங்க”
அவர் விரல்போன போக்கில்
ஒரு பக்கத்தைப் புரட்டி அங்கிருந்த பாடல் வரிகளைப் பாடத் தொடங்கினார். ஒரு முழு விருத்தம்.
நல்ல ஏற்ற இறக்கத்தோடு பாடினார். உயர்ந்து இறங்கும் அவர் கைகளையும் தோள்களையும் கணம்தோறும்
மாறிக்கொண்டே இருக்கும் அவர் முக உணர்ச்சிகளையும் நான் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தேன்.
அவர் பாடி முடித்ததும்
கைதட்டி ”அருமையா இருக்குது. நல்லா ரெக்கார்டுல கேக்கறமாதிரி இருந்தது” என்றேன். அவர்
முகம் மலர புன்னகைத்தார். “நோட்டுல அந்த முதல் வரியை மட்டும்தான் பார்த்தீங்க, அப்புறம்
எதயும் நீங்க பாக்கவே இல்லை. மனப்பாடமா பாடிட்டீங்க’ என்றேன். “ஆமா. எல்லாமே மனப்பாடம்தான்.
உன்ன மாதிரி சின்ன பையனா இருந்த சமயத்துல பாடிப் பாடி மனப்பாடம் செஞ்சது” என்றார் அவர்.
“எனக்கு இன்னொரு சந்தேகம்
இருக்குது”
”பாட்டுலயா?”
“ம்ஹூம். இது வேற சந்தேகம்”
“என்ன?”
“இப்ப கூத்துல பொம்பளைங்க
மாதிரி வேஷம் போட்டுகிட்டு ஆடறாங்களே, அப்ப அவுங்க நெஜமாவே பொம்பளைங்களா மாறிடுவாங்களா?”
நான் சொன்னதைக் கேட்டதும்
”இல்லப்பா, இல்லப்பா” என்றபடி அவர் தம் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ளும் அளவுக்கு
சிரித்தார். ஒரு கணம் என்னைப் பார்த்துவிட்டு “இந்த உலகத்துல இப்படி ஒரு கேள்விய இதுவரைக்கும்
யாரும் என்னைப் பார்த்து கேக்கலைடா” என்று நிறுத்தியபோது மீண்டும் அவருக்கு சிரிப்பு
வந்துவிட்டது. “ஒரு வேஷத்த போடறதால யாரும் இன்னொரு ஆளா மாறிடமுடியாது” என்றார்.
விடுப்புக்காலம் முடிந்ததும்
நான் வளவனூருக்குத் திரும்பிவிட்டேன். பத்து நாள் பயிற்சிக்குப் பிறகுதான் நறையூரில்
செங்கேணி வாத்தியாரின் கூத்து நடந்தது. அன்று இரவு கடையைச் சாத்திவிட்டு வீட்டுக்குப்
புறப்பட்ட மாதவன் அண்ணனோடு சேர்ந்துகொண்டு நானும் நறையூருக்குச் சென்றுவிட்டேன். வீட்டுக்குச்
சென்றதுமே வேகவேகமாகச் சாப்பிட்டுவிட்டு கூத்து மேடைக்குச் சென்றுவிட்டோம்.
வாத்தியார் அர்ஜுனனாக வேடம்
தரித்திருந்தார். ஆறுமுகம் புலந்திரனாக வேடம் தாங்கியிருந்தான். அல்லியும் புலந்திரனும்
உரையாடிக்கொள்ளும் ஆரம்பக்காட்சிகள் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல இருந்தது. புலந்திரன்
அல்லியிடம் ஆசி வேண்டி நிற்கிறான். அவள் அருகில் வருமாறு அழைக்கும்போது அவன் செல்ல
மறுக்கிறான். தான் வேண்டும் பொருளை தனக்கு வழங்குவதாக வாக்களித்தால் வருவதாகச் சொல்கிறான்.
அல்லி உடனே பிள்ளைப்பாசத்தில் வாக்களிக்கிறாள்.
அப்போது ஆறுமுகம் தன் அப்பா
செங்கேணியைப்போலவே அருமையாகக் குரலெடுத்துப் பாடினான். அவனுடைய குரலில் தென்பட்ட ஏற்ற
இறக்கமும் குரல் லாவகமும் அவனுக்கு கூத்தில் இருந்த ஆர்வத்தைப் புலப்படுத்தின. “ஆண்டவர்
சொக்கர் மீனாட்சி கிருபையினால் எனக்கு வேண்டிய செல்வங்கள் நீயளித்தாய் விளையாடுவதற்கு
ஈண்டுள்ள சிறுவரெலாம் என்னைப் புகழ் பேசுவதற்கு பாண்டிய ராஜகுமாரி பவளத்தேர் வேண்டுமம்மா”
என்று தன் கோரிக்கையை முன்வைக்கிறான்.
அல்லிக்கும் புலந்திரனுக்கும்
அப்போது நிகழும் உரையாடல் மறக்கமுடியாத ஒரு பகுதி. முதலில் அல்லி மாணிக்கத்தால் தேர்
செய்து தருவதாகச் சொல்கிறாள். புலந்திரனோ ஏற்கனவே தன் தந்தையார் மாணிக்கத்தேர் கொடுத்துவிட்டதாகச்
சொல்கிறான். இப்படி அல்லி தங்கம், முத்து, சந்தனம் என ஒவ்வொரு மூலப்பொருளாலும் வடிவமைக்கப்பட்ட
தேரைக் கொடுப்பதாக கேட்பதும் அவை அனைத்தையும் தன் தந்தை ஏற்கனவே அளித்துவிட்டதாகச்
சொல்வதாகவுமாக உரையாடல் நீண்டபடி செல்கிறது. அவன் தனக்கு பவளத்தேர்தான் வேண்டுமென அடம்
பிடிக்கிறான். மகனின் விருப்பத்துக்காக பவளத்தைச் சேகரித்துக் கொண்டுவருவதற்காக அர்ஜுனனை
பவளத்தீவுக்கு அனுப்பி வைக்கிறாள் அல்லி. பவளத்தீவுக்குச் செல்லும் அர்ஜுனன் அங்கே
பவளக்கொடியைக் கண்டு காதல் வசப்படுகிறான். இப்படி கதை நீண்டுகொண்டே போகிறது. ஒரு காட்சி
கூட சோர்வளிக்கவில்லை. விடிந்ததே தெரியாத அளவுக்கு கூத்து மனத்தை கொள்ளைகொண்டது.
மறுநாள் பள்ளிக்கூடத்தில்
நறையூரில் பார்த்த கூத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். இரவு நேரத்தில் சாப்பிட்டு
முடித்த பிறகு, அம்மா, அப்பா, தங்கைகள், தம்பிகள் அனைவரிடமும் நினைவிலிருந்த கூத்துப்பாடல்களை
வாய்க்கு வந்த ராகத்தில் பாடிக் காட்டினேன். ஒரு வாரம் முழுக்க பேசிப்பேசி முடித்த
பிறகுதான் அந்தக் கூத்தின் அலை நெஞ்சில் ஓய்ந்தது.
சில நாட்களுக்குப் பிறகு
நறையூருக்குப் போயிருந்த சமயத்தில் செங்கேணி வாத்தியார் வீட்டுக்குச் சென்று அவர் இருக்கிறாரா
இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வாசலில் நின்று எட்டிப் பார்த்தேன். கதவு திறந்திருந்ததே
தவிர, எவரும் இருப்பதற்கான தடயமே இல்லை. இருப்பதா, செல்வதா என புரியாமல் குழப்பத்துடன்
நின்றிருந்த நேரத்தில் “என்னடா தம்பி, எப்ப வந்த ஊருலேருந்து?” என்ற குரலைக் கேட்டு
திகைத்து பின்வாங்கினேன். செங்கேணி வாத்தியார் பக்கத்திலிருந்த மாட்டுக்கொட்டகையிலிருந்து
வெளியே வந்தார். “மாட்டுக்கு புல்லு உதறி போட்டுட்டு வந்தேன்” என்றபடி கொடியிலிருந்த
துண்டை எடுத்து வியர்வையைத் துடைத்துக்கொண்டார்.
“காலையில வந்தேன். அடுத்த
வாரம் எங்க ஊருல கூத்து வச்சிருக்காங்க”
“அப்படியா, சபாஷ். சபாஷ்.
எந்த ஊருக்காரங்க ஆடப்போறாங்க?”
“அதெல்லாம் தெரியாது”
“சரி சரி. யாரு ஆடினா என்ன?
பாக்கறதுக்கு சந்தோஷமா இருந்தா சரி”
”எங்க ஊருக்கெல்லாம் வந்து
நீங்க ஆடமாட்டீங்களா?”
“தாராளமா ஆடலாம். ஆனா கோவில்காரங்க
வந்து கூப்ட்டாதான ஆடமுடியும். யாரும் கூப்பிடாம எப்படி வரமுடியும்?”
அப்படி ஒரு நடைமுறை இருப்பதை
அப்போதுதான் நான் புரிந்துகொண்டேன்.
“நீங்க அர்ஜுனன் வேஷம்
மட்டும்தான் ஆடுவீங்களா?”
“இல்லையே, எல்லா வேஷமும்
நான் கட்டுவேன்”
“அப்படியா, என்னென்ன வேஷம்
கட்டுவீங்க?”
“அர்ஜுனன், கிருஷ்ணன்,
துரியோதனன், காத்தவராயன், சத்தியவான் எல்லா வேஷமும் என்னால போடமுடியும்? எல்லா வேஷமும்
தெரிஞ்சிருந்தாதான் வாத்தியாரா இருக்கமுடியும்”
அவர் சொன்னதை அசைபோட்டபடி
ஒருகணம் அமைதியாக இருந்தேன். பிறகு “உங்களுக்கு‘ எந்த வேஷம் ரொம்ப புடிக்கும்?” என்றேன்.
”பார்த்தா பொடியனா இருந்துகிட்டு எங்கிட்ட இத்தன கேள்வி கேக்கறியே” என்று சிரித்தார்
அவர். பிறகு தன் கன்னத்தில் சொறிந்தபடி “அரிச்சந்திரன் வேஷம்தான் எனக்கு ரொம்ப புடிச்ச
வேஷம்” என்றார். நான் உடனே “அரிச்சந்திரன எனக்கு நல்லா தெரியும்” என்று சிரித்தேன்.
”எப்படி?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் அவர்.
”காந்தித்தாத்தாவுக்கு
கூட அரிச்சந்திரன்தான் ரொம்ப புடிக்கும். வாழ்க்கையில கஷ்டமோ நஷ்டமோ எது வந்தாலும்
உண்மையைத்தான் பேசணும்னு அரிச்சந்திரன் நாடகத்தை பார்த்துத்தான் அவர் முடிவு செஞ்சாராம்.
ஸ்கூல்ல எங்க வாத்தியார் சொல்லியிருக்காரு”
”ஓ. இவ்ளோ விஷயம் தெரிஞ்சி
வச்சிருக்கியே. நல்ல மூளைதான் உனக்கு” என்றார் செங்கேணி. “ஆடி மாசத் திருவிழா சமயத்துல
அரிச்சந்திரன் கதையைத்தான் ஆடலாம்னு இருக்கேன். இன்னும் தேதி குறிக்கலை”
“என்னைக்குன்னு சொல்லுங்க.
நான் வந்துடுவேன்”
நறையூருக்குச் செல்லும்போதெல்லாம்
அவரைச் சந்திப்பதும் அவரோடு உரையாடுவதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கு
ஏராளமான புராணக்கதைகள் தெரிந்தது. வல்லாளகண்டன் கதை. பப்புரவாகனன் கதை. கர்ணமோட்சம்.
பிருந்தாவதி மோட்சம். நளாயினி சரித்திரம். குசலவ நாடகம். விராட பர்வம். அரவான் களப்பலி.
வத்ஸலா கல்யாணம். பத்மாசுர தகனம். ஆரம்பித்துவிட்டால் சொல்லிக்கொண்டே இருப்பார். கதையைவிட
நடுநடுவே அவர் பாடிக் காட்டும் பாடல்கள் அருமையாக இருக்கும்.
அரிச்சந்திரன் கதை கூத்து
நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுவிட்டது என்று மாதவன் அண்ணன் ஒருநாள் சொன்னார். அந்தத்
தேதி ஒரு நெருக்கடியான சூழல்களுக்கிடையில் அமைந்துவிட்டது. அன்றைக்கு மறுநாள் எங்கள்
மாதாந்திரத் தேர்வுகள் தொடங்கவிருந்தன. கால அட்டவணையை எழுதிப் போட்டுவிட்டார்கள். தேர்வுக்குரிய
பாடங்களை படித்துவிட்டேன் என்றபோதும் கூத்தின் ஈர்ப்பில் நான் கோட்டை விட்டுவிடுவேனோ
என்கிற அச்சம் அம்மாவிடம் இருந்தது. பல வாக்குறுதிகளைக் கொடுத்து இதமாகப் பேசி ஒருவழியாக
நான் அம்மாவின் அனுமதியைப் பெற்றுவிட்டேன்.
அரிச்சந்திரன் கதையின்
ஒவ்வொரு காட்சியும் என்னை உருக்கிவிட்டது. அரிச்சந்திரனாக செங்கேணி வாத்தியாரும் லோகிதாசனாக
ஆறுமுகமும் நடித்திருந்தனர். மாதவன் அண்ணனின் உறவுக்காரரான ஏழுமலை அண்ணன் சந்திரமதியாக
நடித்திருந்தார். ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாக இருந்தது.
சுடுகாட்டில் பணிபுரியும்
ஊழியனாக அரிச்சந்திரன் நிற்கின்ற காட்சியில் செங்கேணி வாத்தியாரின் குரலில் வழிந்தோடிய
சோகத்தை ஒருபோதும் மறக்கவேமுடியாது. துய்யதோர் முனிவருக்கு தொல்புவி அரசு தந்தேன் கைப்பொருள்தனைப்
பிரிந்து காதலி மகனை விற்றேன் பொய்யது உரைக்க அஞ்சி புவிதனில் அடிமையானேன் இந்த வையகமெல்லாம்
காத்த நான் காசி மயானம் காக்கப் போகிறேன் என்று மனம் உருகும் வகையில் பாடினார். கூத்து
பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே அவர் நடிப்பைப் பார்த்துக் கலங்கி அழுதார்கள்.
லோகிதாசனாக நடித்த ஆறுமுகமும்
குறைவைக்கவில்லை. காலகண்ட ஐயர் வீட்டில் அடிமையாக விற்கப்பட்ட லோகிதாசன் பசியால் துடிக்கிறான்.
பசிக்கு சோறு கேட்கிறான். ஐயரின் மனைவி கொடுக்க மறுக்கிறாள். அடுத்து நீராகாரமாவது
கொடுக்குமாறு கேட்கிறான் சிறுவன். அதையும் கொடுக்க மறுக்கிறாள் அவள். பசுவுக்கு புல்
அறுத்து வருமாறு அனுப்பிவைக்கிறாள். அவன் அறுத்துவைக்கும் புல்லை அவனோடு புல்லறுக்கச்
சென்ற சிறுவர்கள் திருடி எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு புற்றின் அருகில் புல்லறுக்கக்
குனியும்போது லோகிதாசனை பாம்பு கடித்துவிடுகிறது.
சுடுகாட்டில் லோகிதாசன்
உடலைக் கிடத்தப்பட்ட நிலையில் கால்பணம் வாங்காமல் புதைக்கமுடியாது என வாதாடும் அரிச்சந்திரன்
’செங்கோல் ஏந்திய கையால் சுடுகோல் ஏந்திவிட்டேனே பராபரமே’ என்றும் ’வெள்ளிப்பணம் கேட்டவர்க்கு
அள்ளி அள்ளிக் கொடுத்த கையால் கொள்ளிக்காசு வாங்கலானேன் பராபரமே’ என்றும் பாடிய பாடல்கள்
நெஞ்சை உருக்கிவிட்டன.
காலையில் கூத்து முடிந்த
கையோடு மாதவன் அண்ணன் என்னை மிதிவண்டியில் ஏற்றி வந்து வீடுவரைக்கும் விட்டுவிட்டுச்
சென்றார். அன்றைய தேர்வுக்குரிய பாடத்தை வேகமாக புரட்டிப் பார்த்து மனத்துக்குள் தொகுத்துக்கொண்டு
பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அன்றைய தேர்வை சிறப்பாக எழுதினேன் என்று சொன்ன
பிறகுதான் என் அம்மாவின் மனம் அமைதியடைந்தது.
நறையூரில் திரெளபதை அம்மன்
கோவிலை அடுத்து அங்காளபரமேஸ்வரி கோவில், அகத்தீஸ்வரர் கோவில், புரையாத்தாள் அம்மன்
கோவில் என வரிசையாக ஆலயங்கள் இருந்தன. ஒவ்வொரு
மாதமும் ஒவ்வொரு கோவிலில் ஏதேனும் ஒரு திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு திருவிழாவிலும்
செங்கேணி வாத்தியாரின் கூத்து நிகழ்ச்சி நிகழ்ந்தது. திருவிழாவே இல்லையென்றாலும் ஊர்க்காரர்கள்
தம் வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளை ஒட்டியும் கருமகாரியங்களை ஒட்டியும் கூத்து
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். மாதத்துக்கு ஒன்றோ இரண்டோ கூத்து நிகழ்ச்சிகள் நடந்தபடி
இருந்தன.
பள்ளியிறுதி வகுப்பை வளவனூரில்
முடிக்கும் வரைக்கும் நான் தொடர்ந்து நறையூருக்குச் செல்பவனாக இருந்தேன். செங்கேணி
வாத்தியாரின் கலைக்கு மனத்தைப் பறிகொடுத்த நான் அவருடைய நிகழ்ச்சியை தவறவிட்டதே இல்லை.
அவருடைய செங்கோல் ஏந்திய கை பாடல் வரி அவருடைய அடையாளமென என் நெஞ்சில் பதிந்துவிட்டது.
கல்லூரிப்படிப்புக்காக
வளவனூரிலிருந்து புதுச்சேரிக்குச் சென்றுவிட்ட பிறகு எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.
மாதவன் அண்ணன் நறையூரிலேயே தனிக்கடை ஒன்றை
தொடங்கிவிட்டிருந்தார். வளவனூருக்கே செல்லமுடியாத அளவுக்கு என்னை பாடச்சுமைகள் அழுத்தியிருந்தன.
அச்சூழலில் நறையூரைப்பற்றி என்னால் நினைத்துக்கூட
பார்க்கமுடியவில்லை.
என் நினைவில் செங்கேணி
வாத்தியாரின் முகம் அடிக்கடி தோன்றி மறைந்தபடி இருந்தது. ஒருமுறையாவது அவரைப் பார்த்து
பேசவேண்டும் என்று தோன்றும். அப்போதெல்லாம் அவர் பாடிய பாடல் வரிகளை நினைவுக்குக் கொண்டுவந்து
பாடி திருப்திப்பட்டுக்கொள்வேன்.
பல மாதங்கள் கழித்து ஊருக்கு
வந்திருந்தபோது ஒரு குறுகிய பயணமாக நறையூருக்குச் சென்று மாதவன் அண்ணனையும் செங்கேணி வாத்தியாரையும் பார்த்தேன்.
நான் பட்டப்படிப்பு படிக்கிறேன் என்பதைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
”உனக்கு நேரமிருந்தா எனக்கு ஒரு வேலை செஞ்சி குடுப்பிபா?” என்று கேட்டார் வாத்தியார்.
“என்ன சொல்லுங்க” என்று கேட்டேன் நான். “மின்னால ஒருதரம் எனக்கு எழுதிக் குடுத்தியே,
அந்த மாதிரி இதயும் கொஞ்சம் எழுதி குடுக்க முடியுமா? தாளுங்க ரொம்ப நைஞ்சி போச்சி”
என்று ஒரு கத்தை தாட்களை எடுத்துக் கொடுத்தார். ”அதுக்கென்ன, கொடுங்க” என்று அந்தக்
கத்தையை வாங்கிக்கொண்டேன்.
அங்கேயே ஒரு நோட்டு வாங்கி
இரண்டு மணி நேரம் உட்கார்ந்து எழுதிக் கொடுத்தேன். அவர் அந்த நோட்டை வாங்கிப் புரட்டிப்
பார்த்துவிட்டு மனநிறைவுடன் சிரித்தார். ‘இதுபோதும். இன்னும் ஒரு பத்து வருஷம் ஓட்டிடுவேன்”
என்றார். தொடர்ந்து “உன் கையெழுத்து அன்னைக்கு எழுதனமாதிரியே முத்துமுத்தா இருக்குது”
என்று சொல்லிவிட்டு தட்டிக் கொடுத்தார். “எங்க ஆறுமுகம் அண்ணன்?” என்றேன் நான். “அவனா,
அவன் எங்கப்பா வீடு தங்கறான்? எங்கனா கூட்டாளிங்ககூட தோப்பு, ஏரி, குட்டைன்னு சுத்திகிட்டு
இருப்பான். வயசாய்டுச்சே தவிர பொறுப்பா நடந்துக்க மாட்டறான்” என்று சலிப்புடன் சொன்னார்.
மேலும் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு
விடைபெற்றுக்கொண்டு திரும்பிவிட்டேன். அதற்குப் பின் நான் நறையூர் பக்கம் செல்லவில்லை.
பட்டப்படிப்பு முடித்த கையோடு எனக்கு வேலை கிடைத்துவிட்டது. அதற்கான பயிற்சியில் இணைந்துகொள்வதற்காக
ஐதராபாத் சென்றுவிட்டேன். பயிற்சி முடிந்ததும் பெல்லாரியில் வேலையில் சேர்ந்துவிட்டேன்.
வாழ்க்கை என்னை வேறொரு திசையில் திருப்பிவிட்டது.
பயிற்சியில் இருந்த காலத்தில் மாதவன் அண்ணனுக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு
பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஜானகிராமன் பெரியப்பா எதிர்பாராத விதமாக மறைந்துபோனார்.
அதனால் மாதவன் அண்ணன் குடும்பத்தோடு நறையூரை விட்டு வெளியேறி புதுச்சேரிக்கே குடிபுகுந்தார்.
புதுச்சேரிக்கு அவ்வப்போது
நான் வந்து சென்றாலும் மாதவன் அண்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.
ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு என் திருமண அழைப்பிதழைக் கொடுக்கச் சென்றபோதுதான்
பார்க்கமுடிந்தது.
என் திருமணத்தை ஒட்டி வீட்டுக்கருகில்
செங்கேணி வாத்தியாரின் அரிச்சந்திரன் கூத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று எனக்குள்
ஒரு கனவு இருந்தது. அண்ணனையும் என்னோடு அழைத்துச் சென்று அவருக்கு அழைப்பிதழ் கொடுக்க
நினைத்தேன். என் திட்டத்தைச் சொன்னதும் அண்ணன் முகம் வாடிவிட்டது. ”அதுக்கு வழியில்லைடா”
என்றார் அண்ணன். “எதுக்குண்ணே அப்படி சொல்றீங்க?” என்று திகைப்புடன் கேட்டேன்.
“ரெண்டு வருஷத்துக்கு முன்னால
அவுங்க பையன் ஒரு லாரியில மாட்டிகிட்டு செத்துட்டான். அந்த அதிர்ச்சியில வாத்தியாரு
பொண்டாட்டிக்கு நெஞ்சுவலி வந்து , அவுங்களும் போயிட்டாங்க. வாத்தியாரு ஆரம்பத்துல சோகமா
இருந்தாலும் நாலஞ்சி மாசத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா சகஜநிலைக்கு திரும்பிட்டுதான்
இருந்தாரு. கூட்டாளிங்களோட பக்கமேட்டுக்கு போய் ஒரு கூத்து கூட நடத்திட்டு வந்தாரு.
சரி, வாத்தியாரு இனிமே தேறி வந்திடுவாருன்னு
நெனைக்கற சமயத்துல திடீர்னு மாட்டுகொட்டாய்ல தூக்கு போட்டுகினு செத்துட்டாரு.”
வாத்தியாரின் வாழ்வில்
இப்படி ஒரு திருப்பம் நேரும் என நான் நினைத்திருக்கவில்லை. இன்னும் ஒரு பத்து வருஷம்
ஓட்டிடு்வேன் என்று புன்னகை ததும்ப சொன்னவரை மரணம் இப்படி வாரிக்கொண்டு போய்விட்டது
என்பதை நம்பவே முடியவில்லை.
இரண்டுநாள் கழித்து வாத்தியார்
வாழ்ந்த வீட்டையாவது பார்த்து வணங்கிவிட்டு வரலாம் என்று நினைத்து நறையூருக்குச் சென்றேன்.
வாத்தியார் வாழ்ந்த கூரை வீடு சரிந்திருந்தது. மண்சுவர் சரிந்து ஒரே குப்பை மேடாக இருந்தது.
வீட்டைச் சுற்றி ஏராளமான எருக்கஞ்செடிகளும் புதர்களும் மண்டியிருந்தன. மனச்சுமையோடு
அந்த வீட்டு வாசலையே சிறிது நேரம் பார்த்திருந்தேன். ஒருகணம் ’செங்கோல் ஏந்திய கையால்’
என்று தொடங்கி பாடிப் புலம்பும் வாத்தியாரின் குரல் எனக்கு மிக அருகில் ஒலிப்பதுபோல
இருந்தது.