குளிப்பாட்டி முடித்ததும் குதிரையைத் தட்டி அழைத்துக்கொண்டு கரையேறினான் பார்த்தசாரதி.
பார்த்தசாரதிக்கு முன்னால் இருள் பிரியாத ஆகாயம் விரிந்து கிடந்தது. தூரத்தில் கறுப்புச்சித்திரம் மாதிரி ஆலமரங்களும் ரயில்வே ஸ்டேஷனும். ஏரிக்கரையில் இருந்து பஞ்சாயத்து போர்டு தெருவுக்குள் இறங்கும் ஒற்றையடிப்பாதைகூட எழுதி அழித்த மங்கலான கோடு மாதிரி தெரிந்தது. கால் இருளில் பால்மாதிரி ஒரு வர்ணத்தில் குதிரையுடன் பார்த்தசாரதி நடப்பது புராணகாலத்து ராஜகுமாரன் நடப்பதுபோல இருந்தது.
“இன்னா பார்த்தசாரதி, கல்யாணி குளியல் முடிச்சாச்சா?”
“ஆச்சு மாமா.”
“காலைல எங்க சவாரி?”
“ரெட்டியார் ஊட்ல பூசைக்கு கோயிலுக்குப் போவணும்னாங்க, அங்கதான்”
“கோலியனூருக்கா?”
“ஆமா மாமா.”
“பத்துப் பதினொன்னுக்கெல்லாம் வந்துருவியா?”
“ஏன் மாமா எதனாச்சும் விசேஷங்களா?”
“கழனில நடவு இன்னிக்கு. ஆளுவளுக்கு சாப்பாடு எடுத்தாரணும். ஒங்க அக்காளுக்கு காலு சுளுக்குன்னு நடக்க முடியல. முடிஞ்சா அவளே தூக்கியாந்துடுவா. அதான் வண்டில தூக்கிப் போட்டுக்னு வந்துர்றியான்னு கேக்கலாம்னு பாத்தன்...”
“கிண்டன சோறுதான.”
“ஆமாம்.”
“பன்னெண்டு சங்கு ஊதற நேரத்துக்கு வந்தா போதுமா?”
“போதும்... போதும்.”
“அப்ப வந்துர்றன். நீங்க கௌம்புங்க மாமா.”
“சவாரி அதுஇதுன்னு மறந்துராதப்பா.”
“மாமா விஷயம் மறக்காது. கண்டிப்பா வந்துருவன்.”
மாமா சிரித்தார். அரைகுறையான வெளிச்சத்தில் பளிச்சென்று இருந்தது அந்தச் சிரிப்பு. திடமான திரேகமும் நல்ல உயரமும் கொண்ட மாமாவின் ஆகிருதி அந்தச் சிரிப்பில் கரைந்தது. நெருங்கி பார்த்தசாரதியின் தோளைத் தட்டினார் மாமா.
“அப்ப நா வரன். நேரமாயிடுச்சி.”
“சரி.”
குதிரையுடன் நடந்தான் பார்த்தசாரதி.
மாமா இல்லாவிட்டால் இந்தக் குதிரையும் இல்லை. குதிரை வண்டியும் இல்லை. இந்தக் கௌரவமும் இல்லை. தாட்டிகமான உடலும், பாளம்பாளமாய் மார்பும், உறுதியான தோளுமாய் மாமாவைப் பார்க்கும்போது சட்டென்று பயம்தான் வரும். தானாக ஒரு மரியாதை கூடும். ஆனால் மாமாவுக்கு மனசு பூ மாதிரி. ஒருவர் கஷ்டத்தைப் பொறுக்காத மனசு. எந்த நேரத்திலும் உபகாரம் செய்யத் தயங்காத குணம். விரோதி கூடக் கீழே விழுந்து விட்டால் தூக்கி நிறுத்தும் பண்பு உள்ளவர் மாமா. காலமெல்லாம் மாமாவை ஜென்ம விரோதியாய்ப் பாவித்து வெறுப்புப் பாராட்டிய ஜம்புலிங்கக் கவுண்டர் சந்தர்ப்பவசத்தால் எவனோ ஒருவன் பொய் சாட்சி சொன்னதன் பேரில் ஜெயிலுக்குப் போக நேர்ந்தபோது வக்கீல் வைத்து வாதாடி வழக்கை உடைத்து வெளியே கொண்டுவந்தவர் மாமா. அப்படிப்பட்ட மாமாவின் தாராள குணத்தை இன்றைக்கும் பஞ்சாயத்துபோர்டு தெரு ஜனம் பேசும். அப்படி ஒரு சுபாவம் மாமாவுக்கு. பார்த்தசாரதியைத் திருத்தியதும் மாமாதான்.
சந்தைத்தோப்பு பங்களாவிலும் சுடுகாட்டு மாமரத்து பங்களாவிலும் சூதாடித் திரிந்துகொண்டிருந்தவன்தான் பார்த்தசாரதி. ஒருதரம் போலீஸ் பிடித்துக்கொண்டு போயிருந்த தருணத்தில் அம்மாக்காரி மாமாவிடம் வந்து சொல்லி அழுததும் மாமா சிபாரிசு செய்து வெளியே கொண்டுவந்தார். வெளியே வந்தவனை ஒன்றும் கேட்கவில்லை மாமா. கோடாலி ஒன்றைக் கையில் கொடுத்து வாசலில் கிடந்த வேலங்கட்டைகளை உடைக்கச் சொன்னார். காலை பத்து மணிக்குக் கோடாலி பிடித்தவன் சொட்டுத் தண்ணீர் குடிக்காமல் மூன்று மூன்றரைக்கு எல்லாக் கட்டைகளையும் பிளந்து முடித்து நிமிர்ந்தான். அவனுக்குச் சாப்பாடு போடச் சொல்லி சாப்பிட்டு முடித்ததும் கூப்பிட்டு “இந்த மாதிரி வேல செஞ்சுட்டு சாப்படறதுக்குப் பேருதான் சாப்பாடு. வேல செய்யாம ஊரச்சுத்தி சூதாடிட்டு வந்து கொட்டிக்கற பாரு அதுக்குப் பேரு சாப்பாடு இல்ல, சாணி போ...” என்று சொல்லி அனுப்பினார் மாமா. ராத்திரியெல்லாம் யோசனைகளாகவே கழித்த பார்த்தசாரதி கருக்கலிலேயே எழுந்து ஏரியில் முழுகிக் குளித்துவிட்டு அறுப்புக்குப் போயிருந்த மாமாவைக் கழனியில் வைத்துப் பார்த்தான். வரப்பு என்றுகூடப் பார்க்காமல் காலில் விழுந்தான். தேம்பித்தேம்பி அழுதான். நெகிழ்ந்துபோன மாமா அவன் முதுகைத் தட்டி கரண்ட் கொட்டகைப்பக்கம் கூப்பிட்டுப் போனார். கிணற்றுக்கட்டையைப் பிடித்தபடி அவனை நிற்க வைத்துச் சொன்னார்.
“ஒருத்தரோட ஒருத்தர் பிரியமா இருந்து பரிமாறிக்கறதுக்குத்தான் நாம வாழறம். இதுல விரோதம், எரிச்சல், கோவம்லாம் அனாவசியம். பைசா பெறாத வெஷயத்துக்கெல்லாம் நீ ஒங்கம்மாகிட்ட கோவமா பேசற. அவளப் போட்டு அடிஅடின்னு அடிக்கற. ஒனக்கு சூதாடக் காசிலன்னா அவள படாத இம்ச படவய்க்கற. இதெல்லாம் பாக்கறதுக்கும் கேக்கறதுக்கும் அசிங்கமா இருக்குது. வேதனையா இருக்குது. பிரியமா இருக்கவேண்டிய ஒரு அம்மாக்காரிய நாய்மாதிரி நடத்தற. ஒன்னால அவளுக்கு எவ்ளோ இம்ச. எவ்ளோ மனக்கஷ்டம் தெரியுமா? அதனாலதா நேத்து நானும் ஒன்ன கடுமையா பேசிட்டன். அதுக்காக நீ வருத்தப்பட்டுறக் கூடாது. இனிமேலாவது புத்தியா பொழச்சிக்க. பழய கூட்டாளி சகவாசத்தயெல்லாம் வுட்டுடு.”
மாமாவின் ஆலோசனைகளுக்குக் கட்டுப்பட்டு எல்லாப் பழக்கங்களையும் கைவிட்டான். மதியம் புளியந்தோப்பில் மூனுசீட்டுப் போடக் கூப்பிட்ட குப்புசாமியின் அழைப்பை நிராகரித்தான். மறுநாள் ரயில்வே ஸ்டேஷன் மதிலுக்குப் பக்கத்தில் சூதாடக் கூப்பிட்ட ராமச்சந்திரனை மறுத்தான். ராத்திரி குள்ளக்கவுண்டர் தோப்பில்
இளநீர் திருட அழைத்த சுந்தரமுத்துவைத் திட்டி விரட்டினான். கோடாலியைத் தூக்கிக்கொண்டு தெருத்தெருவாய் நடந்தான். வீடுவீடாய்க் கேட்டுக் கேட்டு விறகு உடைத்தான். ஓட்டல்களுக்குச் சிக்கலான வேலமர வேர்க்கட்டைகளை சுள்ளிசுள்ளியாய்க் கிழித்துத் தந்தான்.
விறகுக்கடையில் வந்து இறங்குகிற லோடு சவுக்குக் கட்டைகளை பிளந்து தந்தான். சைக்கிள் வைத்துக்கொண்டு போய் கோலியனூர், பனங்குப்பம், சகாதேவன்பேட்டை, ராகவன் பேட்டையில் விறகு உடைத்தான். வந்த வருமானத்தில் அம்மாவை சந்தோஷத்துடன் வைத்திருந்தான். இந்த சந்தோஷத்தை அனுபவித்துப் போகவேண்டும் என்று காத்திருந்தமாதிரி இரண்டு வருஷத்துக்குப் பிறகு அம்மா செத்துப்போனாள். மாமாதான் ஆறுதல் சொன்னார். அம்மாவின் கடைசிச் சொத்தாக அவள் காதுக்கம்மல் பார்த்தசாரதியின் கைக்கு வந்தது. பார்த்தசாரதிக்கு நல்லவழி ஒன்று ஏற்பாடு செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அந்தக் காதுக்கம்மல்களை விற்று பாண்டிச்சேரியில் இருந்து ஒரு குதிரையையும் வண்டியையும் வாங்கிவந்து கொடுத்தார் மாமா. பஞ்சாயத்துபோர்டு தெருவுக்கும் ஊருக்கும் முதன்முதல் வந்த அந்தக் குதிரை வண்டியை அதிசயத்தோடும் ஆச்சரியத்தோடும் வாய்பிளந்து பார்த்தது ஊர்சனம்.
குதிரை வண்டி, நிறைய விஷயங்களில் உபயோகமாய் இருந்தது. பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊருக்குள் ஜனங்களைக் கொண்டுவர, ஊருக்குள் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு ஜனங்களைக் கொண்டுசெல்ல. அவசரம் ஆத்திரத்துக்குப் பக்கத்து கிராமங்களுக்குப் புறப்பட்டுப் போக. ரைஸ் மில்லுக்கு நெல் எடுத்துச் சென்று அரிசியாக்கிக் கொண்டுவர பிரசவக் காலத்துக்குப் பெண் பிள்ளைகளை ஏற்றிச் செல்ல, மற்றபடி நடக்க முடியாத நோயாளிகளையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போக. கழனிகளுக்குச் சாப்பாடு எடுத்துப்போக என்று நிறைய உபயோகங்கள். இந்த மாதிரி சில்லறை சவாரிகள் போக வாராந்திர பூசைக்காக ரெட்டியார் வீட்டுப் பெண்களை ஏற்றிக்கொண்டு போவது, தினசரி வசூலுக்கு ரெட்டியாரை உட்கார வைத்துக்கொண்டு கடைத்தெருவுக்கு சாயங்காலங்களில் போவது, சாரங்கபாணி கவுண்டர் வீட்டுப் பிள்ளைகளைப் பெரிய பள்ளிக்கூடத்துக்கு ஏற்றிச் சென்று அழைத்து வருவது என்று சில நிரந்தரச் சவாரிகளும் உண்டு.
குதிரையுடனும் வண்டியுடனும் அலாதியான ஈடுபாட்டோடு இருந்தான் பார்த்தசாரதி. குதிரையை ஒரு குழந்தை மாதிரி பார்த்து
வந்தான். காலையில் தூங்கி எழுந்ததும் குதிரையை ஏரிக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி வருவது முதல் குதிரைக்குப் புல் போடுவது, தண்ணீர் கொடுப்பது, சேணம் பூட்டி வண்டியில் கட்டுவது, சவாரி இல்லாத சமயங்களில் நிழலோரம் நிறுத்திக் குதிரையைத் தடவிக்கொடுப்பது எல்லாவற்றையும் நுணுக்கமாய்ச் செய்தான்.
**
அரை வெளிச்சம் தரையில் பரவிய சமயம் சூரிய ரேகைகள் வானத்தைக் கீறிப் பாய்ந்தன. மெதுவாக விடியத் தொடங்கியிருந்தது.
வாசலில் குதிரையை விட்டுவிட்டு வண்டியைத் துடைக்க ஆரம்பித்தான் பார்த்தசாரதி.
குதிரை வண்டிதான் உலகம் என்று பார்த்தசாரதியை வாழ்க்கை கொண்டு வந்து நிறுத்தியது. குதிரை வண்டிதான் உயிர் என்பதைப் பழக்கம் இவனுக்கே நிரூபித்தது. கொஞ்ச கால உறவில் குதிரையின் பாஷை அவனுக்கும் இவன் பாஷை குதிரைக்கும் அத்துப்படியானது. குதிரையின் ஒவ்வொரு சிலிர்ப்புக்கும் அர்த்தம் புரிந்தது.
ரெட்டியார்வீட்டுப் பெண்களை கோலியனூர் அழைத்துக் கொண்டுபோய் சாமி பூஜை முடிந்த பிறகு மீண்டும் அழைத்து வந்துவிட்ட பிற்பாடு சாப்பாட்டு அண்டாவுடன் ஏரிக்கரையை ஒட்டிய வண்டித்தடத்தில் கழனியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது வண்டி. ஆலமரங்களும் அரச மரங்களும் நிறைந்த இரண்டு பக்கங்களிலிருந்தும் காற்று குளிர்ந்து வீசியது. சில கழனிகளில் உழவு வேலை நடந்துகொண்டிருந்தது. சிலவற்றில் தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது. நாற்று வளர்ந்திருந்த மூலப் பாத்திகள் அங்கங்கே விரித்த பச்சைப் பட்டுப்புடவைமாதிரி தெரிந்தது, நாற்றுகளின் பச்சை வசீகரமானது. மனசைச் சுண்டி இழுப்பது. பார்க்கிற தருணத்திலேயே கண்களில் இனம் புரியாத ஈரத்தைச் சுரக்க வைப்பது.
இலுப்பை மரத்துக்குப் பக்கத்தில் மாமா நின்றிருந்தார். வண்டியைப் பக்கத்தில் நிறுத்தி பார்த்தசாரதி கீழே இறங்கினான். மேல் துண்டால் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டான்.
“வா பார்த்தசாரதி. ரொம்ப வேகமா வந்தியா?”
“அதெல்லாம் இல்ல மாமா, சாதாரணமாத்தான் வந்தன்.”
“வந்து ஒக்காரு. இன்னம் சங்கு ஊதல இல்ல.”
“இல்லிங்க மாமா.”
மரத்தோரம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கற மாதிரி உட்கார்ந்தார்கள். மரத்தில் அணில் ஒன்று ஏறி இறங்கி ஆட்டம் போட்டது. பட்டம் இறங்குவது மாதிரி ஒரு பழுத்த இலை உதிர்ந்து அசைந்தசைந்து இறங்கியது.
“அவசரமா ஒன்னும் சவாரி இல்லியே...”
“அதெல்லாம் இல்ல.”
“இருந்து இங்கியே சாப்டுட்டுப் போறியான்னு கேக்கலாம்னுதா.”
“சரிங்க மாமா.”
மாமாவைப் பார்த்தான் பார்த்தசாரதி. தேக்கு மாதிரி தேகத்தில் புள்ளிபுள்ளியாய்ச் சேறு. சேறு வேர்வையில் கரைந்து நடுமாரில் வழிந்தது. கீழ்ப்பாய்ச்சி கட்டிய இடுப்பு வேட்டியில் இறங்கியது. முழங்கால் வரைக்கும் சேற்றின் ஈரம் குழகுழப்பாய் இருந்தது. ஆள்கள்தான் வேலை செய்கின்றார்களே என்று வரப்பில் நின்று அதட்டும் ரகம் இல்லை மாமா. இறங்கித் தானும் ஒருகை பார்க்கும் ரகம். நாலு கொத்து நாற்றையாவது பிடுங்க வேண்டும். ரெண்டு மெனையாவது குனிந்த இடுப்பு நிமிராமல் நட்டு நிமிர வேண்டும். இந்த வேகமும் ஆர்வமும் மாமாவுக்கு எப்போதும் உண்டு. “நீங்க ஒக்காருங்களேன் மாமா. நாங்கதா இருக்கறமே பாத்துக்கறம்” என்று யாராவது சொன்னால் “போடா புண்ணாக்கு. ஒனக்கு நா கூலி குடுக்கறன், செய்றிங்க. எனக்கு பூமி கூலி குடுக்கறாளேடா அதுக்கு நா செய்ய வேணாமா” என்று சொல்வார். நடவு மாத்திரம் இல்லை. உழுகிற விஷயத்தில் இருந்து களையெடுத்தல், அறுத்தல், கட்டுக்கட்டுதல், களமடித்தல் வரைக்கும் மாமாவின் பங்கு எதிலும் உண்டு. பும்மென்று ஒரு கட்டு கதிரை தலையில் வைத்துக்கொண்டு வரப்பில் மாமா நடந்தால் குன்று நகர்கிற மாதிரி இருக்கும். அப்படி ஒரு பக்குவம், சுபாவம், வேகம், வெறி மாமாவுக்கு எப்போதும் உண்டு.
மாமாவுக்கு இது நடுவில் வந்த சொத்து. பூர்வீகத்தில் காக்கை உட்கார்கிற அளவுக்குக் கூடச் சொந்த நிலம் இல்லை. ஆனால் நல்ல உழைப்பாளி. நாணயஸ்தர். வஞ்சமில்லாமல் உழைப்பவர். கால்காணி நிலத்தில் ஒரு மெனையில் அறுத்துப்போட்ட கதிர்களை எல்லாவற்றையும்கூட ஒரே கட்டாகக் கட்டித் தூக்கிக்கொண்டு வரப்பில் இம்மி பிசகாமல் விறுவிறுவென்று நடப்பார். அந்தக்
குணத்தையும் உழைப்பையும் கண்டு பெண் கொடுத்தவர்கள் கொடுத்த சொத்து. இது வந்த சமயத்தில் இருந்ததைக் காட்டிலும் இருபத்தைந்து வருஷத்தில் இரண்டு மடங்காக விருத்தி செய்தார் மாமா. இப்படி ஒரு விஸ்தரிப்புக்கெல்லாம் மாமாவின் இந்த வெறிதான் காரணம். இந்த உழைப்புதான் காரணம்.
“எப்பவாச்சும் சேறு மெதிச்சிருக்கியா பார்த்தசாரதி?”
“இல்ல மாமா.”
“நல்லா குளுகுளுன்னு தண்ணி குடிச்சி மல்லாந்திருக்கிற நெலத்துல சேறு மெதிச்சி பாக்கணும் பார்த்தசாதி, சொகமா இருக்கும். வய்க்கற எடத்துல எல்லாம் கால் வழுக்கி வழுக்கி ஓடும். வழுக்க வழுக்க ஊனி நிக்கணும். ஊனிகினே மாறிமாறி மெதிக்கணும். அப்படியே றெக்கை கட்டிப் பறக்கற மாதிரி இருக்கும் பார்த்துக்கோ, ஒடம்புன்னு இருக்கறதே தெரியாது. நெஜமாவே ஆகாயத்துல மேகத்த கிழிச்சிகிட்டு போவற மாதிரி இருக்கும். அவ்ளோ சொகம்.”
“நெசமாவா?”
“சத்தியமா. அந்த சொகத்த ஒரு தடவ கண்டுட்டா போதும் அப்புறம் காலத்துக்கும் மனசு ஏங்கும்.”
“சரி அதுக்குன்னு ஒரு வயசு, காலம் இல்லியா மாமா. இன்னிக்கு இந்த வயசுவரிக்கும் செஞ்சித்தான் ஆவணுமா.”
“செய்யணும்டா செய்யணும். ஒடம்பு வணங்கி செய்யணும். வேல செய்யறத ஒரு சந்தோசமா ஒரு சொகமா நெனச்சி செய்யணும். நம்ம கடைசி மூச்சி இந்த ஒலகத்துல இருக்கறவரிக்கும் இப்டி செஞ்சித்தான் சாப்படணும்...”
“ஒடம்பு இன்னாத்துக்கு ஆவும்.”
“ஒடம்பு இன்னாடா பார்த்தசாரதி ஒடம்பு. ஒடம்பு வெறும் சக்கைதான்டா. மனசுல இருக்கணும்டா தைரியம். மனசுல ஊறி வரணும் வேகம். ஒடம்பு தானா வணங்கும். வேல செய்யும். போதும் போடான்னு சலிப்பா ஒரு நாளு மனசுல நெனச்சிட்டா போச்சு, அத்தோட எல்லாம் போயிடும். சோளக்கொல்லைப் பொம்மை காத்துல உழற மாதிரி ஒடம்பு உழுந்துரும்.”
“மாமா ஒடம்பு கட்டுமஸ்தா இருக்கறதுக்கு இப்பதான் காரணம் புரியது...”
“இன்னா புரியுது?”
“மாமா இத்தினி நாளும் தங்கபஸ்பம் சாப்படறதாதான நெனச்சிகினிருந்தன். இன்னிக்குத்தான் புரிஞ்சுது அறியாப்புள்ள கணக்கா மனசுல துடிப்பு வச்சிக்னுதா மிடுக்கா இருக்கிங்கன்னு...”
“போடா போக்கத்த பயலே...”
செல்லமாய்க் கையை ஓங்கினார் மாமா. நடுங்கி மறைப்பது போலக் கையை உயர்த்தினான் பார்த்தசாரதி. இருவர் மத்தியிலும் சிரிப்பு அவிழ்ந்து பரந்தது.
சங்கு ஊதியது. வேலைக்காரர்கள் பம்ப்செட்டில் கைகால்களை அலம்பிக்கொண்டு வந்தார்கள். மாமாவும் பார்த்தசாரதியும் கை கழுவிக்கொண்டு வந்தார்கள். வண்டியில் இருந்த அண்டாவை கீழே இறக்கினார்கள். ஆளுக்கொரு மந்தாரை இலையைக் கொடுத்து சோறு வைத்தார்கள். எல்லாரும் பசியாற சாப்பிடுவதைக் கண்குளிரப் பார்த்த பின்பு ஆளுக்கொரு இலையில் சோறு வைத்துக்கொண்டு சாப்பிட்டார்கள் மாமாவும் பார்த்தசாரதியும்.
“ஒன்ன ஒரு விஷயம் கேக்கணும் பார்த்தசாரதி.”
“கேளுங்க மாமா.”
“நேரிடையா பதில் சொல்லணும்...”
“ஆகட்டும் மாமா...”
“எனக்காக ம்னு சொல்லிட்டு தவிக்கக்கூடாது.”
“விஷயம் என்னன்னு சொல்லுங்க மாமா...”
“நம்ம ருக்குவ பத்தி என்ன நெனைக்கற?”
“நல்ல பொண்ணு மாமா.”
“அவள பாத்திருக்க இல்ல நீ?”
“என்ன மாமா இது. தெனமும்தான பாக்கறன். இன்னிக்குக்கூட சோறு கட்டிக்குடுக்கும்போது ஊட்டுல இருந்திச்சே.”
“அவளுக்கு காலாகாலத்துல ஒரு கல்யாணத்த செஞ்சி வச்சிடலாம்னு நெனைக்கறன்...”
“அவசியம் செய்ங்க மாமா.”
“அதான் ஒன் அபிப்பிராயத்த கேக்கலாம்னு நெனைக்கறேன்.”
“எதுக்கு மாமா?”
“ருக்குவ கட்டிக்க ஒனக்கு சம்மதமா பார்த்தசாரதி?”
“மாமா!”
ஒரு கணம் உடம்பு அதிர்ந்து அடங்கியது பார்த்தசாரதிக்கு.
“என்ன மனசுல நெனச்சி எந்தப் பதிலையும் சொல்லக்கூடாது. ஒனக்கா மனசுல புடிச்சா சொல்லு. இல்லன்னா வேணாம்.”
“மாமா. நான் வெறும் குதிர வண்டிக்காரன்.”
“தெரியும்டா, நா யாரு தெரியுமா. ஒரே ஒரு சொம்பு கூழுக்கு வெறும் வவுத்தோட ஒரு பெரிய வய்க்கப்போர தனியா பொரட்டிப் போட்ட பரதேசி தெரியுமா.”
“அதெல்லாம் பழய கத மாமா.”
“நீ வண்டி ஓட்டறதும் நாளக்கிப் பழைய கதயாய்டும் பார்த்தசாரதி.”
“மாமா.”
“இங்க பாரு பார்த்தசாரதி. நீ வேலைக்காரன். ரோஷக்காரன். ஒரு சொல்லுக்கு மரியாத குடுக்கறவன். ஒன்ன மனப்பூர்வமா புடிக்கறதனாலதா ருக்குவ கட்டிக்கறியான்னு கேக்கறன். ஒனக்கு இதுல சம்மதம்னா சொல்லு.”
“சரிங்க மாமா.”
சரி என்று சொன்ன பிறகும் அடி நெஞ்சில் தயக்கம் இருந்தது. நெற்றிக்கு நடுவில் ஒரு நரம்பு துடித்துத்துடித்து அடங்கியது. திசை புரியாத சந்தோஷமும், பிரமிப்பும், பயமும் குழைந்து பொங்கியது. திடீரென்று அடி மனசின் இனிப்பு குறைந்து திகில் பரவியது.
பத்து நாளில் பயம் சுத்தமாய் விலகியது. மாமா வீட்டில் வெளிப்படையாய்க் கல்யாணப்பேச்சு பேசியபோது பரவசமானது. குதிரைவண்டி அடியெடுத்து ஓடும்போதெல்லாம் மனசும் துள்ளித் துள்ளிப் பதினாலு கால் பாய்ச்சலில் ஓடியது. அசந்து உட்கார்கிற நேரத்தில் கனவுகள் வந்து சீண்டின. பகலிலும் இரவிலும் அந்தப் பெண்ணின் உருவம் மனசுக்குள் கண்ணாமூச்சி ஆடியது.
**
“கூட்டிச் சொல்றது கழிச்சிச் சொல்லறதெல்லாம் வேணாம். ஒரே வெலையா சரியா சொல்லு. ஒரு கட்டுக்கு எவ்ளோ கேக்கற.”
“அஞ்சி ரூபா குடுத்துரு.”
“எவ்ளோ வேணும்.”
“சரி எதுக்கு துள்ளற? நால்ணா கொறைச்சிக்னு நாலே முக்காலா குடு.”
“போதுமா.”
“யோவ் இன்னாயா ஒங்கிட்ட தெனம் ஒரே ரோதணயாவுது. நான்தா சொல்றனில்ல. நீ கேளு.”
“இல்ல. நாலே முக்கால் ரூபா போதுமான்னு கேட்டன்.”
“த பாரு. அத்தயே திருப்பித்திருப்பிச் சொல்லிக்கினே இருந்த, ஈசாமயாப்புடும். நா குத்துமதிப்பா சொன்னன். நீதான் கேட்டு வாங்கிக்கன்னு சொல்றனில்ல.”
“நீயே ஒழுங்கான வெலய கேட்டா இன்னா?”
“ம்க்கும். நா கேட்ட ஒடனே கேட்ட வெலய நீட்டிடறவரு இவுரு.”
“நீட்டினதே கெடையாது, தெனம் இவுங்க சும்மா குடுத்துதானே என் குதிரை வளருது...”
“யேன் வாங்கி எதுவும் குடுக்காம எங்கனா காட்டுப் பக்கம் கழனிப்பக்கம் மேய உடறதான.”
(தொடரும் )