Home

Wednesday 23 August 2017

என்றென்றும் மாறாத பொருத்தமின்மை- மோகனரங்கனின் "கைக்கிளை"


வித்யாரண்யபுர என்பது பெங்களூர் மாநகரத்தின் ஒரு நுனி. ஜெயநகர் என்பது இன்னொரு நுனி. கிட்டத்தட்ட முப்பது கிலோமீட்டர் இடைவெளி. நகரப் பேருந்தில் பிரயாணக்கணக்கு ஏறத்தாழ இரண்டரைமணிநேரம். அலுவலகத்துக்கு வந்து செல்வதிலேயே ஒரு நாளில் ஐந்துமணிநேரம் செலவாகிவிடும். என் நண்பரொருவர் தினமும் அப்படித்தான் அலுப்பில்லாமல் வந்துகொண்டிருந்தார். என்னைவிட வயதில் இளையவர். "அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே ஏதாவது வீடு பார்க்கக்கூடாதா?" என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன். "பாக்கலாம், ஆனா அவங்க வரமாட்டாங்க..." என்று புன்னகைத்தார். "அவங்க" என்று அவர் சொன்னது அவர் மனைவியையும் பிள்ளையையும். ஏன் என்று கேட்டேன். "அங்க அவுங்க அம்மாஅப்பா வீடு பக்கத்தலயே இருக்குது, அதான்" என்றார். 


"உங்க சிரமத்த எடுத்துச் சொல்லக்கூடாதா?" என்றேன். "எல்லாம் சொல்லிப் பாத்தாச்சிண்ணே. நம்ம சிரமம் நமக்கு. அவங்க சிரமம் அவங்களுக்கு. அவங்களுக்கு அவங்க அம்மா வீடு பக்கத்துல இருந்தாதான் சௌகரியமாம். வேணுமின்னா நீங்க அங்கயே பக்கத்துல ரூமெடுத்து தங்கிக்கலாம்ன்னு சொல்றாங்கண்ணே..." என்றார். சிறிது நேரம் பேசாமல் மௌனமாகவே தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார். "ஏற்கனவே ஒன்னு எந்தக் காரணமும் இல்லாம நம்ம கையவிட்டு போயாச்சி.  ரெண்டாவதா கைப்புடிச்சவங்களயாவது பத்தரமா பாத்துக்கணுமில்லயா. ஊருல பாக்கறவங்களுக்காவது சேந்துதான் இருக்கணும்ன்னு தெரியணுமே...." என்று மென்று விழுங்கினார்.

குறைசொல்லமுடியாத அளவுக்கு அமைதியானவர் நண்பர். அவருடைய சம்பளத்தொகை நகரவாழ்வுக்குப் போதுமானதல்ல என்பதால் முதல் மனைவி மணவிலக்கு பெற்றுக்கொண்டு பிரிந்துசென்றுவிட்டார். இரண்டாவது திருமணத்துக்கு இசையாதவரை இசையவைத்து பெண்பார்த்த பெற்றோர்களிடம் அவர் முன்வைத்த ஒரே நிபந்தனை, வரஇருக்கிற பெண்ணுக்கும் அது இரண்டாவது திருமணமாக இருக்கவேண்டும் என்பதுதான். நிறைய அலைந்தார்கள். பார்த்தார்கள். விசாரித்தார்கள். இறுதியாகத்தான் இந்தப் பெண்ணை முடிவு செய்தார்கள். மூன்று வயதுள்ள பெண்குழந்தையோடு இருந்த பெண். அந்தப் பெண் தனக்குத் திருமணம் என்கிற சமூகப் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, சேர்ந்து வாழ்கிற வாழ்வு அல்ல என்பதை முதல்நாளே சாடையாகச் சொல்லிப் புரியவைத்துவிட்டார். ஏமாற்றத்தை வெளிக்காட்டினால் பெற்றோரும் நண்பர்களும் மனம் உடைந்துவிடக்கூடும் என்பதால் அமைதி காத்தார் நண்பர். பிறகு, இதுதான் நமக்கு விதிச்சது என்று சிரித்தபடி ஏற்றுக்கொண்டார்.

அலுவலக விழாவுக்கு, நண்பர்கள் திருமணத்துக்கு என இரண்டுபேரும் சேர்ந்துவரும்பொழுது பார்த்ததுண்டு. ஜோடிப்பொருத்தம் அவ்வளவு அழகாக இருக்கும். ஒருவருக்காகவே இன்னொருவர் படைக்கப்பட்டதுபோன்ற தோற்றம். பார்வைக்கு காலம்காலமாக இணைந்துவாழ்வதுபோன்ற தோற்றம். ஆனால் எதார்த்தத்தில் ஒருகணம்கூட இணையாத ஜோடி. இவர்களிடையே  உள்ள அன்பு  உண்மையா அல்லது தோற்றமா என்று பலமுறை யோசித்து விடைதெரியாமல் குழம்புவேன்.

அருகருகே நடந்தாலும் மனஅளவில் ஒருவரிடமிருந்து ஒருவர் வெகுதொலைவு இடைவெளி உள்ள இருவரைப்பற்றிய ஒரு சித்திரம் மோகனரங்கனின் கவிதையொன்றில் காணலாம். இருவரும் சேர்ந்து ஒரு சாலையில் நடக்கிற காட்சி கவிதையில் இடம்பெறுகிறது. அருகருகே நடப்பதால் தரையில் விழுகிற நிழல்கள் ஒன்றையொன்று தற்செயலாகத் தொட்டுக்கொள்கின்fறன. அதைக் கண்டதும் எச்சரிக்கையாகி இருவருமே சட்டென்று விலகிக்கொள்கிறார்கள். வழிநெடுக இருவருக்கிடையே எந்தப் பேச்சுமில்லை. ஆழ்ந்த மௌனம். ஆனாலும் சேர்ந்து நடக்கிறார்கள். மௌனநடைக்காட்சி ஊரில் அலராக வளர்கிறது. அந்த அலர் அவர்களைப்பற்றிய கதையாக வளர்கிறது. கதைக்குள் அவர்களிடையேயுள்ள நெருக்கம் பேசப்படுகிறது. எவ்வளவு பெரிய துயரமுரண். இருவரிடையே இல்லாத ஒரு அன்பையும் நெருக்கத்தையும் ஊரார்களின் பேச்சு இருப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. பொருத்தமின்மை என்னும் அம்சம் காட்சிக்கும் கூற்றுக்கும் இடையிலான ஒரு அம்சமாகவும் வளர்ந்து போகிறது.

கவிதையின் தொடக்கத்தில் சூரியன் இயல்பாகவே இடம்பெறுவது கவிதைக்குக் கூடுதல் அழகைக் கொடுக்கிறது. இந்த மண்ணில் நடக்கும் எல்லா சங்கதிகளையும் நேருக்குநேராக பார்க்கிற உயிர் சூரியன். ஒருவகையில் மௌன சாட்சி. அவர்களிடையே உள்ள அன்பின்மையையும் அந்தச் சூரியன் அறிந்துவைத்திருக்கிறது.  ஊராரின் அலருரையில்மட்டுமே வளர்கிற வளர்கிற அவர்களுடைய அன்பையும் அது அறிந்துவைத்திருக்கிறது. உண்மை, பொய், பொருத்தம், பொருத்தமின்மை என எல்லாவற்றையும் அறிந்த சக்தி அது. எல்லாம் அறிந்த சக்தியால் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்னும் உணர்வில்லாமலேயே பூமியில் எல்லாம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.   

இயற்கை சேர்த்துவைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்றொரு பிரார்த்தனைவரி உண்டு.  கவிதையில் ஒரு தருணத்தில் தற்செயலாக சூரியனால் வீழ்த்தப்பட்ட ஆண்பெண் நிழல்கள் ஒன்றையொன்று தழுவிக்கொள்கின்றன. அதைக் கண்டதும் எச்சரிக்கை அடைந்த ஆண்பெண் தம் உடல்கள் ஒன்றையொன்று தொட்டுவிடாதபடி விலகி நடக்கிறார்கள். சேர்த்துவைப்பது இயற்கையின் நீதி. பிரித்துவைப்பது மனிதநீதி போலும். மனிதர்களிடையே ஒரு பிரிவு பிரார்த்திக்கிறது.  இன்னொரு பிரிவு பிரித்துவைக்கிறது. மாறாத இந்தப் பொருத்தமின்மைதான் மானுடவாழ்வுபோலும்.

*

கைக்கிளை

மோகனரங்கன்

கீழே
புவிப்பொருளனைத்திற்கும்
அர்த்தத்தைக் கூட்டிவிடும்
அந்த
ஆதிச்சூரியன்
பக்கவாட்டில் வீழ்த்திய
நமது நிழல்கள்
ஒன்றையொன்று
ஆவலுடன் தழுவிக்கொள்வதை
பார்த்தபடி
தவறியும் உடல்கள்
பட்டுக்கொண்டுவிடாமல்
இடைவெளிவிட்டு நடக்கிறோம்
வார்த்தைகள் ஓய்ந்த சாலையில்
சற்று தூரம்
அதன் பின்துவங்குகிறது
நாம் ஒருவரும்
காணவிரும்பாத மௌனத்தின்
அதல பாதாளம்
அங்கே தாயின் பெயரை
உச்சரிக்கக் கேட்ட கணத்தில்
காறி உமிழ்ந்தும்
முகம் தெரியாத தகப்பனை
கண்டவிடத்தில் கொன்று தீர்க்கவும்
உறுதி கொண்டு நடக்கும்
துஷ்டச்சிறுவனாய்
தெருவோர் முகம் சுளிக்க
வளர்கிறது
நம்மிருவருக்கிடையேயான
அன்பு


*

எண்பதுகளின் இறுதியிலிருந்து தொடர்ச்சியாக எழுதிவரும் கவிஞர் மோகனரங்கன். மொழிச்சிக்கனமும் அழகான சொற்செட்டும் படிமங்களின் இசைவில் ஒன்றிணைந்து தீவிரமடையும் முத்தாய்ப்புவரிகளும் மோகனரங்கன் கவிதைகளில் இயல்பாக அமைந்திருக்கின்றன.  சிறுகதைகளையும் விமர்சனக்கட்டுரைகளையும் எழுதிவருகிறார். நெடுவழித்தனிமை, இடம்பெயர்ந்த கடல் ஆகியவை இவருடைய கவிதைத்தொகுதிகள். சொல் பொருள் மௌனம் இவருடைய கட்டுரைத்தொகுதி. அன்பின் ஐந்திணை இவருடைய சிறுகதைத்தொகுதி.