Home

Wednesday 23 August 2017

என்றென்றும் மாறாத பொருத்தமின்மை- மோகனரங்கனின் "கைக்கிளை"


வித்யாரண்யபுர என்பது பெங்களூர் மாநகரத்தின் ஒரு நுனி. ஜெயநகர் என்பது இன்னொரு நுனி. கிட்டத்தட்ட முப்பது கிலோமீட்டர் இடைவெளி. நகரப் பேருந்தில் பிரயாணக்கணக்கு ஏறத்தாழ இரண்டரைமணிநேரம். அலுவலகத்துக்கு வந்து செல்வதிலேயே ஒரு நாளில் ஐந்துமணிநேரம் செலவாகிவிடும். என் நண்பரொருவர் தினமும் அப்படித்தான் அலுப்பில்லாமல் வந்துகொண்டிருந்தார். என்னைவிட வயதில் இளையவர். "அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே ஏதாவது வீடு பார்க்கக்கூடாதா?" என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன். "பாக்கலாம், ஆனா அவங்க வரமாட்டாங்க..." என்று புன்னகைத்தார். "அவங்க" என்று அவர் சொன்னது அவர் மனைவியையும் பிள்ளையையும். ஏன் என்று கேட்டேன். "அங்க அவுங்க அம்மாஅப்பா வீடு பக்கத்தலயே இருக்குது, அதான்" என்றார். 

கிடைக்காமல் போவதும் கிடைப்பதும்- ராஜ சுந்தரராஜனின் "கொடுப்பினை"


எங்கள் கிராமத்தில் ஆடி மாதத்தில் அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தெருக்கூத்துக்கு ஏற்பாடு செய்வார்கள்எல்லாமே பாரதக்கதைகளை ஒட்டியதாகவே இருக்கும்கர்ணமோட்சம், துரியோதனன் கர்வபங்கம், வீர அபிமன்யு, பதினெட்டாம் நாள் போர் என்ற தலைப்புகளில் கூத்துகள் நடக்கும். பீமன் பாத்திரமும் துரியோதனன் பாத்திரமும் களத்தில் இறங்கியதுமே அவர்கள் மோதிக்கொள்ள இருக்கிற இறுதிக்காட்சிக்காக மனம் ஏங்கத்தொடங்கிவிடும். அடவு கட்டி ஆடி, அங்குமிங்கும் தாவிக் குதித்து, இருவரும் ஆக்ரோஷத்தோடு மோதிக்கொள்கிற காட்சி  மனத்தைப் பதறவைத்துவிடும். அந்த இறுதிக்காட்சியில் மனம் அடைகிற பரபரப்பையும் பதற்றத்தையும் உள்ளூர அனுபவிப்பதற்காகவே இரவெல்லாம் பல மணிநேரம் அந்தக் கூத்தைக் கண்விழித்துப் பார்த்திருப்பேன்

Monday 14 August 2017

கதவு திறந்தே இருக்கிறது - ஐந்நூறு வண்டிகளின் சத்தம்


எண்பதுகளின் இறுதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வீக் எண்ட் என்னும் தலைப்பில் வார இணைப்பொன்றை வெளியிட்டு வந்தது. தினமணியின் சார்பில் வெளிவந்துகொண்டிருந்த ’தமிழ்மணி’ போல, தமிழலக்கியத்தைப்பற்றிய தகவல்களையும் ஒரு தமிழ்ச்சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொண்டதாக அந்த வாராந்திர இணைப்பு கட்டமைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பொறுப்பாசிரியராக இருந்த விஸ்வநாதன் என்பவர் ’வீக் எண்ட் விஸ்வநாதன்’ என்று அடைமொழியோடு அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமாக இருந்தார். 

கட்டுப்பாடும் சுதந்திரமும்- சி.மணியின் ’பிரிவு’

சி.மணியின் கவிதைகளை நான் விரும்பியதற்கு முதல் காரணம் அவர் பின்பற்றிய வடிவம். யாப்பின் கட்டுப்பாட்டையும் வடிவத்தின் சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் அவருடைய கவிதைகள் முன்வைப்பவை. யாப்பின் காலத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமான கவிதைகள் வெளிவரத் தொடங்கிய கட்டத்தில் இரண்டிலுமுள்ள வலிமையான அம்சங்களை சமவிகிதத்தில் இணைத்த அவருடைய முயற்சி பலவகைகளில் முக்கியமானது. தன்னெழுச்சியாக அரும்பும் கவிதைக்கான புதிய வடிவத்தைத் தேடியடைகிற ஆவலுக்கான காரணம் யாப்பு தெரியாததால் அல்ல, மொழியின் செழுமையை வளப்படுத்துகிற உத்வேகம் என்பதைப் புலப்படுத்த இந்த வடிவத்தை அவர் மேற்கொண்டிருக்கக்கூடும்.  பல வகைகளில் பிற்காலத்தில் ஞானக்கூத்தன் கையாண்ட கவிதைகளின் வடிவத்துக்கு சி.மணியின் கவிதைவடிவத்தை முன்னோடித்தன்மை உடையதாகக் கருத இடமுண்டு.

காந்தமும் இரும்புத்துகளும்- மலைச்சாமியின் "வியூகம்"


எப்போதோ படித்த ஒரு நாட்டுப்புறக்கதை நினைவுக்கு வருகிறது.  ஒரு குகைப்பகுதியில் வசிக்கிற துறவியை இளைஞரொருவர் சந்திக்க வருகிறார். ஞானத்தைப்பற்றியும் அமைதியைப்பற்றியும் அவருக்கு ஏராளமான ஐயங்கள். அடுத்தடுத்து பல கேள்விகளை மணிக்கணக்கில் துறவியிடம் கேட்டு, அவர் சொல்லும் பதில்களைக் கவனமுடன் உள்வாங்கிக்கொள்கிறார். ஆனாலும் அமைதியை எப்படி அடைவது என்னும் கேள்வி அவரை இடைவிடாமல் குழப்புகிறது. நாட்டிலேயே மிகச்சிறந்த நான்கு கல்விநிலையங்களின் பெயர்களைச் சொல்லி அங்கே சிற்சில ஆண்டுகள் பயின்றுவிட்டு வரும்படி சொல்கிறார் துறவி.

Wednesday 2 August 2017

இருப்பும் இயக்கமும்- காசியபனின் "மாடியில்"



'வழிமயக்கம்' என்ற தலைப்பில் பாலகுமாரன் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அடுக்கப்பட்ட வாழைத்தார்களோடு சாலைவழியாக வண்டியை இழுத்துக்கொண்டு செல்வார் ஒரு வண்டிக்காரர். அதே சாலையில் ஓரமாக வேறொருவர் நடந்து செல்வார். அவருக்கும் வண்டிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இருவருமே வெவ்வேறு நோக்கங்களோடு தனித்தனியாகச் செல்கிறவர்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதுகூட இல்லை.  எதிர்பாராதவிதமாக சந்திக்கிற நண்பரொருவர் பார்வையில் வாழைத்தார்களை வாங்கி வண்டியிலேற்றிவிட்டு கூடவே இவரும் நடந்துசெல்வதுபோலத் தோன்றுகிறது.  என்ன விலைக்கு வாங்கினீர்கள், எங்கே வாங்கினீர்கள் என்றெல்லாம் கேட்கத் தொடங்குகிறார்.  நடந்துசெல்லும் நண்பர் குழப்பமும் கூச்சமுமடைகிறார். அது தன்னுடையதில்லை என்று சொல்கிறார். 

முடிவில்லாத பயணம்- கால சுப்ரமணியமின் "மேலே சில பறவைகள்"



மனிதர்களை இருவகையாகப் பிரிக்கலாம்.  தனக்கு நேரும் சின்னச்சின்ன கவலைகளையும் துன்பங்களையும்கூட மிகப்பெரிதானவையாக நினைத்து மீளாத துயரத்தில் ஆழ்ந்து திகைத்துச் சோர்வடைபவர்கள் ஒருவகை.  கடுமையான துன்பங்களால் சூழ்ந்தபோதிலும் சிறுகச்சிறுக அவற்றிலிருந்து விடுபட்டு இயல்பான நிலைக்குத் திரும்பி தன்னைத்தானே தேற்றிக்கொண்டு தினசரி வாழ்வைத் தொடங்குகிறவர்கள் இன்னொருவகை. ஒருவர் இயற்கையிலிருந்தும் காலநகர்விலிருந்தும் கிடைக்கக்கூடிய ஆறுதலையும் மருந்தையும் பெற்று தன் மனப்புண்ணை ஆற்றிக்கொள்கிறார். இன்னொருவர் அந்த ஆறுதலையும் மருந்தையும் ஏற்றுக்கொள்ளும் ஊக்கமில்லாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிடுகிறார். மனிதர்கள்மட்டுமே இருவகையாகப் பிளவுண்டு கிடக்கிறார்களே தவிர, இயற்கையும் காலமும் எவ்விதமான ஏற்றத்தாழ்வும் இல்லாமல் தன் கருணையையும் ஆறுதலையும் ஒரே அளவிலேயே அனைவருக்கும் வழங்குகின்றன. அவற்றின் ஊற்றுக்கண்கள் ஒருபோதும் வற்றாதவை.