Home

Sunday 4 February 2024

சோமயாஜுலு : அஞ்சாத நெஞ்சும் வற்றாத அன்பும்

 

1919இல் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம், மூன்றாண்டு கால இடைவெளியிலேயே நாடெங்கும் வெற்றிகரமாகப் பரவி மக்கள் அனைவரையும் ஈர்க்கத் தொடங்கியது. அத்தகு சூழலில் உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் அருகில் செளரி செளரா என்னும் இடத்தில் 05.02.1922 அன்று  நடைபெற்ற ஊர்வலத்தில் எதிர்பாராத விதமாக வன்முறை ஏற்பட்டது. காவல்துறை தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதனால் அகிம்சைவழிப் போராட்டம் வன்முறை வழியில் திசைமாறுவதை விரும்பாத காந்தியடிகள் உடனடியாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துவதாக அறிவித்தார்.  

சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு, என்.சி.கேல்கார் போன்ற தேசியவாதிகள் காந்தியடிகளின் முடிவை எதிர்த்தனர். அதே ஆண்டின் இறுதியில் கான்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அந்த எதிர்ப்பு பிரிவினையில் முடிந்தது. காந்தியடிகளின் முடிவில் உடன்பாடில்லாத  அவர்கள் தனியே பிரிந்து சென்று சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகள் தனித்தே இயங்கினர். அந்தப் பிரிவினையை விரும்பாத காந்தியடிகள் 1924ஆம் ஆண்டின் இறுதியில் இரு பிரிவினரும் மீண்டும் இணைந்து பணியாற்றும் வகையில் ஒரு திட்டமொன்றை முன்வைத்து ஏற்றுக்கொள்ளும்படி செய்தார். அந்த ஒப்பந்த விவரங்களை நாட்டுக்கு விளக்கும் விதமாக காந்தியடிகளின் தலைமையில் பெல்காம் நகரில் 26-12-1924 அன்று காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.

அம்மாநாட்டில் கலந்துகொண்டு காந்தியடிகளின் உரையைக் கேட்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல இளைஞர்கள் பெல்காம் நகரை நோக்கி வந்தனர். அச்சமயத்தில் தூத்துக்குடி நகரில் ஆர்நெலாஸ் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த இளைஞரொருவரும் பெல்காமை நோக்கி ஆர்வத்துடன் புறப்பட்டார்.  காந்தியடிகளின் கதர், தீண்டாமை, மதுவிலக்கு கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் அவர். மாநாடு நடக்கவிருக்கும் செய்தி அறிவிப்பு வெளியானதுமே தூத்துக்குடி வட்டாரத்தில் தன்னைப்போலவே ஆர்வம் கொண்ட நூறு இளைஞர்களை அவர் ஒருங்கிணைத்தார். அவர்களுடன் இணைந்து காந்தியக் கொள்கைகளை முழக்கமிட்டபடி நாளொன்றுக்கு ஏறத்தாழ பதினைந்து மைல் என்கிற அளவில் நடந்து, நாற்பது நாட்களுக்கு மேலாக நடைப்பயணமாகவே சென்று பெல்காம் நகரத்தை அடைந்தார்.

அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய காந்தியடிகள் மிக விரிவான  வகையில் இராட்டையில் நூல்நூற்பதற்கும் கதராடைகளைப் பயன்படுத்துவதற்கும் தன் காலில் தானே நிற்பதற்கும் உள்ள இணைப்பைத் தெளிவுபடுத்திப் பேசினார். கதரை அன்பின் அடையாளமாகவும் ஒற்றுமையின் அடையாளமாகவும் காணவேண்டும் என அவர் வலியுறுத்தினார். தீண்டாமையை ஒழித்து அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் இணைந்து பணியாற்றுவதால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைத்தார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானத்தையும் படித்து பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தார். ஏற்கனவே கதர் மீது பற்று கொண்ட தூத்துக்குடி இளைஞர் காந்தியடிகளின் உரையைக் கேட்டு பெரிதும் மனம் நெகிழ்ந்தார். இருபத்திரண்டு வயதே நிறைந்த அந்த இளைஞரின் பெயர் சோமயாஜுலு.

 ஆர்நெலாஸ் பள்ளியில் ஆசிரியராகச் சேர்வதற்கு முன்பாக மேலூர் சி.வ.பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே, இந்திப் பண்டிதரான முத்தையாதாஸ் என்பவர் அளித்த ஊக்கத்தாலும் பயிற்சியாலும் சோமயாஜுலு  தலைசிறந்த பேச்சாளராக வளர்ச்சி பெற்றிருந்தார். பல மேடைகளில் பெரிய தலைவர்களோடு இணைந்து மேடையேறி காந்தியக்கொள்கைகளை பிரச்சாரம் செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். மதுரையைச் சேர்ந்த சீனிவாசவரதன் உருவாக்கிய தேசபக்த சமாஜம் என்னும் அமைப்புக்குத் தலைமை தாங்கி கூட்டங்களையும் ஊர்வலங்களையும் தனித்து ஒருங்கிணைப்பதிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். தேசபக்த சமாஜம் சார்பாக மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிற கூட்டங்களுக்கு நடந்தே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு மேடையிலும்  ஒவ்வொரு மேடையிலும் அவர் பாடிய பாரதியாரின் தேசபக்திப் பாடல்கள் இளைஞர்களைக் கவர்ந்திழுத்தன. கோவில்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அவர் ஆற்றிய உரை பார்வையாளர்களாக நிறைந்திருந்த பொதுமக்களையும் வெளியூரிலிருந்து வந்த தலைவர்களையும் பெரிதும் கவர்ந்தது. அந்த வட்டாரத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு பேச்சாளராக அவர் வளர்ச்சி பெற்றார்.

நடைப்பயணமும் பிரச்சாரமும் இணைந்த ஒரு புதிய வழிமுறையை தனக்குத்தானே வகுத்துக்கொண்டு பின்பற்றினார் சோமயாஜுலு. பாரதியார் பாடல்களும் வந்தே மாதர முழக்கங்களும் அவருக்குக் கிரியா ஊக்கிகளாக இருந்தன.  பெல்காம் பயணத்துக்குப் புறப்படுவதற்கு முன்பே சோமயாஜுலு திருவண்ணாமலையில் நடைபெற்ற மாகாண அளவிலான காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று வந்திருந்தார். அப்போதும் ஏராளமான தொண்டர்களைத் திரட்டி அழைத்துக்கொண்டு மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு நடைப்பயணமாகவே சென்றார். வழியெங்கும் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் நின்று ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுமைகளை எடுத்துரைத்துப் பிரச்சாரம் செய்தபடியே சென்றார்.

அந்த இளம்தேசபக்தர்களை திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலைப்பிள்ளையும் காவ்யகண்டம் கணபதி சாஸ்திரியும் மாநாட்டுப்பந்தலில் வரவேற்றனர். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் வல்லுநரான கணபதி சாஸ்திரி அந்த மாநாட்டில் தீண்டாமை என்பதே இந்து மதத்தில் கிடையாது என பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கிப் பேசினார். அவரைத் தொடர்ந்து தீண்டாமை அகலவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திப் பேசினார் சோமயாஜுலு. 

பெல்காமிலிருந்து திரும்பிவந்த பிறகு, அவருடைய நடைப்பயணத்தைப் பாராட்டி வ.வெ.சு.ஐயர், இராஜாஜி, திரு.வி.க., வரதராஜுலு நாயுடு போன்றோர் எழுதிய கடிதங்கள் சோயாஜுலுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தன. அதனால் உத்வேகம் கொண்ட சோமயாஜுலு ஆங்கில அரசின் ஆதிக்க உணர்வை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பல ஊர்களுக்கு ஓய்வற்ற வகையில் பிரயாணம் செய்து பல மேடைகளில் சொற்பொழிவாற்றினார். ஏதாவது ஒரு வகையில் பொதுமக்களிடம் தேசபக்தியை ஊட்டி ஆங்கிலேயரை எதிர்த்து நிற்கும் மன உறுதி கொண்டவர்களாக மாற்றிவிட வேண்டுமென்னும் விழைவோடு பாடுபட்டார்.  

அச்சமயத்தில் சேரன்மாதேவி என்னும் ஊரில் வ.வெ.சு.ஐயர் நடத்திவந்த குருகுலத்துக்குச் சென்று சில மாதங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பிறகு அங்கிருந்து வெளியேறி தமிழ்நாட்டு இளைஞர் படை என்னும் ஓர் அமைப்பை உருவாக்கினார். இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆயுதங்களைக் கையாளும் திறமை கொண்டவர்களாக மாற்றவேண்டும் என்னும் கனவு தீடீரென அவரைத் தூண்டியது. ஆனால் அந்த எண்ணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அவருடைய ஆழ்மனம் ஏற்றுக்கொண்ட காந்தியடிகளின் கொள்கைவழி அவரைத் தடுத்து நிறுத்திவிட்டது. அந்நியத்துணி எதிர்ப்புப் பிரச்சாரத்திலும் கதர்ப்பிரச்சாரத்திலும் தொடர்ந்து ஈடுபட்டார்.

நாடெங்கும் வளர்ந்துவரும் விடுதலைப்போராட்ட எழுச்சியைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆங்கில அரசு 1878இல் ஆயுதச்சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை இயற்றியிருந்தது. பொதுமக்கள் கொலைக்கருவிகளை வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் அச்சட்டம் தடை செய்திருந்தது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டம் என்றபோதும், அரசு அச்சட்டத்தின் துணையோடு பல தேசபக்தர்களைக் கைதுசெய்யவும் சிறையில் அடைக்கவும் தொடங்கியது. இதைக் கண்டித்து நாக்பூரில் மஞ்சர்ஷா ருஸ்தம்ஜி அவாரி ஆயுதம் வைத்திருப்பதை தம் உரிமை என அறிவித்து ஒரு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குப் பெருகி வந்த ஆதரவைக் கண்டதும் காவல்துறையினர் அவரை 24.05.1927 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவாரி சிறையில் அடைக்கப்பட்ட செய்தி தேசமெங்கும் பரவியதும் பல நகரங்களில் மன உறுதி மிக்க இளைஞர்கள் அவாரியின் வழியில் ஆயுதச்சட்ட எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினர்.

அவாரி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரை காங்கிரஸ் கிளை சார்பாக ஒரு கண்டனக்கூட்டம் நடைபெற்றது. அதை அறிந்த சோமயாஜுலு இராமநாதபுரத்தில் தேசபக்தர் சங்கம் ஒன்றை தன் நண்பர் சீனிவாசவரதனின் ஒத்துழைப்புடன் கூட்டினார். அதில் திருவண்ணாமலை அண்ணாமலைப்பிள்ளை, பண்ருட்டி தெய்வநாயகம், வேலூர் குப்புசாமி முதலியார், சீர்காழி சாமிநாதன் செட்டியார், ராமநாதபுரம் சேஷய்யங்கார், விருதுநகர் லட்சுமணப்பிள்ளை, பத்மாஸினி அம்மாள் என பலரும் கலந்துகொண்டனர். ஆயுதச்சட்டத்தை எதிர்த்து சட்டமறுப்பும் மதுரை நகரில் வாளேந்தும் சத்தியாகிரகமும் சோமயாஜுலு தலைமையில் நடத்துவதென அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மதுரை மேலச்சித்திரை வீதி தேசியப் பள்ளிக்கூடத்திலிருந்து சோமயாஜுலு தலைமையில் 16.07.1927 அன்று ஊர்வலம் தொடங்கியது. சென்னை கே.வி.கணபதி ஐயர், இராமநாதபுரம் முகம்மது அலி இருவரும் இரண்டரை அடி நீளமுள்ள பட்டாக்கத்தியை ஏந்தியபடி ஆயுதச்சட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டபடி நடந்தனர். அவர்களைப் பின்பற்றி பல இளைஞர்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு முக்கியமான தெருவில் அந்த ஊர்வலம் நிகழ்ந்தபடி இருந்தது. ஏறத்தாழ ஒரு மாத காலம் மதுரை நகரமே அதிர்ந்தது. பின்னர் அரசாங்கச் சட்ட உறுப்பினரான சர்.சி.பி.இராமசாமி ஐயர் அரசு சார்பில் மலபார் தவிர்த்த பிற பகுதிகளில் பொதுமக்கள் கத்தி வைத்துக்கொள்ளலாம் என்று அறிக்கை விடுத்தார். ஆயுதச்சட்டத்துக்கு எதிரான சத்தியாகிரகத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி இது.

அதே ஆண்டில் சோமயாஜுலு சென்னையில் ஒரு புதிய போராட்டத்தைத் தொடங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1857இல் வட இந்தியாவில் ஜான்ஸி ராணியின் தலைமையில் நடைபெற்ற இந்தியப்புரட்சியை அடக்கி, ஏராளமானவர்கள் சுட்டுக்கொல்லப்படவும் தூக்கிலிடப்படவும் காரணமான மதராஸைச் சேர்ந்த ஜேம்ஸ் நீல் என்னும் அதிகாரியைக் கெளரவிக்கும் விதமாக நகரத்தின் மையப்பகுதியில் ஸ்பென்சர் கம்பெனி கட்டடத்துக்கு எதிரில் அவருடைய உருவச்சிலையை  அரசு அமைத்திருந்தது. அவமானச்சின்னமான அச்சிலையை அங்கிருந்து அகற்றவேண்டும் என்பதுதான் அப்போராட்டத்தின் நோக்கம். இந்திய தேசிய காங்கிரஸின் மதராஸ் மாகாணக்குழுவும் மதராஸ் மகாஜன சபையும் நீல் சிலையை அகற்றவேண்டுமென தீர்மானம் இயற்றி  அரசுவின் பார்வைக்கு அனுப்பிவைத்தன. ஆயினும் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை.  அதனால் மதுரைத்தொண்டர்கள் நேரடி நடவடிக்கையில் இறங்க முடிவெடுத்தனர். சோமயாஜுலு தலைமையில் திருநெல்வேலி சுப்பராயலு நாயுடுவும் இராமநாதபுரம் முகம்மது சாலியும் மதராஸுக்குச் சென்று சத்தியாகிரகத்தில் ஈடுபடுவது என தீர்மானித்தனர்.

கெடுவாய்ப்பாக, அந்த இளைஞர்களிடம் மதுரையிலிருந்து மதராஸுக்குச் செல்வதற்குக் கூட பணமில்லை. அந்த நெருக்கடியை அறிந்ததும் பத்மாசினி அம்மையார் அவ்விளைஞர்களை அழைத்து தன் வளையல்களை அடகு வைத்து பணம் வாங்கி அவர்களிடம் கொடுத்து அனுப்பிவைத்தார். திட்டமிட்டபடி 11.08.1927 அன்று மூவரும் மதராஸை அடைந்தனர். காலை ஒன்பது மணியளவில் சுப்பராயலு நாயுடுவும் முகம்மது சாலியும் தேசியக்கொடி, பூமாலை, உளி, சம்மட்டி, ஏணி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சிலையை நோக்கிச் சென்றனர். சிலையின் பீடத்தில் ஏணி வைத்து ஏறி நின்றுகொண்டு சம்மட்டியால் சிலையின் மீது ஓங்கி அடித்தனர். அவர்கள் அந்தச் சிலையை கற்சிலை என்றும் அதை எளிதில் உடைத்துவிடலாம் என்றும் கருதியிருந்தனர். ஆனால் உடைக்கத் தொடங்கிய பிறகே அது வெண்கலச்சிலை என்பது புரிந்தது. நெடுநேர முயற்சிக்குப் பிறகு நீலின் கையிலிருந்த கத்தி உறை பகுதியில் ஒன்றரை அடி நீளத்துக்குத் தகர்த்தனர். உடனே தேசியக்கொடியை நாட்டி அதற்கு பூமாலை போட்டனர். 

அதற்குள் அங்கே பொதுமக்கள் சேர்ந்துவிட்டனர். அவ்விருவரும் அவர்களிடம் நீ்லின் வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தனர். அந்த நேரத்தில் யாரோ கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர்  ஓடோடி வந்து அவ்விருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவருக்கும் ஆறு மாத தண்டனை விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நாள்தோறும் சோமயாஜுலு தலைமையில் இருவர் ஊர்வலமாகச் சென்று அந்தச் சிலையை நெருங்கி உடைக்க முற்பட்டனர்.  அங்கே காத்திருக்கும் காவலர்கள் அக்கணமே அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவ்விளைஞர்களின் நோக்கத்தையும் வீரத்தையும் பாராட்டி யங் இந்தியா இதழில் காந்தியடிகள் ஒரு குறிப்பை எழுதினார். நீல் சிலையை சென்னை நகராண்மைக்கழகம் உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும் என்றொரு கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். ஆயினும் நகராண்மைக்கழகம் அவருடைய கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை. சோமயாஜுலு தலைமையில் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

06.09.1927 அன்று காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். அப்போது நீல் சிலை போராட்டம் தொடர்பாக பேச விரும்பினார். ஸ்ரீநிவாச ஐயங்கார் இல்லத்தில் சத்தியமூர்த்தி, குழந்தை போன்ற தலைவர்களும் பல இளைஞர்களும் காந்தியடிகளை நேரில் சந்தித்தனர், நீல் சிலை அகற்றும் திட்டம் குறித்து நெடுநேரம் உரையாடினர். சிலை அகற்றும் போராட்டத்தை காங்கிரஸ் சார்பாக நடத்தவேண்டாம் என்றும் தனித்த குழுவொன்றின் போராட்டமாக நடத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். போராட்டத்தை ஒட்டி எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தேசிய இயக்கமான காங்கிரஸைப் பாதிக்காமல் இருப்பது மிகமுக்கியம் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.

காந்தியடிகளின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டு இளைஞர் குழுவின் தனிப்பட்ட முயற்சியாக நீல் சிலையை அகற்றும் சத்தியாகிரகம் தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும் சோமயாஜுலு பொதுக்கூட்டங்களில் பேசி நீலின் கொடுமைகளை விளக்கி மக்கள் ஆதரவைத் திரட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக சோமயாஜுலுவின் பேச்சே நகரத்தின் குரலாக மாறத் தொடங்கியது. அதை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பிய காவல் துறையினர் சோமயாஜுலுவை உடனடியாகக் கைது செய்தனர். அவருக்கு பதினைந்து மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சோமயாஜுலு முதலில் சென்னை சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் சென்னை சிறையில் அவரை வைத்திருப்பது தொடர்ந்து நடைபெறும் சத்தியாகிரகத்துக்கு வலிமையூட்டியதுபோல அமைந்துவிடும் எனக் கருதி சிறை அதிகாரிகள் அவரை ஒரிசாவில் உள்ள பெர்ஹாம்பூர் சிறைக்கு அனுப்பி வைத்தனர். டிசம்பர் மாத இறுதிவரைக்கும் அந்தச் சத்தியாகிரகம் தொடர்ச்சியாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் இரு தொண்டர்கள் கைதானபடி இருந்தனர். சென்னையில் எம்.ஏ.அன்சாரி தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கவேண்டியிருந்ததால், டிசம்பர் மாத இறுதியில் சத்தியாகிரகப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

 சிறையிலிருந்து விடுதலை பெற்று ஊருக்குத் திரும்பியதும் ’இளந்தமிழன்’ என்னும் பெயரில் ஒரு மாத இதழைத் தொடங்கினார் சோமயாஜுலு. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுதந்திரப்போராட்டங்களின் வரலாற்றையும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் கட்டுரைகளாக எழுதி அந்த இதழில் வெளியிட்டார். இளைஞர்களிடையில் அப்பத்திரிகைக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. ஓர் இதழில் சோமயாஜுலு அயர்லாந்து சுதந்திரப் போராட்ட வீரரான டிவாலாராவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார். அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகள் அக்கட்டுரையில் அடங்கியுள்ளன என பழிசுமத்தி காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சோமயாஜுலுவின் மனம் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி உருவாகும் வண்ணம் கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது. அதனால் அவருக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைத்ததும் நண்பர்களுடைய உதவியோடு ‘நெல்லைச்செய்தி’ என்னும் பெயரில் புதிய இதழொன்றைத் தொடங்கினார். நெல்லைச்செய்தியில் அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள் பலரை ஈர்த்தன. மெல்ல மெல்ல அந்தப் பத்திரிகைக்கு வாசகர்கள் எண்ணிக்கை பெருகியது. அவருடைய நடவடிக்கையை அரசாங்க அதிகாரிகள் தொடர்ச்சியாக கவனித்து வந்தனர். அவரைக் கைது செய்து மீண்டும் சிறையிலடைக்கும் தருணத்துக்காகக் காத்திருந்தனர். எனினும் காவலர்களுக்கு அத்தகு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அதனால் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு அலுவலக நிமித்தமாக கவர்னரோ, வைசிராயோ வருவதாக இருந்தால், பாதுகாப்பான சூழலை உருவாக்கும் கடமையுணர்ச்சியின் பெயரில் சோமயாஜுலுவைக் கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் அடைக்கத் தொடங்கினர். அத்தகு துன்பங்களை மனம் கலங்காமல் ஏற்றுக்கொண்ட சோமயாஜுலு தன் உறுதியிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல் தம் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் நாட்டு விடுதலைக்காகப் பயன்படுத்தினார்.

இந்தியாவில் மேற்கொள்ளப்படவேண்டிய அரசியல் சீர்திருத்தங்களை ஆய்வு செய்வதற்காக சைமன் என்பவர் தலைமையில் 03.02.1928 அன்று ஏழு பேர் அடங்கிய ஒரு குழு பம்பாயை அடைந்தது. ஆனால் அக்குழுவில் ஓர் இந்தியர் கூட இடம்பெறாததால், சைமன் குழுவின் வருகைக்கு காங்கிரஸ் எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்தியா முழுதும் அன்று கடையடைப்பு நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற எதிர்ப்புக்கூட்டத்தில் காரணமே இல்லாமல் காவல்துறையினர் நிகழ்த்திய நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் மரணமடைந்தனர். மதுரையில் ஜார்ஜ் ஜோசப் என்பவருடைய தலைமையில் நடைபெற்ற எதிர்ப்புக் கூட்டத்தில் சோமயாஜுலு கலந்துகொண்டு வழக்கம்போல எழுச்சியுரை ஆற்றினார். அந்தக் கூட்டத்தில் ஏராளமான மாணவர்களும் வழக்கறிஞர்களும் கலந்துகொண்டனர்.

1929இல் டிசம்பர் மாதத்தில் லாகூரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. டொமினியன் அந்தஸ்து கோரிக்கைக்காக காங்கிரஸ் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்ததால், முழு சுதந்திரத்தையே காங்கிரஸ் தன் புதிய கோரிக்கையாக முன்வைத்தது. பூரண சுயராஜ்ஜிய பிரகடன கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அதையொட்டி நிகழ்ந்த விவாதங்களுக்குப் பிறகு காங்கிரஸ் அம்முடிவுக்கு தன் ஒப்புதலை அளித்தது. 31.12.1929 அன்று ராவி நதிக்கரையில் நேரு பூரண சுதந்திரக்கொடியை பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றினார். அதைத் தொடர்ந்து தலைவர்களும் தொண்டர்களும் நாடெங்கும் மூவண்ணக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர். மதுரையில் மூவண்ணக்கொடியை ஏற்றிய சோமயாஜுலு, தொண்டர்களை ஊர்வலமாக அழைத்துக்கொண்டு முழக்கமிட்டபடி நகரத்தைச் சுற்றிவந்தார்.

12.03.1930 அன்று காந்தியடிகள் உப்புச்சட்டத்தை எதிர்த்து சபர்மதி ஆசிரமத்திலிருந்து 78 தொண்டர்களுடன் நடைப்பயணமாக தண்டி கடற்கரையை நோக்கிச் சென்றார். அந்த வழியையொட்டி, திருச்சியிலிருந்து வேதாரண்யம் கடற்கரை வரை செல்லும் நடைப்பயணத்தைத் திட்டமிட்டார் இராஜாஜி. பங்கேற்கும் தொண்டர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மதுரையைச் சேர்ந்த வைத்தியனாத ஐயர் ஏற்றுக்கொண்டார். பல கட்ட பரிசீலனைக்குப் பிறகு அவர் நூறு தொண்டர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களில் மதுரையைச் சேர்ந்தவர்களே 32 பேர்கள் இருந்தனர். அவர்களுக்குத் தலைமை தாங்கி, பேருந்து வழியாக அவர்களை திருச்சி வரைக்கும் அழைத்துச் சென்றார் சோமயாஜுலு. அனைவரும் தி.சே.செள.இராஜன் இல்லத்தில் தங்கியிருந்து 13.04.1930   அன்று வேதாரண்யத்தை நோக்கி இராஜாஜியின் தலைமையில் தன் நடைப்பயணத்தைத் தொடங்கினர். அந்தப் பயணத்தில் பாடுவதற்கென ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்றொரு பாடலை கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதிக் கொடுத்தார்.

பதினைந்து நாட்கள் பயணத்துக்குப் பிறகு சத்தியாகிரகக் குழுவினர் வேதாரண்யத்தை அடைந்தனர். அகஸ்தியம்பள்ளி கடற்கரையில் உப்பை அள்ளி உப்புச்சட்டத்தை மீறினார் இராஜாஜி. காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவரைக் கைது செய்தனர். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு சத்தியாகிரகியின் தலைமையில் உப்புச்சட்டத்தை மீறும் போராட்டம் தொடர்ந்தது. நாள்தோறும் தலைவர்களும் தொண்டர்களும் கைதாகத் தொடங்கினர்.

மதுரையில் முனகால பட்டாபிராமையா தலைமையில் உப்பு சத்தியாகிரக முகாம் நடைபெறது. ஆங்கிலேய அதிகாரிக்குக் கீழ்ப்படிந்து பணிபுரியும் காவலர்கள்  தம் பணியை உதறி விட்டு காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து பணிபுரியவேண்டும் என்று அழைப்பு விடுத்தபடி நகரெங்கும் உரை நிகழ்த்தினார் சோமயாஜுலு. அவருடன் சீனிவாசவரதன், கிருஷ்ணமாச்சாரி, பத்மாஸினி அம்மாள், தியாகராஜ சிவம், சுந்தரசிங், சங்கர்லால் ஆகியோரும் இணைந்து உரையாற்றினர். அவர்கள் உரையாற்றும் கூட்டங்களுக்கு மிகுதியான அளவில் பொதுமக்கள் திரண்டு வந்து கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு நாளும் சோமயாஜுலுவும் அவருடைய நண்பர்களும் பத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். மறியலை வேடிக்கை பார்த்துக்கொண்டும் உரைகளைக் கேட்டுக்கொண்டும் நின்றிருந்த பொதுமக்களை விரட்டியடிக்கும் நோக்கத்துடன் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

ஒருநாள் கோவில்பட்டியில் அவர் உரையாற்றிக்கொண்டிருந்த சமயத்தில், பொதுமக்களை போராட்டத்துக்குத் தூண்டியதாக குற்றம் சுமத்தி சோமயாஜுலுவையும் பிறரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அனைவருக்கும் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சோமயாஜுலுவையும் பிறரையும் சிறையில் அடைப்பதற்காக, காவலர்கள் அனைவரையும் ரயிலில் ஏற்றி அழைத்துக்கொண்டு சென்றனர். ரயில் மதுரையை அடைவதற்கு முன்பாகவே, மதுரையில் அவர்களைக் காண்பதற்காக ரயில் நிலையத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி நின்று காத்திருந்தனர். அதைத் தவிர்க்கும் எண்ணத்துடன் காவல்துறை அதிகாரிகள் திருப்பரங்குன்றத்துக்கு அருகில் நிறுத்தமே இல்லாத ஓர் இடத்தில் ரயிலை நிறுத்தவைத்து இரகசியமாக சோமயாஜுலுவையும் அவருடைய நண்பர்களையும் சிறைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அனைவரும் விடுதலை பெற்றனர். அப்போது சோமயாஜுலுவை மட்டும் வெளியே விட அஞ்சிய காவல்துறை அதிகாரிகள் அவர் மீது வேண்டுமென்றே வெவ்வேறு பிரிவுகளின் கீழ் இராஜ துவேஷ குற்றம் சுமத்தினர். விசாரணையைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சோமயாஜுலு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைத்துன்பங்களை பொருட்படுத்தாத மன உறுதி வாய்க்கப்பெற்றவராக இருந்தார் சோமயாஜுலு. பாரதியார் பாடல்களை உரத்த குரலில் ராகத்தோடு பாடி துன்பத்தை மறப்பதற்கு அவர் மனம் பழகியிருந்தது. கம்பராமாயணப்பாடல்களிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. தேடிவந்து உரையாடும் தொண்டர்களிடம் பாடல்களைப் பாடி கலகலப்பாகப் பேசி எளிதில் நெருக்கமாகிவிடும் குணமுடையவர் சோமயாஜுலு. அவருடைய அன்பில் கரைந்து அவரை தொண்டர்கள் அனைவரும் அண்ணா என்றோ சோமண்ணா என்றோ அழைக்கத் தொடங்கிவிட்டனர். அந்தப் பழக்கம் சிறையிலிருந்து வெளியேயும் பரவிவிட, அவரை அறிந்த இளையவர்களும் பெரியவர்களும் சோமண்ணா என்றே அன்போடு அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

05.03.1931 அன்று ஏற்பட்ட காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் விளைவாக எல்லாச் சத்தியாகிரகிகளும் விடுதலை பெற்றபோது சோமயாஜுலுவும் விடுதலையடைந்தார். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக சொந்தப் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சும் உரிமையும் துணிக்கடைகள் முன்பும் கள்ளுக்கடைகள் முன்பும் மறியல் செய்யும் உரிமையும் கிடைத்தது.

விடுதலை பெற்ற சோமயாஜுலு கோவில்பட்டியிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கள்ளுக்கடை மறியலைத் தொடங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அவருக்குத் துணையாக இருந்தனர். அவர்களை பல்வேறு குழுக்களாகப் பிரித்து பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி தொடர்ச்சியாக மறியல்கள் நிகழும்வண்ணம் ஏற்பாடு செய்தார்.

ஒருமுறை இளையரசனேந்தல் என்னும் ஊரில் இருந்த கள்ளுக்கடையின் முன் சோமயாஜுலு மறியலில் ஈடுபட்டிருந்தார். இரவில் கடையை மூடும் வரை அவரும்  மறியலில் ஈடுபட்டு முழக்கமிடுவதை மரபாகக் கடைபிடித்து வந்த சோமயாஜுலு அன்றும் இரவு வரைக்கும் மறியலில் ஈடுபட்டிருந்தார். பிற உள்ளூர்த்தொண்டர்கள் தம் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றதும், அவர் கோவில்பட்டிக்குச் செல்வதற்கான ஏற்பாட்டில் இறங்கினார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு கூண்டுவண்டி கிடைத்தது. அதை அமர்த்திக்கொண்டு கோவில்பட்டிக்குப்  புறப்பட்டார்.

நள்ளிரவில்   அரிவாள்களோடு சில வழிப்பறிக்கொள்ளைக்காரர்கள் நடுவழியில் வண்டியை மறித்தனர். ஒருசிலர் வண்டியோட்டியை அதட்டி இறக்கிவிட்டு, வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடுகளை விடுவிப்பதில் ஈடுபட, இன்னும் சிலர் பயணியின் கைப்பொருட்களைப் பிடுங்கிக்கொள்ளும் நோக்கத்துடன் மிரட்டியபடி வண்டிக்குள் பாய்ந்தனர். மறுகணமே வண்டிக்குள் அமர்ந்திருப்பவர் சோமயாஜுலு என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர்.  சத்தம் போட்டு ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொண்டனர். அதைக் கேட்டதும் அனைவருடைய நடவடிக்கைகளும் அப்படியே நின்றன. உடனே பின்வாங்கி நின்று, வண்டிக்குள் இருந்த சோமயாஜுலுவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். கொள்ளைக்காரர்களாக இருந்தபோதும் அவரைப்பற்றியும் அவருடைய பணிகள் பற்றியும் அவர்கள் அறிந்தவர்களாக இருந்தனர். மாடுகளை மீண்டும் வண்டியில் பூட்டி, கோவில்பட்டி நெருங்கும் வரை அவர்களே துணையாக நின்று வண்டியோடு வந்து வழியனுப்பிவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

கள் விற்பனை குன்றியதால் கள்ளுக்கடைகளை நடத்தி வந்தவர்கள் அரசாங்க அதிகாரிகளை அணுகி முறையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக புறப்பட்டு வந்த காவலர்கள் பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி சோமயாஜுலுவையும் பிற மறியல் சத்தியாகிரகிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது சத்தியாகிரகிகள் சார்பில் நீதிமன்றத்தில் வ.உ.சி. விடுதலைக்காக வாதாடினார். ஆயினும் விசாரணையின் முடிவில் நீதிபதி சத்தியாகிரகிகளுக்கு சில மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார்.

சோமயாஜுலு சிறையில் இருந்த சமயத்தில், ஒருநாள் அவருடைய தாயார் இறந்துவிட்டதாக அவருக்குச் செய்தி கிடைத்தது. அத்தகு நெருக்கடியான தருணங்களில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்துவிட்டு பரோலில் சென்று திரும்புவதற்கான வசதி இருந்தது. ஆயினும் அதிகாரியின் கருணையை யாசித்துப் பெறுவதில் சோமயாஜுலுவுக்கு விருப்பமில்லை. ஆகவே,. ஊரில் இருக்கும் உறவினர்களே கூடி இறுதிச்சடங்கு செய்யும்படி தகவல் அனுப்பிவிட்டு, அத்துக்கத்தை மெளனமாக ஏற்றுக்கொண்டார்.

காந்தி இர்வின் ஒப்பந்தப்படி இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டது. லண்டன் நகரத்தில் 07.09.1931 அன்று நிகழ்ந்த மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், ஏமாற்றத்துடன் அவர் நாடு திரும்பினார். அவர் இந்தியாவை அடைவதற்கு ஐந்து நாட்கள் முன்பாகவே நேருவும் பிற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். காந்தியடிகள் 04.01.1932 அன்று கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அவசரம் அவசரமாக அரசு அறிவித்தது.

அந்த அவசரச்சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் ஏராளமான தொண்டர்கள் அகிம்சை வழியில் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சிறையிலிருந்து விடுதலை பெற்று வீட்டுக்குத் திரும்பியிருந்த நிலையில், சோமயாஜுலு  காங்கிரஸை தடைசெய்யபப்ட்ட அமைப்பாக அறிவிக்கும் அவசரச்சட்டத்தை எதிர்த்து ஒரு மாபெரும் ஊர்வலத்தை ஒருங்கிணைத்து நடத்தி தம் எதிர்ப்பைத் தெரிவித்தார். அதனால் அரசுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு சோமயாஜுலு கைது செய்யப்பட்டார். அவருக்கு முப்பத்துநான்கு மாத காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் ஓராண்டு மட்டுமே கழிந்த நிலையில் சோமயாஜுலுவின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான சூழலில் அரசு அவரை விடுதலை செய்துவிட்டது. தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோமாயுஜுலு மாதக்கணக்கில் படுத்த படுக்கையாக இருந்தார். அதற்குப் பிறகே கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய உடல்நலம் தேறி மரணத்தின் பிடியிலிருந்து மீண்டார்.

பழையபடி உடல்நலம் தேறியதும் 22.10.1934 அன்று ஜெயப்பிரகாஷ் நாராயணும் ஆச்சார்யா நரேந்திர தேவும் தொடங்கிய காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில்  இணைந்து மேடைகளில் முழக்கமிடத் தொடங்கினார் சோமயாஜுலு. அப்போது சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு நெசவுத்தொழிலாளர்களின் நன்மைக்காக ஓர் அமைப்பை உருவாக்கி ஜீவா, ராமமூர்த்தி, சி.பி.இளங்கோ போன்றோரோடு இணைந்து  பணியாற்றினார்.

1939இல் இரண்டாம் உலகப்போர் மூண்ட சமயத்தில் வைசிராயாக இருந்த லின்லித்கோ இந்திய அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் இந்தியாவை போரில் ஈடுபடுத்தும் முடிவை அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, ஏற்கனவே 1937இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்திருந்த மாகாணங்களின் ஆட்சிப்பொறுப்பைத் துறந்து  வெளியேறியது. காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட தொண்டர்கள் தனித்தனியாக போர் எதிர்ப்பு உரையை நிகழ்த்தி பொதுமக்கள் நலம்சார்ந்த அக்கறையின்மையோடு இயங்கும் அரசாங்கத்தின் அணுகுமுறையை மக்களுக்குப் புரியவைப்பதுதான் அந்த சத்தியாகிரகத்தின் நோக்கம். முதல் சத்தியாகிரகியாக வினோபா போராட்டத்தைத் தொடங்கி கைதானார். அவரைத் தொடர்ந்து நாடெங்கும் பல தலைவர்களும் தொண்டர்களும் கைதாகினர். சோமயாஜுலுவும் அவ்வரிசையில் போர் எதிர்ப்புப் பரப்புரையில் ஈடுபட்டு கைதாகி சிறைக்குச் சென்றார்.

சோமயாஜுலு மாபெரும் பேச்சாளர். எந்த இடத்தில் அவர் பேசினாலும், அவருடைய மேடைப்பேச்சைக் கேட்பதற்காக அக்கம்பக்கத்திலிருக்கும் ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிடுவது வழக்கமாக இருந்தது. அவருடைய மேடைப்பேச்சுக்கு இருந்த வலிமையை உணர்ந்துகொண்ட காவல்துறையினர் அவர் உரைநிகழ்த்தச் செல்லும் இடங்களிலெல்லாம் ஏதாவது ஒரு வகையில் இடையூறு கொடுத்து அவருடைய சொற்பொழிவு நிகழாதவண்ணம் பார்த்துக்கொண்டனர். அதையும் மீறி அவர் பேசுகிற சூழல் அமைந்துவிட்டால், அவர் பேச்சில் அரசு அமைப்புக்கு எதிராக ஏதேனும் கருத்து இருந்ததாகச் சுட்டிக்காட்டி பொய்வழக்கு போட்டு அவரைச் சிறையில் தள்ளினர்.

சிறைவாசத்தை முடித்துக்கொண்டு விடுதலை பெற்று வந்த சோமயாஜுலுவை மறைமுகமாக அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக பொய்வழக்கு தொடர்ந்து மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ச்சியான சிறைவாசங்கள் அவருடைய உடல்நிலையைப் பெரிதும் பாதித்தது. நோய்களால் துவண்டபோதும் மன உறுதி தளராதவராகவே இருந்தார் சோமயாஜுலு.

எழுத்தாளர் கல்கியின் முன்முயற்சியால் தமிழகத்தின் அன்பர்கள் வழங்கிய நிதி உதவியைக் கொண்டு எட்டயபுரத்தில் பாரதியாருக்கு ஒரு மணிமண்டபம் உருவானது. 03.06.1945 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு 13.10.1947 அன்று திறப்புவிழா நடைபெற்றது. சோமயாஜுலு அந்த மணிமண்டப விழா செயலாளராக பொறுப்பேற்று, அதைச் சிறப்பான முறையில் நடத்தினார். அவருடைய உழைப்பையும் அர்ப்பணிப்புணர்வையும் தமிழகமே பாராட்டியது. கல்கி அவரைப்பற்றி தனியே ஒரு கட்டுரையையே எழுதினார். 

தில்லியில் 30.01.1948 அன்று மாலைப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். வானொலி வழியாக உடனடியாக அச்செய்தி தேசமெங்கும் பரவியது. அன்று சோமயாஜுலு தன் நண்பரான கிருஷ்ணன் என்பவரோடு நாகர்கோவிலில் தங்கியிருந்தார். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. காந்தியடிகளின் மரணச்செய்தியை அவரால் நம்பமுடியவில்லை. சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டார். வேறு எந்த வேலையிலும் நாட்டமில்லாதவராக மனவாட்டத்துடன் உடனையாக திருநெல்வேலிக்குத் திரும்பிவிட்டார்.

மறுநாள் காலையில் திருநெல்வேலியில் பல இடங்களில் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றன. பொது இடங்களில் காந்தியடிகளின் புகைப்படத்துக்கு மாலையிட்டு வைத்து அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு வட்டாரத்திலும் தொண்டர்கள் இணைந்து இரங்கல் ஊர்வலம் நடத்தினர். சோமயாஜுலு வசிக்கும் தெருவைச் சேர்ந்த தொண்டர்கள் காந்தியடிகளின் புகைப்படத்தை ஏந்தியபடி ஊர்வலமாக நடந்து வந்தனர்.  அந்த ஊர்வலம் சோமயாஜுலுவின் வீடு வழியாகச் சென்றது.

அதே தெருவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர் ஒருவருடைய வீடு இருந்தது. ஊர்வலம் அந்த வீட்டைக் கடந்துசென்ற சமயத்தில் அதுவரை கூட்டத்தினர் கடைபிடித்து வந்த அமைதி சட்டென நிலைகுலைந்தது. கையில் கிடைத்த கற்களையெல்லாம் எடுத்து அந்த வீட்டின் மீது ஆத்திரத்துடன் தொண்டர்கள் எறியத் தொடங்கினர். ஆரவார ஓசையைக் கேட்டதும் பதற்றத்தோடு வீட்டைவிட்டு வெளியே வந்தார் சோமயாஜுலு. ஒரே கணத்தில் நடந்தவை அனைத்தையும் புரிந்துகொண்டார். உடனே கொஞ்சம் கூட யோசிக்காமல் குறிபார்க்கப்பட்ட அந்த வீட்டின் முன்னால் ஓடோடிச் சென்று கைகளை விரித்த நிலையில் தடுப்பதுபோல நின்றுகொண்டார்.  “எதற்காக பிறர்மீது கற்களை எறிகின்றீர்கள்? என் மீது எறியுங்கள்” என்று குரலெழுப்பினார். அந்தச் சீற்றத்தின் முன்னால் ஒருவருக்கும் நிமிர்ந்து பார்க்க துணிவில்லை. கையில் எடுத்த கற்களை கீழே எறிந்துவிட்டு வரிசைக்குத் திரும்பினர். கூட்டம் மீண்டும் அமைதியாக நடக்கத் தொடங்கியது. மொத்த ஊர்வலமும் அந்தத் தெருவைக் கடந்து வெளியேறும் வரை பாதுகாப்புக்காக அந்த வீட்டு வாசலிலேயே நின்றிருந்த சோமயாஜுலு அதற்குப் பிறகே தன் வீட்டை நோக்கி நடந்து சென்றார்.

விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சோமயாஜுலு. கிராம மின்சாரத்திட்டத்தின் கீழ் ஏராளமான கிராமங்கள் பயன்பெறும் வகையில் அதிகாரிகளுடன் சேர்ந்து அமர்ந்து திட்டமிட்டு செயல்படுத்தினார். ஏற்கனவே சட்டம்  இயற்றப்பட்டிருந்தபோதும், அவற்றைப் புறந்தள்ளி தாழ்த்தப்பட்டோருக்கு  அனுமதி மறுத்துவந்த சங்கரன்கோவில், கழுகுமலை, திருச்செந்தூர் முதலிய கோவில்களின் நிர்வாகங்களுடன் உரையாடி சாதி வேறுபாடின்றி அனைவரும் சென்று தொழும் வண்ணம் செய்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி வட்டாரங்களில் உள்ள இந்தியன் சிமெண்ட் தொழிலாளர் சங்கம், சங்கர் மில் தொழிலாளர் சங்கம், நெல்லை காட்டன் தொழிலாளர்கள் சங்கம் போன்ற பல தொழிற்சங்கங்களில் ஆலோசகராக இருந்து தேவைப்படும் நேரங்களில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி தொழிலாளர்கள் நலன் காப்பதில் பெரிதும் அக்கறையோடு உழைத்தார்.

ஒருமுறை ஓர் இளம்தொண்டர் தம் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக சோமயாஜுலுவைச் சந்திக்க வந்தார். அழைப்பிதழைப் பெற்றுக்கொண்ட சோமயாஜுலு மணமகளைப்பற்றியும் மணமகள் வீட்டாரைப்பற்றியும் பொதுவாக விசாரித்தார். அவற்றைப்பற்றி பேசத் தொடங்கிய இளம்தொண்டர் திருமணத்தன்று மணமகளுக்கு திருமாங்கலியச்சங்கிலி போடுவதாக வாக்களித்துவிட்டதாகவும் அதை வாங்கும் சக்தி இல்லாததால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்து கண்கலங்கினார்.  அதைக் கண்ட சோமயாஜுலு தன் மனைவியை அழைத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைக் கழற்றிக் கொடுக்கும்படி கேட்டு வாங்கி, அதை அத்தொண்டரிடம் கொடுத்தனுப்பிவிட்டார்.

சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியமும் நிலமும் கொடுக்கும் திட்டத்தை அரசு முன்னெடுத்தபோது, சரியான புள்ளி விவரங்களைச் சேகரித்துத் தொகுத்து அளிக்கும் பொறுப்பை சோமயாஜுலுவே மனமுவந்து ஏற்றுக்கொண்டு ஓய்வில்லாமல் உழைத்தார். பலரை தனிப்பட்ட நட்பின் விளைவாக அவர் அறிந்தவர் என்பதால் அவரால் அந்தப் பொறுப்பை எளிதாக நிறைவேற்றமுடிந்தது.  கூடுதலான கவனத்துடன் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரைப்பற்றிய தகவல்களையும் திரட்டித் தொகுத்து அரசிடம் ஒப்படைத்து அனைவருக்கும் ஓய்வூதியமும் நிலமும் கிடைக்க வழிவகுத்தார். ஆனால் தாய்நாட்டுக்காக செய்த தியாகத்துக்கு நிகராக ஒன்றை வைப்பதையே ஏற்றுக்கொள்ள மனமற்ற சோமயாஜுலு, தனக்கென வழங்கப்பட்ட ஓய்வூதியத்தையும் இரண்டு ஏக்கர் நிலத்தையும் மெளனமான புன்னகையுடன் மறுத்துவிட்டார்.   

 

 

திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஆத்தூரில் 28.12.1902 அன்று நரசிம்ம சோமயாஜுலு பிறந்தார். அவருடைய தந்தையாரின் பெயர் சோமசுந்தரம். தாயாரின் பெயர் சீதையம்மாள். எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி என பன்முக ஆற்றல் கொண்டவர். சுதந்திரப்போராட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும் பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றவர்.  நெல்லைச்செய்தி, விஜயா, ஈழத்தமிழர் போன்ற பல இதழ்களை அவர் தொடங்கி நடத்தினார். நெல்லை மாவட்ட சுதந்திரப்போராட்ட வரலாறு, மதுரை மாவட்ட சுதந்திரப்போராட்ட வரலாறு, விசுவாமித்திரர் ஆகிய நூல்களை அவர் எழுதி வெளியிட்டார். எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபம் அமைக்கப் பாடுபட்டவர்களில் ஒருவர். 09.01.1990 அன்று மறைந்தார்.

 

(சர்வோதயம் மலர்கிறது – ஜனவரி 2024)