Home

Sunday, 26 April 2026

படுக்கப்பத்து மேகநாதன் : சுதந்திர தாகமும் சாகசமும்

 

தீண்டாமை ஒழிப்புப்பணி தொடர்பான விளக்கங்களை அளிக்கவும் அரிஜன நலநிதியைத் திரட்டவும் ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்ட காந்தியடிகள் 20.12.1933 அன்று சென்னைக்கு வந்து சேர்ந்தார். இரு நாட்கள் மட்டுமே சென்னையில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு ஆந்திராவுக்குச் சென்று, அங்கிருந்து மைசூருக்குச் சென்று, பிறகு மலபார் வழியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சில நாட்கள் பயணம் செய்து, ஒரு மாதம் கழித்து இறுதியாக நாகர்கோவிலை வந்தடைந்தார்.


இதற்கிடையில் 15.01.1934 அன்று பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏறத்தாழ முப்பதாயிரம் சதுரமைல் பரப்பளவுள்ள நிலப்பகுதியைப் பாதித்தது. அப்பகுதியில் வாழ்ந்துவந்த ஒன்றரைக் கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்தச் செய்தி கிடைத்ததும் அரிஜன நல நிதியோடு பீகார் மக்களுக்கான நிவாரணத்துக்காகவும் தாராளமாக  நிதியளிக்கும்படி கோரிக்கை விடுத்தார் காந்தியடிகள்.

23.01.1934 அன்று பொழுது சாய்ந்த வேளையில்  கன்னியாகுமரியை வந்தடைந்த காந்தியடிகள் அருணாசல பண்டாரம் தர்மசத்திரத்தில் தங்கினார். அப்போது தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்த டாக்டர் தி.சே.செள.ராஜன் கன்னியாகுமரிக்கு வந்து காந்தியடிகளின் தமிழகப்பயணத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்று இரவே கன்னியாகுமரியைவிட்டுப் திருநெல்வேலியை  நோக்கிப் புறப்பட்ட காந்தியடிகள் வள்ளியூர் வழியாக நாங்குநேரிக்கு வந்து சேர்ந்தார். அங்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் மழை தொடங்கிவிட்டது.

சாலையெங்கும் மக்கள் கூட்டமாக நின்றிருந்ததால் காந்தியடிகளின் வாகனம் முன்னேற முடியாமல் பாதை நடுவிலேயே நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் காந்தியடிகளால் மேடையை நெருங்கமுடியவில்லை. வேறு வழி இல்லாமல் காரின் மீது ஏறி, ஒரு குடையைப் பிடித்தபடி காந்தியடிகள் கூடியிருந்த பொதுமக்களிடம் தீண்டாமை ஒழிப்புப்பணி குறித்து உரையாடினார். அங்கேயே அவருக்கு வரவேற்புப் பத்திரங்களும் பணமுடிப்புகளும் வழங்கப்பட்டன.

அன்று காந்தியடிகளின் உரையைக் கேட்பதற்காக அருகிலிருந்த திசையன்விளையில் உணவுவிடுதி ஒன்றை நடத்திவந்த  மாலையப்பப்பிள்ளை என்னும் தேசபக்தர் நாங்குநேரிக்கு வந்திருந்தார். அவருடைய விடுதியிலேயே சாப்பிட்டுவிட்டு, அங்கேயே தங்கி அந்த ஊரைச் சேர்ந்த  இரட்சண்யமூர்த்தி பாடசாலையில் படித்துவந்த பத்து வயதுச் சிறுவனொருவனும் வந்திருந்தான். கூர்மையான அறிவாற்றலும் துணிச்சலும் கொண்ட அச்சிறுவனின் மனம் காந்தியடிகளின் உரையைக் கேட்டு நெகிழ்ந்தது. ஏற்கனவே அவனுடைய ஆசிரியர்கள் அமிர்தராஜ் ஆசீர்வாதம், சுவாமிராஜா ஆசீர்வாதம் ஆகியோரால் ஊட்டப்பட்டிருந்த தேசபக்தி காந்தியடிகளின் உரையை நேருக்குநேர் கேட்டதும் மேலும் விரிவடைந்தது.  தேசபக்தி என்பது தேசத்தில் வாழும் மக்கள் அனைவரோடும் எவ்விதமான பிரிவினைக் கண்ணோட்டமும் இன்றி கலந்து பழகி ஒன்றாக வாழ்வதாகும் என்னும் சமத்துவப்பார்வை கல்மேல் எழுத்தாக அவருடைய நெஞ்சில் பதிந்தது. அந்தப் பள்ளிச்சிறுவனின் பெயர் படுக்கப்பத்து மேகநாதன். படுக்கப்பத்து என்பது அச்சிறுவன் பிறந்த சிற்றூரின் பெயர்.

அடுத்த சில மாதங்களிலேயே நாங்குநேரி வட்ட காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு திசையன்விளையில் நடைபெற்றது. பாப்பாங்குளத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் தலைமை தாங்க,  இராஜாஜி அவர்கள் அம்மாநாட்டைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். சிறுவனான மேகநாதன் அந்த மாநாட்டில் பால தொண்டராகப் பணியாற்றியபடி, அங்கு ஒவ்வொரு தலைவரும் நிகழ்த்தும் உரையைக் கேட்டு, அந்த செய்திகளையெல்லாம் நெஞ்சில் பதியவைத்துக்கொண்டார். மாநாட்டிற்கிடையில் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் ஓடிஓடி சேவை செய்துகொண்டிருந்த அச்ச்சிறுவனின் மலர்ந்த முகம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

பள்ளிச்சிறுவனான மேகநாதன் பள்ளியில் நடைபெறும் பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி போன்ற கலைநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொண்டு வெற்றி பெற்றான். பிறர் எழுதிய பாடல்களை மனப்பாடம் செய்து பாடாமல், தன்னிச்சையாகப் பாட்டு கட்டி பாடுவது அவன் வழக்கம். அந்தந்த நேரத்தில் தோன்றும் எண்ணங்களையே அவன் பாட்டாகப் பாடுவதால்,  மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் அவன் பாட்டை விரும்பிக் கேட்டனர். ஒருமுறை அச்சிறுவன் ஏதோ ஒரு உற்சாகத்தில் ஆட்சியில் இருக்கும் ஆங்கிலேயர்களை விமர்சிக்கும் விதமாக பாடல் கட்டிப் பாடினான். ‘வெள்ளைக்கார சைக்கிளுக்கு பெல் இல்லை. பிரேக் இல்லை. மக்கார்டும் இல்லை’ என்று அவன் பாடிய பாடலை, அதன் தாளக்கட்டின் காரணமாக  பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த எல்லாச் சிறுவர்களும் எளிதாகக் கற்றுக்கொண்டனர். அதே உற்சாகத்துடன் பாடிப் பாடி ஊருக்குள் பரப்பிவிட்டனர். ஊரார் நெஞ்சிலும் அப்பாடல் வரிகள் பதிந்துவிட, அவர்களும் பொழுதுபோக்காக  அவ்வப்போது பாடி மகிழ்ந்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு  சுதந்திரப்போராட்டம் தொடர்பான பொதுக்கூட்டங்களையும் ஊர்வலங்களையும் எங்கும் நிகழ்த்தக்கூடாது என ஆங்கிலேய அரசு தடையுத்தரவை விதித்தது. நாடெங்கும் பல பகுதிகளில் அந்த உத்தரவை எதிர்த்து தேசபக்தர்கள் ஒருங்கிணைந்து   ஊர்வலமாகச் சென்று தம் கண்டனத்தைத் தெரிவித்தனர். அவ்வழியில் திசையன்விளையைச் சேர்ந்த தேசபக்தர்களும் கண்டன முழக்கங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர்.  சிறுவனான மேகநாதனும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார். இரக்கமில்லாத காவல்துறையினர் ஊர்வலத்தைக் கலைக்கும் விதமாக தடியடிப் பிரயோகத்தில் இறங்கி, கைக்குக் கிடைத்தவர்களை அழைத்துவந்து ஒரு சத்திரத்தில் அடைத்துவைத்தனர்.  மேகநாதனுக்கு முழங்காலுக்குக் கீழே பலமான அடி விழுந்தது. அவரை மிரட்டி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர் காவல்துறையினர்.  

இச்சூழலில் மேகநாதனுடைய தந்தையார் அவரை அதுவரை படித்துவந்த இரட்சண்யமூர்த்தி பாடசாலையிலிருந்து மாற்றி திருச்செந்தூர் அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அப்பள்ளியின் முதல்வரான அருணகிரி முதலியார் காந்தியடிகள் மீதும் காங்கிரஸ் செயல்பாடுகள் மீதும் வெறுப்பு கொண்டவர். காந்தியடிகள் பற்றியோ அல்லது சுதந்திரப்போராட்டம் பற்றியோ பள்ளி வளாகத்தில் யாரும் பேசக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனத்துடன் இருந்தார். அத்தகு உரையாடல்களில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை அக்கணமே நிற்கவைத்து அடித்து தண்டனை வழங்குவார்.  பழைய பள்ளியின் நினைவில் புதிய பள்ளியில்  சுதந்திரமாகப் பேசத் தொடங்கிய மேகநாதன் பலமுறை தலைமையாசிரியர் பார்வையில் பட்டு பிரம்படிகள் பெற்றார். ஆங்கிலேயர்கள் ஆட்சியினால்தான் நாடு வளமாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஊறியிருந்தார் அந்தத் தலைமையாசிரியர்.

அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் கொண்டிருந்த நம்பிக்கையைப்போலவே அக்காலத்தில் நாடெங்கும் பலர் நம்பியிருந்தனர். அத்தகு அரசு ஆதரவு நிலைபாட்டை எடுத்த பலர் அனைவரும் ஒன்றிணைந்து திருச்செந்தூரில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த முயற்சி செய்தனர். மேகநாதனும் அவருடைய நண்பர்களும் அதைக் கண்டித்துக் குரலெழுப்பியபடி அதே மேடையைச் சுற்றி ஊர்வலமாகச் சென்றனர். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த தாசில்தார் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைக்குமாறு உத்தரவிட்டார். காவலர்கள் ஊர்வலத்தின் நடுவில் புகுந்து தடியடி தாக்குதல் நிகழ்த்தினர். இன்ஸ்பெக்டர் சீனிவாச நாயுடு என்பவர் அனைவரையும் கடுமையாகத் தாக்கினார். மேகநாதனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், அந்த ஊரில் தொடர்ந்து இருக்கமுடியாமல் இரவோடு இரவாக உடன்குடிக்குச் சென்று சேர்ந்தார்.

அங்கிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு மேகநாதன் சொந்த ஊருக்குத் திரும்பினார். அதற்கிடையில் காவல் துறையினர் பலமுறை வீட்டுக்கு வந்து அவரைத் தேடிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்த அவருடைய அம்மா, குலசேகரன்பட்டினம் ஊரைச் சேர்ந்த இராமலிங்கம் பிள்ளை என்னும் குடும்ப நண்பருடைய வீட்டிற்குச் சென்று தங்குமாறு கேட்டுக்கொண்டார். இராமலிங்கம் பிள்ளையும் காவல்துறையில் பணிபுரிபவரே. ஆயினும் தேசிய இயக்கங்களில் ஈடுபாடு கொண்டவர். அதனால் தன்னை அடைக்கலமாக நம்பி வந்த மேகநாதனை  ஒருவருடைய பார்வையிலும் பட்டுவிடாதபடி பாதுகாத்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு காவல் துறையினர் மேகநாதனைத் தேடும் வேலையை நிறுத்தினர். அதைத் தொடர்ந்து மறைவிடத்திலிருந்து வெளியேறிய மேகநாதன் பல கூட்டங்களில் கலந்துகொண்டு சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார். ஒருநாள் பூச்சிக்காடு என்னும் ஊரில் தங்கியிருந்தபோது ஒரு நண்பர் ஓடோடி வந்து கொடுமைக்காரனான சப்கலெக்டர் குரோம்பி பிரயாணம் செய்துவந்த கார் எதிர்பாராத விதமாக பழுதடைந்து நின்றுவிட்டதென்றும், அதனால் வாகனத்திலிருந்து இறங்கி சப்கலெக்டர் தன்னந்தனியாக கடைத்தெருவில் நின்றுகொண்டிருக்கிறார் என்றும் தகவல் சொன்னார். அக்கணத்தில் தாய்நாட்டினருக்குத் துன்பமிழைத்த அந்தக்  கொடுமைக்காரனான குரோம்பியைக் கொல்லவேண்டும் என்று நினைத்தார் மேகநாதன். பிறகு சந்தர்ப்பச்சூழல் எப்படி இருக்கிறதென முதலில் பார்த்துவிட்டு வரலாம் என அந்தத் துணை ஆட்சியர் நின்றிருப்பதாகக் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றார். ஆனால் அதற்குள் அந்த வழியாகச் சென்ற சாலைச் சீரமைப்புப் பொறியாளர் தம் வாகனத்தில் அவரை அழைத்து சென்றுவிட்டார். அதனால் அவர் மனம் சற்றே ஏமாற்றமடைந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஏற்கனவே திட்டமிட்டபடி பூச்சிக்காட்டுக்குச் சென்று கூட்டத்தில் கலந்துகொண்டார். சுதந்திரத்துக்காக மக்கள் துணிவோடு போராடவேண்டும் என்று அக்கூட்டத்தில் முழங்கினார்.

அரசுக்குச் சொந்தமான சொத்துகளை அழித்தால்தான் அரசாட்சி செய்பவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறுவார்கள் என பலரும் அந்தப் பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர். அக்கருத்தில் ஏதோ ஓர் உண்மை இருப்பதாக மேகநாதனுடைய சிற்றறிவுக்குத் தோன்றியது. மேகநாதன் அக்கணமே அத்திட்டத்தின் முதல் செயல்பாடாக, அந்தக் கிராமத்தைச் சுற்றியிருந்த காட்டுப்பகுதியை எரியூட்டி அழிக்கலாம் என்றொரு ஆலோசனையை வழங்கினார். அப்பேச்சால் தூண்டப்பட்ட பலர் அன்றிரவே காட்டை அணுகி தீயிட்டுக் கொளுத்தினர். அதன் பிறகு போகிற போக்கில் அருகிலிருந்த கள்ளுக்கடைக்கும் தீமூட்டிச் சேதப்படுத்தினர். புகார் கிடைத்ததுமே, அந்த இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் உடனடியாகச் செயலில் இறங்கினர். ஊருக்குள் எல்லாப் பகுதிகளிலும் சுற்றி, சேதத்துக்குக் காரணமானவர்களில் பலரைத் தேடித்தேடி கைது செய்தனர். அந்நேரத்தில் மேகநாதன் ஏரல் என்னும் ஊருக்குச் சென்று தலைமறைவானார்.

ஒருநாள் திசையன்விளை சந்தைக்கு அருகில் நடந்துகொண்டிருந்தபோது  மேகநாதனைச் சுற்றி வளைத்துக் கைது செய்ய முற்பட்டனர் காவலர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் பார்வையிலிருந்து தப்பித்த மேகநாதன் வேகமாக தன் மேல்சட்டையைக் கழற்றி தலைமீது சும்மாடாகச் சுற்றி பக்கத்திலிருந்த கடையில் வைக்கோல் கட்டொன்றை வாங்கி தலை மீது வைத்துக்கொண்டு சந்தையைவிட்டு வேகமாக வெளியேறித் தப்பினார்.

இவ்வாறாக ஏறத்தாழ ஆறேழு ஆண்டுகள் திசையன்விளை, உடன்குடி போன்ற பகுதிகளில் அலைந்து திரிந்து பொதுமக்களைத் திரட்டி கூட்டம் நடத்தி அவர்களுடைய நெஞ்சில் சுதந்திரப்போராட்ட வேட்கையை உருவாக்குவதையே தன் கடமையென அலைந்துகொண்டிருந்தார் மேகநாதன். அதனால் அவருக்குக் கிடைத்த வெற்றி அப்பகுதியில் செல்வாக்குள்ள ஒரு மனிதராக தலைநிமிர்ந்து நடக்கச் செய்தது.

இத்தகு சூழலில் வார்தா ஆசிரமத்தில் 1942ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு ஆங்கிலேய அரசை அடிபணிய வைத்து பேசுவார்த்தைக்கு அழைக்கும் நோக்கத்தோடு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 08.08.1942 அன்று பம்பாயில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. அந்த இயக்கத்தை ஒரு சத்தியாகிரக இயக்கமென முன்னெடுத்துச் சென்று ஆங்கிலேய அரசை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் காந்தியடிகள்  ‘செய், அல்லது செத்து மடி’ என்று தொண்டர்களிடையில் முழங்கினார்.

காந்தியடிகள் தன் உரையை முடிக்கும் முன்னால்  ‘எல்லாப் போராட்டங்களையும்போல செய் அல்லது செத்து மடி போராட்டமும் அறவழியிலான சத்தியாகிரகப் போராட்டமே. இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு அகிம்சைப் போராளியும் செய் அல்லது செத்துமடி என்னும் முழக்கத்தை ஒரு துண்டுத்தாளில் எழுதி தன் மேலாடையின் மீது ஒட்டிக்கொள்ள வேண்டும் அல்லது தன் சட்டைப்பைக்குள் பாதுகாப்பாக வைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை அவர் அந்தச் சத்தியாகிரகப் போராட்டத்தில் இறக்க நேரிட்டால் அவரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காண அந்த அடையாளச் சீட்டு உதவக்கூடும்’ என்றொரு வேண்டுகோளை முன்வைத்தார்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே காவல்துறை காந்தியடிகளைக்  கைது செய்து ஆகாகான் சிறையில் அடைத்தது. தொடர்ந்து ஒன்றிரண்டு நாட்களிலேயே நேரு, மெளலானா அப்துல்கலாம் ஆசாத், இராஜேந்திர பிரசாத், மகாதேவ தேசாய், காமராஜர், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பல தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.  எந்தச் சிறையில் யார் இருக்கின்றனர் என பிரித்துணர முடியாதபடி அவர்கள் அனைவரும் தொலைதூரத்தில் உள்ள வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். 

தலைவர்களின் கைது நடவடிக்கை பல தொண்டர்களை அமைதியிழக்க வைத்தது. அகிம்சை வழியில் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்  என்று காந்தியடிகள் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தபோதும், தம் எதிர்ப்பை அரசுக்கு உணர்த்த வேண்டும் என்கிற வேகத்தின் காரணமாக பல ஊர்களைச் சேர்ந்த சிற்சில தொண்டர்கள் அகிம்சை வழியைத் துறந்து பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர்.

ஒரு சில நாட்களுக்குப் பிறகு மேகநாதன் தலைமையில் ஓர் இளைஞர் குழு வெள்ளாளன்விளை தேரியில் இரகசியக்கூட்டமொன்றை நடத்தியது. அந்த அமைப்புக்கு அவர்கள் சுதந்திர சேனா என பெயர் சூட்டிக்கொண்டனர். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நள்ளிரவுக்குப் பிறகு ஒன்றாகப் புறப்பட்டுச் சென்று ஆலந்தலையிலிருந்து குலசேகரன்பட்டினம் வரையுள்ள அனைத்துத் தந்திக்கம்பங்களையும் யாருக்கும் தெரியாமல் பிடுங்கி எறிந்தனர். வரும் வழியில் உடன்குடி வரையுள்ள தந்திக்கம்பங்களையும் சேதப்படுத்தினர். பிறகு விடிவதற்குள்  அனைவரும் தலைமறைவானார்கள். மேகநாதன் மட்டும் மீண்டும் குலசேகரன்பட்டினத்துக்குச் சென்று, அங்கிருந்த காவல்துறை உதவி ஆய்வாளரும் மேகநாதன் மீது அனுதாபம் கொண்டவருமான இராமலிங்கம் பிள்ளையின் வீட்டுக்குள் மறைந்துகொண்டார்.

அதன் தொடர்ச்சியாக அடுத்தநாள் சுதந்திர சேனாவைச் சேர்ந்த பிற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஆங்கிலேய அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் விதமாக முழக்கமெழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர். தங்கவேல், எஸ்.ஏ.ராமச்சந்திரன், கே.டி.கோசல்ராம், பி.எம்.ராஜகோபால், எம்.எஸ்.செல்வராஜ் போன்றோர் ஊர்வலத்தில் முன்னணி வகித்தனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் கட்டுப்பாடிழந்து நாதன்கிணறு, பூச்சிக்காடு பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான அலுவலகங்களைச் சேதப்படுத்தினர். காடுகளைக் கொளுத்தினர். குரும்பூர் ரயில்நிலையத்தைக் கைப்பற்றி சேதம் விளைவித்தனர். அனைத்துக்கும் உச்சமாக ஆங்கிலேய அதிகாரியான லோன் துரை என்பவர் கொல்லப்பட்டார். 

மேகநாதனைக் கண்டுபிடிக்க முடியாத காவல்துறையினர் அவருடைய சொந்த வீட்டுக்குச் சென்று அவருடைய பெற்றோரை மிரட்டத் தொடங்கினர். மேகநாதன் மறைந்திருக்கும் இடத்தைத் தெரிவிக்கும்படி அடித்துத் துன்புறுத்தினர். தமக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் சொன்னதைக் காவல்துறையினர் நம்பத் தயாராக இல்லை. கொடுமையாக சித்திரவதை செய்தனர். நோய்வாய்ப்பட்ட சூழலில் அவர்களுடைய உறவினர்கள் அவர்களை திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆயினும் சில நாட்களிலேயே அவர்கள் அனாதைகளாக இறந்தனர்.  அதற்குப் பிறகு, உடன்குடியில் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த வீட்டையும் வீட்டில் வைத்திருந்த வெள்ளி, வெண்கலப் பாத்திரங்களையெல்லாம் பறிமுதல் செய்து ஏலம் விட்ட காவல்துறையினர் ஒரு பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டனர். 

மேகநாதனைக் கைது செய்ய முடியாமல் காவல் துறையினர் திணறினர். அதே நேரத்தில் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்காமல் உடன்குடி பகுதியில் அமைதியை நிலைநாட்டமுடியாது என அந்த வட்டாரத்தைச் சேர்ந்த நீதிக்கட்சியினர் அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். அவரைச் சுட்டுப் பிடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு அனைவரும் சேர்ந்து திருநெல்வேலி ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டனர். அவர் மறுத்ததால் அனைவரும் இணைந்து ஆளுநரைச் சந்தித்து உத்தரவைப் பிறப்பிக்க வைத்தனர். நிலைமை இப்படி கொஞ்சம்கொஞ்சமாக கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியதும் அதுவரை  மேகநாதனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த இராமலிங்கம் பிள்ளை, தன்னையும் ஆபத்து சூழ்ந்துகொள்ளும் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அங்கிருந்து வெளியேறி ஒருசில மாதங்கள் வடக்குப் பகுதிக்குச் சென்று தங்கியிருந்துவிட்டு நிலைமை சீரடைந்தபிறகு திரும்பிவரலாம் என மேகநாதனுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

அதை ஏற்றுக்கொண்ட மேகநாதன் அன்றிரவே ஒரு விவசாயியைப்போல தலைச்சுமையாக வைக்கோல் கட்டைத் தூக்கிக்கொண்டு நடந்தே திருச்செந்தூரை நோக்கிச் சென்றார். இப்படி பற்பல வேடங்கள் பூண்டு தூத்துக்குடிக்கும் அங்கிருந்து மதுரைக்கும் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு பழனிக்குச் சென்று மொட்டையடித்துக்கொண்டு சாமியார் மடத்தில் சேர்ந்துகொண்டார். சில வாரங்கள் நிம்மதியாகக் கழிந்தன. தற்செயலாக ஆழ்வார் திருநகரியிலிருந்து பழனிக்கு வந்திருந்த ஒரு காவலரின் சந்தேகப் பார்வைக்கு அவர் இலக்கானார். அதன் பிறகும் அந்த மடத்தில் இருப்பது பாதுகாப்பல்ல என்பதை உணர்ந்த அவர் அன்றே அங்கிருந்து வெளியேறி ஒட்டன்சத்திரம், கரூர் என பல ஊர்களில் அலைந்து கடைசியாக திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்து இராஜாஜியைச் சந்தித்து எல்லா விவரங்களையும் ஒளிவுமறைவில்லாமல் தெரிவித்தார். அவர் வீரபாகு பிள்ளை என்னும் நண்பரின் உதவியோடு அவரை சென்னையிலிருந்து கல்கத்தாவுக்கு அனுப்பிவைத்தார். வீரபாகு பிள்ளையின் சகோதரர் அந்த ஊரில் ஜெயா ஸ்டோர் என்னும் பெயரில் ஒரு கடையை நடத்தி வந்தார். அந்தக் கடையிலேயே தங்கியபடி அங்கேயே மேகநாதன் வேலை செய்யத் தொடங்கினார். ஏறத்தாழ ஓராண்டு காலம் அந்தக் கடையிலேயே காலம் கழிந்தது. அதன் பிறகு அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டு காசிக்குச் சென்று இரண்டாண்டுகள் தங்கியிருந்தார். கோவில் நிர்வாகிகளின் நம்பிக்கையைப் பெற்று மேற்பார்வை வேலைகளில் அவர்களுக்குத் துணையாக வேலை செய்தார்.

தலைமறைவாக பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்தபோதிலும் மேகநாதனின் மனம் சொந்த ஊரிலேயே நிலைத்திருந்தது. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் காசியிலிருந்து புறப்பட்டு திசையன்விளைக்கு வந்து சேர்ந்தார். அங்கு நண்பரொருவரின் வீட்டில் தங்கி சூழல் நிலவரத்தைக் கவனித்தார். அவரைக் கைது செய்வதற்கான முகாந்திரம் எதுவும் தென்படாததால், ஊரில் வெளிப்படையாகவே நடமாடத் தொடங்கினார்.

இந்தியாவின் சுதந்திரம் தொடர்பான செய்திகளை மக்களிடம் பகிர்ந்துகொள்ளும் பொருட்டு பொதுக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டது அவர் மனம். முதல் கூட்டத்தை சாத்தான்குளத்தில் நடத்த நண்பர்கள் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயினும் அவருக்குத் தெரியாமல் அவரைப் பின்தொடர்ந்து செய்திகளைச் சேகரித்துவந்த காவல்துறையினர் நாசரேத்திலிருந்து சாத்தான்குளத்தை நோக்கி அவர் பயணம் செய்துகொண்டிருந்தபோது தைலாபுரம் அருகில் அவரை வழிமறித்து கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது ராஜதுவேஷ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. நீண்ட கால விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுக்குத் தகுந்த ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்தார் அந்த நீதிபதி. .

மேகநாதனுடைய விடுதலையைத் தொடர்ந்து சிறிது கால இடைவெளியிலேயே இந்தியாவும் விடுதலை பெற்றது. சுதந்திரமடைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட போதும் மேகநாதனால் வெற்றிபெற முடியவில்லை. தேர்தலில் தோல்வியுற்றபோதும் சோர்வறியா உள்ளத்துடன்  தம்மால் முடிந்த அளவு மக்களுக்குத் தொண்டு புரிந்தார்.

 

********** 

 

சாத்தான்குளத்துக்கு அருகிலிருக்கும் படுக்கப்பத்து என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டில் மேகநாதன் பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் இராமசாமி நாடார். தாயார் பெயர் சவுந்திரதேவி அம்மாள். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தேசபக்தி மிக்க ஆசிரியர்களின் வழிகாட்டலால் தேசப்பற்று மிக்கவராக வளர்ந்தார். உத்வேகமூட்டும் காந்தியடிகளின் உரை அவருக்கு சுதந்திரத்துக்காகப் போராடும் தியாக வாழ்க்கையை வாழ்வதற்கான விசையாக இருந்தது. திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்நாள் முழுதும் மக்கள் சேவை, போராட்டம் என ஈடுபட்டிருந்ததார்.  எண்ணற்றோர் அவரை வற்புறுத்தியபோதும் சுதந்திரப்போராட்டத் தியாகிகளுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத்தொகையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். தன்னோடு சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பூச்சிக்காட்டைச் சேர்ந்த தையல் தொழிலாளியான சுந்தரலிங்கத்தேவர் என்னும் நண்பரின் மகளுடைய குடும்பத்தினரையே தம் குடும்பமாக நினைத்து தம் வீட்டோடு தங்கவைத்துக்கொண்டார். அவர்களுடைய பராமரிப்பிலேயே தம் இறுதிக்காலத்தைக் கழித்த மேகநாதன் 03.03.2000 அன்று மறைந்தார். மேகநாதனுடைய சுதந்திரப்போராட்ட அனுபவங்களை அவருடன் தொடர்ந்து உரையாடித் தெரிந்துகொண்ட உடன்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் அந்த உரையாடல் அனுபவங்களை நீண்டதொரு சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார். அப்பகுதியை ஓர் ஆவணமாக முத்தாலங்குறிச்சி காமராசு ‘தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்’ என்னும் தொகைநூலில் சேர்த்துள்ளார்.

 

(சர்வோதயம் மலர்கிறது – ஏப்ரல் 2026)