Home

Friday 19 January 2018

கதவு திறந்தே இருக்கிறது - வெள்ளியின் மீது படிந்த தூசு


எங்கள் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் கண்ணன். புத்தரின் வாழ்க்கையை ஒரு கதையைப்போல எங்களுக்கு அவரே முதன்முதலாகச் சொல்லிக் கொடுத்தவர். புத்தரை மட்டுமல்ல, ஏசு, காந்தி, வள்ளலார் போன்ற ஆளுமைகளைப்பற்றியெல்லாம் சின்னச்சின்ன கதைகள் வழியாக எங்களுக்கு அவரே அறிமுகப்படுத்தினார். அறியாத வயதில் நாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கெல்லாம் விரிவான வகையில் ஏராளமான எடுத்துக்காட்டுகளோடு பதிலைச் சொல்லிப் புரிய வைத்தவர். கொஞ்சம் கூட கோபத்தைக் காட்டாத குரல் அவருக்கிருந்தது.

மருந்து - சிறுகதை

பறந்துபோன கிளி திரும்பிவரும்ன்னு இன்னுமாடா நம்பற நீ?” என்று ஏளனமாகக் கேட்டார் செல்லமுத்து சித்தப்பா. நெருப்பில் வைத்த இரும்புவலைக்கரண்டியின் உள்குழியிலேயே என் கவனம் பதிந்திருந்தது. முதலில் ஒவ்வொரு கம்பியாக சிவக்கத் தொடங்கி, பிறகு அந்தக் கரண்டியே நெருப்பில் பூத்த மலர்போல மாறியது. பக்கத்தில் வைத்திருந்த கூடையிலிருந்து உலர்ந்த எருக்கம்பூவொன்றை எடுத்து கரண்டியில் போட்டேன். மறுகணமே, அது புகைவிட்டு எரிந்து, சிவந்து, பிறகு சுற்றியும் அடர்த்தியான நெடி பரவ கருகி சுருண்டு அடங்கியது. உடனே சாம்பலை முறத்தில் கவிழ்த்துவிட்டு அடுத்த பூவை எடுத்துப் போட்டேன்.