கடந்த பத்தாண்டுகளில் தமிழ்க்கவிதை மெல்ல மெல்ல நுண்சித்தரிப்புகளின் களமாக மாறி வந்திருக்கிறது. சரியான கோணத்திலும் போதுமான வெளிச்சத்திலும் எடுக்கப்பட்ட அழகானதொரு புகைப்படத்தைப் போல தேர்ந்தெடுத்த காட்சிகளை எழுதுவதில் கவிஞர்களுக்கு ஒரு தேர்ச்சி கைகூடி வந்திருக்கிறது. சில கவிதைகள் அக்காட்சிகளை ஒரு படிமமாக மாற்றி வாசிப்பவர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதியவைக்கின்றன. அல்லது குறிப்பிட்ட காட்சிக்கு இணையான காட்சிகளை தன் சொந்த வாழ்வில் நிகழ்ந்த பல தருணங்களிலிருந்து கண்டடைவதற்குத் தூண்டுகோலாக இருந்து மகிழ்ச்சியடைய வைக்கின்றன. அப்போதெல்லாம் கவிதைக்கு நெருக்கமாக நாம் இருப்பதைப்பற்றி அல்லது நமக்கு நெருக்கமாக கவிதை இருப்பதைப்பற்றி நம் ஆழ்மனம் ஆனந்தமாக உணர்கிறது.
இதற்கு இணையாக வேறு வகையான
சித்தரிப்புகளைக் கொண்ட கவிதைகளும் இன்னொரு பக்கத்தில் ஏராளமாக எழுதப்படுகின்றன. தன்னை
ஏமாற்றப்பட்டவன் என்றும் வஞ்சிக்கப்பட்டவன் என்றும் ஒருவித மிகையுணர்ச்சியோடு முன்வைத்துக்கொள்கின்றன
அக்கவிதைகள். கசப்பும் அவநம்பிக்கையும் மிதக்கும் நீர்நிலையென வாழ்க்கையைக் கருதவைக்கும்
வரிகளைக் கொண்டவையாக அக்கவிதைகள் இருக்கின்றன. உறவுகளாலும் உலக அமைப்பாலும் குரூரமாகச்
சிதைக்கப்பட்டவர்களின் குறிப்புகளைப்போல அவை தோற்றமளிக்கின்றன.
இவ்விரண்டு போக்குகளிலும்
சாராத ஒரு தனிப்போக்கும் தமிழ்க்கவிதையுலகில் இருக்கிறது. அத்தகையதொரு தனித்த திசையை
தன் செல்திசையாகக் கொண்டிருக்கின்றன கல்யாண்ஜியின் கவிதைகள். நுண்சித்தரிப்புக் கவிஞர்களுக்கே
உரிய வேட்கையோடும் விருப்பத்தோடும் அவர் கண்கள் ஒவ்வொரு காட்சியையும் பார்த்தபடியே
இருக்கின்றன. சலிப்பே இல்லாமல் மணிக்கணக்கில், நாட்கணக்கில், மாதக்கணக்கில் காத்திருந்ததன்
பயனாக அபூர்வமானதொரு காட்சியை அவருடைய விழிகள் கண்டடைகின்றன. ஓடுமீன் ஓட உறுமீன் வரும்
வரைக்கும் காத்திருந்த கொக்கு போல சட்டென அக்கணத்திலேயே அக்காட்சியை அவர் உள்வாங்கிக்கொள்கிறார்.
பிற சித்தரிப்புக்கவிஞர்களுக்கு
அத்தகையதொரு காட்சியே கவிதையை விரித்தெழுத போதுமான மையமாகத் தோன்றலாம். அப்படித்தான்
பல கவிதைகள் உருவாகியிருக்கின்றன. ஆனால் கல்யாண்ஜி
என்னும் கவிஞருக்கு அது மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. எங்கோ கட்டிலுக்கடியில் மறைந்திருந்த
பந்தைத் தேடிக் கண்டுபிடித்து புன்னகை பூத்த முகத்துடன் மார்போடு அணைத்தபடி சிறுநடையிட்டு
நடந்துவந்து எல்லோரும் பார்க்கும் வகையில் தரையில் வைத்து தன் பிஞ்சுக்காலால் தட்டி
ஏதோ ஒரு திசையில் உருண்டோட வைத்துவிட்டுச் சிரிக்கும் குழந்தையென அந்தச் சித்தரிப்பை
உதைத்து வேறொரு திசையை நோக்கி உருட்டிவிடுகிறார் கல்யாண்ஜி. அவருடைய கவிதை அதற்குப்
பிறகே முழுமையடைகிறது.
வண்ணத்துப் பூச்சியைப்
பிடிப்பதற்கு
வண்ணத்துப்பூச்சியின் பின்னாலேயே
அலைவது
பிடிப்பதற்காக அல்ல
பிடிப்பது போன்ற விளையாட்டுக்காக
வண்ணத்துப்பூச்சியின் பின்னால்
அலையும் சிறுமி அல்லது சிறுவன்தான் காட்சியின் மையம். அச்சித்தரிப்பை மட்டுமே மையமாகக்
கொண்டு ஒரு கவிதையை அமைத்துவிட முடியும். அது தேடலின் தீராத இன்பத்தை முன்வைக்கும்
ஒரு படிமமாக மாறவும் கூடும். ஆனால் கல்யாண்ஜி அக்காட்சியை ஒட்டி கூடுதலாக ஒரு சங்கதியை
இணைக்கிறார். பின்னால் அலைவது பிடிப்பதற்காக அல்ல, பிடிப்பதுபோன்ற விளையாட்டுக்காகவே
என்ற அறிவிப்பு ஒருகணம் நம்மை புன்னகைக்க வைக்கிறது. ஒருவேளை பிடித்துவிட்டாலும் அக்கணமே
விடுவித்துவிட்டு மீண்டும் அதன் பின்னால் பிடிப்பதற்கு நம் மனம் ஆவலுறுகிறது.
அந்தச் சங்கதி அவருடைய வாழ்வனுபவத்தின் வழியே அவர் பெற்ற துளி.
அந்தத் தேன்துளி அச்சித்தரிப்பைத் தீண்டியதுமே, கல் மலராவதுபோல அக்காட்சி ஒரு அனுபவப்பெட்டகமாக
மாறிவிடுகிறது. ஒரு பேருண்மையை போகிற போக்கில் விளையாட்டுத்தனமாக சொல்லிவிட்டுச் செல்கிறது.
இதுதான் கல்யாண்ஜியின் கவித்துவம்.
பிடிப்பதுபோன்ற விளையாட்டுக்காக
என்னும் வரி இந்த வாழ்க்கையையே விளையாட்டாக எண்ண வைக்கிறது. பிறப்பென்றும் இறப்பென்றும்
நித்தமும் நிகழும் விளையாட்டாகவும் எண்ண வைக்கிறது. அலகிலா விளையாட்டு நிகழும் களமென
இந்த உலகத்தைக் கருத வைக்கிறது. இந்த விளையாட்டில் நம் பங்கு என்ன என்பது தெரிந்துகொள்வது
எத்தகைய பேரின்பம் என்பதை உய்த்துணரவைக்கிறது. உணர்ந்த கணத்திலேயே அந்த உண்மை ஞானமாக
மாறிவிடுகிறது. கதை சொல்லிக்கொண்டோ அல்லது
ஏதோ ஓர் உரையாடலை நோக்கி கவனத்தைத் திசைதிருப்பிவிட்டோ, ஒரே கணத்தில் வலிக்காமலேயே
ஊசி போட்டுவிடும் மருத்துவரைப்போல ஞானம் என்பதை
ஞானம் என்ற சொல்லையே பயன்படுத்தாது நம் நெஞ்சில் ஆழத்தை நோக்கிச் செலுத்திவிடுகிறார்
கல்யாண்ஜி.
ஒற்றைக் கள்ளப் பருந்து
சுற்றிக்கொண்டே இருந்தது
வானம் அழகாக இருந்தது
சிறுபொழுதில்
கள்ளப்பருந்தைக் காணோம்
வானம் இப்போதும் அழகாகவே
இருந்தது
அழகு என்பது சற்று நேரம்
கள்ளம்
சற்று நேரம் கள்ளமின்மை
இந்தக் கவிதையைப் பாருங்கள்.
வானத்தில் எதற்காகவோ வட்டமிட்டுச் சுற்றும் பருந்துதான் காட்சியின் மையம். எல்லோருடைய
கண்களிலும் தென்படுவதுபோல கல்யாண்ஜியின் கண்களிலும் அந்தக் காட்சி தென்படுகிறது. அக்காட்சியை
மிக எளிதாக உண்மையைத் தேடிச் செல்லும் அல்லது வெற்றியைத் தேடிச் செல்லும் வாழ்க்கையின்
பயணத்தை முன்வைக்கும் படிமமாகச் சமைத்துவிட முடியும். அது ஒரு நல்ல கவிதையாகவே அமையக்கூடும்.
ஆனால் கல்யாண்ஜி தனக்கேயுரிய வகையில் அக்காட்சியை வேறொரு கோணத்தில் காட்டி புதியதொரு
தெளிவை அளிக்கிறார்.
பருந்து வானத்தில் பறந்தாலும்
அதற்கான இரை வானத்தில் இல்லை. தரையிலேயே இருக்கிறது.
தரையிலிருக்கும் இரையை அது வானத்தில் வட்டமிட்டபடி தேடிக்கொண்டே இருக்கிறது. அந்த உள்நோக்கம்
அதற்கு இருப்பதால்தான் அதன் பெயர் கள்ளப்பருந்தென அழைக்கப்படுகிறது. விரிந்திருக்கும்
வான்வெளியின் பின்னணியில் ஒற்றைப் பறவையாய் வட்டமிட்டுப் பறக்கும் கள்ளப்பருந்தின்
இருப்பு கண்ணுக்கினிய காட்சியாக இருக்கிறது. சில கணங்களில் பருந்து எங்கோ பறந்துபோயிவிட,
வெட்டவெளியாகக் காட்சியளிக்கும் வானத்தின் தோற்றமும் வேறொரு கோணத்தில் கண்ணுக்கினிய
காட்சியாகவே இருக்கிறது. விரிந்த வான்வெளி என்பது எப்போதும் அழகானதுதான். அந்நிலையில்
இதுவும் அழகு, அதுவும் அழகு என்றால் அழகு என்பது என்ன என்றொரு கேள்வியை ஆழ்மனம் எழுப்பிக்
கொள்கிறது. ஒரு கணம் அதற்கான விடை புதிராக இருக்க, மறுகணமே அந்தப் புதிர் விடுவிக்கப்பட்டுவிடுகிறது.
கள்ளமும் அழகு, கள்ளமின்மையும் அழகு என்பது நமக்குக் கிடைக்கும் முதல் வெளிச்சம். அழகு
என்பதே சற்று கள்ளமும் சற்று கள்ளமின்மையும் கொண்ட கலவை என்பது இரண்டாவது வெளிச்சம்.
தூணில் சாய்ந்து நிற்கிற
அவள்
தூணை அழகாக்குகிறாள்
படித்துறையில் காலைத் தொங்கவிட்டு
அமர்ந்திருப்பவன்
நதியை அழகாக்குகிறான்
குடையிருந்தும் நனைந்து
செல்லும் சிறுமி’
குடையை அழகாக்குகிறாள்
எதையேனும் செய்து
ஏதாவதை அழகாக்க
எனக்கு முடிந்தால் நல்லது
அழகு என்பதை வேறொரு வகையில்
இக்கவிதை வரையறுக்க முயற்சி செய்கிறது. அழகு என்னும் ஒற்றைக்கம்பி வழியாக தூணோரம் சாய்ந்து
நிற்கும் பெண்ணையும் படித்துறையில் காலைத் தொங்கவிட்டு உட்கார்ந்திருப்பவனையும் குடையிருந்தும்
விரிக்காமல் மழையில் நனைந்துசெல்லும் சிறுமியையும் இணைத்துக்கொள்கிறார் கல்யாண்ஜி.
எதைச் செய்தால் அழகாக இருக்கும் என்று தெரியாத அல்லது தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவரும்
கவிதையில் இறுதியாக இடம்பெறும்போது கவிதை வேறொரு திசையில் திரும்பிவிடுகிறது. ஞானத்தை
விழைவதே ஞானமாக மாறிவிடுகிறது.
இங்கே ஒன்றுமில்லை என்று
ஏற ஆரம்பித்தேன்
அங்கே ஒன்றுமில்லை என
இறங்கிக்கொண்டிருந்தான்
கீச்கீச் என்று பாடி
மேலும் கீழும் பறந்தபடி
இருந்தன
பச்சைப்பறவைகள்
அனைவரும் பார்க்கக்கூடிய
ஒரு மலையேற்றக்காட்சியின் சித்தரிப்போடுதான் இக்கவிதை தொடங்குகிறது. ஆனால் அச்சித்தரிப்பைக்
கடந்த ஓர் உண்மையை உணர்த்துவதாக முடிவடைகிறது.
ஒரு பெரிய மலை. அடிவாரத்தில்
ஆலயம் இருக்கிறது என யாரோ ஒருவர் சொன்னதை நம்பி ஒருவர் அடிவாரத்துக்கு வருகிறார். ஆனால்
அவர் எதிர்பார்த்து வந்தபடி அடிவாரத்தில் எந்த ஆலயமும் இல்லை. ஒருவேளை உச்சியில் இருக்கக்கூடுமோ
என்று அவர் ஆழ்மனம் கருதுகிறது. அதனால் படிக்கட்டில் ஏறி உச்சியை நோக்கிச் செல்கிறார்.
எதிர்பாராத விதமாக, உச்சியிலிருந்து ஒருவர் படியிறங்கி வருகிறார். உச்சியிலும் ஒன்றுமில்லை
என அவர் தெரிவிக்கிறார். அங்கேயும் இல்லாத, இங்கேயும் இல்லாத அந்த ஒன்று எது என்னும்
கேள்வி சுவாரசியமான ஒன்று. ஒரு ஞானத்தேடலுக்கு உரிய கேள்வி. மேலேயிருந்து கீழ்நோக்கியோ
அல்லது கீழேயிருந்து மேல்நோக்கியோ செல்வது என்பது எதையும் பார்ப்பதற்காகவோ, அடைவதற்காகவோ
அல்ல. சென்றுகொண்டே இருப்பதுதான் நோக்கம். அதுவே இன்பம். அதுவே ஞானம். கண்முன்னாலேயே
மேலும் கீழும் பறந்தபடி இருக்கும் பறவைகள்
அந்த ஞானத்தைத்தான் ஒவ்வொரு கணமும் அறிவித்தபடியே இருக்கின்றன. மனிதர்களுக்குத்தான் அதைக் காதுகொடுத்து கேட்பதற்கு
நேரமும் இல்லை. மனமும் இல்லை.
சின்ன வயதில் இருந்து
ரயில் பார்ப்பதற்கு இந்த
ஸ்டேஷனுக்கு வருவேன்
ஒரு பரவசமாக
ஒரு தவிப்பாக
ஒரு பைத்தியக்காரத்தனமாக
இருந்தது
அப்போதெல்லாம் தெரியாது
இந்த ரயிலில்தான் ஊரைவிட்டு
என்னை ஏற்றிக்கொண்டு போய்
நகரத்தில் தள்ளும் என்பது
இந்த ரயில்தான் ஒவ்வொரு
பண்டிகைக்கும்
என்னை ஊரில் கொண்டுவந்து
நிராதரவாக இறக்கிவிடும்
என்பது
நிலா பார்த்தல் என்றொரு
கவிதையை எழுதியிருக்கிறார் கல்யாண்ஜி. அதுபோல ரயில் பார்த்தலாக இக்கவிதை தொடங்குகிறது.
குழந்தைமைக்கே உரிய பார்வையில் ரயில் பரவசமூட்டும் ஒரு மாபெரும் இருப்பாகத் தோற்றமளித்தது.
வாலிபத்தில் அதே ரயில்தான் வாய்ப்புகளைக் காட்டுவதற்காக நகரத்துக்கு இழுத்துச் சென்றது.
அதே ரயில்தான் பண்டிகை நாட்களுக்கு உறவுகளைச் சந்திக்க மறுபடியும் ஊருக்குச் சுமந்துவந்து
இறக்கிவிடுகிறது. ரயில் உயிரற்ற ஓர் இயந்திரம்தான். ஆனால் ஒருபோதும் கைவிடவில்லை என்பது
பெரிய ஆறுதல்.
இந்த ஆற்றில் எல்லா மீன்களையும்
அடையாளம் சொல்லிவிடுவேன்
என்பதை நிறுத்து
உனக்கு மட்டுமல்ல
யாருக்கும் அடையாளம் தெரியாத
மீன் ஒன்று
ஆற்றுக்கும் தெரியாமலேயே
ஆற்றில் நீந்திக்கொண்டிருக்கிறது
சித்தரிப்புகள் இல்லாத
நேரடி உரையாடலாக அமைந்திருக்கிறது இக்கவிதை. ஆற்றுக்கே தெரியாமல் ஆற்றுக்குள் ஒரு மீன்
நீந்திக்கொண்டிருக்க வாய்ப்புண்டு என்னும் நிலையில் ஆற்றுக்கு வெளியே நின்று தன் கண்களையும்
ஞானத்தையும் மட்டும் நம்பி ஒருவன் முன்வைக்கும் வாய்ப்பேச்சுக்கு எந்தப் பொருளுமில்லை.
எந்த உண்மையும் குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டதே தவிர, நிரந்தர உண்மை என எதுவுமில்லை.
காற்றுக்காலம் அல்லவா
சருகுகள் தரையோடு தரையாக
சருகிச் சுழன்றன
சலவைச் சோப்பொன்றின் பெயருள்ள
பனியன் அணிந்த மேய்ப்பர்
கிழவர்
தரையை உற்றுப் பார்த்து
உரக்க எதையோ வாசித்துக்கொண்டிருந்தார்
என்ன வாசிக்கிறீர்கள் என்றேன்
சருகு சுழன்ற தரையைக் காட்டினார்
உங்களுக்குப் படிக்கத்
தெரியுமா என்ற கேள்விக்கு
அவர் சொன்னார்
காற்றுக்கு எழுதத் தெரியும்
காற்று வீசுகிறது. மரத்தடியில்
விழுந்து உலர்ந்து கிடக்கும் சருகுகள் புரண்டுபுரண்டு செல்கின்றன. இந்தச் சித்திரத்திலிருந்துதான்
கல்யாண்ஜி தன் கவிதையைத் தொடங்குகிறார். இயற்கையின் ஆடலை உணர்த்துவதற்கு அக்காட்சி
ஒன்றே போதும். ஆனால் கல்யாண்ஜி அச்சித்தரிப்போடு தனக்கேயுரிய வகையில் ஓர் உரையாடல்
காட்சியை இணைத்துக்கொள்கிறார். உருளும் சருகுகள் மண்தரையில் கீறிவிட்டுச் செல்லும்
தடங்களை எழுத்துகளாக நினைத்து ஒருவர் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். வீசும் காற்றின்
மாயக்கரத்துக்கு சருகைத் தொட்டு எழுதும் ஆற்றல் உண்டு என இன்னொருவர் பதில் சொல்கிறார்.
ஒருகணம் ’மடல்பெரிது தாழை மகிழ்இனிது கந்தம்’ என்னும் பழைய பாடல் நினைவில் மின்னி மறைகிறது. ஒவ்வொன்றும் ஒரு கலையை
அறிந்துவைத்திருக்கிறது என்னும் உண்மையைப் புரிந்துகொள்வது மிகப்பெரிய ஞானம்.
வானவில் விழுந்திருந்தது
வானவில்லைப் பார்க்கச்
சொல்ல
இவளைக் கூட்டிவர உள்ளே
போனேன்
வந்து பார்த்தால் காணோம்
வானவில்லை யாரோ
கூட்டிக்கொண்டு போயிருந்தார்கள்
இத்தொகுதியின் மிகச்சிறந்த
கவிதை இது. இருப்பு என்பது ஒரு கணம். இன்மை என்பது மறுகணம். இருப்புக்கும் இன்மைக்கும்
இடையில் ஊடாடியபடி இருக்கிறது நம் வாழ்வும் காலமும். ஒருவருக்குப் பார்க்கக் கிடைத்த
வாய்ப்பு இன்னொருவருக்குக் கிடைக்காமலேயே போய்விடுகிறது. ஊழ் என்பது இதுதானா? ஊழ் என்னும்
மந்திரக்கைகளால் உருட்டப்படும் சோழிகளா நாம்? இப்படி பல திசைகளில் நம் எண்ணங்களைப்
பறந்துசெல்ல வைக்கிறது கல்யாண்ஜியின் கவிதை.
முத்துகளால் கோர்க்கப்பட்ட
மாலையின் இடையில் இணைக்கப்படும் பதக்கத்தைப்போல கல்யாண்ஜி தன் காட்சிச்சித்தரிப்பின்
முடிவில் அல்லது இடையில் இணைக்கும் ஒன்றிரண்டு சொற்கள் கவிதையை ஒரு தனித்துவம் மிக்க
அனுபவ உண்மையாக அல்லது ஞான அனுபவமாக மாற்றிவிடுகிறது. கல்யாண்ஜியின் கவிதைகளை வாசிக்கும்
அனுபவம் என்பது நம் ஞாபகத்தைத் தீண்டிவிட்டுச் செல்லும் அந்த நினைவுத்துளிகளை அல்லது
ஞானத்துளிகளை அசைபோடுவதாகவே அமைகிறது.
(மேலும்
கீழும் பறந்தபடி – கவிதைகள். கல்யாண்ஜி. சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53வது தெரு,
9வது அவென்யு, அசோக் நகர், சென்னை -600 083. விலை. ரூ.150 )
(சொல்வனம் – 28.01.2024)