காந்தியடிகள் எழுதிய முக்கியமான நூல்களில் ஒன்று இந்திய சுயராஜ்ஜியம். விடுதலை பெற்ற இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றி அவர் ஆழ்மனத்தில் தீட்டி வைத்த சித்திரத்தின் எழுத்து வடிவமே இந்தப் புத்தகம். முழுக்க முழுக்க கேள்வி பதில் அமைப்பில் எழுதப்பட்ட புத்தகம். அவரே ஒரு கேள்வியை முன்வைத்து, அதற்குரிய பதில்களையெல்லாம் தொகுத்து பதிலாக எழுதிச் செல்கிறார். ஏன் என்கிற கேள்வி இல்லாத கேள்வியே அந்நூலில் இல்லை. சுயாராஜ்ஜியம் ஏன் வேண்டும்? இந்தியா ஏன் அடிமைப்பட்டிருக்கிறது? ஆங்கிலேயர்கள் ஏன் வெளியேறவேண்டும்? ஏன், ஏன் என இப்படி ஏராளமான கேள்விகளை எழுப்பி, ஒவ்வொன்றுக்கும் விரிவான பதிலை எழுதியிருக்கிறார்.
ஏதென்ஸ் நகரத்தில் இளைஞர்களிடையே உரையாற்றிய
கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் தன்னை நோக்கி கேள்வியெழுப்பும் இளைஞனிடம் வெவ்வேறு
கோணங்களிலிருந்து எண்ணற்ற சிறுசிறு கேள்விகளை எழுப்பி அவனையே பதிலளிக்கத் தூண்டி, அப்பதில்களின்
போக்கிலேயே அவனுக்குரிய பதிலை அவன் கண்டடைய வைத்துவிடுவார். ஏன் என்னும் ஒரு கேள்வியில் ஒருவருடைய சிந்தனைப்போக்கை
மாற்றிவிடும் அல்லது மதிப்பிடும் ஆற்றல் இருக்கிறது.
ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளை
வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு கட்டத்திலும் வழங்கிக்கொண்டே இருக்கிறது. ஏன் எழுதுகிறேன்
என்னும் கேள்வி எழுத்தாளனாவதற்கு முன்பு, ஒவ்வொரு செயலையும் நான் ஏன் செய்தேன் என்னும்
கேள்வியை நோக்கித் தள்ளிவிடுகிறது. அந்தப் பதில்களையெல்லாம் தொகுத்துக்கொண்டே வந்தால்,
புதிய கேள்விக்கான பதிலை அடையும் வழி எளிதாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பள்ளிக்காலம், கல்லூரிக்காலம், வேலைக்காலம்,
காதல்காலம் என ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு திசையை நோக்கிச் செல்லும் பாதையை நம்மையறியாமலேயே
நாம் தேர்ந்தெடுத்தபடி இருக்கிறோம். ஒவ்வொன்றையும்
நாம் ஏன் தேர்ந்தெடுத்தோம் என்கிற கேள்விக்கான பதில் ஒவ்வொருவரிடமும் உறுதியாக இருக்கக்கூடும்.
நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த
காலத்தில் ஒன்பதாவது வகுப்பு வரைக்கும் ஒவ்வொரு மாணவரும் ஐந்து பாடங்கள் படிக்கவேண்டும்
என்ற நிலை இருந்தது. அவை தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு-புவியியல் என ஐந்து
பாடங்கள். பத்தாவது வகுப்பில் அடியெடுத்து வைத்ததும் விருப்பப்பாடம் என்றொரு கூடுதல்
பாடம் சேர்க்கப்பட்டது. ஒவ்வொருவரும் தம் ஆர்வம் சார்ந்து உயர்கணிதம், உயிரியல், தாவரவியல்,
சமூகவரலாறு ஆகிய நான்கு வகையான பாடப்பிரிவிலிருந்து ஏதேனும் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
அது பதினோராவது வகுப்பிலும் தொடரும்.
யாருடைய தூண்டுதலும் இல்லாமலேயே, நான் அந்தப் பட்டியலில்
உயர்கணிதத்தைத் தேர்ந்தெடுத்தேன். எனக்கு எல்லாப் பாடங்களும் பிடித்தமானவையே. ஆயினும்
நான் கணிதத்தைத்தான் தேர்ந்தெடுத்தேன். கணிதப்பாடத்தின் மீது இருந்த அளவற்ற ஆர்வம்தான்
அதற்குக் காரணம். புதிர்களை என் போக்கில் வெவ்வேறு வழிகளில் விடுவித்துப்பார்ப்பதில்
கிடைக்கும் மகிழ்ச்சியும் பரவசமும் எனக்குப் பிடித்திருந்தன. ஒரு சிக்கலை என்னுடைய
சிந்தனை வழியாக தெளிவாக்கிப் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம். கணக்குப்பாடம் என்னுடைய
ஒவ்வொரு நாளையும் பரவசம் படிந்த நாளாக மாற்றித் திளைக்கவைத்தது. கணக்கு எனக்குக் கிடைத்த
ஒரு கிரியா ஊக்கி.
கணக்குப் பாடத்தில் நான் பெற்றிருந்த
மதிப்பெண்களின் அடிப்படையில்தான் தொலைபேசித்துறையில் அன்று இளநிலை பொறியாளர் பணி கிடைத்தது.
அதற்கான பயிற்சிக்காலம் ஓராண்டு. அக்காலத்தில் தொலைபேசித்துறை மூன்று பெரும்பிரிவுகளாக
பிரிந்து இயங்கி வந்தது. நாடெங்கும் இயங்கிக்கொண்டிருக்கும் தொலைபேசி நிலையங்களைப்
பராமரிப்பது ஒரு பிரிவு. புதிய புதிய தொலைபேசி நிலையங்களை உருவாக்குவதும் எஸ்.ட்டி.டி.
வசதிக்காக நகரங்களிடையே கேபிள் வழி பாதையை அமைத்து அடிப்படை கட்டுமானத்தை உருவாக்கியெழுப்புவது
இரண்டாவது பிரிவு. புதிதாக உருவாக்கப்பட்ட
அந்நிலையங்களைப் பராமரிப்பது என்பது மூன்றாவது பிரிவு. என்னோடு பயிற்சி பெற்ற இளைஞர்கள் அனைவரும் முதல்
பிரிவையும் மூன்றாவது பிரிவையும் தேர்ந்தெடுத்தனர். திருமண வாழ்க்கைக்கும் எதிர்காலத்தில்
வீடு கட்டி அமைதியாக வாழ்வதற்கும் அதுதான் பொருத்தமென்று அவர்கள் ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டனர்.
நான் மட்டுமே இரண்டாவது பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். புதியவற்றைச் செய்து பார்க்கும்
ஆர்வமும் சவால்களை எதிர்கொண்டு வெல்லும் வேகமும் புதிய ஊர்கள், புதிய மனிதர்கள் என
ஒரு புது உலகம் சார்ந்து இயங்கும் துடிப்பும் அப்பிரிவை அன்று நான் தேர்ந்தெடுக்கக்
காரணங்களாக இருந்தன. புதிர்களை விடுவித்துப் பார்க்கும் பரவசம் என் அடிப்படைக்குணமாகவே
இருந்தது.
கதை வாசிப்பை எனக்கு அறிமுகப்படுத்தி
என்னை நூலகத்தை நோக்கிச் செலுத்தியவர்கள் என் பள்ளியாசிரியர்கள். தொடக்கப்பள்ளியில்
படித்த காலத்திலிருந்து கல்லூரிப்படிப்பை முடிக்கும் காலம் வரைக்கும் எனக்குக் கிடைத்த
ஆசிரியர்கள் அனைவருமே என்னை வாசிப்பை நோக்கிச் செலுத்துகிறவர்களாகவே இருந்தனர் என்பது
என் நல்லூழ்.
கல்லூரியில் பாடம் நடத்திய என் ஆசிரியர்
தங்கப்பா ஒருமுறை வகுப்பில் ஒரு கேள்வியை முன்வைத்தார். வானத்தில் நிலவு வலம்வரும்
இரவு வேளையில் என்னென்ன பார்க்கிறோம், என்னென்ன கேட்கிறோம் என்பதுதான் கேள்வி. ஒவ்வொருவராக
எழுந்து நின்று பதில் சொல்லுமாறு பனித்தார். முதலில் சற்றே தயக்கம் நிலவினாலும் இரண்டு
மூன்று பதில்களுக்குப் பிறகு ஒவ்வொருவரும் உற்சாகமாக வர்ணனை கலந்த பதில்களைச் சொல்லத்
தொடங்கிவிட்டனர். பார்த்தவை பட்டியலில் மின்மினிப்பூச்சி, விமானம், தென்னந்தோப்பு,
பிச்சைக்காரர்கள், பூனைகள், நாய்கள், தள்ளுவண்டிக்கடை என ஏராளமானவை இடம்பிடித்தன. கேட்டவை
பட்டியலில் காற்றில் மிதந்து வரும் வானொலிப்பாடல், தென்னங்கீற்றுகள் உரசியெழும் ஓசை,
அருகிலிருக்கும் கோவில் வளாகத்திலிருந்து வரும் சத்தம், பக்கத்துவிட்டு பெரியம்மா பாடும்
ஒப்பாரிப்பாடல், எதிர்த்த வீட்டு அக்கா பாடும் தாலாட்டுப்பாடல் என ஏராளமான செய்திகள்
வளர்ந்துகொண்டே சென்றன.
இறுதியில் தங்கப்பா புன்னகையோடு எங்களைப்
பார்த்து உரையாடினார். இந்த உலகத்தில் பார்க்கும் காட்சிகளுக்கும் கேட்கும் ஓசைகளுக்கும்
கணக்கே இல்லை. உண்மையில் நாம் பார்த்ததைவிடவும் கேட்பதைவிடவும் பார்க்காதவையும் கேட்காதவையும்
இந்த உலகில் ஏராளமாக உள்ளன. அவற்றையெல்லாம் புத்தகங்கள் அறிமுகம் செய்கின்றன. புத்தக
வாசிப்பு என்பது ஒரு பேரனுபவம், புத்தகம் எழுதுவது என்பது அதைவிடவும் உயர்வான பேரனுபவம்
என்று சொல்லி அன்றைய வகுப்பை முடித்தார்.
அன்று தங்கப்பா சொன்ன சொற்கள் ஆழ்நெஞ்சில்
பதிந்துவிட்டன. ஏற்கனவே புதுமைகள் மீதும் புதிர்கள் மீதும் நான் கொண்டிருந்த விருப்பம்
மேன்மேலும் வளரத் தொடங்கிவிட்டது. தங்கப்பா முன்வைத்துவிட்டுச் சென்ற கருத்தை என்னுடைய
குறைந்தபட்ச வாசிப்பு அனுபவப்பின்னணியில் வெவ்வேறு கோணங்களில் அடுக்கியும் தொகுத்தும்
புரிந்துகொள்ளத் தொடங்கினேன். எத்தனையோ கதையாசிரியர்களின் களமாக விளங்கும் கடற்கரைப்
பின்னணியில் சிலர் காதல் கதை எழுதுகிறார்கள். சிலர் சில்லறை வியாபாரிகளின் துன்பங்களை
எழுதுகிறார்கள். சிலர் அலைநுரையைப்பற்றியும் பலூன் விற்றபடி செல்லும் பார்வையற்றவரைப்
பற்றியும் எழுதுகிறார்கள். சிலர் மகுடி ஊதி
பாம்பை ஆடவைக்கும் பாம்பாட்டியைப்பற்றியும் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும்
ஒரு கதையை எழுத தனிப்பட்ட காரணம் இருக்கும் என்று தோன்றியது.
ஒருமுறை மாக்சிம் கார்க்கியுடைய வாழ்க்கைவரலாற்றைப்
படித்துக்கொண்டிருந்தபோது அவர் தன் துன்பத்தையெல்லாம் எழுதிஎழுதிக் கடந்துசென்றதாகக்
குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். அந்த வாசகம் என் நெஞ்சில் அப்படியே பதிந்துவிட்டது.
“எல்லாத்தயும் மனசுக்குள்ளயே வச்சிகிட்டு புழுங்கிட்டே இருந்தா மனுசனுக்கு பைத்தியம்தான்
புடிக்கும். எதுவா இருந்தாலும் மனசுல இருக்கறத அப்பப்ப கொட்டிடு” என்று நடைமுறையில்
நண்பர்களும் காதலர்களும் வழக்கமாக தமக்குள் சொல்லிக்கொள்கிற வாசகம்தான் இது. ஆனால்
கார்க்கி அதைக் குறிப்பிடும்போது அதற்கு ஒரு சிறப்புத்தன்மை படிந்திருப்பதை உணர்ந்தேன்.
அதையொட்டி நண்பர்களுடன் பல நாட்கள் உரையாடியதுண்டு. “தாலாட்டுப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு
எல்லாம் என்னன்னு நெனச்சிகிட்ட? எல்லாமே நெஞ்சுபாரம் தாங்காம வெளிப்படற பாட்டுதான்.
எழுதப்படிக்கத் தெரியாத ஆளுங்க பாடினா அதுக்குப் பேரு நாட்டுப்புறப்பாட்டு. எல்லாம்
தெரிஞ்ச ஆளுங்க எழுதினா, அதுக்குப் பேரு இலக்கியம்” என்றார் ஒருவர். உரையாடுவதற்கு
அடுத்த விஷயம் கிடைக்கும் வரைக்கும் நாங்கள் அந்தக் கருத்தையே மையப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தோம்.
என் முதல் சிறுகதை, வேலைக்கான நேர்காணலுக்காக
சொந்த ஊரிலிருந்து பெருநகரத்தை நோக்கி வந்த என் வாழ்வில் நிகழ்ந்த அனுபவத்தை அடிப்படையாகக்
கொண்டது. அந்த நேர்காணலுக்கான அழைப்புக்கடிதம் வந்த நாள் முதல் போய் வரும் பயணத்துக்கான
செலவுத்தொகையை எப்படித் திரட்டுவது என்பது ஒரு மாபெரும் பிரச்சினையாக எழுந்து அச்சமூட்டியபடி
இருந்தது. பல இடங்களுக்குச் சென்று, பலரைச் சந்தித்தும் ஒரு ரூபாய் கூட திரட்டமுடியவில்லை.
கடைசி நாளில் ஒரு நண்பர் வழியாக ஒரு தொகை கிடைத்தது. அது பயணச்செலவுக்கு மட்டுமே போதுமான தொகை. அன்று முழுதும் பணத்தைத் திரட்ட அலைந்த
அலைச்சல் காரணமாக நான் சாப்பிடவே இல்லை. பேருந்து பிடிக்கும் அவசரத்தில் சான்றிதழ்
கோப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். மறுநாள் பெருநகரத்தில் நேர்காணல்
நடைபெறும் இடத்தைக் கண்டுபிடிப்பதில் சிறு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. அதனால் அந்த அலுவலகத்துக்குத்
தாமதமாகவே சென்று அடைந்தேன். அதற்குள் என் பெயரைக் கடந்து நேர்காணலுக்குரிய வரிசை சென்றுவிட்டது.
என் முறை வருவதற்கு நான் மதியம் மூன்று
மணி வரைக்கும் காத்திருக்கவேண்டியிருந்தது. அடுத்து அரைமணி நேரத்திலேயே தேர்வு பெற்றவர்களின்
பெயர்ப்பட்டியல் ஒட்டப்பட்டுவிடும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அருகிலிருக்கும்
அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவச்சான்றிதழ் பெற்று அளித்துவிட்டுச் செல்லுமாறு
அறிவிக்கப்பட்டது. நாங்கள் அங்கேயே காத்திருந்தோம். என் பெயர் தேர்வு பெற்றவர்கள் பட்டியலில்
இடம்பெற்றிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நானும் சென்று வரிசையில் நின்று சான்றிதழ்
பெற்று வந்து ஒப்படைத்தேன். பயிற்சிக்கான ஆணை சில வாரங்களில் வீட்டுக்கு வந்து சேருமென்று
சொல்லப்பட்டதும், அனைவரும் அங்கிருந்து கலையத் தொடங்கினர்.
வெற்றி பெற்றிருந்தபோதும், ஒரே ஒரு
விழுக்காடு கூட அதை உணரும் மனநிலையோ, அந்த இன்பத்தில் திளைக்கும் மனநிலையோ என்னிடம்
கிஞ்சித்தும் இல்லை. இரண்டுநாள் பசியோடு பேருந்து நிலையத்துக்கு நடந்து வந்து சேர்ந்தேன்.
ஊருக்குத் திரும்பும் பேருந்துக்கு அருகில் சென்றேன். நடத்துநர் பயணச்சீட்டு வழங்கிக்கொண்டிருந்தார்.
என்னிடம் இருந்த பணம் பயணச்சீட்டுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு
அங்கேயே நின்றிருந்தேன். பக்கத்தில் தண்ணீர்க்குழாய் இருந்தது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும்
பசி போகவில்லை. மயக்கம் வருவதுபோல இருந்தது.
எங்கேயாவது ஒரு நாணயம் தட்டுப்படாதா
என்று சான்றிதழ்கள் வைக்கப்பட்டிருந்த பையைத் துழாவினேன். எதிர்பாராத விதமாக ஒரு பத்து
பைசா கிடைத்தது. நெஞ்சில் உற்சாகம் கரைபுரண்டோடியது.
வேகமாகச் சென்று பக்கத்திலிருந்த தள்ளுவண்டிக்காரரிடம் சென்று ஒரு வாழைப்பழம் வாங்கினேன். ஓரமாக நின்று அவசரமாகச் சாப்பிட்டேன்.
பசி குறைவதற்குப் பதிலாக அதிகரித்துவிட்டது. மீண்டும் தண்ணீர் அருந்தினேன். அப்போதும்
குறையவில்லை. கீழே வீச மனம் வராமல் வாழைப்பழத்தோலை இன்னும் என் கைகள் பற்றியபடியே இருந்தன.
மெளனமாகக் குனிந்தபடி அந்தத் தோலைக் கடித்து மென்று தின்றேன். சற்றே நிம்மதியோடு தண்ணீர்
அருந்துவதற்காக குழாய்ப்பக்கம் திரும்பும் சமயத்தில் அருகிலிருந்த பேருந்துக்குள்ளிருந்து
ஓர் இளம்பெண் என்னையே பார்ப்பதைப் பார்த்தேன்.
அவமானம், வருத்தம், கோபம் என எல்லாமே
அக்கணத்தில் ஒன்றிணைந்துகொள்ள, என்னால் தலை நிமிரவே முடியவில்லை. அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல இருந்தது. ஆனாலும்
ஒரு அடி கூட எடுத்துவைக்கமுடியவில்லை. கால்கள் தூண்களென நின்றன. வெகுநேரம் தரையையும்
வேறு திசைகளிலும் மாறி மாறிப் பார்த்தேன். பார்வையின் கோணத்தை மாற்றும் முன்பாக ஒருகணம்
அவள் திசையில் பார்த்தேன். அப்போதும் அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு புழுவைப்போல
உடல் சிறுத்துவிட நின்றேன். பிறகு மெல்ல மெல்ல பேருந்துக்குள் ஏறிச் சென்று பின்பக்கமாக
ஓரிடத்தைப் பார்த்து உட்கார்ந்துகொண்டேன்.
1981இல் வேலைக்கான பயிற்சி ஆணை வந்துவிட்டது.
ஐதராபாத்தில் பயிற்சி. கைவசம் குறைவான தொகையே இருந்தது. பணம் குறையக்குறைய பயம் வந்துவிட்டது.
உதவித்தொகை வந்துவிட்டால் சமாளித்துவிடலாம். என்னமோ தெரியவில்லை, தலைமையகத்திலிருந்து
வரவேண்டிய உதவித்தொகை வந்து சேரவில்லை. உதவி செய்யும் நிலையில் பெற்றோர்களும் இல்லை.
தினம் ஒரு வேளை மட்டும் உண்டு எப்படியோ நாட்களைக் கழித்தேன். ஒரு நாள் இரவில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது, இந்த வாழ்க்கை ஏன்
இவ்வளவு சுமையாக இருக்கிறது என ஏதேதோ கேள்விகள் நெஞ்சைக் குடைந்தபடி இருந்தன. அக்கணத்தில்
என்றோ படித்து ஆழ்நெஞ்சில் படிந்துவிட்ட கார்க்கியின் வாசகம் நினைவில் மிதந்துவந்தது.
துன்பத்தை எழுதிக் கடத்தல். அக்கணமே எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் சரி, எழுதிக்
கடந்துவிடலாம் என்றொரு தன்னம்பிக்கை பிறந்தது.
என்னை அழுத்திக்கொண்டிருந்த பெரும்பாரம் அப்படியே விலகிவிட்டதுபோல இருந்தது.
எழுந்து உட்கார்ந்து எழுதத் தொடங்கினேன்.
என்னை அறியாமல் என் நேர்காணல் அனுபவம்தான்
காட்சிகளாக நெஞ்சில் விரிந்தது. முதல் வரியை எழுதியதுமே கதை தன் போக்கில் வளர்ந்துகொண்டே
சென்றது. ஏறத்தாழ ஆறுமணி நேரம் தொடர்ச்சியாக
எழுதி அக்கதையை முடித்தேன். இன்னும் விடியாத கருக்கல் வேளை. அறையின் கதவைத் திறந்துகொண்டு
வெளியே வந்து வானத்தைப் பார்த்தேன். குளிர்க்காற்று உடலைத் தழுவியது. மனம் எடையில்லாது
மலர்போல இருப்பதை என்னால் உணரமுடிந்தது. எழுதிக் கடக்கும் அனுபவம், கார்க்கியின் வழியில்
எனக்கும் கைகூடி வந்துவிட்டது என மகிழ்ச்சியோடு உணர்ந்தேன்.
நாற்பதாண்டுகளுக்குப் பிறகு அக்கணத்தை
மீண்டும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஏன் எழுதினேன் என்ற கேள்விக்கு எழுதிக்
கடக்கவே எழுதினேன் என்று உறுதியாகச் சொல்லத் தோன்றுகிறது.
அன்று அச்சிறுகதையைப் படியெடுத்து தீபம்
இதழுக்கு அனுப்பிவைத்தேன். ஆனால் அது பிரசுரமாகவில்லை. ஒருசில மாதங்களுக்குப் பிறகு
தீபம் அலுவலகத்திற்குச் சென்றிருந்தபோது நா.பார்த்தசாரதியைச் சந்தித்தேன். “படிக்கத்
தொடங்கியதுமே முழுக்க முழுக்க உங்கள் சொந்த அனுபவம் என்பது எனக்குப் புரிந்துவிட்டது.
சொந்த அனுபவம் சார்ந்து மட்டுமே எழுதவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், நம் படைப்புலகம்
சுருங்கிவிடும். மாறாக நம் கேள்விகள், பிறர்
அனுபவங்கள் வழியாக வெளிப்படும் வகையில் கதைகளை எழுதினால் அது விரிந்து செல்லும். உங்களுக்கே
போகப்போகப் புரியும்” என்று தெளிவூட்டினார்.
அவர் சுட்டிக்காட்டிய உண்மையை அழகிரிசாமி, புதுமைப்பித்தன், மெளனி, தி.ஜானகிராமன்,
சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ணநிலவன் என பல மூத்த படைப்பாளிகளின் படைப்புகளை
மீண்டும் மீண்டும் வாசிக்கத் தொடங்கியதும் புரிந்துகொண்டேன். அந்த வாசிப்பில் நான்
கற்றுக்கொண்ட நுட்பங்கள் பல. அவையனைத்தும் என் படைப்புலகில் உரமாகப் படிந்தன.
எழுத்து என் மனச்சுமையிலிருந்து முற்றிலுமாக விடுதலை
செய்தது. மானுட மனத்தில் உறைந்திருக்கும் இருள்/வெளிச்சம் விகித வேறுபாடுகளை நோக்கி
கவனம் திசைதிரும்பிய பிறகு ஒவ்வொரு நாளும் என்னைச் சுற்றி எண்ணற்ற கதைக்கருக்களையும்
கதைப்பின்னணிகளையும் பார்க்கிறேன். ஒருசிலவற்றை மட்டுமே எழுதுகிறேன். பெரும்பாலானவற்றை
மனசுக்குள் அசைபோட்ட பிறகு கடந்துவிடுகிறேன். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது களம்
சார்ந்து தொடங்கும் ஒரு சிறுகதையில் திட்டமிடாத பல வேறு நிகழ்ச்சிகளும் களங்களும் வந்து
நிறைவது என்பது புரிந்துகொள்ள முடியாத பெரும்புதிர். ஒவ்வொரு கதையிலும் திட்டமிடாமல்
கூடி வந்து நிற்கிற அந்த அழகு என்பது எனக்குக் கிடைக்கும் தெய்வதரிசனம்.
புதிரை அறிந்துகொள்ளும் சுவாரசியமும் தரிசனத்தால் கிட்டும்
பரவசமும் என்னை எழுதத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன.
(’ஏன் எழுதுகிறேன்?’ என்னும் தலைப்பில் கே.பி.நாகராஜன் தொகுத்த
கட்டுரைத்தொகுதிக்காக எழுதிய கட்டுரை. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சென்னை புத்தகக்கண்காட்சியில்
இந்நூல் வெளியிடப்பட்டது)